உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/மருத்துவமனையிலும் மறவாத மக்கள் பணி
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

மருத்துவமனையிலும் மறவாத மக்கள் பணி · 172 / 391

மருத்துவமனையிலும் மறவாத மக்கள் பணி "தி ரு. சி. சுப்பிரமணியம் அவர்கள் மத்திய அமைச்சராவதற்குக் குறுக்கே நந்தியாகவும் இருக்க மாட்டேன்-அதே சமயம் அவரைக் கோட்டைக்குக் கொண்டு செல்லும் குதிரையாகவும் இருக்கமாட்டேன்" என்று 1970-ஆம் ஆண்டு மாநிலங்களவைத் தேர்தலின்போது நான் கூறியிருந்தாலும் கூட, 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பிறகு தி.மு.கழகத்திற்கும், இந்திரா காங்கிரசுக்கும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்குமிடையே அமைந்த தேர்தல் உடன்பாட்டின் காரணமாக அவர் மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்கின்ற வாய்ப்பு உருவாயிற்று!

ஆம்; கோட்டைக்கு அவரைத் தூக்கிச் சுமந்திட வேண்டிய குதிரையாக இருந்திட வேண்டியதாயிற்று. 1971-ஆம் ஆண்டு கோவையில் தி.மு.கழகத்தின் பொதுக்குழு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் டெல்லியில் இருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டார். "சி. சுப்பிரமணியம் அவர்களுக்காக கரூர் பாராளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற கே. கோபால் அவர்களும், கிருஷ்ணகிரி பாராளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற தீர்த்த கிரி கவுண்டரும் ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறார்கள்.

இரண்டு தொகுதிகளில் எந்தத் தொகுதியில் சுப்பிரமணியம் அவர்களைப் போட்டியிடச் செய்யலாம்?" என்று பிரதமர் இந்திரா அவர்கள் என்னிடமே கருத்துக் கேட்டார். நான் தெரிவிக்கும் கருத்துக்கு ஏற்ப சி. எஸ். அவர்களுக்கு இடைத் தேர்தலுக்கான தொகுதியை அறிவிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டார். பிறகு என் விருப்பப்படியே கிருஷ்ணகிரி பாராளுமன்றத் தொகுதியில் திரு. சி. எஸ். அவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட்டார். அவரை எதிர்த்துக் காமராஜர் தலைமையிலே இருந்த பழைய காங்கிரஸ் கட்சி போட்டியிடுமென எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் போட்டியிடவில்லை. தேர்தல் பிரச்சாரத்திற்காக நான் இரண்டொரு நாட்கள் சென்றிருந்தேன். அந்தப் பிரச்- சாரக் கூட்டத்தில் பேசிய திரு. சி. சுப்பிரமணியம் அவர்கள்; "எப்போது இந்தத் தொகுதியில் என்னை நிற்கும்படிக் கலைஞர் முன் மொழிந்தாரோ அப்போதே எனது வெற்றி உறுதியாகிவிட்டது" என்று உணர்ச்சி பொங்கிடக் குறிப்பிட்டார்.

பிரச்சாரக் கூட்டங்கள் முடிந்து ஓய்வுக்காக நான் மைசூர் சென்றிருந்தேன். தேர்தலில் வாக்கு எண்ணிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே சி. எஸ். அவர்கள் எனக்கு மைசூருக்குத் தொலைபேசி மூலம் வெற்றி வாய்ப்புகளை எடுத்துச் சொன்னார். சில மணி நேரத்திற்குப் பிறகு வெற்றிச் செய்தியினையும் மகிழ்ச்சியுடன் கூறி, "வெற்றி விழாக் கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் சவான் வருகிறார்; நீங்களும் வரவேண்டும்" என்று வலியுறுத்தினார்.

திரு. சவான் ஒப்புக்கொண்ட தேதியில் எனக்கு வசதிப்படாது என்று நான் கூறியபோது, எனக்கு வசதியான தேதியில் சவான் அவர்களும் கலந்து கொள்வார் என்று கூறி அதற்கேற்ப என்னுடைய ஒப்புதலையும் பெற்றார். வெற்றி விழா பாராட்டுக் கூட்டத்தில் என்னையும் தி. மு. கழகத்தையும், சவான் அவர்களும், சி. எஸ். அவர்களும் வெகுவாகப் புகழ்ந்தனர். தேர்தல் பணிகளைச் சிறப்புடன் ஆற்றிடத் துணைபுரிந்த நண்பர் க. ராசாராம் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

பிறகு சி. எஸ். மத்திய அமைச்சராகவும் ஆனார்! டெல்லிக்குச் சென்ற பிறகு தி. மு. கழக ஆட்சிக்கு விரோதமாக மாறியவர்களில் திரு. சி. எஸ். அவர்களும் முக்கியமானவர். 1972-ஆம் ஆண்டு கழகத்தைப் பிளக்க எப்படியெல்லாம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்ற கதையை விரிவாக எழுத இருக்கிறேன். ஆனால் வறட்சி நிவாரணப்பணி குறித்து மத்திய அமைச்சர் சி. எஸ். அவர்கள் சென்னையில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசியபோது; "இதுவரை கொடுத்த பணத்துக்குக் கணக்கு காட்டி விட்டுத்தான் டெல்லியிடம் மாநில அரசு மீண்டும் நிதி கேட்க வேண்டும்" என்று குறிப்பிட்டதையும் அது குறித்து சட்டப்பேரவையில் விவாதம் வந்தபோது "மத்திய அமைச்சர், தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளைக் கூட்டி வறட்சிப் பணிகள் குறித்து விரிவாகப் பேசலாம்-விவாதிக்கலாம்-செலவழிக்கப்பட்ட தொகை, வகை பற்றி எங்களிடம் விபரம் அறியலாம்.

