நெஞ்சுக்கு நீதி
அமைச்சரவையில் எம்.ஜி.ஆர்? · 176 / 391
அமைச்சரவையில் எம்.ஜி.ஆர்? மார்ச் 1, மார்ச் 4, மார்ச் 7 என்று மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு தேர்தல் நாட்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. எப்படியும் முற்போக்குக் கூட்டணியைத் தோல்வியடையச் செய்ய வேண்டுமென்று சபதம் மேற்கொண்டு ராஜாஜி அவர்களும், காமராஜர் அவர்களும் இணைந்து நின்று செயல்பட்டார்கள். சென்னைக் கடற்கரையில் மிகப்பெரிய கூட்டமொன்றில் அந்த இரண்டு பெருந்தலைவர்களும் கலந்து கொண்டு ஆற்றிய உரையில் கழகத்தையும், கழகத்தின் தோழமைக் கட்சிகளையும் கடுமையாகத் தாக்கினார்கள்.
1967-இல் காமராஜரும் காங்கிரசும் தோற்கடிக்கப்பட வேண்டுமென்று முழுமூச்சுடன் பணியாற்றியும், எழுதியும், பேசியும் உலாவந்த ராஜாஜி அவர்கள், சென்னைக் கடற்கரைக் கூட்டத்தில் காமராஜருக்குக் குங்குமத் திலகமிட்டு ஆசி வழங்கினார். அந்தப் படம் எல்லா நாளேடுகளிலும் வெளி வந்தது அவர்களது கூட்டணிக்கு ஜனநாயக முன்னணி என்று பெயர். கழக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பியே தீருவேன் என்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்கும், ஜனநாயக முன்னணியின் தேர்தல் பிரச்சாரத்திற்கும் புறப்பட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் திருத்தணி முருகன் கோயிலுக்குச் சென்று கையில் ஒரு வேலுடன் ஆவேசமாகக் கிளம்பினார்.
தினமணி, எக்ஸ்பிரஸ், இந்து ஆகிய ஏடுகள் நாள்தோறும் எல்லாப் பக்கங்களிலும் கழகக் கூட்டணிக்கு எதிரான பிரச்சாரத்திலேயே ஈடுபட்டிருந்தன. கழகத் தலைமையில் முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரமும் விறுவிறுப்புடன் ஆரம்பமானது. தி.மு.கழகம் பிரிவினைவாத இயக்கம் என்றும் அதனுடன் உடன்பாடு கொள்ளலாமா என்றும் பிரதமர் இந்திரா காந்தியை நிருபர்கள் கேட்டபோது, அந்தக் கட்சி பிரிவினைக் கொள்கையைக் கை விட்டுவிட்டது என்று அவர் பதில் அளித்தார்.
சேலத்தில் திராவிடர் கழகத்தினர் கடவுளர் சிலைகளைக் களங்கப்படுத்தியது குறித்துக் கேட்டபோது இந்திரா காந்தி அவர்கள்; திராவிடர் கழகத்திற்கும் தி. மு. கழகத்திற்கும் கடவுள் குறித்த கொள்கையில் நடைமுறை வேறுபாடுகள் உண்டு என்றும், திராவிடர் கழகம் ஒரு அரசியல் கட்சி அல்ல என்றும் விளக்கமளித்தார். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது தி. மு. கழகத்தின் கொள்கையென்பதும் அன்றைக்கு இந்திரா காங்கிரஸ்காரர்களாலேயே எடுத்துக் கூறப்பட்டது.
வடக்கே இந்திரா காந்தியையும், தமிழகத்தில் கருணாநிதியையும், வீழ்த்துவதே தங்களது நோக்கமென்று பழைய காங்கிரசார் வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்தனர். சுமார் முப்பது நாட்கள் வேனிலேயே தமிழக முழுதும் சென்று இரவு பகல் பாராது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். ஒரு பகுதியில் எம். ஜி. ஆர். அவர்கள் நீண்ட சுற்றுப்பயணத்திட்டம் வகுத்துக்கொண்டு வேன் மூலம் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டார். விடியற்காலை ஐந்து அல்லது ஐந்தரை மணி அளவில் எங்காவது ஒரு இடத்தில் இறங்கிக் குளிப்பது - பிறகு ஏழு மணிக்கெல்லாம் மீண்டும் வேனில் ஏறிப் புறப்படுவது!
