நெஞ்சுக்கு நீதி
வெண்மணி வேதனை · 148 / 391
வெண்மணி வேதனை ஒரு பேரிழப்புக்குப் பிறகு சோகத்தைச் சுமந்து கொண்டு மக்கள் அளித்த பொறுப்பினை நிறைவேற்ற அடியெடுத்து வைத்த தொடக்கத்திலேயே முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியினர் கடுமையான விமர்சனங்களில் இறங்கிக் கழக அரசைச் சாடினர். 1969 பிப்ரவரி 21-ஆம் நாள் சட்டமன்றம் கூட்டப்பட்ட போது என் தலைமையில் உருவான புதிய அமைச்சரவைக்கு ஒரு மாத வயதுகூட நிறையவில்லை இருந்த போதிலும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் உறுப்பினர் ஜெயராஜ் என்பவர் அரசின் மீது ஒரு கண்டனத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
கீழ் வெண்மணி நிகழ்ச்சிக் குறித்த கண்டனத் தீர்மானம் அது! கீழ்வெண்மணி நிகழ்ச்சி, ஒரு சமுதாயக் கேடு! ஆதிக்க வெறியர்களின் கோரபற்களுக்கும், கூரிய நகங்களுக்கும் கிடைத்த தீனி! நிலப்பிரபுத்துவத்திற்கும், விவசாயத் தொழிலாளி வர்க்கத்திற்கும் ஏற்பட்ட மோதுதலில் மூண்ட நெருப்பில் 1968-ஆம் ஆண்டு 42 உயிர்கள் கருகிச் செத்துச் சாம்பலாயின! அத்தனையும் ஆதி திராவிட விவசாயத் தொழிலாளர் வீட்டு உயிர்கள்! பெண்கள் 25 பேர்!
பிஞ்சுகள் 14 பேர்! ஆண்கள் 3 பேர்! நிலப்பிரபுக்களின் ஆதரவாளரான பக்கிரிசாமி என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறை, வழக்கு மன்றமெனச் சென்றிருக்க வேண்டிய நிலப்பிரபுக்கள் சிலர், அதற்கு மாறாகச் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு காட்டுமிராண்டிகள்கூடச் செய்திடக் கூசும் காரியத்தைச் செய்தனர். கத்தி, கட்டாரி, வேல்கம்புகளுடன் கீழ்வெண்மணி ஆதி திராவிடர் காலனிக்குள் படையெடுத்தனர்.
பயந்தோடிய பலர் ஒரு வீட்டுக்குள் புகுந்து கதவைத் தாளிட்டுக் கொண்டனர். இரக்கமற்றோர் எல்லா வீடுகளுக்கும் தீ வைக்கவே, ஓடி ஒளிந்திருந்தோர்க்கு அடைக்கலம் தந்த அந்தக் குடிசையும் நெருப்புக்கு இரையானது. 1968 டிசம்பர் 25-ஆம் நாள் தமிழக வரலாற்றில் ஒரு பெருங் களங்கத்தை ஏற்படுத்திய அந்த அநாகரீக-அராஜகச் செயல் கேட்டு, அண்ணா துடித்துப் போனார், உணவு அருந்தவே மறுத்து விட்டார். உறக்கமே கொள்ளவில்லை உடல்நிலை வேறு கெட்டிருந்த சமயம்.
உடனடியாக என்னைக் கீழ் வெண்மணிக்குச் சென்று நிலைமையை அறிந்து வரக் கட்டளையிட்டார். நான், அமைச்சர்கள் சத்தியவாணிமுத்து, மாதவன் ஆகியோர் தஞ்சை மாவட்டத்தில் நாகைக்கு அருகேயுள்ள கீழ்வெண்மணிக்கு விரைந்தோம். விவசாயத் தொழிலாளர் வர்க்கத்தின் பக்கம் எப்போதுமே குரல் கொடுக்கும் மன்னை நாராயணசாமி அவர்களும், கம்யூனிஸ்டு கட்சியின் தஞ்சை மாவட்டத் தலைவர்களும் எங்களுடன் அந்தக் கிராமத்திற்கு வந்தனர். எரிந்துபோன காலனியைக் கண்டு கண்ணீர் சிந்தினேன்.
