உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/பக்தவத்சலனார் பாராட்டு
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

பக்தவத்சலனார் பாராட்டு · 162 / 391

பக்தவத்சலனார் பாராட்டு 'நி லா நிலா ஓடி வா!' என்று குழந்தைகளுக்குப் பாடிக்காட்டி மகிழ வைக்கவும், "கோல நிலா வந்திங்கே கொஞ்சுகின்ற இரவில் காதலோடு நாம் களித்திருப்போம்" எனப் பேசி காதலர்கள் குலவிடவும், வானத்தில் வளர்ந்தும் தேய்ந்தும் அழகு காட்டிக் கொண்டிருக்கும் சந்திரன் பரமசிவனின் ஜடாமுடியில் வீற்றிருக்கிறான் என்று புராணீகர்கள் கூறுவர். அந்தச் சந்திரனையும், சூரியனையும் ராகு, கேது என்ற பாம்புகள் விழுங்குவதால்-அப்படி விழுங்கப்படும் நேரத்தில் கிரகணம் காணப்படுகிறது என்றும் கதைகள் கட்டியுள்ளனர்.

ஆனால் விஞ்ஞானப் புதுமையில் சந்திரனும் பூமியைப் போல விண்வெளியில் ஒருகிரகமே என்று உறுதிப்படுத்தப்பட்டது மாத்திரமல்ல, அந்தக் கிரகத்திற்கே பயணம் செய்து அதில் காலடி எடுத்து வைத்துவிட்டு மனிதன் திரும்பி வரவும் முடியும் என்ற அற்புதத்தை விளைவித்த ஆண்டு 1969 ஆகும். அந்த ஆண்டு ஜூலை மாதம் 16-ஆம் தேதி இரவுதான் அமெரிக்காவிலே உள்ள கென்னடி முனையிலேயிருந்து சந்திரனுக்குச் செல்ல மனிதன் புறப்பட்டான்.

பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தொலைவு இரண்டரை லட்சம் மைல்களாகும். அங்கே செல்வதற்கு அனுப்பப்பட்ட "அப்பாலோ 11" என்ற ராக்கெட்டில் அமெரிக்க விண்வெளி வீரர்களான ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின், காலின்ஸ் ஆகிய மூவரும் பயணம் செய்தனர். அந்தக் காலக்கட்டத்தில் சோவியத் ரஷ்யாவும் சந்திரனுக்கு ஆள் இல்லாத ராக்கெட் ஒன்றை அனுப்பியது. அதுவும் ஜூலை மாதம்தான்! அந்த ராக்கெட்டிற்கு "லூனா" என்று பெயர்!

அது சந்திரனில் ஜூலை 21-ஆம் நாள் சென்று இறங்கியது. 16-ஆம் தேதி புறப்பட்ட அமெரிக்காவின் அப்பாலோ 11 பூமிக்கு மேல் 400 மைல் தூரம் சென்று பூமியைச் சுற்றத் தொடங்கி, அதன் பின் வானவெளியில் பறந்து கொண்டே ஜூலை 19-ஆம் தேதி காலை 8.42 மணிக்கு சந்திரனை நெருங்கியது. அதன்பிறகு இரவு 10.56 மணியிலே இருந்து சந்திரனைச் சுற்றத் தொடங்கியது. ஜூலை 20, மாலை 6.30 மணிக்கு ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின் இருவரும் தாய் ராக்கெட்டிலேயிருந்து-அத்துடன் இணைக்கப்பட்ட பூச்சி வடிவ வண்டிக்கு ஊர்ந்து சென்றார்கள்.