வழியில் சாலையோரத்தில் வேனை நிறுத்திவிட்டு, அதற்குள்ளேயே அமர்ந்து சாம்பார் சாதம், தயிர் சாதம் பொட்டலங்களைக் கொண்டுவரச் செய்து சாப்பிடுவது! ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு வேன் செல்லும்பொழுது கிடைக்கும் சொற்ப இடை நேரத்தில் ஒரு மின்னல் உறக்கம் கொள்வது! இப்படி முப்பது நாட்கள் - கண்கள் வீங்கிவிட்டன! கன்னங்கரேலென ஆகிவிட்டது உடல் முழுதும்! நாற்பத்தேழு வயது அப்போது- அதனால் தாங்கிக் கொண்டது உடல்!
காமராஜர், நிஜலிங்கப்பா, ராஜாஜி, மொரார்ஜி போன்ற மிகப் பெருந்தலைவர்களின் கூட்டணிதான் வெற்றி பெறுமென்றும் - மத்தியில் இந்திராவின் தோல்வியும், தமிழ்நாட்டில் தி.மு.க.வின் தோல்வியும் உறுதியென்றும் பத்திரிகைகள் யூகங்களை வெளியிட்டன. தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தலைவர்கள் பலபேர், தங்களை மந்திரிகள் எனக் கருதிக்கொண்டு அதற்கேற்ற உடைகளைத் தைப்பதற்கு அளவுகள் கொடுத்துவிட்டனர். சிலர், மூக்குக் கண்ணாடிகளைச் சரி செய்து கொண்டனர், 'பைல்'களைப் பார்ப்பதற்காக!
"மார்ச் 10-ஆம் தேதிக்குப் பிறகு என்னைக் கோட்டையில் வந்து சந்தியுங்கள்" என்று சில காங்கிரஸ் தலைவர்கள் நிருபர்களிடம் கூறினர். அரசின் மிகப் பொறுப்பு வாய்ந்த இடத்தில் இருந்த அதிகாரிகள் ஒரு சிலர் தேர்தல் வாக்களிப்பு தொடங்குவதற்கு முதல் நாளே ராஜாஜிக்கும், காமராஜருக்கும் ஆளுயர மாலை அணிவித்து அவர்களிடம் ஆசி பெற்றுக் கொண்டனர். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமுதாய ரீதியாகப் பொதுவான முற்போக்குத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டுமேயல்லாமல் யாரோ ஒருவர் இருவரை, பிற்படுத்தப்பட்டோரில் உயர் பதவிகளில் அமர்த்துவதால் அந்தச் சமுதாயத்திற்கு எந்த ஆதாயமும் இல்லை என்பதையும், அப்படி எந்தத் தனிப்பட்ட மனிதர்களைத் தூக்கி ஊட்கார வைக்கறோமோ- அவர்கள் நமக்கே துரோகம் செய்யத் தயாராக இருப்பார்கள் என்பதையும் நான் உணர்ந்து கொள்ள 1971-ஆம் ஆண்டு தேர்தலும் ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது என்றே கூறலாம்.
நான் போட்டியிட்ட சைதாப்பேட்டைத் தொகுதி தேர்தல் அலுவலகத்தையே போலீசார் சுற்றி வளைத்துக் கொண்டும் உள்ளே நுழைந்தும் சோதனையிட்டு, தேர்தல் பணியாற்றிய கழகத் தோழர்களை மிரட்டுகிற அளவுக்குப் பெரிய அதிகாரிகளால் தூண்டிவிடப்பட்டார்கள் என்றால் எவ்வளவு பெரிய சூழ்ச்சி வளையத்தை முற்போக்குக் கூட்டணி உடைத்தெறிந்துவிட்டு வெற்றி பெற வேண்டியிருந்தது என்பதற்கு வேறு எடுத்துக்காட்டுகளே தேவையில்லை! என் முதுகுக்குப் பின்னால் நடைபெற்ற சதிகளையும், சூழ்ச்சிகளையும் தெரிந்தும் தெரியாதவனைப் போல நடந்து கொண்டு, தேர்தலை அமைதியாக நடத்தும் அரசுப் பொறுப்பை மிக்க அக்கறையுடன் கவனித்துக் கொண்டேன்.
