நெஞ்சுக்கு நீதி
கொள்கை வளர்ந்த நிலை · 171 / 391
கொள்கை வளர்ந்த நிலை பு துடெல்லியில் நடைபெற்ற தேசீய வளர்ச்சிக் குழுகூட்டத்தில் நான் மாநில சுயாட்சி குறித்துப் பேசியதும், சேலம் இரும்பு உருக்காலை இடம் பெறாத நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தை ஏற்றுக் கொள்ள இயலாது என்று கடுமையாகக் கூறியதும் திரு. சி. சுப்பிரமணியம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை; டெல்லியிலிருந்து திரும்பும் போது விமானத்தில் அவரும் நானும் சந்தித்து அளவளாவிப் பேசிக் கொண்டிருக்கும்போது அவரே அதைக் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டின் தேவைகளுக்காக உரிமையுடன் போராடுவதில் என்ன தவறு இருக்க முடியும் என்று நான் அவருக்குப் பதில் அளித்தேன். மத்தியில் இருப்போர் எஜமானர் நிலையிலும் மாநில அரசுகள் எடுபிடிகள் நிலையிலும் இருப்பதை மாற்றியமைத்திடத்தான் மாநில சுயாட்சிக் கொள்கையைத் தி. மு. கழகம் தனது கோஷமாகவே ஆக்கிக் கொண்டது. அன்றைக்கு அந்தக் கோஷத்தைக் கேலி செய்தவர்கள் - கண்டித்தவர்கள் - பிரிவினை வாதத்தின் மறுபதிப்பு என்றெல்லாம் திசை திருப்பியவர்கள், இன்றைக்கு அந்தக் கோஷம் இந்திய அரசியல் அரங்கில் எத்துணை முக்கியத்துவம் பெற்றிருக்கிறது என்பதை உணரத் தலைப்பட்டு விட்டார்கள்.
தமிழ்நாட்டில், மாநில அளவில் மட்டுமல்லாமல் டெல்லியிலும் முதலமைச்சர்கள் மாநாட்டில் பிரதமருக்கு நேராக மாநில சுயாட்சி முழக்கத்தை நான் எழுப்பியதால்-அது குறித்து வடபுலத்திலே செல்வாக்குப் பெற்ற ஆங்கில ஏடுகள் விமர்சிக்கத் தொடங்கின. டெல்லியில் இருந்து வெளிவரும் "இந்துஸ்தான் டைம்ஸ்" 1970-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் பின்வருமாறு ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. என். எஸ். ஜே. என்பவர் அந்தக் கட்டுரையைத் தீட்டியிருந்தார்.
"காலம் சுழல்கிறது! தனக்கே உரித்தான முறையில் அது பழைய விஷயங்களுக்காகச் சில இடங்களில் பழிவாங்கவும் செய்கிறது. 1950 வாக்கில் தென்னகத்தில் சுற்றுப் பயணம் செய்த ஜவஹர்லால்நேரு அவர்கள் தி. மு. கழகத்தைக் "கற்காலக் கட்சி" என்றும், விளைவுகள் எதையும் ஏற்படுத்த முடியாத கட்சி என்றும் அலட்சியப்படுத்திப் பேசினார்.
ஆனால் 1960-ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்தக் கட்சி, வளர்ந்து விட்ட நிலையிலும் தாராள மனப்பான்மையுடன் விளங்குகிறது. ஜின்னாவின் அரசியலைப்பற்றி நேரு கொண்டிருந்த வஞ்சினம் எத்தகையது என்று மெளலானா ஆசாத், தமது "இந்தியா விடுதலை அடைகிறது" என்ற நூலில் எத்தனை விளக்கமாக எழுதினாரோ, அதே வன்மத்துடன் தி. மு. க. வைப்பற்றி பேசியபோதிலும், காலம் மாறிய நிலையில் இன்று தி. மு. கழகம் காட்டுகிற அரசியல் பெருந்தன்மை - நேரு இருந்தால் அவரை மட்டுமல்ல; தி.
