நெஞ்சுக்கு நீதி
மாலையும் கயிறும்! · 147 / 391
மாலையும் கயிறும்! பரந்து விரிந்த வானில் நட்சத்திரங்கள் மின்னுவதைப் போல் அந்தப் பந்தலில் மின்விளக்குகள் என வர்ணித்துக் கூறும் போது பந்தலே, பரந்த வானமாகிவிடாது! வானவில்லைப் போல வளைந்த புருவங் கொண்ட வனிதாமணி என்கிறபோது, அந்தப் புருவங்கள் வானவில்லாகவே மாறி விட மாட்டா! சில பெரிய தலைவர்கள், சிறந்த மனிதர்களின் வாழ்வில் தொடர்புடைய நிகழ்ச்சிகளைப்போல் என் வாழ்விலும் சில நிகழ்ச்சிகள் ஒப்பிடத்தக்க அளவுக்கு இருப்பதாக நான் குறிப்பிட நேர்ந்தால் என்னையும் நான் அவர்களின் அளவுக்கு ஆணவத்தோடு உயர்த்திக்கொள்வதாக யாரும் எண்ணிட வேண்டாம்!
நிகழ்ச்சிகள் அல்லது செய்திகளின் ஒற்றுமைக்காக மட்டுமே அவற்றை எழுதுகிறேன் என்பதை அடக்கத்துடன் அறிவித்துக் கொள்கிறேன். சென்னையில் சீமான்களும், பூமான்களும் கூடுகிற சில ஆடம்பரமான உல்லாச இடங்களில், நான் பதவியேற்றது பற்றிய விமர்சனங்கள் வெளிவந்ததாக என் செவிகளுக்குச் செய்தி எட்டியது. வெளி நாட்டுப் பிரபுக்களைப்போல பெருத்த உருவமும், அணிமணிகளும் பூண்ட தமிழ்நாட்டுத் தொழில் அதிபர் ஒருவர் இரவுநேர விருந்து மண்டபமொன்றில் என்னைப் பற்றி எரிச்சலோடு கூச்சலிட்டபோது "அண்ணாதுரை இரண்டு வருஷம்தான் ஆள முடிந்தது!
அதைப்போலக் கருணாநிதியின் ஆயுளும் இரண்டு வருஷத்துக்குள் முடிந்துவிடும்!" என்று "வாழ்த்து" பொழிந்ததாக மறுநாள் காலையில் எனக்குத் தகவல் வந்தது! ஆனால் நிலைமை, வேறு விதமாக இருந்தது. என்னை வாழ்த்தியவரின் வாழ்வுதான், அதன்பிறகு இரண்டு மூன்று ஆண்டுகளுக்குள் முடிந்துவிட்டது. அதனால் எனக்கு ஏதோ அருளோ அல்லது சக்தியோ இருப்பதாக யாரும் தவறாகக் கருதித் தடுமாறத் தேவையில்லை. அத்தகைய மூடநம்பிக்கைகளைத் தகர்த்தெறியும் கூடாரத்திலிருந்து பயிற்சி பெற்று ஆட்சிப்பொறுப்புக்கு வந்தவன் நான் என்பதை மறந்துவிடவில்லை.
இந்த நிகழ்ச்சியைக்கூடக் குறிப்பிடுவதற்குக் காரணம்; மாளிகைவாசக் கனவான்களின் உள்ளத்தில் - ஆட்சிப் பொறுப்புக்கு நான் வந்தது எத்துணை ஆத்திரத்தை எழுப்பியிருந்தது என்பதற்காகத்தான்! இங்கிலாந்தின் பிரதமராக இருந்த லாயிட் ஜார்ஜ் முதலில் நிதி அமைச்சராகப் பதவிப் பொறுப்புக்கு வந்தபோது சர்கான் பிரபு என்ற ஆங்கிலேயச் சீமான், லாயிட் ஜார்ஜ் ஒரு சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதைக் குத்திக்காட்டும் வகையில், உலகத்தில் நற்செயல்களும், நல்ல திட்டங்களும் சீமான்களாகப் பிறந்தவர்களால்தான் நிறைவேற்றப்பட்டிருக் கின்றன!"
