உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/பஞ்சாப் பயணம்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

பஞ்சாப் பயணம் · 165 / 391

பஞ்சாப் பயணம் "தொ ழில்கள் தழைக்கட்டும், தொழிலாளர் செழிக்கட்டும் என்பதே கழக அரசின் முழக்கமாகும். தொழில் துறையில் அமைதி நிலவச் செய்வதற்குக் கருணாநிதி அரசில் முதலிடம் தரப்படுகிறது. இந்த முயற்சியின் வெற்றி, புள்ளி விவரத்தைப் பார்க்கும் போது தெளிவாகத் தெரியும். தொழில் துறையில் அமைதி நிலவினால்தான் புதிய தொழில்கள் துவங்கப்படும் என்பதை உணரும் ஆற்றல் படைத்தவராக அவர் இருந்ததால் மாநிலத்துக்குள்ளும், வெளியிலும் தொடர்பு கொண்டு புதுத் தொழில்களைத் தொடங்குகின்ற முயற்சியில் ஈடுபட்டார்.

தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இப்போதுதான் முதன்முறையாக தொழிலாளர் நலத்திற்கென்று ஒரு தனி அமைச்சர் நியமிக்கப்பட்டிருக்கிறார். தீரமுடனும், வருமுன் காக்கும் உணர்வுடனும் அச்சிக்கலைத் தமிழக அரசு தீர்த்தது. தமிழ்நாட்டின் முக்கியமான இரண்டு தொழில்கள் ஜவுளி ஆலைத் தொழிலும், தோட்டத் தொழிலும் ஆகும். அவ்விரு தொழில்களிலும் பெரிய வேலை நிறுத்தமோ நீண்ட கதவடைப்போ ஏற்படாமல் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு உடன்பாடுகள் காணப்பட்டன.

தொழில் உறவு முறையில் இது குறிப்பிடத்தக்க சாதனையாகும்." இவ்வாறு கழக அரசின் தொழில், தொழிலாளர் கொள்கை பற்றிப் பம்பாயிலிருந்து வெளிவரும் "எக்னாமிக் டைம்ஸ்" என்ற ஏடு 10-9-69 அன்று ஒரு கட்டுரை தீட்டியது. தொழில் துறையில் மாத்திரமல்லாமல் சாதாரண, சாமான்ய மக்களின் அன்றாடத் தேவைகள் பிரச்சினையிலும், அத்தியாவசியப் பிரச்சினையிலும் கழக அரசு உரிய முடிவுகளை விரைந்து எடுக்கத் தவறியதில்லை. 1969-ஆம் ஆண்டு ஆகஸ்டு, செபடம்பர் மாதங்களில் தான் சென்னை நகரில் குடிநீருக்கான நெருக்கடி நிலை தோன்றியது.

அதை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தி மக்களுக்குத் தேவையான குடிநீரைத் தருவதற்குச் சட்டசபையிலேயே ஒரு அறிக்கையினை வெளியிட்டேன். "சென்னை மாநகராட்சி எல்லைக்குள் பன்னிரண்டாயிரம் குழாய்க் கிணறுகள் இருபத்தைந்து இலட்சம் ரூபாய் செலவில் உடனடியாக அமைப்பதற்கு அரசு முடிவெடுத்திருக்கிறது" என்பதுதான் அந்த அறிக்கை. அதற்கேற்ப சென்னை நகரம் முழுவதும் குடிநீர்க் குழாய்கள் அமைக்கும் வேலை உடனடியாகத் தொடங்கியது.

அது பற்றி "ஆனந்த விகடன்" ஏடு 14-9-69-இல் எழுதிய தலையங்கம் குறிப்பிடத்தக்கது. "புழலேரியிலும், சோழவரம் ஏரியிலும் நீர் வற்றிப் போய்விட்ட நிலையில், பம்புசெட்டு குழாய்க் கிணறுகளை தஞ்சம் அடைந்து தங்கள் தாகத்தைச் சிறிது தணித்துக் கொண்டனர் சென்னை மக்கள். இருப்பினும் இரண்டு மாதங்களுக்குள் மழை பொழியாமல் நிலைமை இப்படியே நீடித்தால் கடுமையான குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட்டு நகரவாசிகளை வெளியேற்ற வேண்டி வரலாம் என்று அதிகாரிகள் அஞ்சினர்.

