நெஞ்சுக்கு நீதி
"தமிழ் உணர்வும் தமிழக உரிமையும்" · 170 / 391
"தமிழ் உணர்வும் தமிழக உரிமையும்" சி றந்த தமிழ்ப் படம், சிறந்த தமிழ்ப்பட இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த எழுத்தாளர், பாடலாசிரியர் என்று பல முனைகளில் திரைப்படத் துறையில் ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்களுக்குத் தமிழக அரசின் சார்பில் பரிசுகள் வழங்குகிற நிகழ்ச்சியை அண்ணா அவர்கள் உருவாக்கியதையொட்டி 1970-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் நடைபெற்ற அந்தப் பரிசளிப்பு விழாவின்போது "இனித் தமிழக அரசு நிகழ்ச்சிகளில் தொடக்கத்தில் இறை வணக்கம் என்பது தமிழ்த்தாய் வாழ்த்தாக இருக்குமென்றும், "நீராருங் கடலுடுத்த" எனும் மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய அந்தப் பாடலே அந்த வாழ்த்தாக அமையுமென்றும் அறிவித்தேன்.
வாழ்த்துப் பாடலுக்கு ஏற்றவகையில் அந்தப் பாட்டை ஓரளவு குறைத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதிய அந்தப் பாடலில் சமஸ்கிருத மொழி உலக வழக்கு ஒழிந்த மொழி என்பதை "ஆரியம் போல் உலக வழக்கு அழிந்தொழிந்து சிதையா உன் சீரிளமைத்திறம் வியந்து" என்று குறித்துத் தமிழ் மொழியைப் புகழ்ந்திருந்தார்.
அரசு நிகழ்ச்சியில் - அதுவும் தமிழ்த் தாய் வாழ்த்தில் - மற்றொரு மொழியைக் குறைத்தும் பழித்தும் கூறுதல் வேண்டாமென்பதற்காகவும்- "அழிந்து, ஒழிந்து" என்ற சொற்களை ஒரு பகுதியினர் அமங்கலச் சொற்கள் எனக் கருதி முகஞ்சுளிப்பர் என்பதற்காகவும்; அந்த வரியையே அகற்றிவிட்டு இசையமைக்குமாறு கேட்டுக் கொண்டேன். "நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில் தெக்கணமும் அதிற் சிறந்த திராவிடநல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெருந் தமிழணங்கே உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!"
இவ்வாறு இசைக்கேற்பப் பாடல் ஒழுங்குப்படுத்தப்பட்டது. மெல்லிசை மன்னர் எனப் போற்றப்படும் விசுவநாதன் இசையமைக்க - பின்னணி இசைப் புகழ் மணிகளான சௌந்திரராசன், திருமதி சுசிலா ஆகியோர் பாடிய அந்த வாழ்த்து இசைத்தட்டுகளாக வெளியிடப்பட்டு, தமிழக அரசு விழாக்களில் பயன் படுத்தப்பட்டன. அரசு விழாக்களில் தமிழ்த் தாய் வாழ்த்து என நான் அறிவித்தவுடனே - அதற்கும் எதிர்ப்பு கிளம்பிடத் தவறவில்லை! "ஆனந்த விகடன்" இதழில் கருத்துரை தீட்டிய பிரபல எழுத்தாளர் திரு.
கி. வா. ஜெகந்நாதன் அவர்கள், தமிழ் ஒரு குட்டி தேவதை என்றும், மொழி வாழ்த்துப் பாடலைக் கடவுள் வாழ்த்துப் பாடலாக மாற்றியது பொருத்தமற்றது என்றும் அதற்குப் பதிலாக "அங்கிங் கெனாதபடி" எனத் தொடங்கும் தாயுமானவர் பாடலைப் பாடலாமென்றும் குறிப்பிட்டிருந்தார். மெயில் போன்ற வேறு சில ஏடுகளிலும் மறுப்புக் கருத்துக்கள் வெளிவந்தன. அப்போது பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையார் அவர்கள் தமிழக அரசு எடுத்த முடிவை வரவேற்று விடுத்த அறிக்கையில் எதிர்க் கருத்தாளர்களுக்குத் தக்க பதில் அளித்திருந்தார்.
