உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/ஆகஸ்ட் திங்களில்!
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

ஆகஸ்ட் திங்களில்! · 163 / 391

ஆகஸ்ட் திங்களில்! "த மிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவர்க்கோர் குணமுண்டு!" இந்தப் பாடல் ஒலிக்காத இடமில்லை. அந்தப் பாடலை இயற்றிய தேசியக் கவி நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை அவர்கள் காங்கிரஸ் ஆட்சியில் மேலவை உறுப்பினராகவும் அரசவைக் கவிஞராகவும் இடம் பெற்றிருந்தார். கழக ஆட்சியின்போது அவர் குடும்பம் சற்று சிரம நிலையில் இருந்தது என்பதையறிந்து நான் அவரது வாழ்நாள் முழுதும் மாதம் ஒன்றுக்கு இருநூறு ரூபாய் உதவித் தொகை தமிழக அரசின் சார்பில் அளிக்கப்படும் என்றும் அந்த ஆணை 1967 ஆகஸ்ட் மாதம் முதலே நடைமுறைக்கு வரும் என்றும் அறிவித்தேன்.

அதுகுறித்து நாமக்கல் கவிஞருக்கும் கடிதம் எழுதினேன். அதற்கு அவர் எழுதிய நன்றிக்கடிதம் இன்னமும் என் நெஞ்சில் பசுமையாக பதிந்திருக்கிறது. "மெய்யன்பரே, அன்பு ததும்பும் தங்களுடைய கடிதம் வந்தது. அறிக்கையை தாங்கள் வெளியிட்ட அன்று மாலையிலேயே அது ரேடியோவில் சொல்லப்பட்டதைக் கேட்ட பல நண்பர்கள் என் வீட்டிற்கு ஓடிவந்து தங்களையும் என்னையும் வானளாவப் புகழ்ந்து பாராட்டினார்கள். நான் பூரித்துப் புளகாங்கிதமடைந்தேன்.

தங்கள் அன்பே அன்பு. பெயரளவில் மட்டுமல்ல; தாங்கள் செயலிலும் கருணையின் நிதியே! தாங்கள் முதலமைச்சரானது முதல் கருணைமிக்க காரியங்களையே செய்திருக்கிறீர்கள். தங்களுடைய ஆட்சிக் காலம் சரித்திரத்தில் பொற்காலமாக விளங்கும். நான் அதைக் கவிதையில் பாடுவேன். தாங்கள் அண்ணா அவர்களின் மேலான குறிக்கோள்களைச் செயலாக்கி வருவதை மனமார வாழ்த்துகிறேன். நீடூழி வாழ்க. இவ்வாறு கடிதம் எழுதிய நாமக்கல்லார் அவர்கள் தனது வாழ்நாள் முழுவதும் என்னிடமும் கழக அரசிடமும் நன்றியுணர்- வோடு விளங்கினார்.

அவருக்கு உதவிப் பணம் அளிக்க அரசு முன்வந்த செய்தியைக் கண்ட முத்தமிழ் கலாவித்வ ரத்ன அவ்வை டி. கே. சண்முகம் அவர்கள் இதுபோன்ற உதவியை பாரதியாரின் நண்பர், பரலி சு. நெல்லையப்பருக்கும் வழங்கினால் நலமாக இருக்கும் என்று எனக்கு ஒரு மடல் எழுதியிருந்தார். அதனையொட்டி பரலி சு. நெல்லையப்பருக்கு அவரது ஆயுட்காலம் முழுவதும் மாதம் ஒன்றுக்கு நூறு ரூபாய் அரசின் சார்பில் வழங்குவதென ஆணை பிறப்பிக்கப்பட்டது.

