உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/ஆச்சரியம் காத்திருந்தது!
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

ஆச்சரியம் காத்திருந்தது! · 160 / 391

ஆச்சரியம் காத்திருந்தது! ஜனாதிபதி தேர்தலில் வி. வி. கிரி போட்டியிடப் போகிற செய்தி கேட்டு ஆச்சரியம் அடைந்தேன் என்று நிருபர்களிடம் கூறிய பிரதமர் இந்திரா காந்தி பொதுவாக ஜனாதிபதி தேர்தல் குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி எடுத்த முடிவை வரவேற்க இயலாத சூழ்நிலையில் இருந்தார் என்பதையும் அந்தப் பேட்டியின் மூலம் சூசகமாக அறிவித்தார். ஜனாதிபதி பதவிக்கு காங்கிரஸ் சார்பில் சஞ்சீவ ரெட்டி போட்டியிடுவதைத் தான் எதிர்க்கவில்லை என்றும், ஆனால் வேட்பாளராக நிற்க விரும்பாத ஜெகஜீவன்ராம் பெயரை தான் முன்மொழிந்ததாகவும், அதை காங்கிரஸ் கட்சியிலே உள்ள மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டார்.

மேலிடக் கூட்டத்தில் பெங்களூரில் வி. வி. கிரி பெயரைத்தான் முதலில் தெரிவித்தேன் என்றும், அதை மற்றவர்கள் ஏற்காததால் அடுத்து ஜெகஜீவன்ராம் பெயரைக் கூறினேன் என்றும் பிரதமர் சொன்னார். சஞ்சீவரெட்டி வெற்றி பெறுவதற்காக முழுமனதோடு முயற்சி செய்வீர்களா என்று நிருபர்கள் கேட்டபோது இந்திரா காந்தி அவர்கள் பதில் அளிக்காமல் மௌனமாக இருந்துவிட்டார். அவரை ஆதரித்து வாக்களிக்கும்படி வேண்டுகோள் விடுப்பீர்களா என்று கேட்டதற்கு அதுபற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை என்றும் கூறிவிட்டார்.

இப்படிப்பட்ட ஒரு சிக்கலான சூழ்நிலை குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து எழுந்தபோது திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொறுப்பு மிக முக்கியமானதாக ஆயிற்று. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் கழக உறுப்பினர்கள் அளிக்கின்ற வாக்குகளைப் பொறுத்தே அந்தத் தேர்தலுடைய வெற்றி தோல்வி நிர்ணயிக்கக் கூடிய நிலைமை அப்போதிருந்தது என்பதை அனைவரும் அறிவார்கள். தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டிருந்த என்னை நிருபர்கள் சந்தித்து ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஜெகஜீவன்ராம் நிறுத்தப்படவில்லையே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டார்கள்.

நான் அவர்களிடம் அந்த முடிவு பெரும் ஏமாற்றமளிப்பதாக இருக்கிறது என்றும் ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதி ஆவதையே காந்தியடிகளேகூட விரும்பினார் என்றும் அவருடைய நூற்றாண்டு விழா நடக்கிற நேரத்தில் ஜெகஜீவன்ராம் ஜனாதிபதியாக ஆக்கப்பட்டிருந்தால் அது காந்தியடிகளின் ஆசையை நிறைவேற்றுவதாக இருந்திருக்கும் என்றும் பதிலளித்தேன். நடைபெறவிருக்கும் தேர்தலில் தி. மு. கழகத்தின் நிலை என்ன என்று கேட்கப்பட்டபோது கழகப் பொதுக்குழு, செயற்குழு கூடி அதுபற்றி முடிவெடுக்கும் என்றும் கூறினேன்.

ஜூலை 15-ஆம் நாள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பூபேஷ் குப்தா என்னைச் சந்தித்துப் பேசினார். அவரிடம் முக்கியமாக ஜனாதிபதி தேர்தல் குறித்து விரிவாகப் பேசினேன். பிரதமர் இந்திரா காந்தி வங்கிகளைத் தேசியமயமாக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள், மன்னர் மானியங்களை நிறுத்துவதற்கு மேற்கொண்ட தீவிரம் ஆகியவற்றை எண்ணிப் பார்த்து தொடர்ந்து முற்போக்குக் கொள்கைகள் நடைமுறைக்கு வரும் என்ற நம்பிக்கையோடு இந்திரா காந்தியின் அரசுக்கு தி.

