நெஞ்சுக்கு நீதி
நாடாளுமன்ற - சட்டமன்றத் தேர்தல் · 174 / 391
நாடாளுமன்ற - சட்டமன்றத் தேர்தல் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது மத்திய அரசில் எடுக்கப்படும் முற்போக்குத் திட்டங்களை ஆதரிப்பது என்பதை கொள்கையாகக் கொண்டிருந்தது. அந்த வரிசையில் 1970-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முன்னாள் மன்னர்கள் அனைவருக்கும் அரசால் அளிக்கப்பட்டு வந்த அங்கீகாரத்தை ரத்து செய்வது என்று பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் முடிவெடுத்து அதற்கொப்ப 7-9-70 அன்று அதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் வெளியிட்டார்.
இதனை டெல்லியில் தி. மு. கழகத்தின் சார்பில் நாடாளுமன்ற தி. மு. க. குழு செயலாளராக இருந்த இரா. செழியன், எம். பி. வரவேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். மன்னர் மானிய ஒழிப்பு மசோதா இதற்கு முன்பு மக்கள் அவையில் நிறைவேற்றப்பட்ட பிறகு மாநிலங்களவையில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை முன்னிட்டு குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்தார். இந்தத் தீர்மானத்தை எதிர்த்து காமராஜர் நாடாளுமன்றத்தில் வாக்களித்தது தமிழக அரசியலில் அவருக்கு மிகுந்த எதிர்ப்பை ஏற்படுத்தியது.
செப்டம்பர் 7-ந் தேதியன்று குடியரசுத் தலைவர் பிறப்பித்த உத்தரவு செல்லாது என்றும், அது தங்களுடைய ஜீவாதார உரிமைகளைப் பாதிப்பதாகவும் கூறி, குவாலியர், உதயபூர் நாபா, கட்ச், நலகார், பாட்னா, தாரங்கதாரா, காசி மன்னர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். இந்த உத்தரவிற்கு எதிராக பல்கிவாலாவும், உத்திரவிற்கு ஆதரவாக அட்டார்னி ஜெனரல் நிரேன் டேவும், மோகன் குமாரமங்கலமும் 21 நாள் வாதாடினார்கள்.
உச்ச நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கை தலைமை நீதிபதி இதயதுல்லா, நீதிபதிகள் ஷா, சிக்ரி, ஷிலாட், பார்கவா, மிட்டர், வைத்தியலிங்கம் குரோவர், ஹெக்டே, ரே, டுவா ஆகியோர் விசாரித்தனர். இந்த வழக்கில் டிசம்பர் 15-ந் தேதியன்று தீர்ப்பு கூறப்பட்டது. "மன்னர்களுக்கு மானியமும் தனிச் சலுகைகளும் அளிக்கப்படுவதைத் தடுத்த குடியரசுத் தலைவரின் அவசரச்சட்டம் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது" என்று தீர்ப்பு கூறப்பட்டது.
மன்னர்களுக்குரிய உரிமைகளையும், சலுகைகளையும் மானியங்களையும், இந்த அவசரச் சட்டத்துக்கு முன்னர் இருந்ததுபோல் அரசு தர வேண்டும் என்று தலைமை நீதிபதி உட்பட ஒன்பது நீதிபதிகள் தீர்ப்பு கூறினர். அந்தத் தீர்ப்பு பற்றிய என்னுடைய கருத்தை செய்தியாளர்கள் கேட்டபோது "சோஷலிசத்தை நோக்கி நாடு சென்றிட வேண்டுமென்று கருதுகிற கொள்கையுடையவர் யாரும் இந்தச் செய்தி கேட்டு மகிழ்ச்சியடைய முடியாது. அப்படி மகிழ்ச்சி அடைகிறவர்களை ரசிக்கவும் முடியாது.
மன்னர் மானிய ரத்துக்கான தேவைப்படும் அரசியல் சட்டரீதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் தி. மு. கழகத்தின் ஆசை" என்று கூறினேன். தீர்ப்பையொட்டி நாடாளுமன்ற மக்களவையில் பெருத்த விவாதம் நடைபெற்றது. அதற்கு பதிலளித்த பிரதமர் இந்திரா "ராஜமானிய ஒழிப்புக் கொள்கையில் அரசாங்கம் தொடர்ந்து உறுதியாயிருக்கிறது. அதைத் தக்க அரசியல் சட்ட வழிவகைகள் மூலம் நிறைவேற்றியே தீரும் என்பதே நான் இப்போது அவைக்குத் தரக்கூடிய உறுதி" என்று கூறினார்.