அதை விடுத்து தெருவிலே நின்று கொண்டு பொதுக்கூட்டத்தில் கணக்கு கேட்பது முறையல்ல! நாகரீகமல்ல! அப்படிப்பட்ட பணம் எங்களுக்குத் தேவையில்லை!" என்று நான் அறிவித்ததையும் இப்போது குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும். "குதிரை, கீழே தள்ளியதும் அல்லாமல் குழியும் பறித்தது"-என்பார்கள்! ஆனால் இந்தப் பழமொழி தலை கீழாக மாறிவிட்டது ஏறிச் சென்ற குதிரையை எட்டி உதைத்ததுமல்லாமல் வெட்டியும் வீழ்த்த முற்பட்டனர்! மனச்சாட்சியின் சவுக்கடிகள் விழுந்தன!

வலியின் வேதனை பொறுக்க முடியவில்லை! என்ன செய்வது; தாங்கிக் கொள்ளத்தானே வேண்டும்! நெஞ்சுக்கு நீதி வழங்கப்படும் போது வேதனையும் ஏற்படுகிறது. ஒருவிதமான இதமான ஆறுதலும் கூடவே இணைகிறது அல்லவா? கோயில் நந்தி கோட்டைக்-குதிரை-இரண்டையும் பற்றிக் கூறிய காரணத்தால் சிறிது முன்னேறிப் போய் 1971-ஆம் ஆண்டினைத் தொட்டுக்காட்ட வேண்டியதாயிற்று! திரும்பவும் 1970-ஆம் ஆண்டிலிருந்து தொடருவோம். அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்கள் எல்லோரும் அரசு கொள்கைகளைப் பொறுத்தவரையில் ஒன்றுபட்ட கருத்து உடையவர்களாக இருக்க வேண்டும்.

இப்போதுள்ள நிலைமைகளைப் பார்க்கும்போது கழக ஆட்சியில் அமைச்சரவை எப்படி செயல்பட்டது என்பது குறித்து 1970-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வந்த "கேரவான்" (Caravan) ஏட்டில் வந்த ஒரு கட்டுரை கூறும் விவரம் வருமாறு: "46 ஆண்டு நிரம்பிய கருணாநிதி திறமைமிக்க நுட்பவாதி என்பதை நிரூபித்துவிட்டார். கட்சிக்குள் கசப்புணர்ச்சி ஏற்படுவதை அவர் தவிர்த்துவிட்டார். அனைவருடனும் நியாயமானதோர் சமரசத்துக்கு அவர் வழிவகுத்தார்.

அண்ணாவின் புகழும் பெருமையும் மங்காதிருக்குமாறு அவர் காத்து வருகிறார். தனது சொற்பொழிவு ஒவ்வொன்றையும் அண்ணாவை நினைவூட்டியே அவர் துவக்குகிறார். அண்ணா நமது எல்லா செயல்களையும் கண்காணித்து வருகிறார் என்ற உணர்வையே அவர் ஏற்படுத்தி வருகிறார். கருணாநிதி அமைச்சரவைக் கூட்டங்களை ஒழுங்காக அடிக்கடி கூட்டுகிறார். முடிவுகளுக்கு அமைச்சரவையின் முழு ஒப்புதலைப் பெறுகிறார். இதனால் ஒரு உள் அமைச்சரவை முடிவுகளை எடுக்கிறது என்ற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்கிறார்.

தமிழ்நாட்டு அமைச்சர்களின் சிறப்பியல்பு என்னவெனில் அவர்கள் ஒரு குரலில் பேசுகிறார்கள் என்பதுதான். ஒரு அமைச்சர் மற்றவரின் கருத்துக்களுக்கு மாறாகப் பேசினார் என்பதோ-மாறுபட்ட நிலையை மேற்கொண்டார் என்பதோ இங்கு கிடையாது." 1953-ஆம் ஆண்டில் திருப்பத்தூருக்கு அருகில் ஏற்பட்ட கார் விபத்தின் காரணமாக என்னுடைய இடது கண்ணில் பலத்த அடிபட்டு அதனையொட்டி இடது கண்ணில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தேன்.

பின்னர் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தபோது 1967-ஆம் ஆண்டு தஞ்சைக்குச் செல்லும் வழியில் மறுபடியும் கார் விபத்திற்கு ஆளாகி அறுவை சிகிச்சை செய்துகொண்ட அதே இடது கண்ணில் மீண்டும் காயம் ஏற்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து அந்தக் கண்ணில் அடிக்கடி தொல்லை இருந்து கொண்டே வந்தது. அந்தக் கண்ணில் 1970-ஆம் ஆண்டு மறுபடியும் வலியும் வீக்கமும் ஏற்பட்டது. அதனுடன் பெருந்துறை தொகுதி இடைத்தேர்தல், மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுவிட்டு, ஏப்ரல் மாதம் 23-ந் தேதி அன்று சட்டமன்ற மேலவைத் தேர்தல் நடந்தபோது, அதன் தலைவராக சிந்தனைச் சிற்பி சி.

