நெஞ்சுக்கு நீதி
சங்கம் சரணம் கச்சாமி! · 146 / 391
சங்கம் சரணம் கச்சாமி! அரசியல் மேதைகளில் ஒருவரான கே.சந்தானம் அவர்கள் 4-2-69 "இந்து" பத்திரிகையில் ஒரு நீண்ட கட்டுரை எழுதினார். "The Task Before D. M. K. Leaders" என்ற தலைப்பிட்ட அந்தக் கட்டுரையில் தி.மு.க. தலைவர்களின் முன்னேயுள்ள பணி என்ன என்பதை அவர் குறிப்பிட்டிருந்தார். கட்டுரையின் சில பகுதிகளை இப்போது காண்போம். முதலமைச்சர் திரு. சி. என். அண்ணாதுரை அவர்களின் மறைவு, துரதிருஷ்டவசமான ஒன்றாகும்.
விவேகமும் செயல் நுட்பமும் நிறைந்த தலைவர்கள் நாட்டிலே மிகவும் குறைவாக இருக்கும்போது திரு. அண்ணாதுரையைப் போன்ற திறமையுள்ள ஒருவரின் மறைவு ஒரு பெரிய தேசிய இழப்பாகும். அவருடைய திறமைக்கும் அரசியல் ஆற்றலுக்கும் ஆழ்ந்த அறிவுக்கும் உணர்ச்சி வயப்படாத தன்மைக்கும் பொருத்தமான புகழுரைகளை நாடு முழுவதுமுள்ள தலைவர்கள் செலுத்தியிருக்கிறார்கள். தமிழ் நாட்டின் அரசியல் எதிர்காலத்தை சம்பந்தப்படுத்தக் கூடிய பிரச்சினையை உள்ளடக்கிய பெரிய சூழ்நிலை அவருடைய மறைவின் விளைவால் ஏற்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் உள்ள தி. மு. க. கட்சியும் வெளியிலே உள்ள அதன் அமைப்பும், பண்டித நேரு அவர்களின் மறைவுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியும் காங்கிரஸ் அமைப்பும் இருந்த நிலையை ஒத்து இருக்கிறது. காங்கிரசுடன் ஒப்பிடும்போது தி.மு.கழகம், புதியதொரு அமைப்பான போதிலும் அண்ணாதுரை அவர்களின் கட்சிச் செல்வாக்கு, நேரு அவர்களின் செல்வாக்கிற்குக் கொஞ்சமும் குறைந்ததல்ல. 1967 பொதுத் தேர்தலுக்கு மூன்றாண்டுகளுக்கு முன்னால் 1964-ஆம் ஆண்டு நேரு மறைந்தார் என்பதை நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும்.
அவருடைய சக தோழர்கள், அவருக்குப் பின் யார் என்பதிலும் அமைச்சரவையைத் திரும்ப அமைப்பதிலும் உட்பூசல் சச்சரவு எல்லாம் ஏற்படுமென எண்ணினார்கள். இதன் விளைவு 1967 பொதுத் தேர்தலில் ஏற்பட்ட சீர்கேடான முடிவுகளின் மூலம் தெரிந்தது. எனவே தி.மு.கழகத்தின் தலைவர்கள், தங்களுடைய கட்சியின் எதிர்காலம் முழுமையான ஒற்றுமையிலேதான் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளாவிட்டால் 1972-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பே கட்சியிலே ஒற்றுமையற்ற நிலைமையேற்பட்டு அதனைச் சந்திக்கவேண்டிய சங்கடம் ஏற்பட்டுவிடும்.
இப்போதுள்ள முதலும் முக்கியமானதுமான பிரச்சினை முதலமைச்சராக அடுத்து யார் வருவது என்பது பற்றிய தலைமைத் தேர்தலாகும். அதிலே முக்கிய தேவை அடுத்து வருபவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருக்க வேண்டுமென்பதோடு தேர்தலுக்குப் பிறகு முழுக்கட்சியின் ஒத்துழைப்பைப் பெற்றவராகவும் கட்சியை நடத்திச் செல்லக் கூடியவராகவும் இருக்கவேண்டும். இருதரப்பையும் திருப்தி செய்வதற்காக அரசுத் தலைமைப் பதவியையும் கட்சித் தலைமைப் பதவியையும் பிரிப்பதற்குரிய மோசமான எண்ணம் ஏற்படலாம்.
