உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/நற்பணியாற்றிய நான்கு குழுக்கள்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

நற்பணியாற்றிய நான்கு குழுக்கள் · 166 / 391

நற்பணியாற்றிய நான்கு குழுக்கள் கா ஷ்மீர் என்று நினைத்தவுடன் இயற்கையின் எழில்மிகு புன்னகையும், வான்தொடுமலைகளும், வண்ணப்படகுகளும் சுற்றுப் பயணிகளுக்குக் காட்சி தரக் கூடும். என்னைப் போன்ற அரசியல்வாதிகளுக்குக் காஷ்மீரத்துச் சிங்கம் ஷேக் அப்துல்லாவின் நினைவே மேலோங்கும். மாநிலங்களுக்கு முழுமையான சுயாட்சி வேண்டுமென்ற குரலுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்தவராக அவர் விளங்கினார். காஷ்மீருக்குத் தனித்த அந்தஸ்து வேண்டுமென்பதற்காக அவர் வாழ்நாளில் பெரும் பகுதியைப் போராட்டத்தில் கழித்தார்.

போர்ப்புலியாகத் திகழ்ந்த அவர், பல ஆண்டுக் காலம் கைதியாக இருந்தபோது - அவற்றில் ஓரிரு ஆண்டுகள் தமிழ்நாட்டில் கொடைக்கானலில் வீட்டுக் காவலிலும் வைக்கப்பட்டிருந்தார். இறுதியாக இந்திய அரசுடன் ஒரு உடன்பாட்டுக்கு வந்து, காஷ்மீர் மாநில ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள அவர் சம்மதித்தபோது, பொறுப்பு ஏற்பதற்கு முன்பே என்னைச் சந்திக்க வேண்டுமென்று தகவல் கொடுத்தார். நானும் அவரது வருகையை விரும்பியேற்று உடனே பதில் அனுப்பினேன்.

குறிப்பிட்டபடி 1975 பிப்ரவரி 12-ஆம் நாள் அன்று சென்னைக்கு வந்து என் இல்லத்தில் காலை சிற்றுண்டி அருந்தினார். மாநில சுயாட்சி முழுமையான வெற்றி காணவும், மத்தியில் இருக்கும் அதிகாரக் குவிப்பு, குறைக்கப்படவும் இன்னும் நாம் பல துன்ப துயரங்களை ஏற்று தியாகங்கள் செய்யவேண்டியிருக்கிறது என அவர் உருக்கத்தோடு குறிப்பிட்டது இன்னமும் என் நெஞ்சில் பசுமையாகப் பதிந்தே இருக்கிறது. "நீண்ட காலப் போராட்டத்திற்குப் பிறகு காஷ்மீர் மாநில ஆட்சிப் பொறுப்பை ஏற்பதால் மாநில சுயாட்சிக் கொள்கையை விட்டு விட்டதாகக் கருத வேண்டாம்" என்ற உறுதிப்பாட்டை அறிவிப்பதற்காகவே என்னைச் சந்திக்க வந்ததாக அவர் சொன்னபோது அவரது கொள்கைப் பற்று தலைதூக்கி நின்றதை என்னால் உணர முடிந்தது.

அவர் ஆட்சிப் பொறுப்பேற்றபோது நான் இங்கு ஆட்சியில் இருந்தேன். அவர் 1982-ஆம் ஆண்டு மறைந்தபோது நான் எதிர்க்கட்சித் தலைவராகச் சட்டப் பேரவையில் வீற்றிருந்தேன். அவரது மறைவு குறித்த இரங்கல் தீர்மானத்தில் நான் பேசியபோது "தமிழகத்தில் ஷேக் அப்துல்லா காவலில் வைக்கப்பட்டிருந்த கொடைக்கானல் கோகினூர் மாளிகைக்கு ஷேக் அப்துல்லா நினைவு மாளிகை எனப் பெயரிட வேண்டு" மென வலியுறுத்திக் குறிப்பிட்டேன். இன்று அவரது மகன் பரூக் அப்துல்லா காஷ்மீரத்து முதலமைச்சர்!

