உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/இங்கும் அங்கும்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

இங்கும் அங்கும் · 158 / 391

இங்கும் அங்கும் "த ண்டவாளத்தில் தலைவைத்துப் படு என்று சொன்னாலும் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள் என்று கூறினாலும் இரண்டையும் சமமாகக் கருதி ஏற்றுக்கொள்பவன்தான் என் தம்பி கருணாநிதி" என்று எனது 45-வது பிறந்த நாளின் போது- அறிஞர் அண்ணா அவர்கள் சென்னையில் பேசியதை நினைத்துக் கொண்டே கண்கள் பனிக்க எனது 46-வது பிறந்தநாள் எளிமையாகக் கொண்டாடப்பட்ட போது அதில் கலந்துகொண்டேன்.

பிறந்தநாளையொட்டி என்னைப் பேட்டி கண்ட பி. டி. ஐ நிறுவனத்தினர் "1967 முதல் இந்த இரண்டு ஆண்டுகால ஆட்சி நிர்வாகத்தில் எதைப்பற்றி நீங்கள் பெருமையாகக் கருதுகிறீர்கள்?" என்று கேட்டார்கள். "சாதாரண மக்களின் அன்றாடத் தேவையான இன்றியமையா உணவுப் பொருள்களின் விலை குறைத்திட வழி வகுக்கப்பட்டுள்ளதே, அதைத்தான்" என்று பதிலளித்தேன்.

"இந்த இரண்டு ஆண்டுகளில் தாங்கள் மகிழ்ச்சி கொள்ள முடியாத நிகழ்ச்சி எது?" "எதிர்க் கட்சியினர் தங்களது இருபதாண்டு கால ஆளுங்கட்சி அனுபவத்தை எதிரொலிக்காதது." "தமிழக மக்களுக்கு தங்களின் பிறந்த நாள் பரிசாக எதை அளிக்கிறீர்கள்?" "என்னையே தமிழ் மக்களுக்காகத்தான் அளித்திருக்கிறேன்" என்று அவர்கள் கேட்ட மற்ற கேள்விகளுக்கும் பதிலளித்தேன்.

பிறந்த நாளையொட்டி மூதறிஞர் ராஜாஜி அவர்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் "தமிழ்நாட்டின் சுறுசுறுப்பான முதலமைச்சர் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு எனது நல்வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டிருந்தார். அன்பும் பண்பும் நிறைந்த அருமை கலைஞர் அவர்களது 46-ஆம் ஆண்டு தோற்றத்தை மன மகிழ்ச்சியோடு வரவேற்- கிறேன். மற்றும் இனத்திற்கு, நாட்டிற்கு, சமுதாயத்திற்கு பல அரிய நலன்களும் வளர்ச்சிகளும் ஏற்பட ஒரு நல்வாய்ப்பு என்று உறுதி கொண்டு மகிழ்ச்சியோடு பாராட்டுகிறேன்" என்று தந்தை பெரியார் என்னை வாழ்த்தினார்.

கட்சி சார்பற்ற முறையில் விழாக் குழு ஒன்று உருவாக்கப்பட்டு நடத்தப்பட்ட பிறந்த நாள் விழா கூட்டத்தில் என் பெயரால் ஒரு அறக்கட்டளை நிறுவ வேண்டுமென்று முதற்கட்டமாக ஐம்பதாயிரம் ரூபாயும், அடுத்த கட்டமாக இருபத்தைந்து ஆயிரம் ரூபாயும் தரப்பட்டது. அதைப் பெற்றுக்கொண்ட நான் அறக்கட்டளை என் பெயரால் நிறுவப்பட வேண்டுமென்று நண்பர்கள் ஆவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தொகையை வங்கியில் வைப்பு நிதியாகப் போட்டு, அதனால் வரும் வட்டிப் பணத்தைக் கொண்டு தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் உள்ள உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பரிசு அளிக்கலாம் என்ற எண்ணத்தைத் தெரிவிக்கிறேன்.

ஒவ்வொரு ஆண்டும் பள்ளி இறுதி வகுப்பில் தேர்வில் தமிழ் பாடத்தில் முதல் மதிப்பெண் எடுக்கும் ஒவ்வொரு மாவட்டத்தையும் சேர்ந்த ஒரு மாணவனுக்கும், மாணவிக்கும் இருநூறு ரூபாய்க்குக் குறையாத அளவில் பரிசு வழங்கப்படவேண்டும். நண்பர்கள் கூறியதுபோல் அமையவிருக்கும் அறக்கட்டளைக்கு என் பெயர் தேவையில்லை. என்னை ஆளாக்கி வளர்த்து விட்ட அண்ணனின் பெயரால் "அண்ணா அறக்கட்டளை" என்றே வழங்கப்பட வேண்டும். மேலும் வரும் செம்டம்பரில் அண்ணா அவர்களுடைய அறுபதாம் ஆண்டு நிறைவு விழா வருகிறது.

அவர் உயிரோடு இருந்திருந்தால் மணிவிழா எடுத்து மகிழ்ச்சியோடு கொண்டாடியிருக்க வேண்டிய விழா. ஆனால் அவர் இல்லை. அவர் நினைவோடு நாம் இருக்கிறோம் என்பதற்கேற்ப வருகிற அண்ணாவின் பிறந்த நாளின்போது அறுபது ஊர்களில் அண்ணாவின் வெண்கலச் சிலை நிறுவப்படும்; அதற்கான முயற்சிகளை தி. மு. கழக தலைமைக் கழகம் மேற்கொள்ளும்" என்று அறிவித்தேன்.

நிகழ்ச்சியில் கேரள கல்வி அமைச்சர் முகமது கோயா நாவலர் நெடுஞ்செழியன், சிலம்புச் செல்வர் ம. பொ. சி. என். வி. என்., எம், கல்யாண சுந்தரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கோவிந்தராஜன், ஷெரீப் சுந்தர்லால் நகாதா, காங்கிரஸ் கட்சியின் சார்பில் டாக்டர் விஜயலட்சுமி, சோவியத் கான்சல் ஜெனரல் காவரின், அமெரிக்க கான்சல் ஜெனரல் தாமஸ் ரெக்னகல், நியூயார்க் தமிழர் ரகுநாதன், சுதந்திராகட்சியின் சார்பில் எஸ்.

