உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/வண்டிப் பெரியார் நிகழ்ச்சி
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

வண்டிப் பெரியார் நிகழ்ச்சி · 151 / 391

வண்டிப் பெரியார் நிகழ்ச்சி அடக்குமுறைகள், சிறைச்சாலைகளை மட்டுமல்ல; எனது பொது வாழ்க்கையில் எத்தனையோவிதமான அராஜகங்களுக்கு ஈடுகொடுத்தும் விபத்துக்களைக் கடந்தும் தொடர்ந்து தொண்டாற்றிக் கொண்டிருக்கிறேன். அதில்தான் எனக்கு நிறைவான இன்பமுங் கூட! பச்சிளங் குழந்தையாகத் திருக்குவளை கிராமத்து வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோதே கள்வர்கள் நுழைந்து வீட்டில் இருந்த எல்லாப் பொருள்களையும் கொள்ளையடித்துக் கொண்டு போயினர்.

அப்போது நான் தற்செயலாக விழித்துக்கொண்டு அழுதிருந்தால்கூடத் திருடர்கள் என் நெஞ்சாங்குழியில் மிதித்துக் கொன்றுவிட்டுப் போயிருப்பார்கள். அப்பொழுதே அழுது தொலைத்திருக்கக் கூடாதா?" என்று இப்பொழுதுகூட சில நேரங்களில் நினைத்துப் பெருமூச்சு விடுவதுண்டு! இளம் பள்ளிப் பிள்ளையாகத் திருக்குவளைத் தெருத் திண்ணையில் பாடப்புத்தகம் படித்துக்கொண்டிருந்தபொழுது ஒரு கனமான கல் என் தலைக்குக் குறிபார்த்து வீசப்பட்டது.

ஒரு நூலிழையில் என் தலை உடைந்து சிதறாமல் எப்படியோ அப்போதும் பிழைத்துக் கொண்டேன். சிறுவனாக இருந்தபோது என் தாயாருடன் ஒரு திருமணத்திற்கு வண்டியொன்றில் சென்றேன். கச்சனம் என்ற ஊருக்கு அருகே ஒரு பள்ளத்தில் அந்த வண்டி தலைகீழாகக் குடை சாய்ந்தது. அம்மா என்னை இறுக அணைத்துக் கொண்டார்கள். அம்மாவுக்குத்தான் சிறு சிறு காயங்கள். அப்போதும் தப்பித்துக் கொண்டேன். திருவாரூர் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்போது, பிற்பகல் பள்ளிக்குச் செல்ல வெயிலை மறைக்கக் குடை பிடித்துக்கொண்டு போனபோது கோயில் காளை மிரண்டுபோய் என்னைத் துரத்திப் பாய்ந்து ஒரு பெரிய கல்லில் மோதிவிட்டுச் சென்றது.

குடைதான் அதன் கொம்புகளால் கிழிந்ததே தவிர என் குடல் கிழியவில்லை. அப்போதும் பிழைத்துக் கொண்டேன். திருவாரூரில் நடைபெற்ற நகராட்சித் தேர்தலில் மாணவனாக இருந்து கொண்டே நீதிக்கட்சி வேட்பாளர்களுக்குத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தேன் - பணியாற்றினேன் என்பதற்காகத் தோல்வி கண்டவர்கள் வெறி உணர்ச்சியுடன் என் கால் கைகளைத் துண்டாடிவிட முயன்றபோது நண்பர்கள் தந்த முன் எச்சரிக்கையின் காரணமாகக் கடைசி விநாடியில் அந்தக் கொலை வெறியர்களிடமிருந்து தப்பித்துக் கொண்டேன்.

