உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/பரம்பிக்குளம் ஆளியாறு இறுதி ஒப்பந்தம்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

பரம்பிக்குளம் ஆளியாறு இறுதி ஒப்பந்தம் · 157 / 391

பரம்பிக்குளம் ஆளியாறு இறுதி ஒப்பந்தம் தமிழக ஆட்சியில் தலைமைப் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்ட மூன்று நான்கு மாதங்களுக்குள்ளாக பஞ்சாலைத் தொழிலாளர்களைப் பாதுகாத்துத் தீரவேண்டிய பெரும் பொறுப்பு கழக ஆட்சிக்கு ஏற்பட்டது. பத்துக்கு மேற்பட்ட மிகப் பெரிய பஞ்சாலைகள் மூடப்பட்டு, பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இழக்கக்கூடிய சூழ்நிலை முன்பிருந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலே ஏற்பட்டுவிட்டது.

அந்தத் தொழிலாளர்களின் துயர் துடைக்க நான் எடுத்துக்கொண்ட முயற்சியின் முதல்கட்டமாக "தமிழக நெசவாலை தொழிற் கழகம்" உருவாக்கப்பட்டது. அது குறித்து நான் விடுத்த அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டேன்: "மூடப்பட்ட ஆலைகளை ஏற்று நடத்தும் நோக்கத்துடன் தமிழக நெசவாலை தொழிற் கழகம் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் கம்பெனி சட்டப்படி பதிவு செய்யப்படும். மாநில கைத்தறி நெறியாளராக இருந்த சி. ராமச்சந்திரன் இந்த கார்பரேஷனின் தனி அதிகாரியாக இருப்பார்.

மூடப்பட்ட மில்களை அரசாங்கம் ஏற்று நடத்துவது பற்றி ஆராய்வதற்காக ஏற்கனவே சில நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டு அவற்றின் அறிக்கைகள் அரசுக்கு விரைவில் கிடைக்கவிருக்கின்றன. மில் தொழில் நிறுவனம் அந்த அறிக்கைகளைப் பரிசீலித்து தமிழக அரசுடனும், மத்திய அரசுடனும் தொடர்பு கொண்டு மூடப்பட்ட பஞ்சாலைகளை ஏற்று நடத்துவது பற்றி முடிவு செய்யும்."

இவ்வாறு அறிவித்த நான் உடனடியாக டெல்லிக்குச் சென்று அந்த நிறுவனத்தை அமைப்பது பற்றி மத்திய அமைச்சர்களுடன் பேச்சு நடத்தினேன். அந்த நிறுவனத்திற்கு மத்திய அரசு 51 சதவிகித பங்குகளைத் தருவதோடு மாநில அரசு தரவேண்டிய 49 சதவிகித பங்குத் தொகையை மத்திய அரசு கடனாகத் தரவேண்டுமென்றும் வலியுறுத்தினேன். இந்த நிறுவனத்திற்காக தமிழக அரசின் 69-70-ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் 15 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

1965-ம் ஆண்டில் இருந்தே தமிழகத்தில் பஞ்சாலைகள் தொடர்ந்து மூடப்பட்டு வந்துள்ளன. இதுபற்றி ஆராய பல குழுக்கள் அமைக்கப்பட்டன என்றாலும் அந்த ஆலைகளைத் திறப்பதற்கு ஒரு நிறுவனம் அமைக்கப்பட்டது கழக ஆட்சியில் தான் முதல் தடவையாக நடைபெற்றது. பொருளாதார நிபுணர் பி. எஸ். லோகநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் கருத்துக்களை ஏற்று அண்ணா தலைமையிலே இருந்த அமைச்சரவை செயல்படத் தொடங்கியது என்றாலும் வர்த்தக வங்கிகள் கடன் கொடுப்பதற்கான உத்தரவாதத்தை அரசாங்கம் வழங்கிய போதிலும் அந்தக் கடன்களை வாங்கி பணிகளைத் தொடங்கிய ஆறு ஆலைகள் தொடர்ந்து நல்ல முறையில் இயங்க முடியவில்லை.

