உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/கொள்கையும் கட்டுப்பாடும்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

கொள்கையும் கட்டுப்பாடும் · 173 / 391

கொள்கையும் கட்டுப்பாடும் வெ ளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு 1970 ஜூலை 21-ஆம் நாள் சென்னை திரும்பினோம். அன்று மாலை சென்னை கலைவாணர் அரங்கில் வரவேற்பு நிகழ்ச்சியொன்று ஏற்பாடாகியிருந்தது. அப்போது அந்த அரங்கிற்கு "பாலர் அரங்கம்" என்றுதான் பெயர் இருந்தது.

ஒரு காலத்தில் சட்டசபைக் கூட்டம் நடைபெறும் இடமாக அந்த இடம் விளங்கி, அதன் பின்னர் பாலர் அரங்கம் என்ற பெயரில் திரையரங்காக மாற்றப்பட்டிருந்தது. அந்த அரங்கின் அடித்தளத்தை மட்டுமே வைத்துக்கொண்டு பெரும் பகுதி மாற்றம் செய்து புதியதோர் தோற்றப் பொலிவுடனும், குளிர் சாதன வசதியுடனும் அந்த இடத்தை உருவாக்கி அதற்கு நகைச்சுவை மன்னரும் சிறந்த சிந்தனையாளருமான என். எஸ். கே. அவர்கள் நினைவாக "கலைவாணர் அரங்கம்" என்ற பெயரையும் சூட்டுகின்ற முயற்சியில் நான் ஈடுபட்டு வெற்றி கண்டது இன்றைக்கும் என் நெஞ்சுக்கு இதமான ஒரு நிகழ்ச்சியாகும்.

அந்த அரங்கத்தில் நடைபெற்ற வரவேற்பு விழாவில் நண்பர் எம். ஜி. ஆர். அவர்கள் பேசியது-அடுத்து இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட திடீர் மாற்றங்களை எண்ணும்போது நினைவில் நிறுத்திட வேண்டிய ஒன்றாகும். அவரது அன்றைய பேச்சையும் அதன் பின்னர் சில நிகழ்ச்சிகளில் பேசிய பேச்சுக்களையும் நினைவிற் கொண்டால்தான் 1972-ல் ஏற்பட்ட சில நிலைமைகளின் உண்மைப் பின்னணி என்ன என்பதைச் சரிவரப் புரிந்து கொள்ள முடியும்.

"கலைஞர் அவர்கள் அண்ணாவின் கொள்கை வழியில் செயல்படுகிறார். கலைஞர் அவர்கள் மேலை நாடுகளில் இருந்து அமைச்சர்களுக்கும் கழக நண்பர்களுக்கும் கடிதமெழுதியிருந்தார்கள். எனக்கும் அவர் கைப்படவே கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதமே நம்மைத் தூற்றுகின்ற எதிரிகளுக்குப் பதிலாகும். தமிழ்நாட்டு நண்பர்களின் அன்பையும் பாசத்தையும் எந்தச் சூழ்நிலையில் இருந்தபோதிலும் அவர் மறக்கவில்லை. அப்படிப்பட்ட தனித்தன்மை வாய்ந்த ஒருவரைத் தலைவராகக் கொண்டிருக்கும் நிலையில் அவர் பல்லாண்டு சேவை செய்ய வேண்டும் என்கிறபோது தமிழகத்தில் உள்ள நிலைமைகளையும் கூற விரும்புகிறேன்.

எங்கு பார்த்தாலும் பொறாமை. எங்கு பார்த்தாலும் எதிர்ப்புச் சக்திகள் இருக்கின்றன. மக்களைக் காக்க முதலமைச்சர் கலைஞர் செயல்படுகிறபோது அவரை மக்கள் விரோதியாக்க பத்திரிகை பலத்தைப் பயன்படுத்துகிறார்கள். கழகத்தின் தலைவராக, தமிழகத்தின் முதல்வராக, தொண்டனாகப் பணி புரியும் கலைஞரிடம் பெரும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. போட்டி, பொறாமை. சுயநலத்தின் காரணமாக கழகத்திற்கு எதிராகச் செய்யப்படும் சூழ்ச்சிகளை எதிர்த்துப் பொடிப் பொடியாக்குவோம்.

