உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/களம் காண்பதிலும் கடமையாற்றுவதிலும்!
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

களம் காண்பதிலும் கடமையாற்றுவதிலும்! · 164 / 391

களம் காண்பதிலும் கடமையாற்றுவதிலும்! எனது வாழ்க்கைக் குறிப்புகளின் தொகுப்பில் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து நிகழ்ச்சிகளைக் குறிப்பிடும் பொழுது சிலவற்றை முன்னோக்கிச் சென்று நினைவூட்டி விட்டு அதன் தொடர்பான நிகழ்ச்சிகளைப் பின்னோக்கித் திரும்பிப் பார்த்துச் சுட்டிக்காட்ட வேண்டியவனாக இருக்கிறேன். இந்தியாவில் 1977-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலுக்குப் பிறகு மொரார்ஜி தேசாய் அவர்கள் தலைமையில் ஜனதா ஆட்சி உருவாயிற்று.

அந்தத் திருப்பம் ஏற்படுவதற்காக அமைந்த காரணங்களை பின்னர் விவரிப்பேன். மொரார்ஜி அவர்களின் இரண்டரை ஆண்டு கால ஆட்சியின் இடையில் தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்கும் முயற்சியில் அவர் வேகமாக ஈடுபடலானார். அப்பொழுது தி. மு. கழகம் ஆட்சியில் இல்லை. தமிழகச் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தது. "இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது எதுவானாலும் அது செத்துவிட்ட குதிரையை எழுப்புவதற்கு சமமாகும்.

ஒவ்வொரு தேசபக்தனும் இந்தியைக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தி கற்றுக் கொள்வதைக் கட்டாயமாக்கும் சட்டம் எதுவுமில்லை என்றாலும் தேசபக்திக்கு இந்தி படிப்பது கட்டாயமானது" என்று மொரார்ஜி தமிழ்நாட்டிற்கே வந்து நிருபர்கள் கூட்டத்தில் பேசினார் 1938முதல் இந்தி எதிர்ப்பு போர்க்கனலை அணையாமல் காப்பாற்றி வருகின்ற கழகம் அவரது பேச்சுக்கும், செயலுக்கும் எதிர்ப்புக் காட்டத் தொடங்கியது.

திருச்சியில் 1978-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23,24 ஆகிய தேதிகளில் தி. மு. கழகத்தின் சார்பில் மாபெரும் இந்தி எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டிற்கு முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் புலவர் கோவிந்தன் தலைமை ஏற்றார். நாடாளுமன்ற உறுப்பினர் வை. கோபால்சாமி மாநாட்டைத் திறந்து வைத்தார். மாநாட்டின் இரண்டாம் நாள் மாலை மழை கொட்டிய போதிலும் அந்த மழையில் நனைந்துகொண்டு சேற்றில் நின்று- கொண்டு இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் மாநாட்டின் உணர்ச்சிமிக்க உரைகளைக் கேட்டனர்.

இந்தித் திணிப்பு எதிர்ப்பு தீர்மானங்களை நிறைவேற்றினர். இந்தி எதிர்ப்பு குறித்து மொரார்ஜி தேசாய் பேசிய கேலிக்கும் கண்டனத்திற்கும் கூட தமிழக முதல்வர் எம். ஜி. ஆர். எதிர்ப்பு தெரிவிக்காதது மட்டுமல்ல, "சட்டப்படி இந்தி திணிப்பில்லை என்று பிரதமரே (மொரார்ஜி தேசாய்) கூறிவிட்டார். இந்தித் திணிப்பு இல்லாதபோது, இந்தி எதிர்ப்பும் இல்லை; எனவேதான் மொரார்ஜி இந்தி எதிர்ப்பு செத்த குதிரை என்று சரியாகத்தானே சொல்லியிருக்கிறார்" என்று, அவர் பேசியது சரிதான் என்பதைப் போல வக்காலத்து வாங்கிப் பேசினார்.