கருமேகங்கள் கண்ணில் படாதா என்று மாநகராட்சினர் வேதனையுடன் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தபோது முதலமைச்சர் கருணாநிதி துணிச்சலோடு செயலில் இறங்கினார். நேரத்தை வீணாக்காமல் இரண்டே வாரங்களில் திட்டத்தைச் செயல்படுத்துவது என்று முடிவு செய்தார்கள். மறு நாளிலிருந்து சென்னை நகர் வீதிகளிலும், சேரிகளிலும், சந்து பொந்துகளிலும் குழாய்க்கிணறுகள் அமைக்கும் வேலை அசுரவேகத்தில் நடைபெறத் தொடங்கியது.

பத்து நாட்களுக்குள் எங்கு திரும்பினாலும் பம்புகளிலிருந்து தண்ணீர் கொட்டும் காட்சி அனைவரையும் பிரமிக்க வைத்தது." அந்தக் காலத்தில் யாரையும் எளிதில் புகழ்ந்து எழுதிட அவசரப்படாத ஆனந்தவிகடன் ஏடு கழக அரசின் இந்தச் சாதனையைப் புகழ்ந்து எழுதியது என்பதற்காகவே இதை எடுத்துக் காட்டினேன். நான் பொறுப்பேற்றுக் கொண்டபோது அறிவித்ததைப் போல அண்ணா அவர்களின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி தமிழகமெங்கும் அறுபதுக்கு மேற்பட்ட அண்ணாவின் சிலைகள் அந்த ஆண்டு செப்டம்பர் திங்கள் 15-ஆம் நாள் திறந்து வைக்கப்படும் நிகழ்ச்சிகள் தொடங்கின அண்ணாவின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட சீரணித் தொண்டர்களின் உழைப்பைப் பயன்படுத்தி பதினைந்தே நாட்களில் சென்னைக் கடற்கரையில் சீரணி மேடை ஒன்று அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழாவினை நான் நடத்தி வைத்தேன்.

பிறந்த நாள் விழாவையொட்டி அண்ணா அவர்களின் முழு உருவச் சிலை ஒன்று சேலம் நகரில் புதிய குடியரசுத் தலைவர் வி. வி. கிரி அவர்களின் தலைமையில் என்னால் திறந்து வைக்கப்பட்டது. அந்த விழாவிற்குக் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி அவர்கள் தனது துணைவியாருடன் வந்திருந்தார். விழா ஏற்பாடுகளை நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜாராம், பெரியவர் ஜி. பி. சோமசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர் ஈ. ஆர். கிருஷ்ணன் ஆகியோர் முனைந்து கவனித்தனர்.

அந்த விழாவில் குடியரசுத் தலைவர் வி. வி. கிரி அவர்கள் தனது தலைமையுரையில் அண்ணா அவர்களின் அருமை பெருமைகளையும் அறிவாற்றலையும் வெகுவாகப் பாராட்டிப் பேசினார். குடியரசுத் தலைவர் பதவிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது "கருணாநிதி கருணைக்கும் நிதிக்கும் கருவூலமாக விளங்குகிறார். அவரது கருணை வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. செயல் வடிவம் கொண்டது. தெற்கேயிருந்து கருணாநிதியும் அவரது தோழர்களும், அதைப்போல் வடக்கேயிருந்து குர்னாம்சிங்கும் அவரது தோழர்களும் நான் இந்தியக் குடியரசுத் தலைவராக வர வேண்டுமென்று முதலில் குரல் கொடுத்தார்கள் என்பதை நன்றியுணர்வோடு என்றைக்கும் நினைத்திடக் கடமைப்பட்டிருக்கிறேன்" என்று உருக்கத்துடனும் உணர்ச்சி ததும்பவும் வார்த்தைகளைக் கொட்டினார்.

பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சர் குர்னாம்சிங் அவர்கள் என் பால் மிகுந்த அன்பும் மதிப்பும் கொண்டவர். அஃதேபோல் நானும் அவரிடம் தனி அன்பு செலுத்தியவன். மாநிலங்கள் சுயாட்சி பெறவேண்டும் என்ற கொள்கையில் அவருக்கும் எனக்கும் ஒருமித்த கருத்து இருந்து வந்தது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு மோகன் குமாரமங்கலத்தையும், பாலதண்டாயுதத்தையும் பலி கொண்ட விமான விபத்து குர்னாம் சிங் அவர்களையும் நம்மிடமிருந்து பறித்துவிட்டது.

அவர் பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபோது அந்த மாநில வளர்ச்சிக்கு அரும்பணியாற்றிய தலைசிறந்த நிர்வாகி என்று பெயரெடுத்தார். இன்றைய பஞ்சாப் பல்வேறு தீர்வு காணப்படாத பிரச்சினைகளின் காரணமாக வன்முறைக் களமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் அன்றைய பஞ்சாப் அமைதியின் தொட்டிலாகக் காட்சி அளித்தது. அந்த நேரத்தில் பஞ்சாப் முதல்வர் குர்னாம்சிங் அவர்கள் பஞ்சாப் மாநிலத்தில் பல இடங்களில் சுற்றுப்பயணம் செய்ய எனக்கு அன்பழைப்பு விடுத்தார்.

முக்கியமாக சண்டிகர் நகரில் நடைபெற்ற குருநானக் அவர்களின் 500-வது பிறந்த நாள் விழாவில் நான் கலந்து கொள்ள வேண்டுமென்று என்னைக் கேட்டுக்கொண்டதின் பேரில் நானும், பொதுப்பணி அமைச்சராக இருந்த சாதிக் அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் முரசொலி மாறன், வி. கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் 1969 நவம்பர் 26-ஆம் நாள் டெல்லி சென்று அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு சண்டிகர் நகர் நோக்கிச் சென்றோம். சண்டிகருக்கு டெல்லியிலிருந்து இரவு நேரத்தில் கார் பயணம் செய்வது மிக இதமான ஒரு நிகழ்ச்சியாகும்.

காரில் சென்று கொண்டிருந்த எங்களுக்கு இரவு 11 மணி அளவில் நல்ல பசியெடுத்தபோது சாலையோரத்தில் மினுக் மினுக்கென்று விளக்கு எரிந்துகொண்டிருந்த பழைய மண்டபம் - ஒன்று கண்ணுக்குத் தெரிந்தது. காரை நிறுத்திவிட்டு அருகே சென்றோம். சீக்கியர் உடையில் சாதுக் கோலம் பூண்டு அந்த மண்டபத்தில் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரிடம் சென்று பேச முனைந்தோம். நண்பர் கிருஷ்ணமூர்த்தி தனக்குத் தெரிந்த பஞ்சாப் மொழியில் அவரிடத்தில் இந்தப் பகுதியில் எங்கே உணவு கிடைக்கும் என்று கேட்டார்.

அந்த சாது எதுவும் பேசவில்லை. ஆனால் தன்னுடைய கையைத் தட்டி யாரையோ ஜாடையாகக் கூப்பிட்டார். அவரது பணியாளர் ஒருவர் ஓடி வந்தார். அவரிடத்தில் விரல் குறிப்பால் ஏதோ உணர்த்தினார். சில வினாடிகளில் எங்களுக்கு பசியாறத் தேவையான கோதுமை மாவினால் செய்யப்பட்ட ரொட்டிகள் வழங்கினர். அந்த ரொட்டிகளுக்கு சுவை சேர்க்க உருளைக் கிழங்கு குருமாவும் வைக்கப்பட்டது. அவற்றைச் சாப்பிட்டுவிட்டு அதற்குரிய பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று அந்தப் பணியாளரிடம் இரண்டு பத்து ரூபாய்த் தாள்களை நீட்டினோம்.