பி. சிற்றரசு அவர்களை அமரச் செய்து, அவரைப் பாராட்டி உரையாற்றிய பிறகு இடது கண்ணில் தொந்தரவு அதிகமாகவே, சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். கண் மருத்துவர் டாக்டர் ஆப்ரகாம் அவர்கள் எனக்கு சிகிச்சை அளித்தார். ஏப்ரல் 28-ந்தேதி மாலை 6 மணி அளவில் கண்ணில் சிறியதொரு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதற்குப் பிறகு மே மாதம் 2-ந் தேதி அன்று குடியரசுத் தலைவர் கிரி அவர்கள் கண் மருத்துவமனைக்கு வந்திருந்து விரைவில் நான் நலம் பெற வேண்டுமென்ற விழைவினைத் தெரிவித்தார்.

கண் மருத்துவமனையில் நான் இவ்வாறு அவதிக்கு உட்பட்ட நிலையில் இருந்தபோது நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் பணிபுரிந்த 16,000 தொழிலாளர்கள் மே 3-ந் தேதி முதல் திடீர் வேலை நிறுத்தம் செய்யத் தொடங்கினர். தொழிலாளர்களுக்கும், காவலர்களுக்கு மிடையே மோதல் ஏற்பட்டு துப்பாக்கிப் பிரயோகம் வரை நடந்தது. மருத்துவமனையில் இருந்தவாறே உடனடியாக நெய்வேலிக்கு போலீஸ் ஐ. ஜி.யாக இருந்த ஆர். எம். மகாதேவன் அவர்களையும், தமிழக அரசின் தொழிலாளர் கமிஷனராக இருந்த எம்.

எம். ராசேந்திரன், ஐ. ஏ.எஸ். அவர்களையும் அனுப்பிவைத்தேன். நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் தேவன் என்பவர் இறந்துவிட்டார். கண் மருத்துவமனையில் இருந்தவாறே கண்களில் கட்டு போடப்பட்ட நிலையில் தென்னாற்காடு மாவட்ட ஆட்சித் தலைவருடன் பல முறை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நெய்வேலி நிலவரங்களை உடனுக்குடன் அறிந்து தேவையான நடவடிக்கைகளை எப்படியெப்படி எடுக்க வேண்டுமென்று யோசனை கூறினேன். தொழிலாளர்களுக்கும் ஏற்கனவே ஏற்பட்ட ஒப்பந்தத்தையொட்டி வேறு ஏதாவது புதிய பிரச்சினைகள் இருக்குமானால் அவைகளைப் பற்றி நேரடியாகப் பேசி ஒரு சுமூகமான முடிவுக்கு வர நான் தயாராக இருப்பதாகவும், தொழிற்சங்கத் தலைவர்களும் இதுபற்றி ஒரு முடிவுக்கு வந்து நெய்வேலியில் அமைதியான சூழ்நிலை உருவாக உதவிட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டேன்.

மறுநாள் 4-5-70 அன்று கண் மருத்துவமனையிலேயே அமைச்சர்கள் நாவலர், என்.வி.என்., ப.உ. சண்முகம், மாதவன், ஓ.பி. ராமன் ஆகியோருடன் நெய்வேலி சம்பந்தமாக ஆலோசனை நடத்தினேன். போலீஸ் அதிகாரிகள் மகாதேவன் அவர்களும், டயஸ் அவர்களும் சந்தித்து நிலைமைகளை நேரில் விளக்கினர். தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தைத் திரும்பப் பெறுவதாக அறிவிப்பார்களேயானால் மருத்துவமனையில் இருக்கும் எனக்கு அதைவிட மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி வேறு எதுவும் இல்லை என்றும் தெரிவித்தேன்.

என்னுடைய வேண்டுகோளின் விளைவாகவும், தொழிற்சங்கத் தலைவர்கள் காட்டூர் கோபால், அனந்தன் நம்பியார், கோவிந்தராசன், விருத்தாசலம் செல்வராஜ் ஆகியோர் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாகவும், தொழிலாளர்கள் மே மாதம் 6-ந் தேதி முதல் வேலைக்குத் திரும்பினர். நெய்வேலி தொழிலாளர் பிரச்சினை ஒருபுறம் இருக்க மின்சார வாரிய ஊழியர்கள் கிளர்ச்சி போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட முனைந்தனர். அதுபற்றியும் மருத்துவமனையிலிருந்தவாறே ஒரு வேண்டுகோள் அறிக்கை விடுத்தேன்.

கண் சிகிச்சை செய்து கொண்டது பற்றி பிரதமர் அவர்கள் எழுதிய கடிதத்தில், "அன்புள்ள திரு கருணாநிதி அவர்களுக்கு, தாங்கள் கண்ணில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது என்பது பற்றிய செய்தியைக் கேள்விப்பட்டு நான் கவலை கொண்டேன். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தேறியது என்பதறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். தாங்கள் விரைவிலேயே பூரண நலம் பெறுவீர்கள் என்றும், வழக்கமான பணிகளை தாங்கள் விரைவில் ஆற்றுவீர்கள் என்றும் நான் நம்புகிறேன்" என்று எழுதியிருந்தார்கள்.