அந்தப் பூச்சி வண்டி சரியான நிலையில் உள்ளதா என்று நன்கு சோதித்துப் பார்த்தார்கள். எல்லாம் சரியாக இருப்பதாகத் தெரிவித்ததின் பேரில் தாய் ராக்கெட்டில் இருந்து பூச்சி வண்டியைப் பிரித்துக்கொண்டு, சந்திரனில் போய் இறங்கும்படி பூமியிலுள்ள வானவெளி நிபுணர்கள் அவர்களுக்கு கட்டளை பிறப்பித்தார்கள். இரண்டரை லட்சம் மைல்களுக்கப்பால் உள்ளவர்களிடம் பூமியிலிருந்து விஞ்ஞானிகள் அவ்வாறு ஆணையிட்ட அதிசயத்தை நினைத்தாலே இப்போதும் உடல் சிலிர்க்கிறது.

விஞ்ஞானப் புதுமை ஒன்றை உலகத்திற்குத் தருவதற்காகத் தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் சந்திர மண்டலம் சென்ற அந்த வீரர்களை எப்படித்தான் பாராட்டுவது என்று தெரியவில்லை. பூமியிலிருந்து கிடைத்த உத்தரவின்படி ஆல்ட்ரின் பூச்சி வண்டியில் இயந்திரத்தை இயக்கினார். அன்று இரவு சரியாக 11.17 மணிக்கு தாய் ராக்கெட்டிலேயிருந்து பூச்சி வண்டி பிரிந்து சந்திரனை நோக்கிச் செல்லத் தொடங்கியது. அப்போது தாய் ராக்கெட் சந்திரனை பதிமூன்றாவது தடவையாகச் சுற்றிக் கொண்டிருந்தது.

அந்த ராக்கெட்டில் காலின்ஸ் மாத்திரம் இருந்தார் தாய் ராக்கெட்டிலிருந்து பிரிந்த பூச்சி வண்டி இரண்டரை மணிநேரம் பறந்து சென்று இரவு 1.39 மணிக்கு சந்திரனில் போய் இறங்கியது. அதிலிருந்து ஆம்ஸ்ட்ராங்கும், ஆல்ட்ரின்னும் விருந்து சாப்பிட்டுவிட்டு நன்றாக ஓய்வு எடுத்துக் கொண்டார்கள். அங்கிருந்து அவர்கள் அனுப்பிய செய்தியில் "சந்திரனிலிருந்து பார்க்கும்போது பூமி வட்டவடிவமாய், பெரிதாய், அழகாய் தெரிவதாக" அவர்கள் தெரிவித்தார்கள்.

இரவு முழுவதும் பூச்சி வண்டிக்குள்ளே இருந்தவர்கள் ஜூலை 21 காலை 8.26 மணிக்கு முதன்முதலாக சந்திரனின் தரை மீது கால் வைத்தார்கள். முதலில் சந்திரனில் அடி வைத்தவர் ஆம்ஸ்ட்ராங். அப்போது அவர் "நான் எடுத்து வைப்பது சிறிய அடிதான்; ஆனால் மனிதகுல நன்மைக்காக எடுத்து வைக்கும் மிகப் பெரிய அடியாகும்" என்று கூறினார்.

அதற்கு இருபது நிமிடம் கழித்து ஆல்ட்ரின் சந்திரனில் கால் எடுத்து வைத்தார். அவர்கள் இருவரும் சந்திரனுக்குச் சென்றதைக் குறிக்கும் நினைவுச்சின்னத்தை ஆம்ஸ்ட்ராங் திறந்துவைத்தார். அந்தச் சின்னத்தில் பின்வருமாறு எழுதப்பட்டது. "1969-இல் பூமி கிரகத்திலிருந்து மனிதர்களாகிய நாங்கள் முதன் முதலாக இங்கே வந்து கால் வைத்தோம். மனித குலத்தின் நன்மைக்காகவே நாங்கள் வந்தோம்" என்று எழுதப்பட்டிருந்தது.