தமிழக முதலமைச்சர் எம். ஜி. ஆர் அவர்கள் இந்தித் திணிப்பு குறித்து ஒரு அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டினார். அதுபற்றிய தீர்மானம் ஒன்று அரசின் சார்பில் சட்டப்பேரவையிலே விரைவிலே கொண்டுவரப்படும் என்று சொன்னார். ஆனால் அப்படி ஒரு தீர்மானம் அவர் குறிப்பிட்டதைப்போல கொண்டுவரப்படவில்லை என்பது அனைவரும் அறிந்ததாகும். தமிழக முதலமைச்சர் எம். ஜி. ஆர். விவகாரத்தில் இது ஒன்றும் புதிதல்ல. அண்மையிலேகூட இலங்கைப் பிரச்சினையில் தீவிரம் காட்டிய தமிழ்நாட்டுத் தலைவர்களின் போக்கு முட்டாள்தனமானது என்று பாதுகாப்பு அமைச்சர் வெங்கட்ராமன் ஒரு கூட்டத்தில் பேசியதைக் கண்டிப்பதற்குப் பதிலாக அவர் எந்தச் சூழ்நிலையில் பேசினார் என்ற வகையில்தான் அதனை மூடி மறைக்க தமிழக முதலமைச்சர் எம்.

ஜி. ஆர். முற்பட்டார் என்பதை நாடு அறியும். இதே பாணியில்தான் அன்றைக்குப் பிரதமர் மொரார்ஜியின் பொறுப்பற்ற பேச்சுக்கு முதலமைச்சர் எம். ஜி. ஆர். ஆமாம் போடக்கூடிய சூழ்நிலையிலே இருந்தார். இந்தியை எதிர்ப்பதில் பல போர்க்களங்களைக் கண்ட வரலாற்றுக்குரிய தி. மு. கழகம் திருச்சி மாநாட்டிலே எடுத்த முடிவிற்கிணங்க தமிழகம் முழுவதும் 26-1-1979 அன்று ஒரு நாள் மாபெரும் இந்தித் திணிப்பு எதிர்ப்பு கண்டனப் பேரணிகளை நடத்தியது.

திராவிட முன்னேற்றக் கழகத்தினர் அனைவரும் நெ.-13 அன்றையதினம் கறுப்புச் சட்டை அணிந்து ஒவ்வொரு ஊரிலும் பல்லாயிரக்கணக்கில் கழக முன்னோடிகளின் தலைமையில் பேரணி நடத்தி இந்தித் திணிப்புக்குத் தமிழகம் ஒருபோதும் இடம் தராது என்பதை இமயம் முட்ட எடுத்து இயம்பினோம். சென்னையில் என்னுடைய தலைமையிலும், கோவையில் பேராசிரியர் தலைமையிலும், திருச்சியில் சாதிக் தலைமையிலும், மதுரையில் துணைப் பொதுச் செயலாளராக இருந்த ஏ.

வி. பி. ஆசைத்தம்பி தலைமையிலும் இந்தப் பேரணிகள் நடைபெற்றன. கழகம் ஆட்சியில் இருந்த போது இந்தித் திணிப்பு எதிர்ப்பை நனைந்து போக விட்டுவிடவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக கடந்த அத்தியாயத்தில் திரைப்பட தணிக்கை சான்றிதழில் இந்தி புகுத்தப்பட்டதை அரசின் சார்பில் நான் எதிர்த்ததையும், மத்திய தணிக்கைக் குழு உடனடியாக திருத்திக் கொண்டதையும் குறிப்பிட்டிருந்தேன். அதைப்போல "பிராந்தியச் செய்தி" என்று வானொலியில் சொல்லப்பட்டது "மாநிலச் செய்தி" என்று மாற்றப்பட்டதும், "ஆகாஷ்-வாணி" என்பது "வானொலி" என்று மாறியதும் கழக ஆட்சி எடுத்த முயற்சிகளின் விளைவுகளேயாகும்.