எஸ். மாரிசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். சோவியத் கான்சல் ஜெனரல் காவரின் பேசும்போது குறிப்பிட்டதாவது! "கடந்த நான்கு மாதங்களாக முதலமைச்சர் பொறுப்பை ஏற்று நிர்வகித்து வரும் திரு. கருணாநிதி மக்களிடத்தில் நிறைந்த செல்வாக்கைப் பெற்றிருக்கிறார். சோவியத் நாட்டிலிருந்து வந்த பல்வேறு தூதுக் குழுக்களை அவர் வரவேற்று அளவளாவியிருக்கிறார். அத்துடன் இந்திய சோவியத் நல்லுறவை வளர்க்கும் பல நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று நம்மிரு நாடுகளுக்குமிடையே நிலவுகிற நல்லுறவை உறுதிப்படுத்தவும் வளர்க்கவும் உதவியிருக்கிறார்.

இந்திய சோவியத் நல்லுறவை வளர்ப்பதில் அண்ணா அவர்கள் எந்தக் கொள்கையைக் கடைப்பிடித்தாரோ அதே கொள்கையை திரு. கருணாநிதி கடைப்பிடித்து வருகிறார்." அவரைத் தொடர்ந்து பேசிய அமெரிக்க கான்சல் தாமஸ் ரெக்னகல் "முதலமைச்சர் திரு. கருணாநிதி மக்களிடத்தில் எத்தனை மிகுந்த மதிப்பைப் பெற்றுத் திகழுகிறார் என்பதற்கு இங்கே நடைபெறும் விழா ஒரு எடுத்துக்காட்டாகும். மக்களது அன்பிற்குப் பாத்திரமான அவரை நான் மனதார வாழ்த்துகிறேன்" என்று கூறி வாழ்த்தினார்.

நியூயார்க் நகரில் வாழும் தமிழ் இளைஞர் ரகுநாதன் அந்த நிகழ்ச்சியில் உரையாற்றும்போது பின்வருமாறு குறிப்பிட்டார்: "அண்ணா இங்கில்லாத நாட்களில் அண்ணாவின் பிறந்தநாளை விழாவாக இங்கு கொண்டாடி அந்த விழாவின் பேச்சுக்களைப் பதிவு செய்து அந்த நாடாக்களை கலைஞர் அவர்கள் அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்திருந்தார். அண்ணா அவர்கள் அவற்றைக் கேட்டு மகிழ்ந்தார். பின் அவற்றை நியூயார்க் வாழ் தமிழர்களாகிய எங்களுக்கு அளித்துவிட்டு வந்தார்.

அண்ணாவின் கடைசிநேரத்தில் உங்களைக் காட்டிலும் அமெரிக்காவில் இருந்த நாங்கள் துடித்தோம். நீங்கள் அண்ணாவைப் பார்த்துக் கொண்டே துடித்தீர்கள்; நாங்கள் அவரைப் பார்க்காமலே துடித்தோம். அதையடுத்து எங்களை மற்றொரு கவலை பிடித்துக்கொண்டது. அவருக்குப் பிறகு தமிழ்நாட்டின் தலைமை என்னவாகுமோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தோம். இந்த நாட்டிலிருந்து அமெரிக்கா வருகிற விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் அனைவரிடமும் நாங்கள் தமிழ்நாட்டின் முன்னேற்றம் அண்ணாவிற்குப் பிறகு எப்படி இருக்கிறது என்று கேட்போம்.

அதற்கு அவர்கள், அந்தக் கவலையை விடுங்கள்; கலைஞரது தலைமையில் தொடர்ந்து முன்னேறி வருகிறது என்று எல்லோரும் ஒரே குரலாகச் சொல்வதைக் கேட்டு நாங்கள் மகிழ்வோம்." கேரள மாநிலத்து அரசியலில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடிக்துக்கொண்டு எல்லா சார்பு மக்களின் இதயத்திலும் பதிந்துவிட்ட பெயர்களில் ஒன்று முகமது கோய. அவர் அப்போது கேரளத்து கல்வி அமைச்சராக இருந்தார். என் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் ஆற்றிய உரையும் குறிப்பிடத்தக்கது.

அது வருமாறு: "திரு. கருணாநிதி ஒரு கலைஞர், ஒரு இலக்கியவாதி, ஒரு கவிஞர். அவரை அரசாங்க தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பதவி என்ற சிறைச்சாலையில் அடைத்திருக்கிறீர்கள். கருணாநிதியைப் போன்ற ஒரு கலைஞருக்கு இது எத்தனை சங்கடமானது தெரியுமா? "பைல்"களுக்கிடையிலேயும் அரசாங்க அலுவல்களில் சிகப்புநாடா முறைகளுக்கிடையிலேயும் பல ஆண்டு காலம் கழித்தால் அவருக்கும் இலக்கியத்திற்கும் உள்ள தொடர்பு அறுந்து விடுமோ என்று அஞ்சுகிறேன்.

கலைஞர் முதலமைச்சராக ஆனது தமிழக அரசுக்கு லாபம்; ஆனால் தமிழக இலக்கிய உலகிற்கு நஷ்டம். ஏழை மக்கள்; கட்டியிருக்கிற ஆடைக்கும் மாற்று ஆடையின்றி அவதிப்படுகிற குடிசை வாழ் மக்களுக்கெல்லாம் நான் ஒன்றைச் சொல்வேன். உங்களுக்கென்று ஒருவர் அரசோச்சுகின்ற இடத்திற்கு வந்திருக்கிறார். அண்ணாவின் வலக்கரமாக விளங்கிய அவர் இன்று அண்ணாவின் இடத்தில் இருக்கிறார் என்ற திருப்தியோடு இருங்கள். கலைஞருக்கு என்று ஒரு தனி பாணி உண்டு.

இலக்கியத்திலும் அவர் அப்படித்தான். எந்த ஒரு எழுத்துப் பாணியையும் பின்பற்றாமல் தனக்கென ஒரு தனி பாணியை வகுத்துக் காட்டியவர் அவர். எதற்காக அவரைப் பாராட்டுவது என்று தெரியாமல் திகைக்கிறேன். மாரிசாமி குறிப்பிட்டதைப் போல - குண நலன்களைக் கொண்ட கலைஞரைப் பாராட்டுவதா? எழுத்தாற்றல் மிக்க இலக்கிய திறமையாளரைப் பாராட்டுவதா? எனக்கு விளங்கவில்லை. எங்கே எத்தனை நன்மைகள் தெரிந்தாலும் அத்தனையிலும் கருணாநிதி இருக்கிறார் என்று பொருள்.