அதற்கு பரலி சு. நெல்லையப்பர் எழுதிய கடிதத்தில் "தமிழகத்தின் தலைமை அமைச்சர் பெருமானுக்கு, வணக்கம். எண்பது வயது கொண்ட எனக்கும், என்னிலும் ஒரு வயது மூத்தவரான நாமக்கல் கவிஞருக்கும் அன்புகூர்ந்து உதவியளிக்க முன்வந்த தமிழக அரசினர்க்கு எனது மனமார்ந்த நன்றி. சிறப்பாக தங்கட்கும் ஏனைய அமைச்சர்கட்கும் எனது பெருநன்றி. எனது கண்பார்வை சீர்கெட்டிருப்பதாலும், உடல் நலம் இன்மையாலும் நான் நேரில் வந்து என் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவிக்க இயலவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆளுநர் நியமனத்தின் வாயிலாக மேலவை உறுப்பினர் பதவி வகித்து வந்த முன்னாள் முதல்வர் ஓ. பி. ராமசாமி ரெட்டியார் அவர்கள் தனது உடல்நிலை காரணமாக பதவியிலிருந்து விலகியதால் ஏற்பட்ட காலி இடத்திற்கு யாரை நியமிக்கலாம் என்ற கேள்விக்குறி எழுந்தது. ஒருநாள் கடற்கரை வெண்மணற்பரப்பில் நானும் அமைச்சர்களும் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தோம். ஒவ்வொரு நாளும் அமைச்சர்களுடனும், கழக முன்னணித் தலைவர்களுடனும் நீண்ட நேரம் கலந்துரையாடும் இடமாக கடற்கரை இருந்தது.

அமைச்சரவையில் எடுக்கப்பட வேண்டிய பல முடிவுகளுக்கு கடற்கரையில் நடைபெறும் விவாதத்திலே முன்னுரை எழுதப்படும். அந்தக் கடற்கரை கருத்தரங்கிலேதான் மேலவை உறுப்பினராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்த எனது எண்ணத்தை அமைச்சர்களிடமும், கழக முன்னணியினரிடமும் வெளியிட்டேன். குன்றக்குடி அடிகளாரை மேலவை உறுப்பினராக நியமித்தால் என்ன என்ற கேள்வியை நான் எழுப்பியதும், அங்கிருந்- தோர் அனைவரும் சற்றுநேரம் அமைதியாயினர்.

அவர்களுக்கு ஏற்பட்ட வியப்பு அடங்குவதற்குச் சிறிது நேரமாயிற்று! அடிகளாரா? அந்தப் பதவியை ஏற்றுக் கொள்வாரா? என்றெல்லாம் கேட்டனர். தமிழுக்குத் தொண்டு செய்யக் கூடிய ஒருவர் மேலவையிலே வீற்றிருப்பது பல நல்ல அறிவுரைகளை அவரிடமிருந்து இந்த அரசு பெறுவதற்கு வாய்ப்பாக அமையும். எனவே அவர் மறுத்தாலும் அவரை எப்படியும் அந்தப் பதவியை ஒப்புக்கொள்ளச் செய்ய வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். எனது கருத்தை அறிந்த அடிகளார் முதலில் சற்றுத் தயங்கினார் என்றாலும் பிறகு ஒப்புதல் அளித்தார்.

அவரை மேலவை உறுப்பினராக ஆளுநர் நியமித்த அறிவிப்பு வெளிவந்ததும் தமிழ்நாடே ஆச்சரியக் கடலில் மூழ்கியது. குன்றக்குடி ஆதீனகர்த்தராக இருந்தாலும், ஆத்திகப்பற்று உடையவராக விளங்கினாலும் பெரியாரும். அண்ணாவும் ஆழமாக எடுத்துச் சொன்ன இனமான உணர்வில் அடங்காத ஆர்வம் படைத்தவராக அவர் விளங்கியது ஒன்றே அவர்பால் எனக்குள்ள அன்பைப் பெருக்கியது. அவரது நியமனம் கேட்டு தர்மபுரம் ஆதீனகர்த்தர் எனக்கு ஒரு பாராட்டு மடல் எழுதியிருந்தார்.