என்று குறிப்பிட்டார் எனக் கேள்விப்பட்டதும் லாயிட் ஜார்ஜ், பின்வருமாறு அதற்குப் பதில் அளித்தார் என ஒரு செய்தி உண்டு. "சர்கான் பிரபுவுக்கு அவர் வீட்டிலேயே மாட்டப்பட்டிருக்கும் ஏசு கிறிஸ்துவின் படம் கண்ணுக்குத் தெரிவதில்லை போலும்! கலேலியா கடற்கரையில் சாதாரணக் குடியிற் பிறந்த சாமான்யர்களான பனிரெண்டு மீனவர்களால் தான் கிறிஸ்துவ மதம் உலகெங்கும் பரவியது என்பதைவிட பனிரெண்டு பிரபுக்களால் அது பரப்பப்பட்டது என்று இருக்குமானால் சர்கான் பிரபு அதிக மகிழ்ச்சியில் குதித்திருக்கக் கூடும்!
ஆனால் பாவம்; வரலாறு அவர் விரும்புவதுபோல அமையவில்லை.!" ஓயாமல் உழைத்து, உயிருக்கு அஞ்சாமல் கடமையாற் தியாகங்கள் பல செய்து, தன்னலம் மறந்து, அடக்கு முறைகளைப் புன்னகையுடன் ஏற்ற காரணத்தால் எத்தனையோ சாமான்ய குடும்பத்தினர் மக்களின் இதயச் சிம்மாசனத்திலே இடம் பெற்றதுண்டு. பணம், பகட்டு, ஆடம்பரம், அதிகார வலிவு. இவைகள் பக்கபலமாக அமைந்துவிட்ட காரணத்தினாலேயே மக்களின் தலையிலேறி உட்காரக்கூடிய வாய்ப்புப்பெற்ற எத்தர்களும் உண்டு.
அந்த எத்தர்களை இனிய நண்பர்களாக ஆக்கிக் கொள்ளும் பரந்த இதயம் படைத்த பணக்காரப் பிரபுக்கள், இடதுசாரி சக்திகளாக வளருகிற எந்தவொரு மனிதனையும் அழித்து ஒழிப்பதற்குத் தங்கள் கையில் கிடைத்த ஆயுதங்களை யெல்லாம்பயன்படுத்தியே தீருவர்! இங்கிலாந்தின் ஜனநாயகத்தில் இடம் கிடைத்தபிறகும் லாயிட் ஜார்ஜ் போன்ற ஆற்றலாளர்களையே சர்கான் பிரபுக்களைப் போன்றவர்களின் ஏசல்கணைகள் மோதிப் பார்த்தன என்றால், மிகச் சாதாரணக் குடும்பத்தில் - குடிப்பெருமையோ குலப்பெருமையோ இல்லாத ஒரு குடும்பத்தில் பிறந்த என்னைச், சீமான்களின் முகாம் ஏற்றுக் கொள்ளுமா?
புறக்கணிக்கத்தானே செய்யும்! ஆனால் ஒன்று அந்தப் புறக்கணிப்புத்தான் எனக்கு இயற்கையாகக் கிடைத்த பெருமையென்று நான் கருதி மகிழ்ச்சி கொண்டேன். வரலாற்றில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுதந்திரம் பெற்ற இந்தியத் திருநாட்டில், தமிழகம்; சென்னை மாகாணமாக இருந்தபோதும் சரி - சென்னை மாநிலமாக ஆனபிறகும் சரி - அண்ணா அவர்களால் தமிழ்நாடாகப் பெயர் பெற்ற இந்த மாநிலத்தில் முதன் முதலாக நாற்பத்தி ஐந்து வயதுடைய ஒருவர் ஆட்சித் தலைமையேற்றது நான்தான் என்று சொல்லப்பட்ட போதும், அதனை எண்ணிப் பார்த்த போதும் ஒருவகையான அச்சம் என்னை ஆட்கொள்ளத்தான் செய்தது!