அண்ணா மறைந்தபோது மற்றொரு அண்ணா கிடைப்பாரா என்று தவங்கிடந்த நமக்கு கலைஞர் கிடைத்திருக்கிறார். பல ஆண்டுகளாக பலமுறை காங்கிரஸ் மந்திரிகள் பயணம் மேற்கொண்டு சந்தித்துப் பேசியும் தீராமலிருந்த ஆற்று நீர் பங்கீட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டவர் கலைஞர்தான். காலையில் கேரளம் வந்தவர் மாலையில் பேச்சை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு திரும்பினார். இரு மாநிலங்களுக்கிடையில் நீண்டநாள் தீராதிருந்த சிக்கலைத் தீர்த்து வைத்துத் திரும்பிய கலைஞர் கருணாநிதியை வரவேற்று பாராட்டியிருக்கவேண்டிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் அதற்கு மாறாக தங்கக் கட்டிக்குள்ளே புழுவைத் தேடுகிறார்கள்.

தமிழ்நாட்டில் சிறுபான்மை சமூகத்தினரான முஸ்லீம்களை அரவணைத்துச் செல்கிற கலைஞரது பாங்கு பாராட்டுக்குரியது." பிறந்த நாள் நிகழ்ச்சியை நண்பர்கள் நீலநாராயணன், வேலூர் நாராயணன் ஆகியோர் முன் நின்று நண்பர் நாகிரெட்டி போன்றவர்களுடைய ஒத்துழைப்போடும், சுந்தர்லால் நகாதா போன்றவர்களுடைய ஒத்துழைப்போடும் நடத்தினார்கள். அன்று நான் அறிவித்ததற்கொப்ப "அண்ணா அறக்கட்டளை" 15 - 10 - 69-ல் தொடங்கப்பட்டது. நான் விரும்பியவாறே ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி இறுதி வகுப்புத் தேர்வில் அதிகமான மதிப்பெண்கள் பெற்ற இரண்டு மாணவர்களுக்கு இருநூறு ரூபாய் வீதம் தருவதென்று முடிவெடுக்கப்பட்டது.

1973-ஆம் ஆண்டுவரையில் இருநூறு ரூபாய் வீதத்தில் தரப்பட்ட அந்தத் தொகை 1973-க்குப் பிறகு முன்னூறு ரூபாய் வீதம் உயர்த்தப்பட்டது. அந்த அண்ணா அறக்கட்டளையின் மூலமாக 1970-ஆம் ஆண்டு 38 மாணவர்களுக்கு 7,600 ரூபாயும், 71-ஆம் ஆண்டு 40 மாணவர்களுக்கு 8,000 ரூபாயும் எனத் தொடங்கி 82-அம் ஆண்டு 53 மாணவர்களுக்கு 15,900 ரூபாய் என்ற அளவிற்கு தரப்பட்டுள்ளது. இதைத் தவிர ஏழை மாணவர்களுக்குப் பள்ளிக் கட்டணம் கட்டுவதற்காக ஆண்டுதோறும் தரப்பட்ட வகையில் 82-83-ஆம் ஆண்டு முடிய சுமார் 13,000 ரூபாய் தரப்பட்டிருக்கிறது.

ஆக, அந்த அறக்கட்டளையின் மொத்தத் தொகைக்குக் கிடைத்த வட்டியின் மூலமாக இதுவரை மாணவர்களுக்கென சுமார் ஒரு லட்சத்து எண்பதாயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் மேயர் நண்பர் சா. கணேசன் அவர்களுடைய முயற்சியால் 1972-இல் என் பெயரால் ஒரு அறக்கட்டளை தொடங்கப்பட்டு, பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஏழை மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ஐம்பது ரூபாய் முதல் நூறு ரூபாய் வரை உதவித் தொகை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் வட்டியாக வருகின்ற சுமார் ஐம்பதாயிரம் ரூபாயைக் கொண்டு ஏழை மாணவர்களுக்கு காசோலையாகவே இந்தத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. என் பிறந்த நாள் விழா எதுவாயினும் அந்த நிகழச்சிகளில் அளிக்கப்படுகிற தொகை ஏழைகளுக்காகவே செலவிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டு பிறந்த நாள் விழாவிலும் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு கண்ணொளி வழங்கும் திட்டம் பிச்சைக்கார மறுவாழ்வுத் திட்டம், மாடுகளைப் போல் மனிதர்கள் இழுத்த கைரிக்‌ஷக்களை ஒழித்துவிட்டு இலவசமாக அவற்றிற்குப் பதிலாக சைக்கிள் ரிக்‌ஷாக்களை வழங்கிய திட்டம், ஊனமுற்றோர் நல்வாழ்வுத் திட்டம், அனாதைச் சிறுவர்களுக்கு கருணை இல்லங்கள் நடத்தி கல்விப் பயிற்சியும், உணவும் உறையுளும் அளிக்கும் திட்டம் போன்ற எல்லாச் செயல்களுமே ஏழை எளியோரை முன்வைத்து நிறைவேற்றப்பட்ட திட்டங்களாகும்.

என் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு அடுத்த இரண்டு நாட்களுக்குப் பிறகு ஜூன் திங்கள் 5-ஆம் நாள் சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயற் குழு கூடியது. அந்தச் செயற்குழுவில் காமராஜர் அவர்களின் குழுவிற்கும், சுப்பிரமணியம் அவர்களின் குழுவிற்கும் மனத்திற்குள் இருந்த வெறுப்பு வெளிப்படையாக வெடிக்கத் தொடங்கிற்று. அந்தச் செயற்குழு கூட்டப்பட்டதின் முக்கிய காரணமே பொள்ளாச்சி மகாலிங்கம் விவகாரம் பற்றி விவாதிப்பதற்காகத்தான்.

அந்த விவகாரம் என்னவென்றால் திரு. காமராஜர் அவர்கள் ஒரு கூட்டத்தில் அப்போது பேசும்போது; பொள்ளாச்சி மகாலிங்கம் நடத்திய விழா ஒன்றில் தி.மு.கழக அமைச்சர்களுக்கு மது வகையறாக்கள் பரிமாறப்பட்டன எனக் குறிப்பிட்டார். உடனே அமைச்சர்கள் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு அதன் பின்னர் காமராஜர் அதற்குப் பதில் எதுவும் கூறாமலே இருந்துவிட்டார். எந்த அமைச்சருக்கு அப்படி வழங்கப்பட்டது என்று சொன்னால் நான் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன் என்று அப்போதே குறிப்பிட்டேன்.

