உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/எங்கிருந்தாலும் வாழ்க!
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

எங்கிருந்தாலும் வாழ்க! · 153 / 391

எங்கிருந்தாலும் வாழ்க! 'தெ ய்வாதீனமாகத் தப்பிப் பிழைத்துக் கொண்டாய்' என்று எனது உறவினர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டு "ஆப்பக் கூடல் ஆபத்திலிருந்து காப்பாற்றிய ஆண்டவனே!" என்று நன்றியைப் பக்தி பூர்வமாகப் பொழிய ஆரம்பித்தனர். எத்தனையோ விபத்துச் செய்திகளைப் படிக்கிறோம், பார்க்கிறோம். ஒரு ரயில் கவிழ்ந்திருக்கும். சில நூறு பேர்கள் பிழைத்துக்கொள்வார்கள். பல நூறு பேர்கள் நசுங்கியும், மிதியுண்டும், உடல் நொறுங்கியும் பிணமாகியிருப்பார்கள், அப்போதும் தெய்வாதீனமாக அந்தச் சிலர் உயிர் தப்பியதாகச் சொல்லப்படுமே தவிர, பலர் உயிர் இழந்தது குறித்து "தெய்வாதீனம்" வாய் மூடி மௌனியாகவே இருந்து விடும்.

எத்தனை விமான விபத்துக்கள், எத்தனை பேருந்து விபத்துக்கள், எத்தனை புயல் வெள்ளச் சீற்றங்கள், எத்தனை எத்தனை கட்டிடம் இடிந்து விழுந்த விபத்துகள், எத்தனை திரையரங்குகள் தீக்கு இரையான விபத்துக்கள் - இவற்றில் எல்லாம் பலர் மடிந்திட நேரிட்டாலும் கூட, தப்பிப் பிழைத்த ஒரு சிலர் மட்டும் தெய்வாதீனமாக மீட்கப்பட்டனர் என்று கருதுவது - அல்லது கூறுவது - அர்த்தமற்ற ஒரு நம்பிக்கையாகவே தொடர்ந்து வருகிறது. அந்த நம்பிக்கைகளில் இருந்து எங்கள் வீட்டில் என் தாயார் உட்பட அனைவரும் விடுபட்டிருந்தாலுங்கூட, எனது பெரிய அக்காள் (அமிர்தத்தின் தாயார்) மட்டும் அழுத்தமான வைதீகப் பற்றுக் கொண்டவர்.

சகுனம் பார்க்காமல் அடுத்த தெருவுக்கு; ஏன் - அடுத்த வீட்டுக்குக்கூட அடியெடுத்து வைக்கமாட்டார். அவர்களது பிடிவாதமான சனாதனப் போக்கையும் ஆச்சார அனுஷ்டானங்களையும் நான் ஏற்றுக்கொள்ளா விடினும் எதிர்க் கருத்துக்கள் எதனையும் அக்காளின் மனம் புண்படும்படி நான் கூறுவதில்லை. தெய்வம் உண்டா? இல்லையா? என்ற சர்ச்சையில்கூட எனக்கென ஒரு தனிக் கருத்து இருந்தாலும் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற திருமூலர் வாசகத்தை அறிஞர் அண்ணா அவர்கள் அடிக்கடி எடுத்துக்காட்டுவதும் - "உண்மை- யின் பேர் தெய்வம் என்போம், மற்றும் ஓதிடும் தெய்வங்கள் பொய் என்றுரைப்போம்" எனப் பாரதியார் திட்டவட்டமாகக் கூறுவதும் - இந்தச் சமுதாய மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுமேயானால், சாதிகளின் பெயராலும் கடவுள்களின் பெயராலும் நடைபெறும் சண்டை சச்சரவுகள் எனும் நச்சரவங்கள் நலிந்து மெலிந்து ஒழிந்திட வழியேற்படும்.

ஒரு சக்தி இல்லாமல் உலகில் காரியங்கள் நடைபெறுகின்றனவா? ஆத்திகர் தரப்பிலிருந்து எழுப்பப்படும் இந்தக் கேள்விக்கு ஒரே பதில்: "ஆமாம்! சக்தியின் சுழற்சியால்தான், சகலமும் நடைபெறுகிறது" என்பதுதான்! இதில் ஏற்படுகிற கருத்து மாறுபாடு ஒன்றே ஒன்றுதான்! இந்த உலகம் எனப்படும் பூமி மட்டுமல்ல; விண்வெளியில் இந்தப் பூமியைப் போலவும், இதைவிடப் பலமடங்கு பெரியதாகவும் எத்தனையோ கோளங்கள் இன்னமும் எண்ணிக்கைக்கு அடங்காமல் பரவிக்கிடக் கின்றன!

