நெஞ்சுக்கு நீதி
ஆப்பக்கூடல் ஆபத்து · 152 / 391
ஆப்பக்கூடல் ஆபத்து ஆப்பக்கூடல் ஆபத்து என்றே, அதற்குப் பெயரிட்டு அழைக்கலாம்; அவ்வளவு பெரிய விபத்து ஒன்று ஏப்ரல் முதல் வாரத்தில் கோவை மாவட்டத்தில் ஏற்பட்டு அதில் நானும் அமைச்சர்கள் சிலரும் சிக்கிக் கொண்டோம். புதிய அமைச்சரவை பொறுப்பேற்றவுடன் மக்கள் தேவைக்கான காரியங்கள் வேகமாக நடைபெற ஆரம்பித்தன. பிற்படுத்தப்பட்டோர் நலன்களைக் கவனிக்கும் பணியும் ஆதி திராவிடர் நலன்களைக் கவனிக்கும் துறையுடன் இணைக்கப் பட்டிருந்ததால், இரு பிரிவினர் நலன்களும் செம்மையாகக் கவனிக்கப்படவில்லையென்றும் எனவே இரண்டு துறைகளையும் தனித்தனியே பிரிக்க வேண்டுமென்றும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே காங்கிரஸ் உறுப்பினராக இருந்த திருமதி அனந்தநாயகி போன்றவர்கள் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அதைக் காங்கிரஸ் ஆட்சியில் யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அந்த எண்ணம் என் மனத்திலும் நீண்ட நாட்களாக இருந்து வந்தது. 1-4-69 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தாழ்த்தப்பட்டோர் நலம் பேண ஆதி திராவிடர் (அரிசன) துறை இருப்பதைப் போல பிற்படுத்தப்பட்ட மக்கள் நலன்களைக் காத்திட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒன்று தனியாக உருவாக்குவதென்று முடிவெடுக்கப்பட்டது. அந்தத் துறைக்கெனத் தனியாக ஒரு அமைச்சரை நியமிப்பது என்றும் அப்படி நியமிக்கப்படும் வரையில் அந்தத் துறை முதலமைச்சரின் பொறுப்பிலே இருப்பதென்றும் முடிவு செய்யப்பட்டது.
வறட்சி நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டது மட்டுமின்றி, போதுமான உணவு தானியத்தையும்-தேவையான வறட்சி நிதியையும் மாநில அரசுக்கு மத்திய அரசு உடனடியாகத் தந்து உதவிட வேண்டுமென்று சட்டப்பேரவையில் தீர்மானமே நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தில் பேசும் போது காங்கிரஸ் கட்சித் தலைவர் கருத்திருமன் அவர்கள் "நீங்கள் எப்போதும் உலகில் கிடைக்காத விஷயங்களைத்தானே கேட்பீர்கள்!"
என்று கிண்டல் செய்தார். அதற்கு நான் : "அய்யா! நாங்கள் ஒன்றும் பாரிஜாத மலரைக் கேட்கவில்லை! கிடைக்கச்கூடிய தானியத்தையும், நிதியையும்தான் கேட்கிறோம்!" என்று கூறினேன். கருத்திருமன், ஒரு எதிர்க்கட்சிக்காரர் என்ற முறையில் கேலியாகவும், காரசாரமாகவும் பேசுவாரே தவிர பொதுவாக நல்ல உள்ளம் படைத்தவர். அவர் அவையில் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த போதுதான் எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்ற தகுதியும், அந்தப் பதவிக்குரிய வசதிகளும் வழங்கப்படுமென்று அறிவித்தேன்.