அதற்கும் திரு. காமராஜர் அவர்கள் பதில் அளிக்கவில்லை. மகாலிங்கம் அவர்களும் காமராஜர் மீது வழக்கு ஒன்றைத் தொடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இந்த விவகாரம் குறித்து பேசுவதற்காகத்தான் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூடியது. விவாதம் முற்றி குழப்பம் அதிகரித்தது. மகாலிங்கத்தின் மீது நடவடிக்கை எடுத்து அவரைக் கட்சியை விட்டு அறவே நீக்க வேண்டுமென்று காமராஜரின் ஆதரவாளர்கள் குறிப்பிட்டார்கள்.

அறவே நீக்க வேண்டாம், இரண்டு வருடத்திற்கு கட்சியை விட்டு அவரைத் தள்ளி வைக்கலாம் என்று காமராஜர் அவர்கள் கூறினார். குழப்பமான சூழ்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக அப்போதிருந்த சி. சுப்பிரமணியம் அவர்கள் ஒரு துண்டு அறிக்கையை அந்தச் செயற்குழுக் கூட்டத்தில் விநியோகம் செய்தார். அந்த அறிக்கையில் கண்டிருந்த வாசகங்கள் ஆவன : பொதுத் தேர்தல் முடிந்தவுடன் எனக்கு பெரும் பதவிகள் கிடைக்கும் வாய்ப்பு இருந்தது.

உள்நாட்டிலோ, வெளி நாட்டிலோ நான் பெரிய பதவியில் அமர்ந்திருக்க முடியும். ஆனால் அனைத்தையும் வேண்டாமென்று உதறிவிட்டு தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சியை வளர்க்கின்ற பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். தமிழ்நாடு காங்கிரசில் காமராஜர் குழு ஒன்று இருப்பது எனக்குத் தெரியும். அவருக்கு எதிரான குழு ஒன்று இருப்பதும் எனக்குத் தெரியும். அந்த இரு குழுக்களிலும் சேராமல் நடுநிலையில் இருந்து பணியாற்ற நான் விரும்பினேன்.

காங்கிரஸ் வளரவேண்டும் என்பதற்கான நல்ல எண்ணத்தோடு பாடுபட்டேன். நான் தலைமைப் பொறுப்பை ஏற்றது முதல் காமராஜரைக் கலந்தே ஒவ்வொரு காரியத்தையும் செய்து வருகிறேன். ஆனால் அவருடைய நண்பர்கள் என் மீது குற்றம் சொல்லிக்கொண்டே வருகிறார்கள். 3-ஆம் தேதி நவசக்தி இதழில் என்னைப்பற்றி குற்றஞ்சாட்டி தலையங்கம் வெளிவந்துள்ளது. இதெல்லாம் காமராஜர் அறியாமல் நடந்தது என்றோ அவர் சொல்லாமல் எழுதினார்கள் என்றோ என்னால் நம்ப முடிய வில்லை.

இந்த நிலைமை நீடிக்குமானால் நான் தொடர்ந்து பொறுப்பில் இருக்க விரும்பவில்லை." இவ்வாறு அந்தத் துண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அது கு

றித்து காமராஜர் தனது கருத்தைத் தெரிவித்த போது இவைகளை எல்லாம் சி. சுப்பிரமணியம் வாய் மூலம் கூறியிருக்கலாம். எழுத்தில் எழுதி விநியோகித்தது பற்றி வருந்துகிறேன் எனக் குறிப்பிட்டார். 5-6-69 "மெயில்" இதழில் சி. சுப்பிரமணியம் அவர்கள் பின்வருமாறு கருத்து தெரிவித்தார். "தமிழ்நாட்டு காங்கிரசுக்குள் இருக்கிற குழு மனப்பான்மையைச் சரி செய்வதில் நான் ஓரளவு வெற்றி பெற்றேன். ஆனால் ஒரு சிறிய கூட்டம் வேண்டுமென்றே தொடர்ந்து உண்மைகளைத் திரித்துக் கூறி வருகிறது.

தென்னிந்திய காங்கிரஸ் தலைமையிலிருந்து காமராஜர் கீழே தள்ளப்படாமல் பார்த்துக் கொள்வதுதான் தங்கள் நோக்கம் என்று அந்தச் சிறு கூட்டம் கூறுகிறது. மேடையிலும், பத்திரிகைகளிலும் அந்தச் சிறு கூட்டம் இத்தகைய பிரச்சாரம் செய்துவருவதின் காரணமாக இரு குழுக்களின் சந்தேகப் பார்வைக்கு நான் இலக்காகியுள்ளேன். காமராஜருக்கும் எனக்கும் இடையே இருப்பதாகக் கூறும் பிளவு பற்றிய விஷமத்தனமான பிரச்சாரத்தை நான் முதலிலேயே வெளிப்படையாக மறுத்தேன்.

ஆனால் துரதிருஷ்டவசமாக காமராஜர் இப்படிப்பட்ட வதந்திகளை மறுக்க முன்வரவில்லை. இத்தகைய குழு மனப்பான்மையைக் களைந்தெறியா விட்டால் எந்த நிறுவனமும் செம்மையாகச் செயல்பட முடியாது. சில காங்கிரஸ் ஆதரவு பத்திரிகைகள் மறைந்த முதலமைச்சர் அண்ணாதுரையைப் பற்றியும், இப்போதைய முதலமைச்சர் கருணாநிதியைப் பற்றியும் மிகக் கீழ்த்தரமாக எழுதுவதையே தங்கள் தொழிலாகக் கொண்டுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு உதவியாக இருப்பதற்குப் பதிலாக இளைஞர் காங்கிரஸ் என்பது தமிழ்நாடு காங்கிரசுக்குப் போட்டியான முறையிலேயே செயல்பட்டு வருகிறது.

கிளர்ச்சி ஒன்றுதான் சரியான வழி என்று கருதும் ஒரு கோஷ்டி காங்கிரசில் இருக்கிறது. இந்தப் போக்கை நான் ஏற்க இயலாது. ஜனநாயகத்தில் கிளர்ச்சி என்பது கடைசி ஆயுதமாகத்தான் கையாளப்பட வேண்டும். அதுவும் போதிய அளவு சிந்தித்தபின்தான் கிளர்ச்சியில் இறங்க வேண்டும். இளைஞர் காங்கிரஸ் என்பது ஒரு தனி மனிதருக்கு தான் விசுவாசமாக இருப்பது போலவும், காங்கிரஸ் கட்சிக்கு அது விசுவாசமாக இருக்கத் தேவையில்லை என்பது போலவும் செயல்படுகிறது.

