உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/தியாக தீபங்கள்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

தியாக தீபங்கள் · 155 / 391

தியாக தீபங்கள் அந்த வீரன் பதின்மூன்று ஆண்டுகள் சிறையில் வாடினான். சிறைச்சாலைகளை மாங்குயில் கூவிடும் பூஞ்சோலையெனக் கருதி சிரித்த முகத்துடன் அடக்குமுறைகளை ஏற்றுக்கொள்ளும் இலட்சியக் காளைகளிலே ஒருவன் அவன். தன்னை விற்றுக் கொள்ளும் மனிதர்கள் தற்காலிக சுகபோகங்களில் திளைத்துத் தங்கள் ஆயுளுடன் அழிந்து விடுகிறார்கள். எமை நத்துவாய் என எதிரிகள் கோடி இட்டழைத்தாலும் தொடேன் என்று, கொண்ட குறிக்கோளுக்காக மரணப் பரிசை மலர்ச் செண்டாக ஏந்துகிறவர்கள் உலகம் உள்ளவரையில் வாழக்கூடியவர்கள்.

அந்தத் தியாக சீலர்களின் பட்டியலிலேதான் ரானடே இணைக்கப்பட்டிருந்தான். போர்ச்சுகீசியர் ஆதிக்கத்திலிருந்து கோவாவை மீட்பதற்காகப் போரிட்டுத் தலைமறைவு இயக்கத்தில் ஈடுபட்டு போர்ச்சுகீசிய இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டவன் அவன். அந்த நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு ஏற்ப, பதின்மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையை அவன் போர்ச்சுகல் நாட்டில் அனுபவிக்க நேர்ந்தது அந்த மாவீரனுக்கு விடுதலை கிடைக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று ரோமாபுரியில் போப்பாண்டவரைச் சந்தித்த முதலமைச்சர் அண்ணா அவர்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்கள்.

அவன் விடுதலை பெற்று வரும்போது அண்ணா இல்லை. 1969 மார்ச் 23-ஆம் நாள் மோகன் ரானடே என்னும் அந்த வீரன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது நன்றி மறவாமல் அண்ணாவை நினைவு கூர்ந்தான். "போர்த்துகீசியச் சிறைகளில் வாடும் இந்தியர்களின் விடுதலைக்கான குழு, அண்ணா அவர்களிடம் அவர் வெளிநாட்டுப் பயணம் சென்றபோது, அவரிடம் எனது விடுதலைக்கு முயற்சி செய்திடுமாறு கேட்டது. அண்ணா அவர்களும் புனித போப்பிடம் அந்தக் கோரிக்கையை சமர்ப்பித்து போர்த்துகீசிய அரசுக்குப் பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதனை ஏற்றுக்கொண்ட போப் அவர்கள் நான் விடுதலை அடைவதற்கு வழி வகுத்தார்" என்று மோகன் ரானடே கூறியபோது, அண்ணா அவர்களின் மனிதாபிமான உணர்வும், இன்னலை இன்முகத்துடன் ஏற்றிடும் இலட்சியவாதிகளிடம் கொண்டிருந்த அன்பும் உலகின் முன்னே ஒளிவிட்டுப் பிரகாசித்தது.

1970-ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடுகளில் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, முதன் முதலில் ரோமாபுரியில் இறங்கி வாடிகன் சிட்டியில் உள்ள போப்பாண்டவரைச் சந்திக்கத்தான் சென்றேன். அண்ணாவின் ஆசையை நிறைவேற்றிக் கொடுத்து கோவா விடுதலை வீரன் ரானடேயை விடுதலை செய்ய முயற்சிகளை எடுத்துக் கொண்ட அந்தப் பெருமகனாருக்கு நன்றி தெரிவிக்க வேண்டாமா? அதற்காகவே ரோமில் இருந்து வாடிகன் சிட்டி பயணத்தை மேற்கொண்டேன்.

மெத்த அன்புடனும், பரிவுடனும் வரவேற்ற அவரிடம்; அண்ணா அவர்கள் அவரைச் சந்தித்ததையும் கோவா விடுதலை வீரர்களைச் சிறைமீட்கத் துணை புரியுமாறு கேட்டுக்கொண்டதையும் நினைவுபடுத்தி, அதற்காக நன்றியினைத் தெரிவித்தபோது-அவர் மகிழ்ந்தார் எனினும்; அண்ணாவின் அன்பு உள்ளத்தை நினைந்து அந்த உத்தமத் தலைவனின் மறைவுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார். 1969-ல் மோகன் ரானடே ஏடுகளுக்கு அளித்த செய்தியை நான் நினைவுபடுத்தி எழுதும்போது, இதோ 1983 ஜூலை இறுதி வாரத்தில் இலங்கைத் தீவில் கொழும்புச் சிறைச்சாலையில் மாண்டு மடிந்த தமிழ் வீரர்களை எண்ணிக்கொண்டு அழுகிறேன்.

இருபத்தைந்து ஆண்டுக் காலமாக உரிமைகள் பறிக்கப்பட்டு சீரழிக்கப்படும் இனத்தின் விடுதலைக்காகவும் சிங்களவர்களிடம் இனி சேர்ந்து வாழமுடியாது என்று தீர்மானித்துப் போராட்டம் நடத்தியதற்காகவும், கொடுங்குற்றம் சாட்டப்பட்ட தங்கதுரை, குட்டிமணி, ஜகன், மற்றும் ஐம்பது விடுதலை வீரர்கள் அந்தச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். சிறையில் அதிகாரிகள் அவர்களுக்கு இழைத்த கொடுமைகள் கொஞ்சமல்ல! தணலில் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு அடித்திருக்கிறார்கள்.

பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பிகளால் உடலில் சூடு போட்டிருக்கிறார்கள். ஆண்குறியில் மிளகாய்ப் பொடியைத் தூவியிருக்கிறார்கள். ஒருவரின் மலத்துவாரத்தில் நீண்ட குச்சியை நுழைத்து அதே குச்சியை இன்னொருவரின் வாயில் சொருகிச் சுவைக்கச் செய்திருக்கிறார்கள். இன்னும் எழுதவொண்ணாக் கொடுமைகள் அந்தச் சிங்க இளைஞர்களுக்குச் சிங்கள அதிகாரிகளால் இழைக்கப்பட்டன! தண்டனை இறுதியாக்கப்படாமல் நீதிமன்ற விசாரணை முடிவுறாத நிலையில் சிறைக்கோட்டத்தில் தனித்தனியாக அடைக்கப்பட்டிருந்த கொட்டடிக்குள் இருந்த அந்தத் தமிழ்க் குலக்கொழுந்துகளை சிங்களக் கழுகுக் கூட்டம் திடீரெனத் தாக்கியது.

அந்த வெறியர்களுக்குத் துணையாக சிறை அதிகாரிகளும் செயல்பட்டிருக்கின்றனர். தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் உட்பட ஏறத்தாழ ஐம்பது வீரர்களையும்-அவர்கள் நிராயுத பாணிகளாக இருந்த நிலையில் வெட்டி வீழ்த்தியும், சுட்டுக் கொன்றும் தசைகளைக் கழித்து வீசி எறிந்தும் தூள் தூளாக ஆக்கியிருக்கிறார்கள். குட்டிமணியைக் கொல்வதற்கு முன்பு அவனது வீரத்திருவிழிகளைத் தோண்டி எடுத்துக் காலில் போட்டு மிதித்து வெறியாட்டம் நடத்திவிட்டு அதன் பிறகே அவன் உயிரைப் போக்கியிருக்கின்றனர்.

எந்த விழிகள் தெரியுமா? குட்டிமணியை நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணை நடத்தியபோது அவன் சொன்னான்; "என்னை மரண தண்டனை அளித்துக் கொன்று விடுங்கள்! ஆனால் ஒரு வேண்டுகோள்! நான் இறந்தவுடன் என் விழிகளை எடுத்து, விழியற்ற தமிழ் இளைஞர் யாருக்காவது பொருத்துங்கள்! எதிர் காலத்தில் சுதந்திரம் பெறப்போகும் தமிழ் ஈழத்தை, அந்த இளைஞனின் கண்களின் வழியாக நான் பார்த்துக் களிக்கிறேன்."

இப்படி முழக்கமிட்டவனின் முடிவுதான் இப்படி ஆகிவிட்டது! கொழும்பு சிறைச்சாலையில் நடைபெற்ற இந்தக் கொலை வெறி நிகழ்ச்சிகள் உண்மையல்ல என்று செய்தி வரக்கூடாதா- என்று உலகெங்கும் உள்ள தமிழ் இனம் கண்ணீருடன் கதறிக் கொண்டிருக்கிறது! இலங்கைத் தமிழ் இனத்தின் விடுதலைப் போர் எப்படி உச்சகட்டத்திற்கு வந்தது? 1958-ஆம் ஆண்டு இலங்கையில் தமிழனுக்குக் கொடுமை இழைக்கப்பட்ட காலத்திலிருந்து இங்கே தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஈழத் தமிழனுக்காக எந்த வகையில் எல்லாம் ஆதரவுக் கரம் நீட்டியிருக்கிறது?

இவற்றையெல்லாம் பின்னர் எழுத வேண்டியிருப்பதால் இப்போது வரிசைப்படுத்தி விபரங்களை அளித்திடவில்லை. மோகன் ரானடே 1969-ல் விடுதலையான செய்தியைக் குறிப்பிட வேண்டியிருந்ததால் போப்பாண்டவர் சந்திப்பு பற்றிக் கூற நேரிட்டது. ஒரு விடுதலை வீரனைப்பற்றி எண்ணிய பொழுது ஈழத் தமிழ் விடுதலை வீரர்களிடம் தானாகவே இதயம் சென்றுவிட்டது. எனவே நெஞ்சத்தை அங்கிருந்து மீட்டுக்கொண்டு வந்து 1969 ஏப்ரல் 18-ஆம்நாளில் இருந்து விட்ட இடம் தொட்டுத் தொடருகிறேன்.

டெல்லியில் முதலமைச்சர்கள் கலந்து கொள்ளும் என். டி. சி. எனப்படும் தேசீய வளர்ச்சிக் குழுக் கூட்டத்திற்கு அன்றுதான் சென்றேன். முதல்வரானபிறகு கலந்து கொள்ளும் முதல் தேசீய வளர்ச்சிக் குழுக்கூட்டம் அது! என்னுடன் நிதியமைச்சர் மதியழகன் அவர்களும் வந்திருந்தார். அந்தக் கூட்டத்தில் நான் தமிழில்தான் பேசினேன். கருத்துக்களை ஆங்கிலத்தில் தொகுத்தெழுதிப் படிக்கலாம் என்றாலுங் கூட நான் அந்த முதற் கூட்டத்தில் தமிழில் பேசினேன்.

