உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/இயக்கத்தில் சிவாஜி
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

இயக்கத்தில் சிவாஜி · 154 / 391

இயக்கத்தில் சிவாஜி "நா ன் பிறந்த வீடும் புகுந்த வீடும் ஒன்று சேர்ந்தது கண்டு என் உள்ளம் மகிழ்ச்சியால் பொங்குகிறது". இப்படிச் சொன்னவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். சொன்ன இடம் சென்னைக் கடற்கரைக் கூட்டம். சொன்ன ஆண்டு 1979 அண்ணா பிறந்தநாள் விழாவுக்கு; ஆம் - தி.மு. கழககத்தின் சார்பில் கொண்டாடப்பட்ட விழாவுக்கு திருமதி இந்திரா காந்தி வந்திருந்தார். திடீரென்று 1979-ஆம் ஆண்டுக்கு வந்துவிட்டேனேயென்று யாரும் வியப்படையத் தேவையில்லை.

இப்போதுநான் 1950-ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே சில நிகழ்ச்சிகளை நிழலாட விடப் போகிறேன். சிவாஜி அப்படிச் சொன்னதை திருமதி இந்திரா காந்தி அவர்களுக்கு மொழிபெயர்த்துச் சொல்லப்பட்டது. அப்போதுதான் அந்த அம்மையாருக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திராவிடர் கழகக் காலந்தொட்டு இந்த இயக்கத்திலே இருந்து வளர்ந்தவர் என்ற தகவலே தெரியும்! பிறந்த வீடான திராவிடர் இயக்கமும், புகுந்த வீடான காங்கிரஸ் கட்சியும் தேர்தல் உறவு கொண்டதைத்தான் சிவாஜி அப்படி சுவைபடச் சொன்னார் என்பதுணர்ந்த லட்சோப லட்சம் மக்கள் அடங்கிய அந்தக் கூட்டம் ஆரவாரம் செய்து கையொலி முழங்கியது.

திராவிட முன்னேற்றக் கழகம் 1949-ல் தொடங்கப்படுவதற்கு முன்பே திராவிடர் கழகத்தில் ஈடுபாடு கொண்டவர் சிவாஜி! மராட்டிய மாவீரன் சிவாஜி ஒரு மாபெரும் ராஜ்யத்தைத் தனது வாள் முனையால் உருவாக்கினான் என்றாலும்கூட மன்னனாக மகுடம் புனைய அவனது குலம் இடம் தரவில்லையென்று பழமைவாதிகளும் அவர்கட்குப் பாதுகாவலரான காக பட்டரும் தடுத்துரைத்து நின்ற வரலாற்றை அண்ணா அவர்கள் "சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் அல்லது சந்திர மோகன்" என்ற ஒப்பற்ற நாடகமாகத் தீட்டியிருந்தார்.

அந்த நாடகத்தில் அண்ணா அவர்களே காகபட்டர் வேடம் தாங்கி நடித்தார். காவியுடை, கமண்டலம் இவற்றுடன் அண்ணா காகபட்டராகத் தோன்றிப் பேசியதையும், நடித்ததையும் பாராட்டிப் புகழாத நடிகர்களே இல்லை! அந்த நாடகத்தில் சிவாஜியாக "எம். ஜி. ராம்சந்தர்" நடிப்பார் என்று அண்ணாவின் "திராவிட நாடு" பத்திரிகையில் விளம்பரங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. அப்போது நண்பர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் "ராம்சந்தர்" என்ற பெயரில்தான் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

ஆனால் திடீரென அவர் அண்ணாவின் நாடகத்தில் நடிக்க இயலாது எனத் தெரிவித்து விட்டார். அதில் நடிப்பதால் அவரது கலைத்துறை முன்னேற்றத்திற்குத் தடை ஏற்படுமெனச் சிலர் அவரை அச்சுறுத்தி விட்டார்கள். அதனால் அவர் நடிகமணி டி. வி. நாராயணசாமி அவர்களின் மூலமாகத் தனது முடிவை அண்ணாவுக்குத் தெரிவித்துவிட்டார். அண்ணா எழுதிய நாடக உரையாடல்களைப் பல இடங்களில் மாற்றி அமைக்க வேண்டுமென்று டி.வி.என். அவர்களிடம் எம்.ஜி.ஆர்.