இத்தகைய போக்கிற்கு காமராஜரின் அங்கீகாரமும் இருக்கிறது என்பது போல அவர்கள் செயல்படுகிறார்கள். இத்தகைய மறுப்புக்கிடமான நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த நான் மேற்கொண்ட முயற்சிகள் எல்லாம் வீணாயின. இத்தகைய போக்கைக் கண்டிக்க காமராஜர் முன்வராததுதான் இதற்கு முக்கியமான காரணம் ஆகும்."

-இவ்வாறு உருவெடுத்த இந்த கோஷ்டிப் பூசல் தமிழ்நாடு அளவிலே மாத்திரமல்லாமல் அகில இந்திய அளவில் விரிவடைந்த கட்டம் இப்போதுதான் தொடங்கியது. பொதுச் செயலாளர் தேர்தல் 1969- ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டு தேர்தல்கள் முறையே இந்தியாவின் ஆளுங் கட்சியான காங்கிரசுக்குள் ஒரு மாற்றத்தையும், தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியான தி.மு.க. கழகத்தில் ஒரு மாற்றத்தையும் எற்படுத்தின என்று சொன்னால் அது மிகையாகாது. காங்கிரசில் ஏற்பட்ட மாற்றம் அந்தக் கட்சி இரு கூறாகப் பிரிந்தது.

தி.மு.கழகத்தில் ஏற்பட்ட மாற்றம் ஏற்கனவே வலுவாக இருந்த இயக்கத்தை மேலும் வலுவாக்கும் வகையில் அமைந்தது. ஆனால் இந்த இரண்டு மாற்றங்களுக்கிடையே ஏற்பட்ட நிகழ்ச்சிகள் ஏராளமானவை; வரலாற்றுக் குறிப்பில் இடம்பெற வேண்டியவை. தி. மு. கழகத்தில் நடைபெற்றது கட்சியின் நிர்வாகத் தேர்தல். காங்கிரசார் இடையே நடைபெற்றது இந்தியக் குடியரசுத் தலைவர் யார் என்கின்ற போட்டி! கழகப் பொதுச் செயலாளராக இருந்த அண்ணா அவர்களுடைய மறைவுக்குப் பிறகு அடுத்து பொதுச் செயலாளர் யார் என்பது தி.

மு. கழகத்தில் எழுந்த கேள்வி! குடியரசுத் தலைவர் ஜாகிர் உசேன் மறைந்தபிறகு, அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பது காங்கிரசில் எழுந்த கேள்வி! இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடை காண முற்பட்ட போது ஏற்பட்ட விளைவுதான் கழகத்தில் ஒற்றுமையும், காங்கிரசில் பிளவும்! கழகத்தில் முறையாக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, கிளைக் கழக நிர்வாகிகள் தேர்தலும், அதனையொட்டி மாவட்டக் கழக நிர்வாகிகள் தேர்தலும், அதனையொட்டி செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தலும் முடிவுற்று-புதிய பொதுக்குழு உறுப்பினர்கள் கழகத்தின் பொதுச் செயலாளரையும், பொருளாளரையும் மற்றும் குழு உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்கவேண்டும்.

இது கழகம் தொடங்கியது முதல் தொய்வில்லாமல் நடைபெற்று வருகிற ஜனநாயக முறையாகும். நான் இதை எழுதுகிற இந்த நேரத்திலேகூட பல பெரிய அரசியல் கட்சிகளில் பல ஆண்டுக் காலமாக கட்சி அமைப்பு- களின் தேர்தல்களே நடைபெறாமல் எல்லா மட்டத்து நிர்வாகிகளையும் நியமனம் செய்கிற முறையே இருந்து வருகிறது. ஆனால் தி.மு. கழகத்தைப் பொறுத்தவரையில் எவ்வளவு வேதனை, சோதனைகளுக்கிடையிலேயும், கட்சியின் கட்டுக் கோப்பு குலையாமல் இருக்க ஜனநாயக ரீதியான அமைப்புகளின் தேர்தல்கள் நடைபெறத் தவறுவதில்லை.

அந்த வகையில் கிளை அமைப்புகளின் தேர்தல்களிலிருந்து பொதுக்குழு உறுப்பினர்கள் வரையிலான தேர்தல்கள் நடைபெற்று முடிந்து, பொதுச் செயலாளர் தேர்தலுக்காகக் காத்திருந்த சமயம் யார் பொதுச் செயலாளராக வருவது என்ற பிரச்சினை பெரிதாகக் கிளம்பியது. ஜூலை 26-ஆம் நாள் பழைய செயற்குழு, பொதுக்குழு கூட்டப் பெற்று நன்றி தெரிவிக்கப்பட்ட பிறகு, புதிய பொதுக் குழு 27-ந் தேதி கூடி பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுக்கும் என்று தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆனால் ஏப்ரல் மாதத்திலேயே நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் அவரே பொதுச் செயலாளர் பொறுப்பிற்குப் போட்டியிடப்போவதாக அறிவித்தார். தான் அமைச்சராக இல்லாமல் இருப்பதால், முழுக்க முழுக்க கட்சிப் பணிக்கே தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் வாய்ப்பைப் பெறுவதற்கு பொதுச் செயலாளர் பதவியை விரும்புவதாக அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்தார். கழகத்தில் பெரும்பான்மையோர் ஆட்சிப் பொறுப்பின் தலைவராக ஒருவரும், கட்சிப் பொறுப்பின் பொதுச் செயலாளராக ஒருவரும் இயங்குவதால் ஒருமித்த கருத்து உருவாகாமல் கட்சியின் பணிகளும், ஆட்சியின் கடமைகளும் குலைந்துவிட நேரிடும் என்ற கருத்தைத் தெரிவித்தார்கள்.

நான் பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடுவது என்றும், பொருளாளர் பதவிக்கு நண்பர் எம். ஜி. ஆர். போட்டியிடுவது என்றும் கருத்துக்கள் பரவியபோது நண்பர் எம். ஜி. ஆர். அவர்களை நிருபர்கள் பேட்டி கண்டனர். கழகத்தின் பொருளாளராக எம். ஜி. ஆர். தான் வருவார் என்பதை நான் அதற்கு முன்பு சில கூட்டங்களில் சூசகமாக வெளியிட்டிருந்தேன். அதை வைத்துக்கொண்டு எம். ஜி. ஆர். அவர்களிடம் நிருபர்கள் கேள்விகளைக் கேட்டார்கள்.