அதனை அவர் வரவேற்றார் என்றாலுங் கூட, அவர்களது கட்சிக்குள்ளிருந்த பிணக்கின் காரணமாக அந்த வசதிகளை அப்போது ஏற்பதற்கில்லையென்று கூறிவிட்டார். ஆனால், மேலவையில் திரு. ராஜாராம் நாயுடு அவர்கள் காங்கிரஸ் தலைவராக இருந்தபோதிலும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும், அதற்குரிய வசதிகளையும் ஏற்றுக் கொண்டார். அப்பொழுதுதான் முதன் முதலாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் அதற்கு வசதிகள் என்பதும் உருவாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் வறட்சி நிலவரத்தை அனைத்துக் கட்சிகளும் உணர்ந்து செயல்பட்டபோது, காங்கிரஸ் கட்சி மட்டும் தமிழகத்தில் வறட்சி இருப்பதையே ஒப்புக் கொள்ளாதது போல அறிக்கைகளை விட்டுக் கொண்டிருந்தது. வறட்சிப் பகுதிகளைக் காண்பதற்குப் பிரதமரை நான் அழைத்ததுகூடத் தேவையற்றது என்றும் தமிழ்நாட்டில் பசுமைத் திட்டுக்கள் நிறைய இருக்கின்றன என்றும் அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திரு.சி.சுப்பிரமணியம் அவர்கள் அறிக்கைகள் விட்டுக் கொண்டிருந்தார்கள்.
நான் முதலில் குறிப்பிட்டவாறு டெல்லி வட்டாரக் காங்கிரசில் சந்திரசேகர். மோகன் தாரியா ஆகியோர் துவக்கி வைத்த சர்ச்சைகள் விரிவடைந்து காங்கிரஸ் கட்சி, பெரும் பிளவை எதிர்நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதற்கு மற்றொரு எடுத்துக் காட்டாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் இருந்து சி. சுப்பிரமணியம் ராஜினாமா செய்தார். 1969 மார்ச் 8-ஆம் நாள் அந்த ராஜினாமா, காரியக் கமிட்டிக்குச் சென்றது. பீகாரில் அப்போதே ஜனதா என்று ஒரு கட்சியிருந்தது.
அந்தக் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டு சேர்ந்ததை சி.சுப்பிரமணியம் எதிர்த்தார். அத்துடன் அந்த ஜனதாக் கட்சியைச் சேர்ந்த "ராம்கார் ராஜா" என்பவரை பீகார் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டதையும் அவர் கண்டித்தார். அதனாலேயே அவர் காரியக் கமிட்டியிலிருந்து ராஜினாமா செய்தார். பீகாரில் எடுக்கப்பட்ட முடிவுக்கு திரு. நிஜலிங்கப்பா பொறுப்பேற்றுக்கொண்ட போதிலும், சி.எஸ்., தனது ராஜினாமாவை திரும்பப் பெறவில்லை.
பிறகு பீகார் காங்கிரஸ் அமைச்சர வையிலிருந்து ராம்கார் ராஜாவை நீக்கிவிடுவதென காரியக்கமிட்டி முடிவு செய்தது. அதனையொட்டி சி. எஸ். அவர்கள் ராஜினாமாவை திரும்பப் பெற்றார். ஆனால் அந்த மந்திரி சபையில் ராம்கார் ராஜாவின் தம்பியும், ராஜாவின் தாயாரான ராஜமாதா சசாங்க மஞ்சரியும் இடம் பெற்றார்கள் என்பது கவனிக்கத்தக்க விவகாரமாகும்! காங்கிரசில் விரைவில் இருந்த வெடிப்புக்கு மேலும் அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கின!
காங்கிரஸ் இரண்டாகப் பிரியக் கூடிய அரசியல் நிகழ்ச்சிகள் இந்தியாவில் நடைபெற்றுக்கொண்டிருந்த போதுதான்-அமெரிக்க நாடு விண்வெளியில் மனிதர்களை ஏற்றிச் செல்லும் "அப்போலோ 9" என்ற ராக்கெட்டைப் பறக்கவிட்டது. 1969 மார்ச் 3-ஆம் நாள் விடப்பட்ட அந்த ராக்கெட்டில் மெக்ட்விட், சுவிக்கர்ட், ஸ்காட் என்ற மூன்று வானவெளி வீரர்கள் சென்றார்கள். இதுவரை விடப்பட்ட ராக்கெட்டுகளை விட அது வித்தியாசமானது. விண்ணில் குறிப்பிட்ட தொலைவு சென்றதும் ராக்கெட் இரு பகுதிகளாகப் பிரியும்.