நாற்பத்து இரண்டு உயிர்களைப் பலி கொண்ட அந்த இடத்தைப் பார்த்துக் கதறினேன். தாய்க்குலத்தினரையும் தளிர்களையும் உழைக்கும் கூட்டத்தையும் இப்படி உயிரோடு வைத்துக் கொளுத்திச் சாம்பல் மேடாக்க எப்படித்தான் அந்த நாசகாரர்கள் துணிந்தார்களோ என்று அந்த வட்டாரமே புலம்பி அழுதது. அந்தக் கொடுஞ் செயலர் கூட்டத்திற்குத் தலைமை வகித்தவர் கோபாலகிருஷ்ண நாயுடு என்பவர்! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர்!
சட்டப்படி நடவடிக்கைகளைப் பாரபட்சமின்றி எடுத்திடுமாறு காவல்துறையினருக்கு முதலமைச்சர் அண்ணா அவர்கள் உத்திரவிட்டார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர் பி. ராமமூர்த்தி அவர்கள் சென்னைக்கு வந்து அண்ணாவைச் சந்தித்தார். கீழ்வெண்மணி நிகழ்ச்சியால் அதிர்ச்சி அடைந்திருந்த இருவரும் தழுதழுத்த குரலில் பேசிக் கொண்டபோது நான் அங்கிருந்தேன் கண்கள் குளமாகிட! கீழ்வெண்மணி குறித்து அண்ணாவின் ஆட்சியை மறைமுகமாகக் குற்றம் சாட்டி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தாரகேசுவரி சின்கா, நாடாளுமன்றத்தில் பேசியபோது குறுக்கிட்டு திரு.
பி. ராமமூர்த்தி அவர்கள் கூறிய கருத்துக்கள் முக்கியமானவைகளாகும். "திருமதி தாரகேசுவரி சின்கா, தஞ்சையில் கீழ்வெண்மணி சம்பவத்தைப் பற்றிக் குறிப்பிட்டார். ஆம்! அங்கு ஒரு கொடுமையான சம்பவம் நடந்தது உண்மை. அது நடந்த போது நாங்கள் எர்ணாகுளத்தில் இருந்தோம். அதுபற்றி வானொலியில் செய்தி கேட்டோம். இந்தச் சம்பவத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட அந்த நிமிடமே தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணா கண்ணீர் விட்டார். மறு நிமிடமே அந்த சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்தார்.
அதற்குப் பொறுப்பானவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென்று அறிக்கை விட்டார். அவர் உடல் நலமற்று இருந்ததால், அமைச்சர்களை உடனே வெண்மணிக்கு அனுப்பி நிலைமைகளை அறிந்துவரச் செய்தார். வெண்மணி நிகழ்ச்சிபற்றிக் கேள்விப்பட்டு நான் சென்னை சென்றவுடன் அங்கே அண்ணாவின் செய்தி காத்திருந்தது. "உடனே வருக!"
என்பதே அந்தச் செய்தி! நான் சென்று சேர்ந்தவுடன் அதிகாலையிலேயே அவரைப் பார்ப்பதற்காக நான் எழுப்பப்பட்டேன். அந்தப் பிரச்சினையில் என்ன செய்வது என்று பேசினோம். சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதென்றும், போலீஸ் அதிகாரிகளை மாற்றி, வழக்கு நடத்தும் பொறுப்பை வேறு புதிய அதிகாரிகளிடம் விடுவதென்றும் முடிவு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள எல்லாக் கட்சிகளிலும் காங்கிரஸ் கட்சி ஒன்றுதான் வெண்மணி நிகழ்ச்சிக்காகக் கண்ணீர் விடாத கட்சி!
