நெஞ்சுக்கு நீதி
அர்ச்சகர் சட்டம் · 168 / 391
அர்ச்சகர் சட்டம் "அ றுவை சிகிச்சை வெற்றி-ஆனால் நோயாளி மரணம்" என்று விடுதலையில் ஒரு தலையங்கம் 1972-ஆம் ஆண்டு எழுதப்பட்டது. தலையங்கம் தீட்டியவர் இன்றைய திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர்-எனது இளவல்-தளபதி வீரமணி அவர்களாவார்கள். தந்தை பெரியார் அவர்களின் உள்ளக் குமுறலை அப்படியே படம் பிடித்து வெளியிடப்பட்ட தலையங்கம் அது! எக்காரணம் பற்றி அந்தத் தலையங்கம் தீட்டப்பட்டது என்பதை அறிந்துகொள்ள வேண்டாமா?
அறிந்து கொண்டால் தானே இந்த நாட்டில் "சமத்துவம்" என்பது வெறும் உதட்டலங்காரச் சொல்லாக உச்சரிக்கப்படுகிறது என்பதும், அந்த சமத்துவம் நிலைக்கச் சட்ட ரீதியான பாதுகாப்பை வழங்க முடியாமல் அரசியல் சட்டம் என்பது பொம்மலாட்டக்காரனின் கைப்பதுமையாக இருக்கிறது என்பதும் தெளிவாகப் புரிய முடியும். 1970-ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் பெரியார் அவர்கள் ஒரு கிளர்ச்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்தார்கள். ஆலயங்களில் கர்ப்பக் கிரகம் வரையில் சாதிப்பாகுபாடின்றி அனைவரும் சென்று ஆண்டவனைத் தொழுதிட வேண்டுமென்றும், அனைவர்க்கும் சாதி உயர்வு தாழ்வு இன்றி அர்ச்சகராகும் உரிமை வேண்டுமென்றும் வலியுறுத்துகிற அடிப்படையில் அந்தக் கிளர்ச்சி அமையுமென்று பெரியார் போர் முரசு கொட்டினார்.
அப்படியொரு கிளர்ச்சி நடத்தாமலே அவரது எண்ணத்தை நடைமுறைக்குக் கொண்டுவர சட்டம் இயற்றப்படும் என உறுதியளித்து, நான்; தந்தை பெரியார் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் அறிக்கை கொடுத்தேன். "குறிப்பிட்ட வகுப்பினர்தான் அர்ச்சகராக இருக்க வேண்டுமென்று யாரும் இந்த நூற்றாண்டில் வாதாடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. காலம் வேகமாகச் சுழன்று மனிதனுக்கு மனிதன் பிறப்பால் உயர்வு தாழ்வு கிடையாது என்ற கொள்கை வலுப்பெற்று வரும் இந்நாளில் அப்படிப்பட்ட ஒரு பிற்போக்கு எண்ணத்தை யாரும் முரட்டுப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருக்க மாட்டார்கள்.
வள்ளுவர், புத்தர், காந்தியடிகள் போன்றோரைப் போற்றுகிறவர்கள்; ஆண்டவனுக்கு அர்ச்சகராக குறிப்பிட்ட சாதியினர்தான் இருந்திடல் வேண்டுமெனல் அநியாயமாகும். அர்ச்சகர்களுக்கென சில தகுதிகள் இருக்க வேண்டும். போற்றக்கூடிய புனிதத் தன்மைகளை அவர்கள் கடைப்பிடித்தாக வேண்டும். அதற்குரிய பயிற்சிகளை அவர்கள் பெற்றாக வேண்டும். அதில் எனக்குக் கருத்து வேறுபாடில்லை. அப்படிப் பயிற்சி பெறுகிறவர்கள் எந்த வகுப்பினராயிருந்தாலும் அவர்கள் அதில் தேர்வு பெற்று அர்ச்சகராக ஆகலாம்.