இந்த இரட்டை முறைதான் காங்கிரஸ் அமைப்பைப் பலவீனப்படுத்தியது. ஆகையால் அது தி. மு. க. வுக்கு நடைமுறைத் தற்கொலையாக அமையும். சட்டமன்றத்திலும் கட்சியிலும் எதிர்ப்புக்கு இடமற்ற ஒரேயொரு தலைமை அமைவதுதான் மக்களிடையே ஆதரவை அதிகரிக்க இன்றியமையாத ஒன்றாக இருக்கும். மத்திய அரசுப் பொறுப்பில் இருந்து ஆற்றல் வாய்ந்த நிர்வாகி எனப் பெயர் பெற்றவரும்-அரசியல் அரங்கில் புகழ் வாய்ந்தவரும் "இந்தப் பிரச்சினை குறித்து இவரது கருத்து என்ன?"
என்று அரசியல் வித்தகர்கள் எதிர்பார்க்கக்கூடிய அளவுக்கு அறிவாளியாகத் திகழ்ந்தவருமான திரு. கே. சந்தானம் அவர்களின் எச்சரிக்கையின்படி அடுத்த பொதுத் தேர்தலில் கட்சியில் ஒற்றுமையற்ற நிலைமை ஏற்பட்டு விடவில்லையென்றாலும் 1972-ஆம் ஆண்டு அந்த நிலைமை வரவே செய்தது! ஆனால் 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஏற்கனவே இருந்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையான 138 என்பது 185 ஆக உயர்ந்து தமிழக வரலாற்றில் ஒரு புதுமையைச் செய்து காட்டியது கழகம்!
அவற்றையெல்லாம் பிறகு எழுதுகிறேன். கட்சியில் பெரும்பான்மையோரின் கருத்துப்படி நான் முதல்வர் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன் என்றாலுங்கூட பெரும்பான்மை பலத்தையே ஒரு சர்வாதிகார வலிவாக ஆக்கிக்கொள்ள நினைத்திடாமல் எல்லோரையும் அரவணைத்துக்கொண்டு ஆட்சியையும், கட்சியையும் நடத்திடவே எல்லா வகையிலும் முயற்சி மேற்கொண்டேன். ஒதுங்கியிருக்கும் நாவலரை அறவே கட்சியிலிருந்து ஒதுக்கிவிட வேண்டுமென்று எனக்கு நெருங்கியவர்கள் சிலர் யோசனை கூறினார்கள்.
அவற்றை நான் காதில் போட்டுக் கொள்ளாதது மட்டுமல்ல; அந்தப் போக்கு மிகத் தீதானது என்றும் கண்டித்தேன். நியாயமாகத் தனக்குக் கிடைத்திருக்க வேண்டிய முதல்வர் பொறுப்பு கிடைக்கவில்லையென்ற மனத்தாங்கல் நாவலருக்கு ஏற்படுவது இயல்பே என்று நான் கருதியதால் அவரைச் சமாதானப்படுத்திக் கழகத்தை வலுக்குறையாமல் நடத்திச் செல்ல வேண்டுமென்றே முனைந்து செயல்பட்டேன். அமைச்சரவையின் இரண்டாவது பட்டியல் வெளியிடுவதற்கு முன்பு அவரை இணைத்துக்கொள்ளலாம் என்று நம்பிக் காத்திருந்தேன்.
ஆனால் அவரைச் சுற்றியிருந்த சிலர் என் முயற்சிக்குத் தடையாக இருந்து வெற்றி பெற்றுவிட்டனர். பிப்ரவரி 13-ஆம் நாள் அமைச்சரவை இரண்டாவது பட்டியல் வெளியிடப்பட்டு பிப்ரவரி 15-ஆம் நாள் பதவி உறுதிமொழி எடுத்துக் கொள்வதாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதற்குள் நாவலர் அவர்களை அமைச்சரவையில் இடம்பெறச் செய்ய நானும் முயன்றேன்! நண்பர்கள் அன்பில் தர்மலிங்கம், மன்னை நாராயணசாமி, பொன்மலை பராங்குசம் போன்றவர்களையும் அவரிடம் அனுப்பிப் பேசச் செய்தேன்.