கண்ணில் தொந்தரவு நீங்கி மே மாதம் 8-ந்தேதியன்று காலையில் வீடு திரும்பினேன். மருத்துவமனையில் இருந்த போது மின்சார வாரிய ஊழியர்களுக்கு உறுதி தந்ததற்கிணங்க மின்வாரிய ஊழியர்களுக்கும், அலுவலக ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வுகளை அரசின் சார்பில் அறிவித்தேன். இதற்கிடையே தென் ரயில்வே டிரைவர்கள், பயர்மென்கள் சங்கத்தின் சார்பில் சென்னையில் வேலை நிறுத்தம் செய்ய உத்தேசித்திருந்த தகவலை அறிந்த மத்திய ரெயில்வே அமைச்சர் நந்தா அவர்கள் தொலைபேசி மூலம் என்னிடம் தொடர்பு கொண்டு, ரெயில்வே தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் தலையிட்டு சமரசம் ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

அதற்கிணங்க வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். இருமுறை பேச்சு வார்த்தை நடத்தியதற்குப் பிறகு வேலைக்குத் திரும்புவது என்று அவர்கள் முடிவெடுத்ததோடு, என்னை நேரிலும் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர். முதல் வெளிநாட்டுப் பயணம் ஒரு தவறு இன்னொரு தவறுக்குச் சமாதானமாகி விடாது என்று ஆன்றோர் கூறுவர்! 1971-ஆம் ஆண்டு வரையில் சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித்தலைவராக இருந்த கருத்திருமன் அவர்கள் விவாதங்களில் பேசும் போது மிகுந்த கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவார் என்றாலும் பழகுவதற்கு இனியவராய்த் திகழ்ந்தார்.

நல்ல காங்கிரஸ்காரர். அண்ணா அவர்களிடத்தில் நிறைந்த அன்பு கொண்டவர். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற தவறுகளை ஆளுங் கட்சி சார்பில் யாராவது எடுத்துச் சொன்னால், உடனே ஆவேசமாக எழுந்து "அட, ஏனய்யா நாங்க செய்த தவறையே சொல்லிகிட்டு இருக்கீங்க? அதுக்குத் தான் நாங்க எதிர்வரிசையிலே உட்கார்ந்திருக்கோமே! எங்க தவறைச் சொன்னா உங்க தவறு மறைஞ்சிடுமா?"

என்று அழுத்தம் திருத்தமாகக் கேட்பார். ஒரு நாள் அவர் சம்பந்தப்பட்ட பிரச்சினையை அவையில் எழுப்பினார். கோவையில் ஒரு போலீஸ் அதிகாரி அவரிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டதாகக் குறைப்பட்டுக் கொண்ட அவர்; அந்த அதிகாரி அவரைப் பார்த்து, "நீங்கள் தான் எதிர்க்கட்சித் தலைவர் என்று எனக்கு எப்படித் தெரியும்?"

என்று கேட்டதாகக் குறிப்பிட்டுவிட்டு, "அப்படியானால் முதலமைச்சர் யார் என்றுகூட எனக்கும் கேட்கத் தெரியும்!" என்று ஆத்திரத்துடன் கூறினார். உடனே அமைச்சர் ப. உ. சண்முகம் அவர்கள் எழுந்து, "உங்கள் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அண்ணாவையும், கலைஞரையும், நாவலரையும் நிறுத்தி வைத்து நீங்கள் யார் என்று ஒரு போலீஸ் அதிகாரி கேட்டதை நினைவூட்டுகிறேன்" என்றார்!

உடனே கருத்திருமன் அவர்கள் சினங் கொண்டு, "அப்படியானால் அதே பண்பாட்டில் நீங்களும் இறங்கியிருக்கிறீர்களா?" எனக் கேட்டார். அப்போது நான் குறுக்கிட்டேன். "மாண்புமிகு எதிர்க்கட்சித்தலைவர் கூறிய புகார் குறித்து நான் முன்பே கேள்விப்பட்டு அந்தப் போலீஸ் அதிகாரியிடம் விளக்கம் கேட்கச் சொன்னேன். அவர் அப்படி நடக்கவில்லை என்று கூறியிருக்கிறார். இருந்தபோதிலும் அப்படியொரு சம்பவம் நடந்திருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனிமேல் இது போல நடைபெறாமல் நடவடிக்கை எடுக்கப்படும். எங்களை ஒரு காலத்தில் அப்படி நடத்தினார்கள் என்பதற்காக எங்கள் காலத்திலும் உங்களுக்கு அப்படி நடக்கிறது என்பது போல பதில் சொல்வது நல்ல மரபுமல்ல-முறையுமல்ல!" என்று நான் பதில் அளித்ததும், முகம் மலர்ந்திட கருத்திருமன் அவர்கள் எழுந்து "முதலமைச்சர் விளக்கத்திற்கு நன்றி! இது தான் தமிழர் பண்பாடு!"