அதற்கு விதிமுறைகள் வகுக்க அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது. அதே சமயம் பரம்பரை அர்ச்சகர் வீட்டுப் பிள்ளைகள் அர்ச்சகராக விரும்பினால் அவர்களுக்கு முதல் சலுகை அளிப்பது பற்றியும் அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது. இந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டு, அதன்படி அர்ச்சகர் பதவிகளைப் பிறப்பினால் கணக்கிடாமல் தகுதியொன்றினால் மட்டுமே கணக்கிடப்படக் கூடிய நாள் வந்து விடுமேயானால் ஆண்டவனைத் தொழுதிட ஆலயம் செல்வோர் சாதி வேறுபாடின்றி கர்ப்பக்கிரகம் வரையில் செல்வதற்கும் தடையில்லை என்பதும் கொள்கை ரீதியாக ஒப்புக்கொண்டதாக ஆகிவிடும் கர்ப்பக்கிரகத்தில் இருக்கின்ற பொருள்களின் பாதுகாப்புக்காக மட்டுமே அந்த இடம், ஒருவர் பொறுப்பில் விடப்பட வேண்டுமே தவிர, அதற்கு சாதி வர்ணம் பூசப்படக் கூடாது என்பதை இந்த அரசு மட்டுமல்ல; ஆண்டவன் எதிரே அனைவரும் சமம் என்ற கருத்தினை ஒப்புக்கொள்கிற எல்லோரும் ஏற்றுக்கொண்டே தீர்வர்.
ஆகவே, இந்த நல்ல நிலை ஏற்பட - ஆலயங்களில் ஆண்டவன் முன்னே சாதியின் பெயரால் மற்றவர்களுக்கு இழைக்கப்படும் இழிவான அநீதி அகன்றிட, விதி முறைகள் செய்திட அரசு முன்வருகிறது என்ற உறுதிமொழியினை ஏற்று பெரியார் அவர்கள், தான் திட்டமிட்டிருக்கிற கிளர்ச்சியினை நிறுத்தி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்."
இந்த எனது அறிக்கைக்கும் வேண்டுகோளுக்குமிணங்கப் பெரியார் அவர்கள், தான் நடத்த இருந்த போராட்டத்தைத் தள்ளி வைக்கச் சம்மதித்தார். அந்த உறுதிமொழிக்கேற்ப 2-12-70-ல் சட்டப் பேரவையில் "அர்ச்சகர் சட்டம்" கொண்டு வரப்பட்டு நிறைவேறியது. இந்து சமய அறக்கட்டளைத் திருத்த மசோதா என்ற பெயரால் விவாதிக்கப்பட்டு நிறைவேறிய அந்தச் சட்ட முன்வடிவை ஆதரித்துப் பேரவையில் காங்கிரஸ் கட்சித் துணைத்தலைவர் பொன்னப்ப நாடார் அவர்களும், மேலவையில் குன்றக்குடி அடிகளார் அவர்களும் பேசியது குறிப்பிடத்தக்கது மட்டுமல்ல; அந்தச் சட்ட முன்வடிவின் அறிமுகம் கண்டு ஐயத்திற்கு ஆளாகியிருந்த சிலருக்கு ஐயம் போக்கும் வகையிலும் அமைந்தது எனலாம்.