மத்திய அரசின் உற்பத்தி வரி, பஞ்சு விலை உயர்வு, நூல் தேக்கம் ஆகியவை அதற்கு முக்கிய காரணங்களாக இருந்தன. அது குறித்து மத்திய அரசிடம் மாநில அரசின் சார்பாக நான் எடுத்துக் கூறி அதன் விளைவாக சில சலுகைகளை அளிக்க மத்திய அரசும் முன்வந்தது. ஆனாலும் அது போதாது என்றும் மேலும் சலுகைகள் தந்தால்தான் ஆலைகள் இயங்கும் என்றும் மத்திய அரசிடம் மாநில அரசு வலியுறுத்தியது. அதற்கிடையிலேதான் எல்லா சங்கடங்களையும் சமாளித்து எப்படியாவது மூடப்பட்ட ஆலைகளை இயங்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழக நெசவாலை தொழிற் கழகம் 1969-இல் அமைக்கப்பட்டது.

முதற்கட்டமாக அந்த நிறுவனம் கம்போடியா, ரங்க விலாஸ், கிருஷ்ணவேணி, கஸ்தூரி; ஓம் பராசக்தி ஆகிய ஐந்து ஆலைகளை ஏற்று நடத்த தீர்மானித்தது. நிறுவனத்தின் பரிந்துரையை மாநில அரசு அங்கீகரித்து அந்த முடிவை 19-5-69.இல் வெளியிட்டது. ஏற்கனவே மத்திய அரசை வலியுறுத்தியவாறு மூடப்பட்ட பஞ்சாலைகளை ஏற்று நடத்துவதால் உண்டாகக்கூடிய செலவில் மத்திய பஞ்சாலை கார்பரேஷன் 51 சதவிகிதமும், மாநில பஞ்சாலை கார்பரேஷன் 49 சதவிகிதமும் ஏற்றுக்கொண்டன.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஏனைய பஞ்சாலைகளுக்கு மற்றொரு முக்கியமான சலுகையை அரசின் சார்பில் வெளியிட்டேன். அதாவது தமிழ்நாடு பஞ்சாலைகள் அனைத்தும் மின்சாரக் கட்டணத்தின் மீது செலுத்தி வந்த நாற்பது சதவிகித உபரி வரியை (சர்-சார்ஜ்) முப்பது சதவிகிதமாகக் குறைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே மூடப்பட்டிருந்த ஆலைகளைத் திறக்கக் கோரி கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை 27-5-69-இல் தமிழகம் முழுவதும் மத்திய அரசை வலியுறுத்தி ரெயில் நிறுத்தப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தது.

அது குறித்து நான் வெளியிட்ட வேண்டுகோள் அறிக்கையில் "கோவையில் மூடப்பட்டுள்ள ஆலைகளைத் திறப்பதற்கு மத்திய அரசு இதுவரை உதவி செய்யாததால் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசுக்கு தனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்ள 27-ஆம் தேதியன்று ரெயில்களை நிறுத்துவது என்று முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசு கோவையில் முதலில் ஐந்து ஆலைகளை திறப்பதற்கு முடிவெடுத்து அதற்கான விவரம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதற்கு மாநில பஞ்சாலை கார்ப்பரேஷனுக்கு 51 சதவிகிதம் மத்திய அரசு உதவி அளித்திட வேண்டுமென்றும் கோரப்பட்டுள்ளது. அந்த உதவி விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு தமிழக அரசு தனது பங்கான 49சதவிகிதத்தைத்தந்திட முன்வந்து ஆலைகளைத் திறக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. இதற்கிடையே கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்தும் ரெயில் நிறுத்தப் போராட்டம் தேவைதானா என்பதை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஆலைகளைத் திறப்பதில் அக்கறை கொண்டுள்ள தமிழக அரசுக்கு உதவியாக குறிப்பிட்ட 27-ம் தேதி அன்று கூட்டங்கள் நடத்தி மத்திய அரசின் உதவியை விரைவுபடுத்தும் வகையில் தீர்மானங்களை நிறைவேற்றுவது மத்திய அரசுக்கு வேண்டுகோளாக அமையும் என்பதால் ரெயில் நிறுத்தப் போராட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை கைவிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிட்டிருந்தேன். அந்த அறிக்கையைத் தொடர்ந்து செய்தியாளர்கள் என்னைச் சந்தித்தார்கள்.