திராவிடர் இயக்கக் கொள்கை விளக்க நாடகங்களை திருவாரூர், நாகை, விழுப்புரம் போன்ற இடங்களில் நடத்திவிட்டு புதுவையில் கெப்ளே தியேட்டரில் தொடர்ந்து ஒரு மாதம் நடத்தி இயக்க உணர்ச்சியை உருவாக்கியதற்காகவும், புதுவையில் திராவிடர் கழக மாநாட்டை நடத்துவதில் முனைப்பாக இருந்தமைக்காகவும் புரட்சிக் கவிஞருடனும், காஞ்சி கல்யாணசுந்தரம் அவர்களுடனும் சென்ற என்னையும் அவர்களையும் எதிரிகள் தாக்கினர். நாங்கள் சிதறியோடிய நிலையில் என்னை அடித்துப்போட்டவர்கள் நான் இறந்துவிட்டதாகவே கருதிச் சென்று விட்டனர்.

நீண்ட நேரத்திற்குப் பிறகு மூச்சை தெளிந்து எழுந்து பெரியார் கரங்களால் காயங்களுக்கு மருந்து தடவப்பட்டது. அந்தக் கொலைச் சதியிலும் தம்பித்துக் கொண்டேன். விழுப்புரத்திற்கு அருகாமையில் நானும், உடுமலை நாராயணக் கவிராயரின் மாணவர் செல்லமுத்தும் சென்ற கார், வண்டியொன்றில் மோதி - அந்தப் பயங்கர விபத்திலும் சொற்ப காயங்களுடன் தப்பித்துப் பிழைத்தேன். முகவை மாவட்டத்தில் திருப்பத்தூருக்கருகில் நான், அன்பில், பராங்குசம், பண்ணை முத்துகிருஷ்ணன், தென்னன் ஆகியோர் சென்ற கார், மிகப் பயங்கரமான விபத்துக்கு உள்ளாகி - சாலையிலிருந்து உருண்டு சென்று பயணியர் விடுதி வாசற் கதவை நொறுக்கிவிட்டுக் கவிழ்ந்து கிடந்தது.

அப்போது தான் ஒரு கண்ணில் மட்டும் அடிபட்டு உயிர் பிழைத்தேன். ஒருமுறை கோவையிலிருந்து புஞ்சைப்புளியம்பட்டிக் கூட்டத்திற்குச் செல்லும்போது காங்க்ரீட்டால் ஆன மின்சாரக் கம்பங்களை ஏற்றிச் சென்ற வண்டியொன்று எங்கள் காரின் முன் பகுதியில் மோதி - காரின் முகப்பு நொறுங்கிப் போயிற்று! முன் இருக்கையில் அமர்ந்திருந்த எனக்கும் என்னுடன் இருந்த கோவை மாவட்டக் கழக முன்னோடிகளுக்கும் ஆபத்து ஏதுமின்றித் தப்பிப் பிழைத்தோம்.

அன்பில் கிராமத்துக்கருகே கூட்டமொன்றை முடித்து விட்டுக் கொள்ளிடம் ஆற்றில் இறங்கிக் குறுக்கே வரும்போது-திடீரென வெள்ளம் கரைபுரளத் தொடங்கியது! மேலே மழை கொட்டுகிறது! நான், மாறன், அன்பில், பராங்குசம், குளித்தலை முத்துகிருஷ்ணன், பண்ணை முத்துக்கிருஷ்னன், கோவிலடி ரத்தினம் - அந்தக் கழுத்தளவு வெள்ளத்தில் நள்ளிரவில் எப்படித்தான் உயிர் பிழைத்தோம் என்பதை இன்னமும் வியப்புடன்தான் எண்ணிட இயலுகிறது!