மு. க.வின் நிறுவனரும் தன்னிகரில்லாத தலைவருமான திரு. அண்ணா அவர்களையே வியப்படையச் செய்திருக்கும். சுருங்கச் சொல்லின் தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி அவர்களின் தலைமையில் தி. மு. கழகம் தன்னுடைய மாநில அரசியல் கட்சி என்ற தனித்தன்மையையும் இழந்து விடாமல், அகில இந்திய அரசியலிலும் தனது சிறப்பான பணியை ஆற்ற முற்படுகிறது. எடுத்த எடுப்பில் இது முன்னுக்குப் பின் முரணான முயற்சிபோல் தோன்றும்; அகில இந்திய அரசியலில் செயல்படும் முயற்சியில் எந்த மாநில அரசியல் கட்சியும் தன்னுடைய மாநில நலன் பற்றிய கொள்கைகளைத் தளர்த்திக் கொள்ள வேண்டியிருக்கும்.
அதன் விளைவாக அவர்களுக்கு உள்ள ஒரே பலமான மக்களாதரவையும் ஓரளவுக்கு அழித்துக் கொள்ள நேரிடும். திரு. கருணாநிதி அவர்கள் இந்த முரண்பாட்டை மிகவும் சாமர்த்தியமாகச் சமாளித்திருக்கிறார். திரு. கருணாநிதி அவர்கள் கூட்டாட்சிக்கும் கூட்டணியாட்சிக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கினார். அவர் கொடுத்திருக்கும் அரசியல் விளக்கமானது முற்றிலும் புதுமையானது. அவரது திட்டத்தின் இரண்டொரு அம்சங்கள் புரட்சிகரமானவை. முதலாவதாக, இது அரசியல் கட்சிகள் தாமாக முன்வந்து ஏற்படுத்திக் கொள்ளும் அரசியல் ஏற்பாடு அல்ல.
அரசியல் சட்டத்திலேயே அமைக்கப்படும் மாற்றம் இது. திரு. கருணாநிதி அவர்களின் புதிய கருத்துக்கள் பழைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரிவினைக் கொள்கையின் மறு உருவமே என்று வாதிப்பவர்கள் இதைத் தவறாகப் புரிந்து கொண்டவர்களாவார்கள். இந்தக் கருத்துக்களை விரும்பாதவர்கள் கூட இன்றைய அகில இந்திய அரசியல் சூழ்நிலையில் திரு. கருணாநிதி அவர்கள் முக்கியத்துவம் பெற்று வளர்ந்து வரும் ஒரு அரசியல் சக்தி என்பதை ஒப்புக்கொண்டு தான் ஆகவேண்டும்.
ஒரு தலைவருக்குரிய ஆற்றலும் திறமையும் பெற்றவராக அண்ணா அவர்கள் இருந்தாரென்றாலும், அவரிடம் சில அமைதித் தன்மைகளும் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மைகளும் இருந்தன. இதற்கு மாறாக திரு. கருணாநிதி துடிப்புடன், புதுத்திட்டங்களுடன் பெரிய குறிக்கோள்களுடன் தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறார். இதற்கு முன்னர், தான் முதலமைச்சராக வருவதற்கு முன்னால் டெல்லி பக்கம் வந்திருப்பாரோ இல்லையோ என்று கருதப்படும் திரு.
கருணாநிதியின் அரசியல் செல்வாக்கு அவர் முதலமைச்சராகும் வரை தமிழகத்தின் எல்லையைத் தாண்டவில்லை. ஆனால் இன்று அவர் அகாலிக் கட்சியுடன் குறிப்பிடத்தக்க அளவுக்கு சிறந்த தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். அடுத்து வரும் பத்தாண்டுகளில் அரசியல் உலகத்தின் கவனத்தைத் தன்பால் இழுக்கக்கூடிய தலைவராக திரு. கருணாநிதி இருப்பார்."
