நெஞ்சுக்கு நீதி
நாடறிந்த உண்மை · 156 / 391
நாடறிந்த உண்மை மே மூன்றாம் நாள் பிற்பகல் மயக்கமுற்ற நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வேளாண்மைத் துறை அமைச்சர் கோவிந்தசாமி அவர்களுக்கு பிரபல டாக்டர்கள் மிகத்தீவிர சிகிச்சைகளை அளித்தனர். கல்லீரலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக உணவுக் குழலில் ரத்தக்கசிவு ஏற்படுவதைக் கண்டு உடனடியாக அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. இப்படி அவருக்கு உணவுக் குழலில் ரத்தம் கசியக் கூடிய நோய் ஏற்கனவே ஒருமுறை வந்திருக்கிறது.
நாகர்கோயில் நாடாளுமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரத்திற்காகச் சென்றபோது இதேபோல் ரத்தவாந்தி எடுத்து மயங்கி விழுந்து விட்டார். ஒரு மாத கால சிகிச்சைக்குப்பிறகு உடல் நலம் பெற்றார். ஆனால் இந்த முறை அவரை உயிர் பிழைக்க வைக்கச் செய்த முயற்சிகள் இறுதியில் பயனற்றுப் போய் விட்டன. அறுவை சிகிச்சைக்குப் பிறகு மயக்கம் தெளிந்து ஓரளவு பேச முடிந்தது அவரால்! நானும் மற்ற அமைச்சர்களும் எங்களது பல்வேறு நிகழ்ச்சிகளை ஒத்தி வைத்துவிட்டு மருத்துவமனையிலேயே தங்கி, கோவிந்தசாமி அவர்களைக் கவனித்துக் கொண்டோம்.
1952-ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் அவருக்கும் எனக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. அப்போது நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் தி. மு. கழகம் கலந்து கொள்ளவில்லை. இந்திய அரசியல் சட்டம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மையான பிரதிநிதிகளைக் கொண்ட அமைப்பினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக இல்லை என்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் அந்த அரசியல் சட்டத்தின் அடிப்படையில் நடைபெறும் முதல் பொதுத் தேர்தலில் கழகம் கலந்து கொள்வதில்லையென்று முடிவெடுத்த போதிலும் கழக ஆதரவு பெற்ற சுயேச்சையாளர்கள் சிலரையும், உழைப்பாளர் கட்சி, காமன் வீல் கட்சி ஆகிய கட்சிகளையும் வெற்றி பெறச் செய்யப் பணியாற்றியது என்ற விபரங்களை ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன்.
திரு.கோவிந்தசாமி அவர்கள் அந்தத் தேர்தலில் உழைப்பாளர் கட்சியின் சார்பாக தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள விக்ரவாண்டி தொகுதியில் போட்டியிட்டார். அண்ணா அவர்களும் நானும் கழகச் சார்பில் தமிழக முழுவதும் பல்வேறு தொகுதிகளுக்குச் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டோம்! முதன் முதலில் பெரிய அளவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்வது. 1952-ஆம் ஆண்டுதான்! அதனால் சுற்றுப்பயண நிகழ்ச்சிகளை முறையாக வகுத்துக் கொள்ள இயலவில்லை.
சனிக்கிழமையன்று மாயூரத்தில் (மயிலாடுதுறை) பேசிவிட்டு, கொள்ளிடம் என்ற ஊருக்கருகே பேசிவிட்டு, விடியற்காலை அங்கிருந்து புறப்பட்டுக் காரிலேயே சிவகாசி (ராமனாதபுரம் மாவட்டம்) சென்று, அங்கே ஆறுமுகசாமி நாடாருக்காக நாலைந்து கூட்டங்கள் பேசிவிட்டு, ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சிகளை முடித்து அங்கிருந்து புறப்பட்டு திங்கட்கிழமை மாயூரத்துக்கு அருகில் சீர்காழியில் இராமநாத முதலியாருக்காகத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்குப் போய்ச் சேர்ந்தேன். இதற்குள் காரோட்டி மயக்கமுற்றுத் தஞ்சாவூருடன் திரும்பிவிடவே நண்பர் கரந்தை சண்முகவடிவேல் என் காரை ஓட்ட வேண்டி நேர்ந்தது.
