உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/1971 தேர்தல் களம்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

1971 தேர்தல் களம் · 175 / 391

1971 தேர்தல் களம் நா டாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்கள் குறித்து விவாதித்திட 8-1-71 அன்று முற்போக்கு கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தி. மு. கழகம் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, பிரஜா சோஷலிஸ்ட், தமிழரசுக் கழகம், முஸ்லீம் லீக் பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் கலந்து கொண்டன. இந்தக் கட்சிகள் தங்களுக்குள்ள கொள்கை, இலட்சியம், தனித்தன்மை எதனையும் இழக்காமல் சந்தர்ப்பவாத பிற்போக்குச் சக்திகளை தோல்வியுறச் செய்வதன் மூலம் ஏற்றத் தாழ்வற்ற சோஷலிச சமுதாயத்தை ஜனநாய முறையில் அமைக்கவும்.

ஏழ்மை விரட்டப் பட்டு சாதி மத வேற்றுமையின்றி எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்ற தத்துவம் நிலைபெறவும், வேலையின்மைக் கொடுமையிலிருந்து படித்தோர், பாமரர், கிராமப்புறத்து மக்கள் விடுபடவும், சோஷலிச அடிப்படையில் மத்திய அரசும் மாநில அரசும் திட்டங்கள் வகுத்துச் செயல்பட அரசியல் சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் செய்திட வேண்டுமென்றபொது நோக்கத்தை நடைமுறைக்குக் கொண்டுவர தொகுதி உடன்பாடு செய்து கொள்வதென்று முடிவெடுக்கப்பட்டது. ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் இரண்டு பிரதிநிதிகளைக் கொண்டு இணைப்புக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.

தி. மு. கழகத்திற்கும் பார்வர்டு பிளாக் கட்சிக்கும் 18-1-71 அன்றும், தி. மு. கழகத்திற்கும் முஸ்லீம் லீக் கட்சிக்கும் இடையே 19-1-71 அன்றும் தொகுதி உடன்பாடு குறித்து ஒப்பந்தம் கையெழுத்தாகியது. ஜனவரி 19ஆம் தேதியன்று தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமர் இந்திரா காந்தி அவர்களுடன் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தலில் இட ஒதுக்கீடு செய்வது சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடத்தினேன். அந்தப் பேச்சின்போது பொதுச் செயலாளர் கல்வி அமைச்சர் நாவலர், தொழில் அமைச்சராக இருந்த மாதவன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சி.

சுப்பிரமணியம் ஆகியோர் உடன் இருந்தனர். ஒரு மணி நேரத்திற்கு மேல் அந்தப் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் நான் கூறும்போது, "சென்ற 1967 தேர்தலில் தி. மு. கழகம் 170 இடங்களில் போட்டியிட்டது. அதைவிட அதிகமான இடங்களில்தான் இந்தத் தடவை கழகம் போட்டியிடும். 1967 ஐவிட இந்தத் தேர்தலில் அதிகமான இடங்களில் போட்டியிடவேண்டும் என்ற அடிப்படையில்தான் மற்றக் கட்சிகளோடு நாங்கள் தேர்தல் உடன்பாட்டுப் பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

அதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் முஸ்லீம் லீக் கட்சியுடனும், பார்வர்டு பிளாக் கட்சியுடனும், தமிழரசு கழகத்துடனும் எங்களுடைய பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துவிட்டது. பி. எஸ். பி. கட்சியுடன் நாங்கள் பேசி அவர்களுக்கு ஒதுக்கக்கூடிய இடங்களைப் பற்றி விவாதித்து முடிவெடுத்திருக்கிறோம் என்றாலும் அந்தப் பேச்சுவார்த்தை நாளைக்கு சுமுகமாக முற்றுப் பெறலாம் என்று நம்புகிறேன். இந்திரா காங்கிரசைப் பொறுத்தவரையில் 5 முதல் 7 நாடாளுமன்றத் தொகுதிகளையும், சட்டமன்றத்தைப் பொறுத்த வரையில் 10 முதல் 15 தொகுதிகளையும் நாங்கள் விட்டுக் கொடுக்க முன்வந்தோம்.

இது கூட்டணியிலுள்ள மற்றக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்துள்ள தொகுதிகளின் எண்ணிக்கையைவிட அதிகமானது. இதில் இந்திரா காங்கிரஸ் தலைவர்களுக்கு திருப்தியில்லை. அதனால் அந்தக் கட்சியோடு நடைபெறும் பேச்சு வார்த்தை இடையில் தடைபட்டிருக்கிறது" என்று கூறினேன்.

"இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நான்கு நாடாளுமன்ற இடங்களும், பத்து சட்டமன்ற இடங்களும், பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு நாடாளுமன்ற இடமும் ஒன்பது சட்டமன்ற இடங்களும், முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு நாடாளுமன்ற இடமும், எட்டு சட்டமன்ற இடங்களும், தமிழரசு கழகத்திற்கு இரண்டு சட்டமன்ற இடங்களும், பிரஜா சோஷலிஸ்ட் கட்சிக்கு நான்கு சட்டமன்ற இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன" என்றும் அறிவித்தேன்.

23-1-71 அன்று செய்தியாளர்களிடமும் கூறிய தமிழ்நாடு இந்திரா காங்கிரஸ் தலைவர் சி. சுப்பிரமணியம் "நாங்கள் கூட்டணியிலிருந்து பிரிந்து போக விரும்பவில்லை. ஆனால் அதே நேரத்தில் எங்களுக்குக் கொடுப்பதாக ஒப்புக் கொண்ட இடங்களை தி. மு. க. விட்டுத் தரவேண்டும். அதிலிருந்து அவர்கள் பின்வாங்கக்கூடாது. அப்படி ஏதாவது உடன்பாடு ஏற்படா- விட்டால் தனித்துப் போட்டியிடத் தயங்கமாட்டோம்" என்று கூறினார்.

இதற்கிடையே தி. மு. கழகத்துடன் உடன்பாடு பற்றிப் பேச்சு நடத்த பெரியவர் பக்தவத்சலம் அவர்களும், திரு. சி. சுப்பிரமணியம் அவர்களும் வந்தார்கள். சட்டப்பேரவையில் எண்பதுக்கு மேற்பட்ட இடங்களும், நாடாளுமன்றத்தில் இருபதுக்கு மேற்பட்ட இடங்களும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தினார்கள். தி.மு.க.வுடன் உடன் பாடு ஏற்பட்டால் மட்டுமே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது என்ற முடிவுடன் திரு.

மோகன் குமாரமங்கலம் அவர்களும் வந்திருந்தார். அவர் எப்படியாவது உடன்பாடு ஏற்படவேண்டும் என்பதிலே குறியாக இருந்தார். தமிழகத்தைப் பொறுத்தவரையில் காமராஜர் அவர்களின் தலைமையில் உள்ள பழைய காங்கிரஸ்தான் பலம் வாய்ந்தது என்பதையும், இந்திரா காந்தியை ஆதரிக்கும் காங்கிரஸ் வலுவற்றது என்பதையும் நான் பிரதமரிடமே சுட்டிக்காட்டியிருப்பதை எடுத்துச் சொல்லி பிரதமரிடம் வாக்களித்தவாறு ஏழு அல்லது எட்டு நாடாளுமன்றத் தொகுதிகளையும், பதினைந்துக்குக் குறைவான சட்டமன்றத் தொகுதிகளையும் அவர்களுக்கு ஒதுக்குவதாக நான் உறுதியளித்தேன்.

உடனே பக்தவத்சலம் அவர்களும், சுப்பிரமணியம், அவர்களும், பேச்சுவார்த்தை முறிந்து விட்டது எனக் கோபத்துடன் கூறிவிட்டு வெளியேறினார்கள். "இது எங்கள் சுயமரியாதைக்கே ஒரு சவால்!" என்று திரு. சி. எஸ். அவர்கள் ஆத்திரத்துடன் கூறினார். நான் சிரித்துக்கொண்டே அமைதியாகச் சொன்னேன்; "எங்கள் இயக்கமே சுயமரியாதை இயக்கம்" என்று!

திரு. மோகன் குமாரமங்கலம் அவர்களின் முகம் வாடிவிட்டது. "கழகத்துடன் உடன்பாடு இல்லையென்றால் நான் தேர்தலில் நிற்கும் பிரச்சினையே இல்லை" என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார். கழகத்தின் தேர்தல் சிறப்பு மாநாடு 24-7-71 அன்று சென்னை அசோக்நகரில் அமைந்த அண்ணா அரங்கில் நடைபெற்றது. சிறப்பு மாநாட்டிற்கு கழகத்தின் தலைவர் என்ற முறையில் நான் தலைமை தாங்கினேன். பொதுச் செயலாளர் நாவலர் மாநாட்டை திறந்துவைத்தார்.