இதற்கிடையை 11-2-69 "விடுதலை" இதழில் தந்தை பெரியார் அவர்களே கையெழுத்திட்டு ஒரு பெரிய தலையங்கமே எழுதினார். அதில் சில பகுதிகளை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். "அண்ணா அவர்கள் மறைந்தவுடன் நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. எதிர்காலம் இருட்டாகியிருக்கிறது" என்று கூறி மனவேதனை அடைந்தேன்.
என்றாலும், இன்று அண்ணா மறைவு தவிர்க்க முடியாதது என்றும், இருட்டு நிலை நீங்கி வெளிச்சம் ஏற்பட்டு வருகிறது என்றும் கருதத்தக்க அளவுக்கு நிலைமை ஏற்பட்டு வருகிறது. அமைதி அடைகிறேன். காரணம், அண்ணாவின் மறைவு அண்ணாவின் இரண்டு ஆண்டு ஆட்சிக்கு நம் நாட்டில் எந்த ஆட்சிக்கும் கிடைத்திராத ஒரு மகத்தான பெருமையை அளித்திருக்கிறது என்பதேயாகும். அப்படிப்பட்ட பெருமையான ஆட்சிக்கு அண்ணாவுக்குப் பின் அந்த ஆட்சிபீடத்தில் அமர, கலைஞர் கருணாநிதி அவர்களை ஆட்சிக்குழுவினர் ஏகமன தாகத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.
கலைஞரும் பதவி ஏற்றுக் கொண்டுவிட்டார். அதுமட்டுமல்லாமல் "நான் அண்ணாவின் அடிச்சுவட்டைப் பின்பற்றியே நடந்துகொள்வேன்" என்று உறுதி கொடுத்தே பதவியில் அமர்ந்திருக்கிறார். இதுதான் நான் "இருட்டு வெளிச்சமாகிறது" என்று சொன்னதின் பொருளாகும்.
கலைஞரின் ஆட்சி மக்களுக்கு அண்ணாவின் ஆட்சி போலவே பாராட்டுதலுக்குரிய ஆட்சியாகவே நடந்துவரும் என்றே நான் நம்புகிறேன். அதனாலேயே தமிழ் மக்கள் அனைவரையும் கலைஞரது ஆட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தரவேண்டுமென்று வேண்டிக்கொண்டேன்... வேண்டிக்கொள்கிறேன்...கலைஞர், அண்ணாவை விட யோசனையாளர் ஆனதால் அவர் தமிழர் நலனை-உரிமையை எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்க மாட்டார் என்று எதிர்பார்த்தே தமிழருக்கு உறுதி கூறுகிறேன்.
இந்த நிலையில் நமக்கு ஏற்பட்ட-ஏற்படக்கூடாத கெட்ட வாய்ப்பு என்னவென்றால், நாவலர் அவர்களுடைய ஊடலேயாகும். இந்த ஊடல் முற்றினால் கேடாக-பகையாக முடியுமே என்று கருதித்தான் ஏற்படக் கூடாத காரியம் என்கிறேன். மந்திரி பதவி, கலைஞருக்கோ நாவலருக்கோ சொந்தமான பதவிகள் அல்ல. அது தமிழர் சொத்தாகும். நாவலரும் கலைஞரும் டிரஸ்டிகளே. இதை இருவரும் உணரவேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன். இதில் உரிமையோ மானமோ பார்க்கக்கூடாது என்பதுதான் என் எண்ணம்.
பொதுநலத்தில் உரிமையோ மானமோ பார்ப்பது தத்துவப்படி சுயநலமாகும். இராஜாஜி அவர்கள் ஒரு காலத்தில் என்னை மந்திரிசபை அமைப்பை ஏற்றுக்கொண்டு. நான் இஷ்டப்பட்டால் தனக்கும் ஒரு மந்திரி பதவி கொடு, என்பதாகக் கேட்டார். அதில் உரிமையையோ மானத்தையோ கருதவில்லை. தன் இனத்துக்கு அதனால் கூடியதைச் செய்யலாம் என்பதுதான் அதன் தத்துவமாகும். நாவலர் கலைஞரைவிட மூத்தவர்; இணங்கிப் போக வேண்டிய பிரச்சினை ஏற்படுமானால் அது நாவலருக்குத்தான் கடமையாகும்.