அது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. மத்திய மாநில அரசுகளின் உறவுகள் குறித்து ஆராய வேண்டிய காலம் வந்துவிட்டது என்றும், அந்த முயற்சியின் முதற்கட்டமாக முதலமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்று மத்திய மாநில உறவுகளைப் பற்றி விவாதித்திட வேண்டுமென்றும் தமிழக அரசின் சார்பில் நான் கருத்து அறிவித்தேன். அந்தக் கூட்டம் பற்றி செய்தி வெளியிட்ட யு. என். ஐ நிறுவனம், "இந்தக் கூட்டத்திலேயே மத்திய மாநில அரசுகளின் உறவு பற்றி யோசனை கூறியது தமிழக முதல்வர் ஒருவர்தான்" என்று குறிப்பிட்டிருந்தது.

நான் அன்று ஆற்றிய உரையில், தொழில் முன்னேற்றத்துக்குச் சம வாய்ப்பு கிடைக்கவேண்டுமென்றும், பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டால் மத்திய மாநில உறவு வளரும் என்றும், வங்கிகள் தேசீய மயமாக்கப்பட வேண்டுமென்றும், பொதுத்துறை, தனியார் துறையை விட அதிக முதலீடு கொண்டிருக்க வேண்டுமென்றும், இன்றைய தேவை, ஏழைகளைச் சுற்றியுள்ள இருள் நீக்கும் திட்டங்களே என்றும் விரிவாக எடுத்துரைத்தேன். வங்கிகள் தேசீயமயமாக்கப்பட வேண்டும் என்று அன்றைய கூட்டத்தில் முதல் குரல் கொடுத்தது நான் தான்!

அதை எதிர்த்துக் காரசாரமாகப் பேசியது துணைப்பிரதமர் மொரார்ஜி தேசாய்தான்! பிரதமர் இந்திரா காந்தி அவர்கள், அந்தக் கூட்டத்திற்குத் தலைமையேற்றிருந்த போதிலும் அவர்கள் சார்பாகக் கருத்துக் கூறிய மொரார்ஜி தேசாய், வங்கிகளை தேசீயமயமாக்குவது சாத்தியமற்றது என்று கூறினார். "வங்கிகளைத் தேசீயமயமாக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் சொர்க்கத்தையே இங்கே கொண்டு வந்துவிடலாம் என நினைப்பது தவறு" என்று கேலி பேசினார் அவர்!

அந்தக் கூட்டத்தையொட்டி நடைபெற்ற முதலமைச்சர்கள் மட்டுமே கொண்ட மற்றொரு கூட்டத்தில் நான்காவது ஐந்தாண்டுத் திட்டம் பற்றித் தமிழக அரசின் சார்பில் நான் எடுத்து வைத்த எண்ணத்தில் சில துளிகள்:- "நமது முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களும், சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தில் பெருத்த மாறுதல் எதையும் விளைவிக்கவில்லை.இந்த நிலையில் மிகக் குறுகலான கட்டுத்திட்டங்களுக்குள் நமது நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தைத் தொடங்க வேண்டியவர்களாக இருக்கிறோம். நாலாவது ஐந்தாண்டுத் திட்டத்துக்குரிய சில ஆக்கப்பணிகளை நிறைவேற்ற அத்தகைய ஆக்கப்பணிகளால் பலன் அடையக்கூடிய மக்களிடமிருந்து நன்கொடை திரட்ட வேண்டுமென அமைச்சர் வி.

கே. ஆர். வி. ராவ் தெரிவித்துள்ள கருத்தை என்னால் ஒப்புக்கொள்ள இயலாது! தற்சமயம், மாநில அரசு செய்யும் அலுவல்களையே மத்திய அரசு மறுபடியும் மேற்கொள்ளும் நிலை இருந்து வருகிறது. மாநிலங்களிலும், மத்தியிலும் ஒரே அலுவல் இரண்டு தடவைகள் நடைபெறுகின்றன. எடுத்துக்காட்டாகத் தமிழ்நாட்டில் பற்றாக்குறை குறித்து, தமிழ்நாடு அரசாங்கம் மத்திய அரசுக்கு சில புள்ளி விவரங்களை அளிக்கிறது. ஆனால் மத்திய அரசு, அந்தப் புள்ளி விவரங்களை நம்பாமல் தனது அதிகாரிகளை அனுப்பி புள்ளி விவரங்களைச் சேகரிக்குமாறு உத்திரவிடுகிறது.

இது மத்திய அரசு, மாநில அரசுகளிடம் முற்றிலும் நம்பிக்கை இல்லாமல் நடந்து கொள்வதையே குறிக்கிறது." டெல்லியில் தேசீய வளர்ச்சி மன்றத்தில் நான் பேசியது பற்றி 20-4-69 தேதியிட்ட 'இந்து' ஏடு பின்வருமாறு குறிப்பிட்டது. "உண்மையான மக்களின் திட்டமாகும் வகையில், நான்காவது ஐந்தாண்டுத் திட்டம் மறுவரைவு செய்யப்பட வேண்டுமென்று தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் தேசீய வளர்ச்சி மன்றத்தில் வலியுறுத்தினார்.

நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தை மறுவரைவு செய்ய வேண்டுமென்ற தமிழக முதல்- வரின் கோரிக்கையை கேரள, மேற்கு வங்க மாநில முதலமைச்சர்கள் ஆதரித்தனர். இந்தக் கோரிக்கை, இதர மாநிலங்களின் முதலமைச்சர்களாலும் ஆதரிக்கப்பட்டது." தேசீய வளர்ச்சி மன்றக் கூட்டத்திற்குச் சென்றிருந்ததையொட்டி, டெல்லி கரோல்பாக்கில் தமிழர்களால் நான்கு லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டிருந்த பள்ளியை அப்போதைய திட்டக்குழு உறுப்பினர் திரு.

ஆர். வெங்கட்ராமன் தலைமையில் நான் திறந்து வைத்தேன். நிதியமைச்சர் மதியழகன், அறிஞர் அண்ணா படத்தைத் திறந்து வைத்தார். அந்த விழாவில் பேசிய திரு. ஆர். வி. அவர்கள் "கட்டிடத்தை என் நண்பர் கருணாநிதி அவர்கள் திறந்து வைக்கிறார்கள். அவர் தமிழ்ப் பற்றும், பண்பும் உடையவராவார். அவர், அரசியலில் இலக்கியத்தை இணைத்து இரண்டிலும் புகழ்பெற்றவர். அரசியல்வாதிகளும், கலைஞர்களும் மதிக்கத்தக்க அளவுக்கு உள்ளவர். நல்ல நேசமனப்பான்மை கொண்டவர்.

கட்சிகளுக்கு அப்பாற்பட்டு நண்பர்களோடு பழகுவதில் இனிய சுபாவமுடையவர். நான் தமிழ்நாடு அமைச்சராய் இருந்த காலத்தில் அவர் எதிர்க்கட்சி வரிசையிலே இருந்து ஒவ்வொரு வாதத்துக்கும் எதிர்வாதம் செய்வதில் வல்லவராய்த் திகழ்ந்தார்" என்று கூறினார்.

பெருந்தகையாளர்கள் 1964- ஆம் ஆண்டுக்குப் பிறகு நகராட்சி மன்றத் தேர்தல்கள் தமிழகத்தில் நடத்தப்படவில்லை. நான் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றவுடன் அந்தத் தேர்தல்களை நடத்த முடிவு செய்யப்பட்டது. 1969 ஏப்ரல் திங்கள் 24-ஆம் நாளும் 29-ம் நாளும் நகர் மன்றத் தேர்தல்களை நடத்தத் தேதிகள் குறிக்கப்பட்டன. அப்போதிருந்த நகர் மன்றங்களின் மொத்த எண்ணிக்கை 84. அவற்றில் திருவண்ணாமலை, வாணியம்பாடி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, திருச்சி, மாயவரம், நாகப்பட்டினம், அருப்புக்கோட்டை, குளச்சல் ஆகிய 11 நகர் மன்றங்களில் வார்டுகள் பிரிக்கப்பட்டது குறித்து நீதிமன்றத்தில் விசாரணை முடிவடையாமல் இருந்ததால் எஞ்சியிருந்த 73 நகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

ஏறத்தாழ இருபத்து ஐந்து லட்சம் வாக்காளர்களைக் கொண்ட 73 நகராட்சிகளிலும் போட்டி மிகக் கடுமையாக இருந்தது. 1967-ல் காங்கிரஸ் கட்சிக்குத் தமிழ்நாட்டில் பெருந்தோல்வி ஏற்பட்டு அதன்பிறகு அதன்பிறகு நடைபெறும் நகராட்சித் தேர்தல்கள் என்பதால் காங்கிரஸ் கட்சி தனது தோல்வியைச் சரிக்கட்ட வேண்டுமென்ற எண்ணத்தோடு மிகத் தீவிரமாகப் பணியாற்றியது. நகரங்களில் உள்ள காங்கிரஸ் பெருந்தனத்காரர்கள் பணத்தை வாரியிறைத்து எப்படியும் நகராட்சிக் தலைவர்களாக வந்துவிட வேண்டுமென்று துடியாய்த் துடித்தனர்.

எப்படியும் வெற்றி பெற்றே தீரவேண்டுமென்று வெறியேறிய நிலையில் கழகக் கூட்டணித் தொண்டர்களைக் காங்கிரசார் பல இடங்களில் தாக்கினர். தூத்துக்குடியில் காங்கிரஸ்காரர்களால் நாராயணன் என்ற கழகத் தொண்டர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். தென் பாண்டி மண்டிலத்தில் கழகத்திற்காக ரத்தம் சிந்திய தொண்டர்களையும், உயிர் விட்ட தியாகிகளையும் அதிக கொண்ட நகரம் தூத்துக்குடி! அங்கேதான் மாவீரன் கே.வி.கே. சாமியும், தாளமுத்துவும், எதிரிகளால் படுகொலைக்கு ஆளானார்கள்.

