உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/இறைவனுக்குப் பிடித்த பணி!
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

இறைவனுக்குப் பிடித்த பணி! · 167 / 391

இறைவனுக்குப் பிடித்த பணி! கு மாரவேலன், குழந்தைவேலன், கஸ்தூரி ராஜ், முல்லை சத்தி ஆகிய நால்வருடன் நானுட்பட ஐந்து பேர் 1953-ஆம் பெயரை ஆண்டில் டால்மியாபுரம் புகைவண்டி நிலையத்தின் கல்லக்குடி என மாற்ற வேண்டுமென்று மாற்ற வேண்டுமென்று களம்சென்று ஆறுமாதக் கடுங்காவல் தண்டனை பெற்ற நிகழ்ச்சியை முதல் பாகத்தில் விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறேன். தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்து ரயிலை நிறுத்தியதற்காகத் திருச்சி சிறையில் ஆறுமாதக்கடுங்காவல் தண்டனையை அனுபவித்த எங்கள் ஐவரில் இப்போது நான் ஒருவன்தான் மிச்சமிருக்கிறேன்.

இடைப்பட்ட முப்பதாண்டு காலத்தில் மற்ற நால்வரையும் சாவு, தனது வாய்க்குள் போட்டுக்கொண்டு விட்டது. சிறைக்குள்ளேயே நோய்வாய்ப்பட்ட குமாரவேலன் விடுதலை பெற்ற சில நாட்களில் மறைந்து விட்டார். அவரைத் தொடர்ந்து குழந்தைவேலனும் பிரிந்துவிட்டார். முல்லை சத்தி என்னைக் கொழு கொம்பாக்கிக்கொண்டு என்மீது படர்ந்து நட்பு மணம் பரப்பிய இனிய தோழர்! வடஆற்காடு மாவட்டத்தில் வாணியம்பாடிக்கருகில் உள்ள முல்லைக்கொம்மை என்ற சிற்றூர் அவரது சொந்த ஊர் எனினும் சென்னையில் அச்சகத் தொழிலில் ஈடுபட்டு சென்னையிலேயே தங்கியிருந்தார்.

ஒரு நாள் பிற்பகல் அவர் இல்லத்திலிருந்து தொலைபேசிச் செய்தி வந்தது. வீட்டில் கலகலப்பாகப் பேசிக்கொண்டிருந்தவர், வெளியில் புறப்பட்டு படிகளில் இறங்கியபொழுது "அம்மா!" என்று நெஞ்சைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்தவர் தான்; டாக்டர்கள் வருவதற்குள் உடல் சில்லிட்டு விட்டது. அதைப்போலத்தான் மணப்பாறை கஸ்தூரி ராஜ் - பழனிக்குச் செல்ல வேண்டுமென்று குடும்பத்தார் வலியுறுத்தியிருக்கிறார்கள். ஏற்கனவே அவருக்கு நெஞ்சு வலி!

பழனி மலையில் ஏறுகிற மின்விசைச் சாதனத்தில் ஏகக் கூட்டம் - குடும்பத்தாரை அதில் ஏற்றி அனுப்பி விட்டு, அவர் அங்கே காத்திருக்க மனமின்றி, படிகளில் ஏறி மேலே சென்றிருக்கிறார். "அய்யோ, இந்த உடம்போடு படியேறியா வந்தீர்கள்?" என்று குடும்பத்தார் கேட்கும்போதே - படியில் சோர்ந்து உட்கார்ந்தார். சுருண்டுபோனார். இந்தச் சோக நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் என் நெஞ்சில் அவ்வப்போது சம்மட்டி அடிகளாகத்தான் விழுந்தன.