இவ்வாறு "இந்துஸ்தான் டைம்ஸ்" ஏடு எழுதியதையொட்டியே - உலகப் புகழ்பெற்ற ஆங்கில ஏடான "சங்கர்ஸ்-வீக்லி" ஒரு கட்டுரை தீட்டியிருந்தது. "மாநில சுயாட்சி-மத்தியில் கூட்டாட்சி" என்ற கோஷத்தை நான் எழுப்பிய பிறகு, "இந்த வார மனிதர்" என்று தலைப்பிட்டு அந்த ஏட்டில் எழுதப்பட்டிருந்த கருத்துக்களை நான் நினைவூட்ட விரும்புவது; என்னைப் புகழ்ந்துரைத்துள்ளது என்பதற்காக அல்ல; கழகத்தின் சார்பில் எடுத்து வைக்கப்பட்ட வாதம் எவ்வளவு வலுவானது என்பதையும்-கழகத்தின் கொள்கை, எதிர்காலத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும் என்பதையும் அப்பொழுதே பிரபல பத்திரிகைகள் உணர்ந்து அறிவித்தன என்பதை எடுத்துக் காட்டுவதற்காகத்தான்!
நெ.-16 இதோ; "சங்கர்ஸ் வீக்லி" அன்று எழுதியதை அப்படியே தருகிறேன். "இன்று முதலமைச்சராகவும். திரு. அண்ணாதுரையின் வாரிசாகவும் திகழ்கின்ற கருணாநிதி நிதானத்தையும், உறுதியையும் பெற்றுள்ளதோடன்றி, அரசியல் நுட்பங்களில் நல்ல தேர்ச்சியும், ஒரு நிபுணத் தன்மையையும் பெற்றிருக்கிறார். இவை அவரை அரசியல் அரங்கத்தில் நடுநாயகமானவராக ஆக்கியிருக்கிறது. பஞ்சாப்பைச் சேர்ந்த அகாலி தளத்துடன் ஏற்பட்ட கூட்டு திரு.
கருணாநிதியுடைய ராஜ தந்திரத்தின் உச்ச கட்ட வெற்றிகளில் ஒன்றாகும். மாநிலங்களை அங்கங்களாகக் கொண்ட மத்திய ஆட்சி என்று அவர் அண்மையில் உருவாக்கியுள்ள புது சித்தாந்தம் அவருடைய பெரும் போர்த் தந்திரங்களில் ஒன்றாகும். இந்தியா முழுவதையும் நிர்வகிப்பதில் மாநிலக் கட்சிகளான தி. மு. க., அகாலி தளம் போன்ற கட்சிகளும் கூட இந்த சித்தாந்தத்தின் காரணமாக எடுத்த எடுப்பிலேயே முக்கியத்துவம் வாய்ந்த சக்திகளாகி விடுகின்றன.
இப்படிப்பட்ட ஒரு செயல்திட்டத்தை உருவாக்கியதன் மூலம் இன்றைய நிலவரத்தின் அடிப்படை அம்சங்களைப் புரிந்து கொள்வதிலும், அதன் வாயிலாகத் தனக்கும், தன் கட்சிக்கும் உயர்ந்தபட்ச சாதகங்களைச் சேர்ப்பதிலும் திரு. கருணாநிதிக்குள்ள ஆற்றல் நன்கு வெளிப்படுகிறது. இந்தச் செயல் முறை சாத்தியமானதா இல்லையா என்பது வேறு. ஆனால் திரு. கருணாநிதி இதர பிராந்தியத் தலைவர்களுடன் சேர்ந்து; தாம் முதிர்ச்சி அடைந்து விட்டவர்தான் என்பதனை நிரூபித்து விட்டார்.
கருணாநிதியின் புதிய சித்தாந்தம் கண்டு யாரும் மண்டையை உடைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. கூட்டாட்சித் தத்துவத்துக்கு ஒரு ஸ்தாபன உருவம் கொடுப்பதற்குத்தான் கருணாநிதியின் சித்தாந்தம் முயற்சி செய்கிறது. இதனை எதிர்க்கும் தீவிரவாதிகளின் மூளையற்ற முரட்டுத்தனத்தின் காரணமாகவேகூட இந்த நிலை என்றேனும் ஒருநாள் ஏற்படத்தான் போகிறது."