நேற்று வந்தவர்கள் எல்லாம் அரசியலில் புகுந்து கொண்டு இன்று கழகத்தை ஒழிப்பேன் என்று கூறுகிறார்கள்." 1970-ஆம் ஆண்டு நண்பர் எம். ஜி. ஆரின் உரையில் காணப்படும் "நேற்று வந்தவர்கள்" என்ற சொற்றொடரும், "அரசியலில் புகுந்து கொண்டு கழகத்தை ஒழிப்பேன் என்கிறார்கள்" என்ற சொற்றொடரும் இப்போது நான் இந்த இரண்டாம் பாகத்தை எழுதும் போது எத்தனை எத்தனை எண்ண அலைகளை எழுப்புகின்றன தெரியுமா? நான் தாயகம் திரும்பிய மறுநாளே மூதறிஞர் ராஜாஜி அவர்கள் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.

அதில், "அன்புக்குரிய கருணாநிதி அவர்களுக்கு ஆசீர்வாதம். செளக்கியமாகத் திரும்பி வந்து ஊர் சேர்ந்ததற்கு மகிழ்ச்சி" என்று குறிப்பிட்டிருந்தார். பாரிசில் நடைபெற்ற மூன்றாம் உலகத் தமிழ் மாநாட்டினைத் துவக்கி வைத்து நான் ஆற்றிய உரை பற்றி அந்த மாநாட்டில் கலந்து கொண்டு விட்டுத் தமிழகம் திரும்பிய மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்தில், "மாண்புமிகு கலைஞர் அவர்களுக்கு வணக்கம்.

"என் கண்ணிலும் சிறந்தது தமிழ்" எனக் கூறி, பாரிஸ் மாநாட்டு வந்திருந்தோர் மனத்தையெல்லாம் கவர்ந்து, தமிழின் பெருமையை விளக்கி விட்டீர்கள். உலகினை வெல்லும் தங்கள் திறன் கண்டு மகிழ்ந்தேன். இந்தத் தமிழன்பு தங்களைக் காக்க வேண்டுமென என் மனம் வணங்கத் தொடங்கியது. தங்கள் கண்ணுக்கு ஒன்றுமில்லை என்று இலண்டன் மருத்துவர்கள் கூறினார்கள் என மாநாடு முடிவதற்கு முன்னரே அறிந்து எல்லோரும் மட்டில்லா மகிழ்ச்சி கொண்டோம்.

தங்களுடைய தமிழன்பும் திறனும் தமிழ் நாட்டுக்கும் உலகினுக்கும் நீண்ட காலம் பயன்பட வேண்டுமென்று எல்லாம் வல்ல கடவுளை வேண்டிக் கொள்கிறேன்" என்று எழுதியிருந்தார். என்னை வரவேற்றுப் பாராட்டும் விழாவொன்று மயிலாப்பூர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு தெய்வீகப் பேரவையின் சார்பில் நடைபெற்றது. தர்மபுரம் ஆதினகர்த்தர், காஞ்சி ஞானப்பிரகாச ஆதினத் தலைவர், குன்றக்குடி அடிகளார், சுந்தரலிங்க அடிகளார், திருவண்ணாமலை ராமனாத சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு பாராட்டினர்.

அந்த விழாவில் நான் நன்றி தெரிவித்து உரையாற்றியபோது, "கடவுளை நாம் ஏற்றுக் கொள்கிறோமா என்பதைவிட, கடவுள் நம்மை ஏற்றுக் கொள்கிறாரா என்பதுதான் முக்கியம். எனவே கடவுள் நம்மை ஏற்றுக் கொள்ளும் வழியில் நாம் நடைபோட வேண்டும். கடவுள் ஏழைகளின் புன்னகையில் இருக்கிறார். அந்தப் புன்னகையில் கடவுளைக் காணத்துடிப்பவன் நான்" என்று குறிப்பிட்டேன்.