அதில் ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின், காலின்ஸ், அன்றைய அமெரிக்க அதிபர் நிக்சன் ஆகியோர் கையெழுத்திட்டிருந்தார்கள். அமெரிக்கக் கொடி ஒன்றையும் அவர்கள் சந்திரனில் நட்டார்கள். டெலிவிஷன் காமிராவைக் கொண்டு சந்திரனின் தோற்றத்தை நன்கு தெரியும்படி படம் பிடித்து பூமிக்கு அனுப்பினார்கள். இருபது பவுண்டு கல், மண் ஆகியவற்றை சந்திர மண்டலத்திலிருந்து சேகரித்துக் கொண்டார்கள். அவர்கள் அங்கே சுமார் மூன்று மணி நேரம் தங்கியிருந்தார்கள்.

பிறகு இருவரும் பூச்சி வண்டிக்குத் திரும்பி அதன் கதவுகளை மூடி தாழிட்டார்கள். பிறகு இரவு 11 மணி அளவில் பூச்சி வண்டியை தாய் ராக்கெட்டை நோக்கி செலுத்தினார்கள். சந்திரனிலிருந்து பூச்சி வண்டி சரிவர கிளம்ப வேண்டுமே என்று பூமியில் இருந்த விஞ்ஞான நிபுணர்கள் கவலையோடு இருந்தார்கள். அந்த வண்டி கிளம்பா விட்டால் வானவெளி வீரர்கள் ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின் இருவரும் பூமிக்குத் திரும்பியிருக்கவே முடியாது.

இன்னும் சில மணி நேரம் இருந்து பின் சந்திர மண்டலத்திலேயே பிணமாகியிருப்பார்கள். அவ்வாறு இல்லாமல் பூச்சி வண்டி சரிவர இயங்கித் தாய் ராக்கெட்டை நோக்கி வரத் தொடங்கியது. அதுவரையில் சந்திரனைச் சுற்றிக் கொண்டிருந்த தாய் ராக்கெட்டுடன் 22-ஆம் தேதி அதிகாலை 3மணி அளவில் பூச்சி வண்டி வந்து இணைந்து கொண்டது. பிறகு அங்கிருந்து புறப்- பட்ட தாய் ராக்கெட் பூமியை நோக்கி பறந்து வந்து ஜூலை 24-ஆம் தேதி இரவு 10 மணி அளவில் அமெரிக்காவை அடுத்த பசிபிக் கடலில் உள்ள ஹவாய் தீவிற்கு அருகே குறிப்பிட்ட ஒரு இடத்தில் பத்திரமாக வந்திறங்கியது.

விண்வெளி வீரர்களை மீட்பதற்கு அமெரிக்காவின் போர்க் கப்பல் ஒன்று அங்கு தயாராக நின்று கொண்டிருந்தது. அந்தக் கப்பலுக்கு ஒன்பது மைல் தூரத்தில் இறங்கிய ராக்கெட்டிலிருந்து ஹெலிகாப்டர் விமானத்திலே ஏறி மூன்று வானவெளி வீரர்களும் அந்தக் கப்பலை அடைந்தனர். அவர்களை வரவேற்க அமெரிக்க அதிபர் நிக்சன் அந்தக் கப்பலில் தயாராக இருந்தார். திரைப்படங்களில் மட்டுமே காட்டக் கூடியதும், காணக் கூடியதுமான ஒரு கற்பனைக் காட்சியை விஞ்ஞானிகள் தங்களது ஆற்றலின் காரணமாக உண்மையாகவே நடத்திக் காட்டி மனித குலத்தின் அறிவுக்குக் கூர்மையேற்றினர்.