பிரிந்த இரண்டு பகுதிகளும் தனித்தனியாக சில மணி நேரம் பூமியைச் சுற்றும். பின்னர் இரண்டும் ஒன்று சேரும். இந்தச் சோதனையின் மூலம் மனிதன் சந்திரனில் கால் வைத்துவிட்டுத் திரும்பவும் ராக்கெட்டில் வந்து இணைந்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கை விஞ்ஞானிகளுக்கு ஏற்பட்டது. அதன் அடுத்தடுத்த கட்டமாகவே மனிதன் சந்திர மண்டலத்திற்குச் சென்று திரும்பிய சாதனை நிகழ்ந்தது. அமெரிக்க ராக்கெட் இரண்டாகப் பிரிந்தது.
ஆறு மணி நேரத்தில் மீண்டும் ஒன்றாக வந்து இணைந்து பத்திரமாக பூமிக்குத் திரும்பியது. ஆனால் இரண்டாகப் பிரியக்கூடிய சூழ்நிலைக்கு உள்ளான இந்திய தேசீய காங்கிரஸ் ஒன்றாகக்கூடிய வாய்ப்பு பெறாதது மட்டுமல்ல; பிரிந்தவற்றில் ஒரு பகுதி பல்வேறு கட்சிகளாக உடைந்து சிதறிப்போயிற்று. ஆட்சிப் பொறுப்பில் இந்திராகாந்தி தலைமையில் இருந்த காங்கிரஸ் மட்டுமே அதிகாரச் செல்வாக்கின் காரணமாக தாக்குப் பிடிக்க முடிந்தது.
எந்தெந்த விபரங்களையெல்லாம் இனி வரும் பகுதிகளில் விரிவாக எழுதலாமென்றிருக்கிறேன். கடந்த அத்தியாயத்தில் எனக்கு நேர்ந்த விபத்துகள், சந்தித்த ஆபத்துகள் பற்றியெல்லாம் குறிப்பிட்டிருந்தேனல்லவா; அவற்றில் ஒன்றுதான் 1969 ஏப்ரல் ஏழாம் நாளன்று கோவை மாவட்டம் ஆப்பக்கூடலில் நடைபெற்ற நிகழ்ச்சியாகும். சக்தி சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் அமைத்திருந்த சாலையொன்றைத் திறப்பதற்காக விழாவை பொள்ளாச்சி மகாலிங்கம் ஏற்பாடு செய்திருந்தார்.
நிதி அமைச்சர் மதி அவர்களின் தலைமையில் நான் திறப்பு விழா நிகழ்த்திட அழைக்கப்பட்டிருந்தேன். அமைச்சர்கள் சாதிக் பாட்சா, மா. முத்துசாமி ஆகியோரும் வந்திருந்தனர். விழாக்கள் நடத்துவதில் வல்லவர் என்று பெயர் பெற்றவர் மகாலிங்கம்! ஆப்பக்கூடலில் பரந்த மைதானம் எதுவுமில்லாத காரணத்தால் வயல்களை ஒழுங்குபடுத்தி அங்கே மிகப் பிரமாண்ட கொட்டகை அமைத்திருந்தார். கொட்டகைக்கு நிறுத்தப்பட்டிருந்த தூண்கள், ஏதோ நிரந்தரமாக இருக்கப்போகிற மண்டபத்திற்கு அமைக்கப்பட்டதுபோல அவ்வளவு பருமனாகவும், வலிவு வாய்ந்தவைகளாகவும் இருந்தன.
