நெஞ்சுக்கு நீதி
முதல் குரலும் - முதல் பிளவும் · 150 / 391
முதல் குரலும் - முதல் பிளவும் மு தலமைச்சராகப் பொறுப்பேற்று பிரதமரையும் மத்திய அமைச்சர்களையும் டெல்லியில் சந்தித்துப் பேசுவதற்காக முதல் தடவை சென்ற போதே தொழில் அமைச்சர் மாதவன் அவர்களைத்தான் நான் என்னுடன் அழைத்துச் சென்றேன். நல்ல நண்பர்களில் ஒருவராகவும் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராகவும் நான் அவரை ஏற்று அவருடன் நெருக்கமாகவே பழகி வந்தேன். கட்சியில் இருந்த மூத்த தலைவர்கள், மூத்த அமைச்சர்கள் சிலருக்குக்கூட நான் இப்படி ஓரிரு அமைச்சர்களுடன் நெருக்கமாக இருப்பது வெறுப்புக்குரிய விஷயமாக இருந்தது என்பதை நான் அறிந்திருந்தும் அதைப் பொருட்படுத்தாமலே இருந்து விட்டேன்.
அந்த அலட்சியப் போக்கினால் பிறகு நான் எவ்வாறெல்லாம் அல்லற்பட நேர்ந்தது என்பதை எண்ணிடும் போதுதான் என் தவறு என் நெஞ்சைக் குடைந்தது. அந்த அதிர்ச்சி நிகழ்ச்சிகளையெல்லாம் இந்த இரண்டாம் பாகத்தில் அவ்வப்போது உரிய அத்தியாயங்களில் நான் எழுத இருக்கிறேன் என்பதற்குப் பீடிகைதான் இது! நானும் மாதவனும் 17-3-69 காலை 11-30 மணி அளவில் விமான மூலம் டெல்லி போய்ச் சேர்ந்தோம். விமான நிலையத்தில் நாடாளுமன்ற தி.மு.க.
குழுத்தலைவர் பேராசிரியர், துணைத் தலைவர் நாஞ்சிலார், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், டெல்லியில் உள்ள தமிழ்க் குடும்பங்களைச் சார்ந்தோர் அனைவரும் வந்திருந்து மகிழ்ச்சி குலுங்க வரவேற்றார்கள். விமான நிலையத்திலிருந்து டெல்லியில் உள்ள தமிழ்நாடு மாளிகை வரையில் முத்தமிழ் மன்றத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருபதுக்கு மேற்பட்டோர் மோட்டார் சைக்கிளில் அணிவகுத்து, நான் மறுத்தும் கேட்காமல் ஊர்வலமாகவே அழைத்துச் சென்றனர்.
டெல்லியில் பல்வேறு மாநில அரசுகளுக்கு தனி மாளிகைகள் இருப்பதுபோலவே தமிழ்நாட்டிற்கும் ஒரு மாளிகை, காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலே கட்டப்பட்டிருந்தது. பின்னர் அந்த மாளிகை இடம் போதாத நிலையில் இருப்பதை உணர்ந்து கழக ஆட்சியில் அதையொட்டினாற்போல பெரிய கட்டிடம் ஒன்று எழுப்பப்பட்டு, வாயிற்புறத்து முகப்பில் வள்ளுவர் சிலையும், உள்ளே அண்ணா சிலையும் திறந்து வைக்கப்பட்டது. நாங்கள் சென்று தங்கியது பழைய தமிழ்நாடு மாளிகை என்றாலும் கூட அங்கிருந்த அலுவலர்கள் அனைவரும் மிக்க பூரிப்புடன் எங்களை வரவேற்று உபசரித்தனர்.