சந்திர மண்டலத்திலிருந்து எடுத்து வரப்பட்ட கற்கள் உலகத்தின் பல நாடுகளுக்கும் பார்வைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றில் ஒரு கல்துண்டை தமிழ் நாட்டிற்கும் அனுப்பி வைத்தனர். அந்தக்கல் சென்னையில் தலைமைச் செயலகத்தில் வைக்கப்பட்டு அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், செய்தியாளர்களும் மற்றும் பலரும் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தக் கல்லைப் பார்க்கும் பொழுது நம் தெருவில் காணக் கூடிய ஒரு சாதாரண கல்தானே என எண்ணிடத் தோன்றினாலும் அந்தக் கல்லைக் கொண்டு வந்ததின் மூலம் பூமியைப் போன்றே சந்திரனும் ஒரு கிரகம் என்பதும் சந்திரனைப் போன்ற பல கிரகங்கள் விண்வெளியில் இருக்கின்றன என்பதும் அதுவரையில் ஆராய்ச்சிக் கட்டுரைகளாக இருந்த நிலை மாறி இப்போது அனுபவ ரீதியான உண்மைகளாகி விட்டன.

அதே ஜூலை மாதத்தில் சென்னையில் நடைபெற்ற ஒரு கலை நிகழ்ச்சி குறித்தும் முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். ஆந்திர மாநிலத்தில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு கோடிக் கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள இழப்புகள் ஏற்பட்டன. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நடிகர் என். டி. ராமராவ் தலைமையில் தமிழ் நடிகர்கள், தெலுங்கு நடிகர்கள் இணைந்து பல இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி அவற்றின் வாயிலாகக் கிடைத்த ஆறுலட்சம் ரூபாயை 26-ஆம் தேதி அன்று தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் என் தலைமையில் ஒரு பெரிய விழா ஏற்பாடு செய்து ஆந்திர முதலமைச்சர் பிரமானந்த ரெட்டி அவர்களையும் அந்த விழாவிற்கு அழைத்து என் மூலம் அவரிடம் வழங்கச் செய்தார்கள்.

அந்த விழாவில் எம்.ஜி.ஆர். அவர்களும் கலந்து கொண்டார். அன்று நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் என். டி. ராமராவ் அவர்கள் ராமனாகவும், கிருஷ்ணனாகவும் வேடமணிந்து நடித்தார். அந்த விழாவில் நான் பேசும்போது தமிழ் நாட்டைச் சேர்ந்த நானும் ஆந்திராவைச் சேர்ந்த பிரமானந்த ரெட்டியும், மைசூரைச் சேர்ந்த (கர்நாடகம்) தொழிலமைச்சர் ராஜசேகரமூர்த்தியும், கேரளாவைச் சேர்ந்த எம்.ஜி.ஆரும் ஒரே மேடையில் இருப்பதைப் பார்க்கும்போது திராவிட நாடே இந்த மேடையில் இருப்பதைப்போல் தோன்றுகிறது.

நான் குறிப்பிடும் திராவிடநாடு "பிரிய வேண்டும்" என்ற திராவிட நாடு அல்ல; "ஒருவருக்கொருவர் பிரியம்வேண்டும் என்று கோரும் திராவிட நாடு ஆகும்" என்று குறிப்பிட்டேன். அந்த ஜூலை மாத இறுதியில் கேரளாவிலிருந்து வெளிவரும் "மலையாள மனோரமா" என்ற பிரபல ஏட்டில் என்னைப் பற்றிச் சில குறிப்புகளை எழுதியிருந்தார்கள். "எல்லா அரங்கங்களிலும் தலைவருடைய காலடியைப் பின் தொடர்ந்து வந்த ஒரு தொண்டன் கருணாநிதி. அண்ணா அவர்கள் ஒரு நாடக நடிகராக-நாடக ஆசிரியராக-திரைப்பட கதை வசன எழுத்தாளராக இருந்தாரென்றால், கருணாநிதியும் இந்தத் துறைகளில் தனது தெளிவான முத்திரையைப் பதித்தவர் என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

புகழ் வாய்ந்த சொல்லாற்றல் மிக்கவராய் விளங்கியவர் அண்ணா. அந்தத் துறையிலும் அண்ணாவின் சரியான மாணவராய் கருணாநிதி விளங்குகிறார். எனவே எல்லா வகையிலும் தலைவரைப் பின் தொடர்கின்ற அருகதை உள்ளவர் கருணாநிதி என்பது தெளிவாகும். ஒரேபோக்கில் போய்க்கொண்டிருந்த திரை உலகை அந்தப் போக்கிற்கு எதிராக தன் எழுதுகோல் அசைவால் மாற்றி அமைத்தவர் கலைஞர் கருணாநிதி. அவருடைய பராசக்தி என்ற திரைப்படம் கலையோடு சமூகப் புரட்சியை உருவாக்கியது என்பதையும் நினைவில் வைக்க வேண்டும்.