அர்ச்சகர் தேர்வில் வெற்றி பெறும் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்துப் பெருமகனும் கர்ப்பக் கிரகத்தில் நுழைந்து ஆண்டவனை பூஜை செய்யலாம்-என்ற உரிமையை வழங்கும் அந்தச் சட்டத்தைப் புரட்சிகரமான சட்டம் என சமத்துவம் விரும்பிடும் சான்றோர் அனைவரும் பாராட்டினர். ஆலயங்களில் நியமிக்கப்படும் அறங்காவலர்களில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஒருவரையும் நியமிக்க வேண்டுமென்பதை மரபாக மட்டுமே கொண்டிருந்த நிலையை மாற்றி, எந்த ஒரு ஆலயத்து அறங்காவலர் குழுவிலும் நிச்சயம் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் இடம் பெற்றாக வேண்டுமெனவும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
அர்ச்சகர் சட்டம் கண்டு, சமத்துவம் விரும்பாத சனாதனிகள் வெகுண்டார்கள். பல்லாண்டு காலமாக அனுபவித்து வருகிற ஆதிக்கத்தை அவ்வளவு எளிதில் இழந்திடச் சம்மதிப்பார்களா? அதனால் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். 12 ரிட்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அரசியல் சட்டத்தில் மத சம்பந்தமாக அளிக்கப்பட்டுள்ள உறுதிப்படி அர்ச்சகர்கள் தங்கள் தொழிலை நடத்தும் உரிமையை அந்தச் சட்டத்திருத்தம் தடுக்கிறது எனக்கூறி அந்த அடிப்படையில் "ரிட்" மனுக்கள் அளித்திருந்தனர்.
அந்த வழக்கில் 1972-ஆம் ஆண்டு மார்ச் 14-ஆம் நாள் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கோயில்களில் அர்ச்சகர்களை நியமிப்பது வகுப்பு வேறுபாடற்ற நடவடிக்கை. அந்த நடிவடிக்கைகளில் அரசாங்கம் தலையிட உரிமை உண்டு. மனுதாரர்களால் தவறு என்று கூறப்படும் இந்தச் சட்டம், மத சம்பந்தமான நடவடிக்கைகளிலோ விவகாரங்களிலோ தலையிடவில்லை. எனவே தமிழ்நாடு அரசு கொண்டுவந்த சட்டத்திருத்தம் செல்லுபடியானதே - என்று தீர்ப்பிலே கூறப்பட்டிருந்தபோதிலும், நடைமுறையில் இனிமேல் செய்யக்கூடிய காரியம் என்ற வகையில் அந்தச் சட்டத்தின்படி காரியங்கள் நடைமுறைக்கு வராத அளவுக்கு முடக்கப்பட்டுவிட்டது.
அது நடைமுறைக்கு வரவேண்டுமென்றால் அரசியல் சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வரப்படவேண்டும். இப்படியொரு தீர்ப்பு வந்ததைக் கண்டுதான், "விடுதலை" இதழில் "அறுவை சிகிச்சை வெற்றி-ஆனால் நோயாளி மரணம்!" என்ற தலைப்பில் தலையங்கம் வெளிவந்தது. எத்தனையோ முறை மத்திய அரசுக்கு எடுத்துக் கூறியும் மத்திய அமைச்சர்களிடத்தில் விவாதித்தும் கூட அந்த அரசியல் சட்டத் திருத்தப் பணி நடைபெறவே இல்லை. இது கண்டு கொதிப்படைந்த பெரியார் அவர்கள், 1973-ஆம் ஆண்டு டிசம்பர் 8, 9 ஆகிய நாட்களில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் நாடு தழுவிய ஒரு போராட்டத்தை நடத்துவதற்குத் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
ஆனால் அந்தப் போராட்டத்தை நடத்தாமலேயே 1973 ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் நாள் பெரியார் அவர்கள் மறைந்து விட்டார்கள். சென்னை அண்ணா மேம்பாலத்திற்கருகே 1977-ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி பெரியார் அவர்களின் சிலை திறப்பு விழா அ.தி.மு.க. சார்பாக நடைபெற்றபோது திராவிடர் கழகத்தின் சார்பில் அந்த விழாவில் கலந்துகொண்ட அன்னை மணியம்மையார் அவர்கள் முதலமைச்சரையும் வைத்துக்கொண்டு பேசும்போது, "அர்ச்சகர் சட்டம் முடமாக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி.
அதற்கென அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்கிற ஆவலை உள்ளத்தில் தேக்கி வைத்துக் கொண்டு, அதற்காக ஒரு போராட்டத்தையே நடத்த பெரியார் திட்டமிட்டிருந்தார். அதற்குள் மறைந்து விட்டார். முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் பெரியார் மறைந்த நேரத்தில் ஒன்றைக் குறிப்பிட்டார். பெரியாருடைய ஆசைகளை எல்லாம் எவ்வளவோ நிறைவேற்றினோம்; ஆனால் இந்த அர்ச்சகர் சட்டத்தை எழுந்து நடமாடவைக்க முடியவில்லை.
