உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/உறவுகள் - உரிமைகள்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

உறவுகள் - உரிமைகள் · 149 / 391

உறவுகள் - உரிமைகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகமெனும் அறிவுக் கடலில் முத்துக் குளித்துத் தேர்ந்தெடுத்த முத்துக்களில் அன்பழகனும் ஒருவர் என்று அண்ணா அவர்களால் வாழ்த்திப் புகழப்பட்டவர் பேராசிரியர் அவர்கள்! முதல்வர் பொறுப்பை நான் ஏற்ற நேரத்தில் நாடாளுமன்றத்தில் கழக உறுப்பினர் குழுவின் தலைவராக இருந்த அவர், தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றக் கட்சித் தலைவர் (முதலமைச்சர்) தேர்தலில் எந்தக் கருத்தும் கூறாமல் சற்று ஒதுங்கியே இருந்தார்.

அண்ணாவை இழந்த சோகத்தில் திக்குத் தெரியாமல் நின்ற கழகத்தை வழி நடத்திச் செல்ல யார் இருக்கிறார்கள் என்ற கேள்விக்குறி அவரை மௌனமாக்கிவிட்டது என்றே கூறலாம். எந்தப் பிரச்சினையிலும் வெட்டு ஒன்று துண்டு இரண்டெனக் கண்டிப்பாகக் கருத்துக்களைக் கூறக் கூடியவர் இந்தப் பிரச்சினையில் தலையிடுவதால் புதிய சிக்கல்கள் தோன்றக்கூடுமென்றும் அதனால் தற்சமயம் ஒதுங்கியிருப்பதே கழகம் எடுத்திடும் முடிவுக்கு ஒத்துழைப்பு தருவதாகப் பொருள் என்றும் அவரைச் சந்தித்த நண்பர்களிடம் மனம் விட்டுச் சொன்னார்.

நான் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு எனக்கு சென்னை நேப்பியர் பூங்காவில் 1969 மார்ச் 9 - ஆம் நாள் நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில் நான் சென்று கலந்துகொள்வதற்கு முன்பாகவே கூட்டத்திற்குத் தலைமை வகித்திருந்த பேராசிரியர் அவர்கள் உரையாற்றி முடித்துவிட்டார். அன்று அவர் ஆற்றிய உரையினை வைத்துக் கழகத்திற்குள் கலகம் விளைவிக்கலாமா என்று மாற்றார் சிலர் திட்டமிடத் தொடங்கினர். பேராசிரியர் நெஞ்சில் பட்டதைச் சொல்லக்கூடியவரே தவிர, பிளவு எனும் நஞ்சைக் கழகத்தில் கலந்திடக் கனவிலும் முனையாதவர்; என்னிடம் மிகைபடச் சொன்னவர்களை அமைதிப் படுத்தினேன்.

இதனை நான் எழுதும்போது இந்தக் கழகத்திற்கு நான் தலைவர்! பேராசிரியர் பொதுச் செயலாளர்! நாங்களிருவரும் பிரியாதவர்கள்! பிரிக்கப்பட முடியாதவர்கள்! என்பதும் ஏற்றுள்ள பொறுப்புக்களை சுட்டிக்காட்டப் பயன்படும் சொற்களே தவிர, எங்களுக்குள் எந்தவித ஏற்றத் தாழ்வும் இருப்பதாக நான் என்றுமே எண்ணியதில்லை. "இடுக்கண்" களையும் நட்பின் இலக்கணமாக - இதய உணர்வுகளால் ஒன்றிக் கலந்துவிட்ட ஓர் உடன்பிறப்பாக - இந்தத் தமிழினம் காக்க உற்ற படைக்கலனாகத் திகழுகிற அவருக்கு ஏற்பட்ட ஐயப்பாட்டை நீக்குவது எனக்கு மிகப்பெரும் கடமையாயிற்று!