இப்படிப்பட்ட சுற்றுப்பயண நிகழ்ச்சியிலேதான் கோவிந்தசாமி அவர்களுக்காகத் தேர்தல் பிரச்சாரம் செய்ய விக்ரவாண்டி போய்ச் சேர்ந்தேன். அப்பொழுதுதான் "வேக்சால்" கார் ஒன்று புதிதாக வாங்கியிருந்தேன். விக்ரவாண்டி தொகுதியில் இரவு முழுதும் கரடுமுரடானதும் பாறைகள் மோதக்கூடியதுமான பாதைகளில் பயணம். பல இடங்களில் கூட்டம். பொழுது விடிந்தும்கூட கூட்டம் முடியவில்லை. இறுதியாக அவர் என்னைக் கட்டித் தழுவிக் கொண்டு "நான் வெற்றி பெற்றுவிட்டேன்.
போய் வாருங்கள், நன்றி" எனக்கூறி வழியனுப்பி வைத்தார். அந்தத் தேர்தலில் பெருமிதமான வெற்றியும் பெற்றார். ஆனால் அவர் இணைந்திருந்த உழைப்பாளர் கட்சிக்கு அமைச்சர் பதவியில் ஆசை வந்து விடவே அதன் தலைவர் ராமசாமிப் படையாச்சி அவர்களும், அவருடன் வெற்றி பெற்ற அந்தக் கட்சியினரும் ராஜாஜி அவர்களின் முயற்சியால் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துவிட்டனர். பதவிக்காகக் "கட்சி தாவல்" என்பது தமிழ்நாட்டில் 1952-ல் ஆரம்பமாயிற்று.
ஆனால் திரு. கோவிந்தசாமி அவர்கள் கழகம் செய்த நன்றி மறக்காமல்-காங்கிரசில் சேர மறுத்துவிட்டார். அதன் காரணமாக அண்ணா அவர்கள் உள்ளத்திலும் என்னைப் போன்றோர் உள்ளத்திலும் அவருக்குத் தனி இடம் கிடைத்தது என்றே கூறலாம். 1953-ல் மும்முனைப் போராட்டம் நடைபெற்று அண்ணா அவர்களும், கழக முன்னணியினர் அனைவரும் சிறைகளில் அடைக்கப்பட்ட போது-வெளியே இருந்து கழக நடவடிக்கைகளைக் கவனிக்கும் பொறுப்பு கோவிந்தசாமி அவர்களுக்கு அண்ணா அவர்களால் வழங்கப்பட்டது.
மும்முனைப் போராட்டத்தில் கலந்து கொண்ட கழகத் தலைவர்களும், செயல்வீரர்களும் பல்வேறு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். அத்தனை சிறைச்சாலைகளுக்கும் அவர் சென்று கழகத்தினரைச் சந்தித்து உற்சாகம் ஊட்டியதோடு சிறையில் இருந்த தலைவர்களுடன் கலந்துரையாடி, மேற்கொண்டு ஆற்றிட வேண்டிய கழகப் பணிகளுக்கான கருத்துரைகளையும் பெற்றுச் செயலாற்றினார். அந்தப் போராட்டத்தையொட்டித் தூத்துக்குடிக் கழகத்தினர் மீது பொய்யாகப் புனையப்பட்ட சதி வழக்கை அரசாங்கம் திரும்பப்பெற வேண்டுமென்றும் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டுமென்றும் 1953 நவம்பர் முதல் வாரத்தில் "தூத்துக்குடி வாரம்" எனக்குறிப்பிட்டு; பொதுக் கூட்டங்கள் நடத்த மக்களின் கையெழுத்துக்களைப் பெற்று முதலமைச்சருக்கு அனுப்புகிற பணியை கழக அமைப்புக்களை மேற்கொள்ளச் செய்து அதற்காக அரும்பாடுபட்டவர் ஏ.
கோவிந்தசாமி அவர்கள். அவரை "எம். எல். ஏ. கோவிந்தசாமி" என்றும், "ஏ.ஜி" என்றும் கழகத்தினர் அன்போடு அழைக்கத் தலைப்பட்டனர். சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரம் பிரிந்து தனி மாநிலமாக அமைந்தபோது தி. மு. கழகத்தின் சார்பில் ஆந்திர மாநிலத் தலைமைச் செயலாளருக்கு அண்ணாவின் விருப்பப்படி ஏ. ஜி. அவர்கள் கையெழுத்திட்டு வாழ்த்தொன்றை அனுப்பி வைத்தார். 1953 செப்டம்பர் முப்பதாம் நாள் அனுப்பப்பட்ட அந்த வாழ்த்தில்; "திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களாகிய நாங்கள், இன்று பிறக்கும் ஆந்திர மாநிலத்தை மனமாரப் பாராட்டுகிறோம்.