கழகப் பொருளாளர் எம். ஜி. ஆர். கழகத்தின் கொடியினை ஏற்றிவைத்தார். வரவேற்புக் குழு தலைவராக இருந்த நீலநாராயணன் வரவேற்புரைக்குப் பிறகு என்னைத் தலைமையேற்குமாறு முன் மொழிந்திட - மதுரை மாவட்டச் செயலாளர் எஸ். முத்து, எம்.எல்.சி., கழகத் துணைப் பொதுச் செயலாளர் க. ராசாராம், பேராசிரியர் அன்பழகன், இலட்சிய நடிகர் எஸ். எஸ். ஆர்., அமைச்சர் திருமதி சத்தியவாணிமுத்து அமைச்சர், என். வி. நடராசன், கே. ஏ, மதியழகன் ஆகியோர் வழிமொழிந்து உரையாற்றினர்.

கண்ணியத்துக்குரிய காயிதேமில்லத், நாவலர் நெடுஞ்செழியன், எம். கல்யாணசுந்தரம், சிலம்புச் செல்வர் ம. பொ. சி., அப்துஸ்சமது, ஏ. ஆர். பெருமாள் ஆகியோர் பேசியபிறகு நான் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உரையாற்றினேன். எனது உரையில் "இன்று மாலையில் இந்த மாநாட்டிற்கு வரும் வரை மாலை 4 மணி வரை இந்திரா காங்கிரசுடன் நமக்குள்ள உடன்பாடு முறியாது என்ற நம்பிக்கையுடன்தான் இருந்தேன். நேற்றும் இன்றும் நமது தோழர்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் எட்டு இடங்கள் நாடாளுமன்றத்திலும், 12 அல்லது 13 இடங்கள் சட்டமன்றத்திலும் அவர்களுக்குத் தருவது என்று வாக்களிக்கப்பட்டது.

திரும்பி வந்து பேசுவார்கள் என்று நினைத்திருந்தோம். ஆனால் சுப்பிரமணியம் தனது கட்சி போட்டியிடும் தொகுதிகளை இன்று மாலை (24-1-71) அறிவித்து விட்டார். நேற்று அவர் கரூர் தொகுதியில் போட்டியிடப் போவதாக எங்களிடம் தந்த பட்டியலில் கூறப்பட்டிருந்தது. ஆனால் இன்றைய பட்டியலில் அவர் கோவைத் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவிந்திருக்கிறார். ஏற்கனவே பேசி முடிவு செய்யப்பட்டு கோவை நாடாளுமன்றத் தொகுதி இந்தியக் கம்யூனிஸ்டு கட்சிக்கு என்று ஒதுக்கப்பட்ட பிறகு கோவையில் போட்டியிடுவேன் என அறிவித்திருப்பது முற்போக்குக் கூட்டணியின் உறவைப் பாதிக்கும்.

ஆகவே நம்மோடு உடன்பாடு கொள்ள சம்மதிக்கவில்லை போலும் என்கிற கருத்தோடு மீண்டும் மேடையில் நாங்கள் ஏற்கனவே ஆய்வுக் குழுவில் தேர்ந்தெடுத்திருந்த பெயர்களையெல்லாம் இணைத்து இந்த வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறேன். இதனை நமது உழைப்பால் வெற்றிப் பட்டியலாக்கிட வேண்டும். என்று கேட்டுக்கொண்டு கழக வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டேன். தேர்தல் சிறப்பு மாநாட்டில் தோழமைக் கட்சிகளின் உடன்பாடு குறித்தும், போட்டியிடும் இடங்கள் குறித்தும், கழக வேட்பாளர்கள் குறித்தும் அறிவித்து விட்டு நிம்மதியாக இரவு உறங்கிடச் சென்றேன்.

இரவு பனிரெண்டு மணி அளவில் தொலைபேசி மணி அடித்தது. டெல்லியிலிருந்து பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரும், திரு. ஜி. பார்த்தசாரதி அவர்களும் பேசினார்கள். "என்ன இப்படி ஆகிவிட்டதே!" என்று வருத்தப்பட்டார்கள். "எங்கள் மீது எந்தக் குறையுமில்லை. தமிழ்நாட்டில் உள்ள உங்களது காங்கிரஸ் தலைவர்கள்தான் முதலில் பட்டியலை வெளியிட்டு விட்டார்கள். அதற்குப் பிறகு நாங்களும் வேறு வழியின்றி எங்கள் மாநாட்டில் பட்டியலை அறிவித்து விட்டோம்" என்று பதில் அளித்தேன்.

"மறு பரிசீலனை செய்து இருபது சட்டமன்றத் தொகுதிகளும், பத்து நாடாளுமன்றத் தொகுதிகளுமாவது ஒதுக்கித் தர முடியுமா?" என்று கேட்டார்கள். "இனிமேல் சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்குகிற முயற்சியில் ஈடுபடுவது இயலாது என்றும், முடியுமானால் நாடாளுமன்றத் தொகுதிகள் சிலவற்றை ஒதுக்குவது பற்றி யோசிக்கிறேன்" என்றும் கூறினேன்..