1968-ஆம் ஆண்டு அண்ணா அவர்கள் தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழித் திட்டத்தைக் கொண்டுவந்தபோது தமிழ்நாடு தேசிய மாணவர் பயிற்சிப் படையில் (என். சி. சி.) இந்தி கட்டளைச் சொற்கள் பயன்படுத்தப்படும் வரையில் அந்தப் படையே ரத்து செய்யப்படும் என்று அறிவித்திருந்தார் அல்லவா. அதன்படி என். சி. சி. தமிழகத்தில் செயல் படாமலே இருந்து வந்தது. அதை மீண்டும் செயல்பட வைக்க வேண்டுமென்று மத்திய அமைச்சர்கள் என்னிடம் வற்புறுத்தி வந்தார்கள்.

தமிழ்நாட்டில் என். சி. சி. படை மீண்டும் துவக்கப்பட வேண்டுமென்றால் கட்டளைச் சொற்கள் ஆங்கிலத்தில்தான் இருக்கவேண்டுமென்று தமிழக அரசின் சார்பாக நான் தெரிவித்தேன். அந்த நிபந்தனையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு விட்டதாக 1969 செப்டம்பர் திங்களில் தமிழகம் வந்த மத்திய அரசின் துணை அமைச்சர் எம். ஆர். கிருஷ்ணா அவர்கள் என்னிடமும் அன்றைய கல்வி அமைச்சர் நாவலரிடமும் தெரிவித்தார். இப்படி அடிக்கடி சந்து பொந்துகளில் தலைநீட்டிப் பார்ப்பதும், தமிழர்கள் ஏமாந்து விடவில்லை, விழிப்போடுதான் இருக்- கிறார்கள் என்பதை உணர்ந்து பதுங்கியோடுவதும் இந்தித் திணிப்பின் வரலாறாக இருந்து வருகிறது.

வெளிப்படையாக இல்லாமலும் ஆனால் அதே நேரத்தில் எப்படியும் புகுந்து ஆதிக்கம் செலுத்த வேண்டுமென்கிற எண்ணத்தோடு மறைமுகமாகவும் தமிழர்களை இந்தித் திணிப்பின் மூலம் இரண்டாந்தர குடிமக்களாக ஆக்கும் முயற்சி இன்னமும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. இவற்றையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் உறவுக்குக் கை கொடுப்போம், அதே நேரத்தில் உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்ற கழகத்தின் உறுதியான நிலைமையை இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள் முன்னிலையில் நான் திட்டவட்டமாக எடுத்துக் கூறினேன்.

அப்படிக் கூறிய அந்த நிகழ்ச்சி தமிழகச் சரித்திரத்தில் மிக முக்கியமான நிகழ்ச்சியாகும். எழுச்சியுடன் நடைபெற்ற நிகழ்ச்சியாகும். தமிழகமே திரண்டு வந்து நடத்திய நிகழ்ச்சியாகும். அந்த நிகழ்ச்சிதான் அறிஞர் அண்ணா அவர்களின் திரு உருவப்படங்கள் இரண்டை சென்னை ராஜாஜி மண்டபத்தின் முன்னால் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் திறந்து வைத்த நிகழ்ச்சியாகும். சட்டப்பேரவையிலே வைப்பதற்காக ஒரு படத்தையும், ராஜாஜி மண்டபத்திலே வைப்பதற்காக ஒரு படத்தையும் 1969 அக்டோபர் 6-ஆம் தேதி மாலையில் பிரதமர் இந்திரா காந்தி திறந்து வைத்தார்.

அந்த நிகழ்ச்சிக்கு நான் தலைமையேற்றிருந்தேன். ஆளுநர் உஜ்ஜல் சிங் அவர்கள் முன்னிலை வகித்தார். அண்ணா அவர்களால் "கொடுமுடி கோகிலம்" எனப் பாராட்டப்பட்ட திருமதி கே. பி. சுந்தரம்பாள் அம்மையார் அவர்கள், படத்திறப்பு விழா தொடக்கத்தில் நான் எழுதிய அண்ணா வணக்கப் பாடலைப் பாடினார்கள். அண்ணா அவர்களின் திரு உருவப்படங்களை எழுதித் தந்த ஓவியர் மாதவன் அவர்களுக்கும், ஓவியர் ஈஸ்வரன் அவர்களுக்கும் பிரதமர் இந்திரா காந்தி தமிழில் கையெழுத்திட்டு தமிழக அரசின் சார்பில் சான்றிதழ்களை அளித்தார்.