பணியாளரைப் பார்த்து சாது தலையை ஆட்டினார். பணியாளர் பணத்தை வாங்க மறுத்துவிட்டார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு காரிலே ஏறிப் புறப்பட்டோம். பஞ்சாப்பில் பல இடங்களில் அது போன்ற சிறிய மண்டபங்களும் நடுத்தரமான குருத்துவாரங்களும் அமைந்து அவற்றில் இதுபோன்ற விருந்தோம்பல் நடைபெறுவது வாடிக்கை. அன்று இரவு சண்டிகரில் உள்ள பஞ்சாப் கவர்னர் மாளிகையில் நாங்கள் தங்கினோம். மறுநாள் அனந்தபூரிலுள்ள குரு கோவிந்ததாஸ் சிங் குருத்துவாராவிற்குச் சென்றோம்.

அதன் தலைமை மதகுரு, அனந்தபூர் நகரின் முக்கிய பிரமுகர்கள் மலர் மாலைகள் அணிவித்து மகிழ்ச்சியோடு வரவேற்றனர். குருத்துவாராவிற்குள்ளும் நாங்கள் அழைத்துச் செல்லப்பட்டு அங்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு அங்கிருந்து பக்ரா நங்கல் அணைக்குச் சென்று பார்வையிட்டோம். அங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்கினோம். பக்ரா நங்கல் உரத் தொழிற்சாலைக்குச் சென்றோம். அன்று மாலை சண்டிகர் தமிழ்ச் சங்கத் தலைவரும், உறுப்பினர்களும் எங்களைச் சந்தித்து அளவளாவினர்.

இரவு 7 மணி அளவில் குரு நானக் அவர்களின் 500-வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டேன். குருநானக் சங்கீத் தர்பார் என்னால் தொடங்கி வைக்கப்பட்டது. அந்த விழாவிற்கு பஞ்சாப் உயர்நீதி மன்ற நீதிபதி ஹர்பான்சிங் தலைமை வகித்தார். முதலமைச்சர் குர்னாம்சிங் வரவேற்புரையாற்றினார். பல்லாயிரக்கணக்கான பஞ்சாப் மக்கள் கலந்துகொண்ட அந்த விழாவில் உரையாற்றிய போது நான் குறிப்பிட்ட சில கருத்துக்களை நினைவு கூர்ந்திட விரும்புகிறேன்.

"பஞ்சாப்புக்கும் தமிழ்நாட்டிற்கும் எத்தனையோ ஒற்றுமைகள் இருக்கின்றன. எனக்கும் உங்கள் முதலமைச்சர் குர்னாம்சிங் அவர்களுக்கும் ஏற்பட்டுள்ள ஒற்றுமையை மட்டும் நான் குறிப்பிடவில்லை சாதி, மத, மூட நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை தமிழ்நாட்டில் வள்ளுவர் வழி நின்று அறிஞர் பெருமக்கள் கூறியிருக்கிறார்கள். பஞ்சாப்பிலும் குருநானக் வழி நின்று அதே கருத்தை முழங்கி வருகிறார்கள். இந்திய விடுதலைப் போராட்டத்தில் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டான்.

பஞ்சாப் வீரன் பகவத் சிங்கும் தூக்குக் கயிறை முத்தமிட்டான். எங்கள் தமிழ்நாட்டில் வெள்ளையர்களின் கொலை வெறிக்கு ஆளான ஊமைத்துரை, பெரியமருது, சின்ன மருது ஆகியோரையும் சுகதேவ், ராஜ குரு ஆகியோரையும் ஒப்பிட்டுப் பார்க்கிறேன். உடலெல்லாம் புல்லரிக்கிறது. அந்த வீரர்கள் ரத்தம் சிந்திய மண்ணை வணங்குகிறேன். அன்பையும், மனிதாபிமானத்தையும் கொன்று தின்கிறவன் ஆண்டவனை ஏப்பம்போல் வெளியே விட்டுவிடுகிறான்.