வானத்து மின்மினிகள் என வர்ணிக்கப்படுகிற நட்சத்திரங்கள், பூமியிலிருந்து கோடிக்கணக்கான மைல்கள் தொலைவில் பூமியை விடப் பல மடங்கு; அளவில் பெரிதாய் விளங்குகின்றன! சந்திரமண்டலத்திற்கு மனிதன் சென்று திரும்பிய வெற்றிக் கொடியை விஞ்ஞான யுகம் தூக்கிப்பிடித்துள்ள காலம் இது! இந்த விஞ்ஞானச் சாதனங்கள் இல்லாத காலத்திலேயே விண்வெளிக் கிரகங்களின் இயக்கத்தைக் கண்டறிந்து, கணித்துச் சொன்ன மேதைகளாக நமது மூதாதைய பலர் திகழ்ந்திருக்கிறார்கள்.

கோள்கள் சுழல்கின்றன! சூரியனின் ஒளி பூமியில் பாய்ந்து பகல் பொழுதைத் தருகிறது! அப்போது பூமியின் இன்னொரு பகுதி இரவில் குளித்துக்கொண்டிருக்கிறது! நிலவு தேய்கிறது - வளர்கிறது; அது போன்ற தோற்றத்தைக் காட்டுகிறது! அணுவை எத்தனையோ லட்சத்தில் ஒன்றாகப் பிளந்தால் இருக்கக்கூடிய அளவான கிருமிகளின் உருவத்திலேயிருந்து, யானைகள் வரையிலான பெரிய உருவங்கள் இந்தப் புவியில் தோன்றுகின்றன. இவற்றுக்கிடையேதான் மனிதனும் தோன்றினான்.

எல்லா உயிரினங்களுக்கும் உண்பதற்கு வாயும், கொள்வதற்கு வயிறும், செரித்தது போக எஞ்சியதைக் கழிப்பதற்கு வகையும் அந்தந்த உயிரினங்களுக்கு ஏற்றவாறு அமைந்து உள்ளன. உடலுறவு காரணமாக ஒரு சிறு துளியில் ஐந்து அல்லது ஆறடி மனிதனின் அங்கமெல்லாம் அடங்கியிருக்கிற- விந்தையைக் காணுகிறோம். வாயில்லாப் பிராணிகள் யாரும் சொல்லித் தராமலே "செக்ஸ்" விவகாரங்களைக் கற்றுக்கொண்டு, பிள்ளைப் பேறுகளைக் கூடத் தங்களுக்குத் தாங்களே கவனித்துக் கொள்கின்றன!

இயற்கை, செழிப்பையும் வழங்கிச் சிரிக்கிறது! சீற்றமும் கொண்டு சீரழிக்கிறது! மாநதிகள், மரமடர் காடுகள், அழகுமிழ் நீர்வீழ்ச்சிகள், அருவிகள்-இப்படி எத்தனை எத்தனையோ? இத்தனைக்கும் ஒரு சக்திதான் காரணம்! ஆனால் அந்தச் சக்தி; ஒரு பெண் உருவாகவோ அல்லது ஆண் உருவாகவோ அல்லது இரண்டும் இணைந்த உருவாகவோ ஓரிடத்தில் அமர்ந்து, சிந்தித்து, கற்பனைகள் செய்து இவற்றையெல்லாம் உருவாக்கி-அப்படி உருவாக்கியதைத் தானே அழித்து-அல்லது, தான் உருவாக்கிய உயிர்களிலேயே நல்லவைகளாக ஒரு பகுதியையும் தீயவைகளாக ஒரு பிரிவையும் அமைத்து-செயல்பட்டுக் கொண்டிருக்கிறதா என்கிற கேள்வி கிளம்பும் போதுதான்-வாதமே வளர்கிறது!

பூமியுட்பட விண்வெளியில் கோள்களின் இயக்கங்களுக்கும், அந்தந்தக் கோள்களில் உள்ள மாறுபாடுகளுக்கும்-உருவ மற்ற இயக்கும் சக்தியொன்று காரணமாகத் திகழ்கிறது! அந்தச் சக்தி, பூமியிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவு வரையில் ஆகர்ஷண சக்தியாக இயங்குகிறது! பூமியையும் தன்னைத் தானே சுற்றவைத்து சூரியனையும் சுற்றி வருமாறு செய்து கொண்டிருக்கிறது! எல்லையற்ற அண்டவெளியில் நிகழ்கின்ற அற்புத மாற்றங்கள் அனைத்துக்கும் அந்தச் சக்தியே அடிப்படை!

