நெஞ்சுக்கு நீதி
ஐம்பெரும் முழக்கம் · 169 / 391
ஐம்பெரும் முழக்கம் நா மக்கல் கவிஞர், பரலி சு. நெல்லையப்பர், வீரவாஞ்சியின் உறவினர் ஆகியோர்க்கு அரசின் சார்பில் நிதியுதவி செய்தது போல தமிழ்நாடு பெயர் மாற்றப் போராட்டத்தில் ஈடுபட்டு காலவரையற்ற உண்ணாநோன்பு மேற்கொண்டு காமராஜர் ஆட்சிக் காலத்திலே உயிர்நீத்த விருதுநகர் தியாகி சங்கரலிங்க நாடார் அவர்களின் துணைவியார் செந்தியம்மாள் அவர்களுக்கு அரசின் சார்பில் மாதந்தோறும் 150 ரூபாய் வழங்கிட ஆணையொன்றும் 1970 பிப்ரவரி திங்களில் பிறப்பித்தேன்.
1970-பிப்ரவரி 3-ஆம் நாள் அண்ணா அவர்களின் முதலாண்டு நினைவு நாள்! அரசின் சார்பில் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து அன்று மாலை சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் அண்ணா அஞ்சல் தலை வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் இசைமணி சீர்காழி கோவிந்தராசன் அவர்கள் அண்ணா பற்றிப் பாடிய பாடல் விழா மண்டபத்தையே சோகக் கடலில் ஆழ்த்தியது. அஞ்சல்தலை தயாரிப்பதற்கேற்ற அண்ணாவின் புகைப்பட மொன்றை மத்தியில் உள்ளோர் கேட்டபோது, அந்த அஞ்சல் தலையில் தமிழும் இடம்பெற வேண்டுமென்பதற்காக, அந்தப் படத்துடன் "அண்ணாதுரை" என்ற அண்ணாவின் கையெழுத்தையும் இணைத்து ஒட்டி அனுப்பியிருந்தோம்.
இல்லாவிட்டால் அந்த அஞ்சல் தலையில் தமிழே தலைகாட்டியிருக்காது. ஆளுநர் உஜ்ஜல் சிங் அவர்கள் தலைமையில் மத்திய அமைச்சர் ஷெர்சிங் அவர்கள் வெளியிட அஞ்சல் தலையை நான் பெற்றுக் கொண்டேன். அப்போது என் கண்ணீரில் அந்த அஞ்சல் தலை நனைந்தது. அந்தக் கண்ணீர் அதே பிப்ரவரி திங்கள் திருச்சியில் நடைபெற்ற தி.மு. கழக மாநாட்டில் வெள்ளமாகப் பெருக்கெடுத்தது. அண்ணா இல்லாமல் நடைபெற்ற முதல் தி.மு.க. மாநாடு அதுதான்.
அந்த மாநாட்டில் பஞ்சாப் முதலமைச்சர் நெ.-15 குர்னாம்சிங் அவர்கள் கலந்து கொண்டு மாநில உரிமைகள் நிலை நாட்டப்பட அழுத்தமான கருத்துக்களை எடுத்துரைத்தார். அந்த மாநாட்டிலேதான் இறுதியாக நான் உரையாற்றிய போது கழகத்தின் ஐம்பெரும் முழக்கங்களை வெளியிட்டேன். 1. அண்ணா வழியில் அயராது உழைப்போம்; 2. ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம். 3. இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்; 4. வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்; 5.
மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி-ஆம்; 1970 பிப்ரவரி 22-ஆம் நாள் திருச்சியில் எழுப்பப்பட்ட அந்த ஒலி முழக்கம் தான் இன்றைக்கும் தி. மு. கழகத்தின் இதய கீதமாக இருந்து வருகிறது. நண்பர் அன்பில் அவர்கள்தான் மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவர். மாநாட்டுத் தலைவர் அண்ணன் சி. பி. சிற்றரசு. திறப்பாளர் கழகப் பொருளாளராக இருந்த நண்பர் எம். ஜி. ஆர். ஒரு மாநில மாநாட்டைப் போல விளங்கிய அந்த மாவட்ட மாநாட்டின் ஊர்வலச் சிறப்பு குறித்து முரசொலியில் தம்பி மாறன் எழுதிய ஒரு சொல்லோவியத்தை இங்கே நினைவூட்டுகிறேன்.