மு. கழகமும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியும் ஆதரவு அளித்துக் கொண்டிருந்த அந்தக் காலக் கட்டத்தில் இந்த குடியரசுத் தலைவர் தேர்தல் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது பற்றி முடிவு செய்ய எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் அனைவரும் ஒன்றுகூடி சென்னையிலோ, டெல்லியிலோ அல்லது வசதிப்பட்ட வேறு ஒரு இடத்திலோ ஜனாதிபதி தேர்தல் குறித்து விவாதித்து ஒரு ஏகோபித்த முடிவை எடுக்க வேண்டுமென்று அந்தக் கடிதத்தில் நான் குறிப்பிட்டிருந்தேன்.

நான் கூறிய அந்த யோசனையை வரவேற்கத்தக்க - யோசனை-என்று பாராளுமன்ற பிரஜா சோஷலிஸ்ட் கட்சித் தலைவர் துவிவேதி அவர்கள் பாராட்டி அறிக்கை விடுத்தார். ஜூலை 16-ஆம் நாள் திடீரென்று மொரார்ஜி தேசாயிடமிருந்து நிதி இலாகா பொறுப்பை இந்திரா காந்தி எடுத்துக் கொண்டு "நிதி இலாகா பொறுப்பிலிருந்து நீங்கள் விடுவிக்கப்பட்டு விட்டீர்கள்; ஆனால் தொடர்ந்து உதவி பிரதமராக இருந்து வரலாம்" என்று அவருக்குக் கடிதம் எழுதினார்.

நிதித் துறை பொறுப்புக்களை இந்திரா காந்தியே எடுத்துக்கொண்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மொரார்ஜி தேசாய் தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது அவர் விடுத்த அறிக்கையில் "இந்த மாற்றம் குறித்து பிரதமர் முன்கூட்டி என்னுடன் எந்தவித ஆலோசனையும் நடத்தவில்லை. நிதித்துறை இல்லாமல் துணைப்பிரதமராக நீடிக்கும்படி பிரதமர் இந்திரா என்னைக் கேட்டுக் கொண்டுள்ளார். என்னிடமிருந்து நிதித்துறையை எடுத்துக் கொண்டது அவருக்கு என் மீது நம்பிக்கை இல்லை என்பதையே காட்டுகிறது.

இந்த நிலையில் துணைப் பிரதமராக நான் எப்படி நீடிக்க முடியும்? இது சுயமரியாதை சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார். எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நான் எழுதிய கடிதங்கள் கிடைத்து அவர்களும் அப்படி ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்து அந்தக் கூட்டம் டெல்லியிலே நடைபெறுமேயானால் அனைவருக்கும் வசதியாக இருக்கும் என்று எழுதியிருந்தார்கள். அந்தக் கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பஞ்சாப் முதலமைச்சர் குர்நாம் சிங் அவர்கள் பத்திரிகையாளர்களிடத்தில் தெரிவித்து எனது கருத்தினை வரவேற்றிருந்தார்.

ஜூலை 17-ஆம் தேதி காலையில் மூதறிஞர் ராஜாஜி அவர்களைச் சந்தித்து அந்தத் தேர்தல் குறித்து நான் பேசினேன் நாங்கள் இருவரும் நடத்திய அந்தப் பேச்சுவார்த்தையில் யாரும் எந்த வேட்பாளர்களுடைய பெயரையும் குறிப்பிட்டு விவாதிக்கவில்லை. பொதுவான சூழ்நிலை பற்றி மட்டுமே விவாதித்தோம். அதைத் தொடர்ந்து ஜூலை 18-ஆம் தேதி சுதந்திரா கட்சியைச் சேர்ந்த தலைவர் மசானி, பிரஜா சோஷலிஸ்ட் கட்சித் தலைவர் நாத்பாய் ஆகியோர் என்னைச் சந்தித்துப் பேசினார்கள்.