அவர் தந்தையின் வழி நின்று மாநில சுயாட்சிக்காகக் குரல் கொடுக்கிறார். அதற்கென அவரே முன்னின்று காஷ்மீர் - ஸ்ரீநகரில் ஒரு மாநாட்டைக் கூட்டினார். எனக்கும் அழைப்பு அனுப்பியிருந்தார். நான் அந்த மாநாட்டில் கலந்து கொள்வதாக இருந்தேன். திடீரென ஏற்பட்ட உடல் நலிவின் காரணமாக - எனது பயணம் ரத்து செய்யப்பட்டு, கழகத்தின் சார்பில் கழகப் பொருளாளர் சாதிக் அவர்களும், நாடாளுமன்ற மக்களவைக் கழகக் குழுத்தலைவர் சி.

டி. தண்டபாணி அவர்களும் அந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். காஷ்மீரில் - ஸ்ரீநகர் மாநாட்டில் விவாதிக்கப்பட்ட மத்திய - மாநில உறவு பற்றிய கருத்துக்களைத் திராவிட முன்னேற்றக் கழகம் நீண்ட காலமாகச் சொல்லி வருகிறது. மத்தியிலே கூட்டாட்சியும் மாநிலத்தில் சுயாட்சியும் என்று பொதுவாகச் சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும் போதாதென்று - மத்தியில் உள்ள அதிகாரங்கள் எவையெவை மாநிலங்களுக்கு மாற்றப்பட வேண்டும்; எவையெவை நீக்கப்பட வேண்டும் என்பன போன்ற விரிவான விபரங்களை ஆராய்ந்து அறிக்கை தருவதற்காக 1969-ல் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜமன்னார் தலைமையில் சென்னைப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் ஏ.

லட்சுமணசாமி முதலியார் அவர்களையும், உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்திரா ரெட்டி அவர்களையும் உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு குழு கழக அரசினால் அமைக்கப்பட்டது. அந்தக் குழு வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் முரசொலி மாறன், இரா. செழியன் குழுவினர் கருத்துக்களையும் இணைத்து - அதன் பின்னர் அரசின் சார்பில் அமைச்சரவையில் விவாதித்து 1974-ஆம் ஆண்டு ஏப்ரல் 20-ஆம் நாள் சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நெ.-14 மத்திய - மாநில உறவுகள் எப்படி அமைந்திட வேண்டும் என விவாதித்து, மாநில சுயாட்சிக்கான ஆக்கபூர்வமான தீர்மானமொன்றை இந்தியாவிலேயே முதன் முதலாகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றிய சிறப்பு தி. மு. கழக ஆட்சிக்கே உரியது. அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சிறப்பு மிக்க தீர்மானத்தை முன் மொழிந்த போது, "மக்களின் நல்வாழ்வை மையமாகக் கொண்டும், பெற்ற சுதந்திரத்தின் பயனை நாடு அனுபவிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை நெஞ்சில் பதித்துக்கொண்டும் இந்திய அரசியல் அரங்கில் தமிழ்நாடு அரசின் சார்பில் நாம் ஏற்றி வைக்கும் இந்தச் சுடர்விளக்கு ஒளிவிட அரசியல் மேதைகள் தூண்டுகோலாக இருக்க வேண்டுமென்று பணிவன்புடன் கோருகிறேன்" என, நான் விடுத்த அந்த வேண்டுகோள் வீண் போகவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாகத் தான் பெங்களூரிலும், காஷ்மீரிலும் நடைபெற்ற மாநாடுகள் அமைந்தன.

தமிழக சட்டப் பேரவையில் மாநில சுயாட்சித் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 1974-ஆம் ஆண்டுக்கும் - பெங்களூர், காஷ்மீர் நகரங்களில் மாநில சுயாட்சிக் கொள்கையை வலியுறுத்திடும் மாநாடுகள் நடைபெற்றுள்ள 1983-ஆம் ஆண்டுக்கும் இடையே ஒன்பது ஆண்டுகள் ஓடிவிட்டன என்றாலும்; மத்தியில் அளவுக்குமீறி குவிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டு மாநிலங்கள் சுயாட்சி பெற்று மத்தியில் உண்மையான கூட்டாட்சி அமைப்பு உருவாக வேண்டுமென்ற முனைப்பான கருத்து பட்டுப் போய் விடவில்லை! மத்திய அரசு பலமுள்ளதாக இருக்கவேண்டும் என்ற பலவீனமான வாதத்தை வைத்துக் கொண்டே மாநிலங்களின் உரிமைக் குரலை ஒடுக்கிவிட முடியாது!