"ஒரு மாநில மாநாட்டை நடத்திவிட்டு மாவட்ட மாநாடு என்று அன்பிலார் பொய் கூறிவிட்டார். திருச்சி மாநாடு பலவிதங்களில் முக்கியத்துவம் பெற்றுத் திகழ்கிறது. அண்ணாவிற்குப் பிறகு கழக வரலாற்றில் திருச்சி மாநாடு ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும். பிற்பகல் நான்கு மணிக்கே திருச்சி நகரமே திரண்டு வந்து ஊர்வலப்பாதையில் இருமருங்கிலும் நிறைந்துவிட்டது. ஆம்; திருச்சி நகரமே மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது!
திருச்சி நண்பர்கள் நல்ல வேலை செய்தார்கள்! பகலில் ஊர்வலம் நடத்தி வெய்யிலின் கொடுமையில் நமது தோழர்களை வாட்டி வதைக்காமல் இரவு நேரத்து ஊர்வலமாகத் திட்டமிட்டு, அதற்கேற்ற வகையில் ஒவ்வொரு ரகத்திலும் ஒளிவிளக்குகள் ஏற்பாடு செய்திருந்தனர். சொற்பொழிவு-நாடகம்-கலை நிகழ்ச்சி - பத்திரிகை - சுவரொட்டி ஆகியவற்றை பலமான பிரச்சார ஆயுதங்களாக தி. மு. கழகம் பயன்படுத்தி வருவதுபோல உலகத்தில் எந்த அரசியல் கட்சியும் பயன்படுத்துவதில்லை என்று நமது இயக்கத்தைப் பற்றி ஆராய்ச்சி நடத்தும் ஒரு அமெரிக்க மாணவர் என்னிடம் குறிப்பிட்டார்!
அந்தப் பட்டியலிலே நாம் ஊர்வலத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஊர்வலக் கலையிலே நாம் வல்லவர்களாக இருப்பதால் தான் இந்தியாவிலேயே இதுவரை நடந்ததில்லை என்று கூறத்தகும் அளவிற்கு உலகத் தமிழ் மாநாட்டு ஊர்வலத்தை நடத்த முடிந்தது. ஊர்வலத்தை நேரில் கண்ட அப்போதைய குடியரசுத் தலைவர் திரு. ஜாகிர் உசேன், டெல்லி குடியரசு நாள் ஊர்வலத்திலே கூட இத்தகைய கலையழகு மிகுந்த பவனியைக் கண்டதில்லை என்றல்லவா நமது அண்ணனிடம் கூறினார்.
நினைவில்லையா உனக்கு நமது பழைய ஊர்வல வரலாறு! கல்லக்குடி போராட்ட சிறைவாசமேற்று கலைஞர் எழும்பூர் வந்திறங்கிய நேரம் அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்றது தலைநகரத்துவாசிகளிடையே ஒரு பரபரப்பை ஏற்படுத்தவில்லையா? விலைவாசி போராட்ட சிறைவாசம் முடித்து நமது அண்ணன் வேலூரிலிருந்து தலைநகரம் வந்த காலை, ஊர்வலத்தில் அண்ணன் வந்த பவனியை அப்போதைய சுதேசமித்திரன் வார ஏடு எப்படி வர்ணித்திருந்தது தெரியுமா? உலகெங்கும் வெற்றிகளைக் குவித்து ஜூலியஸ் சீசர்ரோம் நகரம் வந்தபோது அவருக்குத் தரப்பட்ட வரவேற்புக்கும், ஐரோப்பிய வெற்றிகளை ஈட்டி பாரீஸ் திரும்பியபோது நெப்போலியனுக்குத் தரப்பட்ட வரவேற்பிற்கும் அல்லவா அந்த ஏடு ஒப்பிட்டிருந்தது.