நெ.-12 அண்ணாவின் அமைச்சரவையில் ஒரு அமைச்சராக இருந்து அவர் செய்த பணி பாராட்டத் தகுந்தது. சூறாவளியைப் போல் உண்டான ஒரு கிளர்ச்சியை வெகுநுட்பமான முறையில் அவர் தீர்த்து வைத்தது அவரது கீர்த்திக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். புகழ்வாய்ந்த ஒரு தலைவருக்குப்பின் வாரிசாக இன்னொருவர் அமைவதென்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் கருணாநிதி முதலமைச்சராக வந்தபின் பல செயல்களின் மூலம் அவர் அண்ணாவின் சரியான வாரிசு என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

முதலமைச்சர்களில் அவர் ஒரு கலைஞர். கலைஞர்களில் அவர் ஒரு முதலமைச்சர். இவ்வாறான கருணாநிதிக்கு வயது 45 ஆகிறது. வளமான தமிழ்நாட்டை முன்னேற்ற அவருக்குத் தேவையான சக்தி பெருகட்டும்." இவ்வாறு வெளிமாநில ஏடுகளான மலையாள மனோரமா போன்றவைகளில் எழுதப்பட்ட புகழாரங்களை நான் அப்படியே எனக்கு உரியதாக எடுத்துக்கொள்ளாமல், அண்ணாவின் பாதையில் நான் ஊக்கத்தோடு பணியாற்ற வேண்டும் என்பதற்காக உற்சாகப்படுத்தப்படுகிறேன் என்றுதான் எண்ணிக் கொண்டேன்.

இதேபோன்ற பாராட்டுக்கள் மாற்றுக் கட்சியிலே இருந்தவர்களாலும் எனக்கு வழங்கப்பட்டது உண்டு. கட்சி சார்பற்ற பெருமக்களாலும் நான் பெருமைப்படுத்தப்பட்டிருக்கின்றேன். அப்போதும் சரி, எப்போதும் சரி, அந்தச் சிறப்புக்கள் அனைத்துக்கும் உரியவர் என்னை ஆளாக்கிய அண்ணாதான் என்பதிலே எனக்கு ஏற்படும் மனநிறைவு ஒன்றே என்னை வாழவைத்துக் கொண்டிருந்தது; இப்போதும் வாழவைத்துக் கொண்டிருக்கிறது. எனது 46-வது பிறந்தநாளை விழாவாக நடத்த சென்னை அனைத்துக் கல்லூரி மாணவர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

என். வி. என். சோமு, ஜின்னா, துரைமுருகன், ஜீவா கலைமணி, பிச்சை அரசு, சதாசிவம், கோதண்டராமன் ஆகியோர் முன் நின்று ஏற்பாடு செய்த அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ள மறுத்து விட்டேன். பொதுப் பணிக்கோ அல்லது கட்சிக்கோ நிதியளிக்கும் விழாவாக ஏற்பாடு செய்யப்படும் பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் மட்டுமே என்னைப் பொறுத்தவரையில் கலந்துகொள்வது என்று நான் உறுதியாக இருந்தேன். நான் கலந்துகொள்ள இயலாததற்கான காரணத்தை விளக்கி மாணவ உடன்பிறப்புக்களுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதி அனுப்பினேன்.

