நெஞ்சுக்கு நீதி
வீழ்ச்சி தடுக்கப்பட்டது! · 161 / 391
வீழ்ச்சி தடுக்கப்பட்டது! இரண்டு நாள் டெல்லியில் பல்வேறு கட்சித் தலைவர்களுடனும், சில மாநில முதலமைச்சர்களுடனும் கலந்துரையாடியதில் எடுத்த முடிவை நான் டெல்லியில் வெளியிடாமல் சென்னைக்கு வந்தபிறகு வெளியிடுவது என்ற ஏற்பாட்டுடன் டெல்லியிலிருந்து திரும்பினேன். சென்னையில் பத்திரிகையாளர்கள் என்னைச் சந்தித்துக் கேட்டபோது ஜூலை 24-ஆம் நாள் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்றும் அதற்குப் பிறகுதான் டெல்லியில் கழகமும், மற்றக் கட்சிகளும் வேட்பாளர் குறித்து எடுத்த முடிவை அறிவிக்க முடியும் என்றும் நான் தெரிவித்தேன்.
நான் சென்னைக்கு வந்தவுடன் திடீரென்று மூதறிஞர் ராஜாஜி அவர்கள் நான் சற்றும் எதிர்பாராத வகையில் என் வீட்டிற்கு வந்துவிட்டார். சஞ்சீவ ரெட்டிக்கும், வி. வி. கிரிக்கும் காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் சிதறி விடக்கூடும் என்பதால், சுதந்திரா கட்சியின் ஆதரவு பெற்ற தேஷ்முக் அவர்களை தி.மு கழகம் ஆதரிக்க வேண்டுமென்று ராஜாஜி அவர்கள் என்னிடத்திலே வலியுறுத்தினார். அவருடைய ஆலோசனையை நான் கேட்டிருந்தால் தேஷ்முக்கும் வெற்றி பெற்றிருக்க முடியாது; அதே நேரம் வி.வி.
கிரியும் தோற்கடிக்கப்பட்டிருப்பார். சஞ்சீவ ரெட்டிக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்திருக்கும். எனவே ராஜாஜி அவர்களின் கருத்தை தி.மு. கழகம் ஆதரிக்க இயலவில்லை என்பதை நான் அவரிடமே தெரிவிக்க வேண்டியதாயிற்று! ஜூலை 26-ஆம் நாள் அன்று தி.மு. கழகத்தின் முடிவை நான் அறிவித்தேன். இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சோஷலிஸ்ட், முஸ்லீம் லீக், அகாலி தளம் ஆகிய கட்சிகளுடன் கலந்து பேசியதற்கேற்ப தி.மு.கழகமும் வி.வி.கிரி அவர்களுக்குக் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு தரும் என்பதே அந்த அறிவிப்பாகும்.
ஜூலை 30 அன்று பாராளுமன்ற காங்கிரஸ் கட்சிக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்கு சஞ்சீவ ரெட்டிக்கு வாக்களிக்குமாறு கடிதம் எழுத வேண்டுமென யோசனை தெரிவிக்கப்பட்டது. அந்த யோசனையை ஏற்க இந்திரா காந்தி மறுத்து விட்டார். சஞ்சீவ ரெட்டி அவர்களை பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் வேட்பாளராக முன்மொழிந்திருந்தாலும் கூட, அவரது வெற்றி தனிப்பட்ட முறையில் தன்னைப் பெரிதும் பாதிக்கும் என்று கருதினார்.
அந்தத் தேர்தல் முடிவு வி.வி. கிரி அவர்களுக்குப் பாதகமாக இருந்தால் காங்கிரஸ் இயக்கத்தின் மூத்த தலைவர்களின் கை ஓங்கிவிடும், அதன் காரணமாக இந்திரா காந்தி பதவியிலிருந்து இறங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் அரசியல் வட்டாரங்கள் திடமாக நம்பின. அந்தக் காரணத்தினால் பிரதமர் இந்திரா அவர்கள் முரண்பட்ட ஒரு நிலையை மறைமுகமாக எடுக்க நேர்ந்தது. ஆகஸ்ட் 3-ஆம் தேதி அன்று வேட்பாளர் வி. வி. கிரி அவர்கள் சென்னைக்கு வந்து எனது இல்லத்தில் என்னைச் சந்தித்துப் பேசினார்.