அன்று அவர்களும், அதிகாரிகள் சிலரும் எடுத்துக் கூறிய கோரிக்கையின் அடிப்படையில்தான் தமிழ்நாடு மாளிகை பெரிய அளவில் எழில் வடிவத்துடன் எழுப்புவதற்கான கருத்தினை நான் தெரிவித்தேன். அந்த விரிவாக்கக் கட்டிடத்தில் திராவிடக் கலாச்சாரச் சாயலும், தமிழ்நாட்டு சிற்பக் கலை அழகும் மிளிர்ந்திட வேண்டுமென்றும் கூறினேன். ஐந்தாறு ஆண்டுகளில் அந்த ஆசை நிறைவேறியதின் சாட்சியமாகத்தான் டெல்லிப் பட்டிணத்தில் தமிழ்நாடு மாளிகை, இன்று காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
டெல்லியில் பிரதமரைச் சந்தித்து நாற்பது நிமிடங்கள் உரையாடினேன். உற்சாகமூட்டுமளவுக்கு அவர்கள் தந்த வரவேற்பு அமைந்தது. மத்திய அரசின் ஒத்துழைப்பு மாநில அரசுக்குத் தாராளமாக இருக்குமென்று பிரதமர் உறுதியளித்தார். தமிழ்நாட்டின் வறட்சி நிலவரங் குறித்து ஆய்வு செய்திட வெகு விரைவில் மத்திய அரசின் அதிகாரிகள் குழுவொன்றை அனுப்பி வைப்பதாகவும், விரைவில் ஏப்ரல் திங்களுக்குள்ளாக வறட்சிப் பகுதிகளைக் காணத் தமிழகம் வருவதாகவும் கூறினார்.
பிரதமருடனும் மத்திய அமைச்சர்கள் சிலருடனும் நான் பேச்சுவார்த்தைகள் நடத்தி தமிழ்நாட்டின் உடனடித் தேவைகளை வலியுறுத்தியபோது என்னுடன் அமைச்சர் மாதவனும், நாடாளுமன்ற கழகக் குழுத் துணைத் தலைவர் நாஞ்சிலாரும், ஜி. விசுவநாதன் எம். பி. யும் இருந்தனர். வெளி விவகாரத் துறை அமைச்சர் தினேஷ் சிங், மத்திய உள்துறை அமைச்சர் சவான், விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் கரன்சிங், தொழில் அமைச்சர் பக்ருதீன் அலி அகமது, வெளிநாட்டு வாணிபத் துறை அமைச்சர் பகத் ஆகியோரைச் சந்தித்து தமிழக வளர்ச்சிக்கான திட்டங்களை விவாதித்தேன்.
மத்திய உணவு அமைச்சர் பாபு ஜெகஜீவன்ராம் என்னைக் கண்டவுடன் கட்டித் தழுவி வரவேற்று மாநிலப் பிரச்சினைகளைக் கவனமுடன் கேட்டறிந்ததுடன், உடனடியாக பத்தாயிரம் டன் அரிசி தமிழ்நாட்டிற்கு முதல் தவணையாக அனுப்புவதற்கு ஆணை பிறப்பிப்பதாக அறிவித்தார். மேலும் மூன்று சர்க்கரை ஆலைகளைத் தமிழகத்தில் ஆரம்பித்திடவும் ஒப்புதல் அளித்தார். மத்திய அரசில் பிரதமரையும், மற்ற மத்திய அமைச்சர்களையும் சந்தித்ததற்கு நேர்மாறாக இருந்தது துணைப் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாயுடன் எங்களது சந்திப்பு!
அவரைச் சந்திக்க குறித்த நேரத்தில் செல்லவேண்டுமென்றுதான் நானும் மாதவனும் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி மாறனும் தமிழ்நாடு மாளிகையிலிருந்து காரில் புறப்பட்டுச் சென்றோம். ஆனால் எதிர்பாராத விதமாக வழியில் போக்குவரத்து இடைஞ்சலினால் ஒரு ஐந்து நிமிடம் தாமதமாக மொரார்ஜியின் இல்லத்திற்குச் சென்றோம். எள்ளும் கொள்ளும் முகத்தில் வெடித்திட எங்களை மொரார்ஜிதேசாய் வரவேற்றது ஒரு மாநில அரசை மத்திய அரசில் உள்ளவர்கள் சிலர் எவ்வாறு மதிக்கிறார்கள் என்பதற்குச் சான்றாக விளங்கியது.