அந்த அறிக்கை மிக முக்கியமானது என்பதால் இங்கே அதனைக் குறிப்பிடுவது பயனுள்ள ஒன்றாகும். "தமிழ் இனத்தின் கடவுள் வணக்கப் பாடலாக பேராசிரியர் சுந்தரனாரின் "மனோன்மணிய" வணக்கப் பாடலையே பாடவேண்டுமென்ற கருத்து பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழகப் புலவர் குழுவில் தீர்மானமாக வந்தது. அந்தப் பாடலில் சமஸ்கிருதத்தைவிட தமிழுக்கு உயர்வு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதனால் சமஸ்கிருதப் பற்றாளர் சிலர் எதிர்த்தனர்.
புரட்சித் கவிஞர் பாரதிதாசன் போன்றோர் புலவர் குழுவிலிருந்து விலகுவதற்கு இதுவே வழி வகுத்தது. தாயுமானவர் பாடலைப் பாடலாமென்றும் திருக்குறள் முதல் அதிகாரத்தைப் பாடலாமென்றும் இதன்பின் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தாயுமானவர் பாடல், இந்து மதத்தை பெரிதும் சார்ந்தது எனப் பிற மதத்தினர் எதிர்த்தனர். திருக்குறள் முதல் அதிகாரத்துக்குக்கூட அது "தாள்" "அடி" என்று கூறுவதால் உருவ வணக்கத்தின் சாயலுடையது என்று கிறித்துவ, இஸ்லாமியப் புலவர்கள் சிலர் குறைப்பட்டனர்.
மனோன்மணியம் ஆசிரியர் சுந்தரம் பிள்ளையை விட இந்து மதத்தைக் கரைத்துக் குடித்தவர், வேதாந்த ஆராய்ச்சியில், கடவுள் ஆராய்ச்சியில் கரை கண்டவர் மிகச் சிலரே இருக்க முடியும். அத்தகையவர் இந்து மதத்தையோ வேறு எந்த மதத்தையோ புண்படுத்தாமல் எல்லா மதத்தினரும் ஒப்புக் கொள்ளத்தக்க விதத்தில் தமிழ் மொழி உருவாகவே பாடிய தேசியக் கடவுள் பாடல்தான் "நீராருங் கடலுடுத்த" என்ற பாடலாகும். அந்த வாழ்த்துப் பாடலைத் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தேர்ந்தெடுத்தார் என்றால், அது அவர் கலைப் பண்புக்கு, தமிழன்புக்கு சீரிய சான்றாகும்".
பன்மொழிப் புலவர் அப்பா துரையாரின் இந்தக் கருத்தினையொட்டி சிலம்புச்செல்வர் ம.பொ.சி. அவர்களும் அறிக்கையொன்றினை விடுத்தார். "நீராருங் கடலுடுத்த" என்று தொடங்கும் பாடல் அரசு விழாக்களிலும், அமைச்சர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளிலும் பாடப்பட வேண்டுமென்று கலைஞர் கொடுத்த அறிவிப்பு, தமிழ்ப் மொழிப் பற்றுடைய அனைவர்க்கும் கரும்பாக இனித்திடும்போது - ஏனோ ஆனந்த விகடனுக்கு மட்டும் வேம்பாகக் கசக்கிறது!
அரசு விழாக்களில் தமிழைத் தெய்வமாக வழிபடுவோம் எனக் கலைஞர் கூறியிருக்கிறார். மொழியைத் தெய்வமாக வழி படுவது பிழையெனில் இந்தப் பிழையை முதலில் செய்த பெருமை, வடமொழியாளர்க்கே உரிமை! மொழி வாழ்த்தையே கடவுள் வாழ்த்தாகப்பாடுவது பொருத்தமற்றது என்கிறார் கி. வா. ஜ! "ஓம்" என்ற எழுத்து வடிவம்தான் ஒலி வடிவமாக - இறை வடிவமாக - பிரணவ மந்திரமாக வழிபடப்படுகிறது என்பதை அவர் மறந்தார் போலும்!"
