நெஞ்சுக்கு நீதி
பிரதமரின் தோல்வி! · 159 / 391
பிரதமரின் தோல்வி! கு டியரசுத் தலைவர் ஜாகீர் உசேன் மறைந்தபோது துணை ஜனாதிபதியாக இருந்த வி. வி. கிரி அவர்கள், தற்காலிக ஜனாதிபதியாகப் பதவியேற்றார் எனினும் ஆறு மாத காலத்திற்குள் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க வேண்டிய விதிமுறைகளின்படி ஜனாதிபதித் தேர்தலுக்கான தொடக்கப் பணிகள் ஆரம்பமாகிவிட்டன. காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்து அதிலே ஒரு பிரிவு, பல்வேறு கட்சிகளாகச் சிதறிவிடக் காரணமாக அமைந்தது இந்த ஜனாதிபதித் தேர்தல்தான்!
புகைந்து கொண்டிருந்த கருத்து வேறுபாடுகள் - குமுறலாக வெளிப்பட்டன! மே மாதம் (1969) ஜாகீர் உசேன் மறைந்த முதல் வாரத்திலேயே சோஷலிஸ்டு கட்சியின் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் ஜெயபிரகாஷ் நாராயண் அவர்களைக் குடியரசுத் தலைவராக்க வேண்டும் என்று கூறப்பட்டது. நாடாளுமன்றக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சேத் கோவிந்த தாஸ்; பாபு ஜெகஜீவன்ராம் அவர்கள் குடியரசுத் தலைவராக வரவேண்டுமென்ற விருப்பத்தைத் தெரிவித்தார்.
1967-ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜாகீர் உசேனை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்த உச்ச நீதிமன்ற பழைய நீதிபதி சுப்பாராவ் அவர்களையே மீண்டும் போட்டியிடச் செய்யலாம் என்று சுதந்திராக் கட்சி சார்பிலே அறிவிக்கப்பட்டது. 11-5-69 அன்று நிருபர்கள் கேள்விக்குப் பதில் அளித்த போது "தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் இப்போது எதுவும் சொல்வதற்கில்லை!"
எனப் பதில் கூறிய ஜெயப்பிரகாஷ் அவர்கள் 16-5-69 அன்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார். அடுத்து வருகிற குடியரசுத் தலைவர், பிரதமர் இந்திரா காந்தியுடன் ஒத்துப் போகிறவராக இருக்கக் கூடாது என்பதிலே காங்கிரசில் இருந்த மூத்த தலைவர்கள் மிகுந்த அக்கறை காட்டி னார்கள். ஆனால் அதனை மனத்தில் மூடிவைத்துக் கொண்டு அதற்குரிய வேலைகளில் முழு மூச்சாக ஈடுபட்டனர்.
அதன் முதற் கட்டமாக "கிரிக்கு வயதாகிவிட்டதால் ஜனாதிபதிப் பொறுப்பை அவரால் தாங்க முடியாது" என்று காங்கிரசின் மூத்த தலைவர் வட்டாரத்திலே பேச்சுக் கிளம்பிற்று. மே 13-ஆம் நாளன்று கிரி அவர்கள் விடுத்த செய்தியொன்றில் "ஜனாதிபதி மரணம் அடைந்ததும் துணை ஜனாதிபதியையே ஜனாதிபதியாக்கும் பழக்கம் இதுவரை இருந்து வந்திருக்கிறது. அதையே இப்போதும் பின்பற்றவேண்டும். அந்த வழக்கப்படி காங்கிரஸ் சார்பில் என்னை வேட்பாளனாக நிறுத்தாவிட்டால் நான் துணை ஜனாதிபதி பதவியிலிருந்து விலகி விடுவேன்" என்று குறிப்பிட்டார்.