வெற்றி வாய்ப்பு சூழ்நிலை எவ்வாறு உள்ளது என்பது குறித்து இருவரும் நீண்ட நேரம் விவாதித்தோம். கழகம் தனது ஆதரவை அவருக்குத்தர முன்வந்ததால் அவரது வெற்றி பிரகாசமாக உள்ளது என்று தனது நன்றியை அவர் முன்கூட்டியே அறிவித்தார். அவர் இந்தியா முழுவதும் சென்று பல்வேறு மாநிலங்களில் ஆதரவு திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். ஆகஸ்ட் 6-ஆம் தேதி பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர்களின் கூட்டம் மீண்டும் டெல்லியில் கூடியது.
அதில் பிரதமர் இந்திர காந்தி எடுத்துள்ள இரட்டை நிலை குறித்து காரசாரமான விவாதங்கள் எழுந்தன. திருமதி தாரகேஸ்வரி சின்கா என்ற பிரபல காங்கிரஸ் உறுப்பினர் இந்திராகாந்தியிடம் நேரடியாகவே மோதினார். அதன் காரணமாக இரு தரப்பிலும் பெரும் குழப்பம் ஏற்பட்டது. குழப்பம் ஓரளவு அடங்கிய பிறகு அந்தக் கூட்டத்தில் இந்திராகாந்தி பேசும்போது "காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பா மீது பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி முழு நம்பிக்கை வைத்திருக்கிறது; ஜனாதிபதி தேர்தல் பற்றிப் பல கதைகள் கட்டிவிடப்படலாம்; ஆனால் கட்சியின் முடிவுப்படி சஞ்சீவ ரெட்டியையே நான் ஆதரிக்கிறேன்.
இதை முன்பும் சொல்லியிருக்கிறேன்" என்று குறிப்பிட்டார். மீண்டும் இந்திய அரசியல் வட்டாரத்தில் பிரதமரின் இந்த அறிவிப்பால் ஒரு புதுக் குழப்பம் ஏற்பட்டது. எனவே சஞ்சீவ ரெட்டியை ஆதரித்து அறிக்கை விடும்படி காங்கிரஸ் கட்சியின் பெரும் தலைவர்கள் பிரதமர் இந்திராவைக் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் அவர் அப்படி அறிக்கை விடுவதற்கு இயலாதென கண்டிப்பாக மறுத்துவிட்டார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் வாக்குகளே காங்கிரஸ் கட்சி வேட்பாளரான சஞ்சீவ ரெட்டிக்கு கிடைக்குமா என்ற சந்தேகம் எழத் தொடங்கியது.
காங்கிரஸ் கட்சியின் இளைஞர்கள் குழுவின் தலைவராக விளங்கிய சந்திரசேகர் ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் தனித்து நிற்க வேண்டுமென்றும், சுதந்திரா, ஜனசங்கம் போன்ற கட்சிகளின் ஆதரவைப் பெறுவது தற்கொலைக்கு ஒப்பானது என்றும் காங்கிரஸ் கட்சியின் சோஷலிச கொள்கைகளை இந்தக் கட்சிகள் எதிர்க்கின்றன என்றும் ஒரு கருத்தினை வெளியிட்டார். அதற்குக் காரணம் தேஷ்முக் அவர்களுக்கு ஆதரவு தந்த சுதந்திரா, ஜனசங்கம் போன்ற கட்சிகள் முதல் வாக்குகளை தேஷ்முக் அவர்களுக்கும், இரண்டாவது வாக்குகளை சஞ்சீவ ரெட்டி அவர்களுக்கும் அளிப்பதாக முடிவு செய்ததுதான்.