அதற்கு எம். ஜி. ஆர். அளித்த பதிலில், "தி.மு. கழகத்தில் உள்ள 99 சதவிகிதம் பேர்கள் கலைஞர் அவர்கள்தான் பொதுச் செயலாளராக வரவேண்டுமென்று விரும்புகிறார்கள். எனவே அவரைத் தேர்தலில் நிற்கவேண்டுமென்று வற்புறுத்துகிறார்கள். இனிமேல் அந்தப் போட்டியிலிருந்து விலகுவது என்பதுகூட கலைஞர் கையில் இல்லை. தனக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் தன்னுடைய கருத்தை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று நாவலர் சொல்வது அவர்களைக் கட்டாயப்படுத்துவதாகத்தான் ஆகும்.

கட்சியின் தலைமை ஒருவரிடமும், ஆட்சியின் தலைமை இன்னொருவரிடமும் இருந்ததால்தான் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் சீர்குலைந்தது. அந்த நிலை தி.மு. கழகத்திற்கு வரக்கூடாது என்ற எண்ணத்தில்தான் இரண்டு பதவிகளையும் ஒருவரே வகிக்கவேண்டுமென்று நான் கூறுகிறேன்" என்று குறிப்பிட்டார்.

நிருபர்கள் எம். ஜி. ஆரைப் பார்த்து, நெடுஞ்செழியன் கருணாநிதி இருவரின் போட்டியைத் தவிர்க்க நீங்கள் சமரச முயற்சி எதுவும் மேற்கொள்வீர்களா? எனக் கேட்டனர். அதற்கு எம். ஜி. ஆர். "ஒரு பிரச்சினையில் முடிவு ஏற்படாததற்கு முன்னால்தான் மத்தியஸ்தம் பேசுவார்கள், இந்தப் பிரச்சினையைப் பொறுத்தவரையில் ஒரு முடிவு ஏற்பட்டு, இரண்டுபேருமே தேர்தல் களத்தில் குதித்துவிட்டார்கள். இதில் சமரச முயற்சிக்கு எதுவும் இடம் இல்லை" என்று கூறினார்.

பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து தந்தை பெரியார் விடுத்த அறிக்கையில் "தி. மு. கழகத்தில் பொதுச்செயலாளர் பதவிதான், கட்சியின் தலைமைப் பதவி. இந்தப் பதவிக்கு கருணாநிதி போட்டியிடப் போவதாக அறிவித்துவிட்டார். ஆகவே அவரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். கட்சியின் தலைமைப் பதவியும், ஆட்சியின் தலைமைப் பதவியும் ஒருவர் கையில் இருந்தால்தான் எவ்விதத் தொல்லையும் இல்லாமல் எடுத்த காரியங்கள் நடக்கும். நேரு இந்தியாவின் பிரதமராக இருந்தபோது கட்சியைத் தனது ஆதிக்கத்தின்கீழ் வைத்திருந்தார்.

பொதுச்செயலாளர் பதவிக்கு நெடுஞ்செழியனும் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார். கட்சித் தலைமைப் பதவி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். போட்டியிருந்தால் அது கட்சிக்குப் பலவீனம்" என்று குறிப்பிட்டிருந்தார். இந்தக் கட்டத்தில் நாவலர் அவர்கள் ஒரு அறிக்கை விடுத்தார். அது வருமாறு: "மதிப்பிற்குரிய கலைஞர் அவர்கள் கழகப் பொதுச்செயலாளர் தேர்தலில் என்னை எதிர்த்துப் போட்டி போடப்போகிறார் என்ற செய்தியினைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன்.

அவரே என்னை எதிர்த்துப் போட்டி போட முன்வருவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. முதலமைச்சர் போட்டியிலிருந்தும் அமைச்சரவையிலிருந்தும் ஒதுங்கி நிற்கும் நான் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று என் நண்பர்கள் வலியுறுத்தினர். போட்டி ஏற்படாத சூழ்நிலை உருவானால் நல்லது என்பதற்காகத்தான் முன்கூட்டியே என் விருப்பத்தை நான் வெளியிட்டேன். அந்தப் பதவியை ஏற்றுப் பணி புரிவதற்கான வாய்ப்பும் ஓய்வும் எனக்கு இப்போது இருப்பதால் நான் அந்தப் பதவிக்கு நிற்கலாம் என்று விரும்பினேன்.

பொதுச் செயலாளர் பதவியை ஏற்க நான் முன்வந்துள்ளதை நன்கு தெரிந்துள்ள கலைஞர் போட்டியின்றி பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்று இரண்டு நாட்களுக்கு முன்னால்கூட கூறியது எனக்கு நம்பிக்கையைக் கொடுத்தது. இப்போது அவரே எனக்குப் போட்டியாக எதிரே வந்து நிற்பது எனக்கு பெரிய வருத்தத்தை அளிக்கிறது. நான் என் முடிவை மாற்றிக்கொள்ள வேண்டிய காரணம் எதுவும் இப்போது என்னைப் பொறுத்து ஏற்பட்டிருப்பதாக நான் எண்ணவில்லை."

நாவலரின் அந்த அறிக்கைக்குப் பதிலளிக்க வேண்டிய தவிர்க்க முடியாத கடமை எனக்கு ஏற்பட்டது. எனவே நான் விடுத்த விளக்க அறிக்கை பின்வருமாறு: "பொதுச்செயலாளர் தேர்தல் பற்றி நாவலர் அவர்கள் ஏடுகளில் விடுத்துள்ள அறிக்கையைப் பார்த்தேன். கழகத்தில் ஒவ்வொரு முறையும் பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறுகிற நேரத்தில், கழகத் தலைமையின் முன்னணியினர் கலந்தாலோசித்து யார் பொதுச்செயலாளராக வருவது என்று முடிவு செய்வதோ ஏகமனதாக ஒருவரைத் தேர்ந்தெடுப்பதோ இதுவரையில் முறையாக இருந்து வந்துள்ளது.

ஏற்கனவே ஒரு முறை பொதுச் செயலாளராக நாவலர் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டபோதும் முன்கூட்டியே கழகத் தலைமை கலந்தாலோசித்து போட்டியில்லாமல் அவரைத் தேர்ந்தெடுத்தோம். அடுத்து நடைபெற்ற பொதுச் செயலாளர் தேர்தலில் அண்ணா அவர்கள் தேர்ந்- தெடுக்கப்பட்ட போதும் பொதுச் செயலாளர் பதவிக்கு யார் நிற்கிறார்கள் என்பதை யாரும் முன்கூட்டியே அறிவித்தது கிடையாது. ஆனால் இந்தத் தடவை நாவலர் அவர்கள் இதுவரையில் பத்துதடவைகளுக்குக் குறையாமல் பத்திரிகை நிருபர்களிடத்தில் அவர் பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடப் போவதை அவரே அறிவித்துள்ளாரே தவிர என்னிடமோ அல்லது ஏனைய தலைமைக் கழகத்தின் நண்பர்களிடமோ இது வரையில் கலந்தாலோசித்தது கிடையாது.