வகுப்புக்குச் சற்றுத் தாமதமாக வந்துவிட்ட மாணவனை ஆசிரியர் வெறித்துப் பார்த்துக் கடுமொழி கூறுவதுண்டல்லவா; அவ்வாறே அன்றைக்குத் தேசாய் நடந்து கொண்டார். "உங்களுக்காக எவ்வளவு நேரம் காத்திருப்பது? எனக்கு வேறு வேலை இல்லையா?" என்று கேட்டுக்கொண்டே உட்காரச் சொன்னார். முள்ளின் மீது அமர்வதுபோல அவர் எதிரேயுள்ள நாற்காலியில் அமர்ந்தேன். தமிழ்நாட்டு வறட்சி நிலையை எடுத்துக் கூறி ஐந்து கோடி ரூபாய் முதல் தவணையாக உதவிட வேண்டுமென்று அவரிடம் கேட்டேன்.
நாங்கள் டெல்லிக்குப் பயணமாக சென்னை விமான நிலையம் சென்றிருந்த போதே, இந்திய கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் எம்.கல்யாணசுந்தரனார் அவர்கள் சென்னை விமான நிலையத்திற்கு அவசரமாக வந்து எங்களைச் சந்தித்து முதல் தவணையாக ஐந்து கோடி ரூபாய்க்குக் குறையாமல் கேளுங்கள் என்று கூறிவிட்டுச் சென்றிருந்தார். "ஐந்து கோடி" என்று நாங்கள் கேட்டதும் தேசாயின் முகம் சிவந்தது.
"என் தோட்டத்தில் பணம் காய்க்கும் மரம் இல்லை" என்று அவரிடமிருந்து பதில் வந்தது. "பணம் காய்க்கிற மரமே இல்லையே - இல்லாதது எப்படி உங்கள் தோட்டத்தில் இருக்கும்?" என்று நானும் உடனடியாக அவருக்குப் பதில் கூறிவிட்டு, சில விநாடிகளில் அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டு விட்டோம். ஒரு நாட்டின் துணைப் பிரதமர் பொறுப்பையும், நிதி அமைச்சர் பொறுப்பையும் ஏற்றிருந்த ஒருவர், ஒரு மாநிலத்தின் முதலமைச்சரிடம் நடந்துகொண்ட முறை எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
மத்திய அரசில் பதவி வகிப்போர் "ஆண்டான்" நிலையிலும், மாநில அரசுகளில் பதவி வகிப்போர் "அடிமைகள்" நிலையிலும் இருப்பது என்ற அந்தத் தோற்றமே தகர்க்கப்பட வேண்டுமென்பதுதான் கழகத்தின் கருத்து. அந்தக் கருத்துக்குச் சொந்தக்காரர்களாகிய நாங்கள் அன்றைக்குத் தேசாய் அவர்களிடம் பெற்ற அனுபவத்தால் மேலும் எங்கள் கருத்துக்கு வலுவூட்டிக் கொண்டோம். அன்றைய சந்திப்பில் மொரார்ஜி அவர்கள் அப்படிக் கண்டிப்பாக நடந்து கொண்ட போதிலும், அன்றிரவு எனக்கு நாடாளுமன்ற கழக உறுப்பினர்கள் சார்பில் அளிக்கப்பட்ட விருந்துக்கு வந்திருந்து, என்னிடம் மிகக் கனிவுடன் பேசிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த விருந்தில் உள்துறை அமைச்சர் சவான், பாதுகாப்பு அமைச்சர் சுவரண்சிங் அவைத் தலைவர் சஞ்சீவ ரெட்டி, டாக்டர் திரிகுணசென் முதலியோரும் கலந்து கொண்டனர். டெல்லித் தமிழ்நாடு மாளிகையில் நிருபர்களின் மாநாடொன்றில் பலதரப்பட்ட கேள்விகளுக்கு நான் பதில் அளித்தேன். அவற்றில் முக்கியமானது மத்திய மாநில உறவுகளைப் பற்றியதாகும். மாநில சுயாட்சிக் கொள்கைக்கு ஆக்கபூர்வமான முயற்சிகளைத் தமிழ்நாட்டில் கழக ஆட்சி தொடங்கிடும் என்ற கருத்தை முதன் முதலில் அந்த நிருபர்களின் கூட்டத்தில் தான் வெளியிட்டேன்.