கல்லக்குடி தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்தபோது, திடீரெனப் புகை கக்கியவாறு பெரும் கூச்சலுடன் ரயிலின் சக்கரங்கள் என் கழுத்துக்கு அருகாமை வரையில் வந்து பயமுறுத்தின! நான், முல்லை சக்தி, கஸ்தூரிராஜ், குமாரவேல், குழந்தைவேல்-கல்லக்குடிப் போராட்டத்திற்குப் பிறகு என்னைத் தவிர மற்ற நான்கு நண்பர்களும் ஒருவர்பின் ஒருவராக சில ஆண்டுகளில் இறந்து விட்டார்கள். அதிலும் நான் ஒருவன்தான் வயது அறுபதைத்தாண்டி விட்டேன் எனக் கூறிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

1965-ல் பாளையங்கோட்டைத் தனிமைச் சிறைச்சாலைக்குச் சென்னையிலிருந்து நானூறு மைல் தொலைவு போலீஸ் லாரியில் கொண்டு சென்ற போது மதுரைக்கருகே நெஞ்சுவலியால் பாளைச் சிறையில் துவண்டு விழுந்தபோதும் - தொடர்ந்து பாளைச் சிறையில் தனிமையில் வதைக்கப்பட்டபோதும் - அந்த மனச்சுமைகூட என்னை மரண வாயிலுக்கு அழைத்துச் செல்லாமல் உயிர் பிழைத்து உலவலானேன்! 1967 பொதுத்தேர்தலின்போது சைதாப்பேட்டைத் தொகுதி வேட்பாளர் என்கின்ற முறையில் நானும்,காஞ்சி மணி மொழியார், வெங்கிடங்கால் சந்தானம், வாழக்கரை இராச கோபால் ஆகியோரும் கோட்டூர்புரம் சென்றபோது அந்த நள்ளிரவில் எங்கள் காரை மடக்கி நாலாப்புறமும் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கிய பொழுது நான் மட்டும் எதிரிகளால் குறி பார்க்கப்பட்டு இரவு முழுதும் சாரங்கன் என்ற குடிசைவாழ் தோழனின் பாதுகாப்பில் இருந்து உயிர் பிழைத்தேன்.

பொதுப்பணி அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தபோது தஞ்சைக் கவியரங்கத்திற்காகக் காரில் சென்ற நேரத்தில் திண்டிவனத்திற்கருகே நடைபெற்ற விபத்து சாதாரணமானதா? கார், கோழிமுட்டையின் ஓடுபோல் சிதறிவிட்டது! மதுரை முத்து, பொன்னிவளவன், கருணானந்தம் ஆகியோர் காயமின்றித் தப்பினர். பாண்டி என்ற காரோட்டிய நண்பரின் கால் முறிந்தது! ஏற்கனவே திருப்பத்தூர் விபத்தில் அடிபட்டிருந்த அதே கண்ணில் மீண்டும் அடி! மயக்கமுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

அந்தப் பெரும் விபத்திலும் பிழைத்துக் கொண்டேன் இவற்றையெல்லாம் முதல் பாகத்தில் குறிப்பிட்டிருக்கிறேன் என்றாலும்; இன்னும் விடுபட்டிருப்பவை ஏராளம்! கேரள-தமிழக எல்லையில் வண்டிப் பெரியார் எனும் ஒரு ஊர்! கேரளப் பகுதி! கம்பம் பள்ளத்தாக்கைத் தாண்டிச் செல்லவேண்டும்! 1961 ஜனவரி நாலாம் தேதி - குளித்தலைத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக நான் வெற்றி பெற்றிருந்த காலம்! வண்டி பெரியாரில் ஒரு சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்!

நான் சென்னையிலிருந்து திருச்சி சென்று மதுரை வழியாக வண்டிப் பெரியார் போவதாகத திட்டம்! மன்னை, அன்பில் என்னுடன் வந்தனர்! மாயூரம் காந்தி என்று ஒரு நண்பர்! என் வாழ்விலும், தாழ்விலும், என்றென்றும் என்னிடம் உயிரை வைத்திருந்த தோழர்! அண்மையில்தான் காலமானார்! அவரும் அப்போது எங்களுடன் வண்டிப் பெரியாருக்கு வந்தார்! இலட்சிய நடிகர் என்று என்னால் அன்புடன் அழைக்கப்பட்ட எஸ். எஸ். இராஜேந்திரனும், மறைந்த மாவீரன் ராஜாங்கமும் எங்களுடன் வந்தனர்.