நாவலர், தனது நிலைக்கு ஆயிரம் சமாதானம் சொன்னாலும், பதவி கிடைக்காததால்தான் ஊடல் கொண்டார் என்று பெரிதும் மக்கள் கருதுவார்கள். இதனால் நான் ஏதோ ஒரு சார்பாய்ப் பேசுவதாக சிலர் கருதலாம். நான் எந்த சார்பாகவும் பேசவில்லை. தமிழர் சார்பாக, பரிதாபத்திற்குரிய தமிழர் நல சார்பாகப் பேசுகிறேன். இரு சார்பிலும் தூண்டிவிடுபவர்கள் இருப்பார்கள். அதற்கு ஆளாகாமல் தாங்களே ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு, ஊடல் முறிக்க முந்தியவர்கள் யார் என்று மக்களுக்குத் தெரியாத அளவுக்கு இணங்கி ஒன்றுபட வேண்டிக்கொள்கிறேன்.
ஏனெனில் அதுதான் உண்மைக் காதலுக்கு அறிகுறியாகும். கடைசியாகக் குறிப்பிடுவதற்குக் கலைஞரும் நாவலரும் மன்னிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு ஒன்றைக் குறிப்பிடுகிறேன். ஏனெனில் ஊடல் முறியாமைக்குக் காரணம் யார் எதைச் சொன்னாலும் மக்கள் உண்மையை அறிந்து கொள்வார்கள் என்று கூறி முடிக்கிறேன்."
பெரியாரின் வயதென்ன - அறிவென்ன - ஆற்றல் என்ன - அவரிடம் முறையே செயலாளராகவும் குடியரசுத் துணை ஆசிரியராகவும் ஒரு காலத்தில் பணிபுரிந்த நாவலரையும் என்னையும் எவ்வளவு மதித்து, எத்துணைப் பணிவுடன் வேண்டுகோள் விடுத்து விடுதலையில் எழுதினார் என்றால்; ஏன்? எதற்காக? அவரும் அறிஞர் அண்ணாவும் கட்டிக்காத்த இந்த இயக்கத்தின் அடிப்படை உணர்வுகள் ஒற்றுமையின்மையால் சிதைந்து விடக் கூடாது என்பதற்காகத்தானே தவிர வேறில்லை.
பெரியார் குறிப்பிட்டதுபோல நாவலரின் ஊடல் தீரவில்லை. அமைச்சரவை இரண்டாவது பட்டியல் வெளியிடப்பட்டு பிப்ரவரி 15-ஆம் நாள் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பும் நடைபெற்றது. அமைச்சர்களுக்குரிய இலாக்காக்களும் அறிவிக்கப்பட்டன. பொது நிர்வாகம், போலீஸ், தேர்தல்கள், மதுவிலக்கு, சட்டமன்றம், செய்தித்துறை ஆகியவை முதலமைச்சர் பொறுப்பில்! அமைச்சர் மதி - நிதித்துறை, வருவாய்த்துறை, விற்பனை வரித்துறை! அமைச்சர் கோவிந்தசாமி - விவசாயம், உணவு, மீன் வளம், காட்டிலாக்கா!
அமைச்சர் சத்தியவாணிமுத்து - சுகாதாரம், அரிசன நலத்துறை, சுற்றுலா, அரசு அச்சகத்துறை! அமைச்சர் மாதவன் - தொழில், சட்டம்! அமைச்சர் சாதிக்பாட்சா - பொதுப்பணித்துறை! அமைச்சர் ப. உ. சண்முகம் - தொழிலாளர் நலம்! அமைச்சர் ஆதித்தனார் - கூட்டுறவு, போக்குவரத்துத் துறை! அமைச்சர் முத்துசாமி - உள்ளாட்சித்துறை! அமைச்சர் கே. வி. சுப்பையா - அறநிலையத்துறை, வீட்டு வசதித்துறை! அமைச்சர் ஒ.பி. ராமன் - மின்சாரத் துறை!