ஒருவாறு தேர்தல் முடிவுற்று மார்ச் 10, 11 ஆகிய நாட்களில் வாக்குகள் எண்ணப்பட்டன. முதல் நாள் 133 தொகுதிகளில் வாக்குகள் எண்ணப்பட்டதில் கழகம் 111 இடங்களில் வெற்றி பெற்றது. மொத்தம் 234 தொகுதிகளிலும் கழகத்திற்கு 184 இடங்களும், தோழமைக் கட்சிகளான இந்தியக் கம்யூனிஸ்டு கட்சிக்கு 8 இடங்களும், பார்வர்டு பிளாக் கட்சிக்கு 7 இடங்களும், பி.சோ. கட்சிக்கு 4 இடங்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 6 இடங்களும், தமிழரசு கழகத்திற்கு ஒரு இடமும், சிண்டிகேட் காங்கிரசுக்கு 15 இடங்களும் சுதந்திரா கட்சிக்கு 6 இடங்களும் மற்றவை சுயேச்சைகளுக்கும் கிடைத்தன.
சேலத்தில் திராவிடர் கழகம் நடத்திய ஊர்வலத்தைத்தான் கழகக் கூட்டணியை எதிர்க்க சிண்டிகேட் காங்கிரஸ் கட்சியும், சுதந்திரக் கட்சியும் பெரிதும் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தியதால், தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டவுடன் பெரியார் அனுப்பிய வாழ்த்துத் தந்தியில் "உங்களைப் பாராட்ட எனக்குத் தமிழில் வார்த்தை கிடைக்கவில்லை. என் மீதிருந்த பழி நீங்கியது. உங்களுக்கு உலகப் புகழ் கிடைத்தது" என்று குறிப்பிட்டிருந்தார்.
கழகக் கூட்டணிக்குக் கிடைத்த வெற்றி குறித்து 11-3-71 "மெயில்" இதழில் "மக்களின் புதிய கட்டளை" என்ற தலைப்பில் டி.ஏ.எஸ். சுப்பிரமணியம் அவர்கள் ஒரு சிறப்புக் கட்டுரை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரை பின்வருமாறு: "இப்போது அறிவிக்கப்பட்ட வியக்கத்தக்க முடிவுகளை வைத்து மதிப்பிடும்போது தமிழ்நாட்டு வாக்காளர்களின் நம்பிக்கையை தி.மு.க. பெற்றிருக்கிறது என்ற உண்மையை யாரும் மறுத்திட முடியாது. அநேகமாக எல்லாத் தொகுதிகளிலும் தி.மு.
கழக வேட்பாளர்கள் 1967 பொதுத் தேர்தலில் பெற்றதைவிட அதிக வாக்குகள் பெற்றிருக்கிறார்கள். தி.மு.க. 1967-இல் இருந்த நிலையில் இல்லை. இப்போது தி. மு. க. ஆளும் கட்சியாதலால் அக்கட்சியின் குறைபாடுகளைப் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய ஒரு சாதகமான நிலை பழைய காங்கிரசுக்கு இருந்தது. அடுத்து குறிப்பிட வேண்டியது 1967-இல் தி.மு.கழகத்துடன் இருந்த ராஜாஜி இந்த முறை காமராசருடன் சேர்ந்து கடுமையான பிரச்சாரம் செய்தார்.
ஆனால் இந்த முதியவரின் சொற்களை இந்த முறை வாக்காளர்கள் காது கொடுத்துக் கேட்கவில்லை. தி.மு.கழகத்துடன் உள்ள உறவை முறித்துக்கொண்டால் அதனால் நஷ்டமடைவது ராஜாஜிதான் என்று திரு. கருணாநிதி சொன்ன ஆரூடம் பலித்துவிட்டது. தேர்தலை எதிர்நோக்குவது என்று திரு.கருணாநிதி எடுத்த முடிவு நல்ல பயனைக் கொடுத்துள்ளது. தேர்தலில் குறிப்பிடத்தக்க வகையில் பெற்ற இந்த வெற்றிக்காக பொதுவாக தி.மு.கழகமும், குறிப்பாக திரு.
கருணாநிதியும் பாராட்டுக்களைப் பெற எல்லா காரணங்களும் உண்டு. என்றாலும் தேர்தல்கள் என்பது இலக்கை நோக்கிச் செல்லுகிற ஒரு வழிதான். இலட்சியம் என்பது நல்ல அரசு நடத்துவதுதான். முதல் பகுதியான சென்ற நான்காண்டுகளில் தி.மு.க. இந்த மாநிலத்து மக்களுக்கு நல்ல அரசை வழங்கியது. தி. மு. கழகம் தமிழ் நாட்டில் சட்டம் அமைதியைக் காப்பாற்றியிருக்கிறது தமிழ்நாட்டில் சொத்துக்களுக்கும் உயிருக்கும் எவ்வித ஆபத்தும் இல்லை.