1970-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பதினைந்து ஸ்டாண்டர்டு ஏக்கரா உச்சவரம்பு கொண்டு வரப்படும் என்று அறிவித்ததற்கு இணங்க, அந்த ஆண்டே, அந்தச் சட்டமன்றத் தொடரிலேயே மார்ச் 31-ந் தேதி நில உச்சவரம்பு மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதாவில் கூறப்பட்டிருந்தாவது: 1961-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நில உச்சவரம்புச் சட்டம் ஒன்று முதன் முதலாகக் கொண்டு வரப்பட்டது. ஐந்து பேர் அடங்கிய ஓர் குடும்பத்திற்கு முப்பது ஏக்கர் என்று அதில் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அந்தச் சட்டம் அமலுக்கு வந்த பிறகும் நில உறவு முறையில் ஏற்றத் தாழ்வுகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. மேற்படி சட்டம் அமலாக்கப்பட்ட பிறகும் பொது நலனுக்கு விரோதமாக சில மனிதர்களிடமே அதிக நிலம் சேர்ந்திருக்கிறது. நிலச் சீர்திருத்தத்தையொட்டிய மற்றொரு நடவடிக்கையாக இப்பொழுது இந்தச் சட்டம் கொண்டு வரப்படுகிறது நில உறவு முறைகளில் பல ஏற்றத்தாழ்வைக் குறைக்க வேண்டுமென்ற குறிக்கோளை எய்தும் பொருட்டு உச்சவரம்பை 30 ஏக்கரிலிருந்து 15 ஏக்கராவாகக் குறைக்க வேண்டிய அவசியம் உணரப்பட்டுள்ளது.

இந்த மசோதா அந்தக் குறிக்கோளை நிறைவேற்றப் பயன்படும். 1970 பிப்ரவரி 26-ந் தேதி முதல் இந்தச் சட்டம் அமலுக்கு வந்ததாகக் கருதப்படும். இந்த மசோதா அவையிலே விவாதத்திற்காக 1970-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ந் தேதி எடுத்துக் கொள்ளப்பட்டது. சுதந்திரா கட்சியில் அப்போதிருந்த ஹண்டே அவர்களும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திண்டிவனம் ராமமூர்த்தி அவர்களும், குடியரசுத் தலைவரின் அனுமதி பெறாமல் மசோதாவைக் கொண்டு வருவது அரசியல் சட்டத்திற்கு முரணானது என்ற பிரச்சினையைக் கிளப்பினார்கள்.

அதற்குப் பதிலளித்த நிதியமைச்சர் மதியழகன், குடியரசுத் தலைவரின் அனுமதிக்காக முன்பே அனுப்பப்பட்டிருக்கிறது என்றும், முன்கூட்டியே அனுமதி என்பது தேவையில்லை என்றும், இந்தப் பொருள் மாநில அரசுக்குரியதாக வரும் பட்டியலில் இடம் பெற்றதால் இதைத் தன்னிச்சையாகச் செய்யலாம் என்றும், மேலும் குடியரசுத் தலைவரின் அனுமதி பெற வேண்டுமென்றுதான் இருக்கிறதே தவிர முன்கூட்டியே பெற வேண்டும் என்பதல்ல என்றும், மேலும் மத்திய அரசாங்கத்திடமிருந்து இந்த நிலச் சீர்திருத்த மசோதாவைப் பிரேரேபிக்க அனுமதி தருகிறோம் என்று தந்தி வந்திருப்பதாகவும், எனவே அரசியல் சட்டத்திற்கு முரணானது எதுவுமில்லை என்றும் கூறினார்.