"மத்திய மாநில உறவு குறித்து விவாதிக்க பிரதமர், மாநில முதலமைச்சர்களின் கூட்டம் ஒன்றைக் கூட்ட வேண்டும்" என்று காமராஜர் அவர்கள் அப்போது அறிவித்திருந்த கருத்து பற்றி நிருபர்கள் என்னிடம் அபிப்பிராயம் கேட்டார்கள். "அதைப்பற்றி காமராஜர் அவர்கள்தான் விளக்க வேண்டும். அப்படியொரு கருத்தை வெளியிட்டதற்கான காரணத்தை அவரிடம்தான் கேட்க வேண்டும். இதுபற்றித் தி. மு. கழகத் தரப்பில் தூண்டுதல் எதுவும் கிடையாது.
காமராஜர் இப்போது மத்திய அரசின் ஆளுங் கட்சித் தலைவர்களில் ஒருவர். அவரது அறிவிப்பு குறித்து மத்திய அரசின் மற்ற தலைவர்களின் கருத்தை அறிய நாங்கள் ஆவலாக இருக்கிறோம்" என்று விடையளித்தேன். "மாநில சுயாட்சி, மாநில அதிகாரங்கள் போன்ற பிரச்சினைகளை எழுப்புவது மூலம் பிரிவினைக் கோரிக்கையை மீண்டும் கிளப்பிடக் கழகம் முயற்சி செய்கிறது என்று சி. சுப்பிரமணியம் கூறியிருக்கிறாரே!"
என்று நிருபர்கள் கேட்டதற்கு நான் "காமராஜர் அவர்களே மத்திய மாநில உறவுகள் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும்" என்று தெளிவுபடுத்தியிருப்பதைச் சுட்டிக் காட்டினேன். மத்திய மாநில அரசுகளுக்கிடையே புதிய உறவு முறைகளை வகுத்திட மாநில அரசுகள் -குறிப்பாக காங்கிரசல்லாத மாநில அரசுகள் ஒன்று சேர்ந்து விவாதிக்க வேண்டுமென்று மேற்கு வங்க முதலமைச்சர் அஜாய் முகர்ஜி கூறியிருந்த கருத்தையும் நிருபர்கள் கூட்டத்தில் நான் வரவேற்றேன்.
"மாநில அரசுகளுக்கு மத்திய அரசு, அதிக அதிகாரம் கொடுக்க வேண்டும். மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் நல்லுறவு வளர அதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டியது அவசியம். மத்திய அரசிடம் அதிகாரங்கள் குவிந்து கிடக்கின்றன. அவற்றை மாநில அரசுக்குப் பகிர்ந்து கொடுத்தால், மத்திய அரசின் சுமை குறையும். மாநிலத்திற்கு அதிக அதிகாரங்கள் கிடைக்க அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறோம்.
எந்தெந்த அதிகாரங்களை மாநிலங்களுக்குத் தரலாமென்று ஆலோசித்துப் பரிந்துரைக்கும் அறிக்கை தந்திட கல்வி நிபுணர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், சட்ட நிபுணர்கள் கொண்ட குழு ஒன்றை அமைப்பதென்று தமிழகத்தில் கழக அரசு முடிவு செய்துள்ளது. அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டுமென்று நாங்கள் வலியுறுத்தும் போது இந்திய ஒருமைப்பாடும் ஒற்றுமையும் பலமாக இருக்க வேண்டுமென்பதையும் கருத்தில் கொண்டுதான் சொல்கிறோம்.
அதிக அதிகாரங்களை மாநிலங்களுக்கு அளிப்பதால் ஒற்றுமை பாதிக்கப்பட்டு விடாது. நட்பு முறையிலேயே இந்தப் பிரச்சினை தீர்வதையே நான் பெரிதும் விரும்புகிறேன்". டெல்லி நிருபர்கள் கூட்டத்தில் வெளியிடப்பட்ட இந்தக் கருத்துத்தான் ராஜமன்னார் குழுவாக அரும்பி, மாநில சுயாட்சித் தீர்மானமாகச் சட்டப் பேரவையில் மலர்ந்தது என்பதை நினைவூட்டுகிறேன். அதே கூட்டத்தில் மொழிப் பிரச்சினை குறித்தும் கேள்விகள் எழுந்தன.