அந்த வீரம் செறிந்த நகரத்தில் நாராயணனைப் பலிகொடுத்த போது, அனைத்துக் கட்சியினரும் கண்ணீர் வடித்தனர். நாராயணனுக்காக நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் மாவட்டச் செயலாளர் இரத்தினவேல் பாண்டியன் அவர்களும், சட்டப் பேரவைத் துணைச் சபாநாயகராக இருந்த எட்மண்ட் அவர்களும், இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சிச் முருகானந்தம் அவர்களும் கலந்து கொண்டார்கள். தூத்துக்குடியைப் போலவே கிருஷ்ணகிரியிலும் கழகக் கூட்டணித் தோழர்களுக்கும் காங்கிரசாருக்கும் கடும் மோதல் ஏற்பட்டு, அதில் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த தோழர் ஒருவர் கொல்லப்பட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நண்பர் கமலநாதனும் அந்தத் தாக்குதலில் காயமுற்றார். கொலையுண்ட முஸ்லீம் லீக் தொண்டரின் இறுதி ஊர்வலத்தில், காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்களும், அப்துல்சமத் அவர்களும், தர்மபுரி மாவட்டச் செயலாளர் முருகேசன் ஆகியோரும் கலந்து கொண்டு இரங்கல் தெரிவித்தனர். இத்தனைக்கும் பிறகு வெளிவந்த நகராட்சித் தேர்தல் முடிவுகள், கழகத்திற்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்கும் சாதகமாகவே அம

ைந்தன, குறிப்பாக; நகராட்சித் தேர்தலுக்கு சில திங்களுக்கு முன் நடைபெற்ற நாடாளுமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் கோட்டையான நாகர்கோயிலில் தி. மு. கழகம் பெரும் வெற்றி பெற்றது. மொத்தம் 36 வார்டுகள் உள்ள அந்த நகரில் 21 இடங்கள் கழகத்திற்கு! காங்கிரசுக்கு 12இடங்கள் மட்டுமே கிடைத்தன! மொத்தம் 73 நகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில், 47 இடங்களில் கழகத்தினரும், முஸ்லீம் லீக்கைச் சார்ந்தோர் இருவரும், சுதந்திரக் கட்சி சார்பில் ஒருவருமாகக் கூட்டணியினர் 50 நகரங்களில் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

அந்த வெற்றியைக் குறிப்பிடும் வகையில் 14-5-69 அன்று ஐம்பது நகராட்சித் தலைவர்களுக்குப் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்ததோடு. அண்ணா சதுக்கத்திற்கு ஊர்வலமாகச் சென்று, அண்ணாவின் கல்லறைமீது 50 மலர்ச்செண்டுகளை வைத்து மரியாதை செலுத்தினேன். நகராட்சித் தேர்தல் முடிவுகளைப் பற்றிக் குறிப்பிட்டு "இந்தியன் எக்ஸ்பிரஸ்" ஏடு, இவ்வாறு எழுதியது! "காமராஜர், சி. சுப்பிரமணியம் போன்ற காங்கிரஸ் தலைவர்கள், தி.

மு. க. ஆட்சியை எதிர்த்து உங்கள் தீர்ப்பை வழங்குங்கள் என்று நகர்ப்புற வாக்காளர்களைக் கேட்டனர். அரசின் மீதுள்ள நம்பிக்கையைப் புதுப்பிக்குமாறு தி. மு. க. தலைவர்களும் மக்களைக் கோரினர். ஆனால் மக்கள் அளித்த தீர்ப்பு, காங்கிரசுக்கு மற்றொரு அதிர்ச்சி வைத்தியமாக வந்து வாய்த்துள்ளது. அண்ணா மறைவுக்குப் பின் தி. மு. க. சிதைந்துவிடும் என்று சிலர் கூறிய ஜோதிடம் பொய்த்து விட்டதையே இந்தத் தேர்தல் முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றனர்."

எக்ஸ்பிரஸ் தவிர, வேறு சில ஆங்கில ஏடுகள் என்ன எழுதின என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். "கடந்த இரண்டு ஆண்டுக் கால அளவில் தி. மு. க. தனது நிலையில் அதிக வளர்ச்சியை அடைந்து விட்டது என்பதையே தமிழக நகராட்சித் தேர்தல் முடிவுகள் தீர்க்கமாக மெய்ப்பித்துக் காட்டுகின்றன. இதுவரை தமிழகத்தில் 40 நகராட்சிகளைக் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்தோடு நிர்வாகம் செய்து வந்தது. இப்போது காங்கிரசுக்குத் தனிப் பெரும்பான்மை கிடைத்திருப்பது ஆறு நகராட்சிகளில் மட்டுமே!

இதுவரை எட்டு நகராட்சிகளில் மட்டுமே பெரும்பான்மை பெற்றிருந்த தி. மு. கழகம் இப்போது தனது தோழமைக் கட்சிகளுடன் ஐம்பது நகராட்சிகளில் பெரும்பான்மை பெற்றுள்ளது. திசை திரும்பிய காலக் காற்று, தெளிவாகவே வீசுகிறது. தி. மு. கழகத்திற்கு ஆளும் திறமையில்லையென்று காங்கிரசார் இடைவிடாது செய்து வந்த பிரச்சாரத்தை மக்கள் மதிக்கவில்லை என்பது தெளிவாகிவிட்டது."

(29.4.69 மெயில் தலையங்கம்) "தமிழ்நாட்டில் நடைபெற்ற நகராட்சித் தேர்தல்கள் முடிவு குறித்துத் தமிழக முதலமைச்சர் கருணாநிதி, திருப்தி தெரிவித்துள்ளார். அந்த மகிழ்ச்சியையும் திருப்தியையும் பெறுவதற்கு அவர் எல்லா வகையிலும், நியாயமாகத் தகுதியானவரேயாகும்."