கல்லக்குடி தண்டவாளத்தில் நாங்கள் தலை வைத்துப்படுத்திருந்த போது வேகமாக விசில் ஊதிக்கொண்டு ரயில் புறப்பட்டதும்-நாங்கள் சற்றும் அசைவின்றி அதனை எதிர்நோக்கியதும் - பின்னர் சிறையில் ஒன்றாக இருந்ததும் - தி. மு. கழகத்தின் தியாக வரலாற்றில் ஒரு ஏடல்லவா? அந்த ஏட்டில் வைரமணிகளாக ஜொலிக்கும் வரிகள் அல்லவா முல்லை சத்தி, கஸ்தூரி ராஜ், குமாரவேலன், குழந்தைவேலன் என்ற பெயர்கள்! 1953-ல் அந்தப் போராட்டம் நடைபெற்ற பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு, 1969 இறுதியில் டால்மியாபுரம் ரயில் நிலையத்தின் பெயரை "கல்லக்குடி - பழங்காநத்தம்" என மாற்றுவதற்கான ஒப்புதலை அளித்து மத்திய உள்துறை அமைச்சர் சவான் அவர்கள் எனக்குக் கடிதம் எழுதினார்.

அந்தச் செய்தியைக் கேட்டு பெரியார் அவர்கள் பெரிதும் மகிழ்ந்து திருச்சியில் இருந்தவாறு எனக்கு வாழ்த்து அனுப்பியிருந்தார். ஒன்று நடைபெற்றுவிட்ட பிறகு அது எளிதான காரியமாகத் தோன்றுகிறது. ஆனால் அது நடைபெற எத்தனை முயற்சி - எத்தனை போராட்டம் - எத்தனை இழப்பு - இவற்றை யெல்லாம் எண்ணி பார்க்கும்போதுதான் கிடைத்த வெற்றியின் பெருமை தெரிகிறது! சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்று ஒரே வாக்கியத்தில் அண்ணா அவர்கள் கழக ஆட்சியில் சட்டப் பேரவையில் அறிவித்து விட்டார்.

ஆனால் அப்படியொரு நிலையைப் பக்குவமாக உருவாக்க பெரியார் தலைமையில் அண்ணா உள்ளிட்ட அனைவரும் எத்தனை ஆண்டுக் காலம் எவ்வளவு எதிர்ப்புக்கிடையே பட்டி தொட்டிகளில் எல்லாம் பகைவர்களின் கத்தி கட்டாரிகளுக்கு நடுவில் நின்று பணியாற்றிட வேண்டியிருந்தது! சென்னை ராஜ்யம் என்ற பெயரை "தமிழ்நாடு" என்று மாற்றி அண்ணா அவர்கள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியபோது அது ஒரு துளி மையினால் செய்யப்பட்ட சாதாரண காரியமாகத்தான் பலருக்குப் பட்டது!

ஆனால், அதற்- காகக் கழகத்தினர் கண்ட களங்கள் எத்தனை - எத்தனை! விருதுநகரில் சங்கரலிங்கனார் என்ற பெரியவர் அந்தக் கோரிக்கைக்காகத் தனது உயிரையே உண்ணா நோன்பின் வாயிலாக விலையாகத் தரவில்லையா? இனிமேல் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் இருமொழித் திட்டம்தான் - இந்திக்கு இடமில்லை என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் அண்ணா அவர்கள் முழங்கியது இன்னமும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது! ஒரு உத்திரவுதானே; அது என்ன பெரிய காரியம் என்று சில மேதாவிலாசங்கள் அலட்சியமாகப் பேசக்கூடும்.

ஆனால் அந்த ஒரு உத்திரவுக்காக - 1938 - ஆம் ஆண்டு முதல் இந்தத் தமிழகத்தில் கொட்டப்பட்ட குருதி எவ்வளவு? சிறைச்சாலையில் சித்ரவதைக்காளானோர் எத்தனை பேர்! தீக்குளித்துச் செத்த தியாக மணிவிளக்குகளை மறக்க முடியுமா? அடுக்கப்பட்ட பிணங்கள்; அம்மவோ-அவலம்! அவலம்! முப்பதாண்டு காலத் தொடர் போராட்டம்! 1965-ல் மொழிப் புரட்சி! அதற்குப் பிறகு முகிழ்த்ததல்லவோ இருமொழித் திட்டம் - இந்தித் திணிப்பை விரட்டும் திட்டம்!