மாநிலங்கள் வலுவுள்ளவைகளாக இருந்தால் மட்டுமே மத்திய அரசும் வலுவுள்ளதாக இருந்திட இயலும்! இதுவரையில் எல்லையற்ற அதிகாரங்களை வைத்துக்கொண்டு முப்பத்தைந்து ஆண்டு காலத்தில் இந்தச் சுதந்திர இந்தியாவில் மத்தியப் பேரரசு பணக்காரர்களுக்கான சொர்க்கத்தையும், ஏழைகளின் நரகத்தையும் உலகத்திற்குக் காட்சியாக்கியதைத் தவிர உருப்படியாகச் செய்தது என்ன? இந்தக் கேள்விக்குக் கிடைத்த பதிலாகத்தான்; மக்களைக் காப்பாற்ற மாநிலங்களுக்கு அதிகாரமும், மண்ணைக் காப்பாற்ற மத்திய அரசுக்கு அதிகாரமும் தேவையான அளவுக்குப் பகிர்ந்திடப்படுமானால், வளமான மாநிலங்களும் வலுவான மத்திய அரசும் உருவாக வழியேற்படும் என்ற கருத்து அரசியல் அரங்கில் செல்வாக்குப் பெறத் தொடங்கியது.

ராஜமன்னார் குழுவின் அறிக்கையும், அதன் அடிப்படையில் தமிழக தி. மு. கழக அரசு நிறைவேற்றிய தீர்மான விபரங்களும் தமிழிலும், ஆங்கிலத்திலும் நூல் வடிவங் கொண்டு வெளிவந்திருந்தன. அந்தக் கருத்துக்களை மையமாகக் கொண்டே பெங்களூரில் கர்நாடக முதல்வர் ஹெக்டே (ஜனதா கட்சி) அவர்கள் கூட்டிய தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் (1983-ல்) மத்திய-மாநில உறவுகள் பற்றிய ஒரு அறிக்கை தயாரிக்கப்பட்டது. அடுத்து காஷ்மீர் முதல்வர் பரூக் அவர்கள் கூட்டிய மாநாட்டில் ஆந்திர முதல்வர் ராமராவ் அவர்களும், மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு அவர்களும், மாநில சுயாட்சிக் கருத்துக்கு ஒத்துவரும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

அவர்களில் பெரும்பாலோர் ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகளையும், தி. மு. கழக அரசின் தீர்மானக் கருத்துரைகளையும் வெகுவாகப் பாராட்டினர் என்று; அந்த மாநாட்டிற்குச் சென்றிருந்த கழகப் பிரதிநிதிகள் நண்பர் சாதிக் பாட்சாவும், நண்பர் தண்டபாணியும் என்னிடம் தெரிவித்து மகிழ்ந்தனர். 1974-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் மாநில சுயாட்சித் தீர்மானம் வந்தபோது எதிர்வரிசையில் அமர்ந்திருந்த அ.தி.மு.க. கட்சி உறுப்பினர்கள் ராஜமன்னார் குழு அறிக்கையை எவ்வளவு கேவலமாக விமர்சித்தனர் என்பது என் நினைவுக்கு வந்தது.

மாநில சுயாட்சி தத்துவம் தேவையான ஒன்று என திட்டவட்டமாகத் தெரிவித்த அண்ணா அவர்களின் பெயரால் கட்சியை வைத்துக் கொண்ட அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், "ராஜமன்னார் குழுவின் இந்த அறிக்கை, சட்டமன்ற உறுப்பினர்கள் படிப்பதற்குத் தகுதியுடைய புத்தகமல்ல-பள்ளி மாணவன்கூடப் பயன்படுத்த இதில் எவ்வித கருத்துமில்லை-இது, குப்பைக் கூடையில் தூக்கி எறியப்பட வேண்டிய அறிக்கை" என்று அவையிலேயே இழித்துரைத்தனர்.

இன்றைக்கு அந்த அறிக்கையில் அரசியல் சட்டத்தின் இன்ன பிரிவைப் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது எனத் தேடிப் பார்த்துத் தெளிவு பெறுகிற அளவுக்கு அரசியல் மேதைகள் ஆர்வங் காட்டுகிறார்கள் என்கிறபோது, அந்த அரிய பணிக்கு வித்திட்டவன் என்ற முறையில் மகிழ்ச்சியில் திளைப்பது இயற்கைதானே! 1969-ல் ராஜமன்னார் குழு மட்டுமல்லாமல் அரசின் சார்பில் வேறு குழுக்களும் வெவ்வேறு பணிகளுக்காக அமைக்கப்பட்டன. தமிழக அரசில் பணியாற்றக்கூடிய ஏழு லட்சத்தை எட்டிப் பிடிக்கும் எண்ணிக்கை கொண்ட அரசு அலுவலர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இரண்டாவது ஊதியக் குழு அமைக்கப்பட்டது.