அந்தச் சக்தி, படைக்கப்பட்டதல்ல! கோடி-கோடி-கோடானு கோடி ஆண்டுகளுக்கு முன்பு என்றெல்லாம் வரையறுத்துக் கூறமுடியாத காலந்தொட்டு அந்தச் சக்தி இயங்குகிறது. அந்தச் சக்தியின் காரணமாக யுக யுகாந்திரமாக ஏற்படும் பரிணாம வளர்ச்சி (Evolution)யின் பல்வேறு கட்டங்கள்தான்; நாம் வாழுகிற பூமியில் மட்டுமல்லாமல் விண்வெளியிலேயே எண்ணற்ற மாறுபாடுகளாகும்! பூமியென்ற கோளே இல்லாமல் இருந்த ஒரு காலமும் உண்டு! சூரிய கிரகத்தில் உடைந்த ஒரு பகுதி நெருப்புக் கோளாக விண்வெளியில் சுழன்று - கணக்கிலா நூற்றாண்டுகளுக்குப் பிறகு குளிர்ந்து, நிலப்பகுதி நீர்ப்பகுதிகளெனப் பிரிந்து, இன்னமும் நெருப்பைக் கருக்கொண்டிருக்கிற பகுதி- களோடு இயங்குகிற இந்தப் பூமியின் அந்தந்தப் பகுதியின் சூழல்களுக்கேற்ப உயிரினங்கள் தோன்றி வளர்ந்துள்ளன.

பூமியைப் போலவும், இதைவிடப் பெரிதாகவும் அல்லது சிறிதாகவும் உள்ள கோள்களில் இங்குள்ளதைப்போல் உயிர் இனங்களோ, தாவர வர்க்கங்களோ இல்லையென்பதே இது வரையில் கண்டறிந்துள்ள விஞ்ஞான ரீதியான முடிவாகும். எனவே நான் குறிப்பிடும் சக்தி என்பது; உயிர் இயக்கம், நினைப்பாற்றல், செயலாக்கம், இவையனைத்தும் பெற்ற ஒரு வடிவமாக இருந்து பூமியை மட்டும் படைத்து அதில் உயிர் இனங்களையும், நீரையும், நெருப்பையும் படைத்தது என்று கூற முடியாதல்லவா?

அப்படிக் கூறினால்; பூமியைப் போன்ற பல கிரகங்களில் அந்தக் காரியத்தை அந்தச் சக்தி ஏன் செய்யவில்லை என்ற கேள்வி எழுவது இயல்பல்லவா? இதிலிருந்து சக்தி என்பதற்குக் காணக்கூடிய பொருள் "கடவுள்" என்பது அல்ல! வலிமை என்பதும் அல்ல! சக்தியுள்ளவரையில் எதிரியிடம் போராடினான் என்கிறோம்-அப்போது சக்தி என்ற சொல் வலிமை(Energy)யைக் குறிக்கிறது. விண்வெளி இயக்கம், புவியின் இயக்கம், உயிரினப் பெருக்கம், தீ, காற்று, நீர், இத்தகு வியப்புறும் செயல்களைக் கண்டு; ஏதோ ஒரு சக்தியிருக்கிறது என்கிறபோது அந்தச் சக்தி (Power) ஒருவிதமான இயங்கும் தன்மையையே குறிக்கிறது.

அது வணங்கத்தக்கதா? வரம் அருளக்கூடியதா? ஆபத்தில் கூவி அழைக்கும்போது ஓடிவந்து அபயம் அளிக்கக்கூடியதா? இந்த வினாக்களுக்கு விளக்கம் கிடைக்கும்போதுதான் வாதப் பிரதிவாதங்கள் முற்றுகின்றன. ஆத்திக நாத்திகச் சொற்போர் நடைபெறுகிறது. மனித இருதயத்தின் பலவீனமான தன்மை, அந்தச் சக்திக்குக் 'கடவுள்' என்ற பெயரைச் சூட்டித் தன்னைச் சுற்றியுள்ள அபாயங்களில் இருந்து காத்துக்கொள்ள விரும்புகிறது. பரீட்சையில் தேற வேண்டும் எனத் துடிக்கிற மாணவர்கள் முதல் பதவி உயர்வு தேடுகிறவர்கள் வரையில் கடவுள் என்பவர், தங்கள் வேண்டு கோளையேற்று அதற்குப் பிரதி உபகாரமாகக் காணிக்கைகளைப் பெற்றுக் கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய ஒருவர் என்றே கருதிக் கொண்டிருக்கின்றனர்.