முதலமைச்சர் தேர்தலில் பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் என்னைப் பொறுப்பேற்கும்படி வலியுறுத்திய போது நான் நிலைமையை நாவலரிடத்தில் விளக்கி அவரை என் அமைச்சரவையில் இடம் பெறவேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். ஆனால் அவரோ முதல் இடம், இரண்டாவது இடம் என்பதைப் பற்றியெல்லாம் கூறி அறிக்கை விட்டு என் மனம் புண்படும்படி நடந்து கொண்டார். பொதுச் செயலாளராக நீங்களே வாருங்கள்; முதலமைச்சர் பொறுப்பிற்குப் பெரும்பான்மையோர் விருப்பப்படி என்னை நீங்களே முன்மொழியுங்கள் என்று நான் மன்றாடிக் கேட்டபோதும் அவர் மனம் இளகவில்லை.

அவருடைய கைகளைப் பற்றிக் கொண்டு கழகத்தைக் காப்பாற்றுங்கள், என் அமைச்சரவையில் இடம் பெறுங்கள் அல்லது பொதுச் செயலாளராகப் பதவி ஏற்றுக் கொள்ளுங்கள் என்று நான் அவரை வேண்டியதும் அப்போது வீணாயிற்று. தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு எனக்கும், நாவலருக்கும் நெருங்கிய நண்பரான சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் என்னிடம் வந்து நாவலரைப் பொதுச் செயலாளராக ஏற்றுக்கொண்டால் உதவி முதலமைச்சராக அமைச்சரவையில் இடம் பெறத் தயாராக இருக்கிறார் என்று கூறினார்.

எனக்கு அது திகைப்பாகவும் வியப்பாகவும் இருந்தது. ஏனென்றால் "அமைச்சராக இருந்துகொண்டு கட்சி காரியங்களைக் கவனிக்க முடியாது" என்று நாவலர் அவர்கள் அண்மையில் தான் அறிக்கை வெளியிட்டிருந்தார். என்னிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினரிடம் நான் அதை எடுத்து கூறியதோடு நாவலர் அவர்கள் என் அமைச்சரவையில் இடம் பெறுவதை இரு கையேந்தி வரவேற்கிறேன் என்று சொல்லி அனுப்பினேன். ஆனால் நாவலர் அவர்கள் பொதுச்செயலாளர் பதவி, அமைச்சர் பதவி இரண்டும் வேண்டுமென்று வலியுறுத்தியதாக அறியலானேன்.

முதலமைச்சர் தேர்தலில் என்னை முன்மொழிய மறுத்து, போட்டி ஏற்படக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தி, அதற்குப் பிறகு போட்டியிலிருந்து விலகி ஒரு கசப்பான நிலையை கழகத்தில் உருவாக்கியது போலல்லாமல், இந்த முறை என்னுடைய வேண்டுகோளை நாவலர் ஏற்றுக்கொண்டு பொதுச் செயலாளர் தேர்தல் போட்டியிலிருந்து விலகிக்கொண்டு அமைச்சரவையில் இடம்பெற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். சில ஆண்டுக் காலமாக கழக வேலைகளில் பெரும் பகுதியை நான்தான் ஏற்றுக்கொண்டிருந்தேன் என்பதை நாவலர் அறிவார்; நாடும் அறியும்.

அண்ணா அவர்கள் எனக்கு எழுதிய கடிதங்களைப் படித்த நண்பர்கள் அறிவார்கள். இதனையே நான் நாவலருக்கு என்னுடைய இறுதி வேண்டுகோளாக வைக்கிறேன். மாறிமாறி இருவரும் அறிக்கைகள் விடுத்து கொண்டிருக்க நான் விரும்பவில்லை." கழகத்தில் ஒரு குழுவினர் நாவலர் பொதுச் செயலாளராகவும் வரக்கூடாது, அமைச்சராகவும் இடம்பெறக் கூடாது என்ற நிலையில் திட்டவட்டமாகவும், உறுதியாகவும் இருந்தனர். ஆனால் அந்த நிலையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆரம்ப காலத்திலிருந்து கழகத்தைக் கட்டி வளர்த்தவர்களில் நாவலரும் ஒருவர் என்ற காரணத்தால் அவரைத் தனிமைப்படுத்திவிட்டு கட்சியை நடத்துவது என்பது என் மனசாட்சிக்கு இடம் தராத ஒன்று என்பதை அந்தக் குழுவினரிடம் நான் வலியுறுத்திச் சொன்னேன். இதற்கிடையே ஒவ்வொரு மாவட்ட வாரியாக ஆங்காங்கு பொதுக்குழு உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்று ஒவ்வொரு கூட்டத்திலும் மிகப் பெரும்பான்மையோர் கழகப் பொதுச் செயலாளராக நானே வரவேண்டும் என்று முடிவெடுத்து பத்திரிகைகளில் அறிக்கை விட

ுத்துக் கொண்டிருந்தார்கள் இந்த நிலை நீடிப்பதால் கட்சியில் எள் முனை அளவு பிளவு கூட ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கவலை கொண்டிருந்த நான் பொதுக்குழுக் கூட்டத்திற்கு முதல் நாள் 25-7-69 அன்று இரவு கழகத்தின் முக்கிய தலைவர்களை எல்லாம் அழைத்துப் பேசினேன். அவர்களில் பெரும்பாலோர் நாவலர் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்தார்கள். ஆனால் என்னுடைய எண்ணத்தை ஏற்றுக்கொண்டு நண்பர்கள் மதுரை முத்து, மன்னை நாராயணசாமி, அன்பில் தர்மலிங்கம், திருவண்ணாமலை தர்மலிங்கம், தூத்துக்குடி சிவசாமி ஆகியோர் ஒரு சமரசத் திட்டத்தை உருவாக்கினார்கள்.