தெரிவித்ததாகவும், அதைக் கேட்டு அண்ணா வியப்படைந்ததாகவும், எம்.ஜி.ஆர். இஷ்டதுக்கு வசனங்களை மாற்ற அண்ணா ஒப்புக் கொள்ளாததைக் காரணம் காட்டி எம். ஜி.ஆர். அந்த நாடகத்தில் நடிக்க மறுத்து விட்டதாகவும் டி. வி. என். அவர்களே பல கூட்டங்களில் பேசியிருக்கிறார். நாடக மேடையில் புகழ் பெற்று விளங்கியவரும், திராவிடர் கழக ஈடுபாடுடையவருமான நண்பர் வி.சி. கணேசனை "சிவாஜி" வேடம் தாங்குமாறு அண்ணா அழைத்தார். அண்ணாவின் அழைப்பையேற்று சிவாஜி வேடத்தில், கணேசன் நடித்தார்.

அந்த நாடகத்திற்குத் தலைமை தாங்கிய பெரியார் அவர்கள் வி.சி.கணேசனை சிவாஜி கணேசன் என்று அன்பொழுக அழைத்துத் தட்டிக் கொடுத்தார். அன்று முதல் வி. சி. கணேசன் சிவாஜிகணேசன் ஆனார். "சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்" என்ற அந்தப் புரட்சிகரமான வரலாற்று நாடகம் தமிழகத்தில் பல இடங்களில் நடைபெற்றது. திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து 1949-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கண்ட அண்ணா அவர்களின் கலைத்துறை அணியில் சிவாஜியும் வீறுநடை போட்டார்.

கலைவாணர் என். எஸ். கே. அவர்கள்; திராவிட முன்னேற்றக் கழக மாநாடுகள் அனைத்திலும் தனது வில்லுப்பாட்டு நிகழ்ச்சியைத் தொடக்க நிகழ்ச்சியாகக் கொண்டு கழகக் கொள்கை பரப்பிடும் பணிபுரிந்தார். நடிப்பிசைப் புலவர் கே. ஆர். இராமசாமி அவர்கள், நடிகர் திலகம் சிவாஜி, இலட்சிய நடிகர் இராசேந்திரன், நடிகமணி டி.வி. நாராயணசாமி ஆகியோர் திராவிடர் கழகத்திலும் பின்னர் தி.மு. கழகத்திலும் கொள்கை பரப்பும் கலை முரசுகளாகத் திகழ்ந்தார்கள்.

1953-ஆம் ஆண்டுத் தொடக்கத்தில்தான் நண்பர் எம்.ஜி.ஆர். அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 1952-ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் வீசிய புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கழகத்தின் சார்பில் நிதி திரட்டி அந்தப் பணத்தைக் கொண்டு கைத்தறி வேட்டி, சேலைகள் வாங்கி ஏழை, எளியோர்க்கு வழங்குவதெனவும், இருபத்து ஐயாயிரம் ரூபாய் நிதி திரட்டுவதென்றும் அந்தப் பணிக்கு என்னைத் தலைவனாக இருக்குமாறும் கழகம் தீர்மானம் நிறைவேற்றியது.