திரு. ம. பொ. சி. அவர்களைத் தொடர்ந்து தமிழ் அறிஞர் டாக்டர் மு. வரதராசனார் அவர்கள் "நாடும் மொழியும் ஒருங்கே போற்றப்படும் சிறப்புக்குரிய அந்தப் பாடல் தமிழக மக்கள் ஏற்கத்தக்க வாழ்த்துப் பாடல்" என்று அறிவித்தார். தமிழ்த் தாய் வாழ்த்து - இன்றைக்குத் அரசு தமிழக நிகழ்ச்சிகளில் பாடப்படும்பொழுது, அந்தப் பாடல் எத்துணை எதிர்ப்புகளைச் சமாளித்து வெளிவந்துள்ளது என்ற கடந்த காலசரித்திரம் பலருக்குத் தெரியாமலே கூட இருக்கலாம்; அதனால் தான் நினைவூட்டினேன்!
அடுத்து, 1970 மார்ச் 21-ஆம் நாள் டெல்லியில் நடைபெற்ற தேசீய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் நான் கலந்துகொண்டு ஆற்றிய உரையும், இறுதியாக வெளியிட்ட அறிவிப்பும் - தி. மு. கழகம், எந்த நிலையிலும் தமிழக மக்களின் உரிமைக்காகத் துணிவுடன் பாடுபடும் போர்க்குணம் கொண்டது என்பதை எடுத்துக்காட்டின! "கடந்த மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களிலும் எதிர்பார்த்த அளவிற்குப் பலன் கிடைக்கவில்லை என்று அரசியல் தலைவர்களும், பொருளாதார வல்லுநர்களும் வெளிப்படையாகவே கூறிவிட்டார்கள்.
அதற்குக் காரணம், திட்டம் வகுப்பதற்கும், செயல்படுத்துவதற்கும் வேண்டிய எல்லா அதிகாரங்களையும் ஒரே இடத்திலே குவித்து வைத்திருப்பதுதான். ஆகவேதான் மாநிலத்தில் சுயாட்சி, மத்தியிலே கூட்டாட்சி (Regional Autonomy at the State level and a new Federal set up at the Centre) வேண்டுமென்று நாங்கள் சொல்லி வருகின்றோம். இம்மாதிரி சொல்வதனால் நாங்கள். தேசிய ஒருமைப்பாட்டிற்கும் வலுவான மத்திய அரசு இருக்க வேண்டுமென்ற கொள்கைக்கும் முரண்பட்டவர்கள் அல்ல.
மத்தியில் வலுவான ஆட்சி இருந்தால்தான் மாநிலங்களுக்கிடையே ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தீர்த்து உள்நாட்டு அமைதியைப் பாதுகாக்க முடியும். ஆனால், இன்றையதினம் மத்திய அரசானது சிக்கல் இல்லாத துறைகளில் சிக்கலைத் உண்டாக்குவதும், சிக்கல் இருக்கக் கூடிய இடங்களில் சிக்கலைத் தீர்த்துவைக்க முடியாமல் தவிப்பதுமான சூழ்நிலையில் இருக்கிறது இந்நிலை தவிர்க்கப்பட வேண்டுமானால் அரசியல் சட்டத்தையே மாற்றி அமைக்க வேண்டும்.
இப்பொழுது இருக்கும் அரசியல் சட்டமானது ஒரே கட்சி எல்லா மாநிலங்களிலும் மத்தியிலும் ஆட்சி புரியும் என்ற ஒரு திடமான நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் காலம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு பல்வேறு மாநிலங்களில் பல்வேறு மாநிலக் கட்சிகள் ஆட்சிக்கு வந்திருக்கின்றன. ஆனால் மத்தியில் வேறொரு கட்சி ஆட்சிப் பொறுப்பை வகிக்கிறது. இம்மாதிரி மாறுபட்ட சூழ்நிலையில் மத்திய அரசு உருவாக்கும் ஒவ்வொரு கொள்கையையும் அந்தந்த மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்ப்பது சரியானதல்ல.
ஆகவே விரைவில் அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது தேசிய ஒருமைப்பாட்டிற்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் நல்லது என்று என்னுடைய திடமான அபிப்பிராயத்தைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இந்த ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் தமிழ்நாடு மத்திய அரசுக்குக் கடன் தவணையாக சுமார் 160 கோடி ரூபாய் திருப்பித்தர வேண்டியிருக்கிறது. ஆனால் எங்களுக்கு அளிக்கப்படும் உதவித் தொகையோ 140 கோடி ரூபாய்தான்.