அந்த சமரசத் திட்டத்தின்படி கழகச் சட்ட திட்டத்தில் ஒரு மாற்றம் செய்வது என்று தீர்மானிக்கப் பட்டது. அதுகுறித்து நாவலரின் கருத்தை அறிய அவர்களை நான் அனுப்பி வைத்தேன். கழக சட்டதிட்டத்தில் பொதுச்செயலாளருக்கு என்று அவர் ஆற்றவேண்டிய பணிகள், பொறுப்புகள் குறித்து தொடர்பாகப் பல பிரிவுகளும், தனித் தனியாகப் பல பிரிவுகளும் இருக்கின்றன. அவைகளை அப்படியே வைத்துக்கொண்டு-அவைத் தலைவர் என்பதை தலைவர் என்று மாற்றிக்கொண்டு, பொதுச் செயலாளர் நிறைவேற்றவேண்டிய பணிகளுக்கு-தலைவரைக் கலந்து பேசி இருவரும் சேர்ந்து முடிவு மேற்கொண்ட பிறகுதான் அவற்றை நிறைவேற்றவேண்டும் என்ற கருத்தில் சில பொறுப்புக்களைத் தலைவர் பதவிக்கு அளித்து-இவ்வண்ணம் 26-7-69-இல் நடைபெறும் பழைய பொதுக்குழுவில் சட்டதிட்ட திருத்தத்தைக் கொண்டுவருவது என்றும், அதன்படி 27-7-69-இல் நடைபெறும் தலைமைக்கழகத் தேர்தலில் தலைவர் பதவிக்கு என்னையும் பொதுச்செயலாளர் பதவிக்கு நாவலர் நெடுஞ்செழியன் அவர்களையும் தேர்ந்தெடுப்பது என்பதும்தான் அந்த சமரசத் திட்டம்.

முதலில் அறிவிக்கப்பட்டவாறு 26-7-69 காலை பழைய செயற்குழு, பொதுக்குழு சென்னை ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் கூடியது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பு நானும், நாவலரும் அந்தக் கட்டிடத்திலேயே ஒரு இடத்தில் தனியாகச் சந்தித்துப் பேசினோம். பத்து நிமிட நேரம் நாங்கள் தனியாகச் சந்தித்துப் பேசியவுடன் இருவர் மனதிலும் இருந்த கருத்து வேறு பாடுகள் கதிர்பட்ட பனிபோல விலகின. சமரசத் திட்டத்தை இருவரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டோம் என்று தெரிவித்ததும் நாங்கள் இருந்த அறைக்குள் ஓடிவந்து அன்பிலும், மன்னையும், மதுரை முத்துவும் மற்றும் கழக முன்னணியினரும் எங்கள் இருவரையும் கட்டித் தழுவிக்கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.

சமரசத் திட்டத்தின்படி உருவான சட்டதிட்ட திருத்தத்தை பொதுக்குழு ஏற்றுக்கொண்டது. அந்தத் திருத்தத்தின்படி கழகத் தலைவர் தேர்தலும், பொதுச் செயலாளர் தேர்தலும், பொருளாளர் தேர்தலும், குழுக்கள் தேர்தல்களும் நடைபெற்றன. தலைவராக நானும், பொதுச் செயலாளராக நாவலரும், பொருளாளராக எம்.ஜி.ஆர். அவர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டோம். புதிய பொதுக்குழு உறுப்பினர்கள் 326 பேர்களில் 320 பேர்கள் வந்திருந்து இந்தத் தேர்தல் நடைபெற்றது.

நானும் நாவலரும் நிருபர்களைச் சந்தித்தபோது -"இரு தரப்பினருக்கும் மன நிறைவு அளிக்கத் தக்க வகையில் முடிவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்" என்று நாவலர் தெரிவித்தார். நான் நிருபர்களிடத்தில் "உடன்பாடு ஏற்பட உதவிய மதுரை முத்து, அன்பில் தர்மலிங்கம், மன்னை நாராயணசாமி, இரா. தர்மலிங்கம், எம். எஸ். சிவசாமி ஆகியோருக்கு இருவரும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்" என்று கூறினேன்.

இந்த முடிவு தென்னாற்காடு மாவட்டத்தில் சிதம்பரம் அண்ணா கலையரங்கில் திராவிடர் கழக மாநாட்டில் கலந்து கொண்டிருந்த பெரியார் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டபோது. அவர் சொன்ன கருத்து வருமாறு: "தி. மு. கழகத்திற்கு இதுவரை தலைவர் பதவி இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது புதிதாக தலைவர் பதவி ஏற்பட்டுள்ளது. அதன் தலைவராக கலைஞர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்தப் பொதுச் செயலாளர் தேர்தலில் தி. மு. கழகம் உடைந்துவிடுமோ என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன்.

ஆனால் தேர்தல் நல்ல முறையில் நடந்திருக்கிறது. இதனால் என் கவலை தீர்ந்துவிட்டது. இப்போதுள்ள நிலையில் தி. மு. கழக ஆட்சியைத் தமிழர்கள் ஆதரித்தே ஆகவேண்டும். இதைத் தவிர தமிழர்களுக்கு நன்மை செய்யும் ஆட்சி இனி ஏற்பட்டுவிடாது." பெரியார் அவர்களைப்போலவே தமிழகத்தின் பெருமக்கள் பலரும் கழகத்தின் பெரும்பான்மையான தொண்டர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். அடுத்த ஒரு சில நாட்களில் கல்வி, சுகாதார அமைச்சராக எனது அமைச்சரவையில் நாவலர் அவர்கள் இடம் பெற்றார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியானது.

அவர் அமைச்சரவையில் இடம் பெற்றபோது, கழகத்தினுடைய மூத்த தலைவர்களில் ஒருவரான "என்.வி.என்." என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட என். வி. நடராசன் அவர்கள் பிற்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும், கவிஞர் வேழவேந்தன் அவர்கள் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்கள். அண்ணா அவர்களுடைய அமைச்சரவையிலேயே என்.வி.என். அவர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும் என்ற எண்ணம் கழகத்தினரிடத்திலே பலமாக வேரூன்றியிருந்தது.

அதனை நிறை வேற்றும் வகையிலும் என். வி. என். அவர்களுக்கு என்னுடைய அன்பினையும், மரியாதையையும் காட்டவேண்டும் என்ற வகையிலும் அவரை எனது அமைச்சரவையில் இணைத்துக்கொண்டேன். இவ்வாறு கழகப் பொதுச்செயலாளர் தேர்தலையொட்டி கழகத்தில் நல்லதோர் ஒற்றுமை அரும்பியது. ஆனால் குடியரசுத் தலைவர் தேர்தலையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிகள் காங்கிரசை எப்படி பிளவுபடுத்தியது என்பதை அடுத்துக் காண்போம்.