நிதி திரட்டும் முயற்சிக்குப் பல இடங்களில் நான் எழுதிய "தூக்கு மேடை" நாடகம் நடத்தப்பட்டது. அந்த நாடகத்தில் பாண்டியன் என்னும் பள்ளி மாணவன் வேடத்தில் நானும், அபிநயசுந்தரர் என்னும் வேடத்தில் சிவாஜியும், பரமார்த்திகர் வேடத்தில் நண்பர் சி. வி. எம். அண்ணாமலையும் மற்றும் கழக முன்னணியினரும் நடித்தோம். மகாலிங்கம் என்ற இளைஞர் (திருமலை - மகாலிங்கம் எனப்படும் இயக்குநர்களில் ஒருவர்) நடிப்பாற்றல் மிக்கவர்.

அவர்தான் கதாநாயகி வேடத்தில் நடித்தார். ஆடவர்கள் "ஸ்த்ரீ பார்ட்" போட்டு நடிக்கும் கால கட்டம் 1952 வரையிலே கூட நீடித்தது எனலாம்! பழங்கால நாடக உலகில் எஸ். ஜி. கிட்டப்பா வள்ளியாகவும், கே.பி. சுந்தராம்பாள் வேலன், வேடன், விருத்தனாகவும் நடித்ததாக நிகழ்ச்சிகள் உண்டு! சக்தி நாடக சபை என்ற பெயரால் சக்தி. கிருஷ்ணசாமி அவர்கள் நடத்திய நிறுவனத்தில் வி.சி.கணேசன், "நூர்ஜஹான்" வேடம் தாங்கிச் சபையோரை மயக்கத்தில் ஆழ்த்துவாராம்.

அழகுக் கிளி நூர்ஜஹானாகவும் நடிக்கத் தெரியும்-ஆத்திகப்புலி அபிநயசுந்தரக் கிழவனாராகவும் நடிக்கத் தெரியு- மென அறைகூவல் விடுத்த அந்த நடிகர் திலகம், கழக நிதிக்காக நடைபெற்ற எந்தவொரு நாடகத்திற்கும் தனக்கென ஊதியம் எதுவும் பெற்றதுமில்லை, கேட்டதுமில்லை. நான் கொடுத்ததுமில்லை. கோயில்பட்டி வள்ளிமுத்து என்பவர் நெல்லை மாவட்டத்தில் சங்கரன் கோயிலில் எங்களின் நாடகத்தை நடத்தி நிதியளிப்பதாகக் கூறி, வசூலான நாலாயிர ரூபாய் பணத்துடன் காணாமலே போய் விட்டார்.

நான், சிவாஜி, சி.வி. எம் அண்ணாமலை, அரங்கண்ணல், காஞ்சி சம்பந்தன், காஞ்சி கிருஷ்ணமூர்த்தி, எம். என். கிருஷ்ணன், நம்பிராஜன், டி. என் கிருஷ்ணன், மற்றும் நாடகத்தில் பங்கேற்ற கழகத்தினர் பட்டினி கிடந்தது மாத்திரமல்ல; ரயிலில் திரும்பி வருவதற்கு வழிச் செலவு பணமும் இல்லாமல் திண்டாடித் தெருவில் நின்றோம். எங்கள் நிலையைக் கண்ட தூத்துக்குடி கே.வி. கே. சாமியும் தங்கப்பழமும் எங்களின் வழிச் செலவுக்காக தூத்துக்குடியில் அவசரமாக ஒரே நாள் விளம்பரத்தில் ஒரு நாடகத்தை நடத்தி அதில் கிடைத்த மிச்சப் பணத்தில் என்னையும் சிவாஜியையும் மற்றவர்களையும் வழி அனுப்பி வைத்தார்கள்.

அப்போதுதான் "பராசக்தி" படத்தில் நடிக்க சிவாஜிக்கு வாய்ப்பு கிடைத்தது. பகுத்தறிவு இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் அவர்கள் "பராசக்தி" திரைக்கதை வசனம் எழுதும் பொறுப்பை நான் ஏற்க வேண்டுமென்று வலியுறுத்தினார். இயக்குநர்கள் கிருஷ்ணன்-பஞ்சு இருவரும் ஒருவராக இருந்து என்னிடம் அன்பு காட்டு கிறவர்கள். அவர்களும் என்னை வலியுறுத்தினர். முதலில் நடிப்பிசைப் புலவர் கே. ஆர். ராமசாமிதான் நடிப்பதாக இருந்தது.