நான் பதவியேற்ற பிப்ரவரி பத்தாம் நாள் பாகிஸ்தான் சிறையில் இருந்து பூட்டோ விடுதலை செய்யப்பட்டார். பாகிஸ்தான் ஜனாதிபதி அயூப்கான், பூட்டோவை 1968-ல் கைது செய்து லாகூர் சிறையில் அடைத்திருந்தார். அயூப்கான் 1958-ஆம் ஆண்டு ராணுவப் புரட்சியை நடத்தியதின் மூலம் பாகிஸ்தானின் ஜனாதிபதி மிர்சாவை வீழ்த்திவிட்டு ஆட்சியைத் கைப்பற்றியவர். அந்த ராணுவ தளபதி, பிறகு தன்னைத்தானே ஜனாதிபதியாக நியமித்துக்கொண்டு 1964-ல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் வெற்றி பெற்றவர்.
பத்தாண்டு காலம் எதிர்ப்பே இல்லாத ஆட்சியை நடத்திய அயூப்கானை எதிர்த்த பூட்டோ சிறையில் அடைபட்டதையொட்டி பாதிஸ்தானில் பெருங்கிளர்ச்சி மூண்டது; அந்தக் கிளர்ச்சியில் மாணவர்கள் பெரும் பங்கு கொண்டனர். தன்னை விடுதலை செய்யாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று பூட்டோ அறிவித்தார். கிளர்ச்சி, எரிதழலாக உருவெடுத்திடவே - வேறு வழியின்றி அயூப்கான் பூட்டோவை விடுதலை செய்ததோடு அவசர நிலைப் பிரகடனத்தையும் ரத்து செய்தார்.
பாகிஸ்தான் கலவரங்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் அதனை வெளிப்படையாகவே அறிவித்துவிட்டு ராணுவ தளபதி யாகியாகானிடம் ஆட்சியை ஒப்படைத்துப் பதவியிலிருந்து விலகினார் அயூப்கான்! பூட்டோ சிறையில் அடைபட்டதற்கே பொங்கும் எரிமலையானது பாகிஸ்தான்! பிறகு அதே பூட்டோ பாகிஸ்தானையே கட்டியாளும் தகுதியும் பெற்று அதன்பின்னர் நடைபெற்ற புரட்சியில் கைது செய்யப்பட்டு அதிபர் ஜியாவின் ஆட்சியில் தூக்கிலும் தொங்கவிடப்பட்டுத் துடித்துச் செத்தபோது பாகிஸ்தான் மக்கள் தங்கள் துடிப்பைக் காட்டிக்கொள்ள முடியாமலே அடங்கிக் கிடந்தனர்!
இதுதான் அரசியல் வரலாற்றின் விசித்திரமான அத்தியாயங்கள்! தடுத்து நிறுத்த இயலாத புயல் காற்று மண்டிலங்கள்! அரசியல் - பொது வாழ்வு - போராட்டம் என்றெல்லாம் ஈடுபட்டு விட்டால் எதற்கும் தயாராகத்தான் இருக்கவேண்டும் என்பதை ஆண்டாண்டு காலமாகச் சரித்திரம் எழுதிக் காட்டிக் கொண்டுதானே இருக்கிறது. கழுத்தை அலங்கரிக்க மாலைகள் மட்டும் விழாது கழுத்தை இறுக்கிடும் கயிறும் விழும்! இரண்டையும் ஒன்று போலக் கருதுகிறவன்தான் உண்மையான தலைவனாகவோ உண்மையான உலகத் தளபதியாகவோ தொண்டனாகவோ இருக்க முடியும்.