"பதினான்கு வங்கிகளை நாட்டுடமையாக்கிய பெரும் புகழோடு வந்திருக்கிறீர்கள்; அதற்கு அடையாளமாக தமிழ்நாடு அரசாங்கத்தின் சார்பில் பதினான்கு பொருள்களைப் பரிசாகத் தருகிறேன்" என்று கூறி பிரதமரிடம் வழங்கினேன். அந்த மேடையில் நான் உரையாற்றும் போது "கடந்த பல மாதங்களுக்கு முன் இதேபோன்ற ஒரு ஆறாம் தேதி, பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்நாட்டினுடைய கவர்னர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு இந்த நீண்ட நெடிய படிக்கட்டுகளில் இறங்கி வந்து கீழே ஆயிரக் கணக்கில் நின்று கொண்டிருந்த ஏழையெளிய மக்களுடைய அன்புக் கரங்களை எல்லாம் தழுவி அவர்களுடைய விழிகளிலே சங்கமமாகி இதயங்களோடு கலந்து தமிழகத்தினுடைய நல்வாழ்த்துக்களைப் பெற்றுத் தமிழக ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார்.

எட்டு மாதங்களுக்குமுன், நம்மைவிட்டுப் பிரிந்தபோதும் இதே இடத்தில்தான் நமக்கெல்லாம் கடைசியாக தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தார். அந்த இடத்தில் இன்று அந்தத் தலைமகனுடைய திரு உருவப் படத்தை, நம்மையெல்லாம் 'தம்பீ, தம்பீ' என்று அழைத்து வாழ்த்திய அந்தப் பெருமகனுடைய திரு உருவப் படத்தைத் திறந்து வைப்பதற்காக இந்தியாவின் பிரதமர் வருகை தந்துள்ளமைக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்ணா அவர்கள் வளர்த்த கழகத்தினுடைய ஆட்சி அவரது மறைவிற்குப் பிறகு நிலைக்குமா, நீடிக்குமா என்று இங்கிருக்கின்ற சிலர் மட்டுமல்ல, டெல்லிப் பட்டணத்தில் அமர்ந்திருக்கின்ற பிரதமர் அவர்களே, நீங்கள்கூட சந்தேகப்பட்டிருக்கலாம். ஆனால் எங்கள் அண்ணன் அவ்வளவு சொத்தை சோடை அல்ல. எங்கள் அண்ணன் தனக்குப்பிறகு ஒரு பெரிய பாரம்பரியத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் என்பதற்குச் சாட்சிதான் நீங்கள் காணுகின்ற இந்த மக்கள் வெள்ளமாகும்.

ஆகவே அண்ணன் உருவாக்கிய கழக ஆட்சி தமிழ்நாட்டினுடைய பண்பாட்டை, தமிழ்நாட்டினுடைய பாரம்பரியத்தைக் காப்பாற்றுவது மாத்திரமல்லாமல், பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நாங்கள் உங்களுக்குத் திட்டவட்டமாகத் தெரிவித்திருப்பதைப் போல மத்திய அரசோடு உறவுக்குக் கை கொடுப்போம், அதே நேரத்தில் என்றென்றும் உரிமைக் குரல் கொடுக்கத் தவறமாட்டோம் என்பதையும் உங்கள் முன்னிலையிலேயே நான் எங்கள் அண்ணன் தந்த பெருமிதமான உணர்வோடு சொல்லிக் கொள்கிறேன்" என்று நிலைகுலையா உறுதியுடன் அந்தக் கூட்டத்தில் தெரிவித்துக் கொண்டேன்.