முதன்முதலில் மதுரை மாநாட்டு ஊர்வலத்தில்தான் பேருந்துகள் பயன்படுத்தப்பட்டன. அதைக் கண்டு மகிழ்ந்த அண்ணன் அதை அல்ஜீரிய விடுதலை வீரர்களின் அணி வகுப்பிற்கல்லவா ஒப்பிட்டார்! திருச்சி ஊர்வலம் அலங்கார ஒளிவிளக்கு ரதங்களால்-கிராமிய கலைநிகழ்ச்சிகளால் சிறப்புப் பெறுகிறது. எத்தனை விதமான அண்ணனின் திரு உருவங்களை ஏந்தி வந்தார்கள் தெரியுமா? அண்ணன் இருந்திருந்தால், அன்று மதுரை மாநாட்டு ஊர்வலத்தை அல்ஜீரிய அணிவகுப்பிற்கு ஒப்பிட்டவர் இந்த ஊர்வலத்திற்கு என்ன உவமை கூறிடுவார் என்று எண்ணத்தக்க விதத்திலே திருச்சியின் எழுச்சிமிகு ஊர்வலம் அமைந்திருந்தது!"
ஆனால் ஒன்று, அந்த எழிலும் எழுச்சியும் கொண்ட ஊர்வலத்தின் தொடக்கத்தில் நான் ஒரு பெரும் ஆபத்திலிருந்து தப்பிப் பிழைத்தேன். ஊர்வலத்தில் தலைவர்கள் அமர்வதற்காக அலங்கரிக்கப்பட்ட ரதம், திருச்சி சிந்தாமணியில் உள்ள அண்ணா சிலைக்குப் பின்புறமாக இருந்தது. அதில் நாங்கள் அமர்ந்திருந்தோம். ஊர்வலத்தின் முகப்பு கண்ணுக்கெட்டிய தொலைவு வரையில் தெரியவில்லை. ஊர்வலம் புறப்படுவதற்கு முன்பு அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க என்னை அன்பிலும், பராங்குசமும், எம்.
எஸ். மணியும், ராபியும் அழைத்துச் சென்றார்கள், சிலையையொட்டி வைக்கப்பட்டிருந்த ஏணிப்படிகளில் ஏறி, சிலையருகே நின்று கொண்டு மிகப்பெரிய மாலையொன்றை அண்ணா சிலையின் கழுத்தில் அணிவித்தேன். ஒரு இமைப் பொழுது நானே என்னைக் கீழே தள்ளிக் கொள்ளும் திடீர் முயற்சியில் ஈடுபடாமல் இருந்திருந்தால் அண்ணாவின் சிலையைக் கட்டித்தழுவியபடி பிணமாக ஆகியிருப்பேன். மாநாட்டை முன்னிட்டு அண்ணா சிலைக்கு மின் விளக்கு அலங்காரம் செய்திருந்தார்கள்.
மிக நுண்ணிய மின் கம்பிகள் அந்தச் சிலை மீதும், பீடத்திலும் சுற்றப்பட்டிருந்திருக்கின்றன. ஈரம் நிறைந்த மாலையை அணிவித்த மாத்திரத்தில் பயங்கரமான "ஷாக்" அடித்து என்னை மிக வேகமாக இழுத்திருக்கிறது. ஒருக்கணத்தில் நிலைமையைப் புரிந்து கொண்டதால் மல்லாந்தபடியே அந்தப் பீடத்திலிருந்து கீழே சாய்ந்தேன். ஏதோ ஆபத்து நடந்துவிட்டது என்ற திகிலோடு பராங்குசமும் குளித்தலை முத்துகிருஷ்ணனும் மற்ற நண்பர்களும் என்னை அப்படியே தாங்கிப் பிடித்துக் கொண்டார்கள்.