அந்தச் சம்பவத்தைக் கண்டிக்க அவர்கள் முன் வரவில்லை." இவ்வளவு தெளிவாக ராமமூர்த்தி அவர்களே அண்ணா அவர்கள் எடுத்த நடவடிக்கைகளைக் குறிப்பிட்டிருந்துங் கூட, அண்ணா அவர்களின் மறைவுக்குப் பிறகு கூடிய சட்டமன்றக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கழக அரசின் மீது கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்தக் கண்டனத் தீர்மானத்திற்கு இறுதியாக நான் பதில் அளித்த போது; "காங்கிரஸ் உறுப்பினர் அருமை நண்பர் ஜெயராஜ் அவர்கள், கீழ்வெண்மணியில் தீ வைத்துக் கொளுத்திக் கொல்லப்பட்ட பெண்டிர், ஆடவர், குழந்தைகள் அத்தனை பேருக்குமாகக் கண்ணீர் வடித்துத் தனது ஆழ்ந்த சோகத்தைத் தெரிவித்துக் கொண்டார்.
அதே நேரத்தில் அப்படித் தீ வைத்துக் கொளுத்திய கொடும்பாவிகளைப் பற்றி ஒரு வார்த்தை கூட அவர் கூறவில்லை. ஆக அவர்களுடைய கண்டனம் அந்த அளவோடு நின்று விட்டது" என்று குறிப்பிட்டேன். அண்ணா இருந்தபோதே அந்தச் சம்பவத்தையொட்டி எடுக்கப்பட்ட சட்டபூர்வமான நடவடிக்கைகளைத் தொடர்ந்து வழக்கு நடைபெற்றது-தண்டிக்கப்பட்டவர்கள் மேல்முறை யீட்டுக்குச் சென்றார்கள். அந்த வழக்கில் முதல் எதிரியாக இருந்த கோபாலகிருஷ்ண நாயுடு என்ற நிலப்பிரபு, வெண்மணி நிகழ்ச்சி நடைபெற்ற பல ஆண்டுகளுக்குப் பிறகு கொலையுண்டார் என்பதிலிருந்து வெண்மணியின் வெங்கொடுமைக்கு எப்படி பதில் கூறப்பட்டது என்பதையும் புரிந்து கொள்ளலாம் புதிய அமைச்சரவை அமைந்ததும் கூடிய சட்டமன்றத்தில் ஆளுநர் உரையும், நிதிநிலை அறிக்கையும் இடம் பெற்றன.
நிதிநிலை அறிக்கையில் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் அவர்களின் இலவசக் கல்வித் திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்கிற ஒரு அறிவிப்பு செய்யப்பட்டது. பள்ளி இறுதி வகுப்பு(எஸ்.எஸ்.எல்.சி)வரையில் எல்லா மாணவர்களுக்கும் இலவசக் கல்வியென ஆக்கியிருந்தார் காமராஜர்! அதனைத் தொடர்ந்து 1969 நிதிநிலை அறிக்கையில் எல்லா மாணவர்களுக்கும் புகுமுக வகுப்பு (தற்போது ப்ளஸ் 2) வரையில் இலவசக் கல்வி என அறிவித்தோம்.
ஏற்கனவே ஓரிரு இடங்களில் பள்ளிகளில் பிள்ளைகளுக்கு மதிய உணவு அளிக்கப்பட்டிருந்தாலும் கூட காமராஜர் ஆட்சியிலேதான் அந்த மதிய உணவு வழங்குதலை மாநிலந் தழுவிய ஒரு திட்டமாகவே ஆக்கி ஏழை எளிய குழந்தைகளுக்குக் கல்வியில் ஊக்கமளிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கழக ஆட்சியிலும் அந்தத் திட்டம் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டது. புதிய அமைச்சரவையின் நிதிநிலை அறிக்கை வரியில்லாத வகையிலே அமைந்திருந்ததைத் தமிழ்நாட்டு மக்கள் வரவேற்றனர்.
ஆளுநர் உரையிலும் சரி, நிதிநிலை அறிக்கையிலும் சரி, சட்டப்பேரவையில் உரையாற்றிய காங்கிரஸ் உறுப்பினர்கள் காரசாரமாகவே கழக அரசைக் கண்டித்தனர். புதியவர்கள் பொறுப்பேற்றிருக்கிறார்களே, கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம் என்ற நிதானம் அவர்களிடம் அப்போது இல்லை நாங்கள் புதியவர்களாக இருந்தாலும் 1967 முதல் ஆட்சி நடக்கிறதேயெனக் கூறி இரண்டாண்டு காலமும் கொடுங்கோல் ஆட்சி நடந்ததாகவே அவர்கள் பேசினர்.