இவ்வாறு அந்த இதழ்களில் வெளியிடப்பட்ட எண்ணங்கள்; இன்றைக்குச் செயல்வடிவம் கொண்டுள்ளன என்பதற்கும்-பரவலாகத் துணைக்கண்டம் முழுவதும் மத்திய மாநில உறவுகள் பற்றிய புதிய சிந்தனை எழுந்துள்ளன என்பதற்கும்-பெங்களூரில் நடைபெற்ற தென்மாநில முதல்வர்கள் மாநாடும், காஷ்மீரில் நடைபெற்ற மத்திய மாநில உறவுகள் குறித்த மாநாட்டில் காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா, கர்னாடக முதல்வர் ஹெக்டே, மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு, ஆந்திர முதல்வர் என். டி.
ராமராவ், மற்றும் பல கட்சித் தலைவர்கள், தி. மு. கழகத்தின் சார்பில் சாதிக், தண்டபாணி, எம். பி. ஆகியோர் கலந்து கொண்டு விவாதித்ததும்-பொருத்தமான எடுத்துக் காட்டுகளாகும். மத்திய மாநில உறவுகளை ஆராய்ந்து அறிக்கை தருவதற்காக இப்போது உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சர்க்காரியா அவர்களை மத்திய அரசு நியமித்திருப்பது என்பது கூட-அந்தக் கமிஷனின் அறிக்கை எப்படியிருந்தாலும்; மத்திய அரசு, மாநிலங்களின் உரிமைக் குரலைத் தட்டிக் கழிக்க முடியாத நிலையில் தள்ளப்பட்டுள்ளது என்பதைத்தான் தெளிவாக்குகிறது.
எனவே 1970 பிப்ரவரியில் நடைபெற்ற திருச்சி மாநாட்டிலும், மார்ச்சில் நடைபெற்ற டெல்லி தேசிய வளர்ச்சிக் குழுவின் (என்.டி.சி.) கூட்டத்திலும் முழங்கப்பட்ட மாநில சுயாட்சிக் கோஷம்; காற்றுடன் கலந்து போய்விடாமல் இந்திய நாட்டு அரசியல் அரங்கில், மெல்ல மெல்ல-ஆனால் உறுதியாகப் பரவ ஆரம்பித்துவிட்டது என்றே கூறலாம்! மாநில சுயாட்சி-மத்தியிலே கூட்டாட்சி என்ற கருத்துக்கு பலமூட்டும் வண்ணம் ஏற்கனவே பல அரசியல் அறிஞர்கள், வரலாற்றுப் பேராசிரியர்கள், ஆதாரங்களை அள்ளி வழங்கியிருக்கிறார்கள் என்றாலும்-அவற்றை ஒரு மாநிலத்தின் ஆளுங்கட்சி சிந்தித்துப் பார்த்தும், அனுபவ ரீதியாக உணர்ந்தும், படிப்படியாகப் பல்வேறு கட்டங்களில் அந்த முழக்கத்தை உறுதியாக ஒலித்திட முன்வந்தது என்றால் அது தி.
மு. கழகமே ஆகும்! ஆளுங்கட்சியாக இருந்தபோது மட்டுமல்லாமல்-1976-க்குப் பிறகு எதிர்க்கட்சியாக இருந்திடும் நிலையிலும் அந்த முழக்கத்தைக் கழகம் முனைப்புடன்தான் ஒலித்து வருகிறது. "மாநில சுயாட்சி" முக்கியத்துவம் பெற்ற 1970-ஆம் ஆண்டில் டெல்லி மாநிலங்களவைக்கான தேர்தலும், தமிழக சட்டமன்ற மேலவைக்கான தேர்தலும் நடைபெற்றன. குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதமர் இந்திராகாந்திக்குச் சாதகமான முறையில் வி.
வி. கிரி அவர்களைத் தி. மு. கழகம் ஆதரித்து வெற்றிபெறச் செய்தது என்ற போதிலுங்கூட அந்தக் கட்சிக்கும் கழகத்திற்கும் அதன் தொடர்பாக எந்தத் தேர்தல் உறவும் ஏற்படவில்லை. சட்டமன்ற மேலவைக்கு வேட்பாளர்களாகக் கழகச் சார்பில் என். வி. என்., சி. பி. சிற்றரசு, மன்னை நாராயணசாமி, நீலநாராயணன், எஸ். ஏ. ராசமாணிக்கம் ஆகியோர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர். சுதந்திரக்கட்சி சார்பில் வேட்பு மனுதாக்கல் செய்த திரு.