அதுபற்றி பேரவைத் தலைவர் தன் முடிவைத் தெரிவிக்கும்போது, இந்த மசோதாவைப் பிரேரேபிக்கலாம் என்று தந்தி வந்திருக்கிறது. ஆளுநரின் அனுமதி பெற்றது பற்றித்தான் அறிவிக்கப்படுவதுண்டே தவிர குடியரசுத் தலைவரின் அனுமதி பெற்றது பற்றி அவைக்கு அறிவிப்பதில்லை என்றும், இந்த மசோதாவிற்கு ஆளுநர் அனுமதி தந்திருக்கிறார் என்றும், சில சட்டங்களை விரைவாகக் கொண்டு வந்து நிறைவேற்றியவுடன் குடியரசுத் தலைவருக்குத் தெரிவித்து அனுமதி பெற விதிமுறை வகுக்கப்பட்டிருக்கிறது என்றும், ஆகவே இந்தச் சட்டம் கொண்டு வருவதில் எந்தவித முறைகேடும் நடைபெற்றுவிடவில்லை என்றும் கூறிய பிறகு மசோதா விவாதத்திற்கு வந்தது.

விவாதம் முடிவுற்றதும் சுதந்திரா உறுப்பினர் ஹண்டே அவர்கள் எழுந்து இந்த மசோதாவை பொதுமக்களின் கருத்தை அறிய சுற்றுக்கு விடவேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு நான் "இச்சட்டத்தைத் திரும்பப் பெறவேண்டுமென்ற எண்ணத்தில் இந்த அரசு கொண்டுவரவில்லை. அதோடு பொதுமக்களின் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் கட்சித் தலைவர்களின் கருத்துக்களையும் பத்திரிகைகளின் கருத்துக்களையும் அறிந்து அதற்கேற்றபடி திருத்தங்கள் செய்துதான் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது" என விளக்கமளித்தேன்.

அதற்குப் பின்னர் சுதந்திரா கட்சியின் தலைவராக இருந்த சீமைச்சாமி அவர்கள் எழுந்து "முதல்வர் அளித்த சமாதானம் எங்களுக்குத் திருப்தி அளிக்கிறது என்று சொல்லத்தக்க அளவிற்கு முதல்வருக்கே உரிய சாமர்த்திய வாதத்தினால் விளக்கம் அளித்தார்கள். இருந்தாலும் ஏற்றுக்கொள்ள மனவேதனை கொண்டு சபையிலிருந்து வெளிநடப்பு செய்கிறோம்" என்று கூறி வெளிநடப்பு செய்தார்கள்.

நண்பர் ஹண்டே உள்ளிட்ட சுதந்திரா கட்சி உறுப்பினர்கள் அவரைப் பின்பற்றி வெளியேறினார்கள். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அகில இந்திய அளவில் 1970-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி நிலமீட்பு இயக்கம் நடத்தப் போவதாக அறிவித்ததை யொட்டி தமிழகத்திலும் நடத்தப் போவதாக அந்தக் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

அதில் பெரும்பான்மையாகக் கைது செய்யப்பட்டது தஞ்சை மாவட்டத்தில்தான். அதுபற்றி திருச்சியில் நிருபர்கள் என்னைச் சந்தித்துக் கேட்ட போது "நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் தரவேண்டும் என்ற கொள்கை கம்யூனிஸ்டுகளுக்கு மாத்திரமல்ல; எல்லா முற்போக்குக் கட்சிகளுக்கும் தி. மு. கழகத்திற்கும் உடன்பாடான கொள்கை. அதை நிறைவேற்றுவதற்கு சட்டப்படி தி. மு. க. ஆட்சி செயல்படுகிறது. எனினும் எந்தவிதமான கட்சிக் காழ்ப்பும் காட்டாமல் சட்டம் அமைதி காத்திட நடவடிக்கை எடுக்கும்.