அந்த ஒரு கால் விநாடிக்கும் குறைவான நேரம் - நான் மட்டும் சமாளித்திருக்காவிட்டால் என் ஆருயிர் அண்ணனின் சிலையைக் கட்டிப்பிடித்தவாறே அமைதி அடைந்திருப்பேன்! என்ன செய்வது; அது மட்டும் அன்றைக்கு நடந்திருந்தால் என் வாழ்க்கையில் எத்தனை நண்பர்கள் எனக்குத் துரோகியானார்கள் என்ற கசப்பு மிகுந்த கணக்கே என் கவனத்திற்கு வந்திருக்காது - என் நெஞ்சத்தையும் கலக்கியிருக்காது! பழமைவாதிகள் கூற்றுப்படி சொல்ல வேண்டுமேயானால் பட வேண்டிய வேதனைகள் பல இருக்கும்போது-சுடு சொல்லாளர் விடுகணைகளை ஆயிரம் ஆயிரமெனத் தாங்க வேண்டுமென்று தலையில் எழுதியிருக்கும்போது-தமிழன் என்ற உணர்ச்சியற்ற தக்கை மனிதர்களின் தன்மானமிழந்த செயல்களைக்கண்டு குமுறியழ வேண்டுமென்று விதியிருக்கும்போது - அவ்வளவு சீக்கிரம் போய்விட முடியுமா என்ன?
அதற்கு மாறாக இப்படி நினைத்துப் பார்த்து ஆறுதல் கொள்கிறேன். அன்று மரணத்தின் வாயிலிருந்து மீண்ட காரணத்தினால்தான் என் உடன் பிறப்புக்களின் ஒத்துழைப்புடன் தமிழ்ச் சமுதாயத்திற்கு என்னாலியன்ற தொண்டாற்ற முடிந்தது என்பதுதான் அந்த ஆறுதல். அந்த இதய உணர்வோடு நான் சென்னையில் எனது பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டமொன்றில் கூறிய வாசகங்களை என்றைக்குமே மறக்க மாட்டேன். தமிழர்களே! தமிழர்களே! நீங்கள் என்னைக் கடலில் தூக்கி வீசினாலும் - அதில் கட்டுமரமாகத்தான் மிதப்பேன்.
அதில் ஏறி நீங்கள் சவாரி செய்யலாம். தமிழர்களே! தமிழர்களே! என்னை நீங்கள் நெருப்பில் தூக்கிப் போட்டாலும், அதிலே நான் விறகாகத்தான் விழுவேன்-அடுப்பெரித்து நீங்கள் சமைத்துச் சாப்பிடலாம்! தமிழர்களே! தமிழர்களே! நீங்கள் என்னைப் பாறையில் மோதினாலும் சிதறு தேங்காயாகத்தான் உடைவேன்; நீங்கள் என்னைப் பொறுக்கியெடுத்து தின்று மகிழலாம்! இந்த உணர்வின் வடிவமாக ஆகிவிட்ட நான் திருச்சி மாநாட்டில் நிறைவு உரை ஆற்ற எழுந்த போது என்றுமில்லாத அளவுக்கு என் நாடி நரம்புகள் எல்லாம் அதிர்ந்தன.
மேடையில் கழக முன்னணியினர் அனைவரும் இருந்தனர். பொருளாளர் எம். ஜி. ஆர் மட்டும் முதல் நாள் மாநாட்டுத் திறப்பு விழா உரையை நிகழ்த்திவிட்டு, அன்று காலையிலேயே விடைபெற்றுக் கொண்டு படப்பிடிப்புக்காக வெளியூர் சென்று விட்டார். அண்ணா இல்லாத முதல் மாநாடு என்று குறிப்பிட்டேனே; அந்த மாநாட்டில் நான் ஆற்றிய உரையின் முதல் பகுதியை நினைவூட்டித்தான் ஆகவேண்டும். கழகக் கண்மணிகளே! அருமைத் தாய்மார்களே! பெரியோர்களே!