"கம்யூனிஸ்டுகள் நடத்தும் ரெயில் நிறுத்தப் போராட்டத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? இப்படிப்பட்ட கோரிக்கைகளுக்காக ரெயிலை நிறுத்திப் போராட்டம் நடத்துவது தவறில்லையா?" எனச் செய்தியாளர்கள் என்னைக் கேட்டார்கள். அதற்கு நான் அளித்த பதிலில் "போராட்டம் நடத்துவது தவறு என்று கூறமுடியாது. மத்திய சர்க்காரின் மெத்தனத்தைக் கண்டித்துத்தான் கம்யூனிஸ்டுகள் அடையாளப் போராட்டம் நடத்துகிறார்கள்.

இன்று சென்னையில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் ஏ. எஸ். கே. போன்றவர்களை அழைத்து ரெயில் நிறுத்தப் போராட்டம் சம்பந்தமாகப் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறேன். அவர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதாக உறுதி கூறியிருக்கிறார்கள். அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் எல்லாவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படும்" என்று கூறினேன்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தபடி சென்னை மாநகரிலும் தமிழ்நாட்டின் மற்ற நகரங்களிலும் நடைபெற்ற ரெயில் நிறுத்தப் போராட்டத்தில் 150 பேர் கைது செய்யப்பட்டார்கள். அவர்களையெல்லாம் அன்று இரவே விடுதலை செய்யும்படி உத்தரவிடப்பட்டது. சென்னையிலே ஏ. எஸ். கே. அவர்களும், மதுரையிலே கே. டி. கே. தங்கமணி அவர்களும், கோவையிலே பாலதண்டாயுதம் அவர்களும் அந்தப் போராட்டத்திலே கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப் பட்டார்கள்.

மாநில உரிமைகளுக்காக மத்திய அரசை வலியுறுத்துகின்ற ஒரு போராட்டத்தில் ஈடுபடுபவர்களிடம் கழக அரசு எத்தகைய அணுகு முறையைக் கையாண்டது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. முதல்வர் பொறுப்பேற்றுக் கொண்ட நான்காவது மாதத்திலேயே ஒரு இடைத்தேர்தலையும் சந்திக்க நேரிட்டது. 1967-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெருந்துறை தொகுதியிலிருந்து கூட்டணியின் சார்பாக சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் வெற்றி பெற்றிருந்தார்.

அவர் திடீரென்று காலமானதால் 1969-ஆம் ஆண்டு மே மாதம் 30-ந் தேதியன்று இடைத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தொகுதி கூட்டணி கட்சிக்கு விட்டுக்கொடுக்கப்பட்ட தொகுதி என்ற அடிப்படையில் அந்த இடைத்தேர்தலிலும் அந்தக் கட்சிக்கே விட்டுக்கொடுக்கப்பட்டு, பாலசுப்ரமணியம் அவர்களின் சகோதரர் சண்முகசுந்தரம், சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் கே.

பி. முத்துசாமி போட்டியிட்டார். காங்கிரஸ்காரர்கள் அந்த இடைத்தேர்தலில், கழக அரசு முழுமைப்படுத்திய பரம்பிக்குளம் ஒப்பந்தத்தைக் குறைகூறி அதனையே தேர்தல் பிரச்சாரமாகச் செய்தார்கள். பெருந்துறை தொகுதியில் உள்ள காஞ்சிகோயில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நான் பேசும்போது -"கேரளத்துடன் ஏற்பட்ட நதி நீர் ஒப்பந்தம் தமிழ் நாட்டிற்கு துரோகம் விளைவிப்பதாகும் என்று காங்கிரஸ்காரர்கள் கூறுகிறார்கள். ஐம்பது கோடி ரூபாய் செலவுசெய்து அந்தத் திட்டத்தைப் பயனில்லாமல் ஊறப்போட்ட காங்கிரசார் செய்தது துரோகமில்லையா?

இந்த ஒப்பந்தம் துரோகம் என்றால் அதற்கு நடுநிலையாக இருந்த டெல்லி மந்திரி கே. எல். ராவ் அவர்களை வைத்து வாதிட நான் தயார். ஒப்பந்தம் தவறு என்று கே. எல். ராவ் கூறினால் முதலமைச்சர் பதவியைநான் ராஜினாமா செய்யத் தயார்" என்று அறைகூவல் விடுத்தேன்.