அந்த விழாவில் முன்னாள் முதலமைச்சர் பெரியவர் பக்தவத்சலம், சிலம்புச்செல்வர் ம. பொ. சி., நாவலர் நெடுஞ்செழியன், பல்கலைக்கழக துணைவேந்தர் சுந்தரவடிவேலு. இந்திய யூனியன் முஸ்லீம்லீக் தலைவர்களில் ஒருவரான அப்துஸ் சமத், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்களில் ஒருவரான ஏ.எஸ்.கே. அய்யங்கார் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவிற்கு என். வி. என். சோமு தலைமையேற்றார். அந்த விழாவில் நாவலர் பேசும்போது "கலைஞர் கருணாநிதிக்கு வயது 46 என்றார்கள்; ஆயினும் திராவிடர் கழகத் தொண்டர் கருணாநிதிக்கு வயது 37 என்றும், எழுத்தாளர் கருணாநிதிக்கு வயது 26 என்றும், பேச்சாளர் கருணாநிதிக்கு வயது 25 என்றும், கலைஞர் கருணாநிதிக்கு வயது 23 என்றும், தி.

மு. கழக முன்னணி வீரர் கருணாநிதிக்கு வயது 20 தான் என்றும், போராட்ட வீரர் கருணாநிதிக்கு வயது 14 என்றும், கழகப் பொருளாளர் கருணாநிதிக்கு வயது 9 என்றும், அமைச்சர் கருணாநிதிக்கு வயது 2 1/2 என்றும், முதலமைச்சர் கருணாநிதிக்கு வயது ஆறு மாதம் என்றும், கழகத் தலைவர் கருணாநிதிக்கு வயது ஆறு நாள் தான் என்றும் கூறியதோடு இப்படி, பல்வேறு திறமைகள் கொண்ட அவரை அத்தனை பேரும் பாராட்டுகிறீர்கள். அவரைப் பாராட்டுவதை என்னைப் பாராட்டுவதாகத்தான் நான் கருதுகிறேன்.

எனக்கும் அவருக்கும் எந்தவிதமான கருத்து வேறுபாடும் கிஞ்சிற்றும் இல்லை. மாணவ உலகம் கலைஞரைப் பின்பற்றி அவரை அடிப்படையாகக் கொண்டு தங்களுக்கென தனித் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டார். அதே விழாவில் பேசிய சிலம்புச் செல்வர்-"இன்று காலை பத்திரிகையைப் பிரித்ததும் கணபதியா பிள்ளையின் பரிந்துரையை ஏற்று விவசாயத் தொழிலாளர்களுக்கு நியாயக்கூலி வழங்க வகை செய்யும் வகையில் அவசரச்சட்டம் பிறப்பித்திருப்பதைப் பார்த்தேன்.

இங்கே மேடையில் கலைஞர் அவர்கள் இருந்தால் கட்டித் தழுவி பாராட்டுக்கள் கூற வேண்டுமென்று தேடித் தேடிப் பார்த்தேன். அவர் இல்லை. சமுதாயத்தின் மேல் தளத்தில் உள்ள சிலருக்காக அல்ல-அடித்தளத்தில் உள்ள பலருக்காக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது கடந்த வாரம் டெல்லியில்; இந்த வாரம் சென்னையில். டெல்லிக்குச் சென்னை எந்த வகையிலும் சளைத்தது அல்ல என்பதை கலைஞர் இதன் மூலம் நிரூபித்து விட்டார்" என்று பாராட்டினார்.

முன்னாள் முதலமைச்சர் பெரியவர் பக்தவத்சலம் அவர்களோ-"கருத்து வேற

்றுமைகள் சில பிரச்சினைகளில் இருக்கலாம்; எல்லாவற்றிலும் கருத்து வேற்றுமை இருப்பது கூடாது; இருந்தால் உயர்வடைய முடியாது. தமிழக முதலமைச்சர் கலைஞர்; சிறந்த கலைஞர்; அவர் இன்று முதலமைச்சராக இருக்கிறார். முதலமைச்சராக கலைஞர் இருப்பது சிறப்புடையதாக இருக்கிறது. கலை என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நெருங்கியிருக்க வேண்டிய ஒன்று. 45 வயது முடிந்து கலைஞருக்கு 46 வயது நடந்து கொண்டிருக்கிற நிலையில் அவர் 45 ஆண்டுகள் எப்படி வாழ்ந்து இன்று முதலமைச்சராக ஆகியிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