பிப்ரவரி 21-ஆம் நாள் சட்டசபை கூடும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டு விட்டது. மாற்றார் சிலர் எதிர்பார்த்தது போலக் கட்சியில் பெரும்பிளவு - அல்லது பகையுணர்ச்சி தோன்றாவிடினும்கூட அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில சலசலப்புகள் தென்பட்டன. அவை பெரிய அளவில் உருக்கொள்ளாவிடினும் கூட, அதுகூடக் கட்சிக்கும் ஆட்சிக்கும் தீமை விளைவிக்குமென்று அஞ்சிய பெரியார் அவர்கள் மீண்டும் "விடுதலை" இதழில் 14-3-69-லும், 15-3-69-லும் இரண்டு தலையங்கங்களைத் தனது கையெழுத்திட்டு எழுதினார்.
"கட்சித் தலைவரின் முதற்கடமை கட்சியின் கவுரவத்தைக் காப்பதுதான் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். என் கட்சி சாதாரண கட்சியானாலும், நான் உபதலைவரை நீக்கினேன். காரியதரிசியை நீக்கினேன். அதனால் எனக்கோ என் கட்சிக்கோ ஒரு கெடுதியும் ஏற்பட்டு விடவில்லை. பொதுமக்களுக்கு ஒன்று மட்டும் சொல்வேன். தி. மு. கழகத்திற்கு உழுதுபயிரிட்டவர் அண்ணாதான். அதற்கு நீர்ப்பாய்ச்சி நல்ல விளைச்சலை உண்டாக்கியவர் கலைஞர்தான்.
நாளைக்குக் கலைஞர் இல்லாவிட்டால் பதவிக்கு ஏராளமான மெம்பர்கள் கிடைக்கலாமே ஒழிய, கட்சியைக் கட்டிக்காக்க கட்சி அங்கத்தினர்களில் ஒரு பத்துபேர் ஆதரவை அடைய அங்கத்தினர் யாரும் இல்லை என்பதுதான் என் கருத்து. எனவே, இன்று தி. மு. க. கட்சிக்கு வேண்டியது கட்டுப்பாடு, ஒழுங்குமுறை நடவடிக்கைதான். தி. மு. க. வினால் மக்களுக்கு ஆகவேண்டிய காரியம் ஏராளமாக இருப்பதால் இதை நானாக - என் சொந்த முறையில் கடமையை முன்னிட்டு எழுதுகிறேன்."
இவ்வாறு 14-ந் தேதி எழுதிய பெரியார், 15-ந் தேதி விடுதலையில் மேலும் சிறிய கவலையுடன் பின்வருமாறு தனது பேனாவை ஓட்டியிருந்தார். அது வருமாறு: "திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிடர் கழகத்தைப் போலவே சமுதாயத் துறையில், அதன் அடிப்படைக் கொள்கையில், வெற்றிப் பாதையில் செல்லுகிறது என்று சொல்லத்தக்க வண்ணம் இருந்து வருகிறது. ஆகவே திராவிடர் கழகமோ, திராவிட முன்னேற்றக் கழகமோ தனது இலட்சியத்தை கொள்கையை சிறிதும் குற்றம் குறையின்ற வெற்றி வழியில் பின்பற்றி தொண்டாற்றி வருகிறது.
இதை உலகிற்கு ஒரு புதுமை என்றுதான் சொல்ல வேண்டும். உலகில், குறிப்பாக இந்தியாவில் சமுதாயத்துறையில் இதுபோலத் தொண்டாற்றிய ஸ்தாபனம் இதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்றே சொல்லலாம். நல்ல ஸ்தாபனங்களுக்கு அறிகுறி என்னவென்றால், 1. முதலாவது தலைவனுக்குக் கீழ்ப்படிதல்; 2. கொள்கைகளுக்குக் கீழ்ப்படிதல்; 3. ஸ்தாபனத்தை கவுரவப்படுத்துதல்; எதை உதாரணமாகக் காட்டி இதைச் சொல்லுகிறேன் என்றால் பவுத்த ஸ்தாபன முறையை அனுசரித்து சொல்லுகிறேன்.