இந்த உண்மையை இளம் பருவத்திலேயே, நெஞ்சில் பதிய வைத்துக்கொண்டு அரசியலில் அடியெடுத்து வைத்துவிட்ட எனக்கு "முதலமைச்சர்" என்ற கிரீடம் ஒருபோதும் ஆணவத்தை ஏற்படுத்தியதில்லை. தமிழ் மக்களுக்குப் பணியாற்ற நான் தலையில் சுமந்திருக்கும் கிரீடத்தை வேண்டுமானால் யாராவது பறித்துக்கொள்ள முடியும்; ஆனால் என் கையில் இருக்கும் போர்வாளை எவராலும் பறித்திட முடியாது என்ற உறுதியுடன் கோட்டைப் படிகளில் ஏறினேன், கோலோச்சிட!
அண்ணாவை இழந்து அழுது அழுது தமிழ் மக்களின் கண்ணீர் வற்றிவிட்டதைப் போலவே - வானத்து முகிற்கூட்டமும் வடிப்பதற்குக் கண்ணீரின்றிப் புலம்பியதால் வறட்சி துயர் தமிழகத்தைக் கப்பிக்கொண்டது. "மந்திரிசபை விஸ்தரிப்பு பற்றித் தயக்கம் காட்டிக்கொண்டிருக்காமல் விரைவாக முடிவெடுத்த முதலமைச்சர் கருணாநிதியைப் பாராட்டுகிறேன். விரைவான முடிவுகளை எடுக்கக் கூடியவர் எனக் கருதப்படுகிறவர் தற்போதைய முதலமைச்சர்.
மந்திரி சபை விஸ்தரிப்புக்கு அவர் எடுத்துக்கொண்ட காலம் அதை உறுதிப்படுத்துகிறது. இனி அரசாங்கம் எடுக்கப்போகும் முடிவு களும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை பயப்பதாக அமையுமென்று நம்புகிறேன்." இவ்வாறு முன்னால் முதல்வர் பெரியவர் பக்தவச்சலம் அவர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தார். பிப்ரவரி 15-ஆம் நாளுக்குள் அமைச்சரவை அமைப்பு முழுமை பெற்றுவிட்டதும், பிப்ரவரி 17 - ஆம் நாள் அதிகாரிகளும், அமைச்சர்களும் கொண்ட ஒரு கூட்டத்தைக் கூட்டி, வறட்சித் துயர் தணிப்புக் காரியங்களை உடனடியாகத் தொடங்கிட ஒரு கோடியே ஐம்பத்தி ஏழு லட்ச ரூபாயும் ஒதுக்கப்பட்டது.
பிப்ரவரி 21 - ஆம் நாள் சட்டமன்றம் கூட்டப்பெற்றது. முதல் நாள் அண்ணா மறைவு குறித்து இரங்கல் தீர்மானத்துடன் மறுநாளைக்கு மன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. மறுநாள் பிப்ரவரி 22-ல் புலவர் கோவிந்தன் அவர்கள் சட்டப் பேரவைத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சங்க இலக்கியங்களையும், தமிழக வரலாற்றையும் ஆய்வு செய்து நூல்கள் பலவற்றை வெளியிட்டவரும், இயக்கத்தில் இரண்டறக் கலந்து தமிழகப் பண்பாட்டினையும், தமிழ் உணர்வினையும் பரப்பிடத் தொடர்ந்து பணியாற்றுகிறவருமான ஒரு புலவர் பெருமகன் சட்டப்பேரவையின் தலைவராக அமர்ந்தது தனிச் சிறப்புக்குரிய ஒன்றாக அமைந்தது.
முதல் சட்டமன்றத் தொடர் கூட்டத்திலேயே தமிழக வறட்சி நிலை குறித்து விவாதிக்கப்பட்டு, மத்திய அரசின் உதவியை வலியுறுத்தி அரசின் சார்பிலேயே தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்குப் பதில் அளித்த நான்: "இருந்த போது கொடுத்தோம், அது எமது கடமை; இல்லாத போது கேட்கிறோம். இது எமது உரிமை!"