என்று கூறினார். இன்று அந்தப் பண்பாடெல்லாம் எங்கேயிருக்கிறது என்று தேட வேண்டியிருக்கிறது! 1970 ஜூன் திங்கள் என்னுடைய பிறந்த நாள் விழா சென்னைக் கடற்கரையில் கொண்டாடப்பட்ட போது ஒரு லட்சத்து இருபத்தி ஐயாயிர ரூபாய் என்னிடம் நிதியாக வழங்

கப்பட்டது. அதில் ஒரு லட்சம் ரூபாய் அண்ணா அறக்கட்டளை நிதியென்றும் மீதி இருபத்தி ஐயாயிரம் ரூபாய் என் விருப்பம்போல் செலவழித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்கள். அவர்கள் கூறியதைப் போலவே ஒரு லட்சம் ரூபாயை அண்ணா அறக்கட்டளை நிதியில் சேர்த்துவிட்டு, என் விருப்பம் போல் செலவிட்டுக் கொள்ளலாம் என்று தந்த 25 ஆயிரம் ரூபாயைப் பற்றிக் குறிப்பிடும் போது "என் இஷ்டப்படி செலவு செய்ய 25 ஆயிரம் ரூபாயைத் தந்துள்ளனர்.

நான் கடமைப்பட்டுள்ள குடும்பத்திற்கு-என்னை, கழகத்தை, லட்சோப லட்சம் தம்பிமார்களை உருவாக்கிய அண்ணாவின் குடும்பத்திற்கு-அண்ணியார் அவர்களுக்கு இந்த இருபத்தி ஐயாயிரம் ரூபாயை ஒப்படைக்கிறேன்" என்று அறிவித்தேன். அண்ணா கவிதாஞ்சலி எனும் பெயரில் நான் அண்ணா அவர்களைப் பற்றி வானொலியில் பாடிய கவிதை வரிகள் கிராமபோன் ரிக்கார்டுகளாக ஏ.வி.எம். நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டிருந்தன. அவைகள் விற்பனையான 'ராயல்டி தொகை பத்தாயிர ரூபாயை ஏ.வி.

மெய்யப்ப செட்டியார் அவர்கள் எனக்கு அனுப்புவதாகத் தெரிவித்திருந்தார். ஆனால் நான் அந்த ராயல்டி தொகையும் அண்ணியார் அவர்களுக்கே சேரட்டுமென்று கூறி அதனையும் அந்த விழாவிலேயே அறிவித்து அவ்வாறே அவர்களுக்கு வழங்குமாறு அறிவித்துவிட்டேன். அண்ணா அவர்களின் குடும்பத்தாருக்காக அப்போது வழங்கப் பட்ட முப்பத்தி ஐயாயிர ரூபாய் மட்டுமின்றி 1973-74-ஆம் ஆண்டில் தலைமைக் கழகச் சார்பில் பத்தாயிர ரூபாய் நிதியும், அம்பாசிடர் கார் ஒன்றும் வழங்கப்பட்டது.

எங்களையெல்லாம் ஆளாக்கி மகிழ்ந்த அந்தக் குடும்பம் மகிழ்வுடன் வாழ வேண்டுமென்பதற்காக மாநில முழுவதும் கழகத்தின் சார்பில் நிதி வசூலித்து 1975 நவம்பர் ஆறாம் நாள் சென்னையில் ஒரு நிதியளிப்பு விழா நடத்தி அருமை அண்ணியார் அவர்களின் கையில் மூன்று லட்சத்து இருபத்தி ஐயாயிரம் ரூபாயை வழங்கினோம். கழக வரலாற்றுக் குறிப்பிலும், எனது தனிப்பட்ட வாழ்க்கைக் குறிப்பிலும் கடமைப்பட்ட ஒரு நற்காரியத்தை எங்களால் இயன்ற அளவு செய்து முடித்தோம் என்ற நிகழ்ச்சி இடம் பெறுவது எங்களுக்குக் கிடைத்த அரும்பேறு என்பதால் இதனை இங்கே குறிப்பிட வேண்டியதாயிற்று.

1970 ஜூலைத் திங்கள் வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகளில் ஈடுபடலானேன். இங்கிலாந்து, பிரான்சு, மேற்கு ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்து வந்த அழைப்புகளை ஏற்று அந்தப் பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. எனக்கென்னவோ வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டுமென்பதில் ஒரு தீவிரமான ஆசை என்றைக்கும் இருந்ததில்லை. வெளிநாட்டுப் பயணங்கள் அனுபவ அறிவுக்குப் பெரிதும் பயன்படுகின்றன என்பது உண்மையென்றாலுங்கூட என்னை பொறுத்தவரையில் அந்தப் பயணங்களில் ஒரு வெறித்தனமான ஆர்வம் என்றைக்கும் இருந்ததில்லை.

1953-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு கார் விபத்தினால் என் கண்களில் ஒன்றில் வலி ஏற்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டேன். 1967-ஆம் ஆண்டு மீண்டும் நடைபெற்ற பயங்கரமான கார் விபத்தில் அதே கண்ணில் அடிபட்டு வலித் தொல்லை அதிகமாயிற்று. அந்த வேதனையையும் பொறுத்துக் கொண்டு மூன்று நான்கு ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றினேன் என்றாலும் வெளிநாட்டுப் பயணத்தின்போது இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற கண் மருத்துவர்களிடம் காட்டி சிகிச்சை பெறலாம் என்ற எண்ணமும் இருந்ததால் ஜூலை முதல் நாள் பயணம் புறப்படத் தயாரானேன்.