அதில் "பேசுதல் யார்க்கும் எளிது. ஆனால் அதனைச் செயலில் நிறைவேற்றுவதில் தான் தனித் திறமை வேண்டும். அந்த வழியில் நமது தமிழகம் தங்கள் நல்லாட்சியில் பல முன்னோடித் திட்டங்களை பலரும் பாராட்டும் வகையில் செயல்படுத்தி வருகிறது. நமது தமிழக மடாதிபதி குன்றக்குடி அடிகளார் சட்டமன்ற மேலவையில் இடம்பெற வாய்த்ததை அத்தொடரில் ஒன்றெனப் பலரும் மதிக்கிறார்கள். பொதுமக்கள் பலரும் பாராட்டும் செயலாகவும் உள்ளது" என்று குறிப்பிட்டிருந்தார்.

தன்னை மேலவை உறுப்பினராக நியமித்தது குறித்து, குன்றக்குடி அடிகளார் அவர்கள் நன்றி தெரிவித்து எழுதியுள்ள பாராட்டுக் கவிதையினை இங்கே நான் நினைவூட்டுவது என்னைப் பாராட்டினார் என்பதற்காக அல்ல; அவரது தமிழ் உள்ளத்தை தமிழர்கள் உணர்ந்திட வேண்டும் என்பதற்காகத்தான்! இதோ அந்தக் கவிதை: தமிழில் தோய்ந்து தண்ணளி பெற்ற இனிய கலைஞ! நின்றன் கொற்றம் வழங்கிய சிறப்பில் மலர்ந்தன இவையே! வாழும் நெறியினை வகுக்கும் வள்ளுவம் கோல உலகில் குடிநின் றுயர பருவம் மடிமா னம்பா ராமல் குடிசெய் கென்றே குரல் கொடுத்தது!

அக்குரல் தனக்கே அரும் இலக் கியமாய் வாழ்ந்து வேறுபா டின்றி இனநலம் கருதிக் கங்கு கரையிலா அன்பு பொழிந்த பேரறிஞர் அண்ணா கண்டோம். வாழுதல் கலையென மொழிந்தான் வள்ளுவன் வள்ளுவன் நெறியும் அண்ணா நெறியும் வாழும் வகைக்கிரு கால்களாம் என்றே கொண்ட கொண்டல் கொழிதமிழ்க் கலைஞர் புதிய புறநா னூற்றைப் படைக்கும் புரவலர்! புரவலர் புரவல ராக இருப்பதோ டன்றி இணையில்கா லத்தையும் வென்று நிற்கும் வியன்மிகு கவிஞராய் நிரந்தினி துரைக்கும் நீர்மைநா வலராய் ஏற்றம் மிகுந்த எழுத்தாள ருமாய் நாடொறும் நாடி நலம்புரி அமைச்சாய் நெஞ்சில் பழக்கச் செஞ்சால் உழுது அன்பெனும் வித்திட் டாரத் துய்த்திடும் அருமைக் கலைஞர் நமைமே லவையில் இருக்கச் செய்தது என்ன கருதியோ?

நெடிய நேரம் நினைந்த பின்னும் புலப்பட வில்லை: புலப்பட வில்லை! நமது ஆ தீனம் அஃதண் ணாமலை ஆதீ னம்ஆம் அண்ணா என்ற முதன்மைச் சொல்லில் மூண்ட காதலோ? பேசும் மொழியால் பெட்புறு நெறியால் தமிழ இனத்தைச் சார்ந்தது கருதியோ? குன்றக் குடியைக் குன்ற விடாமல் நின்று விளக்கிட நினைத்தோ? இவரை ஏற்றிப் பார்க்கலாம் என்ற எண்ணமோ? ஒதுங்கி மடத்தில் உட்கார்ந் தவரை மன்றில் நிறுத்தி வேடிக்கை பார்க்கவோ? பிறந்த மொழியைப் பயின்றநாள் தொட்டுத் தொண்டு நெறியின் சுவைதே றியநீ நம்மையும் தொண்டு நெறியில் நடாத்தித் தூண்ட கருதியோ?