இதில் கம்யூனிஸ்ட் கட்சி நண்பர்கள் கைது செய்யப்பட வேண்டிய தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டதற்காக மிகவும் வருந்துகிறேன். அவர்களுடைய உணர்ச்சியை வெளிப்படுத்த அவர்களுக்கு உரிமை உண்டு. அதே உணர்ச்சியை அமைதியான முறையில் சட்டப் பூர்வமாகச் செயல்- படுத்தத் தயாராக இருக்கிற இந்த அரசின் வேண்டுகோளை அவர்கள் ஏற்றிருந்தால் எவ்வளவோ நலமாக இருந்திருக்கும். கைது செய்யப்பட்ட கம்யூனிஸ்டுகளில் பஞ்சாயத்து ஒன்றிய தேர்தலில் வேட்பாளர்களாகவோ வேட்பாளருக்கு ஓட்டளிக்க உரிமை உள்ளவர்களோ இருப்பார்களானால் அந்த உரிமையைச் செயல்படுத்த, அதாவது ஓட்டளிப்பதற்குச் செல்ல வேண்டுமென்று அவர்கள் கேட்பார்களானால் அவர்களை ஜாமீனில் விடுவது பற்றி யோசிக்கப்படும்" என்று கூறினேன்.

நில மீட்பு இயக்கத்தில் ஈடுபட்டு சிறையில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சியினரின் சார்பில் சட்டப் பேரவை உறுப்பினர் ஏ. கே. சுப்பையா அவர்கள் சட்டத்துறை அமைச்சராக இருந்த மாதவன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், "எனது கட்சியும். மாநில விவசாயத் தொழிலாளர் சங்கமும் ஆகஸ்ட் 15, 16, 17 ஆகிய தேதிகளில் நடத்திய நில மீட்பு இயக்கப் போராட்டம் முடிந்துவிட்டதால், மேற்கொண்டு இந்த இயக்கம் நடத்தப்படமாட்டாது" என்று எழுதியிருந்தார்.

அவருடைய கடிதத்தின் அடிப்படையில் நில மீட்பு இயக்கத்தின் காரணமாகக் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்கள் மீதுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற்று விடுதலை செய்ய அரசு முடிவு செய்துள்ளது என்று சட்டப் பேரவையில் அறிவித்துவிட்டு. அவர்களை எல்லாம் விடுதலை செய்ய உத்தரவிட்டேன். 1970-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 21, 22 ஆகிய நாட்களில் சென்னையில் கூடிய கழகத்தின் தலைமைச் செயற்குழு "கட்சி அமைப்புக்களை மேலும் வலுப்படுத்தவும், கழகப் பிரச்சாரத்தை விரிவுபடுத்தவும் அமைச்சரவையில் உள்ள கழக முன்னணியினரை ஈடுபடுத்துவதற்கு ஏற்ற வகையில் அமைச்சரவையைத் திருத்தி அமைக்க வேண்டுமென்று இந்தச் செயற்குழு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறது" என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது.

இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தவர் பேராசிரியர் அன்பழகன் அவர்கள்! வழி மொழிந்து பேசியவர் நண்பர் மதுரை முத்து அவர்கள். செயற்குழுவில் இத்தகைய தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முக்கியமான காரணம் அமைச்சர்களிடையே ஒழுங்கு, கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான். முதலமைச்சர் பதவியிலே இருப்பவர்களுக்குத் தன்னுடைய அமைச்சரவையிலே இருப்பவர்களைக் கட்டுப்படுத்தக்கூடிய சக்தி இருக்கவேண்டும். அமைச்சர் எப்படிப்பட்ட தவறுகளைச் செய்தாலும் - ஒழுங்கு, கட்டுப்பாடுகளை மீறி நடந்தாலும்-கட்சிக்கும், அமைச்சரவைக்கும் கெட்ட பெயர் வரக்கூடிய அளவிற்கு நடந்து கொண்டாலும்-எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது வீண்பழி சுமத்தி பேரவையிலேயே சவால் விட்டு, அதனை நிரூபிக்க முடியாமல் நாட்டு மக்கள் அத்தனை பேரும் அந்த அமைச்சர் செய்த மோசடியைக் கண்டுபிடித்தாலும்-அமைச்சர்கள் ஒருவருக்கொருவர் குழு மனப்பான்மையோடு நடந்துகொண்டு ஆளுக்கு ஒரு கொள்கையைப் பேசினாலும் அதனைத் தட்டிக்கேட்க முடியாதவர் முதலமைச்சராக இருக்கமுடியாது.