எனது ஆட்சிக் காலத்தில் விவசாயத் தொழிலாளர்கள் குடியிருந்த மனைகளை அவர்களுக்கே சொந்தமாக்கும் குடியிருப்பு மனைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதனால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பல லட்சம் விவசாயத் தொழிலாளர்கள் பலன் பெற்றனர். அந்தச் சட்டத்தை ஆதரித்துத் திருத்துறைப்பூண்டியில் ஒரு விழாவில் பேசிய கம்யூனிஸ்டுக் கட்சிப் பெருந்தலைவர்களில் ஒருவரான மணலி கந்தசாமி அவர்கள்; "இந்தச் சட்டத்தை முதல்வர் கருணாநிதி இன்றைக்கு ஒரு துளி 'இங்க்' செலவில் பிரகடனப் படுத்திவிட்டார்.

லட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளிகள் இன்றிரவு தங்களது சொந்த வீட்டில் படுக்கிறோம் என்ற ஆனந்த உணர்வோடு படுப்பார்கள்! இதற்காக விவசாயத் தொழிலாளர் வர்க்கம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சிந்திய ரத்தத்துளிகள் கொஞ்சமல்ல" என்று உணர்ச்சி வசப்பட்டுக் குறிப்பிட்டார்.

அப்படித்தான் மத்திய அமைச்சர் சவான் அவர்கள், ஒரு கடிதமூலம் "கல்லக்குடி" பெயருக்கான ஒப்புதலைத் தந்து விட்டார். ஆனால், அதற்காக அமைக்கப்பட்ட களம், நடைபெற்ற துப்பாக்கிச் சூடு, விழுந்த பிணங்கள், அன்பில் மீதும், கண்ணதாசன் மீதும் ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கு-அந்தத் தியாக வரலாற்றின் தொடர்ச்சிதான் அந்த வெற்றி என்பதை மறந்துவிட முடியுமா? களங் கண்ட சரித்திரங்கள், கனவாய்ப் பழங் கதையாய்ப் போய் - தியாகங்களைக் காலில் போட்டு மிதிக்கும் ஒரு இருண்ட காலத்திலே இன்றைக்குத் தமிழ் நாடு இருக்கும்போது இந்தக் குறிப்புகளை எழுதுகிறேன்.

அன்று 1970-ஆம் ஆண்டு கல்லக்குடி பெயர் மாற்றம் கிடைத்தமைக்காகத் தமிழகமே விழாக்கோலம் பூண்டது பொதுச் செயலாளர் நாவலர் அவர்களின் வேண்டுகோள் அறிக்கைக்கிணங்க மாநில முழுதும் வெற்றி விழாக் கூட்டங்கள் நடைபெற்றன. அன்று சென்னையில் நடைபெற்ற அந்த விழாவில் இன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் பேசியது இதோ: "அண்ணா இட்ட கட்டளையை ஏற்று அன்று கலைஞர் தண்டவாளத்திலே படுத்தபோது ரயிலில் அடிபட்டு இறந்து விடுவோமே என்றோ, நமக்குப்பிறகு நமது குடும்பம் ஆதரவற்ற நிலையில் தவிக்க நேரிடுமே என்றோ, கிஞ்சித்தும் சிந்தித்துப் பாராமல் ஒரே சிந்தனையுடன் இருந்தார்.

அவர் உள்ளத்திலிருந்து ஒலித்த குரல் எல்லாம்; தமிழ், தமிழகம், அண்ணா என்பவைதான். கலைஞர் போராட்டத்திற்குப் புறப்பட்டபோது "சென்று வா" என்று அண்ணா கூறினார். தனக்குப் பிறகு கலைஞர் வரவேண்டும் என்று அண்ணா விரும்பியதால்தான் "சென்று வா" என்று கூறினார்."