மூவாயிரம் பேர் தாராளமாக உட்காரக்கூடிய கொட்டகை. அவ்வளவு பேருக்கும் நாற்காலிகள்! கொட்டகையே அப்படியென்றால் மேடையின் அழகைக் கேட்கவும் வேண்டுமா? விழாவுக்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் வந்திருந்தனர் பலரது கைகளில் குழந்தைகள் சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தன. ஜொலிக்கும் அணிமணிகளைப் பூட்டிக்கொண்டு அமர்ந்திருந்த தாய்மார்களுக்கு அடுத்த வரிசையில் ஆயிரக்கணக்கான ஆண்கள் வீற்றிருந்தனர். விழா நடந்த இடம் வயல்வெளி ஆனதால், எங்கள் கார்களைச் சற்றுத் தொலைவில் உள்ள சாலையில் நிறுத்திவிட்டு நடந்தே விழா மேடைக்குச் சென்றோம்.
வாசலில் யானைகள் அலங்காரமாக நிறுத்தப்பட்டு எங்களை வரவேற்று மாலையணிவித்தன. "ஏன்; இவ்வளவு ஆடம்பரமான விழா?" என்று நான் நண்பர் மகாலிங்கத்தைக் கேட்டுக்கொண்டே மேடைக்குச்சென்று அமர்ந்தேன். "சர்க்கரை ஆலைக்கு இது முக்கியமான சாலை! அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடத்தான்!"
என்று விளக்கமளித்தார். "ஏ, அப்பா! அதற்காக ஆயிரக்கால் மண்டபத்துத் தூண்களைப் போல இப்படி பந்தல் கால்களை நட வேண்டுமா?" என்று கேட்டேன். "வயல் மண் களி மண்ணாக இருப்பதால் கெட்டியான மரங்களை நட வேண்டியதாயிற்று" என்றார். பிறகு விழா ஆரம்பமாயிற்று. திரு. மகாலிங்கம் தனது வரவேற்புரையை ஆற்றி முடித்தார். விழாவுக்குத் தலைமை ஏற்றிருந்த மதி அவர்கள் பேசுவதற்கு முன்பே நான் சாலைத் திறப்பு விழாவை நடத்திவிட்டு இறுதியில் பேசுவதாக இருந்தேன்.
மதி பேசத் தொடங்கிய பொழுது இரவு ஏழு மணி! சிறு தூறல்கள்! பெருமழையொன்றும் வராது; அப்படியே வந்தாலும் கொட்டகையில் ஒரு துளியும் விழாது என்று மேடையிலிருந்தோர் கூறிக்கொண்டிருந்தனர். சிறிது நேரத்திற்கெல்லாம் மெல்லக் காற்று வீசியது. திடீரென அந்தக் காற்று சுழன்று சுழன்று அடிக்கத் தொடங்கியது. ஏதோ ஒன்று நிகழப்போகிறது என்ற சந்தேகம் என் உள்ளத்தில் பலமாக எழுந்தது. கல் மண்டபம் போல் கட்டப்பட்டிருந்த அந்தக் கொட்டகை அந்தக் காற்றில் மெல்ல அசைந்து கொடுத்தது.
கோபுரமொன்று நமக்கு அருகாமையில் இடிந்து விழுவதுபோல இடி முழக்கம். சுழற்காற்று மேலும் வலுப்பெற்று வீசியது. சிறிது நேரத்தில் காற்று நின்றுவிடும் என்ற தைரியத்தில்தான் அனைவரும் உட்கார்ந்திருந்தனர். ஆனால் கண்மூடிக் கண் திறப்பதற்குள் அந்தப் பேராபத்து நடந்துவிட்டது! காற்று தனது முழு ஆற்றலையும் கொண்டு சுழன்றடித்த வேகத்தில் கொட்டகை தடார் என விழுந்தது. அது விழுந்த வேகத்தில் ஒரு ஆயிரம் பேருடைய உயிரையாவது குடித்திருக்க வேண்டும்!