நெஞ்சுறுதி வாய்ந்தவர்களோ தன்னம்பிக்கையுடன் அறிவையும், ஆற்றலையும், உழைப்பையும் பயன்படுத்திச் செயல்படு- கின்றனர். நினைத்த காரியங்கள் நடவாதபோது பக்தர்களின் நிந்தனைக்கும் ஆளாகிறார். புதிய படம் திரையிடப்படும் போது ஒரு மாதத்திற்கு மழையே வரக்கூடாது என எண்ணுகிற தயாரிப்பாளரும், மழை பொழிந்தால் தான் வேளாண்மை நடக்குமெனக் கவலைப்படும் விவசாயியும் தங்கள் எண்ணம் ஈடேறக் கடவுளைத்தான் வேண்டுகிறார்கள்.

தமிழ்நாடு மழையின்றிக் காயும்போது குஜராத்தில் வெள்ளத்தால் பெரும் சேதம் எனச் செய்தி வருவதில்லையா? நான் குறிப்பிடும் "சக்தி" என்பது கடவுளானால், அதற்கு அறிவுரை கூறவும் -ஆணையிடவுமான வாய்ப்புகள் நிறைய உண்டு! அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி மனித குலத்தில் தீமைகள் விளையாமலும், தீயவர்கள் தோன்றாமலும் தடுத்திட முடியும். அப்படி எதுவும் நடைபெறாததில் இருந்து இயற்கையாகவே இயங்கும் ஒரு சக்தியைக் கடவுள் தன்மையுடையதாகக் கற்பனை செய்து நன்மை தீமைகள், நல்லவை கெட்டவை அனைத்துக்கும் பொறுப்பாக்குவது பொருத்தமற்றது என்றாலுங் கூட ஏதோ ஒரு நம்பிக்கையைக் கொழுகொம்பாகப் பிடித்துக்கொள்ள முனைகிற மனிதவர்க்கத்தில் கடவுள் என்ற நம்பிக்கை வேரூன்றி விட்டது!

இந்த விவாதங்களில் நேரத்தை வீணாக்க வேண்டாமென்றுதான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் "உண்டென்பார் சிலர், இல்லையென்பார் சிலர் எனக்கில்லை கடவுள் கவலை!" எனத் தெளிவாகப் பாடிவைத்தார். ஆப்பக்கூடல் விபத்தில் மின்சாரக் கம்பிகளில் பாய்ந்த மின்சாரம் மட்டும் துண்டிக்கப்படாமல் இருந்திருந்து நாங்கள் அந்த இடத்திலேயே சவங்களாகக் கருகியிருந்தால்; "எல்லாம் கடவுள் செயல்!"

என்றுதான் பலர் கூறியிருப்பார்கள். எங்களைப் பிடிக்காத கூட்டத்தினர் "ஆண்டவன் தண்டித்துவிட்டான்" என்று கூறியிருப்பர். எங்கள் பால் அன்பு கொண்ட உற்றார் உறவினர், நண்பர்கள், பொதுமக்களோ "தெய்வாதீனமாகத் தப்பிவிட்டீர்கள்!" என்று ஆனந்தப் பெரு மூச்சு விட்டனர். ஒரு டாக்டர் தருகிற மருந்தை விட, அவர் சிகிச்சை அளித்தால் குணமாகிவிடும் என்று நோயாளிக்கு ஏற்படுகிற நம்பிக்கையே பாதியளவு நோயைப் போக்கி விடுகிறது.

அப்படிக் கடவுள் நம்பிக்கையின் மூலம் மன ஆறுதலைப் பெறுகிற மக்களின் பால் தலையிட்டு நாத்திகக் கருத்தைத் திணிக்க வேண்டுமென்பதில்லை. அதேபோல ஆத்திகக் கருத்துடையவர்களும் நாத்திக எண்ணம் படைத்தவர்களை; வெறுத்து ஒதுக்கப்பட வேண்டிய கூட்டம் என்று புழுதி வாரித் தூற்ற வேண்டியதில்லை. பண்டித ஜவகர்லால் நேரு அவர்களும், பகத் சிங்கும் தங்களை நாத்திகர்கள் என்றே பிரகடனப் படுத்திக் கொண்டனர். மார்க்சிய வர்க்கப் பார்வையில் நாத்திகக் கொள்கைதான் வலிமையுடன் எடுத்துக் காட்டப்படுகிறது.