தொன்மைச் சிறப்பின் தாரணி புகழும் தஞ்சை மண்ணிடை ஒருங்கே பிறந்தோம் எனும்பா சத்திலோ? சென்ற நாட்களில் சிலதுறை யேற்றுத் தொண்டு செய்ததில் தொடர்ந்த துன்பத்தை கண்டு களைந்திடுங் கருத்தது தானோ? தமிழ்மொழித் துறையில் தக்கபே ரறிவ இல்லை யெனினும் எழிற்றமிழ்ப் பற்று மிக்கோர் என்னும் விரிந்த கருத்திலோ? இழிசா தீயெனக் கிடந்தநம் இனத்தை ஏற்ற முறச் செய் பெரியார் எம்மிடைக் கொண்ட பாசம் குறித்து நினைத்ததோ?

எதுவென அறியோம்! யாது செய் வதென விளங்கவு மில்லை! வேண்டுவ தொன்று இன்றே போல்க, உமது கேண்மை! தாங்கு புகழார் தரணிக்கு நீசெய்யும் பணிக்குடன் நிற்கும் வாய்ப்பளித் தமைக்கு உளமார் நன்றி! உவந்துரை செய்தோம். எழுபிறப் பும்யாம் எம்முளம் கொள்வோம் உழுவலன்புத் திறத்தினை வாழ்த்துவோம். -இடையிலே அடிகளாருக்கு எத்தனையோ சங்கடங்கள்! நான் ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகன்ற பிறகு அவரும் நானும் சந்திக்க முடியாத இடர்ப்பாடுகள்!

அப்படி சந்தித்தால் அவருக்கே எத்தனையோ தொல்லைகள் விளையும். அதனால் விளம்பரப்படுத்தப்பட்ட சில நிகழ்ச்சிகளில் கூட என்னுடன் அவரால் கலந்துகொள்ள இயலவில்லை. அதற்காக நானோ என்னைச் சார்ந்தவர்களோ அவர் மீது வருத்தம் கொள்வதில்லை. என்னையும் மீறி ஒரு வேளை வருத்தம் என் நெஞ்சைத் தொடுமேயானால் அதனை விரட்டியடிக்க அடிகளார் அப்பொழுது எழுதிய இந்தக் கவிதையை அடிக்கடி எடுத்து நான் படித்துக் கொள்வது வழக்கம். அடிகளார் நியமனத்தையும் திரு.

நெ. து.சுந்தரவடிவேலு அவர்கள் சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டதையும் பாராட்டுகின்ற வகையில் சென்னையில் ஆகஸ்ட் 27-ஆம் நாள் தர்மபுரம் ஆதீனத்தின் சார்பில் ஒரு விழா நடைபெற்றது. அந்த விழாவில் நானும் கலந்து கொண்டேன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மாண்புமிகு கே. வீராசாமி அவர்கள் "நமது முதல்வர் ஒரு சாதுவை சட்டமன்றத்திலே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்.

அவர் செய்துள்ளது எங்கும் காணாத போற்றத் தகுந்த ஒரு புதுமை. தமிழ்நாடு அரசு எத்தனையோ விஷயங்களில் வேறுயாரும் செய்யாத பல சாதனைகளைச் செய்திருக்கிறது. சமீபகாலத்தில் அடிகளாரை மேலவை உறுப்பினராக ஆக்கியது அந்தச் சாதனைகளில் ஒன்று" எனக் கூறினார். நீதிபதி கைலாசம் அவர்களின் துணைவியார் திருமதி செளந்தரா கைலாசம் தமிழ்ப்புலமை மிக்கவர். அவர் அந்த விழாவில் பேசும் போது, "அண்மைக் காலத்தில் நாளேடுகளைப் புரட்டினால் மனதை நெகிழச் செய்யும் நல்ல பல செய்திகள் வந்தபடியே இருக்கின்றன.