கழகத் தலைமையேற்று தலைவராக இருந்து வழி நடத்தும் தகுதியை நான் முற்றிலுமாகப் பெற்றிருக்கிறேனா என்பதுதான் பேராசிரியருக்கு அப்போது ஏற்பட்ட ஐயப்பாடு! அதைத்தான் நேப்பியர் பார்க் பாராட்டுக் கூட்டத்தில் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். அவர் பேசியதற்கும், மற்றும் சிலர் என்னை எல்லையற்றுப் பாராட்டியதற்கும் பதில் அளிக்கவேண்டிய அவசியத்திற்கு ஆளானேன். "முதலமைச்சர் முதலமைச்சர் என்று என்னைப்பற்றிக் கூறிப் பலர் வாழ்த்தினார்கள்.

ஆனால் நானோ "முதல்" இழந்த அமைச்சனாக - என்னை உருவாக்கிவிட்ட முதலினை இழந்த அமைச்சனாக உங்கள் முன்னால் நிற்கிறேன். முதலமைச்சராக இருக்கிறோம் என்ற நினைப்பே எனக்கில்லை. நாலரைக் கோடித் தமிழ் மக்களும் காலால் இடும் கட்டளையைத் தலையால் ஏற்று முடிக்க காத்திருக்கும் தொண்டருக்குத் தொண்டன் நான் என்ற நினைப்பில்தான் இருக்கிறேன். இந்தக் கூட்டத்திற்குத் தலைமை வகித்துள்ள பேராசிரியர் அவர்கள், "கருணாநிதியைத் தலைவராக அல்ல; தளபதியாக மட்டுமே ஏற்றுக் கொள்வேன்" என்று கூறினாலே போதுமானது.

தளபதியைத் "தளர் - பதி" ஆக்கிவிடாத அளவுக்கு அனைவரும் ஒத்துழைப்புத் தரவேண்டுமென்று பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன். ஆதித்தனார் அவர்கள் என்னை "இரண்டாவது அண்ணா" என்று அழைத்தமைக்கே நான் அவரிடம் கோபித்துக் கொண்டேன். அண்ணாவைப்போல் இன்னொருவர் உருவாக முடியாது என்றும் ஆதித்தனாரிடம் சொன்னேன். தாய்ப்பால் அருந்தி வளர்ந்த குழந்தை, திடீரென தாயை இழந்துவிட்டால் புட்டிப்பால் தான் அருந்த வேண்டி வரும்.

அண்ணா அவர்கள் தாய்ப்பால் என்றால் என்னைப் புட்டிப்பால் அளவுக்காவது ஏற்றுக் கொண்டு உடனிருந்து உதவுங்கள்." இப்படி அந்தக் கூட்டத்தில் நான் பேசியபோதிலும், பேராசிரியரைப் போலவே சிலர் கொண்டிருந்த ஐயப்பாட்டை நீக்குவதற்கும், தோளில் சுமத்தப்பட்ட பொறுப்பைத் தாங்கக் கூடியவன்தான் என்று நிலைநாட்டுவதற்கும் ஒயாத உழைப்பை நல்கிட வேண்டுமென்பதை உணர்ந்திருந்தேன். "நீ படிக்கிற அழகைப் பார்த்தால் பரீட்சையில் முதல் மாணவனாக அல்ல; கடைசி மாணவனாகத் தேர்வு பெறுவது கூடக் கஷ்டம்தான்!"

என்று தம்பியைப் பார்த்துத் தமையன் சொல்வது அந்தத் தம்பிக்கு ஒரு போட்டி மனப்பான்மையை ஏற்படுத்தவேண்டும் என்ற சகோதர பாசத்தாலும் இருப்பது உண்டல்லவா? அந்தப் பாச உணர்ச்சியோடுதான் அன்றைக்குப் பேராசிரியர் பேசினார் என்பது பிற்காலத்தில் அவரது நடவடிக்கைகளின் வாயிலாகத் தெளிவாயிற்று. மனத் தூய்மையுடன் இடித்துரைப்பதால், நன்மை விளையும்! மனத்தில் ஒன்றை வைத்துக்கொண்டு இனிப்பு ஒழுகப் பேசுவதால் அதனை நம்புவோர்க்குத் தீமையே சூழும்!