கழகம் என்றால் என்ன என்பதையும் அண்ணாவின் மீது தமிழக மக்களுக்குள்ள அன்பையும் புரிந்து கொள்ள அந்த விழா அம்மையாருக்கு உதவியது என்றால் அப்பொழுது நான் ஆற்றிய உரையிலேயிருந்து நான் எப்படிப்பட்டவன் என்பதையும் அம்மையார் புரிந்து கொள்ள வழிவகுத்தது என்றே நான் கூறுவேன். "இதுகாறும் கண்டிராத அளவில் ஈடற்ற பேரழகோடு கூடிய வரவேற்பை திங்களன்று மாலை பிரதமர் இந்திரா காந்திக்கு ஏற்பாடு செய்ததின் மூலம் திராவிட முன்னேற்றக் கழக முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் பெயரைத் தட்டிச் சென்று விட்டார்.

காந்தி நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை நகரில் ஞாயிறு அன்று காமராஜர் அவர்கள் ஏற்பாடு செய்த பிரம்மாண்டமான ஊர்வலத்தையும், திங்கள் அன்று திரு அண்ணாதுரை அவர்களின் திரு உருவப் படங்களைத் திறக்க வந்த இந்திரா காந்திக்கு கருணாநிதி தந்த பேரழகு வாய்ந்த வரவேற்பையும் ஒப்பிட்டுப் பேசுவதில் பொதுமக்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். அரசினர் தோட்டம் முழுவதும் எழில் ததும்ப அலங்கரிக்கப்பட்டிருந்தது. பேரொளி பாய்ச்சும் விளக்குகள் - சின்னஞ்சிறு வண்ண மின்விளக்குகள் எங்கணும் பரவி அந்தத் தோட்டத்தை ஒரு தேவலோகமாக மாற்றிவிட்டன.

கலை அழகும், கம்பீரமும் நிறைந்த வளைவுகள் எழும்பூர் நிலையத்திலிருந்து அரசினர் தோட்டம்வரையில் வழியெங்கும் அமைக்கப் பட்டிருந்தன. இவை முதலமைச்சரின் ஒப்புயர்வற்ற திறனுக்கும், கலை ஆற்றலுக்கும் சாட்சியங்களாக விளங்கின. பிரதமரின் வருகையைத் தனிப்பட்ட கட்சிக்கே உரிய விஷயமாக மாற்றிட காங்கிரஸ் எடுத்த முயற்சிகளுக்கு மாறாக அரசினர் தோட்டத்தில் நடந்த விழாவில் பிரதமரைப் பங்கேற்க வைத்ததின் மூலம் அவரது வெற்றிகரமான சுற்றுப் பயணத்தின் உச்சகட்ட நிகழ்ச்சியாக அதை மாற்றி வெற்றியடைந்தார் முதலமைச்சர் கருணாநிதி.

அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் அல்லாத முதலமைச்சராக இருக்கும் கருணாநிதி பிரதமரின் முற்போக்கான பொருளாதார நடவடிக்கைகளுக்கு மாநில ஆளும் கட்சியான தி. மு. கழகத்தின் முழுமையான ஆதரவு உண்டு என்பதையும், மத்திய அரசிடமிருந்து அனைத்து உதவிகளுக்குமான உத்திரவாதம் பெறத் தகுதியுடையது மாநில அரசு என்பதையும் பிரதமருக்கு உணர்த்திக் காட்டுவதில் தனது பங்கினைச் செவ்வனே செய்தார்."

இவ்வாறு "மெயில்" ஏட்டில் டி. எஸ். திருமலை என்பவர் ஒரு கட்டுரை தீட்டியிருந்தார். "மழையைப் போன்று ரோஜாவின் இதழ்கள் பொழிய மறைந்த அண்ணா அவர்களின் இரண்டு உருவப் படங்களை பிரதமர் இந்திரா காந்தி திறந்து வைத்தார். ராஜாஜி மண்டத்தின் நெடிதுயர்ந்த தூண்களைப் பின்னணியாகக் கொண்ட வெளியில் இந்த மகத்தான பிரகாசம் நிறைந்த விழா நடந்தது. அகன்ற பாதைகள் ஒரே இரவில் வெற்றிக் களிப்புக்கான வரவேற்பு வளைவுகள் அமைந்த பாதையாக மாற்றப்பட்டிருந்தன.