இராமலிங்கம் என்ற காங்கிரஸ் உறுப்பினர் ; என்னை முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்ததையே ஏகடியம் செய்தார். "மறைந்த முதலமைச்சருக்காக அனுதாபம் அனுஷ்டிக்கப் பட்ட ஏழு நாட்கள் முடிவதற்கு முன்பே, ஆறாம் நாளே-கண்ணீர் வற்றுவதற்கு முன்பு-புதிய முதலமைச்சர் தேர்ந் தெடுக்கப்பட்டு விட்டார்" என்று அவர் அவையில் பேசினார்.
அதற்கு நான்; "பண்டித நேரு மறைந்தபோது பனிரெண்டு நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் நேரு மறைந்த மூன்றாம் நாளே லால்பகதூர் சாஸ்திரி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் காங்கிரஸ் இயக்கத்தினர் மறந்து விடக்கூடாது" என்று அடக்கத்துடன் பதில் அளித்தேன்.
முதல்வர் அண்ணா மறைந்த அடுத்த விநாடியே தற்காலிக முதல்வராக நாவலர் பதவியேற்றது கட்டாயத்துக்குரிய ஒரு முறை என்கிற போது - மாநில மக்களை வழி நடத்த ஒரு உறுதியான அமைச்சரவை உடனடியாக அமைவதைக் கேலி செய்ய சிலர் முனைந்தது ; எதிர்ப்பு-எரிச்சல் இவற்றின் காரணமே தவிர வேறல்ல! சட்டமன்றக் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது நெய்வேலியில் இருந்து ஒரு செய்தி வந்தது. அங்கு ஒரு விழாவில் திருமுருக-கிருபானந்தவாரியார் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றிய போது அண்ணாவின் மறைவு குறித்துக் கிண்டலாக பேசியதாகவும் அதனால் மக்கள் கொதித்தெழுந்து அமளி ஏற்பட்டதாகவும் தகவல் கிடைத்தது.
அது குறித்துச் சட்டமன்றத்தில் காங்கிரசார் கேள்விகளை எழுப்பினர். அப்போது காங்கிரஸ் தரப்பில் சட்டமன்றக் கொறடாவாக இருந்தவர் விநாயகம் அவர்கள்! (இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர் கழகத்தில் இணைந்துவிட்டார். ஆர்ப்பாட்டமான உரையும், ஆணித்தரமான வாதமும், ஆஜானுபாகுவான வடிவமும் தான் திரு. விநாயகம் அவர்கள் என்றால் அதை யாரும் மறுக்கவொண்ணார்! அண்ணாவைப் பார்த்து அவையிலேயே அவர் ஒரு முறை "your days are numbered" (உமது நாட்கள் எண்ணப் படுகின்றன) என்று ஆட்சியைக் குறிப்பிட்டுக் கோபமாகச் சொன்னபோது அண்ணா அவர்கள் அமைதியாக எழுந்து "My steps are measured" (எனது அடிகள் அளந்து வைக்கப்படுகின்றன) எனக் கூறியதும் மறக்கக் கூடியவை அல்ல!
இருவருமே நல்ல நண்பர்கள்; இருவரையும் காலம் அதிக இடைவெளி விடாமலே பறித்துக் கொண்டு போய்விட்டது. அந்த நண்பர் விநாயகம் தான் நெய்வேலியில் கிருபானந்த வாரியார் நிகழ்ச்சியில் உருவான கலவரங் குறித்து ஆத்திரமாகப் பேசினார். "ஆண்டவனை நம்பாதவர்கள் அமெரிக்காவுக்குப் போனாலும் டாக்டர் மில்லரே வந்தாலும் இப்படித்தான் முடிவு ஏற்படும்" என்று வாரியார் பேசியதையொட்டியே குழப்பம் விளைந்தது என்ற விவரத்தை நான் அவையில் சொன்னேன்.