குடியரசுத் தலைவர் பதவிக்கு பாபு ஜெகஜீவன்ராம் அவர்களது பெயர் பரவலாகப் பேசப்பட்டுக் கொண்டிருந்தபோது மே திங்கள் 18-ஆம் நாளன்று ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், அந்தப் பதவிக்குப் போட்டியிடத் போவதில்லை என்று அறிவித்துவிட்டார். இதற்கிடையே தமிழ்நாட்டுக்கு வருகை தந்த பஞ்சாப் முதலமைச்சர் குர்நாம் சிங் அவர்கள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியொன்றில் கோவை நகரில் பின்வருமாறு குறிப்பிட்டார்.
"புதிய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறவர் எல்லாக் கட்சியினராலும் ஏற்றுக்கொள்ளத் தக்கவராக இருக்க வேண்டும். அப்போதுதான் அவர் பாரபட்சமின்றிச் செயல்பட முடியும். ஜனாதிபதி தேர்தல் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி அவர்களுடன் நான் பேச்சு நடத்தத் திட்டமிட்டிருக்கிறேன்."
அவர் கூறியவாறு என்னையும் சந்தித்துப் பேசினார். அந்தச் சந்திப்புக்குப் பிறகு எனக்கும் பஞ்சாப் முதல்வர் குர்நாம் சிங் அவர்களுக்கும் தூய்மையானதும் பாசம் நிறைந்ததுமான ஒரு நட்பு, பூத்துக் குலுங்கத் தொடங்கியது. குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற வி.வி.கிரி அவர்கள் அவரது வெற்றிக்கு மூல காரணமாக விளங்கியவர்கள் கருணாநிதியும், குர்நாம் சிங்கும்தான் என்று பலமுறை நன்றியுணர்வு பொங்கிடக் கூறியிருக்கிறார்.
"யார் ஜனாதிபதி?" என்ற வினாக்குறிக்கும் - "கிரிதான் ஐனாதிபதி" என்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட விடைக்கும் இடையிலே நடைபெற்ற நிகழ்ச்சிகளை எனது விமர்சனத்திற்- குரியதாக்குவதை விட தேதிவாரியாக வந்த செய்திகளைத் தொகுத்துத் தந்தாலே - அவற்றைப் படிப்பவர்கள்; யார் யார் எப்படிப்பட்ட மாற்று நிலைகளை மேற்கொண்டார்கள் என்பதைப் புரிந்துகொள்ள இயலும்.
அந்த ஆண்டு மே மாத இறுதியில் ராஜாஜி அவர்கள், "சுயராஜ்யா" பத்திரிகையில், "ஓய்வு பெறும் இராணுவத் தளபதி குமார மங்கலம் அவர்களை ஜனாதிபதியாக்கலாம்" என்று எழுதினார். ஜூன் 6-ந்தேதி வெளிவந்த ஏடுகளின் செய்தியின்படி; "எல்லாக் கட்சிகளும் கருத்து ஒற்றுமையுடன் ஒரு வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க முடியும்" என்று பிரதமர் இந்திராகாந்தி நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
ஜூன் முதன் வாரத்தில் "சுயராஜ்யா" இதழில் ராஜாஜி அவர்களின் கட்டுரை, பின்வருமாறு கருத்தை வழங்கியது. "வி. வி. கிரி அவர்கள், நற்குணங்களும் திறமையும் நிரம்பியவர். 1937-ல் சென்னை மாகாணத்தில் நான் பிரதமராக இருந்தபோது அவர் தொழிலாளர் நல அமைச்சராக இருந்திருக்கிறார். அப்போது முதலே அவர் சிறந்த உறுதியான காங்கிரஸ்காரராக இருந்து வருபவர். தொடர்ந்தும் அப்படியே இருப்பார். அதனால்தான் அவர் ஜனாதிபதி ஆவதை நான் விரும்பவில்லை.
ஏனெனில் இன்றைய சூழ்நிலையில் ஒரு கட்சியைச் சேர்ந்தவர் ராஷ்டிரபதியாகக் கூடாது. அரசியல் கட்சிச் சார்பற்றவரையே அப்பதவியில் அமர்த்த வேண்டும். பிரதமரும் அதையே விரும்புவார் என்று கருதுகிறேன். ஆளும் கட்சிக்கு ஆமாம் போடுவதைத் தமது கடமையாகக் கருதாமல் பிரச்சினைகள் தோன்றும்போது சுயமாகச் சிந்தித்து துணிவாக அதைக் கூறுபவரையே ஜனாதிபதியாக ஆக்க வேண்டும்."