(ஸ்டேட்மென்-30-4-69) "தமிழகத்தில் அண்மையில் நடந்தேறிய நகராட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து தி. மு. கழகம், மன நிறைவு கொள்ள எல்லா நியாயமும் உண்டு. அரசியலில் தி. மு. கழகத்தின் மீட்புத் தன்மைக்கு நகராட்சித் தேர்தல் முடிவுகள் ஒரு அளவு கோலாகும். காங்கிரஸ் கட்சி, அது இழந்த இடத்தைப் பிடிப்பதற்கு இன்னும் வெகு நீண்ட காலத்துக்கு வெகு கடினமாக உழைத்தாகவேண்டும்."

(இந்துஸ்தான் டைம்ஸ்-1-5-69) நகராட்சித் தேர்தல்களில் தொடர்ந்து பிரச்சாரப் பணியில் ஈடுபட்ட காரணத்தால் என் உடல் நலம் சிறிது கெட்டு, சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டியவனானேன். உடல் நலிவு ஏற்படுவதும் அதைப் பொருட்படுத்தாமல் ஊர் சுற்றி அலைவதும் அப்படி ஊர் சுற்றி மக்களைச் சந்திப்பதாலேயே உடல் நிலை சீராவதும் எனக்கு வாடிக்கைதான்! பெரியார் அவர்களின் பள்ளியில் சரியாகப் பயிற்சி பெற்றவர்கள் அப்படித்தான் தங்கள் உடல்நலத்தைப் பற்றிக் கணக்கிட்டு வைத்திருப்பார்கள்.

சென்னையில் எனது பிறந்த நாள் விழாவொன்றினை அண்ணாவைக் கொண்டு கழக நண்பர்கள் நடத்தினார்கள். அப்போது அதில் நான் கலந்துகொள்ளாமல் மன்னார்குடிக்குச் சென்று நண்பர் மன்னை வீட்டில் தங்கிவிட்டேன். சென்னை விழாவில் பேசிய அண்ணா அவர்கள் "தம்பி கருணாநிதி பேசும்போது வியர்வை கொட்டும்-உடல்நிலை பாதிக்கப்பட்டு வாயில் மருந்து சொட்டும்-இது அவனது பொது வாழ்க்கை" என்று குறிப்பிட்டதைத்தான் எனக்கு நலிவு ஏற்படும் போதெல்லாம் நினைத்துக் கொள்வேன்.

1969 மே திங்களில் இந்தியாவைப் பொறுத்தும், தமிழகத்தைப் பொறுத்தும் பெரும் துயரத்தை அளிக்கக்கூடிய இருவரின் மரணங்கள் ஏற்பட்டன. இந்தியத் துணைக் கண்டத்து அரசியலிலேயே ஒரு நூல் இழையில் பெரும் திருப்பத்தை விளைவித்த மிகப் பெரிய மாறுதல் ஏற்படுவதற்குக் காரணமானதாக இந்தியக் குடியரசுத் தலைவர் ஜாகிர் உசேன் அவர்களின் மறைவு அமைந்து விட்டது என்றே கூறலாம். மே திங்கள் மூன்றாம் நாளன்று இருதய நோயின் காரணமாகத் திடீரென்று ஜாகிர் உசேன் காலமானார்.

கல்வித் துறையில் பெருங் கவனம் செலுத்திய பெருமகனார் அவர்! சாந்தமும், அன்பும், எளிமையும் கொண்ட கற்றறி மேதையாகத் திகழ்ந்தவர். புகழ்பெற்ற ஜாமியாமிலியா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்து திறம்பட நடத்தி அறிவொளி பாய்ச்சிட அயராது உழைத்தவர். நாடும் ஏடும் நன்குணர்ந்த நற்குண சீலர். அவருடன் நீண்ட நேரம் தனித்து உரையாடக்கூடிய ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது உண்டு! அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்ற சில திங்கள்கள் கழித்து, மதுரைப் பல்கலைக்கழகத் தொடக்க விழாவுக்கு, குடியரசுத் தலைவர் ஜாகிர் உசேன் அவர்களை அழைத்திருந்தார்.

(இப்போது மதுரைக் காமராஜர் பல்கலைக் கழகமென வழங்குவது.) காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலே அந்தப் பல்கலைக்கழகத்திற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்றிருந்தன. தமிழறிஞர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் அதன் துணைவேந்தராகப் பொறுப்பேற்று அடித்தளம் அமைத்துக்கொண்டிருந்தார். முதலமைச்சர் அண்ணா அவர்களின் தலைமையில் குடியரசுத் தலைவர் அவர்கள் அடிக்கல் நாட்டு விழா நடத்த ஏற்பாடு. குடியரசுத் தலைவர் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கினார்.

முதலமைச்சர் அண்ணாவும், மற்ற அமைச்சர்களும் வரவேற்றோம். மதுரைக்குப் புறப்படும் விமானத்தில் திரு. ஜாகிர் உசேன் அவர்கள் ஏறிக்கொண்டார். திட்டமிட்டபடி முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களும், கல்வி அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களும்தான் அவருடன் விமானத்தில் செல்லவேண்டும். ஆனால், அண்ணா அவர்கள் திடீரென என்னையும் விமானத்தில் ஏறிக்கொள்ளுமாறு பணித்தார். மாற்று உடைகள்கூட எதுவுமின்றி நானும் அண்ணாவின் சொற்படி விமானத்தில் ஏறிக் கொண்டேன்.