மன்னர் மானிய ஒழிப்பு ரத்து உத்தரவு செல்லாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்ததையொட்டி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு இடைக்காலத் தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் இந்திய அரசியல் அரங்கில் தோன்றியது. அந்தச் சந்தேகத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் நாடாளுமன்ற மக்களவை டிசம்பர் 28-ஆம் தேதி கலைக்கப்பட்டு-மறு தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதுபற்றி ராஜாஜி, ஜெகஜீவன்ராம், நிஜலிங்கப்பா ஆகியோர் வானொலியில் கருத்து தெரிவித்ததையொட்டி, என்னிடம் கருத்து வானொலி சார்பில் கேட்டபோது - "இப்போது பிரச்சினை மக்கள் கைக்கே வந்திருக்கிறது.
தங்களுடையவும். தங்களது சந்ததியினருடையதுமான வருங்காலத்தை மக்கள் தீர்மானிக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அண்மையில் நாடாளுமன்றத்தின் முன்வந்த சில பிரச்சினைகள் மூலம் எந்தத் தலைவர்கள்; தங்களை எங்கே அழைத்துச் செல்வார்கள் என்பதை மக்கள் நன்கு உணர்ந்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. எனவே, இதற்கு முன்போல அல்லாது இப்போது மக்கள் முன்னிலையில் அவர்கள் தேர்ந்தெடுக்கவேண்டியது தெளிவாகத் தெரிகிறது.
சோஷலிச வருங்காலத்தை மலரச் செய்யவும் வன்முறையற்ற விதத்தில் வறுமையை ஒழிக்கப் போராடவும் சமுதாயத்தின் அடித்தளத்தில் கிடக்கிற இந்தியாவின் கோடிக்கணக்கான உழைக்கும் பாட்டாளிகளுக்கு இது ஒரு அருமையான வாய்ப்பாகும் நான் மக்கள் மீதும், ஜனநாயகத்தின் மீதும் மகத்தான நம்பிக்கை வைத்திருப்பவன். மக்கள் குரலே மகேசன் குரல்."
தேர்தல் பற்றி கழகத்தின் நிலை பற்றி பேசுவதற்காக மத்திய அமைச்சராக இருந்த ரகுராமையா சென்னை வந்து என்னுடன் பேசினார். தேர்தல் பற்றி கழகத்தின் நிலையை அறிவதற்காக ஜனவரி 11-ந்தேதி கூடவிருந்த கழகத்தின் செயற்குழு, பொதுக்குழுவை ஜனவரி 3-ந்தேதியே கூட்டுவதற்கு அறிவிப்பு செய்யப்பட்டது. பிரதமரின் அழைப்பின் பேரில் டிசம்பர் 31-ஆம் தேதியன்று டெல்லி சென்று பிரதமருடன் ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசினேன்.
டெல்லியில் சி. சுப்பிரமணியம் அவர்கள் என்னைச் சந்தித்து ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசிக் கொண்டிருந்தார். டெல்லியில் செய்தியாளர்கள் தேர்தல்பற்றிக் கேட்டபோது, "நாடாளுமன்ற இடைத் தேர்தலையொட்டி தமிழக சட்டமன்றத்துக்கான தேர்தலையும் நடத்துவதா என்ற பிரச்சினை குறித்து ஜனவரி 3-ந் தேதி சென்னையில் கூடும் கழகப் பொதுக் குழுவில்தான் இறுதி முடிவெடுக்கப்படும்" என்று அறிவித்தேன்.
சட்டமன்ற கலைப்பு குறித்து பிரதமரிடம் ஆலோசனை எதுவும் நாடினீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "இது கழகம் முடிவு செய்யவேண்டிய பிரச்சினை. இதில் பிரதமரின ஆலோசனையை நான் நாடவும், பிரதமர் தனது கருத்து என்று எதையும் என்னிடம் தெரிவிக்கவும் இல்லை" என்று கூறினேன்.
மேலும் நான் தொடர்ந்து கூறும்போது "அடிக்கடி தேர்தலைச் சந்திக்கும் தொல்லையிலிருந்து மக்களைத தவிர்ப்பதற்காகவும், நிர்வாகம் தடங்கலின்றி நடைபெற்று மக்களின் நன்மைகளில் நாட்டம் செலுத்தவும், பொதுப்பணம் விரயமாவதைத் தடுப்பதற்காகவும், நாடாளுமன்றம், சட்டமன்றம், நகராட்சி, பஞ்சாயத்து ஆகியவைகளுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது சிறந்தது என்று நான் கருதுகிறேன். இது ஒரு நிபுணர் குழு அமைத்து பரிசீலிக்க வேண்டிய பிரச்சினையாகும், தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஏழு கட்சி முற்போக்குக் கூட்டணியில் தி.