பெருந்துறை கூட்டத்தில் நான் பேசும்போது, "பரம்பிக்குளம் ஆளியாறு அணைத் திட்டம் ஐம்பது கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு பயனற்ற நிலையில் இருந்தது. தமிழகத்தின் சார்பில் நானும், கேரள அரசின் சார்பில் நம்பூதிரிபாத் அவர்களும் கே.எல். ராவ் முன்னிலையில் பேசி சமரசம் செய்து கொண்டோம். பயனுள்ள நல்ல திட்டம் என்று ராவ் பாராட்டினார். அவர் மட்டுமல்ல, நாடு முழுமையும் பாராட்டியது. ஆனால் காங்கிரஸ் காரர்கள் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் ஏக்கருக்கு துரோகம் எனக் கூச்சல் போடுகிறார்கள்.

பார்க்குமிடமெல்லாம் துரோகம், துரோகம் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். கே.எல். ராவ் இந்தத் திட்டத்தைப் பாராட்டியிருக்கிறாரே. அவரென்ன கழகத்துக்காரரா? கம்யூனிஸ்ட்காரரா?? காங்கிகஸ் கட்சியைச் சேர்ந்தவர்தானே? காங்கிரஸ் கட்சியை எதிர்த்து எல்லாக் கட்சிகளும் கூட்டு சேர்ந்திருப்பதே காங்கிரசுக்கு உள்ள பலத்தைக் காட்டவில்லையா என்று காங்கிரஸ் தலைவர் கேட்கிறார். வீட்டுச்குள் விஷப் பாம்பு நுழைந்துவிட்டால் ஊர் மக்கள் எல்லாம் ஒன்று கூடி தடியால் அடிக்கிறார்கள் என்றால் எனக்கல்லவோ பலம் வந்துவிட்டது என்று பாம்பு சொன்னால் அது எப்படி வேடிக்கையானதோ அது போன்றுதான் அந்தக் காங்கிரஸ் தலைவரின் பேச்சும் வேடிக்கையாக இருக்கிறது" என்று உரையாற்றினேன்.

மே 30-ஆம் தேதி தேர்தல் நடைபெற்று, 31-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. கழக ஆதரவுடன் கூட்டணி வேட்பாளர் சண்முகசுந்தரம் 7,579 வாக்குகள் அதிகமாகப் பெற்று காங்கிரஸ் வேட்பாளரைத் தோற்கடித்தார். 67-ஆம் ஆண்டு தேர்தலில் 3,130 வாக்குகள் வித்தியாசத்தில்தான் அந்தத் தொகுதியில் கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றிருந்தார். பரம்பிக்குளம் ஆளியாறு திட்டம் குறித்து கேரள அரசோடு கழக அரசு செய்துகொண்ட ஒப்பந்தம் தவறு என்று இடைத்தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் செய்தார்களே, காங்கிரசார், அது குறித்து சிலவற்றைக் கூற விரும்புகிறேன்.

தமிழ்நாடு அரசிற்கும் கேரள அரசிற்கும் இடையே நதி நீர் பங்கீடு குறித்து ஆராய்ந்து தீர்வுகாண இரு மாநிலங்களின் மாநாடு 10-5-69 அன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது, இதில் தமிழக அரசின் சார்பாக நான், நிதியமைச்சராக இருந்த மதியழகன், பொதுப்பணி அமைச்சராக இருந்த சாதிக் ஆகியோரும், கேரள அரசின் சார்பில் முதலமைச்சராக இருந்த நம்பூதிரிபாத், பாசனத்துறை அமைச்சராக இருந்த பி.ஆர். குரூப், மின்துறை அமைச்சராக இருந்த எம்.

என். கோவிந்தன் ஆகியோரும் கலந்து கொண்டோம். மாநாட்டிற்கு மத்திய பாசன மின்விசைத் துறை அமைச்சர் டாக்டர் கே. எல். ராவ் தலைமை வகித்தார். மாநாட்டின் முடிவில் பரம்பிக்குளம் ஆளியாறு திட்டம், பவானி திட்டம், பம்பார் படுகை, கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி திட்டம், கபினி ஆறு ஆகியவற்றின் தண்ணீரைப் பங்கீடு செய்து கொள்வது பற்றி ஒரு ஒப்பந்தத்தில் தமிழக அரசின் சார்பில் நானும், கேரள அரசின் சார்பில் ஈ.