சென்னைக்கு அடுத்து பெரியதோர் விழாவை நண்பர் அன்பில் அவர்கள் கல்லக்குடியிலேயே ஏற்பாடு செய்தார். விழாவுக்கு முன்னர் நானும் நண்பர்களும் கல்லக்குடி ரயில் நிலையம் சென்று 1953-ல் போராட்டம் நடைபெற்ற இடங்களை யெல்லாம் பார்வையிட்டுப் பழைய நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்தோம். விழாவில் கலந்துகொண்டு வாழ்த்திய சிலம்புச் செல்வர் ம. பொ. சி. அவர்கள், "கல்லக்குடி கொண்டான்" என்ற பட்டயத்தை எனக்கு வழங்கியதோடு விரைவில் "சுயாட்சி கொண்டான்" என்ற விருதையும் பெறவேண்டும்-அந்த விருதையும் தனது கையாலேயே கொடுக்கவேண்டும் என்று மிக்கப் பரவசத்தோடு கூறினார்.

அந்த விழாவினையொட்டி "கல்லக்குடி பழங்காநத்தம்" என்ற பெயர் பலகையைத் திறந்து வைத்தேன். இன்றைக்கும் அந்த வழியாக ரயிலிலோ, காரிலோ செல்லும் போது - என் தலைமையில் நடைபெற்ற அறப்போராட்ட ஊர்வலம் ரயிலடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகம் - நடராசன், கேசவன் என்ற இரு இளைஞர்களின் நெஞ்சாங்குழியில் துப்பாக்கி ரவைகள் பாய்ந்து அவர்கள் மாண்டு மடிந்த சம்பவம் - அனைத்துமே என் இதயத்திரையில் நிழலாடத் தொடங்கி விடும்.

கல்லக்குடி வெற்றிச் செய்தி கிட்டிய காலகட்டத்திலே தான் எல்லைக் காந்தி என அழைக்கப்படும் கான் அப்துல் கபார்கான் அவர்கள் தமிழகத்திற்கு வருகை தந்தார். அவரது பொதுப்பணிக்காக இந்தியாவில் நிதி திரட்ட வந்த அவரை சென்னை மாநகராட்சி மன்றச் சார்பாக வரவேற்றோம். ஒரு லட்ச ரூபாய் நிதியும் அவருக்கு வழங்கப்பட்டது. இந்தியா - பாகிஸ்தான் இரண்டாகப் பிரிக்கப்படுவதற்கு முன், எல்லைக் காந்தி அவர்கள், தமது இயக்கத்தைத் தொண்டர்களின் இயக்கமாக நடத்திக் கொண்டிருந்தார்.

அவரது இளமைக்கால பொதுப்பணியின் தீவிரத்தைக் கண்ட ஒரு போலீஸ் அதிகாரி, அவரை அடக்கிவைக்குமாறு அவரது தந்தையிடம் கூறி மிரட்டினாராம். உடனே தந்தை, கபார்கானை அழைத்து, "நீ மட்டுந்தானா பொதுத்தொண்டாற்ற வேண்டும்? மற்றவர்களுக்கில்லாத அக்கறை உனக்கு ஏன்?"

என்று கடிந்து கொண்டாராம். "அருமைத் தந்தையே! நீங்கள் ஏன் தொழுகை நடத்துகிறீர்கள்? மற்றவர்களுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு அதில் எதற்காக?" என்று கபார்கான் கேட்டாராம். "அது எனது கடமை! விட முடியாத கடமை! முக்கிய கடமை" என்றாராம் தந்தை!

"அதைப்போலவே, நானும் பொதுத் தொண்டை, விடமுடியாத கடமையாகக் கருதுகிறேன்" என்று விடையளித்தாராம் கபார்கான்! அவர்தான் எளிய வாழ்க்கையின் இனிய வடிவாய்த் திகழும் எல்லைக் காந்தியானார். அண்ணா காலத்தில் தொடங்கப்பட்டிருந்த, சீரணி போன்ற அமைப்புகளையும், கழக ஆட்சியில் ஏழை எளியோருக்காக நடத்தப்பட்ட சாதனைகளையும், எல்லைக் காந்தி அவர்கள் பாராட்டிப் பேசியதோடு, என்னையும் அழைத்து மகிழ்ச்சியுடன் உறவாடி, "இறைவனுக்குப் பிடித்த பணியைச் செய்து வருகிறீர்கள்" என்று புகழ்ந்துரைத்தார்.