மின்னல் தாக்குதலினாலோ அல்லது எலக்ட்ரிஷியன், மெயின் போர்டை திடீரென வெட்டி விட்டதினாலேயோ மின் இணைப்புக் கம்பிகள் நல்லவேளையாக செயலற்றுப் போய்விட்டன. கொட்டகைக்குள்ளிருந்து ஆண்கள் பெண்கள் அலறல்! குழந்தைகளின் கதறல் ஒலி! மேடையில் இருந்த எங்களுக்கு என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. காரணம், எங்கள் மேடை மீதும் கொட்டகை விழுந்து கிடந்தது. சுமார் அரைமணி நேரம் பயங்கரமான சப்தங்கள்தான் கேட்டுக் கொண்டிருந்தன.
என்னை ஒருவர் தூக்கிக்கொண்டு, கொட்டகையின் கீற்றுக்களைப் பிரித்துக் கொண்டு அவற்றின் மேல் நடப்பது தெரிந்தது. ஈரோடு சின்னச்சாமிதான் அவர் என்பது அவரது குரலில் இருந்து புரிந்தது. அவருக்கும் வழி தெரியாமல் அந்த இருட்டில் இருவரும் சேர்ந்து ஒரு குழியில் விழுந்தோம். "அய்யோ மதி என்ன ஆனார்? சாதிக், முத்துசாமி எங்கே? ஆண்கள்,பெண்கள், குழந்தைகள் ஆயிரக்கணக்கில் கொட்டகைக்குள் சிக்கியிருப்பார்களே! அவர்களுக்கு உதவி செய்யுங்கள்!"
என்று தொண்டை வலிக்கக் கத்திக்கொண்டே இருந்தேன். அதற்குள் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார்களின் வெளிச்சம் விழா நடந்த கொட்டகையின் பக்கம் திருப்பப்பட்டது. கார்களில் இருந்த காரோட்டிகளும், பாதுகாப்புக்கு வந்த காவலர்களும், கழகத்தினரும் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்! மழையோ கொட்டிக்கொண்டிருக்கிறது! காற்று மட்டும் நின்றுவிட்டது! நான் உட்பட எல்லோருமே சிறு சிறு காயங்களுடன் தப்பிவிட்டோம்! அவ்வளவு பெரிய விபத்தில் ஒரு சிறு நகை நட்டுகூட யாருக்கும் காணாமற் போகாததும் பெரும் ஆச்சரியமாக இருந்தது.
என்னைக் காரில் கொண்டுபோய்ச் சேர்த்த சிறிது நேரத்திற்கெல்லாம் மற்ற அமைச்சர்களையும் கொண்டு வந்து சேர்த்தார்கள். அனைவருமே ஆபத்தின்றிப் பிழைத்து விட்டார்கள் என்ற போதிலும் நீண்ட நேரம் பொள்ளாச்சி மகாலிங்கத்தை மட்டும் காணவில்லை. இறுதியாக அவரையும் மேடையில் இருந்த ஒரு மேஜைக்கடியில் கண்டுபிடித்தார்கள். கிழிந்துபோன சட்டை வேட்டி காற்றில் பறந்துவிடவே ஒரு ஜட்டி மட்டும் இடையில்! இந்த நிலையில் தழுதழுத்த குரலில் என்னிடம் வந்து "இப்படியாகிவிட்டதற்கு மன்னித்துக் கொள்ளுங்கள்" என்றார்.
அவர் மிகவும் மனம் ஒடிந்து போயிருப்பதை உணர்ந்து அவரைத் தேற்றினோம். இருந்தாலும் எங்களுக்கிருந்த படபடப்பில் அன்று கோபியிலும், ஈரோடு நகரிலுமிருந்த பொதுக்கூட்டங்களை ரத்து செய்துவிட்டு, உடனடியாகச் சென்னை திரும்பினோம்! வீட்டிலேயே ஓய்வெடுத்துக் கொண்டு டாக்டர்களின் சிகிச்சையைப் பெற்றேன். சென்னைக்கு வந்திருந்த குடியரசுத் துணைத் தலைவர் வி. வி. கிரி அவர்கள் அந்த விபத்து பற்றிக் கேள்விப்பட்டு உடனடியாக வீட்டுக்கு வந்து விபத்தில் தப்பியது குறித்து மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்.