அதனைத் தட்டிக் கேட்கவேண்டுமென்றால் அப்படிக் கேட்பவர் ஒழுங்காக இருக்கவேண்டும். அமைச்சர்மீது குற்றச்சாட்டு பற்றிக் கேட்டால் அவர் தன் மீதுள்ள தவறுகளை எங்கே திருப்பிக் கேட்பாரோ என்ற அளவிற்கு நடந்துகொள்ளும் முதலமைச்சர்களால் தவறு செய்யும் அமைச்சர்களைத் தட்டிக் கேட்கவும் முடியாது; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடியாது. மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் - மேயராக இருந்தவர்கள்-பலர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது.

அவர்களில் பலர் கழகத்தைச் சேர்ந்தவர்கள்; மற்றவர்கள் வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மீது குற்றச்சாட்டு கூறிய போது-பேரவையிலே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த அரசு தயாரா என்று எதிர்க் கட்சிகள் கேட்டபோது, உடனடியாக அவையிலே, மாநகராட்சியிலே ஆண்டு கொண்டிருப்பது கழகம் என்றாலும், அவையிலேயே மாநகராட்சியைக் கலைத்துவிட உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறியதோடு, கழக உறுப்பினர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தேன்.

அவ்வாறே நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்பட்டது. மாநகராட்சி கலைக்கப்பட்டது. கழக அமைச்சரவையில் இருந்த சில அமைச்சர்கள் மீது அப்போது பரவலாகச் சில குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருந்தன. அதனையெல்லாம் மனதில் கொண்டு கழக அமைச்சரவையில் மாறுதல் செய்ய விரும்பினேன். அந்த

எண்ணத்தின் விளைவாக செப்டம்பர் 9-ஆம் நாள் அமைச்சர்கள் மதியழகன், முத்துசாமி, வேழவேந்தன் ஆகியோரின் பதவி விலகல் கடிதங்கள் ஆளுநரால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. "உங்களது எதிர்காலத் திட்டம் என்ன?" என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு - "கட்சிப் பணிதான்; எங்களது செயற்- குழு முடிவின்படி கட்சிப் பணியாற்றுவதற்காக அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகல் தந்தோம். அதன்படி என்னைக் கட்சிப்பணியாற்றும்படி தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

இதை நான் எனக்குக் கிடைத்த பெருமையாகக் கருதுகிறேன். இன்னும் விரிவாகக் கட்சிப் பணியாற்றிட எனக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. கழகத்திற்காக முழு நேரப் பணியாற்றும் வாய்ப்பும் பிரச்சாரப் பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது" என்றும்-"உங்கள் பதவி விலகலால் கட்சியில் பிளவு ஏற்படுமா?"

என்ற கேள்விக்கு "எங்கள் கழகம் உறுதிமிக்கது; பிளவு ஏற்படாது. மேலும் வலிமை பெறும் வகையில் செயலாற்றுவோம். பிளவு என்பது எதிர்க்கட்சிகளின் விருப்பமாக இருக்கலாம்" என்றார் நண்பர் மதியழகன். அது மாத்திரமல்ல; அமைச்சர் பதவியை இழந்துவிட்ட இரண்டொரு நாட்களில் சென்னையிலே நடைபெற்ற மாநில சுயாட்சி மாநாட்டிலே கலந்து கொண்டு மதியழகன் அவர்கள் உரையாற்றினார்.