அந்தப் பேச்சின் தொடர்பாக திரு. ஆர். வி. சாமிநாதன் அவர்கள் எங்களுடன் மீண்டும் உடன்பாடு குறித்துக் கலந்துரையாட வந்தார். அந்தப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டின் விவரம் வருமாறு: "காங்கிரஸ் (இ) கட்சி சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதில்லை என்றும் பின்வரும் பத்து நாடாளுமன்றத் கட்சிகளும் தொகுதிகளிலும் போட்டியிடுவதென்றும் இரு பரஸ்பர முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் நாடாளுமன்றத் தொகுதிகளிலும், சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒத்துழைப்பு வழங்கப் பாடுபடுவதென்றும் உறுதி தெரிவிக்கப்படுகிறது.

இந்திரா காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ள இடங்கள் வருமாறு: 1. கரூர், 2. மதுரை, 3. திருத்தணி, 4. கடலூர், 5. மேட்டூர், 6. புதுவை, 7. தென்காசி, 8. திண்டிவனம், 9. கிருஷ்ணகிரி, 10. சிவகாசி. இவைகளில் கரூர், மதுரை, திண்டிவனம், கிருஷ்ணகிரி, சிவகாசி ஆகிய ஐந்து தொகுதிகளில் கழகம் ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்திருந்தும் அவர்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டு இந்த உடன்பாட்டுக்கு ஒப்புக் கொள்வதென்று முடிவு செய்யப்பட்டது.

காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர். வி. சாமிநாதனும், கழகச் சார்பில் நானும், நாவலரும் கையெழுத்திட்டோம். இந்த உடன்பாடு குறித்து சி. சுப்பிரமணியம் கருத்து வெளியிடும்போது "தி.மு.கழகத்திற்கும் காங்கிரசுக்குமிடையே உடன்பாடு ஏற்பட்டிருப்பதை மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். நடைபெறவிருக்கும் இத்தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. நான் எந்தவொரு தொகுதியிலும் என்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறேன்.

சிண்டிகேட் காங்கிரஸ் கூட்டணியை முறியடிப்பதை மனதிற் கொண்டு இந்த முற்போக்கு கூட்டணியின் உடன்பாடு ஏற்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்" என்றார். இறுதியாக கழகக் கூட்டணியின் சார்பில் சட்டமன்றத்திற்கு கழகம் 201 இடங்களிலும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 10 இடங்களிலும், பார்வர்டு பிளாக் 9 இடங்களிலும், முஸ்லீம் லீக் 8 இடங்களிலும், பி. சோ. கட்சி 4 இடங்களிலும், தமிழரசு கழகம் 2 இடங்களிலும் போட்டியிட்டன.

நாடாளுமன்றத்திற்கு கழகம் 24 இடங்களிலும், காங்கிரஸ் 10 இடங்களிலும் (பாண்டிச்சேரி உட்பட), முஸ்லீம் லீக் 1 இடத்திலும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 4 இடங்களிலும், பார்வர்டு பிளாக் 1 இடத்திலும் போட்டியிட்டன. கழகத்துடன் தேர்தல் உடன்பாடு இல்லையென்றால் போட்டியிடப் போவதில்லை என்று கூறிக் கொண்டிருந்த மோகன் குமாரமங்கலம், பாண்டிச்சேரி நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக நின்றார். அண்ணாவை இழந்துவிட்ட நிலையில் கழகம்!

ராஜாஜி அவர்களும் காமராஜர் அவர்களும் ஒன்றாக இணைந்து கழகத்தின் தலைமையில் இருந்த முற்போக்குக் கூட்டணியை வீழ்த்த வேண்டுமெனக் கச்சை கட்டி நின்ற தேர்தல் களம்! சேலத்தில் பெரியார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஊர்வலத்தில் இராமர் போன்ற கடவுளர் சிலைகளைக் களங்கப்படுத்தி விட்டதாகப் பரபரப்பான பிரச்சாரம்! அரசாங்கத்தின் தலைமைப் பீடத்தில் இருந்த முக்கியமான இரண்டொரு அதிகாரிகளேகூட ராஜாஜி அவர்களையும், காமராஜர் அவர்களையும் ரகசியமாகச் சந்தித்து கழகத்தையும், கழகத்தின் தோழமைக் கட்சிகளையும் தோற்கடிக்க முழு முயற்சிகளை மேற்கொண்ட வெளிப்படையான சதிச் செயல்!

இத்தனையையும் எதிர்கொண்டு கழகத் தலைமையில் முற்போக்குக் கூட்டணி தேர்தல் களம் புகுந்தது.