ஆந்திர நாட்டுப் பற்றுடையோருக்கும். உரிமைப் போராட்ட வீரர்களுக்கும், அனைவரிலும் சிறப்பாக உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த பொட்டி சீராமுலுக்கும் மரியாதை செலுத்துகிறோம். இன்பமும், செல்வச் சிறப்பும் உடையதாக புதிய ஆந்திரம் இருக்க விழைகிறோம்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. கழக ஆதரவு பெற்ற உழைப்பாளர் கட்சி வேட்பாளராக 1952-ல் போட்டியிட்டு வென்றவர், உழைப்பாளர் கட்சி காங்கிரசில் கரைந்து விட்டபோது, அதை ஏற்றுக் கொள்ளாமல் கழகக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, கழகப் பொறுப்பாளர் பதவியையும் பெற்று 1957-ல் நடைபெற்ற தேர்தலில் வளவனூர் தொகுதியில் கழக வேட்பாளராகவே போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1962-ல் வெற்றி வாய்ப்பை இழந்த அவர் 1967-ல் வெற்றி பெற்று அண்ணா தலைமையிலான அமைச்சரவையில் ஒரு அமைச்சராகப் பொறுப்பேற்றார். இடைக்காலத்தில் அண்ணா அவர்களை எதிர்த்து ஈ. வெ. கி. சம்பத் அவர்கள் கட்சிக்குள்ளேயே கலகம் விளைவித்த காலகட்டத்தில் என்ன காரணத்தாலோ ஏ.ஜி அவர்கள் சம்பத் கோஷ்டியினர் விரித்த வலையில் விழுந்துவிட்டார். 1960-1961-ஆம் ஆண்டுகளில் சம்பத் கோஷ்டியினர் அண்ணா மீது வீண் பழிகளைச் சுமத்தி விட்டுக் கட்சியை விட்டுப் பிரிந்து தமிழ் தேசியக் கட்சியென்ற புதுக் கட்சியைத் தொடங்கிய போது அந்த நிலையை ஏற்றுக் கொள்ள முடியாதென அறவே மறுத்து விட்டார் ஏ.
ஜி. இருந்தபோதிலும் இடையில் அந்தச் சில ஆண்டுகள், அவர் சம்பத்துக்கு ஆதரவாக இருந்த நிலையை நானும் கழக முன்னணியினர் பலரும் விரும்பவில்லை. அதன் காரணமாக எனது ஆருயிர் நண்பர் கடலூர் இளம்வழுதி அவர்கள் ஏ. ஜி. அவர்களுடன் கடுமையான பகையே கொண்டிருந்தார். கடலூர் வட்டாரத்தில் இளம்வழுதி கழகத்தின் காவல் அரணாகத் திகழ்ந்த காலம் அது. தனது அறிவால் ஆற்றலால் அயராத உழைப்பால் எண்ணற்ற இளைஞர்களைக் கழகத்தில் இணைத்த இளம்வழுதியும்-இளமை தொட்டு வீறு கொண்ட கழக வீரனாக நடை பயின்று மக்கள் மனத்தில் நல்லதோர் இடம்பெற்ற நெல்லிக் குப்பம் கிருஷ்ணமூர்த்தியும் சிற்சில விஷயங்களில் கருத்து வேறுபாடு கொண்டவர்கள் என்றாலும், ஏ.
ஜி. அவர்கள் சம்பத்தின் பக்கம் சற்று சாய்கிறார் என்பதிலே ஒரே அணியில் இருந்து அவரை எதிர்த்தார்கள். அதன் காரணமாக இளம்வழுதி ஏ. ஜி. இருவரின் மனக் கசப்பும், பகையும் வளர்ந்து கொண்டேயிருந்தது. சம்பத், கழகத்தைவிட்டு வெளியேறிய பிறகு, ஏ. ஜி அவர்கள் அண்ணாவின் தலைமையில் உறுதியாக நின்றுவிட்டதைச் சுட்டிக்காட்டி, இளம்வழுதியைச் சமாதானப்படுத்த நான் எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. நான் இளம்வழுதியின் சார்பாக இருக்கிறேனோ என்றுகூட ஏ.ஜி.
அவர்களுக்குச் சந்தேகம். அண்ணா தலைமையில் அமைந்த ஆட்சியில் ஏ.ஜி. அவர்கள் அமைச்சரான பிறகும்கூட அவருக்கும் இளம்வழுதிக்குமிடையே இருந்த பகையுணர்வு மறையவில்லை. அண்ணா மறைவுக்குப் பிறகு என் தலைமையில் அமைந்த அமைச்சரவையிலும் ஏ.ஜி. தொடர்ந்து நீடித்தார். அப்போதும் இளம்வழுதி-ஏ.ஜி. பகை தீர்ந்தபாடில்லை! அந்தச் சூழ்நிலையிலேதான் ஏ.ஜி. அவர்கள் சென்னைப் பொது மருத்துவமனையில் மரணத்தோடு போராடிக்கொண்டிருந்தார்.