அது மறைமுகமாக சஞ்சீவ ரெட்டியின் வெற்றிக்கு வழிகோலும் என்பது சந்திரசேகர் போன்றவர்களின் கணிப்பாகும். இந்தச் சூழ்நிலைகளால் இந்திரா காந்தி அவர்கள் காங்கிரசில் உள்ள தனது கோஷ்டியினருடன் மறைமுகமாக வி.வி.கிரி அவர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார் என்பது அரசியல் வட்டாரத்தில் வெளிப்படையாகத் தெரிந்த உண்மையாகி விட்டது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஆதரவாளராகச் செயல்பட்ட திருமதி தாரகேஸ்வரி சின்கா ஒரு பத்திரிகையில் பின்வருமாறு எழுதியிருந்தார்.
"பெங்களூரில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடந்து முடிந்தபின் பிரதமர் இந்திரா காந்தி நடந்து கொள்ளும் முறை காங்கிரசுக்கே அழிவு தரக் கூடியது. இப்போது காங்கிரசில் ஏதோ ஒற்றுமை ஏற்பட்டுவிட்டது போலத் தோன்றினாலும் இந்திராவிற்கும் காங்கிரசுக்கும் இடையே பிளவு இருந்து கொண்டு தான் இருக்கிறது. பாங்கிகளை தேசியமயமாக்கியதால் ஏழைக்கு நன்மையிருக்கிறது என்றாலும் மொரார்ஜி தேசாயை எதிர்ப்பதற்- காகவே அந்தத் திட்டம் இந்திரா காந்தியால் உள்நோக்கத்தோடு கொண்டு வரப்படுவதாகச் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.
சஞ்சீவ ரெட்டியை வேட்பாளராக அறிவித்ததால்தான் இந்திரா காந்தி வங்கிகளை தேசியமயமாக்கினார். இந்திராவின் அவசர நடவடிக்கைகள் காங்கிரசுக்குள் பிளவை அதிகரித்து விட்டன. இதனால் ஆகஸ்டு 16-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் முடிந்தபின் காங்கிரஸ் கட்சி உடைந்துவிடும்."
ஆகஸ்ட் 11-ஆம் நாள் திருச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி மாநாட்டில் உரை நிகழ்த்திய காமராஜர் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார். "இந்தியாவைப் பொறுத்தவரை ஜனநாயகத்திற்கு ஆபத்து என்றால் தேசத்திற்கே ஆபத்து! தேசத்திற்கு ஆபத்து வரும்போது யாராக இருந்தாலும் கண்டிக்காமல் இருக்க முடியாது. பிரதமராகவே இருந்தாலும் கண்டிக்கவேண்டும். வரம்பு மீறிச் செல்கிறவர்களைக் கண்டிக்காமல் விட்டால் காங்கிரஸ் கட்சி அழியும்.
காங்கிரசுக்கு பலம் இருந்தால் எவ்வளவு சீர்கெட்டிருந்தாலும் இதைத் தவிர்க்க முடியும். காங்கிரசுக்குள் பிளவை உண்டாக்குவது தர்மம் அல்ல. காங்கிரஸ் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் சஞ்சீவ ரெட்டி போட்டியிடுகிறார். அவரைத் தேர்ந்தெடுக்க பாடுபட வேண்டியது காங்கிரசார் கடமை. சஞ்சீவ ரெட்டிக்கு ஆதரவாக வாய் திறந்து ஓட்டு கேட்க மாட்டேன் என்று சொல்பவர்கள் காங்கிரஸ்காரர்களா? அப்படிப்பட்டவர்கள் காங்கிரசை விட்டு விலகவேண்டும்."