அன்பையும் மனிதாபிமானத்தையும் அள்ளி வழங்குகிறவன், ஆண்டவனையும் தனக்குள் அடக்கி வைத்துக் கொள்கிறான். அவனே ஆண்டவன் ஆகிவிடுகிறான். இப்படி சுலபமாக ஆண்டவனாக வழி இருக்கும்போது அதைப் புறக்கணித்துவிட்டு மனிதர்கள் ஆண்டவனை எங்கேயோ தேடி அலைகிறார்கள். ஏழையின் சிரிப்பில்-குழந்தைகளின் மழலையில்-பாட்டாளியின் வியர்வையில்-பெண்ணின் கற்பில்-ஆடவனின் பண்பில்-விவேகியின் விழியில்-விஞ்ஞானியின் அறிவில்-ஆண்டவன் இருக்கிறான்.

அதை விட்டுவிட்டு குருட்டு மனிதன், இருட்டு அறையில், கறுப்புப் பூனையைத் தேடுவதுபோல் சிலர் கடவுளைத் தேடி அலைகிறார்கள். அவர்களுக்கெல்லாம் கடவுளின் உண்மை விளக்கத்தை அளித்தவர்தான் குருநானக். எல்லா மதங்களும் ஒன்றே! எல்லா மனிதர்களும் ஒன்றே! உண்மை எல்லாவற்றுக்கும் மேலானது. ஆனால் அதற்கும் மேலானது ஒன்றுண்டு. அதுதான் உண்மையின் வழி வாழ்வது. இதைத்தான் குருநனாக் போதித்தார். ஒரே கடவுள், சமய சடங்குகள் வீணானவை.

சாதி சமய வேறுபாடு கூடாது. இந்தக் கொள்கைகளைத்தான் அவர் முழங்கினார். ஐநூறு ஆண்டுகளில் இயற்கையில் எவ்வளவோ மாறுதல்கள் ஏற்பட்டாலும், குருநானக் போன்ற பெரியோர்களின் கீர்த்தியிலோ, பெயரிலோ எந்த மாறுதலும் இல்லை. குருநானக்கின் பெயர் சொல்லிப் பறவைகள் பாடுகின்றன. அந்தப் பாட்டைக் கேட்டு. மேகங்கள் ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றன. நானக்கின் கீதம் காற்றிலே மிதக்கிறது. அந்தக் காற்று தமிழ்நாட்டைக் தழுவுகிறது.

அந்தத் தழுவலிலே நான் என்னை மறக்கிறேன்" இவ்வாறு ஆங்கிலத்தில் அந்த விழாவில் நான் உரையாற்றினேன்" மறுநாள் பஞ்சாப்பில் உள்ள தொழில் நகரமான லூதியானாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அங்குள்ள விவசாயப் பல்கலைக் கழகத்தில் நாற்பது இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட மனையியல் கல்லூரி கட்டிடம் என்னால் திறந்து வைக்கப்பட்டது. அந்தப் பல்கலைக்கழகத்தை நான் பார்வையிட்டதன் விளைவுதான் தமிழகத்தில் கோவையில் தொடங்கப்பட்ட வேளாண்மைப் பல்கலைக்கழகம் என்று கூறினால் அது மிகையாகாது.

லூதியானா நிகழ்ச்சி முடிவுற்று அமிர்தசரஸ் நகர் நகராட்சி வரவேற்பிற்குப் புறப்பட்டோம். எங்கள் வருகையையொட்டி அமிர்தசரஸ் நகரம் முழுவதும் மலர்ப் பந்தல்களாலும், வரவேற்பு வளைவுகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நகராட்சிமன்ற விழாவில் ஆயிரக்கணக்கான சீக்கிய பொது மக்கள், மதகுருமார்கள், நகர பிரமுகர்கள் கலந்து கொண்டனர். நகராட்சியின் வரவேற்பிற்கு நன்றி தெரிவித்து பதிலுரை ஆற்றினேன். அதன்பிறகு சீக்கிய தலைவர் சாந்த் பதேசிங் அவர்களோடு எங்களுக்கு ஒரு சந்திப்பு ஏற்பாடாகியிருந்தது.