இடித்துரைத்த பேராசிரியர், எனக்கும் கழகத்திற்கும் தாங்கொணாத இடர்கள் வந்துற்றபோது தனது கொள்கை உறுதியையும், நட்பின் ஆழத்தையும் செயல் மூலம் வெளிப்படுத்தினார். இனிப்புரை வழங்கிய பலரோ இயக்கத்திற்கு இடர் வந்துற்றபோது, படர் கொடியானார், எதிர் வீட்டுக் கொம்பில்! பதவியும், பவிஷுமே அவர்களை ஆட்கொண்டன! அவற்றைத் துச்சமெனக் கருதி கால்தூசு எனக் கூறி கழகம் காத்திட எனக்குத் தோள் கொடுத்துத் துணை நிற்கும் பேராசிரியர் அவர்கள் இன்று என்னைத் தலைவனாக ஏற்றுக்கொள்கிற அளவுக்கு நான் உழைத்திருக்கிறேன் என்பதைத் திரும்பிப் பார்த்து ஆனந்தப் பெருமூச்சு விடுகிறேன்.

அண்ணாவின் மறைவினால் மேலவையில் ஏற்பட்டிருந்த காலி இடத்திற்கு அண்ணாவின் துணைவியார் ராணி அண்ணியார் அவர்களை சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினர்களின் சார்பில் தேர்ந்தெடுத்து மேலவையில் அமரவைத்தோம். மேலவையில் ஆளுநர் உரையின்மீது நடந்த விவாதத்தில் முதன்முதலாக நான் பதில் அளித்தது பற்றி "மெயில்" ஆங்கில ஏடு 2-3-69 அன்று எழுதியிருந்தது வருமாறு: தமிழக மேலவையில் ஆளுநர் உரைமீது நடைபெற்ற விவாதத்திற்கு, திரு.

கருணாநிதி தந்த பதிலுரை பாராட்டுக்குரிய தன்னடக்கத்தோடு அமைந்திருந்தது. மத்திய மாநிலத் தொடர்பு பற்றிய விஷயத்தில் விவரமானதொரு அறிவிப்பை வெளியிட மேலவையைத் தக்கதொரு விவாத மன்றமாக அவர் தேர்ந்தெடுத்துள்ளார். மத்திய ஆட்சிக்குத் தமது ஒத்துழைப்பை நல்கும் அதே வேளை அந்த ஒத்துழைப்பானது ஒரு சார்பிலிருந்து மட்டும் கிடைக்கக்கூடிய ஒத்துழைப்பாக இருக்க முடியாது என்றும் அது இரு சார்பிலும் ஒருவருக்கொருவர் அளிக்கக்கூடிய ஒத்துழைப்பாகவே அமைய முடியும் என்றும் அவர் அழுத்தம் திருத்தமாக உறுதியாகக் கூறியுள்ளார்.

இது, ஒரு முதலமைச்சர், ராஜ தந்திரத்தோடு-அதே நேரம் உறுதியான தன்மை படைத்தவராகவும் இருக்கமுடியும் என்பதை எடுத்துக் காட்டுகிறது. தமிழகத்திற்கு ஒரு லட்சம் டன் அரிசி உடனடியாக வழங்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இவையெல்லாம் மத்திய அரசின் உறவு நிலையில் திரு. அண்ணாதுரை அவர்கள் கையாண்ட உத்திகளை நினைவு படுத்துகின்றன. இதனையடுத்து சென்னை இராயபுரத்தில் மீன்பிடித் துறைமுக அழைப்புக்கான தொடக்க விழா நிகழ்ச்சி என்னுடைய தலைமையில் மத்திய அமைச்சர் பாபு ஜெகஜீவன் ராம் அவர்களால் நடத்திவைக்கப்பட்டது.