காமராஜரின் அந்தப் பேச்சிற்குப் பிறகு காங்கிரசுக்குள் ஒரு "குருக்ஷேத்திரம்" உருவாகிவிட்டது என்றே சொல்லலாம். இந்திராவின் போக்கில் சந்தேகமுற்ற காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பா அவர்கள் ஜனசங்கத் தலைவர்களுடனும், சுதந்திரா கட்சித் தலைவர்களுடனும் சஞ்சீவ ரெட்டிக்கு ஆதரவுகோரி பேச்சு நடத்தினார். அவர்களும் தங்களது இரண்டாவது வாக்கினை சஞ்சீவ ரெட்டிக்கு அளிப்பதாக உறுதி அளித்தனர். இதைப்பற்றி பிரதமரின் ஆதரவாளர்களான ஜெகஜீவன்ராம்.
பக்ருதீன் அலி அகமது ஆகியோர் நிஜலிங்கப்பாவிற்கு கடிதம் அனுப்பினார்கள். "காங்கிரஸ் கொள்கைக்கு எதிரான கொள்கை உடைய சுதந்திரா, ஜனசங்கம் போன்ற கட்சிகளுடன் நீங்கள் பேச்சு நடத்தியது ஏன்? அந்தப் பேச்சு வார்த்தையில் இந்திரா காந்தியை பதவியை விட்டு நீக்க வேண்டுமென்று அந்தக் கட்சியினர் பகிரங்கமாக உங்களைக் கேட்டுக் கொண்டதாக வதந்தி உலவுகிறது. இதற்கு உடனடியாக நீங்கள் விளக்கம் அளிக்காவிட்டால் ஜனாதிபதி தேர்தலில் ஆபத்தான விளைவுகள் ஏற்படும்" என்று அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.
இதிலிருந்து குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதமர் இந்திரா காந்தியின் குழுவினர் காங்கிரஸ் வேட்பாளர் சஞ்சீவ ரெட்டிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பது மேலும் தெளிவாயிற்று. பாபு ஜெகஜீவன்ராம் அவர்களும் பக்ருதீன் அலி அகமது அவர்களும் எழுதிய கடிதத்திற்கு பதில் எழுதிய காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பா அவர்கள், ஜனாதிபதி தேர்தலில் எல்லா கட்சிகளின் ஆதரவையும் கேட்கலாம் என்று காங்கிரஸ் பார்லிமெண்டரி போர்டு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கு ஏற்பவே நான் எல்லா கட்சிகளின் ஆதரவையும் கோரினேன். சுதந்திரா கட்சியுடனும், ஜனசங்கத்துடனும் நான் பேச்சு நடத்தியதை சந்தேகிக்கிறீர்களே, அரசாங்க விவகாரங்கள் குறித்தும், பாராளுமன்ற விவகாரங்கள் குறித்தும் எதிர்க்கட்சிகளுடன் நீங்கள் பேச்சு நடத்தவில்லையா? என்று கேட்டிருந்தார். ஆகஸ்ட் 12-ஆம் தேதி அன்று பிரதமருக்கு நிஜலிங்கப்பா அவர்கள் ஒரு கடிதம் எழுதினார். அதில் "உங்களைக் கவிழ்க்க திட்டமிட்டிருக்கிறோம் என்று சிலர் கிளப்பி விட்டுள்ள புரளியை நம்பாதீர்கள்.
கருத்து வேற்றுமை இருந்தால் அதை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்வோம். எப்போது வேண்டுமானாலும் உங்களைச் சந்தித்துப் பேசத் தயாராக இருக்கிறேன். நாங்கள் உங்களுக்கு எதிராக இருக்கிறோம் என்று நினைக்காதீர்கள். அது விஷமக்காரர்களால் வேண்டுமென்றே கிளப்பிவிடப்பட்டுள்ள கட்டுக்கதை. பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் பிரதமராகிய நீங்கள் சஞ்சீவ ரெட்டிக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவருக்கும் கடிதம் எழுதவேண்டியது அவசியம்.