கிரேக்க பாணியில் அமைந்த ராஜாஜி மண்டபத்தின் முன்புறம் ஒரு அற்புதமான காட்சி அமைப்பு போல விளங்கியது: பிரதமர் இந்திரா, கவர்னர், முதல்வர், அமைச்சர்கள். முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் உட்பட முக்கிய பிரமுகர்கள் நீண்ட படிக்கட்டுகளில் உயரத்தே அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு முன்னால் பரந்திருந்த கண்ணுக்கு எட்டிய தூரம்வரை மக்கள் பெரும் கடலைப் போல மொய்த்துக் கிடந்தனர்."

இவ்வாறு பம்பாயிலிருந்து வெளிவரும் "டைம்ஸ் ஆஃப் இந்தியா" ஏடு அந்த நிகழ்ச்சி குறித்துப் பாராட்டியிருந்தது. "பிரதமர் இந்திராவின் முற்போக்கு பொருளாதாரக் கொள்கைகளை தி. மு. கழக நிர்வாகம் ஏற்கிறது என் பதை பிரதமருக்கு உணர்த்தும் வகையில் கருணாநிதி ஒரு மகத்தான வரவேற்புக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். அண்ணாவின் இலட்சிய வாசகங்களான கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு என்ற பொன்மொழிகள் வரவேற்பு வளைவுகளில் பொறிக்கப்பட்டிருந்தன.

அண்ணாவின் பல சிறப்பு இயல்புகளில் மிகவும் மென்மையாகக் குறிப்பிடத்தக்கது-ஏழைகளின் மீதும் தாழ்ந்து கிடப்பவர்களின் மீதும் அவர் செலுத்திய அன்புதான் என்று பிரதமர் இந்திரா குறிப்பிட்டார்." இவ்வாறு கல்கத்தாவிலிருந்து வெளிவரும் "அமிர்த பஜார் பத்திரிகா" என்கின்ற ஏடு அந்தப் படத் திறப்பு விழா நிகழ்ச்சி குறித்து புகழ்ந்திருந்தது. அக்டோபர் 6 அண்ணா படத் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு முன்பு அக்டோபர் 2-ஆம் நாள் காந்தியடிகள் நூற்றாண்டு விழாவை தமிழக அரசின் சார்பாக சிறப்பாகக் கொண்டாட முடிவெடுத்து அவ்வாறு நடத்தப்பட்டது.

நூற்றாண்டு விழாவினையொட்டி

அரசின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. பல நினைவுச் சின்னங்கள் உருவாக்கப்பட்டன. அக்டோபர் முதல் நாள் மாலை காந்தி இல்லம் கண்காட்சி திறப்பு விழாவினை பெரியவர் பக்தவத்சலம் அவர்கள் தலைமையில் நான் நிறைவேற்றி வைத்தேன். அக்டோபர் 2-ஆம் நாள் காலை எட்டு மணி அளவில் கடற்கரை காந்தி சிலை அருகில் நூற்றாண்டு விழாவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட அலங்கார வண்டிகளின் பேரணி நடைபெற்றது.

அன்று சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் காந்தியடிகளின் நூற்றாண்டு விழா ஆளுநர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. அன்று மாலை சென்னை கடற்கரை சீரணி அரங்கில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் என்னுடைய தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மூதறிஞர் ராஜாஜி, கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத், திரு. சி. சுப்பிரமணியம். திரு. பி. ராமமூர்த்தி, திரு. எம். கல்யாணசுந்தரம், திரு.

நல்லசிவம், சிலம்புச் செல்வர் ம. பொ. சி., திருமதி. சௌந்திரம் கைலாசம் ஆகியோர் கலந்து கொண்டார்கள். நாட்டின் மாபெரும் தலைவர்களைக் கழக அரசு பெருமைப்படுத்தத் தவறவில்லை என்பதற்கு இது போல் எண்ணிறந்த நிகழ்ச்சிகள் உண்டு!