1. "புத்தம் சரணங் கச்சாமி" 2. "தம்மம் சரணங் கச்சாமி" 3. "சங்கம் சரணங் கச்சாமி." பொருள்: புத்தனுக்கு (தலைவனுக்கு) வணக்கம். தம்மம் - கொள்கைக்கு வணக்கம். சங்கம் - ஸ்தாபனத்துக்கு வணக்கம். இம்மூன்றும் முறைப்படி இல்லாதவர் யாராய் இருந்தாலும் அவர் பவுத்தர் அல்ல. அதாவது ஸ்தாபனத்திற்குக் கட்டுப்பட்டவரல்ல என்பதுதான் பொருள். அந்த நிலை ஏற்பட்டால் தமிழன் கதி என்ன ஆகும்? பழிவாங்கும் படலம் தானே? வேறு யார் பதவிக்கு வந்தாலும் ஆட்சி கைப்பற்றப்பட்டாலும் நடைபெறும்.
ஆகவே இன்று தி. மு. க. வில் தலைவரை மதிக்காதவர்கள், நாளை தங்கள் மதிப்பையே இழந்துகொள்ளும் செயலில் ஈடுபட்டவராவார்கள் என்பதை நினைப்பூட்டவே இதை எழுதுகிறேன்." இவ்வாறு பெரியார் எழுதியதற்கு மறுநாள் பிப்ரவரி 16 தமிழகமெங்கும் அண்ணா நினைவுநாள் கடைப்பிடிக்கப்பட்டது. நானும் அமைச்சர்களும், கழக முன்னோடிகளும், நிர்வாகிகளும் செயல் வீரர்களும் அமைதி ஊர்வலமாக அண்ணா சதுக்கத்திற்குச் சென்று மலர் வளையம் வைத்தோம்.
கழகப் பொதுச் செயலாளரான நாவலர் அந்த ஊர்வலத்தில் கலந்துகொள்ளாமல் திருவல்லிக்கேணி தொகுதி சார்பாகத் தனியாக ஒரு அமைதி ஊர்வலம் நடத்தினார். ஊடல் தீரவில்லை! ஆனாலும் உணர்வுகள் ஒடுங்கிப்போய் விடவில்லை! அன்று மாலை தியாகராய நகரில் சென்னை மாவட்டச் செயலாளர் நீல நாராயணன் தலைமையில் நடைபெற்ற அண்ணா நினைவு நாள் கூட்டத்தில் நான் பேசினேன். அந்தப் பேச்சின் சில பகுதிகளை இப்போது நினைவு படுத்துகிறேன
். அண்ணன் இருந்து அரசோச்சிய இடத்தில் நான் அமர்ந்திருக்கிறேன். அமர்த்தப்பட்டிருக்கிறேன். கைப்பெட்டியில் பல்லாயிரக்கணக்கான ரூபாயை எடுத்துக்கொண்டு ரயில் பயணத்திற்குப் போகிறவன், கைப்பெட்டியைத் தொலைத்துவிட்டு அழுது கொண்டிருக்கிறான். பின்னர் ஊர்ப் போய்ச் சேர்கிற அளவுக்காவது ஒரு பத்து ரூபாய் நோட்டு தனது சட்டைப் பையில் இருப்பது கண்டு அதை எடுத்து டிக்கட் வாங்கிக்கொண்டு ஊர் போய்ச் சேருகிறான்.
பல்லாயிரக்கணக்கான ரூபாயுள்ள பெட்டியாக - கருவூலமாக இருந்த அண்ணாவை நாம் இழந்தோம். பயணத்திற்குப் பயன்படுகிற பத்து ரூபாய் நோட்டாக மதித்து என்னைப் பயன்படுத்தியிருக்கிறீர்கள்." தியாகராய நகரில் நான் பேசிய அதே நாளில் திருவல்லிக்கேணியில் அண்ணா நினைவு நாள் கூட்டத்தில் பொதுச் செயலாளரான நாவலர் பேசினார்! சென்னையில் இரு வேறிடங்களில் கூட்டங்கள்! பேசப்பட்ட சொற்கள் ; பிளவு மனப்பான்மையை வளர்க்கவில்லையென்றாலுங்கூட - ஒரே நாளில் முதலமைச்சர் ஒரு கூட்டத்தில் - பொதுச் செயலாளர் மற்றொரு கூட்டத்தில் என்பது - சென்னை நகரில் மட்டுமல்ல; தமிழக முழுவதற்கும் வியப்பு கலந்த வேதனையைத்தான் தந்தது.