அதைச் செய்வீர்கள் என்று நம்புகிறேன்" என்று கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கு ஆகஸ்ட் 13-ந்தேதி அன்று பிரதமர் நிஜலிங்கப்பாவிற்கு எழுதிய பதில் கடிதத்தில், ஜனாதிபதி தேர்தலில் பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர்களும் சட்டசபை காங்கிரஸ் உறுப்- பினர்களும் அவரவர்கள் விருப்பம் போல் வாக்களிக்க அனுமதி அளிக்க வேண்டுமென்று கேட்டிருந்தார். காட்டுத் தீ போல பரவிய இந்தச் செய்தி காங்கிரஸ் கூடிய விரைவில் பிளவுபட்டு விடும் என்பதை உறுதிப்படுத்தியது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் அவசரக் கூட்டத்தை நிஜலிங்கப்பா கூட்டினார். அந்தக் கூட்டத்தில் மொரார்ஜி தேசாய், காமராஜர், ஆதுல்யாகோஷ், எஸ். கே. பட்டீல் ஆகியவர்கள் கலந்து கொண்டார்கள். கூட்டம் முடிந்து வெளியே வந்த எஸ். கே. பட்டீல் நிருபர்களிடம் கூறுகையில் "காங்கிரஸ் கட்சியின் முதுகில் இந்திரா காந்தி குத்திவிட்டார்" என்று குறிப்பிட்டார்.
இந்திரா காந்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து பிரதமர் இந்திரா காந்தி அவர்களுக்கு நிஜலிங்கப்பா விளக்கம் கேட்டு ஒரு நோட்டீஸ் அனுப்பினார். அந்த நோட்டீஸ் கிடைத்த சில மணி நேரத்தில் இந்திரா காந்தி அவருடைய இல்லத்தில் நூற்றுக்கு மேற்பட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கூட்டி பின்வருமாறு பேசினார். "என்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து நிஜலிங்கப்பா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதே போன்ற நோட்டீஸ்கள் ஜெகஜீவன்ராம், பக்ருதீன் அலி அகமது, ஏ. பி. சர்மா. ஜெயில்சிங், கமலபதி திரிபாதி ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. கட்சி உறுப்பினர்களுக்கு சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமை வேண்டுமென்று கோரியதின் மூலம் கட்சியின் நலன்களுக்கே கேடிழைத்துவிட்டீர்கள். இது கட்டுப்பாட்டை மீறியதாகும் என்று அந்த நோட்டீசில் குறிப்பிட்டிருக்கிறது. என்மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தலைவருக்கு உரிமை உண்டா என்று நான் சந்தேகப்படுகிறேன்.
ஒரு பிரதமரின் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா? அடுத்து என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. நாம் தனித்தனி கோஷ்டிகளாக இருக்காமல் மக்களின் கட்சியாக ஒன்றுபட்டு இருக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. காங்கிரஸ் மாநாடுகளில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்தத் தீர்மானங்கள் அமுல் நடத்தப்பட்டனவா என்பதைக் கேட்க விரும்புகிறேன். ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதில் என்னை அவமதித்தார்கள்.
தினமும் ஜனாதிபதியும் பிரதமரும் ஒருவரையொருவர் அனுசரித்து நடக்க- வேண்டிய நிலை உள்ளது. எனவே ஜனாதிபதியாக யார் வர வேண்டும் என்பதில் பிரதமரின் விருப்பத்தை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். ஆனால் இந்தத் தேர்தலில் யாரை நிறுத்த வேண்டும் என்பதை திடீரென்று முடிவெடுத்தார்கள். இந்தியப் பிரதமர் அவருடைய சொந்தக் கட்சியாலேயே கீழே தள்ளப்பட்டார் என்று வெளிநாடுகள் எண்ணும் அளவிற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் நடந்து கொண்டார்கள்.
கம்யூனிச நாடுகளில்தான் கட்சி சொல்கிறபடி பிரதமர் நடக்க வேண்டிய நிலை உள்ளது. இந்தியாவில் ஜனநாயக முறைப்படி பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆகவே பிரதமர் பதவிக்கு தனி அந்தஸ்து உண்டு. என் கண்ணியத்தைக் குலைக்கும் விதத்தில் நடந்து கொண்டால் பதிலடி கொடுப்பேன் என்று காங்கிரசின் சிண்டிகேட் தலைவர்களை நான் சமீபத்தில் எச்சரித்தேன்."