"பேரறிஞர் அண்ணா அவர்களே"... என்று அழைத்துப் பேச்சைத் தொடங்கவேண்டிய நான்-இன்று அந்த அண்ணன் எங்கே? எங்கே? என்று தேடுகிற நிலைமையில் உங்கள் முன்னால் நின்றுகொண்டிருக்கிறேன். "தம்பி வா! தலைமையேற்க வா?" என்று அழைத்து ஆணையிட்டதும், கேட்டு ஓடிவந்த நாவலர் இங்கே அமர்ந்திருக்கிறார். அழைத்து ஆணையிட்ட நீ எங்கே போய்விட்டாய்? மதியழகனுக்கு எப்போதுமே பிடிவாதக் குணம் அதிகம்; ஆனாலும் தான் நினைத்ததைப் பேசி நம்மைக் கவர்ந்து தன் பக்கம் இழுக்கத் தவறமாட்டார் என்று அடிக்கடி புகழ்வீர்களே, அண்ணா!
அந்தப் பிடிவாதக்கார மதியழகன் இங்கே அமர்ந்திருக்கிறார். அவரைப் பிரிந்து எங்கே அண்ணா சென்றுவிட்டீர்கள்? சிற்றரசு பேசினால் நான் குலுங்கச் குலுங்கச் சிரித்து விடுகிறேனடா தம்பி! என்று சிரிப்பீர்களே அண்ணா, அந்தச் சிற்றரசு இங்கே எங்களைக் குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்தபோது அதை ரசிக்காமல் எங்கே போய்விட்டீர்கள் அண்ணா? பக்கத்தில் என். வி. என். அமர்ந்து, வெற்றிலை மடித்துத்தர, அதை வாங்கி வெற்றிச் சிரிப்போடு வாய் குழையக் குழையப் போட்டுக் கொள்வீர்களே, அண்ணா!
அந்த வெற்றிலை மடித்துத்தர இங்கே என். வி. என். இருக்கிறார். வெற்றிகளைத் தந்த எங்கள் அண்ணனே, நீ எங்கே போய்விட்டாய்? ஆழமாகச் சிந்திப்பதும்-அமைதியாக இருப்பதும்-ஆணித்தரமாக வாதிடுவதும் அன்பழகனின் இயல்பு எனப் பாராட்டுவீர்களே அண்ணா - அந்தப் பேராசிரியர் இங்குளார்; பெருமைமிகு அண்ணனே! நீ எங்கே போய்விட்டாய்? "என்ன முத்து? கோபமாக வருகிறாயா? உட்கார்!"
என்று புன்னகை தவழச் சொன்னதும், கோபத்தை எல்லாம் மறந்துவிட்- டுக் குளிர்ந்த முகத்தோடு எதிரே அமர்வாரே; அந்த மதுரை முத்து இந்த மாநாட்டிலே இருக்கிறார்; ஆனால் அவரைக் குளிரவைக்கும் அண்ணனே நீ எங்கே போய்விட்டாய்? "மன்னை, மன்னார்குடிக்கு வர வேண்டாமென்று கருணாநிதிதான் சொல்கிறான், என்மேல் குற்றமில்லையப்பா" என்று குறும்பு செய்வீர்களே, அந்தக் குறும்பைத் தாங்கிக் கொள்கிற மன்னை நாராயணசாமி இங்கே இருக்கிறார்.
அண்ணனே, எங்கே போய்விட்டாய்? "அன்பில்! எங்கே கொஞ்சம் கண்ணைக் காட்டு" என்று கண்ணைக் காட்டச் சொல்லி குமிழ்க் கண்களைப் பார்த்து ரசிப்பீர்களே. அந்தக் கண்ணைக் காட்ட நம்முடைய அன்பில் இங்கே இருக்கிறார். அண்ணனே, கண்மூடி நீ எங்கே போய்விட்டாய்? "சென்று வா தம்பி! வென்று வா தம்பி!"