ஆனாலும் நாவலர் அவர்கள் மிகுந்த பொறுப்புடன் எச்சரிக்கையாகவும், எதிரிகளுக்கு இடம் தந்துவிடாமலும் அந்தக் கூட்டத்தில் பேசினார். அவரது பேச்சின் முக்கிய பகுதிகளாவன: நான் 1944-ஆம் ஆண்டில் கழகத்தில் அடியெடுத்து வைத்த நாளிலிருந்து இதுவரை எதற்கும் இடையூறாக இருந்தவன் அல்ல. கட்டுப்பாட்டை ஒரு போதும் மீறியவன் அல்ல. ஆனால் அண்ணா அவர்கள் மறைந்த பின்னர் ஒரு நிலைமை மாற்றம் வரும், சூழ்நிலை வரும் என்று தெரிந்தவுடனேயே அந்த முயற்சிக்கு இடையூறாக இல்லாமல் மாறுபட்ட எண்ணத்திற்கு இடம் தராமல் ஒதுங்கிக்கொண்டேன்.
சகஜமான நிலையில்தான் தி. மு.க. சட்டமன்றத் தலைவர் தேர்தலும் நடைபெற்றது. எனக்கோ, கலைஞர் கருணாநிதிக்கோ எள்ளளவும் ஒரு சிறிய கருத்து வேறுபாடும் இல்லை. இன்றைக்கும் இல்லை. என்னுடைய முழு மதிப்பிற்குரிய தன்மையில்தான் கலைஞர் அவர்கள் இருந்து வருகிறார்கள். தி. மு. க. சட்டமன்றக் கட்சித் தலைவர் தேர்தல் நடந்த போது, நாம் அறிஞர் அண்ணாவை இழந்து அழுத கண்ணீரைத் துடைக்க முடியாமல் இருந்தோம். அப்போது கலைஞர் கருணாநிதியைத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற யோசனை வந்தபோது அவர் வருவதானால் ஏகமனதாக வரட்டும் என்று கூறினேன்.
நான் அமைச்சரவையில் அங்கம் வகிக்க முடியாத சில சங்கடங்களின் சூழ்நிலை ஏற்பட்டது. அதற்குரிய காரணங்களை நான் உள்ளத்தில் வைத்துக்கொள்ள வேண்டுமே தவிர பத்திரிகைகளுக்கோ பொது மக்களுக்கோ தெரிவிக்கவேண்டிய அவசியமில்லை; வேண்டுமானால் நாங்களே பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்று தான் நினைத்தேன். 67-ல் அமைச்சரவை அமைக்கப்படும்போது பலர் அமைச்சரவையில் இடம் கேட்டார்கள். அப்போது நான் அண்ணாவிடம் நான் அமைச்சரவைக்கு வெளியே இருக்கிறேன், என்னை விட்டு விடுங்கள், மற்றவர்களுக்குக் கூட நெடுஞ்செழியனுக்கே தரவில்லை என்று கூறிச் சமாதானப்படுத்தலாம் என்றேன்.
கலைஞர் கருணாநிதியும் அவ்விதமே என்னையும் விட்டு விடுங்கள் என்று கூறினார். இதை அண்ணா அவர்கள் தி. மு. க. சட்டமன்றக் கட்சிக் கூட்டத்திலேயே கூறியிருக்கிறார். அண்ணா அவர்கள் மறைந்தவுடனே ஒரு போட்டி என்றால் சரியில்லை; ஐந்து பேர்தான் ஆதரிக்கிறார்கள் என்றாலும் அந்தப் பிளவு வளர்ந்து கட்சியில் சரிவு ஏற்படக்கூடாது. அண்ணாவுக்குப் பிறகு கட்சியை மேலும் வளர்க்க நம்மால் முடியாவிட்டாலும் - அவர் வளர்த்திருந்த அளவுக்காவது வைத்திருக்க வேண்டும் என்ற காரணத்தால் நான் ஒதுங்கிக் கொண்டேன்.