இதற்குப் பிறகு 19-6-69 ஏடுகளில் வெளிவந்த செய்தி குறிப்பிடத்தக்கது. "ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளரைப் பொறுக்குவது சம்பந்தமாக பிரதம மந்திரி இந்திராவின் ஆதரவாளர்களுக்கும், சிண்டிகேட் உறுப்பினர்களுக்குமிடையே மோதுதல்; தவிர்க்க முடியாதது எனத் தோன்றுகிறது. எதிர்க்கட்சிகள் இதுவரையில் திட்டவட்டமான முடிவு எதற்கும் வரவில்லை. வேட்பாளரைப் பொறுக்குவதில் சங்கடம் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம் இதில் பிரதமருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவருக்குமிடையே கருத்து வேறுபாடு நிலவுவதுதான்!
புதிய ஜனாதிபதி பதவிக்கு யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது குறித்துப் பிரதமர் இந்திரா காந்தி, இன்று காலையில் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியுடன் தொடர்பு கொண்டு பேசியதாகத் தெரிகிறது. அது குறித்து தொலைபேசியில் விபரம் அறியக் கேட்டபோது கருணாநிதி அவர்கள் கருத்து எதுவும் இப்போது பத்திரிகைகளுக்குக் கூற இயலாது என மறுத்துவிட்டார்."
இதனையடுத்து வந்த செய்தியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு. நிஜலிங்கப்பா அவர்கள் பிரதமரைச் சந்தித்துப் பேசினார் என்றும் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒரு வேட்பாளராகக் கருதப்படும் சபாநாயகர் சஞ்சீவ ரெட்டி அவர்களும் பிரதமருடன் பேசினார் என்றும் குறிப்பிடப்பட்டது 23-6-69 வெளிவந்த ஏடுகளில்! ஜூலை 10, 11, 12 ஆகிய தேதிகளில் பெங்களுரில் அகில இந்திய காங்கிரசின் முக்கிய தலைவர்கள் கூடியபோதுதான்; சூல் கொண்டிருந்த பூசலெனும் புயல், கரை நோக்கிக் கிளம்பிற்று எனக் கூறலாம்.
ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் யார் என்பதைத் தீர்மானிக்கவும் கட்சியின் பல்வேறு பணிகளை ஆராய்ந்திடவும் என்ற பெயரால் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி மன்றக் குழுவும், காரியக் கமிட்டியும் பெங்களூரில் கூட்டப்பெற்றன. அங்கு நடைபெற்ற ஆட்சிமன்றக் குழு (மத்திய பார்லிமெண்டரி போர்டு) கூட்டத்தைப் பற்றி ஜூலை 13-ந் தேதி ஏடுகளில் செய்திகள் பரபரப்பாக வெளியிடப்பட்டன. "குழுக் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பா தலைமை தாங்கினார்.
மேலிடக் குழு உறுப்பினர்களான பிரதமர் இந்திராகாந்தி, துணைப் பிரதமர் மொரார்ஜி தேசாய், சவான், காமராஜர், பட்டீல், ஜெகஜீவன்ராம், பக்ருதீன் அலி அகமது ஆகியோர் கலந்து கொண்டார்கள். உணவு அமைச்சர் ஜெகஜீவன்ராமை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்த வேண்டுமென பிரதமர் இந்திராகாந்தி கூறினார். சபாநாயகர் சஞ்சீவ ரெட்டியை நிறுத்தவேண்டுமென மற்றொரு கருத்தும் குழுவில் கூறப்பட்டது. ஒருமனதாக ஒருவரைத் தேர்ந்தெடுக்க முடியாமல் போனதால் ஓட்டெடுப்பு நடைபெற்றது.