அவருக்கு வேறு படங்கள் இருந்த காரணத்தால் "பராசக்தி"யில் "குணசேகரன்" வேடத்தில் நடிக்க சிவாஜியை ஒப்பந்தம் செய்தார்கள். அந்தப் படம் ஏ. வி. எம்.நேஷனல் பிக்சர்ஸ் கூட்டுத் தயாரிப்பு! சிவாஜி இரண்டொரு காட்சிகளில் நடித்ததைப் போட்டுப் பார்த்து விட்டு, ஏ. வி. மெய்யப்ப செட்டியார் அதிருப்தி தெரிவித்து நடிகரை மாற்ற வேண்டுமென்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். நேஷனல் பெருமாள் அவர்களும், நானும், இயக்குநர்கள் கிருஷ்ணன் பஞ்சுவும் - ஏ.

வி. மெய்யப்ப செட்டியார் கருத்தை ஏற்கவில்லை. "ஒரு அற்புதமான நடிகரை அவசரப்பட்டு இழந்து விடக் கூடாது!" என்று திட்டவட்டமாகக் கூறினோம்! தொடர்ந்து 'பராசக்தி' படப்பிடிப்பு நடந்தது! எனக்கும் சிவாஜிக்கும் இருந்த நட்பு, யாராலும் விலக்க முடியாத பாசமாக உருவெடுத்தது! அந்தப் பாசம் எப்படிப்பட்டது என்பதை 1963-ஆம் ஆண்டு என் தாய் அஞ்சுகம் அம்மையார் மறைந்த போது வெளியிடப்பட்ட ஒரு மலரில் சிவாஜியே வெளிப்படுத்தியிருக்கிறார்.

சிறு வயது முதல் எங்களுக்குள் நெருக்கமான பழக்கம் உண்டு. இதற்கு எத்தனையோ காரணம். கலையோ, அன்போ, கொள்கையோ, குணமோ, எதுவோ எங்களை உயிராக இணைத்து வைத்திருந்தது. நாளடைவில் அது வளர்ந்து வலுப்பெற்றது! அவர்! அது யார்? வாய் நிறைய "மூனா கானா" -நான் இனிமையோடு அழைக்கும் அவர்தான். அந்தக் காலங்களில் இந்த இரண்டு பிள்ளைகளுக்கும் அஞ்சுகம் அம்மையார் அநேக நாட்கள் ஒன்றாகவே உணவு படைப்பது உண்டு. அப்போதெல்லாம் அவர்கள் பரிமாறுவதில் கொஞ்சம் பாரபட்சமாக நடந்து கொண்டதை நான் கவனிப்பதும் உண்டு.

நல்ல பண்டங்களை ஒருவருக்கு அதிகமாகவும் ஒருவருக்குக் குறைவாகவும் போடுவார்கள். "இப்படிச் செய்யலாமா? இது நீதியா?" என்று நான் கேட்பேன். "நீ செல்லப்பிள்ளை - உனக்கு அதிகம்தான்" என்பார்கள் அந்தத் தாய். அந்தச் செல்லத்தை மறந்து விட்டுப் போய்விட்டார்கள். நான் என்றும் அந்த அன்புச் செல்லத்தை மறக்க முடியாது. எனக்கு அஞ்சுகம் அம்மையாரும் ஒரு தாய்!"