அந்தப் பயணம் பற்றி "இனியவை இருபது" என்ற தலைப்பில் நான் தொடர்ந்து எழுதிய கட்டுரைகள் நூல் வடிவில் வந்திருப்பதாலும் அந்த நூல் ஏராளமாக விற்றிருப்பதாலும்-இப்போது விரிவாக எழுத வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறேன். ஆனால் அந்தப் பயணத்திற்கு என்னை வழியனுப்பி வைத்தபோது தமிழகத்தின் அறிவு மேதைகள் சிலர் வழங்கிய கருத்துக்கள் ஒரு எளியவனின் வரலாற்று ஏட்டில் இடம் பெறாமல் போய்விடக் கூடாதே என்பதற்காக அவற்றில் சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறேன்.

சீரணியினர் சார்பில் நேரு கலையரங்கில் நடைபெற்ற வழியனுப்பு விழாவில் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்கள் என்னைக் கட்டித் தழுவி அன்பு வாழ்த்துக்களை வழங்கினார்கள். அந்த விழாவில் அரசின் சார்பில் "தமிழரசு" என்ற இதழ் வெளியீட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது. அந்த வழியனுப்பு விழாவில் பேசும் போது டாக்டர் ஏ. லட்சுமணசாமி முதலியார், "நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வெளி நாடு செல்வதறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் பெயரும், புகழும் பெற்றிருக்கிறார்கள். பிரச்சினைகள் வரும்போது அவைகளைச் சாமர்த்தியத்துடனும், விடாமுயற்சியுடனும் தீர்க்கக் கூடியவர் நம்முடைய முதலமைச்சர். முதலமைச்சரின் சுற்றுப்பயணம் குறித்து சிலரால் மகிழ்ச்சி அடைய முடியவில்லை என்பதை அறிந்தேன். இன்றைய தினம் தமிழ்நாடு ஒரு சிறந்த நிர்வாகத்தைப் பெற்றிருக்கிறது. சட்டம், ஒழுங்கு மிகத்திறமையுடன் பாதுகாக்கப்படுகிறது தமிழ்நாட்டில்.

ஆகவே இந்தத் தமிழ்நாட்டின் நன்மைக்காகவும், தொடர்ந்து நல்ல வகையில் பணியாற்றுவதற்கான நிலைமையை உருவாக்கக் கூடிய வகையிலும், முதலமைச்சர் அவர்கள் தங்களுடைய பயணத்தை வெற்றிகரமாக முடித்துத் திரும்ப வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

அதே விழாவில் பேசிய மேலவை உறுப்பினர் பெரியவர் கே. பாலசுப்ரமணிய அய்யர் அவர்கள் "முதலமைச்சர் அவர்களின் மீதுள்ள அன்பின் காரணமாக இப்போது பேசுவதற்கு முன் வந்திருக்கிறேன். வயதில் பெரியவன் என்ற முறையில் அவரை மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன். இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் பார்க்கும்போது தமிழ்நாட்டில் மட்டும்தான் நாம் ஒரு நிலையான ஆட்சியைப் பெற்றிருக்கிறோம். பாக்கி மாநிலங்கள் எல்லாம் இன்றிருப்பார் நாளை இருப்பது திடமில்லை என்கிற அளவில்தான் இருக்கின்றன.

உட்கார்ந்திருக்கும் நாற்காலி நிலைக்குமா என்பது மற்ற மாநிலங்களில் கேள்விக்குறியாக இருக்கும்போது, இங்கே அப்படியில்லை. அசைக்க முடியாத அமைச்சரவைக் குழு சிலர் வேற்றுமை தோன்றக் கூடுமோ என்று எதிர்பார்த்தார்கள். ஏமாந்தார்கள். இவர்களுக்குள் எதிர்பார்த்தபடி வேற்றுமை தோன்றிடவில்லையே என்பதில் அவர்களுக்கெல்லாம் வருத்தம். அது இவர்கள் செய்த தப்புத்தான். தமிழகத்தைப் போல் அமைதி இருக்கிற நாடு வேறில்லை.

முதலமைச்சர் அவர்கள் பயணம் வெற்றிகரமாக முடிந்து நலமுடன் திரும்பி வரவேண்டுமென்று மனதார வாழ்த்துகிறேன்" என்றார். நலம் நாடுவோர் குழுவின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வழியனுப்பு விழா நிகழ்ச்சியில் பெரியார் அவர்கள் கலந்து கொண்டு என்னை வழியனுப்பி வைத்தார்கள். அவர் வழியனுப்பி வைத்தார் என்று சொல்வதைவிட அந்த விழாவில் நான் பெரியார் அவர்களைத் தாள் பணிந்து வணங்கி விடை பெற்றேன் என்பதுதான் பொருந்தும்.

ஆஸ்திரேலியத் தூதுவராக சென்னையில் இருந்த திரு. பட்டிரீக்‌ஷா அவர்களும், திரு. கருத்திருமன் அவர்களும் என்னுடைய இல்லத்திற்கு வந்து என்னுடைய பயணம் வெற்றிகரமாக அமைந்திட வாழ்த்து தெரிவித்தார்கள். பெரியார், ராஜாஜி, காயிதேமில்லத் ஆகியோரிடமும் அவர்கள் இல்லங்களுக்குச் சென்று விடை பெற்றேன். நான் வெளிநாடு புறப்படுவதற்கு முன்பே என்னுடைய இலாகாக்களை மற்ற அமைச்சர்களுக்கிடையே பகிர்ந்தளித்தேன். செய்தியாளர், நீங்கள் இல்லாத நேரத்தில் அமைச்சரவைக் கூட்டத்திற்கு யார் தலைமை வகிப்பார்கள் என்று கேட்டதற்கு, நான் இல்லாத நேரத்தில் கட்சிப் பொறுப்புக்களையும், அரசுப் பொறுப்புக்களையும் நாவலர் அவர்கள் கவனிப்பார் என்றும், அமைச்சரவை நண்பர்களும் அவரோடு இருந்து ஒத்துழைத்து காரியங்களை ஆற்றுவார்கள் என்றும் கூறினேன்.