எல்லா தலைவர்களையும் தனித்தனியே கலந்து பேசி ஒருமித்த முடிவிற்கு வழி காண்பதற்கு, என்னை டெல்லிக்கு வருமாறு மசானியும் நாத்பாயும் அழைத்தார்கள். அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பி. ராமமூர்த்தியும், பிரஜா சோஷலிஸ்ட் கட்சித் தலைவர் துவிவேதியும் என்னை டெல்லிக்கு வருமாறு வலியுறுத்தி தந்தி அனுப்பினார்கள். அதனையொட்டி ஜூலை 20-ஆம் தேதி கழகத்தின் செயற்குழுவும். பாராளுமன்ற கழக நிர்வாகிகளும் அவசரமாகக் கலந்து பேசி அதில் உருவான கருத்துக்களுடன் டெல்லியில் எல்லா கட்சித் தலைவர்களிடமும் விவாதித்திட மறுநாள் காலை நான் டெல்லி சென்றேன்.

இதற்கிடையே ஜூலை 18-ந்தேதி அன்று இந்திரா காந்தியும் மொரார்ஜியும் சந்தித்துப் பேசினார்கள். அந்தச் சந்திப்பின் விளைவாக எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. பிறகு டெல்லியில் நிஜலிங்கப்பா அவர்களின் வீட்டில் மொரார்ஜி, காமராஜர், நிஜலிங்கப்பா மூவரும் ஆலோசனை நடத்தினார்கள். அதன்பிறகு அன்று இரவு 8 மணி அளவில் இந்திரா காந்தியை நிஜலிங்கப்பா சந்தித்தார். நிதி இலாகாவை மீண்டும் தேசாயிடம் கொடுத்து விடும்படி நிஜலிங்கப்பா கேட்டுக்கொண்டார் என்றும் அதைத் திட்டவட்டமாக மறுத்த இந்திரா காந்தி அவர்கள் வங்கிகளை தேசியமயமாக்கவேண்டும் என்ற அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பெங்களூர் மாநாட்டுப் பொருளாதாரக் கொள்கை பற்றிய தீர்மானத்தைச் செயல்படுத்துவதென்றால் நிதி இலாகா பிரதமரிடம் இருக்க வேண்டியது அவசியம் என்று இந்திரா கூறியதாகவும், எனவே சமரசப் பேச்சு முறிந்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன.

அதே நாளில் பெங்களூர் வந்திருந்த சஞ்சீவ ரெட்டி அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தபோது "ஜனாதிபதி தேர்தலில் நான் தேர்ந்தெடுக்கப் பட்டுவிட்டால் கட்சிக் கண்ணோட்டம் இல்லாமல் மக்களுக்கு தொண்டு செய்வேன்" என்று கூறினார். "வேட்புமனுவை எப்போது தாக்கல் செய்வீர்கள்" என்று கேட்டதற்கு "மனுவை நான் தாக்கல் செய்ய மாட்டேன்.

எனது மனுவை பிரதமரே தாக்கல் செய்வார். எனக்கு ஆதரவு கொடுக்க பிரதமர் இந்திரா காந்தி முன்வந்தது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார். இது நிருபர்களை மாத்திரமல்ல; நாட்டு மக்களையும் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியது. ஜூலை 19-ந் தேதி டெல்லியில் மத்திய அமைச்சரவை அவசரமாகக் கூடி வங்கிகளைத் தேசியமயமாக்குவது பற்றி ஆலோசனை நடத்தியது. பொது மக்கள் போட்ட டெபாசிட் தொகை ஐம்பது கோடிக்கு மேல் உள்ள பதினான்கு பெரிய வங்கிகளை அரசு ஏற்பது என்று முடிவு செய்யப்பட்டது.