நமக்கிருக்கும் கடமை எல்லாம் - அண்ணா அவர்கள் அமைத்த அரசைத் தொடர்ந்து கட்டிக்காப்பதுதான்! கலைஞர் கருணாநிதியிடம் எனக்குத் தனிப்பட்ட முறையில் மதிப்பு உண்டு. கலைஞர் அவர்களின் அறிவையும், ஆற்றலையும், உழைப்பையும் நான் குறைத்து மதிப்பிடுபவன் அல்ல. கட்சிக்காக கஷ்ட நஷ்டங்களை அனுபவித்தவர் கலைஞர். எனக்குப் பேச - எழுதத்தான் தெரியும். ஆனால் கலைஞர் அவர்களுக்குக் கதை எழுதத் தெரியும் - நாடகம் எழுதத் தெரியும் - கவிதை எழுதத் தெரியும் - நடிப்பாற்றலும் உள்ளவர்.
ஒருமுறை கலைஞர் பிறந்த நாள் விழாவில், நான் கட்டுரை எழுதினேன். அறிவு - ஆற்றலில் - எழுத்து - பேச்சு - நடிப்பு - சினிமா - நாடகம் போன்ற துறைகளில் அறிஞர் அண்ணா அவர்களுக்கு அடுத்தபடியாகக் கலைஞர்தான் என்று எழுதினேன். கலைஞர் கூட என்ன இப்படி எழுதி விட்டீர்களே என்று கேட்டார். ஆகவே அவருக்கும் எனக்கும் எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு யாரும் எதையும் எதிர்பார்க்க வேண்டியதில்லை.
எதிர்க்கட்சிக்காரர்கள் என்னைப் பற்றி எழுதுகிறார்கள் என்றால் கட்சியின் மீதுள்ள நல்ல எண்ணத்திலா எழுதுகிறார்கள்? ஏதாவது பிளவு, சரிவு ஏற்படாதா என்று நினைத்து எழுதுகிறார்கள். அந்தப் பத்திரிகைகளைக்கூட நண்பர்கள் வாங்கக் கூடாது. கலைஞர் கருணாநிதிக்கும் எனக்கும் நெருக்கம் அதிகம். வேறு சிலரைக் கண்டால் கூட நான் ஒதுங்குவேன். 25 ஆண்டுகளாக நானும் அவரும் ஒருமனதாகவே இருந்து வருகிறோம். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நான் படித்துக் கொண்டிருந்த போது எனக்கு இரண்டு ரூபாய் அனுப்பி என்னைப் பேச அழைத்தவரே கலைஞர் கருணாநிதிதான்.
நாமும் வெளியூர் சென்று பேசப் போகிறோம் என்று பெருமையுடன் ரயிலில் ஏறி நான் புறப்பட்டதே கலைஞர் கருணாநிதியால்தான். அத்தகையவருடன் எனக்கு ஏற்பட்ட தொடர்பு இன்றும் மாறவில்லை. கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கும் போது நான் போட்டி வேண்டாம் என்று ஒதுங்கினேன். அமைச்சரவையில் சேர்வது என்பது அவரவரின் தனிப்பட்ட விருப்பம். இப்போதுள்ள அமைச்சரவையில் தனக்கு நம்பிக்கையானவர்களைச் சேர்த்துக்கொள்வது இப்போதுள்ள முதலமைச்சரின் உரிமை.
அதுபோல் அமைச்சரவையில் சேராமல் இருப்பதும் எனது உரிமை. ஆகவே இது எந்த வகையிலும் கட்சிக் கட்டுப்பாட்டை மீறுவது ஆகாது. ஆகவே கழகத் தோழர்கள் எந்த வித பூசலுக்கும், பிளவுக்கும் இடம் கொடுக்காமல் "அண்ணா அமைத்த தி. மு. க அரசைக் கட்டிக்காக்கும் பெரும் பொறுப்போடும் இயங்கிட வேண்டும்."
நாவலரின் இந்தப் பேச்சுக்குப் பிறகும், ஏதாவது வெடிக்கும் என்றே மிகுந்த ஆவலுடன் சிலர் கட்சியின் ஒவ்வொரு அசைவையும் மிக உன்னிப்போடு கவனித்துக் கொண்டிருந்தனர்.