அப்படி பேசியது தவறு என்று வாரியார் அவர்களே நெயவேலியில் வருத்தம் தெரிவித்துக்கொண்டதையும் அவரைத் தக்க போலீஸ் பாதுகாப்புடன் ஊருக்கு அனுப்பியதையும் அவையில் விளக்கினேன். நெய்வேலி நிகழ்ச்சியைக் கழக அரசின் மீது காழ்ப்புக்கொண்டோர் பயன்படுத்திக் கொள்வது, தனக்கே நல்லதல்ல எனப்புரிந்து கொண்ட கிருபானந்தவாரியாரும் ஓர் அறிக்கையை ஏடுகள் மூலம் வெளியிட்டார். நெய்வேலி நிகழ்ச்சிகளுக்கும் அரசியலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
இதை சில அரசியல் கட்சிகள் தங்கள் நலனுக்காகப் பயன்படுத்துவதை நான் விரும்பவில்லை. முதலமைச்சர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் நல்ல பாதுகாப்பு கொடுக்கப்படுமென்றும் சட்டமன்றத்தில் அறிவித்துவிட்டபடியால் இதை முடிந்துபோன பிரச்சினையாகக் கருத வேண்டுகிறேன் என்பதுதான் வாரியாரின் அறிக்கையாகும்! ஒரு தலைவருடைய மரணம்-அல்லது நோய்நொடிகள் - இவற்றைக் கேலிக்குரியதாக ஆக்கி "அரசியல் விகடம்" செய்வதை அந்தத் தலைவரின்பால் உள்ளத்தைப் பறிகொடுத்து அவரைப் பின்பற்றுகின்ற மக்கள் பொறுத்துக் கொள்ளமுடியாமல் கொதிப்படைவார்கள் என்பதை நான் சட்டமன்றத்தில் சுட்டிக்காட்டினாலுங்கூட, அத்தகைய போக்கினை எதிர்க்க வன்முறையில் இறங்குவதை ஏற்றுக்கொள்ள இயலாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொண்டேன்.
இந்தக் கால கட்டத்தில்தான் ஆந்திர மாநிலத்தில் "தெலுங்கானா" போராட்டம் உச்ச கட்டத்தை அடைந்திருந்தது. தெலுங்கானா மக்களின் நலன்கள் கவனிக்கப்படுமென்றும் ஆனால் அதற்காக ஆந்திராவிலிருந்து தெலுங்கானா மாநிலமெனத் தனியாகப் பிரிக்க முடியாதென்றும் பிரதமர் இந்திராகாந்தி திட்டவட்டமாகத் தெரிவித்த காரணத்தால் போராட்டம் தீவிரமடைந்தது. ஐதராபாத் அருகே பலக்னாமா என்ற நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலுக்குப் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
கோதாவரிப் பாலம் அருகே ரயில்களைக் கவிழ்க்க செய்யப்பட்ட முயற்சிகள் தோல்வியுற்றன. செகந்தராபாத் - காசிப்பேட்டை ரயில் பாதையில் ஒரு பாலத்திற்கு பலத்தசேதம் விளைவிக்கப்பட்டது. அரசு அலுவலகங்கள், அங்கிருந்த ரீக்கார்டுகள் தீக்கிரையாக்கப்பட்டன. ஐந்தே நாட்களில் கிளர்ச்சியையொட்டி சுமார் மூவாயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். தெலுங்கானா கிளர்ச்சி குறித்துப்பேச பிரதமர் இந்திரா காந்தி நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்துக் கலந்து பேசினார்.
சுதந்திரக் கட்சி சார்பில் கலந்துகொண்டவர்கள் அந்தக் கூட்டத்தில், தெலுங்கானா பிரிக்கப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தினர். கழகச் சார்பில் கலந்துகொண்ட பேராசிரியர் அவர்கள் "ஒரே மொழி பேசும் மக்கள் என்கிற அடிப்படையில் ஆந்திராவின் ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டும். இதில் தவறினால் மற்ற மாநிலங்களிலும் தனி மாநிலக் கோரிக்கை தோன்றும்" எனக் குறிப்பிட்டார்.