நாமக்கல் கவிஞரையும், பரலி சு. நெல்லையப்பரையும் பாராட்டி அரசு உதவிட முன்வந்த செய்தியினைப் படித்தபோது என் கண்கள் பனித்தன. வாழ்க என்று என் வாயும் மனமும் வாழ்த்தின. வள்ளியம்மைக்கு மணிமண்டபம் கட்டி நினைவுச் சின்னம் எழுப்பும் செய்தியைப் படித்துப் பரவசமடைந்தேன் கண்ணில் ஆனந்தக் கண்ணீர் வற்றிக் காயுமுன் மறுபடியும் ஒரு நல்ல செய்தி! துறவியர் பெருமான், மேலவை உறுப்பினராகிறார் என்று வந்தது. உள்ளத்துக்கு மகிழ்ச்சி அளிக்கத்தக்க இப்படி எத்தனையோ செய்திகள்!

நமது முதல்வர் ஓங்கி உலகளந்த வாமனனைப்போல அடியெடுத்து வைத்து எங்கே பாரதத்துக்குப் போய்விடுவாரோ? தமிழ்நாட்டில் அவரது கவனம் குறைந்துவிடுமோ? என்று எண்ணும்படியான நிகழ்ச்சிகளும் செய்திகளும் மற்றொரு புறம்! கம்பனும், திருவள்ளுவனும்தான் தமிழுக்குக் கதி என்பார்கள். அந்தக் 'க'வும், 'தி'யும் அவரது பேரிலேயே முதலும் கடையுமாக அமைந்துள்ளன. தமிழ்த் தாயின் செல்லப்பிள்ளை அவர்" என்று என்னைப் பாராட்டினார்.

அந்த விழாவில் பேசிய சிலம்புச் செல்வர் ம. பொ. சி. அவர்கள், "கழகம் எந்தச் சமுதாயத்தை ஆளுகிறதோ அந்தச் சமுதாயத்தின் பலதரப்பட்ட இயல்புகளையும் மதித்து நடக்க வேண்டும் என்பதை உணர்ந்து செயல்பட்டு வருகிறது" எனக் குறிப்பிட்டார். அவர் சுட்டிக்காட்டியதைப் போலவே எந்தத் தரப்பிலிருந்து வரும் எத்தகைய பிரச்சினைகளையும் கழக அரசு தனது அணுகும் முறையின் மூலம் மதித்து நடந்ததற்குப் பல சான்றுகள் உண்டு. சிலம்புச் செல்வரின் தலைமையிலுள்ள தமிழரசுக் கழகத்தின் சார்பில் அதே ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 19-ஆம் நாள் மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கேட்டு தமிழகம் முழுவதும் ஒரு நாள் கிளர்ச்சி நடத்துவதென்றும், சென்னையில் தொடர்ந்து நடத்துவது என்றும் முடிவெடுத்து அறிவித்திருந்தார்.

அதையொட்டி ஆகஸ்ட் 18-ஆம் நாள் தமிழக சட்டப்பேரவையில் சுதந்திரா கட்சியைச் சேர்ந்த சீமைச்சாமி அவர்களும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஏ. கே. சுப்பையா அவர்க ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர். அந்தத் தீர்மானத்திற்கு பதிலளித்து நான் பேசும்போது, "தமிழரசுக் கழகத் தலைவர் சிலம்புச் செல்வர் ம. பொ. சி. அவர்கள் நாளை நடத்தப்போகும் சுயாட்சி கிளர்ச்சியையொட்டி ஒத்திவைப்புத் தீர்மானம் எதுவும் தேவையில்லை என்று கருதுகிறேன்.

ஆளுங்கட்சியான தி. மு. கழகம் சுயாட்சிக் கொள்கையில் ஆழ்ந்த அக்கறையும் தீவிர ஈடுபாடும் கொண்டுள்ளது மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் தரப்பட வேண்டும் என்பதை நான் டெல்லி சென்றிருந்த போதும், எனது வேறு பல அறிவிப்புகளிலும் கோடிட்டுக் காட்டியிருக்கிறேன். அதற்கு முன்னால் பொதுப்படையாக மாநில சுயாட்சி என்று கூறிடாமல் என்னென்ன அதிகாரங்கள் நமக்குத் தேவை என்று நமக்கு நாமே தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