ஆகவே அவருடைய நெஞ்சில் ஒரு முள்ளோடுதான் புதைத்திருக்கிறோம் என்று சொன்னார். முதலமைச்சர் எம். ஜி. ஆர். அவர்களே, அரசியல் சட்டத்தைத் திருத்தி, அர்ச்சகர் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவர வழிவகை செய்யுங்கள்" என்று உருக்கத்துடன் கேட்டுக் கொண்டார்.
மணியம்மையார் அவர்கள் இவ்வாறு அந்த விழாவில் பெரியாரின் கடைசி ஆசையைப்பற்றித் தெரிவித்துப் பேசியதற்கு முதலமைச்சர் எம். ஜி. ஆர். அதே விழாவில் பதில் சொன்னார். "இங்கே பேசிய மணியம்மையார் எந்தச் சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அர்ச்சகராகலாம் என்று பெரியார் விரும்பினார்; அதை கருணாநிதி நிறைவேற்றினார் என்றார். நான் மறுத்துச் சொல்வதற்காக அம்மையார் கோபித்துக் கொள்ளக்கூடாது. கோயில்களையே வேண்டாம் என்ற பெரியார் அர்ச்சகராவது பற்றிப் பேசினாரா என்ற சந்தேகம் ஏற்படுகிறது" என்றார்.
"பெரியாரின் சிலையைத் திறந்து வைத்துவிட்டு பெரியாரைப் பற்றிப் பேசாமல் இவ்வளவு பெரிய பொய்யைச் சொல்லியிருக்கிறார்" என்று மணியம்மையார் அவர்கள் அது பற்றி பின்னர் ஒரு அறிக்கை மூலம் தெரிவித்தார். கோயில்கள் இருக்கும்வரையில்-அங்கு அர்ச்சனைகள் நடைபெறும் வரையில் அங்கே மனித சமூகத்தின் சமநீதி காக்கப்பட வேண்டுமென்பதுதான் பெரியாரின் கருத்து அதைக்கூடப் புரிந்து கொள்ளாமல் எம். ஜி. ஆர். அப்போது அப்படிக் கூறினார்.
1978-ஆம் ஆண்டு நடைபெற்ற பெரியார் அவர்களின் நூற்றாண்டு விழாவில் சென்னை கடற்கரையில் நான் பேசும்போது மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த ஜெகஜீவன்ராம் அவர்களையும் அந்த மேடையில் வைத்துக்கொண்டு மத்திய அரசுக்கு விடுத்த வேண்டுகோளில்- "பெரியாருக்கு எத்தனையோ விருப்பங்கள் உண்டு. சாதிபேதமற்ற சமுதாயம், மூட நம்பிக்கை ஒழிந்த சமுதாயம் இதையெல்லாம் காணவேண்டுமென்று பெரியார் ஆசைப்பட்டார் என்றாலும், அந்த ஆசைகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டன என்றாலும், இந்த ஆசை ஒன்றை நிறைவேற்ற முடியாமல் பெரியார் மறைந்துவிட்டார்.
ஆகவே மத்திய அரசுக்கு இந்த நூற்றாண்டு விழாவில் நான் இந்தப் பொதுக்கூட்டத்தின் மூலமாக இங்கே வெள்ளமெனத் திரண்டிருக்கின்ற உங்கள் சார்பாக விடுக்கின்ற வேண்டுகோள், அர்ச்சகர் சட்டம் நடைமுறைக்கு வர அரசியல் சட்டத்தைத் திருத்திக் கொடுங்கள் என்கிற வேண்டுகோள்" என்பதாகும். ஆனால் இந்த வேண்டுகோள் இன்றளவும் நிறைவேற்றப்படவில்லை.