அதற்குரிய அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அந்த அவசரச் சட்டத்தில் தற்காலிக ஜனாதிபதியாக இருந்த வி.வி.கிரி கையெழுத்திட்டார். நெ.-11 நான் முதலமைச்சரானவுடன் டெல்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழு (என். டி. சி) கூட்டத்தில் வங்கிகளை தேசியமயமாக்க வேண்டுமென்று வலியுறுத்திப் பேசினேன். அது வடநாட்டு ஆங்கில ஏடுகளிலும், தமிழகத்து ஏடுகளிலும் அப்போது பெரிய அளவில் முக்கியத்துவம் தரப்பட்டு பிரசுரிக்கப்பட்டது.

எனது கருத்தை தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் உதவிப் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் மறுத்துப் பேசியது குறிப்பிடத்தக்கது. அந்தக் கூட்டத்திற்குத் தலைமை வகித்த பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் அப்போது மௌனமாக இருந்தார்கள் என்றாலும் சில மாதங்களுக்குப் பிறகு அவருடைய தலைமையில் கூடிய அமைச்சரவையில் வங்கிகளை தேசியமயமாக்கும் முற்போக்குக் கருத்து அவசரச் சட்டமாக வெளியிடப்பட முடிவெடுக்கப்பட்டது.

எனவே அந்த அவசரச் சட்டத்தை நான் வரவேற்று இது போன்று முற்போக்குக் கொள்கைகள் மத்திய அரசால் நிறைவேற்றப்படும் பொழுது அதன் வெற்றிக்கு தமிழக அரசும், தி.மு.கழகமும் என்றென்றும் துணை நிற்கும் என்று அறிக்கை விடுத்தேன். ஜூலை 19-ஆம் நாள் மக்கள் அவைத் தலைவராக இருந்த சஞ்சீவரெட்டி அவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது அவைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அன்றைக்கே உதவி ஜனாதிபதி பதவியை வி.

வி. கிரி அவர்களும் ராஜினாமா செய்தார். அதே நாளில் டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தை பிரஜா சோஷலிஸ்ட் கட்சித் தலைவர் துவிவேதி கூட்டினார். அதில் கிரந்திதளக் கட்சியைச் சேர்ந்த சரண்சிங், ஜனசங்கத்தைச் சேர்ந்த வாஜ்பாய், சுதந்திரா கட்சியைச் சேர்ந்த மசானி, சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், அகாலி தளத்தைச் சேர்ந்த பகத்சிங் ஆகியோர் கலந்து கொண்டார்கள் என்றும், தேர்தலில் வேட்பாளராக சி.

டி. தேஷ்முக் அவர்களை நிறுத்தலாம் என்று சுதந்திரா, கிரந்தி தளக் கட்சித் தலைவர்கள் கூறினார்கள் என்றும் தமிழ்நாடு முதலமைச்சராகிய என்னை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்தலாம் என்று அந்தக் கூட்டத்தில் யோசனை தெரிவிக்கப்பட்டது என்றும், ஆயினும் யாருடைய பெயரும் இறுதியாக முடிவு செய்யப்படவில்லை என்றும் ஜூலை 22-ஆம் தேதி நான் டெல்லி வந்த பிறகு என்னுடன் கலந்து பேசி முடிவு செய்யலாம் என்று தீர்மானிக்கப்பட்டது என்றும் ஏடுகளில் செய்திகள் வெளிவந்தன.

ஜூலை 21-ஆம் நாள் நண்பர்கள் கந்தப்பன், ராஜாராம் ஆகியோருடனும், முரசொலி மாறனுடனும் நான் டெல்லியை அடைந்தேன். அன்று மாலை டெல்லியில் உள்ள தமிழ்நாடு மாளிகையில் திரு. மசானி, திரு. தண்டேகார், திரு. ஏ. கே. கோபாலன், திரு. பி. ராமமூர்த்தி ஆகியோர் என்னைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். அதற்குப் பிறகு நிருபர்கள் என்னிடம் வந்து கேட்டபோது தேஷ்முக்கை நிறுத்த வேண்டுமென்று சுதந்திரா கட்சி கூறுகிறது என்பதையும், வி.