இந்தித் திணிப்பைத் தி. மு. கழகம் எதிர்க்கிறது என்பதை உறுதியாக அறிவித்தேன். தமிழ்நாட்டுத் தேவைகளை மத்திய அரசில் உள்ளவர்களிடம் எடுத்துரைத்து உதவிகளைப் பெறச் சென்ற நேரத்தில்-நிருபர்கள் மாநாட்டில் கழகத்தின் மொழி, அரசியல் ஆகிய கொள்கைகளை அழுத்தம் திருத்தமாகக் கூறியதால் விளைவுகள் விபரீதமாகுமோ எனச் சிலர் அஞ்சினர். அரசியல் தெளிவு படைத்தவர்கள் அனைவரும், கழகத்தின் குழப்பமற்ற உறுதியான கொள்கைப் பிடிப்பைப் பாராட்டவே செய்தனர்.
நான் டெல்லி சென்றிருந்தபோது, காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கீறல்கள் விழுந்து-பிளவுகள் தோன்றத் தொடங்கியிருந்தன. கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர் பூபேஷ் குப்தா அவர்கள் மொரார்ஜி தேசாய் மீது ராஜ்ய சபையில் ஒரு குற்றச்சாட்டைக் கூறினார். அதைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் கட்சி ராஜ்ய சபா உறுப்பினர் சந்திரசேகர் அவர்கள் பின்வருமாறு மொரார்ஜி தேசாயின் மீது குற்றச் சாட்டுகளை அடுக்கினார். கடந்த ஆண்டு மத்திய அரசின் பட்ஜெட்டுக்குப் பின் நிதியமைச்சர் மொரார்ஜி தேசாய் சில சலுகைகளை அறிவித்தார்.
அதனால் பிர்லாவின் அலுமினியக் கம்பெனிக்கு ஒன்றேகால் கோடி ரூபாய்க்கு மேல் ஆதாயம் கிடைத்தது. இது தற்செயலாக நடந்தது அல்ல. தேசாயின் மருமகளும், இரு மைனர் குழந்தைகளும் பம்பாய் ஜெனரல் கம்பெனியில் பங்குதாரர்களாய் இருக்கின்றனர் என்பதும், இந்தக் கம்பெனியின் பங்குகளை பிர்லாவின் வேறு இரு கம்பெனிகள் இயக்கி வருகின்றன என்பதும் பூபேஷ் குப்தா கூறியுள்ள புகாராகும். அந்தப் புகாருக்கு மொரார்ஜி தேசாய் பதில் அளிக்கத் தவறி விட்டார்.
மொரார்ஜி தேசாய் தனது சொந்தக் கணக்கிலிருந்து ஐம்பத்தாறாயிர ரூபாயும், தனது கல்வி அறக்கட்டளையிலிருந்து எண்பத்தாறாயிர ரூபாயும் பிர்லாக் கம்பெனி ஒன்றின் ஏஜன்சி நிறுவனமான "பம்பாய் இண்டஸ் டிரியல் அண்ட் கெமிக்கல் கம்பெனி"க்குத் தந்துள்ளார். பிர்லாவின் இந்தியன் அலுமினியக் கம்பெனி அமெரிக்க நிறுவனம் ஒன்றிடமிருந்து முப்பது கோடி டாலர் பெற முதலில் ஒரு கமிட்டி அனுமதி தந்தது. பின்னர் கம்பெனி விவகார அமைச்சு ஆட்சேபணை கிளப்பியதும் அந்த அனுமதி நிராகரிக்கப்பட்டது.
இதுதான் துணைப் பிரதமராகவும், நிதியமைச்சராகவும் உள்ள ஒருவர் இயங்கவேண்டிய முறையா?" இவ்வாறு தனது சொந்தக் கருத்து என்ற முறையில் காங்கிரசின் இளந் துருக்கியர் குழுவில் ஒருவர் என வர்ணிக்கப்பட்ட சந்திரசேகர் அவர்கள் ராஜ்ய சபையில் மொரார்ஜி தேசாய் அவர்கள் மீது சாட்டப்பட்ட குற்றச் சாட்டை உறுதிப்படுத்திப் பேசியதோடு, மேலும் உரையாற்றும்போது பின்வரும் கருத்தையும் வற்புறுத்தினார். அந்தக் கருத்தின் கடுமையையும் இதோ காணலாம்: "கடந்த வாரம் இந்த அவையில் (ராஜ்ய சபா) பேசிய மொரார்ஜி தேசாய் அவர்கள் என்னைப் பற்றிக் குறிப்பிடும்போது "மதிப்புக்குரியவனல்ல" என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.