மு. கழகமும், இந்திரா காங்கிரசும் பங்கு கொண்டுள்ளன. இந்தக் கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு செய்துகொள்வது குறித்து பிரதமர் இந்திராவுடனும் ஜெகஜீவன்ராமுடனும் பரவலாகப் பேசப்பட்டது. தி. மு. க. பொதுக்குழு கூட்டத்தின் முடிவுக்குப் பின்னர் மாநில அளவில் மற்றத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்" என்று கூறினேன்.
டெல்லியிலிருந்து திரும்பியபோது நான் பயணம் செய்த விமானத்தில்தான் காமராஜர் அவர்களும், சி. சுப்பிரமணியம் அவர்களும் சென்னை வந்தார்கள். சென்னையில் ஜனவரி 3-ஆம் தேதியன்று கூடிய செயற்குழுவும், பொதுக் குழுவும் தமிழக சட்டமன்றத்தைக் கலைத்து விட்டு சட்டசபைத் தேர்தல்களை நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒருங்கிணைத்து நடத்துவதா என்பதைப்பற்றி முடிவெடுக்க கழகத் தலைவராக உள்ள எனக்கும், பொதுச் செயலாளராக இருந்த நாவலருக்கும் அதிகாரமளித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
அந்தத் தீர்மானத்தை நண்பர் மதுரை முத்து முன்மொழிய அனைத்து மாவட்டக் கழகச் செயலாளர்களும் வழி மொழிந்தனர். இதற்கு மறுநாள் ஜனவரி 4-ஆம் தேதி காலை 11-15 மணிக்கு ஆளுநரைச் சந்தித்து-அன்று காலையில் கூடிய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினைத் தெரிவித்ததின் பேரில் கவர்னர் மாளிகையிலிருந்து கீழ்க்கண்ட பிரகடனம் வெளியிடப்பட்டது. "தமிழக முதல்வர் திரு. மு. கருணாநிதி இன்று காலை 11-15 மணிக்கு தமிழக ஆளுநரை ஆளுநர் மாளிகையில் சந்தித்து தமிழ்நாடு சட்டமன்றத்தை 1971 ஜனவரி 5-ஆம் தேதி முதல் கலைக்குமாறு பரிந்துரை கூறுவதெனவும்-நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடத்துவதெனவும், சோஷலிச-மதச்சார்பற்ற கொள்கைகளை-செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மக்களிடமிருந்து புதிய கட்டளையைப் பெறுவது எனவும் அமைச்சரவை செய்த முடிவினை கவர்னரிடம் தமிழக முதல்வர் தெரிவித்தார்.
ஆழ்ந்த பரிசீலனைக்குப்பின் ஆளுநர், இந்த விஷயத்தில் அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று 1971 ஜனவரி 5-ஆம் தேதி முதல் தமிழக சட்டமன்றத்தைக் கலைக்க உத்தரவிட்டார்." இந்த அறிவிப்புக்குப் பிறகு, செய்தியாளர்கள் என்னைச் சந்தித்து சட்டமன்றத்தைக் கலைக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேட்டார்கள். அதற்கு நான் அளித்த பதில், "இந்திய நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் முன் கூட்டியே நடத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
தேர்தல் நடைபெறும் என்று உறுதியானவுடன் தமிழ்நாட்டில் அதன் விளைவுகள் பற்றியும் நடத்த வேண்டிய சூழ்நிலைகள் குறித்தும் ஆலோசித்து வந்தேன். இன்றைய சட்டப்பேரவை இன்னும் ஓராண்டு காலம் தொடர்ந்து பதவியில் நீடிக்கலாம் என்பது உண்மை. ஆனால் ஆண்டுதோறும் மக்கள் மாறி மாறி தேர்தல்களைச் சந்திக்கும் நிலையால் ஆட்சி இயந்திரம் சரிவரச் செயல்படாதிருக்கலாம். எடுத்த கொள்கை முடிவுகளை ஆட்சி இயந்திரத்தின் வாயிலாக நிறைவேற்ற முடியாத தேக்க நிலை ஏற்படவும், பொது மக்களுக்கு சங்கடங்களை உருவாக்கவும் வழி வகுக்கும் என்று கருதுகிறேன்.