சட்டத்தின் ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்றது. இப்போது தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் முன்பு அண்ணாவின் ஆட்சியைப் போல திரு. கருணாநிதியின் ஆட்சியும் மக்கள் விரும்பியதை வழங்கியது என்பதுதான் அதற்கு முக்கிய காரணம்."
கழகத்தின் வெற்றி குறித்து தமிழகப் புலவர் குழுவின் சார்பில் மகாவித்துவான் மே. வீ. வேணுகோபால் பிள்ளை அவர்கள் அனுப்பியிருந்த வாழ்த்து இதோ! தண்டமிழ் நாட்டின் தனிமுதல்வன் அண்ணாமுன் கண்ட அரசு செழித்தோங்கப் - பண்டை அருணோ தயத்தின் அலர்ந்த மலராம் கருணா நிதியே கதி. இருந்தமிழே நீயுன் இதயங் களிக்கப் பெருந்தமிழர் தொண்டாற்றிப் பேணும் - மருந்தனைய நந்தம் தமிழரசு நாளுஞ் செழித்தோங்க வந்திப்போம் உன்னை மகிழ்ந்து!
வெற்றித் திருவாய் விளங்குந் தமிழரசின் பெற்றியினை நாளும் பெருகச் செய் - நற்றமிழர் எல்லோரும் வாழ இயம்பும் புலவர்குழு பல்லாண்டு வாழ்த்துப் பரிந்து! இத்துணை பெரிய வெற்றியினூடே இரண்டு அதிர்ச்சிகள் எங்களுக்கு! நாவலரின் திருவல்லிக்கேணி தொகுதியில் அவரை எதிர்த்து நின்ற நண்பர் விநாயகம் முந்திக் கொண்டிருந்தார். மைலாப்பூர் தொகுதிதான் வேண்டுமென்று பிடிவாதமாகக் கேட்டு, அங்கு போட்டியிட்ட சிலம்புச்செல்வர் ம.பொ.சி.
அவர்கள் தோல்வியடைந்தார். இரவு இரண்டு மணி அளவில் நாவலர் தோற்றுவிடுவார் எனக் கண் கலங்கிக்கொண்டிருந்தபோது திடீரென நற்செய்தி கிடைத்தது; சுமார் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுவிட்டார் என்று! 180-க்கு மேற்பட்ட அளவுக்கு இடங்களில் தமிழக வரலாற்றில் என்றுமில்லாத வெற்றிவாகை சூடியிருந்தபோதிலும் நாவலர் தோற்றுவிடுவாரோ என்ற அச்சமும் - ம. பொ. சி. வெற்றி பெறவில்லையே என்ற துயரமும் எங்களை ஆட்டிப் படைத்தன.
மார்ச் 14-ஆம் நாள் கட்சித் தலைவர் தேர்தலுக்கு - அதாவது முதல்வர் தேர்தலுக்கு, நாள் குறிக்கப்பட்டது!. இதற்கிடையே காஷ்மீரில் படப்பிடிப்பில் இருந்த கழகப் பொருளாளர் எம்.ஜி.ஆர். அவர்கள் டெல்லி வந்து; அவசர அவசரமாக என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். இவ்வளவு மகத்தான வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்காத காரணத்தால் எம்.ஜி.ஆர். அவர்கள், வாக்கு எண்ணப்படுவதற்கு முன்பே காஷ்மீர் சென்று விட்டிருந்தார்.
டெல்லியிலிருந்து தொலைபேசியில் என்னிடம் உரையாடிய பொழுது, அமைச்சரவையில் தனக்கும் ஒரு இடம் வேண்டுமென்பதையும், அதுவும் "மெடிகல் மினிஸ்டர்" என்பதையும் சூசகமாகத் தெரிவித்து எனது பதிலை எதிர்பார்த்தார். நீங்கள் "உடனே வாருங்கள். எல்லாம் நேரில் பேசிக்கொள்ளலாம்" என்றேன். டெல்லியிலிருந்து விமானம் உடனே கிடைக்காத காரணத்தால் அவர்கள் தனி விமானம் ஒன்றை எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்து கொண்டு சென்னை வந்துசேர்ந்தார்.