இது அந்த மலரில் சிவாஜி எழுதிய கட்டுரையில் ஒரு பகுதி. படப்பிடிப்பு வேலைகளில் சிவாஜி ஈடுபட்டதால் சில நேரங்களில் அண்ணா எழுதிய "சந்திரமோகன்" நாடகத்தில் சிவாஜி வேடத்தை நண்பர் ஈ. வே. கி. சம்பத் அவர்கள் ஏற்று நடித்தார். அதில் சிவாஜிக்கு வருத்தமில்லையென்றாலும் கணேசனைப் போல சம்பத்தால் நடிக்க முடியவில்லை யென்று பலரும் விமரிசனம் செய்த காரணத்தால் ஏதோ ஒரு இனம் தெரியாத வெறுப்பு சிவாஜி கணேசன் மீது சம்பத்துக்கு ஏற்பட்டது.

அதன் காரணமாக சிவாஜியைக் குறித்து அண்ணாவிடம் சமயம் நேரும்போதெல்லாம் கலக விதை ஊன்றப்பட்டது. ஒருமுறை "சந்திரமோகன்" நாடகம் சென்னையில் தியாகராய கல்லூரி கலை அரங்கில் நடைபெறுவதாக இருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிவாஜி கணேசன் அண்ணாவுடன் அந்த நாடகத்தில் நடிப்பதாக ஏற்பாடாயிற்று! சிவாஜி வேடத்திற்கான வசனங்கள் அடங்கிய பாடப் புத்தகம் கணேசன் அவர்களுக்கு அனுப்பப்பட்டிருந்தது. நாடகம் நடக்க இரண்டு மூன்று நாட்கள் இருந்தபோது ஒரு நாள் அண்ணா, நான், சம்பத், சிவாஜி கணேசன் ஆகியோர் சென்னை "சைனீஸ் ரெஸ்டாரண்ட்" டுக்குச் சென்று மதிய உணவு சாப்பிட்டோம்.

சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது. சிவாஜி அண்ணாவைப் பார்த்து, "அண்ணா! இப்போதெல்லாம் வயது ஆக ஆக நாடக வசனங்களை மனப்பாடம் செய்வது ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது! சிவாஜி பாத்திர வசனங்களை இரவு பகலாக உருப்போடுகிறேன்!" என்று கூறினார். அண்ணாவும் ஏதோ வேடிக்கையாகச் சொன்னார்! சிரித்துக் கொண்டே உரையாடியவாறு சாப்பிட்டு முடித்தோம். பிறகு சிவாஜி எங்களிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டுவிட்டார். அண்ணா, நான், சம்பத்து மூவரும் காரில் போய்க்கொண்டிருக்கிறோம்.

அப்போது சம்பத்து அண்ணாவிடம், "இந்த கணேசனுக்கு அதற்குள் எவ்வளவு ஆணவம் வந்துவிட்டது. உங்கள் வசனங்களை மனப்பாடம் செய்வது கஷ்டமாயிருக்கிறது என்று உங்களிடமே சொல்கிறான்!" என்று அண்ணா மனத்தில் விஷ விதையைத் தெளித்தார். அப்போது அண்ணா அதை மறுத்து, "இல்லை சம்பத்! வயது ஆக ஆக மனப்பாடம் செய்வது கஷ்டமாக இருக்கிறது என்றுதான் கணேசன் சொன்னது! அதைத் தவறாக எடுத்து கொள்ளக் கூடாது!"

எனப் பதில் அளித்தார். இப்படிக் காரில் நடந்ததை; இதோ இப்போது நான் எழுதுகிற வரையில் சிவாஜியிடம் கூறியதில்லை! ஆனால் சிவாஜியைப்போல் என்னிடம் நெருங்கிப் பழகிய நண்பர்களிடம் மட்டும் இதைக் கூறி வருத்தப்பட்டிருக்கிறேன். 'பராசக்தி' படம் வெளி வந்தவுடன் அதை எரிச்சலுடன் விமரிசித்துக் கண்டனம் எழுதிய "தினமணிக் கதிர்" ஏட்டில் "பரப்பிரம்மம்" என்ற தலைப்பில் அந்தப் படத்தை ஏகடியம் செய்து கார்ட்டூனும் வெளியிட்டார்கள்.