என்று குறிப்பிட்டேன். போர்க்கால நடவடிக்கை போல வறட்சிப் பணிகள் முடுக்கிவிடப்பட்ட விபரங்கள் பேரவை, மேலவைகளில் அறிவிக்கப்பட்டன. அமெரிக்காவிலும், தமிழகத்திலும் அண்ணாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கான செலவினங்களை அரசாங்கம் ஏற்பது தவறில்லை என்ற வாதத்தை அண்ணா ஏற்றுக் கொள்ளவில்லை. கழகச் சார்பில் நிதி வசூலித்து அதனை அரசுக்குச் செலுத்திவிட வேண்டுமென்று அண்ணா அப்போதே எனக்குக் கட்டளையிட்டிருந்தார்.
அதனை நிறைவேற்றும் நிறைவேற்றும் வகையில் தலைமைக் கழகச் சார்பில் அரசுக்குச் செலுத்தப்பட்ட தொகை குறித்த கணக்கு விபரங்களைக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கருத்திருமன் அவர்கள் கேட்டார்கள். "அறிஞர் அண்ணா அவர்களுக்குத் தமிழக அரசு செலவு செய்த சிகிச்சைக்கான தொகையை தி. மு. க. தலைமை நிலையம் கட்டிய வகையில் முதலாவதாக 12-9-68 அன்று ரூபாய் 38, 770-ம் 21 காசும் திரும்பச் செலுத்தப்பட்டது. இரண்டாவதாக 26-12-68 அன்று ரூபாய் 94,752-ம் 74காசும் திரும்பச்செலுத்தப்பட்டது.
ஆக மொத்தம் ஒரு லட்சத்து முப்பத்தி மூன்றாயிரத்து ஐநூற்றி ஐம்பத்திரண்டு ரூபாயும் தொண்ணூற்றி ஐந்து காசுகளும், தி. மு. க. சார்பில் திரும்பச் செலுத்தப்பட்டுள்ளது." என்ற விளக்கத்தை அவையில் நான் அளித்தேன்! 1977-ல் தமிழ் நாட்டில் அண்ணாவின் பெயரைக் கட்சிக்கு வைத்துக் கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள் சொந்த வீட்டில் குடியிருந்து கொண்டே மாத வாடகையாக இரண்டாயிர ரூபாயை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொண்டு - அதுவும் கடந்துவிட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன் தேதியிட்டு மொத்த வாடகை பெற்றுக் கொண்ட அவலத்தை அரங்கேற்றிய காட்சியைக் காணும்போது, அண்ணா அவர்கள் தனது சிகிச்சைத் தொகையைக் கூட அரசுக்குத் தந்துவிட முன்வந்ததையும், அதற்குக் கழகச் சார்பில் நிதி திரட்டிப் பணத்தைத் திருப்பித் தந்ததையும் நினைத்துப் பெருமூச்சு விடாமல் இருக்க முடியுமா?
சட்டமன்றத் தொடர் கூட்டம் முடிவுற்றபோது, பழம்பெரும் விடுதலை வீரரும்-தியாகியும்- சட்டமன்ற உறுப்பினருமான கோமதி சங்கர தீட்சதர் அவர்களுக்கு எண்பது வயது நிறைவையொட்டி அரசின் சார்பில் பாராட்டு விழா ஒன்று ராஜாஜி மண்டபத்தில் நடத்தப்பட்டது. மேலவைத் தலைவராக இருந்த திருவாளர் மாணிக்கவேலு நாயக்கர் தலைமையில் அந்த விழாவில் தீட்சதர் அவர்களுக்கு நான் பொன்னாடை போர்த்திப் பாராட்டினேன். அனைத்துக் கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், தலைவர்கள் வாழ்த்திப் பேசினர்.
ஆஷ் துரையைக் கொல்வது யார் என்று சீட்டுக் குலுக்கிப் போட்ட போது அந்தச் சீட்டில் கோமதி சங்கர தீட்சதர் பெயரும் இருந்ததாம்! ஆனால் குலுக்கலில் வாஞ்சிநாதன் பெயர் எடுக்கப்பட்டதால் அந்தச் செயலுக்கு அவர் சென்றிட நேரிட்டது! சீட்டு மாறி எடுக்கப்பட்டிருந்தால் வாஞ்சிக்குப் பதிலாக கோமதி சங்கரர் பெயரே வரலாற்றில் இடம் பெற்றிருக்கும். அத்தகைய உறுதியும் திடமும் கொண்ட அந்தத் தியாக வாலிபரை அந்தத் திடகாத்திரத் தேகத்துடன் நான் காண நேரிடாவிட்டாலும் எண்பது வயதிலும் எஃகு உள்ளம் படைத்த முதுபெரும் வீரராக அவரைக் கண்டு பூரித்தேன்!