இந்தப் பேச்சு வெளியானவுடன், இந்திரா காந்தி செய்யும் பெரிய குற்றத்தை மன்னிக்கவே முடியாது என்று மொரார்ஜி தேசாய் ஆத்திரத்தோடு குறிப்பிட்டார். இந்திரா காந்திக்கு நிஜலிங்கப்பா அனுப்பிய நோட்டீசை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சி.சுப்ரமணியம் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் நிஜலிங்கப்பா அதை திட்டவட்டமாக மறுத்து விட்டார். நான் தலைவராக இருக்கும் வரை கட்சிக் கட்டுப்பாட்டைக் காப்பேன் என்று அவர் கூறினார்.
இத்தகைய போர் முழக்கங்களுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 16-ஆம் தேதி நடைபெற்றது. அனைத்து நாடுகளும் அந்தத் தேர்தல் முடிவை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்தன. ஏனெனில் இந்திரா காந்தி பிரதமராக நீடிப்பாரா இல்லையா என்பதை நிர்ணயிக்கும் தேர்தலாக அது அமைந்திருந்தது. ஆகஸ்ட் 20-ஆம் நாள் அன்று வாக்குகள் எண்ணப்பட்டன. குடியரசுத் தலைவர் தேர்தலில் நாடாளுமன்
ற உறுப்பினர்கள் அளிக்கும் வாக்கிற்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் அளிக்கும் வாக்கிற்கும் சில மதிப்புகள் நிர்ணயிக்கப்படுகின்றன. அந்த மதிப்புகளின்படி வி. வி. கிரி அவர்கள் 4,20,077 மதிப்பு வாக்குகளைப் பெற்றார். சஞ்சீவ ரெட்டி 4,05,427 மதிப்பு வாக்குகளைப் பெற்றார். தேஷ்முக் 1,12,769 மதிப்பு வாக்குகளைப் பெற்றார். 14,500 மதிப்புள்ள வாக்குகள் வித்தியாசத்தில்தான் வி. வி. கிரி அவர்கள் வெற்றி பெற முடிந்தது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் மூலமும் கிடைத்த வாக்குகளின் மதிப்பு 35,448. இதில் 20,448 மதிப்புள்ள வாக்குகள் சட்டமன்றத்தின் மூலமும், 15,000 மதிப்புள்ள வாக்குகள் நாடாளுமன்றத்தின் மூலமும் வி.வி.கிரி அவர்களுக்குக் கிடைத்தன. அந்த வாக்குகளைக் கழித்துப் பார்த்தால் வி. வி. கிரி அவர்கள் தோல்வி அடைந்து சஞ்சீவ ரெட்டி அவர்கள்தான் வெற்றி பெற்றிருக்க முடியும்.
கிரி அவர்களின் வெற்றியைத் தொடர்ந்து நான் வெளியிட்ட அறிக்கையில் "கழகச் செயற்குழுவின் கட்டளையை ஏற்று டெல்லி சென்று எல்லா கட்சித் தலைவர்களையும் கலந்து பேசி ஆரம்பத்தில் நான் எடுத்த முயற்சி, அனைத்துக் கட்சியினரும் கொண்டிருந்த நம்பிக்கைக்கு ஏற்றவாறு வெற்றி பெற்றிருக்கிறது. நீண்ட காலமாக தொழிற் சங்க இயக்கங்களிலும் பொது வாழ்விலும் ஈடுபட்டு தொண்டாற்றி வருகிற கிரி அவர்களின் வெற்றிக்கு என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தேன்.
தி. மு. கழகம் இந்தத் தேர்தலில் வேறு நிலையை எடுத்திருந்தால் அது வி. வி. கிரியின் தோல்வியாக மாத்திரம் அமையாமல் பிரதமர் இந்திரா காந்தியின் வீழ்ச்சியாக முடிந்திருக்கும்!