அதற்கென ஒரு குழு அமைத்திடல் வேண்டும். அந்தக் குழுவில் இந்தக் கருத்துக்களை ஒத்துக்கொள்கிற அரசியல் கட்சியினர் மட்டுமல்லாமல் அரசியல் சட்ட நுணுக்கங்களைப் புரிந்து வரையறுத்துக் கூறக்கூடிய நிபுணர்களும் இடம்பெறல் வேண்டுமென்று கூறியிருந்தேன். அந்த அடிப்படையில் மூவர் குழு ஒன்று நியமிக்கப்படவிருக்கிறது. மாநிலங்கள் தன்னாட்சி பெறும்வகையில் அரசியலமைப்புச் சட்டத்தை எந்தெந்த வகையில் திருத்தலாம் என்பது குறித்து மூவர் குழுவினர் தெரிவிப்பார்கள்.

அக் குழுவின் தலைவராக முன்னாள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பி. வி. ராஜமன்னார் இருப்பார். பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் ஏ. லெட்சுமணசாமி முதலியார், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி பி. சந்திராரெட்டி ஆகியோர் அக்குழுவில் இடம் பெறுவர். மூவர் குழு அறிக்கை வந்ததும் எல்லா கட்சித் தலைவர்களையும் கலந்துகொண்டு காங்கிரஸ் அல்லாத முதல்வர்களையும், காங்கிரஸ் முதல்வர்களையும் கலந்துகொண்டு அவர்களது நல்லாதரவைத் திரட்டுவோம்.

பிரச்சாரம் செய்வோம்; வாதாடுவோம்; வாதாடிப் பயனில்லையாயின் போராடுவோம்" என உறுதியளித்து திரு. ம. பொ. சி. அவர்களுக்குப் போராட்டத்தைக் கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்தேன். அதன்பேரில் அவர் சென்னையில் தொடர்ந்து போராட்டம் நடைபெறாது என்று கூறி ஒரு நாள் அடையாளபூர்வமாக மட்டும் நடத்துவதாகச் சொன்னார். நான் முதல்வர் பொறுப்பை ஏற்ற பிறகு முதன்முதலாக நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அனைத்துக் கட்சியினரும் பங்கு கொள்ள வேண்டுமென்று விரும்பினேன்.

கட்சிகளின் சார்பில் தனித்தனி சுதந்திரதினக் கூட்டங்கள், விழாக்கள் அன்றைய தினம் நடைபெற்றாலும்கூட எல்லாக் கட்சியினரும் ஒருசேர அணிவகுத்து விடுதலை நாளுக்கு விழாவெடுக்கும் நிலைமையினை அரசாங்கத்தின் சார்பில் உருவாக்கும் நோக்கத்துடன் ஆகஸ்ட் 15 சுதந்திர நாள் விழாவினை தலைமைச் செயலக கோட்டை முகப்பில் தமிழக அரசின் சார்பில் மாலை 7 மணி அளவில் கொண்டாடுவது என்றும் அந்தக் கூட்டத்தில் அனைத்துக்கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு உரையாற்றுவதென்றும் முடிவெடுத்து அன

ைத்துக் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. எனது அழைப்பையேற்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருத்திருமன், சிலம்புச் செல்வர் ம. பொ. சி., ஏ. கே. சுப்பையா, ஏ. ஆர். மாரிமுத்து, கே. ஆர். நல்லசிவம், ஏ. பாலசுப்ரமணியம், பி. கே. மூக்கையா தேவர், காரைக்குடி சா. கணேசன், எஸ். எஸ். ராமசாமி படையாச்சியார் ஆகிய பல்வேறு கட்சித் தலைவர்களும் அந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். "இன்றைக்காவது ஒரு நாள் வெவ்வேறு மேடைகளில் ஒருவரையொருவர் ஏசிப் பேசிக் கொண்டிராமல் ஒரு மேடையில் அனைவரும் சந்தித்து விடுதலை விழா எடுப்போம் என்ற ஆசையோடுதான் இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