என்று கல்லக்குடி போராட்டத்திற்கு சிதம்பரத்திலே என்னை வழியனுப்பி வைத்தீர்களே, அண்ணா! வென்று வந்திருக்கிறேன்; வென்று வா என்று சொன்ன நீங்கள் எங்கே போய்விட்டீர்கள்? எங்கே போய்விட்டீர்கள்? என்று கேட்டுத்தான் இந்த மாநாட்டிலே பேரறிஞர் அண்ணா அவர்களே என்று நான் அழைக்கிறேன். எனக்கு நம்பிக்கை உண்டு. இங்கேயிருக்கிற எங்களுக்கெல்லாம் நம்பிக்கை உண்டு. அண்ணா நீ இங்கேதானிருக்கிறாய். இந்தப் பேச்சை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறாய்.
இந்த ஆரவாரத்தைக் காண்கிறாய். இங்கே இருக்கின்ற உன்னுடைய அருமைத் தங்கைகளையெல்லாம் பார்க்கிறாய். தம்பிகளின் பட்டாளங்களைக் காண்கிறாய். மலர் போன்ற மழலைக் குழந்தைகளின் இதழ் ஓரத்தில் முத்தமிடுகிற அண்ணனே, நீ எங்கும் போகவில்லை. இங்கேதான் இருக்கிறாய்! இங்கேதான் இருக்கிறாய்! எங்களுடைய நெஞ்சங்களில்தான் இருக்கிறாய் அண்ணனே! இங்கேதான் இருக்கிறாய்! ஒவ்வொரு மாநாட்டிலும் கழகத்தினுடைய பொருளாளர் என்கிற முறையில் நான் கணக்குகளை எல்லாம் ஒப்படைக்க மாநாட்டு மேடைக்கு வர; எவ்வளவு வசூல் என்று அண்ணா கேட்க - சொல்ல முடியாது, அது "சஸ்பென்ஸ்" - என்று அவரிடத்தில் நான் சொல்ல - 'சும்மா சொல், நான் வெளியே சொல்லமாட்டேன்' என்று அவர் வேடிக்கைபேச-பக்கத்தில் இருக்கிற ப.
உ. சண்முகம் வசூலை அவரிடம் சொல்லிவிட - 'பார்த்தாயா, பார்த்தாயா. உன்னுடைய நண்பனே சொல்லிவிட்டான்' என்றெல்லாம் கேலி பேசுவாரே, அந்த அண்ணன் மேடையில் நின்று பேசுகின்ற அந்த எழில் ஓவியத்தைக் கண்டு கண்டுகளித்து வந்த நான் இன்றைய தினம் அந்த இடத்திலே நின்று பேசுவது என்றால் என்னுடைய உடல் எல்லாம் நடுங்குகிறது! என்னுடைய உள்ளமெல்லாம் குமுறுகிறது என் கண்கள் குளமாகின்றன! தாயை இழந்த நேரத்திலே - தந்தையை இழந்த நேரத்திலே எனக்கு ஏற்படாத கவலையை நான் கல்லறைக்குச் செல்கிறவரையில் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார் என்னுடைய அண்ணன்!
அண்ணாவிற்குப் பிறகு இந்தப் பெரிய பொறுப்பினை - என்னுடைய தோள்களிலே சுமத்தி வைத்திருக்கின்ற கழகத்தின் தங்கங்களே! உங்களையெல்லாம் நம்பித்தான் நான் இங்கே அமர்ந்திருக்கிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் எனக்கு அண்ணனாகத் தெரிகிறீர்கள். அண்ணன் ஒருவன் இருந்து எனக்கு வழங்க வேண்டிய ஆறுதலை- எனக்குத் தர வேண்டிய அறிவுரையை நான்கு கோடி தமிழ்ப் பெருங்குடி மக்களாகிய நீங்கள் எனக்குத் தந்து கொண்டிருக்கிறீர்கள்."
-இவ்வாறு கண்கள் நீர்வீழ்ச்சிகளாக மாறிட முன்னுரையை ஆரம்பித்து, தொடர்ந்து நான் ஆற்றிய நீண்ட உரையில் கழகத்தின் ஐம்பெ
ரும் முழக்கங்களுக்கு விளக்கமுரைத்தேன். மாநில சுயாட்சிக் கொள்கைக்கான தீப ஒளி திருச்சி மாநாட்டில் சுடர் விட்டுப் பிரகாசிக்கத் தொடங்கியது.