குடியரசுத் தலைவரின் விமானம் சிறப்பான தனி வசதிகள் கொண்டது. அண்ணா, நான், நாவலர் மூவரும் அவரிடம் சில நிமிஷங்கள் பேசிக்கொண்டிருந்துவிட்டு விமானத்தின் வேறு பகுதியில் உட்காரச் சென்றோம். அப்போது அவர், "பொதுப்பணி அமைச்சர் என்னோடு சிறிது நேரம் அமரட்டும்" என்றார்.

நானும் அவருக்கெதிரே உட்கார்ந்தேன். கட்டிடக்கலை குறித்தும் பாசன விரிவாக்கம் குறித்தும் பொறியியல் துறை குறித்தும் அவர் என்னிடம் விவாதித்துத் தொகுத்துச் சொன்ன கருத்துக்கள், பொதுப்பணித் துறைப் பொறுப்பை ஏற்றிருந்த எனக்கு மிகவும் பயன்பட்டன. ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றி, அந்தப் பல்கலைக்கழகத்திலேயே துணை வேந்தராகவும் பொறுப்பேற்ற அவர், ஒரு சிறந்த காந்தீயவாதியாகவும் விளங்கினார்.

அவர் மறைவையொட்டி வானொலியில் உரையாற்றிய போது, "அடக்கத்தின் எடுத்துக்காட்டு- அன்பின் திருவுருவம், அமைதியின் வடிவம்-மறைந்த பெரியவர்! மறைந்தவருக்கு-விரிந்து பரந்த அறிவும்-நிறைந்த நாட்டுப்பற்றும் உண்டு. காந்தீயத் தத்துவத்தின் வழி நின்று கடமை ஆற்றிய கர்ம வீரர். கோபுரத்துக் கலசம் வீழ்ந்தது போல், குளிர் மலர்ச் சோலையில் குயிலின் கீதம் நின்றது போல் திடுக்கிடும் செய்தி நம்மைத் திகைப்பிலாழ்த்திவிட்டது.

இந்து முஸ்லீம் ஒற்றுமையின் சின்னமாக விளங்கியவரை நாடு இழந்துவிட்டது. இன்று காலையில் தான் நாகாலந்து மக்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப் படம் ஏடுகளில் வெளிவரக் கண்டோம். நாளை ஏடுகள் அவரது உயிரற்ற உடலையல்லவா படம் பிடித்துப் பிரசுரிக்கும்! பிறப்புக்கும் இறப்புக்குமிடையே மனிதன் ஆற்ற வேண்டிய கடமையை உணர்ந்து செயலாற்றிய செம்மல் பிரிந்துவிட்டார். ஆனால் தமது அன்பு வழியால் நம் உள்ளமெல்லாம் நிறைந்து விட்டார்..."

என்று நான் குறிப்பிட்டேன். அவரது இறுதிப் பயணத்தின் போது தமிழக அரசின் சார்பில் நிதியமைச்சர் மதியழகன் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்தார். நாடாளுமன்றத் தி. மு. க. சார்பில் குழுத் தலைவர் பேராசிரியர் மற்றும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். ஒரு குடியரசுத் தலைவரின் மறைவுக்கும் அடுத்த குடியரசுத் தலைவரின் வெற்றிக்குமிடையே இந்திய அரசியலில் எழுந்த மாற்றங்கள் வியப்புக்குரியவை.

அதற்கிடையே தமிழக அமைச்சரவையில் ஒரு மாபெரும் இழப்பு ஏற்பட்டது. குடியரசுத் தலைவரின் மறைவுச் செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்த போதே, தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் கோவிந்தசாமி அவர்கள், தலைமைச் செயலகத்திலேயே இரத்த வாந்தியெடுத்து மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, அவர் அருகாமை- யிலேயே இருந்து கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். அதனால்தான், நான் டெல்லிக்குச் செல்ல இயலாமல் மதி அவர்களை அனுப்பிவைக்க நேரிட்டது.

மறைந்த மேதை குடியரசுத் தலைவர் ஜாகிர் உசேன் அவர்களை நினைக்கும்போது, அவர் சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் (3-1-68) ஆற்றிய தொடக்க உரையை மறக்க இயலாது: "நம்முடைய மொழிகளிடையே தமிழ் மாண்புமிக்கதொரு இடத்தை வகிக்கிறது. நம்முடைய நாட்டிற்கும் வெளியே அது பேசப்படுவதால், தமிழ் ஒர் அனைத்து நாட்டு மொழியாகவே இருக்கிறது. தமிழ்நாட்டின் எல்லைகள் பழமையானவை. நில எல்லைகளையும், கலாசார எல்லைகளையும் தாண்டிச் செல்கின்ற ஒரு பண்பாட்டையும் பெற்றிருந்தது.

தமிழ் உணர்ச்சி இருந்த இடமெல்லாம் தமிழ்நாடு பரவியிருந்தது. வடக்கில் இமயத்தையும், கிழக்கிலும் மேற்கிலும் திரைகடல்களையும் அந்தக் கடல்களுக்கு அப்பால் உள்ள நிலங்களையும் அது கண்டது. தமிழர்கள் அரேபியா, எகிப்து, ரோமாபுரி ஆகியவற்றுடன் வர்த்தகம் நடத்தினார்கள். வளமைமிக்க வர்த்தகச் சங்கங்களின் பெயர்கள் உலகம் முழுவதும் வியாபித்திருந்தன. மதிப்பரிய வர்த்தகப் பண்டங்களுடன் கப்பல்கள் தங்கிய பல்லவர்களின் மாமல்லபுர துறைமுகத்தைப் பற்றிய வர்ணனை ஆழ்வார்களின் பாடல்களில் காணப்படுகின்றது.