அதை நான் தீவிரமாக மறுக்கிறேன். என்னுடைய நடத்தையையும், துணைப் பிரதமர் மொரார்ஜியின் நடத்தையையும் ஆராய்ந்து நிறுத்துப் பார்த்து நான் மதிப்புக்குரியவனல்லவா; அல்லது அந்த இழி சொல் நான் குறிப்பிடும் அந்த மனிதருக்குப் பொருந்துகிறதா என்பதைக் கண்டறிய ஒரு கூட்டுக் குழுவை நியமிக்க வேண்டும். அந்தக் குழுவில் லோக் சபா ராஜ்ய சபா உறுப்பினர்கள் இடம் பெறவேண்டும்."
இவ்வாறு சந்திரசேகர் பேசியதற்கு அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் தன்னுடைய பதவியில் இருந்து விலகிவிட வேண்டி வரும் என்று தேசாய், பிரதமர் இந்திரா அம்மையாரிடமும் மற்றத் தலைவர்களிடமும் கூறினார். இதற்கிடையே மத்திய அமைச்சரவை கூடியது. குற்றச் சாட்டுக்குத் தொடர்புடைய பிர்லா நிறுவனங்களின் மீது எவ்வித விசாரணையும் நடத்தத் தேவையில்லை என்று முடிவு செய்தது. அந்தக் காலகட்டத்தில் பரிதாபாத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் இளந் துருக்கியர்களில் ஒருவரான மோகன் தாரியாவும், மற்றொருவரான சந்திரசேகரும் மத்திய அரசையும், மொரார்ஜி தேசாயின் போக்கையும் கண்டித்தனர்.
மொரார்ஜியைக் குறை கூறிய மோகன் தாரியாவைப் பார்த்து "நீர் என் முதலாளி அல்ல!
" என்று ஆத்திரமாகக் கூறினார் தேசாய்! உடனே சந்திரசேகர் துடித்தெழுந்து, "இங்கே எல்லோரும் சமமானவர்கள்! உறுப்பினர்களின் கருத்துக்களை வெளியிடக் கட்சிக்குள்ளே தடை விதிப்பதும் ஆத்திரப்பட்டு அடக்குவதும் கூடாது" என்று ஆவேசமாகப் பதில் சொன்னார்.
மொரார்ஜி மீது குற்றம் சாட்டிய மோகன் தாரியா, சந்திரசேகர் இருவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மைசூர் மாநில காங்கிரஸ் தலைவர் நாகப்பா ஆல்வா என்பவர் வலியுறுத்தினார். அவரது கருத்தைக் காமராஜர் அவர்களும், ராம்சுபாக் சிங், சி. பி. குப்தா, வீரேந்திர பட்டீல் ஆகியோரும் ஆதரித்து சந்திரசேகர், மோகன் தாரியா இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வற்புறுத்தினர். சி. சுப்பிரமணியம் அவர்கள் அவ்வாறு நடவடிக்கை எடுப்பதை எதிர்த்தார்.
இறுதியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அப்படி யாரும் தன்னிடம் தெரிவிக்கவில்லை என்று சந்திரசேகர் பத்திரிகையாளர்களிடம் கூறினார். "சந்திரசேகர் பேசுவதற்கெல்லாம் நான் ஏன் பதில் கூற வேண்டும்? அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை அவரிடம் இந்திரா காந்தி தெரிவித்தாரா இல்லையா என்று நான் ஏன் சந்தேகப்படவேண்டும்? கட்சியின் குறிப்புப் புத்தகத்தில் அந்தக் கண்டனம் எழுதப்பட்டுவிட்டது.
என்னுடைய மதிப்பைக் குறைக்க சிலர் சுமத்தும் ஊழல் புகார் பயமுறுத்தல்களுக்காக நான் பயந்து பதவியை ராஜினாமா செய்யமாட்டேன்". என்று முழங்கினார் மொரார்ஜி! இந்த நிகழ்ச்சிகள் காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரும் பிளவுக்குத் தொடக்கமாக அமைந்தன. அந்தத் "துவஜாரோகண" அறிகுறிகள், நான் முதல்வர் பொறுப்பேற்று முதல் முறையாக டெல்லிக்குச் சென்றபோதுதான் தெரிய ஆரம்பித்தன!