உண்மையைச் சொல்லப் போனால் உங்கள் கடனைத் திருப்பிப் பெற்றுக் கொள்வதற்காகவே எங்களுக்கு உதவித் தொகை அளிப்பதுபோல் இருக்கிறது. ஆகவே, கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ள 900 கோடி ரூபாயில் எங்களுக்குக் கணிசமான உதவி அளிக்கப்பட வேண்டும். உரிமைகள் உதாசீனப்படுத்தப்படும்போது, உறவு கொண்டதே தவறோ என்கிற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது. வறட்சிக்காக நான்கு ஆண்டு காலத்திற்கு ஒதுக்கப்படுகிற நூறு கோடி ரூபாயில் தமிழ்நாட்டிற்கு எதுவுமில்லை என்பதை எங்களால் எந்த விதத்திலும் ஒப்புக் கொள்ள முடியாது.
சேலத்தில் இரும்புத் தொழிற்சாலை ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென்று கடந்த 15 ஆண்டுகளாக மக்களும், மாநில அரசும், மத்திய அரசை இடைவிடாது வேண்டிக் கொண்டிருக்கின்றன. சேலத்திற்காகப் பல ஆண்டு காலம் போர்க்குரல் எழுப்பிய நாங்கள், இன்று ஆளுங்கட்சியாக வந்திருக்கிறோம் சேலத்திற்கான ஆரம்ப வேலைகளைத் தீவிரமாகச் செய்த ஆர். வெங்கட்ராமன் அவர்கள் திட்டக்குழுவிற்கு வந்திருக்கிறார். ஆனால் சேலம்தான் இன்னும் வரவில்லை.
சேலத்தைப் பற்றிய அறிவிப்பை தமிழ்நாடு மிகுந்த பரபரப்போடும், உணர்ச்சியோடும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அந்த ஆசையில் கல்லைப் போடாமல் சேலம் திட்டத்திற்கான அடிக்கல்லைப் போடுமாறு கேட்டுக் கொள்கிறேன். பிரதமருக்கு நான் இறுதியாகவும் உறுதியாகவும் ஒன்று கூறிக் கொள்வேன். இந்தக் கூட்டத்தில் சேலம் உருக்காலைத் திட்டத்தைப் பற்றி தங்களது அறிவிப்புத் தேவை. இன்னமும் அறிவிக்காமல் இருப்பதன் நோக்கமென்ன?
யார் வந்த பிறகு அறிவிக்கலாம் என்று இருக்கிறீர்கள்? கூடுதலாக மாநிலங்களுக்கு ஒதுக்கியுள்ள 175 கோடி ரூபாய் எல்லா மாநிலங்களுக்கும், எங்களுடைய தமிழ்நாட்டிற்கும் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். வறட்சிப் பகுதிகளில் வேலை வாய்ப்பிற்கு ஒதுக்கப்படும் நூறு கோடி ரூபாயில் தமிழ் நாட்டை வஞ்சிக்கக் கூடாது. இந்த மூன்றிற்கும் தங்களிடமிருந்து ஒப்புதல் கிடைக்காத வரையில் இந்தத் திட்டத்தை நான்கு கோடி தமிழ் மக்களின் சார்பில் நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையும் திட்டத்திற்கான சம்மதம் தர முடியாது என்பதையும் திட்ட வட்டமாகக் கூறிக் கொள்கிறேன்."
இவ்வாறு நான் கூறியதின் விளைவாக 1970-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 17-ந் தேதி அன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் அவர்கள் தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று நான்காம் திட்டத்திலேயே சேலம் உருக்கு ஆலை துவக்கப்படும் என்று அறிவித்தார். அதே ஆண்டு செப்டம்பர் திங்கள் 16-ம் நாள் உருக்கு ஆலைக்கான அடிக்கல் நாட்டு விழா என் தலைமையில் நடைபெற்று பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. தொடர்ந்து உருக்காலைக்கான பணிகள் நிறைவேற்றப்பட்டன.
நில ஆர்ஜிதம் போன்றவைகள் விரைவு படுத்தப்பட்டன... ஆனால் கழக ஆட்சி 1976 ஜனவரியில் கலைக்கப்பட்ட பிறகு, உருக்கு ஆலைத் தொழிற்சாலை, உருட்டு ஆலைத் தொழிற்சாலையாக மெலிந்து போயிற்று.