தமிழ்நாட்டிற்கும், தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையே செழிப்பான வர்த்தகம் நடைபெற்றது பற்றி சுமத்ராவில் கண்டெடுக்கப்பட்ட 11-வது நூற்றாண்டு தமிழ்க் கல் வெட்டுக்களிலிருந்து தெரிகிறது. தமிழ் மன்னர்களின் கடற்படை இந்துமகா சமுத்திரத்தை ஆண்டு வந்தது. புகழ்மிக்க கடற்படையைப் பெற்றிருந்த ராஜேந்திர சோழன், சீனப் பேரரசுடன் ராஜீய வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்தான். மேல் திசை நாடுகளுடன் வர்த்தகத் தொடர்பு கொள்வதற்காக,பல நூற்றாண்டுகளுக்கு முன் பாண்டிய மன்னன் ஒருவன், அகஸ்தஸ் என்னும் ரோமாபுரி பேரரசருக்கு தூதுவர் ஒருவரை அனுப்பியிருக்கிறான்.

ஆனால், அதே சமயத்தில் கற்புத் தெய்வத்திற்கு ஒரு கோவில் கட்டுவதற்காக சேரமன்னன் ஒருவன் இமய மலையிலிருந்து கல் கொணர்ந்து, கங்கையில் நீராட்டி அத் தெய்வத்திற்குச் சிலை அமைத்த வரலாற்றையும் நாம் அறிவோம். தமிழ் மொழி பண்பாட்டைப் பற்றி இங்கு குழுமியுள்ள பேரறிஞர்களை விட அதிகமாக நான் கூற முடியாது. எல்லோருக்கும் தெரிந்தவற்றை நாம் மீண்டும் கூறினால் அது ஒரு மாபெரும் மரபிற்குச் செலுத்தும் அஞ்சலிதான்.

இந்த மரபு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் மிகப் பழமையான இலக்கிய அளவு எனக் கருதப்படும் சங்க இலக்கியத்திலிருந்து ஆரம்பமாகிறது. செழித்த, பண்பட்ட இந்த இலக்கியம் பல நூற்றாண்டுகளாய் ஏற்பட்ட வளர்ச்சியைக் காட்டுகிறது. உலக அறிவின் புனிதக் களஞ்சியமாக விளங்குகிறது குறள். வால்மீகியின் கதையை அடிப்படையாகக் கொண்ட கம்பராமாயணம் ஒரு மாபெரும் காவியமாகும். உலகில் மிகவும் புகழ்பெற்ற இலக்கியப் படைப்புக்களில் ஒன்றாக இது திகழ்கிறது.

அதேபோன்று தற்கால இலக்கியமும் செழிப்புற்று விளங்குகிறது. கவிஞர்கள் கதாசிரியர்களின் பட்டியலில் சுப்பிரமணிய பாரதியார் பெயர் குறிப்பிடத்தக்கது. நமது நாட்டு விடுதலைப் போராட்ட கவியான அவர் புதியதொரு சுதந்திர சகாப்தத்தை முன்னரே அறிவிக்கக் கூடிய தீர்க்கதரிசனத்தைப் பெற்றிருந்தார். தமிழ் மரபு பழமையானது மட்டுமின்றி பரந்த உணர்வையும் பெற்றிருந்தது. தமிழ் மரபு எல்லா வகைகளிலும் சிறப்புற்று இருப்பதால் அதில் எந்த அம்சம் அதிகச் சிறப்பு வாய்ந்தது என்பதைக் கூறுவது கடினம்.

வடமொழிக்கு பாணினி செய்துள்ளதைப் போன்று, தமிழுக்கும் தொல்காப்பிய ஆசிரியர் திடமான விஞ்ஞான ரீதியில் இலக்கண அடித்தளத்தை அமைத்திருக்கிறார். ஸ்தாபனங்களைத் தோற்றுவிப்பதில் தமிழர்கள் ஒரு தனித்திறனைப் பெற்றிருக்கிறார்கள். சுகாதார அமைப்புகளைப்பற்றி நாம் இங்கு குறிப்பிடவில்லை. உயர் கல்விக்கான பல பள்ளி- களும், ஸ்தாபனங்களும் இங்கு இருந்தன என்று தமிழ்நாட்டில் பல இடங்களில் உள்ள கல்வெட்டுகள் மூலம் நாம் அறிகிறோம்."

ஜாகிர் உசேன் அவர்களின் இந்த உரை, தமிழின் சிறப்பை தமிழரின் வரலாற்றுப் பெருமையை மீண்டும் ஒரு முறை உலகிற்குப் பறைசாற்றுவதாக அமைந்தது. அண்ணாவின் தலைமையில் நடைபெற்ற அந்த "உலகத் தமிழ் மாநாட்டுத் தொடக்கவிழா" வில் வரவேற்புரையாற்றியவர், தியாகச்சுடர் காமராஜர் அவர்கள்! முன்னால் முதலமைச்சர் என்பதற்காக அல்ல; தமிழகத்துத் தலைவர்களில் ஒருவர் என்ற பெரும் மரியாதையுடன் அண்ணா அவர்களே நேரில் சென்று அந்த விழாவில் காமராஜர் அவர்களைக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்ட பெருந்தன்மையை எப்படித்தான் போற்றுவது!