கடவுள் நம்பிக்கை-கடவுள் மறுப்பு ஆகிய இந்த விவாதம் நடத்திக்கொண்டிருப்பதைவிட, ஆற்றவேண்டிய வேறு பணிகள் நிரம்ப இருக்கின்றன. கடவுள் மறுப்பாளர்கள், நம்பிக்கையாளர்களின்மீது காழ்ப்புக் காட்டத் தேவையில்லை. அதேபோல கடவுள் நம்பிக்கையாளர்களும் அந்த நம்பிக்கையை முதலீடாகக் கொண்டு மக்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி பிழைப்புக்கோர் வழியைத் தேடுதல் தீது! அவர்களிடம் மக்கள் ஏமாறுவது அதனினும் தீது! பெரியார் அவர்கள் ஊருக்கு ஊர் பிள்ளையார் பொம்மைகளைச் செய்து நடுத்தெருவில் உடைக்கச் சொன்னபோது, திராவிடர் கழகத்தின் அந்தத் திட்டம் குறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனராம் அண்ணா அவர்களிடத்தில் நிருபர்கள் கேட்டபோது "நான் பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன், பிள்ளையாருக்குத் தேங்காயும் உடைக்க மாட்டேன்" என்று கூறியதின் மூலம் கடவுள் பிரச்சினையில் கழகத்தின் கருத்தைத் தெளிவு படுத்தினார்.

இதை நான் எழுதுகிறபோது நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களை முதலமைச்சராகக் கொண்ட அகில இந்திய அ.தி.மு.க. ஆட்சி நடைபெறுகிறது. முதல்வர் எம்.ஜி.ஆர்., வேறு ஒரு மாநிலத்தில் உள்ள மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு அடிக்கடி போய் வருகிறார். அப்படிச் சென்று அம்மனைத் தரிசிப்பதும், பூஜிப்பதும் தனது உரிமை என வெளிப்படையாக வாதிடுகிறார். ஆனால் 1953-ஆம் ஆண்டு என்ன நடைபெற்றது? தி.மு. கழகத்தில் இருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திருப்பதிக்குச் சென்று வணங்கினார் என்று பத்திரிகையில் செய்தி வந்ததும் அவருக்கு எதிரான அணியைப் பின்னிருந்து முடுக்கிவிட்டவர்களில் முக்கியமானவராக இருந்தவர் இதே எம்.ஜி.ஆர்.

அவர்கள்தான்! சிவாஜி கணேசன் என்பதற்குப் பதிலாகத் திருப்பதி கணேசன் என்று அழைக்குமளவுக்கு எதிர்ப்புப் பிரச்சாரம் வலுவூட்டப்பட்டது. அதன் தொடர்பாக சிவாஜி கழகத்தைவிட்டே வெளியேற நேர்ந்தது. அப்போதும் அவர் மிகுந்த அடக்கத்துடன் "என்னால் அவர்களைப் பின்பற்ற முடியவில்லை. அதனால் ஒதுங்கிக் கொள்கிறேன்" என்றுதான் அறிக்கை விடுத்து வெளியேறினார்.

அவர் வெளியேறியதற்குக் காரணமாக இருந்தவர்கள், அதற்கென விறுவிறுப்புடன் செயல் புரிந்தவர்கள், இன்று எம்.ஜி.ஆர். அவர்களின் தலைமையில் உள்ள கட்சியில் பலர் இருக்கிறார்கள். பாவம்; அவர்களால் மூகாம்பிகை கோயிலுக்கு எம்.ஜி.ஆர். அவர்களே அடிக்கடி சென்று பிரார்த்தனை செய்து திரும்புவது குறித்து வாய் திறக்க முடிவதில்லை. சிவாஜி, கழகத்தைவிட்டு வெளியேறுவதற்காக நடைபெற்ற சூழ்ச்சிகளும் - அதற்காக அவர்மீது சுமத்தப்பட்ட பழிகளும் ஏராளம்!

எடுத்துக்காட்டாக ஒன்றிரண்டைச் சொல்லவும் விரும்புகிறேன். அவர் வெளியேறி சில ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நடைபெற்ற "கட்டபொம்மன்" நாடகத்திற்குத் தலைமை வகித்த அண்ணா அவர்கள், கட்டபொம்மனாக நடித்த சிவாஜியின் நடிப்பாற்றலை வெகுவாகப் பாராட்டியதோடு "தம்பி கணேசா! நீ எங்கிருந்தாலும் வாழ்க!"

என வாழ்த்தியது சிவாஜியின் கலையுலக வரலாற்றில் வைர வரிகளாகும்.