"பஞ்சாப் பெரியார்" என அழைக்கப்பட்ட மாஸ்டர் தாராசிங் அவர்களுக்கு அடுத்து அந்தப் பெரும் பொறுப்பில் இருந்தவர் சாந்த் பதேசிங் அவர்கள் ஆவார்கள். அவர் இருப்பிடத்திற்கு நாங்கள் சென்றபோது வாயிற்புறத்தில் இருமருங்கிலும் ஆயிரக்கணக்கான சீக்கிய மக்கள் அணிவகுத்து நின்று ஒவ்வொருவரும் எனக்கு மாலையணிவித்து அந்த மலர்மாலைகளுக்குள்ளேயே என்னை மறைத்துவிட்டனர். அந்த இனிய பாசம் பொழியும் வரவேற்பைப் பெற்றுக்கொண்டு பதேசிங் அவர்கள் இருந்த இடத்திற்கு நாங்கள் சென்றபோது அந்த முதியவர் ஆவலோடு எழுந்து என்னைக் கட்டித் தழுவி வரவேற்றார்.

சிறிது நேரம் இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டோம். குருத்துவாரா கமிட்டியின் சார்பில் மிக முக்கியமானவர்களுக்கு மட்டுமே தரப்படும் வாள் ஒன்றை பதேசிங் அவர்கள் எனக்கு பரிசாக அளித்தார். அந்த பரிசளிப்பு நிகழ்ச்சி கண்டு குழுமியிருந்த சீக்கிய இளைஞர்களும், பெரியவர்களும் உணர்ச்சி வயப்பட்டு வாழ்த்து முழக்கங்கள் ஒலித்தனர். பின்னர் சீக்கியர்களின் புனித ஆலயமென போற்றப்படும் அமிர்தசரஸ் தங்கக்கோயிலைச் சுற்றிப் பார்த்தோம்.

அங்கும் எங்களுக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. அன்று இரவு அமிர்தசரஸில் நடைபெற்ற குருநானக் விழா ஒன்றில் கலந்துகொண்டேன். அதையொட்டி குருநானக்கின் வாழ்க்கை வரலாறு பெரியதோர் மைதானத்தில் ஒலி-ஒளி நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது. கண்ணையும் கருத்தையும் கவரக்கூடிய நிகழ்ச்சி அத

ு. எங்களுடைய பஞ்சாப் பயணம் குறித்து லூதியானாவில் செய்தியாளர்கள் என்னைப் பேட்டி கண்டு பல கேள்விகளைக் கேட்டார்கள். "வருகையின் நோக்கம் என்ன" என்று அவர்கள் கேட்டபோது மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் பொருட்டு மாநில கட்சிகளுக்கிடையே ஒரு கூட்டமைப்பு ஏற்பட வேண்டுமென்றும் நான் பஞ்சாப்புக்கு வந்திருப்பதை அந்த முயற்சிக்கான முதல்படியாக எடுத்துக்கொள்ளலாம் என்றும் கூறினேன்.

மேலும் தொடர்ந்து "தி. மு. கழகம், அகாலி தளம் போன்ற கட்சிகள் அனைத்திந்திய அரசியலில் முக்கிய பங்கு வகிக்க முடியும். மாநில கட்சிகளாக இயங்கி வரும் இவை மக்களிடத்தில் செல்வாக்கைப் பெற்று வளர்ந்து வருகின்றன. அனைத்திந்திய அளவில் இத்தகைய கட்சிகள் தங்களுக்குள் ஒரு உடன்பாடு கொண்டு இயங்க முடியும். எனது பஞ்சாப் வருகையை அந்த முயற்சியின் முதல் கட்டமாகக் கருதலாம்" என்று பதிலளித்தேன்.

மறுநாள் ஜாலியன் வாலாபாக்கிற்குச் சென்றோம். பஞ்சாப் படுகொலையில் உயிர்நீத்த வீரத்தியாகிகளின் நினைவுச் சின்னம் அங்கே இருக்கிறது. அந்த நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினோம். ஜாலியன் வாலாபாக் படுகொலையையொட்டிய இதர வரலாற்றுச் சின்னங்களையும் பார்த்தோம். அந்தப் படுகொலையின்பொழுது துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்ட சுவர்கள் இன்னமும் அந்த வடுக்களைத் தாங்கி நிற்பதைக் கண்டபோது மெய் சிலிர்த்தது.