9-3-69-ல் நடைபெற்ற அந்த விழாவில் பேசிய ஜெக ஜீவன்ராம் அவர்கள், தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சரை நான் பாராட்டுகிறேன். வலிமையும் தகுதியும் உடைய ஒருவரது கரங்களில் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. திரு அண்ணாவின் நம்பிக்கைக்கு உகந்த தோழர்களில் ஒருவராக விளங்கியவர் கருணாநிதி. அவரது தலைமையில் தமிழ்நாட்டு மக்கள் அமைதியான சுகவாழ்வைப் பெறுவார்கள் என்றும், நாட்டின் ஐக்கியமும் ஒருமைப்பாடும் பாதுகாப்பும் வலிவடையும் என்றும் நம்புகிறேன்.

மத்திய அரசில் உள்ள என் போன்றோரின் ஒத்துழைப்பு எல்லா வகையிலும் அவருக்கு இருந்து வரும் என்று உறுதியாகத் தெரிவிக்கிறேன்" என்று உற்சாகம் கரைபுரளக் குறிப்பிட்டார். அன்று பாபு ஜெகஜீவன்ராம் பேசியது வெறும் சம்பிரதாயப் பேச்சல்ல! எத்தனையோ அரசியல் கொந்தளிப்புகளுக்கிடையிலேயும் அவருக்கும் எனக்குமுள்ள தொடர்பு எள் முனையளவு கூடத் தேய்ந்து போனது கிடையாது! பெரியார், அண்ணா திராவிடர் இயக்கம், அந்த இயக்கத்தைக் கட்டிக் காக்கும் வழித்தோன்றல்கள் என்றைக்குமே அவரது நெஞ்சில் நீங்காத இடம் பெற்றிருப்பதை நானறிவேன்.

டெல்லிக்கு நான் செல்லும்போது ஒன்றிரண்டு தடவை தவிர மற்ற நேரங்களில் எல்லாம் அவரைப் பார்த்து உரையாடாமல் திரும்பியதில்லை. அவரும் சென்னைக்கு வரும்போதெல்லாம் என்னைச் சந்தித்து உரையாடிவிட்டே திரும்புவார். பதவிகளில் இருந்த நேரங்களிலும் சரி, இல்லாத நேரங்களிலும் சரி - அந்த நட்புணர்வு நைந்து போனதில்லை. தாழ்ந்தப்பட்ட சமூகத்திலிருந்து என் மகன் அழகிரிக்குப் பெண்கொண்டு திருமணம் 1972-ல் நடைபெற்றபோது, தாங்கொணாத மகிழ்ச்சியுடன் அந்தக் கலப்புத் திருமண விழாவுக்கு வந்திருந்து தனது குடும்பத்தில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சி போலவே கலந்து கொண்டார்.

தமிழ்நாட்டின் சமுதாய முன்னேற்றத்திற்குத் திராவிட இயக்கம் பெருங் கடமை ஆற்றி வருகிறது என்பதிலே அவருக்கு ஒரு தனி உவகையும் பெருமையும் உண்டு. 1969 மார்ச் முதல் வாரத்தில் மேற்கு வங்கத்து அரசியல் நிலைகுறித்து அறிந்துகொள்ள வேண்டியதும், அதில் கழகம் எடுத்த நிலையும் முக்கியமானதாகும். மேற்கு வங்கத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐக்கிய முன்னணி அமைச்சரவை கலைக்கப்பட்டு, அதன் தொடர்பாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது.

மீண்டும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி செல்வாக்குள்ள ஐக்கிய முன்னணியே வென்றது. அஜாய் முகர்ஜி முதல்வராகவும், ஜோதிபாசு துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர். தேர்தலுக்குப் பிறகு மார்ச் ஆறாம் நாளன்று கவர்னர் உரையின் போதுதான் மேற்கு வங்கத்தில் பெரும் பிரச்சினையொன்று எழுந்தது. "கவர்னர் உரை" என்று இருந்தாலும், ஆளுங் கட்சியின் கொள்கை, கோட்பாடுகள், திட்டங்கள், கருத்துக்களையே கவர்னர் படிப்பது வழக்கம்.