பயணம் புறப்பட்ட 1-7-70 அன்று காலை அண்ணா அவர்களின் கல்லறைக்குச் சென்று மலர் வளையம் வைத்து வணங்கி விடை பெற்றேன். சென்னையிலிருந்து புறப்படும் விமானம் மாலை 6.30 மணிக்குத்தான் என்றாலும் காலை முதல் ஆயிரக்கணக்கானவர்- கள் - தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த நண்பர்களும், கழகத் தோழர்களும் என்னைச் சந்தித்து மாலை அணிவித்து பயணம் வெற்றிகரமாக அமைந்திட வேண்டுமென வாழ்த்துக்களைத் தெரிவித்த வண்ணமே இருந்தனர்.

சரியாக பிற்பகல் 4 மணி அளவில் வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன் என் தாய், தந்தை, அண்ணா ஆகியோரின் படங்களுக்கு மாலையணிவித்து வணங்கிவிட்டுப் புறப்பட்டேன். என்னுடன் தயாளு, நிதித்துறை செயலாலர் வெங்கட் ரமணன். தனிச்செயலாளர் வைத்தியலிங்கம், டாக்டர் ஆப்ரகாம் ஆகியோர் வந்தனர். நான் புறப்பட்ட விமானம் பம்பாய் விமான நிலையத்தை அடைந்தபோது அங்கு பம்பாய் வாழ் தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்து எனக்கு உற்சாகமாக வரவேற்பளித்தார்கள்.

விமானம் பம்பாய் விமான நிலையத்தை அடைந்தபோது பலத்த மழை பெய்து கொண்டிருந்தபோதிலும் அதையும் பொருட்படுத்தாமல் அவர்கள் கூடி நின்று என்னை வரவேற்றனர். பம்பாய் நகரில் அன்று நடந்த கழகப்பொதுக் கூட்டத்தில் உரையாற்றி விட்டு இரவு 1 மணிக்கு பம்பாயிலிருந்து புறப்படும் விமானத்தில் ரோம் நகருக்குப் பயணமானோம். 2-7-70 காலை 8-15 மணியளவில் ரோம் நகரை சென்றடைந்தோம். அன்று பிற்பகல் ஐ.நா. உணவு - வேளாண்மை நிறுவனத்திற்குச் சென்று அதனைப் பார்வையிட்டோம்.

3-7-70 அன்று காலை வாட்டிகன் நகர் சென்று அங்கு தொழில் அதிபர்களுடனும், தொழில் வல்லுநர்களுடனும் கலந்துரையாடினோம், பின்னர் கிறித்தவ மதத் தலைவரான போப்பாண்டவரைச் சந்தித்து உரையாடினோம். போப் அவர்கள் அண்ணா அவரைச் சந்தித்தது பற்றிக் கூறினார். அரைமணி நேரத்திற்குமேல் போப் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தேன். போப் அவர்கள் எனக்கு ஒரு பதக்கத்தையும், அவரே கையெழுத்திட்ட சமாதானச் செய்தி ஒன்றையும் தந்தார்.

நான் அவருக்கு தமிழகத்தின் கலை நுட்பப் பொருட்கள் சிலவற்றையும், நான் எழுதிய கவிதைத் தொகுப்புக்களையும் (ஆங்கில மொழி பெயர்ப்பு) அளித்தேன். ரோம் நகர் மன்றத்தின் சார்பில் எனக்கு வரவேற்பு ஒன்றும் அளிக்கப்பட்டது. நெ.-17 4-7-70 அன்று ஸ்விட்சர்லாந்து நாட்டிலுள்ள ஜூரிச் நகருக்குச் சென்றேன். அங்கு மூன்று நாட்கள் தங்கியிருந்தேன். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு 7-7-70 அன்று பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரை அடைந்தேன்.

அங்கு பிரெஞ்சு நாட்டு அரசாங்கப் பிரதிநிதிகளும், இந்தியத் தூதரக அதிகாரிகளும், பாரீசில் வாழும் தமிழர்களும், இந்தியர்களும் ஏராளமாகக் கூடி வரவேற்றனர். பாரீசில் என்னை மூன்றாவது உலகத் தமிழ் மாநாட்டு அமைப்பாளரும், பிரெஞ்சுப் பேராசிரியருமான பிலியோசா, உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகச் செயலாளர் தனிநாயகம் அடிகள், மற்றும் தமிழ் அறிஞர்கள் சந்தித்து, ஜூலை 15-ந் தேதியன்று பாரீசில் துவங்கும் மூன்றாவது உலகத் தமிழ் மாநாட்டினைத் துவக்கிவைக்க வேண்டுமென்று பிடிவாதமாகக் கேட்டுக்கொண்டார்கள்.