இனி ஒவ்வொரு ஆண்டும் ஆண்டும் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ஆம் நாளன்று தமிழகக் காவல்துறையினருக்கு வீர விருதுகள், பண முடிப்புகள், பதக்கங்கள் அளிக்கப்படுமென்றும் அறிவித்ததோடு இந்தியாவிலேயே முதன் முதலாக "காவல் துறை கமிஷன்" ஒன்றையும் நியமிப்பதாக அறிவித்தேன். அதன்படி, ஓய்வு பெற்ற ஐ.சி.எஸ். அதிகாரியான ஆர். ஏ.கோபால்சாமி அய்யங்கார் தலைமையில் அட்வகேட் ஜெனரல் கோவிந்த சாமிநாதன், துணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் என்.

கிருஷ்ணசாமி, சிலம்புச்செல்வர் ம. பொ. சி ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களைப் பேணுவதற்காகவும், கடந்த காலத்தில் அவர்கள் பெற்ற வசதி வாய்ப்புகளைப் பரிசீலித்து மேலும் முன்னேற்றமடையச் செய்வதற்காகவும், பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு ஒன்றும் அரசின் சார்பில் அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் தலைவர் ஏ. என். சட்ட நாதன் உறுப்பினர்கள் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகளான சின்னப்பன், ஜமால் உசேன் ஆகியோர்!

அரசு அலுவலர் இரண்டாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை ஏற்று அரசு எடுத்த முடிவுகளை அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றுப் பாராட்டினர். அகவிலைப்படியை ஊதியத்துடன் இணைக்க வேண்டுமென்ற நீண்ட காலக் கோரிக்கையை ஊதியக் குழு ஏற்று, அதனை அரசும் அறிவித்தது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு, அலுவலர் ஊதிய உயர்வு பெற்றனர். அரசு அலுவலர்களின் பல்லாண்டு கால வேண்டுகோளாக இருந்து வந்த ரகசியக் குறிப்பேட்டு முறை ஒழிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று அறிவிப்பு செய்ததையொட்டி தந்தை பெரியார் தலைமையில் அரசு அலுவலர்கள் எனக்கு ஒரு சிறப்பான பாராட்டு விழாவே நடத்தினர்.

இந்தியாவிலேயே முதன் முதலாக; பணியில் இருக்கும்போது அரசு ஊழியர்கள் இறந்துவிட்டால் உடனடியாக அவர்கள் குடும்பத்திற்கு பத்தாயிரம் ரூபாய் உதவி நிதி வழங்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டது. காவல்துறைக் குழுவின் பரிந்துரைகளை ஏற்று முதல்நிலைக் காவலர் தகுதியில் ஆயிரம் பேருக்கு முதற் கட்டமாக வேலை தரப்பட்டது. 1967-ல் காவலர்களின் ஊதியம் 129 ரூபாயாக இருந்தது 165 ரூபாயாகவும், தலைமைக் காவலர்களுக்கு 166 ரூபாயிலிருந்து 225 ரூபாயாகவும், சப் - இன்ஸ்பெக்டர்களுக்கு 140 ரூபாயிலிருந்து 300 ரூபாயாகவும், இன்ஸ்பெக்டர்களுக்கு 225 ரூபாயிலிருந்து 425 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது.

இவையன்னியில் பெரும்பாலான பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டன. பிற்படுத்தப்பட்டோர் குழுவின் பரிந்துரை அடிப்படையில்; அவர்களுக்கு அரசுப்பணிகள், கல்லூரிகள் ஆகியவற்றில் 25 சதவிகித இட ஒதுக்கீடு இருந்ததை 31 சதவிகிதமாக உயர்த்தியும் - தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 16 சதவிகித இட ஒதுக்கீடு இருந்ததை 18 சதவிகிதமாக உயர்த்தியும் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. நீண்ட நாட்களாகக் கோரிக்கை எழுப்பி வந்த உருது பேசும் முஸ்லீம்களும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டதும், கொங்கு வேளாளரும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டதும் கழக ஆட்சிக் காலத்திலே தான்!