உடனே நான் "பரப்பிரம்மம்" என்ற தலைப்பிலேயே ஒரு நாடகம் எழுதி நாடு முழுதும் நடத்த ஏற்பாடு செய்தேன். அதில் நானும், நடிகர் திலகம் சிவாஜியும், கழக நண்பர்களும் நடித்தோம். அந்த நாடகத்தில் "சேரன் செங்குட்டுவன்" வேடத்தில் சிவாஜி நடித்தது இன்னமும் என் கண்முன்னால் நிற்கும் காட்சியாகும்! கல்லக்குடி போராட்ட நிதி திரட்டுவதற்கும் அந்த நாடகத்தைப் பயன்படுத்தினோம். இவ்வாறு கல்லக்குடி போராட்டம் 1953-ஆம் ஆண்டு நடைபெற்று நான் ஆறு மாதக் கடுங்காவல் தண்டனையைப் பெற்று சிறைபுகும் வரையில் சிவாஜி கணேசன், கழகத்தின் வளர்ச்சிக்காகத் தனது கலைப் பணியை ஆற்றி வந்தார்!

அதற்கிடையே இருபத்து ஏழாயிரம் ரூபாய் புயல் நிதி திரட்டப்பட்டு அதற்குக் கைத்தறி ஆடைகள் வாங்கி வழங்குகிற விழா சென்னையில் நடைபெற்றபோது, அந்த நிகழ்ச்சிக்கு சிவாஜி கணேசன் அழைக்கப்படவில்லை. அவர் வெளியூரில் இருந்தபோது அவருக்குத் தெரியாமலே அந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது. நிதி திரட்டும் பணியில் என்னுடன் பெரும் பங்கேற்றிருந்த சிவாஜி அந்த நிகழ்ச்சிக்கு வரவேண்டுமென்பதில் நான் கண்ணுங்கருத்துமாக இருந்தேன் என்றாலும் சிவாஜியை வராமல் செய்ய வேண்டுமென்பதில் அக்கறை காட்டியவர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள்.

அவர்கள், யார் என்ற விபரங்களுக்குள் எல்லாம் விரிவாக நுழைய விரும்பவில்லை. கல்லக்குடி போராட்டத்தில் ஈடுபட்டு திருச்சி சிறையில் இருந்த என்னை வந்து சிவாஜி, பார்த்து விட்டுப் போனார். என்னையும் அவரையும் சிறைச்சாலை ஆறுமாத காலம் பிரித்து விட்டதைப் பயன்படுத்திக்கொண்டு கழகத்திற்கு உள்ளே இருந்த சிலரும், கழகத்திற்கு வெளியே இருந்த சிலரும் தங்கள் முயற்சிகளை முடுக்கி விட்டு - அவரைக் கழகத்திலிருந்து பிரித்து விட்டார்கள்!

அவர் கழகத்திலிருந்து வெளியேற "திருப்பதிக்குச் சென்று சாமிகும்பிட்டார்" என்பதே பெரும் குற்றச்சாட்டாக அப்போது வெடித்தது! அந்தக் குற்றச்சாட்டுக்கு அன்றைக்கு கனம் ஏற்றிப் பேசியவர்கள்; கொள்கைப்பற்றால் கூட அல்ல; சிவாஜியின் மீதிருந்த பொறாமையால் அவரை வெளியேற்ற வெகுண்டெழுந்தனர்! கட்சியிலிருந்துதான் வெளியேறினாரே தவிர, அண்ணாவின் அன்பு உள்ளத்திலிருந்து அவர் வெளியேறவில்லை! எங்களின் பாசம் மிகுந்த நட்பு, அந்த வெளியேற்றத்தால் வெட்டப்படவில்லை!

அது தொடர்ந்தது - தொடர்ந்து கொண்டேயிருக்கிறது!