மதுரை மாவட்டமானாலும் அல்லது அதனைக் கடந்து எங்கு சென்றாலும் என்னுடன் இணைந்து பயணம் செய்யக்கூடிய மதுரை முத்துவும் என் காரிலே வந்தார். மாலை ஏழு மணிக்கு ஒரு மண்டபத்தில் வண்டிப் பெரியாரில் கூட்டம் தொடங்கியது. ஏதோ கலவரத்தை எதிர்பார்ப்பதைப் போலக் கேரளப் போலீசார் சூழ்ந்திருந்தனர். சில்வர்ஸ்டர் என்ற நண்பர் முதலில் எங்களை வரவேற்றுப் பேசினார். விறுவிறுப்பும் வேகமும் நிறைந்த பேச்சு! மலையாள மொழியில் கர்ச்சித்தார்!

அந்தக் கர்ச்சனையினூடே கேரளத்துப் போலீஸ் அமைச்சர் சாக்கோ என்பவரைக் கடுமையாகத் தாக்கிப் பேசிவிட்டார்! அவ்வளவுதான்; அடுத்த விநாடியே பாதுகாப்புக்கு இருந்த அனைத்துப் போலீசாரும் வெளியேறிவிட்டனர்! ஒரே கூச்சல்! மேடையை நோக்கிப் பாய்ச்சல்! மின் விளக்குகளின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுவிட்டன! இருளில் திசை தெரியாமல் தடுமாறினோம்! நாற்காலிகள் பறக்கும் ஒலி கேட்கிறது! என்னை; அன்பில், மன்னை, மதுரை முத்து, மாயூரம் காந்தி ஆகியோர் சூழ்ந்துகொண்டு வெளியே கொண்டு வந்தனர்.

நண்பர்கள் எஸ். எஸ். ஆர்., ராஜாங்கம் இருவரும் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. வெளியே வந்த எங்களைக் கலவரக் கும்பல் வளைத்துக்கொண்டு வெறிக்கூச்சல் போட்டது! அந்தக் கும்பலிலேயே நல்ல குணம் படைத்த ஓரிருவர் இருந்தனர்! அவர்கள் எங்களை, எங்களது காரிலே ஏற்றி "தமிழ்நாட்டுக்குத் திரும்பிப் போங்கள்!"

என்று கூறினர். எங்கள் கார் அங்கிருந்து புறப்பட்டு சிறிது தொலைவு சென்றதும் - ராஜாங்கம், ராஜேந்திரன் இருவரும் வரவில்லையே; அவர்களை விட்டுவிட்டு நாம் மாத்திரம் எப்படிச் செல்வது என்று மீண்டும் காரை வண்டிப் பெரியாருக்குத் திருப்பச் சொன்னோம். "போனவர்கள் ஏன் திரும்பி வந்தீர்கள்?"

என்று கலவரக்காரர்கள் எங்களைக் சூழ்ந்து கொண்டு காரைவிட்டு இறக்கினார்கள்! போலீசார் "ஏன்" என்றே கேட்கவில்லை! மன்னை; அன்பில், மதுரை முத்து, மாயூரம் காந்தி உடலால் மட்டுமல்ல! உள்ளத்தாலும் உறுதி படைத்தவர்கள்! இருந்தாலும் ஐநூறு கலகக்காரர்களிடம் என்ன செய்ய முடியும்? ஏதாவது முரட்டுத்தனமாக அவர்கள் பேசியிருந்தால்கூட அந்த இடத்தில் சில தலைகள் உருண்டிருக்கும்! ரத்த வெள்ளம் பெருகியிருக்கும்! எஸ். எஸ் ஆர்., ராஜாங்கம் இருவரையும் காணவில்லையே என்ற கவலை!