எம். எஸ். அவர்களும், மத்திய அரசின் அமைச்சர் கே. எல். ராவ் ஆகியோரும் கையெழுத்திட்டோம். ஒப்பந்தம் பற்றி செய்தியாளர்கள் என்னிடம் கேட்ட போது, ஏறத்தாழ அறுபது கோடியிலிருந்து எழுபது கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட பரம்பிக்குளம் ஆளியாறு திட்டத்தால் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட ஏக்கரா நிலம் பாசன வசதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் தொடங்கப்பட்ட வேலைக்கு ஐம்பது கோடிக்கு நெருக்கமாக செலவழித்திருந்தும் கூட தமிழக அரசுக்கும் கேரள அரசுக்குமிடையே பேச்சு வார்த்தைகள் நிறைவு பெறாததால் ஒரு லட்சம் ஏக்கரா அளவே பயனடைய முடிந்தது.

நீராறு பிரச்சினை தீராத பிரச்சினையாக இருந்தது. இப்போது ஏற்பட்டுள்ள ஒப்பந்தப்படி மேலும் ஒரு லட்சம் ஏக்கரா பரம்பிக்குளம் ஆளியாறு பகுதியில் பாசன வசதி பெறும்; ஆனைமலையாறு மூலம் கிடைக்கும் நீரால் வறண்ட பகுதிகளில் சுமார் இருபதாயிரம் ஏக்கர் சாகுபடியாகும். கோவை நகருக்கு சிறுவாணி மூலம் குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காண இந்த ஒப்பந்தம் பயன்படுகிறது. மின்சார உற்பத்தியும் இந்த ஒப்பந்தம் மூலம் அதிகரிக்கும்.

பல ஆண்டுகளாகப் பேசப்பட்ட பிரச்சினைக்கு வெற்றிகரமான முடிவு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முன்னின்று நடத்திய மத்திய அமைச்சர் ராவ் அவர்கட்கும் தமிழக, கேரள அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பிற்கும், கேரள முதல்வர் ஈ. எம். எஸ். நம்பூதிரிபாத் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நல்ல எண்ணத்துடன் திரு. சி. சுப்பிரமணியம் முயற்சியால் தொடங்கப்பட்ட திட்டம் எங்களால் பூரணத்துவம் பெற்றதில் தனி மகிழ்ச்சி அடைகிறேன்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேச்சுவார்த்தையைத் தொடங்கி வைத்தார் அண்ணா; அதை நாங்கள் முடித்து வைத்ததில் ஒரு உணர்ச்சிமயமான பூரிப்பு ஏற்படுகிறது" என்று கூறினேன். பரம்பிக்குளம் ஆளியாறு நதி நீர்ப் பங்கீடு ஒப்பந்தம் குறித்து என்னையும், கேரள முதல்வரையும் பாராட்டிய மத்திய அமைச்சர் கே. எல். ராவ் அவர்கள், "மாநிலங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினையைத் தீர்ப்பதில் இவர்கள் இந்தியாவுக்கே வழிகாட்டுகிறார்கள்" என்று கூறினார்.

சென்னையில் 11-5-69 அன்று தமிழரசுக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய சிலம்புச் செல்வர் ம. பொ. சி. அவர்கள் இந்த ஒப்பந்தம் பற்றி புராணத்திலே பகீரதன் தவம் செய்து ஆகாய கங்கையை பூமிக்குக் கொண்டு வந்தான் என்று கதையுண்டு. ஆளியாறு தண்ணீரைத் தமிழகத்திற்குக் கொண்டு வரத் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் கேரள அரசோடு ஒப்பந்தம் செய்திருப்பது, நமது முதல்வரின் செயல் திறமைக்குச் சிறந்த சான்று.

தமிழகத்திலும் கேரளத்திலும் காங்கிரசே அரசுக் கட்டிலில் இருந்த காலத்திலும் இந்த ஒப்பந்தம் சாத்தியமாகவில்லை. மாறாக இரண்டு மாநிலங்- களிலும் காங்

கிரஸ் அல்லாத ஆட்சி நடைபெறுவதால் இப்பொழுது சாத்தியமானது. இதனால் கோவை நகர் குடிநீர்ப் பிரச்சினை தீரும். இந்த ஒப்பந்தம் தமிழகம், கேரளம் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் நீதி வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் கர்த்தாக்களான தமிழக முதல்வரையும், கேரள முதல்வரையும் பாராட்டவேண்டும்" என்று கூறினார்.

அந்த ஒப்பந்தத்தை திரு. சி. சுப்பிரமணியம் அவர்களே வரவேற்றுப் பாராட்டிய செய்தி 14-5-69 "தினமணி" இதழில் வெளியானது.