பெரியவர்களின் வரலாறுகளை நாம் புறக்கணிக்கக்கூடாது. கலைஞர் அவர்களின் வரலாற்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் பத்திரிகையில் நெஞ்சுக்கு நீதி என்று தமது வரலாற்றை எழுதி வருகிறார். கொஞ்சம்தான் எழுதியிருக்கிறார். ருசிகரமாக இருக்கிறது. அவரது வரலாற்றைப் படிக்கும்போது அதிலுள்ள கருத்துக்கள் நம்பிக்கை ஏற்படுத்தும் நிலையில் இருக்கிறது. அவர் எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார் என்பது அதில் தெரிகிறது.

கலைஞர் எவ்வாறு வாழ்க்கையில் அபிவிருத்தி அடைந்திருக்கிறார் என்பதும் விளங்குகிறது. கலைஞர் பெரும் அரசியல்வாதியாக இருக்கிறார். கலையைப்பற்றி அரசியல்வாதிகளுக்கு அவசியம் தெரிய வேண்டும். கலைஞரின் வாழ்க்கையைக் காணுகிறபோது வாழ்க்கையில் அவர் தனது திறனால், ஆற்றலால், முயற்சியால், புத்திக்கூர்மையால் அவர் இன்று உயரியபதவியை அடைந்திருக்கிறார். முயற்சியோடு காரியங்களில் ஈடுபட்டால், சீரியமுறையில் ஈடுபட்டால், உழைத்தால் முன்னேற முடியும் என்ற நம்பிக்கையை நமக்கு ஊட்டுகிறார்.

அவர் முதலமைச்சராக இருப்பதால் மட்டுமல்ல; நாங்கள் ஆளுங்கட்சியாக இருந்தபோதே எனது கவனத்தைக் கவர்ந்தவராக இருந்தார். எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தபோதே அவரது திறன் தெரிந்தது. நான் உள்ளூர பாராட்டியிருக்கிறேன்; ஏன்? வெளிப்படையாகவும் சிலசமயம் பாராட்டியிருக்கிறேன். ஆளுங்கட்சியிலே இருந்த எங்களை எப்படி மாட்டி வைக்க வேண்டும் என்ற முறையில் பேசுவார். கடுமையாகத் தாக்கிப் பேசினாலும் அதில் அவரது ஆற்றல் இருக்கக் கண்டேன்.

இன்று அப்படிப்பட்டவரே முதலமைச்சராக இருக்கக் காண்கிறேன். தி. மு. க.வில் வேற்றுமை இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. கருத்து வேற்றுமைகள் கட்சிக்குள் இருந்ததாகக் கருதப்பட்ட நிலையில் கலைஞர் கருணாநிதி அந்தப் பூசலைத் தீர்த்து விட்டார். எப்படி என்றால் அவர் விட்டுக் கொடுத்திருக்கிறார். விட்டுக் கொடுத்திருப்பது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது" என்ற அளவிற்குப் பாராட்டினார். இப்படி என்னைப் பாராட்டியவர்கள் இடமாற்றத்தின் காரணமாகவோ அல்லது கருத்து மாற்றங்களின் காரணமாகவோ சில சமயங்களில் என் மீது மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ தாக்குதல் கணைகளைத் தொடுத்திட்டபோது முன்பு அவர்கள் என்னை வாழ்த்திப் போற்றியதை நினைவுகூர்ந்து அவர்களிடம் தனிப்பட்ட முறையில் அன்புடனும், மரியாதையுடனும் நடந்து கொள்வதிலிருந்து நான் விலகிச் சென்றதே கிடையாது.