டெல்லிப்பட்டணத்தில் பிரதமர் நிகழ்த்துகின்ற விடுதலை நாள் விழா உரையினை பத்திரிகைகளில் படிக்கிறோம். விழா நிகழ்ச்சிகளை படங்களில் பார்க்கிறோம். இனி விடுதலை நாள் விழாவின்போது இந்தியப் பிரதமர் ஆண்டுக்கு ஒரு மாநிலமாக வரவேண்டும். அந்த மாநிலத் தலைநகரங்களில் பிரதமர் கலந்து கொள்கின்ற விடுதலை நாள் விழா நடைபெற வேண்டும்" என்று அந்த விழாவில் எனது கருத்தினை வெளியிட்டேன்.

தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் இப்படி எல்லா கட்சியினரும் கலந்து கொண்டு தலைமைச் செயலக கோட்டை முகப்பில் விழா நடத்துவதற்கு இயலாமல் போயிற்று! ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15-ல் மாநில தலைநகரங்களின் தலைமைச் செயலகத்தில் தேசியக் கொடியை ஆளுநர் ஏற்றுவது வழக்கமாக இருந்தது. அந்தக் கொடியேற்றும் உரிமை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதலமைச்சர்களுக்கு ஏன் அளிக்கப்படக் கூடாது என்று நான் டெல்லிக்குத் தொடர்ந்து கடிதங்கள் எழுதியதாலும் நேரிலே சென்று வாதாடியதாலும் இனி ஜனவரி 26 குடியரசு தின விழாவில் மட்டும் கவர்னர் கொடியேற்றுவது என்றும், ஆகஸ்ட் 15 விடுதலை நாள் விழாவில் முதலமைச்சர்களே கொடியேற்றுவதென்றும் தமிழ் நாட்டிற்கு மாத்திரமல்லாமல் எல்லா மாநிலங்களுக்கும் உரிமை வழங்கப்பட்டது.

எங்கே சந்து பொந்து கிடைக்கும், நுழைந்து விடலாம் என்று எதிர்பார்த்திருக்கும் இந்தி தணிக்கைச் சான்றிதழில் தலை நீட்டியது 69 ஆகஸ்ட் மாதத்தில் தான்! ஒரு தமிழ்த் திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு, அதற்கு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள் அதனை இந்தி மொழியில் படத்தயாரிப்பாள- ரிடத்தில் கொடுத்தார்கள். அந்தத் தகவல் எனக்குக் கிடைத்தவுடன் இந்தியப் பிரதமருக்கு அவசரத் தந்தி ஒன்று அனுப்பினேன். "தமிழ்த் திரைப்படங்களுக்கு மத்திய தணிக்கைக் குழு முன்பு தந்தது போல ஆங்கிலத்தில் சான்றிதழ் தராமல் ஆங்கிலத்திலும், இந்தியிலும் சான்றிதழ் தரும் முடிவு கண்டு எனது வேதனையைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுவரை இருந்து வந்த நடைமுறையை மாற்றியமைப்பது விரும்பத்தக்கதல்ல. இந்த நடவடிக்கை திரைப்பட உலகில் மட்டுமல்லாமல், தமிழக மக்களிடையேயும் மாபெரும் மனக்கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தக்க சமயத்தில் தலையிட்டு தற்போது நடைமுறையில் இருப்பதையே (ஆங்கில சான்றிதழ் தருவதையே) மீண்டும் அமுலாக்கிட விரும்புகிறேன். பிரதமர் உடனடியாக இதில் தலையிட்டு அக்கறை செலுத்தி ஆங்கிலத்தில் மட்டுமே சான்றிதழ் தரும் நடைமுறையினை மேற்கொள்ள உத்தரவிட தமிழக அரசின் சார்பில் உறுதியாக வலியுறுத்துகிறேன்."

எனது தந்தியின் விளைவாக மறுநாளே டெல்லியிலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலத்திலேயே சான்றிதழ் வழங்குமாறு, மத்திய பிலிம் தணிக்கை போர்டு தனது பிராந்திய போர்டுகளுக்கு உத்தரவிட்டது.