சஞ்சீவ ரெட்டியை வேட்பாளராக நிறுத்தவேண்டுமென; மொரார்ஜிதேசாய், சவான், காமராஜர், பட்டீல் ஆகிய நால்வரும் வாக்களித்தனர். பிரதமர் இந்திரா காந்தியும் பக்ருதீன் அலி அகமது ஆகிய இருவர் மட்டுமே ஜெகஜீவன்ராமை வேட்பாளராக நிறுத்த வேண்டுமென வாக்களித்தனர். சஞ்சீவ ரெட்டிக்கு இரண்டு ஒட்டுக்கள் அதிகம் கிடைத்ததால் அவரையே ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பாளராக நிறுத்த முடிவு செய்யப்பட்டது. இவ்வளவு முக்கியமான பிரச்சினையில் வாக்கெடுப்பு நடந்து பிரதம மந்திரிக்குத் தோல்வி ஏற்பட்டது இதுவே முதல் தடவையாகும்.
அந்தக் குழுக் கூட்டத்திற்குத் தலைமை வகித்த நிஜலிங்கப்பாவின் ஆதரவும் சஞ்சீவரெட்டிக்கே என்பது வெளிப்படையான உண்மை. ஆகவே ஜனாதிபதி வேட்பாளர் சஞ்சீவரெட்டி என்பதை காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பா அதிகாரபூர்வமாக அறிவிக்கும் உரிமையைப் பெற்றார். அந்த உரிமையை உடனே பயன்படுத்தி சஞ்சீவ ரெட்டியின் பெயரையும் அவர் அறிவித்தார்."
இந்தச் செய்தி வந்த மறுநாளே "தற்காலிக ஜனாதிபதி"யாக இருந்த வி.வி.கிரி அவர்கள் ஒரு அறிக்கை விடுத்தார். 14-7-69 அந்த அறிக்கையைத் தாங்கி ஏடுகள் வெளிவந்தன. அந்த அறிக்கையில் : "காங்கிரஸ் மேலிடம் எடுத்துள்ள இந்த முடிவு, நாட்டுக்கோ அல்லது காங்கிரஸ் கட்சிக்கோ நியாயமானது அல்ல! ஜனாதிபதிப் பதவி கட்சிகளுக்கு அப்பாற்பட்டு கண்ணியம் மிக்கதாகக் கருதப்பட வேண்டும். ஆனால் இப்போது நடந்துள்ள நிகழ்ச்சியால் அந்த உயர்ந்த பதவியின் பெருமைக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது.
எனக்கு நாடும் மனச்சாட்சியும்தான் முக்கியமானவை. அதன் அடிப்படையில் நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துவிட்டேன். விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் உண்மைக்காகப் போராடுகிறவனை நல்ல வீரன் என்று காந்தியடிகள் கூறியிருக்கிறார். அந்த உணர்ச்சியின் அடிப்படையில்தான் நான் போட்டியிடுகிறேன்" என்று கிரி அவர்கள் திட்டவட்டமாகக் குறிப்பிட்டிருந்தார்.
"கிரியின் அறிவிப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. பழம்பெரும் காங்கிரஸ்காரரான கிரி, காங்கிரசின் அதிகாரபூர்வ வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிடும் செய்தியை நம்பவே முடியவில்லை. எனினும் அவர் காங்கிரஸ் வேட்பாளரல்ல! அதனால் காங்கிரஸ்காரர்கள் அவரை ஆதரிக்க மாட்டார்கள்" என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பா கூறினார்.
கிரியின் போட்டியைப் பற்றிக் கருத்துக் கூற, துணைப் பிரதமர் மொரார்ஜி தேசாய் மறுத்துவிட்ட போதிலும் "போட்டியை சமாளித்தே ஆகவேண்டும்" என்று உறுதியாகத் தெரிவித்தார். பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் பெங்களூரில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்டபோது நிருபர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு கிரி அவர்கள் போட்டியிடுவது பற்றிக் கேட்டார்கள். "இந்தச் செய்தி கேட்டு நான் ஆச்சரியம் அடைந்தேன்" என்று அம்மையார் அவர்கள் பதில் கூறினார்கள்.