வி. கிரியை ஆதரிக்கலாம் என்று கம்யூனிஸ்ட் கட்சி கருத்து அறிவித்திருப்பதையும் இது குறித்து முடிவு செய்ய இன்னும் இரண்டொரு நாட்களாகும் என்பதையும் நான் நிருபர்களுக்கு விளக்கினேன். "உங்கள் பெயரும் ஜனாதிபதி தேர்தலுக்கு சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறதே" என்று நிருபர்கள் கேட்டபோது நான் அவர்களிடம் "அப்படி ஒரு எண்ணம் எனக்கு அரும்பவே இல்லை" என திட்டவட்டமாக மறுத்தேன்.

அதற்குப் பிறகு 21, 22 ஆகிய இரண்டு நாட்களிலும் பூபேஷ் குப்தா, வாஜ்பாய், கோரே, விவேதி, நாத்பாய், மதுலிமாயி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், மேற்கு வங்க முதலமைச்சர் அஜாய் முகர்ஜி, துணை முதல்வர் ஜோதிபாசு, பஞ்சாப் முதலமைச்சர் குர்நாம் சிங், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காயிதே மில்லத், வி. கே. கிருஷ்ணமேனன் ஆகியோர் என்னைச் சந்தித்துத் தேர்தல் பற்றிக் கலந்துரையாடினார்கள். பிரஜா சோஷலிஸ்ட் கட்சியின் சார்பில் என்னிடம் உரையாடிய நாத்பாய் போன்ற தலைவர்கள் என்னையே குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுமாறு வற்புறுத்தினார்கள்.

நான் அவர்களிடம் "தமிழ்நாட்டு மக்களுக்கு அவர்களோடு நெருங்கியிருந்து ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன" எனக் கூறி அவர்களுடைய விருப்பத்தை நிராகரித்தேன். "ஜனாதிபதி தேர்தலில் ஏகமனதாக ஒருவரைத் தேர்ந்தெடுக்க ஏதாவது ஒரு வழி உங்களுக்குத் தோன்றுகிறதா?"

என்று நிருபர்கள் என்னைக் கேட்டபோது, "ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களை நிறுத்தினால் அவர் பொதுவான வேட்பாளராக இருக்கக் கூடும்" என்று நான் பதிலளித்தேன். ஜூலை 22-ந் தேதி வரையில் எதிர்க் கட்சியின் சார்பில் யாரை ஆதரிப்பது என்று தெளிவான முடிவு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதற்கு முன்பே ஜூலை 21-இல் சஞ்சீவரெட்டி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. அவரை காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பா முன்மொழிந்து, குஜராத் முதலமைச்சர் ஹிதேந்திர தேசாய் வழிமொழிந்திருந்தார்.

சஞ்சீவரெட்டிக்காக தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது மனுவில் மத்திய அமைச்சர் சவான் முன்மொழிந்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் வெங்கடசுப்பையா வழிமொழிந்திருந்தார். வி. வி. கிரி அவர்களும் அன்றைக்கே வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அவரது மனுக்களை எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சாட்டர்ஜி, ஜகத் நாராயணன், யஷ்பால் சிங், காயர் அலிகான் ஆகியோர் தாக்கல் செய்தனர். சஞ்சீவ ரெட்டியை பிரதமர் இந்திரா காந்தி ஆதரிக்கவில்லை என்றும் அவர் அதற்கெதிராகச் செயல்படுகிறார் என்றும் டெல்லி வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டது.

இந்தியத் திருநாடு முழுவதும் அதே கருத்துதான் ஆங்காங்கு எதிரொலித்துக் கொண்டிருந்தது. பெங்களூரில் காங்கிரஸ் ஆட்சி மன்றக் குழு எடுத்த முடிவு இந்திரா காந்திக்கு திருப்தி அளிக்கவில்லை என்பதை அவர் பல நேரங்களில் பத்திரிகையாளர்களிடத்தில் பேசியதின் மூலம் கோடிட்டுக் காட்டியிருந்தார். இந்த நிலையில் இந்திய மக்களுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. அதுதான் ஜூலை 22-ம் நாள் அன்று சஞ்சீவரெட்டியின் வேட்பு மனுவை பிரதமர் இந்திரா முன்மொழிந்து பாதுகாப்பு அமைச்சர் சுவரன்சிங் வழிமொழிந்து தாக்கல் செய்த செய்தியாகும்.