அவர்களுடைய வேண்டுகோளை மறுக்க முடியாமல் அதற்குத் தகுந்தாற்போல் என்னுடைய பயணத் திட்டம் மாறுதல் செய்யப்பட வேண்டியதாயிற்று பிரெஞ்சு நாட்டின் கலாச்சார உறவு அமைச்சர் எட்மண்ட் மைக்கேல் அவர்கள் என்னை அழைத்து விருந்தளித்தார். ஐக்கிய நாடுகள் சங்கத்தின் கல்வி கலாச்சார நிலையத்தின் தலைமை இயக்குநராக இருந்த டாக்டர் மால்கம் ஆதிசேஷையா அவர்கள் யுனெஸ்கோ தலைமையகத்தில் வரவேற்பு விருந்தொன்றை எனக்களித்தார்.

10-7-70 அன்று மூனிச் நகருக்குச் சென்றேன். அங்கே மேயர் ஹான்ஸ் ஜோசேன் அவர்களும், பவேரிய விவசாய அமைச்சர் ஹான்ஸ் ஐசென்மானும் என்னை வரவேற்று உபசரித்தனர். பவேரிய அமைச்சர் மதிய விருந்தளித்தார். மேற்கு ஜெர்மனியில் அந்த நாட்டின் பொருளாதார ஒத்துழைப்பு அமைச்சருடன் தமிழகத்தவருக்குத் தொழில் வளர்ச்சிக்கு உதவி புரிவது குறித்துப் பேசினேன். அங்கிருந்து அன்று நாவலர் அவர்களுக்குப் பிறந்த தின வாழ்த்துத் தந்தி ஒன்றை அனுப்பி வைத்தேன்.

ஜூலை 15-ஆம் தேதியன்று பாரீஸ்நகரில் அங்குபுகழ்பெற்ற பல்கலைக் கழக மாமண்டபத்தில் 39 உலக நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள், 60 உலகப் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த ஆராய்ச்சி அறிஞர்கள் எல்லாம் கொலு வீற்றிருந்த மூன்றாவது உலகத் தமிழ் மாநாட்டினை நான் துவக்கிவைத்தேன். அந்த மாநாட்டில் தமிழகத்தின் சார்பில் மதியழகன் அவர்கள் தலைமையில் தமிழகக் குழுவினரும் கலந்து கொண்டனர். அன்று மாலையே லண்டன் வந்து சேர்ந்து புகழ்பெற்ற கண் டாக்டர் சர் ஸ்டீவர்ட் டியூக் எல்டர் அவர்களிடம் கண்ணைப் பரிசோதனை செய்து கொண்டேன்.

இந்தப் பரிசோதனையின்போது என்னுடன் தமிழகத்திலிருந்து வந்திருந்த டாக்டர் ஆப்ரகாம் அவர்களும் உடனிருந்தார். பரிசோதனைக்குப் பிறகு சர் டியூக் எல்டர் சென்னையில் எனக்குத் தரப்பட்ட சிகிச்சையே போதுமானது என்றும், சென்னையில் நடந்த சிகிச்சைக்குப்பின் தரப்பட்ட மருந்துகளையே இன்னும் சில நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் போதும் என்றும், அறுவை சிகிச்சை தேவையில்லை என்றும் கூறினார். அங்கிருந்து தமிழகத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ப.

உ. சண்முகம் அவர்களிடமும், முரசொலி மாறனிடமும் டாக்டர் தெரிவித்ததைக் கூறினேன். ப. உ. சண்முகம் மாதவரம் பால் பண்ணைத் தொழிலாளர்களும், நாகர்கோவில் பஸ் தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்வதாகத் தெரிவித்தார். அந்தத் தொழிலாளர்களை எல்லாம் வேலைக்குத் திரும்ப வேண்டுமென்று அங்கிருந்தவாறே ஒரு வேண்டுகோள் தமிழகத்தின் ஏடுகள் மூலம் விடுத்தேன். ஜூலை 16-ந் தேதி மறுபடியும் டாக்டர் பெட்போர்டைச் சந்தித்து, அவரிடமும் கண்ணைக் காட்டினேன்.

அவரும் அறுவை சிகிச்சை எதுவும் தேவையில்லை என்ற கருத்தையே தெரிவித்தார். ஒரு மணி நேரத்திற்கு மேல் லண்டனில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. பல்வேறு பிரச்சினைகள் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விகளுக்குத் தகுந்த விடைகளை அளித்தேன். சென்னையில் உள்ள ஸ்டாண்டர்டு மோட்டார் தொழிற்சாலையைத் திறப்பது குறித்தும், டிராக்டர் தொழிற்சாலையை விரிவுபடுத்துவது பற்றியும், பெட்ரோகெமிக்கல் தொழில்கள் நிறுவுவது பற்றியும் அந்தந்தத் துறையில் சிறந்து விளங்கும் தொழில் அதிபர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினேன்.

கவென்டரியில் உள்ள பெர்கூசன் டிராக்டர் தொழிற்சாலையைப் பார்வையிட்டேன். அந்தப் பெர்கூசன் கம்பெனியார் நான் அந்தக் கம்பெனிக்கு வந்ததையொட்டி டிராக்டர் ஒன்றை எனக்கு அன்பளிப்பாகத் தந்தனர். அதனை நான் அப்போதே கோவை விவசாயக் கல்லூரிக்கு அன்பளிப்பாக அறிவித்து, அவர்களிடமே அதை கோவை விவசாயக் கல்லூரிக்கு அனுப்பிவைக்கும்படி கேட்டுக் கொண்டேன்.