இன்னும் ஓராண்டு காலம் கழக அமைச்சரவை அதிகாரத்தில் இருக்கலாமென்றாலும் பொது மக்களது நன்மைக் கருதியும் பாராளுமன்றத் தேர்தலுடன் ஒருங்கிணைத்து தேர்தலை நடத்துவதே பொருத்தமாகும் என்று தி. மு. கழகச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்த கருத்துக்களையும் அறிந்தேன். இந்திய நாட்டு அரசியலில் சமதர்ம சமுதாயத்தை அமைக்க வேண்டும். சமய சார்பற்ற அரசு கொள்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கருத்துக்கள் பலமான விவாதத்திற்கு உரியவைகளாகியிருக்கின்றன.
இந்த நோக்கங்களை நிறைவேற்றவும் தேவையான சட்டங்களை இயற்றவும் திட்டங்களைச் செயல்படுத்தவும் கழக அரசு நடவடிக்கைகள் எடுத்தும், மத்திய அரசு எடுத்த இதுபோன்ற கொள்கை நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்தும் வந்திருக்கின்றது. நெ.-18 இந்தக் கொள்கைகளை நிறைவேற்றுவதற்காக மக்களுடைய தீர்ப்பைப் பெற நாடாளுமன்றத்தேர்தல் நடைபெறும்போது சட்டப் பேரவைத் தேர்தலும் நடத்துவது பொருத்தமுடையதாகும் என்ற முடிவிற்கு தி.
மு. கழக அமைச்சரவை வந்துள்ளது. மீதியிருக்கும் ஓராண்டு பதவிக் காலத்தையும் நாங்கள் பொருட்படுத்தாமல் ஏற்ற கொள்கைகளுக்கு மக்கள் தீர்ப்பைப் பெறவும், தொடர்ந்து நடைபெறும் தேர்தல் தொல்லைகளிலிருந்து மக்கள் விடுபட்டு நன்மை பெறவும் இரண்டு தேர்தல்களையும் ஒருங்கிணைத்து நடத்த வேண்டுமென்று மத்திய அரசுக்குக் கூறி யிருக்கிறோம்" என்று கூறினேன்.
"தேர்தலில் வெற்றி உங்களுக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?" என்று கேட்டதற்கு "நான் வெற்றி வாய்ப்புக்களைப் பற்றி ஆணவத்தோடு என்றுமே சொல்லிப் பழக்கப்பட்டவன் அல்ல. அடக்கத்தோடு சொல்கிறேன். மிகச் சாதாரணமான எங்களை சாதாரணமான மக்களின் பிரதிநிதிகளாக சாசாரணமான மக்கள் தேர்ந்தெடுத்து இந்தப் பதவியில் அமர்த்தியிருக்கிறார்கள். அவர்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஊழியம் புரிய வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த மக்கள் எங்களிடத்தில் மீண்டும் வேலை வாங்கத் தயங்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன்" என்று கூறினேன்.
சட்டமன்றத் தேர்தலையும் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து வைப்பது குறித்து நான் பொதுக்கூட்டம் ஒன்றில் அப்போது கூறிய மூன்று உவமைகள்:- கார்த்திகை மாதத்தில் அகல் விளக்குகளை ஏற்றுவார்கள் தாய்மார்கள். தீப்பெட்டியிலிருந்து ஒரு குச்சியை எடுத்து உரசி ஒரு விளக்கைப் பற்றவைத்து வீட்டு கீழே போட்டுவிட்டு மற்றொரு விளக்கை ஏற்ற இன்னெரு குச்சியை எடுத்து உரசிடமாட்டார்கள். ஒரு தீக்குச்சியினால் எவ்வளவு விளக்குகளை ஏற்ற முடியுமோ அவ்வளவு விளக்குகளை ஏற்றுவார்கள்.
அதுபோலத்தான் நாடாளுமன்றத் தேர்தலையும், சட்டமன்றத் தேர்தலையும் ஒரே நேரத்தில் நாம் நடத்துகிறோம். வீட்டிலுள்ள தாய்மார்கள் அடுப்பைப் பற்றவைத்து அரிசிக்கு உலை வைத்து சோறு வடிப்பார்கள். உடனே அடுப்பை அணைத்து விட்டு குழம்புக்காக என்று சிறிது நேரம் கழித்து அடுப்பைப் பற்ற வைக்க மாட்டார்கள். ஒரு தடவை அடுப்பைப் பற்றவைத்து சோறு பொங்கி விட்டு உடனே குழம்புக்கும் நீர் வைத்து சேர்க்க வேண்டியவற்றைச் சேர்த்து குழம்பு கொதிக்க வைப்பார்கள்.