வாழ்த்தினேன்! வணங்கினேன்! பிறகொருமுறை அவரது சொந்த ஊருக்கே கூட சென்று மரியாதை செலுத்தி வந்தேன். தீட்சதர் பாராட்டு விழாவுக்குப் பிறகு, வறட்சித்துயர் துடைக்க எத்தகைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென விவாதிக்க அமைச்சரவை கூடிற்று. மாவட்ட ஆட்சித் தலைவர்களின் கூட்டத்தைச் சென்னையில் கூட்டி வறட்சி நிலை குறித்து கருத்தறியப்பட்டது. பாதகங்களையும் சாதகங்களாக்கிக் கொள்ளப் பணி தொடர்வோம்! என்று மாவட்ட ஆட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பிரகடனம் செய்தேன்.
நீர்வற்றிப் போயிருக்கும் நேரம்தான் ஏரிகளின் கரைகளை உயர்த்தவும், தூர்வாரி ஆழப்படுத்தவும் ஏற்ற நேரம்-அந்தப் பணியைச் செம்மையாகச் செய்து முடித்துவிட்டால் பின்னர் மழை பொழியும்போது ஏரிகளின் கொள் அளவு அதிகமாகும் என்பன போன்ற பல கருத்துக்களை எடுத்துரைத்தேன். துயர் தணிப்புப் பணிகளுக்காக மேலும் ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. வறட்சி நிலைமைகளை விவரித்து உடனடி உணவு தானியமும், நிதி உதவியும் கோர நிதியமைச்சர் மதியழகன் அவர்களும், வேளாண்மைத்துறை அமைச்சர் கோவிந்தசாமி அவர்களும் டெல்லிக்கு விரைந்தனர்.
மத்திய அரசு, அவர்களது கோரிக்கையை ஏற்று உடனடியாக இருபதாயிரம் டன் அரிசியை வழங்க முன் வந்தது. இதற்கிடையே 9-3-69 அன்று புதுவை மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தி. மு. கழகம் 15 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி 3 இடங்களையும், சுயேச்சைகள் 2 இடங்களையும், காங்கிரஸ் 10 இடங்களையும் பெற்று தி. மு. க. கம்யூனிஸ்டு கட்சிகளின் கூட்டணி அரசு உருவாயிற்று! காங்கிரசின் வலிமை வாய்ந்த தலைவரான வெங்கடசுப்பா ரெட்டியாரை கழக வேட்பாளர் டி.
ராமச்சந்திரன் தோற்கடித்தது பெரும் சாதனையாகப் புகழப்பட்டது! காலையில் ஒரு முதல்வர்-மாலையில் ஒரு முதல்வர்-என்று நிலையற்ற ஆட்சிகளைக் கண்டு களைத்துப் போயிருந்த புதுவை மாநிலத்தில் முதல் முதலாக ஒ
ரு நிலையான ஆட்சியைத் தந்த பெருமை தி. மு. க. கம்யூனிஸ்டு கூட்டணி அரசுக்கே உண்டு! அந்த வெற்றிக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீகும் துணை நின்றது! கழகத்தைச் சேர்ந்த நண்பர் பரூக் அவர்கள் முதல்வராகப் பொறுப்பேற்றார். நண்பர்கள் இராமசாமி, டி. ராமச்சந்திரன், ஆறுமுகம் ஆகியோர் கழக அமைச்சர்களானார்கள். நண்பர் சுப்பையா அவர்கள் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அமைச்சரானார். 1967-ல் தமிழகத்தில் ஏற்பட்ட மாற்றம், 1969-ல் புதுவையிலும் ஏற்பட்டது.