சுந்தரேசன் அவர்களுக்குக் கழகம் விட்டுத்தர வேண்டுமென்று ராஜாஜி அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க நண்பர் நீலநாராயணன் அவர்களின் வேட்பு மனு திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது. அதனை நீலநாராயணன் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். பி. சோ. கட்சிக்கு ஒரு இடம் கழகச் சார்பில் அளிக்கப்பட்டு நண்பர் ஆறுமுகசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலங்களவை (ராஜ்யசபா) தேர்தலில் கழகச் சார்பில் காஞ்சி கல்யாணசுந்தரம், டி.
கே. சீனுவாசன், எஸ். எஸ்.ஆர். ஆகியோரும் கழக ஆதரவுடன் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் அப்துஸ் சமத் அவர்களும், சுதந்திரா கட்சி சார்பில் மாரிசாமி அவர்களும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்திரா காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக திரு. சி. சுப்பிரமணியம் அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்பொழுது ராஜாஜி அவர்கள் விடுத்த அறிக்கையொன்றில், "தமிழ்நாடு மேலவைக்கான தேர்தலில் தி. மு. கழகம் தன்னுடைய வேட்பாளரைத் திரும்பப் பெற்றுக்கொண்டு சுதந்திரக் கட்சி வேட்பாளர் திரு.
சுந்தரேசன் போட்டியின்றி வெற்றி பெற உதவி செய்ததற்காகப் பாராட்டுகிறேன். இதேபோல் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து மாநிலங்கள் அவைக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் சுதந்திரக் கட்சி வேட்பாளர் திரு. எஸ். எஸ். மாரிசாமி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நம்புகிறேன். இந்தத் தேர்தலில் வெற்றிபெற திரு. சி. சுப்பிரமணியம் பகீரதப் பிரயத்தனம் செய்வதாகக் கூறப்படுகிறது. இது எதற்கு என்று கடவுளுக்குத்தான் தெரியும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
திரு. சி. சுப்பிரமணியம் 1967 - ஆம் ஆண்டு தேர்தலில் கோபி பாராளுமன்றத் தொகுதியில் கழக வேட்பாளர் பி. ஏ. சாமிநாதன் அவர்களால் தோற்கடிக்கப்பட்ட காரணத்தால் மத்திய அமைச்சரவையில் இடம் பெற முடியாமல் போனது! மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் அவர் மத்திய அமைச்சராகக்கூடும் என்று உறுதியான கருத்து பரப்பப்பட்டது. "சி. சுப்பிரமணியம் அவர்கள் மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மத்திய மந்திரியாக வருவது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?
உங்கள் ஆதரவு உண்டா?" என்று டெல்லியில் என்னிடம் நிருபர்கள் கேட்டபோது "கோயிலுக்குக் குறுக்கே நந்தியாகவும் இருக்கமாட்டேன்-கோட்டைக்குக் கொண்டுசெல்ல குதிரையாகவும் இருக்கமாட்டேன்" என்று கூறினேன். சி. எஸ். தேர்தலைப் பொறுத்து, சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் பணம் பெற்றுக்கொண்டு கட்சிமாறி வாக்களிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கழக உறுப்பினர்கள் மிகவும் கட்டுப்பாடாக இருந்து அந்தத் தேர்தலில் வாக்களித்து, கழகத்தின் சார்பில் நிறுத்தப்பட்ட காஞ்சி கல்யாண சுந்தரம், டி.
கே. சீனுவாசன், எஸ். எஸ். ஆர். ஆகியோர்களையும், கழக ஆதரவு பெற்ற தோழமைக் கட்சி வேட்பாளர்களான அப்துஸ் சமத், மாரிசாமி ஆகியோரையும் வெற்றி பெறச் செய்தனர். இந்திரா காங்கிரஸ்கட்சி சார்பில் போட்டியிட்ட சி. சுப்பிரமணியம் அவர்கள் தோல்வி அடைந்தார். தி. மு. கழகத்தில் ஊடுருவல் நடக்காது என்பதை நிரூபிக்க அந்தத் தேர்தல் உதவியது.