அவர் மறைவதற்கு முதல் நாள் என்னையும், அமைச்சர்களையும், மற்றும் கழகத் தலைவர்களையும் அருகே அழைத்து உணர்ச்சி பொங்கக் கூறிய வாசகங்கள் இன்னமும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன. அழுத்தம் திருத்தமாகப் பேசினார். வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தினார். "கலைஞர் அவர்களே! இனி நான் பிழைக்கமாட்டேன்: உங்களுக்கும் எனக்கும் 1960-ஆம் ஆண்டில் சம்பத் விஷயமாக எத்தனையோ கருத்து வேறுபாடுகள்.
சம்பத்து, அண்ணாவுக்கே துரோகம் நினைக்கிறார் என்று தெரிந்ததும் நான் உங்கள் நிலையை ஆதரித்தேன். நீங்களும் என்னை ஏற்றுக் கொண்டீர்கள். பழைய கசப்புகளையெல்லாம் மறந்து நீங்கள் எங்கள் குடும்பத்திற்குச் செய்திருக்கிற உதவிக்கு எப்படி நன்றி தெரிவிப்பது என்றே தெரியவில்லை. என்னோடு விரோதமாக இருந்தாலும் இளம்வழுதி தான் எனக்கு உண்மையான நண்பர்! அதனால் எனது வேண்டுகோள் ஒன்றைத் தயவுசெய்து கேளுங்கள். நான் இறந்துவிட்டால் அந்த இடத்தில் அமைச்சராக யாரை நியமித்தாலும் நியமியுங்கள்; ஏன்; என் நண்பர் இளம்வழுதியையேகூட நியமியுங்கள்!
காரணம், அவர் கட்சிக்குத் துரோகம் செய்யமாட்டார்! என் வகுப்பார் ஒருவரை மந்திரியாக்க வேண்டுமே என்பதற்காகத் தயவுசெய்து பண்ருட்டி ராமச்சந்திரனை மட்டும் நியமித்து விடாதீர்கள். அது கட்சிக்குப் பெரிய துரோகமாகிவிடும். அந்தக் கெடுதியை வலிய வரவழைத்துக் கொள்ளாதீர்கள். என் வார்த்தையை நான் இறந்தபிறகு தட்டி விடாதீர்கள்."
இதைக் கூறிக்கொண்டே அவர் அழுதார். சுற்றி நின்ற நாங்களும் கண்ணீர் வடித்தோம். 18-5-69 பிற்பகல் மூன்றரை மணி அளவில் ஏ. ஜி. மறைந்து விட்டார். ஏ.ஜி. அவர்களின் குடும்பத்திற்கு நிதி திரட்டித் தருகின்ற முயற்சி உடனடியாகத் தொடங்கப்படுமென நான் அறிவித்து, அவ்வாறே ஒரு லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட தொகை நிதியாக அவரது குடும்பத்திற்கு வழங்கப்பட்டது. அவர் இறுதி மூச்சு விடுவதற்கு முன்பு தெரிவித்தவாறு அவரது மகள்களின் திருமணத்தையும் கழகமே முன்னின்று நடத்தி வைத்தது.
அவர் விரும்பியதையெல்லாம் அவரது குடும்பத்தைப் பொறுத்தவரையில் என்னாலியன்ற வரையில் செய்து முடித்தேன். ஆனால் அவர் மரணப்படுக்கையில் என்னை எச்சரித்து ஒன்றைச் சொன்னாரே; அதை மட்டும் நான் அலட்சியப்படுத்தி விட்டேன்! என்ன இருந்தாலும் அனுபவபூர்வமாக உணர்ந்து அவர் சொன்ன கருத்தை நான் ஏற்காமல் போனதின் விளைவைப் பிறகு புரிந்துகொண்டேன். ஆனால் ஒன்று; ஏ.ஜி. அவர்கள் குறிப்பிட்ட அந்த நண்பரை அமைச்சரவையில் நான் அமர்த்தியதால் மட்டுமல்ல; அவரையொத்த வேறு சில நண்பர்களையும் அமைச்சரவையில் இடம் பெறச் செய்து சோதனையான காலத்தில் எவ்வளவு வேதனைக்கு ஆளானேன் என்பதெல்லாம் நாடறிந்த உண்மைகள் அல்லவா?