அதைப்போலத்தான் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் அதே நேரத்தில் சட்டமன்றத் தேர்தலையும் நடத்துகிறோம். ஸ்டுடியோக்கள் நிறைந்துள்ள கோடம்பாக்கம் பகுதியிலுள்ளவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஸ்டுடியோவில் ஒரு கொலு மண்டபம் 'செட்' போட்டார்கள் என்றால், அதில் எடுக்கப்பட வேண்டிய அத்தனை காட்சிகளையும் எடுப்பார்கள். ஒரு கொலு மண்டபம் காட்சியை எடுத்துவிட்டு அந்த செட்டைக் கலைத்து பிறகு வேறு காட்சியை எடுத்து முடித்துவிட்டு மீண்டும் ஒருமுறை கொலு மண்டப செட் போட்டு கொலு மண்டபக் காட்சியை எடுக்க மாட்டார்கள்.
அப்படி எடுத்தால் பணம்தான் விரயமாகும். ஜனவரி மாதம் 4-ஆம் தேதியன்றே கழக வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மூன்று பேர்களைக் கொண்ட துணை ஆய்வுக் குழுக்கள் அறிவிக்கப்பட்டு, அந்தக் குழுக்கள் ஜனவரி மாதம் 5-ந் தேதி முதல் சுற்றுப் பயணம் செய்யும் என்றும், 12-ந் தேதி அன்று அறிக்கை தாக்கல் செய்யும் என்றும் பொதுச்செயலாளர் அறிவிப்பு வந்தது. டெல்லியில் நடைபெற்ற தேர்தல் அதிகாரிகள் மாநாட்டில் பேசும்போது தலைமைத் தேர்தல் கமிஷனராக இருந்த சென்வர்மா "தமிழ்நாட்டில் நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது மிகவும் எளிது.
ஏனெனில் தமிழ்நாடு ஒழுங்கும். கட்டுப்பாடும் நிறைந்த மாநிலம் ஆகும்" என்று குறிப்பிட்டார். 6-1-71 அன்று சென்னை வானொலியில் நான் விடுத்த வேண்டுகோளில் "தேர்தல் களத்தில் எல்லா அரசியல் கட்சிகளும் நிற்கின்றன. இன்று தமிழகத்தில் அரசு நடத்துகின்ற நமது கட்சியில் உள்ளோர் உட்பட அனைத்துக் கட்சியினரும், தமது கொள்கை விளக்கங்களை தரக்குறைவு எதுவும் ஏற்படா வண்ணமும், தமிழகத்தின் பாரம்பரிய பண்பாடு எள்ளளவும் பாதிக்காத அளவிலும், அளிப்பதற்கேற்ற வகையில், தங்கள் கட்சிகளின் பிரச்சார இயந்திரங்களைக் கண்காணித்து வருவார்கள் என்ற நம்பிக்கை கொள்வதோடு, அவ்வாறு அனைவருமே நடந்து கொள்ளவேண்டும் என்ற பணிவன்பான வேண்டுகோளையும் விடுத்திடுவது என் கடமை என்று கருதுகிறேன்.
இந்த மகத்தான சோதனையில் எல்லாக் கட்சிக்காரர்களும், தமிழ்நாட்டின் பண்பாட்டையும், அரசியல் நாகரீகத்தையும், அமைதியான சூழ்நிலையையும் பேணிக் காத்தனர் என்பதுதான் நாம் ஏற்றி வைக்கும் அணையாத விள
க்காகும்; எழுதிவைக்கும் அற்புத சரித்திரமாகும். அமைதி வழி தேர்தல் நடைபெற-அறவழிகள் கடைப் பிடிக்கப்பட-கொடும்பகை உணர்வு ஒழிந்து-கொள்கைப் பற்றுணர்வே மிகுந்து-கட்சிகள் வேறு வேறு இருக்கலாம்; ஆனால் கருத்தொருமித்த நட்பு வளர்ந்திடவேண்டும் என்ற சூளுரையை அனைவரும் எடுத்துக் கொண்டு தேர்தலில் ஈடுபடுவோம், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு-அதற்குக் கட்டுப்படுவோம்" என்று கேட்டுக் கொண்டேன்.
தி. மு. கழகத்திற்கு பெரும்பான்மை இருந்தபோதிலும், இன்னும் ஓராண்டுகள் ஆட்சியில் இருக்கலாம் என்றபோதிலும் இந்தியாவிலேயே தைரியமாக முதன்முதலில் முன்வந்து சட்டமன்றத்தைக் கலைத்த கட்சி அப்போது திராவிட முன்னேற்றக் கழகம்தான். ஆனால், அதுபற்றி "இந்து" எழுதிய தலையங்கத்தில் ஒவ்வொரு நாளும் தி. மு. கழகத்தின் பிரகாசம் குறைந்து வருவதாகவும், அதனால் தான் சட்டசபை கலைக்கப்பட்டதாகவும் எழுதியது.