ஆனால் மேற்கு வங்க கவர்னர், தனது உரையில் அச்சியற்றப்பட்டிருந்த சில வாசகங்களைப் படிக்க மறுத்தார். "கடந்த ஒன்றரை ஆண்டுக்காலம், இந்த மாநில மக்களுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அந்த கால கட்டத்தில் ஜனநாயகக் கொள்கை கடும் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டது. எந்தவகையான அரசியல் சட்ட பூர்வமான, நிலையும் அற்ற முறையில் இந்த அவையின் அனுமதியின்றி 1967 நவம்பர் 21 அன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐக்கிய முன்னணி அரசாங்கம் தூக்கி எறியப்பட்டதை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள்!

பின்னர் தகாத அவசரத்துடன் கட்சி மாறிகளின் சிறுபான்மையினர் அரசு, மற்றொரு சிறுபான்மைக் கட்சியின் ஆதரவுடன் கடுமையான மக்கள் எதிர்ப்புக்கிடையே தான்தோன்றித்தனமாக பதவியில் அமாத்தப்பட்டதையும் நீங்கள் எல்லோரும் அறிவீர்கள்." இந்தப் பகுதியைத்தான் ஆளுநர் தர்மவீரா அவர்கள் படிக்க மறுத்து, படிக்காமலே விட்டுவிட்டார்! பாவம்; அவரது செயலையும் மத்திய அரசின் போக்கையும் குறைகூறிக் கண்டிக்கும் அந்த வாசகங்களை அவரால் எப்படிப் படிக்க முடியும்!

கவர்னர் உரையின்மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் "கவர்னர் சில பகுதிகளை விட்டுவிட்டுப் படித்தமைக்காக கண்டனம் தெரிவிக்கிறது" என்ற திருத்தத்தையும் அவையில் அரசின் சார்பில் நிறைவேற்றினார்கள். கவர்னர் அப்படிச் செய்தது தவறு எனக் கூறி ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்கள் கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டார். மேற்கு வங்கத்தில் எழுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பிரச்சினை குறித்துத் திராவிட முன்னேற்றக் கழகம் தனது கருத்தை நாடாளுமன்றத்தில் பதிவு செய்தது.

மேற்கு வங்க கவர்னர் அவையில் உரை நிகழ்த்துகையில் சில பகுதிகளைப் படிக்காமல் விட்டுவிட்டது குறித்து, நாடாளு மன்றத்தில் 10-3-69 அன்று தென்னெட்டி விசுவநாதம் கொணர்ந்த தீர்மானத்தின் மீது பேசுகையில் கழக உறுப்பினர் செ.கந்தப்பன் அவர்கள். "மத்திய அரசோடு கருத்து மாறுபடக் காங்கிரசல்லாத அரசுகளுக்கு எல்லா உரிமையும் உண்டு. ஏதோ ஒற்றர்களை வைத்திருப்பது போல கவர்னர்களை வைத்திருப்பது ஆட்சேபிக்கத்தக்கதாகும்.

தாம் மட்டுமே தேச பக்தர்கள் என்றும், அரசியல் சட்டத்தைக் காப்பது தமக்குமட்டுமேயுள்ள கடன் என்றும் கவர்னர்கள் கருதக் கூடாது. 1967 தேர்தலுக்குப் பின், புதிய சக்திகள் உதயமானபின், மேலும் சிக்கல்கள் உருவாக்கப்பட்டு விட்டன. தான் எப்படியெப்படியோ இருப்பதாக காங்கிரஸ் சொல்கிறது. அதேமுறையில், காங்கிரஸ் செயல்பட்டிருந்தால் அது மேற்கு வங்கத்தில் வேறுவகையாகச் செயல்பட்டிருக்கவேண்டும். அங்கே, காங்கிரசல்லாத அரசைக் கவிழ்க்கவேண்டும் என்பதே, அதன் உண்மையான அணுகுமுறையாக இருந்தது.

அதுதான் மொத்தச் சிக்கலுக்கும் காரணம்" என்று கூறினார்.