பரபரப்பு! அத்துடன் என்னை அந்தச் சாலையில் இங்குமங்குமாக இழுத்துச் கொண்டு கலகக்காரர்கள் நடக்கிறார்கள்! இரவு எட்டு அல்லது ஒன்பது மணியிலிருந்து இரவு இரண்டு மணி வரையில் நான் அந்த நீண்ட சாலையில் இங்கு மங்கும் இழுத்துச் செல்லப்படுகிறேன். என்னைப் பாதுகாக்க அன்பிலும், மதுரை முத்துவும், மன்னையும், மாயூரம் காந்தியும் என்னருகே வந்து கொண்டேயிருக்கிறார்கள்! அவர்கள் கண்களில் நெருப்பு! அதே சமயம் நீர்த்திவலைகள்!

கலகக்காரர்கள் என்னிருக் கரங்களையும் பற்றி இழுத்தவாறு இங்குமங்கும் ஓய்வின்றி அலைக்கழித்து நடந்து கொண்டேயிருக்கிறார்கள்! எங்களுக்கு நடைபெறும் அந்தத் "தண்டனை பவனி" வண்டிப் பெரியார் போலீஸ் ஸ்டேஷன் வழியாகவும் அடிக்கடி போகிறது, வருகிறது! போலீசார் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் நண்பர் மதுரை முத்துவுக்குப் பொறுக்க முடியவில்லை! போலீஸ் ஸ்டேஷன் அருகே என்னைக் கலகக்காரர்கள் இழுத்துக் கொண்டு போனபோது, முத்து; அந்தப் போலீஸ்காரர்களைப் பார்த்து "அடப்பாவிகளே!

இந்தக் கொடுமையை வேடிக்கை பார்க்கிறீர்களே! நியாயந்தானா?" என்று கதறியே விட்டார். அன்பில், ஒரு குச்சியை எடுத்து வீசியே பத்து பேரை வீழ்த்துவார்! மன்னையும் சிலம்பம் தெரிந்தவர்; அப்போது மலைபோல் உடல் படைத்தவர்! மாயூரம் காந்தியோ மதயானைக்கு ஒப்பானவர்! மதுரை முத்து உடலெங்கும் விழுப்புண் பெற்றவர்! அந்த நால்வரும் அங்கு சற்று நிதானம் காட்டிய காரணத்தால்தான் அந்த இடம் கொலைக்களம் ஆகாமல் இருந்தது! முத்துவின் முறையீட்டைப் போலீசார் காதில் போட்டுக் கொள்ளாமலே கேலியாகச் சிரித்தனர்!

கலகக்காரக் கூட்டம், அடிக்கடி மதுக்கடைகளுக்குள் நுழைந்து வயிற்றை நிரப்பிக் கொண்டு போதையில் தள்ளாடத் தொடங்கியது. திடீரென்று "ஆ! அய்யோ!" என்ற அலறல்! "கொலை! கொலை!" என்ற கூச்சல்! போதை தலைக்கேறி கலகக்காரர்களே ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டனர்! வெட்டிக் கொண்டனர்! அந்தச் சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு நாங்கள் ஐவரும் காரில் ஏறிப் பறந்து விட்டோம்! நண்பர்கள் எஸ். எஸ். ஆரும், ராஜாங்கமும் கலவர ஆரம்பத்திலேயே மலையில் குறுக்கு வழியாகக் கூடலூர் பக்கம் போய் விட்டார்கள் என்ற செய்தி எங்களுக்குக் கிடைத்த காரணத்தால், விடியற்காலை அளவில் கூடலூர் போய்ச் சேர்ந்து அவர்களையும் சந்தித்து ஆறுதல் அடைந்தோம்.

இப்படி ஒரு காட்டுமிராண்டித்தனமான கலவரத்திலிருந்து அன்றைக்குத் தப்பித்த நான் அதனைப் போன்றதொரு மாபெரும் விபத்திலே சிக்கிக் கொள்ள நேர்ந்தது முதலமைச்சர் பொறுப்பையேற்ற சில நாட்களுக்குள்ளாக!