நெஞ்சுக்கு நீதி
ஒரு கெட்ட வார்த்தை! · 145 / 391
ஒரு கெட்ட வார்த்தை! பி ராங்க்ளின் ரூஸ்வெல்ட் அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பில் இருந்தபோது (1938) அமெரிக்காவின் குறிப்பிடத்தக்க பத்திரிகைகளில் ஒன்றான "எஸ்கொயர்" ஒரு கேலிச் சித்திரம் வெளியிட்டது. நடைபாதையில் ஒரு சிறுவன் "ரூஸ்வெல்ட்" என்று எழுதிக்கொண்டிருக்கிறான்.
அதைப் பார்த்த அவனது அண்ணன், தன் தாயாரிடம், "அம்மா! இதோ பார், தம்பி-ஒரு கெட்ட வார்த்தையை எழுதுகிறான்" என்று கூச்சலிடுகிறான். இதுதான் அந்தக் கேலிச் சித்திரம். "எஸ்கொயர்" ஏட்டில் அதனைக் கண்ட ரூஸ்வெல்ட் ஆத்திரப்படவில்லை. பத்திரிகைகளின் நியாயமான உரிமையைப் பறிக்கும் தண்டனைக்குரிய பயங்கரச் சட்டங்கள் எதையும் கொண்டு வரவில்லை. அந்தக் கேலிச் சித்திரத்தை ரசித்தார். அது மட்டுமல்ல: அதற்குக் கண்ணாடியும், சட்டமும் அமைக்கச் செய்து வெள்ளை மாளிகையில் அவரது படுக்கையறைக் கதவில் மாட்டி வைக்கச் சொன்னாராம்.
இங்கேயும் சில பத்திரிகை அதிபர்கள், ஆதிக்கபுரியினர் ஆலை அரசர்கள், பெரும் பண்ணைக்காரர்கள், சீமான்கள் கோமான்கள் ஒரு கெட்ட வார்த்தையைக் கண்டுபிடித்து வைத்திருந்தார்கள்! அவர்களது பார்வையில் கெட்ட வார்த்தையாகப்பட்ட அந்தப் பெயர்தான் கருணாநிதி என்பது! அதிர்ச்சி தரும் செய்தியென்று குறிப்பிட்டேனல்லவா அதுதான் என்னையே முதலமைச்சராக்க வேண்டுமென்று கழகத்தினர் முடிவெடுத்துக் கொண்டு என்னிடம் வந்ததாகும்.
தமிழகத்தில் சோஷலிஸ்ட் கட்சியின் தூண்களில் ஒருவராக இருந்தவரும், பின்னர் கழகத்தில் இணைந்து மொடக்குரிச்சி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக விளங்கியவருமான ஈரோடு சின்னச்சாமி அவர்கள் தலைமையில் ஒரு பெருங்குழு என்னை வளைத்துக்கொண்டது. பல்வேறு மாவட்டக் கழகச் செயலாளர்களின் தலைமையில் அந்தந்த மாவட்டங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் என் இல்லத்திலே வந்து சூழ்ந்து கொண்டார்கள். அமைச்சர்களில் மதியழகன், சத்தியவாணி முத்து, ஏ.கோவிந்தசாமி, சாதிக்பாட்சா ஆகியோர் முதலமைச்சர் பொறுப்பை நான்தான் ஏற்க வேண்டுமென்று வலியுறுத்தினர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களும் - குறிப்பாக நாஞ்சில் கி. மனோகரன் (நாஞ்சிலார்) மற்றும் கோவைசெழியன் ஆகியோரும் என்னை விட்டு அகலாமல் என்னருகில் இருந்து கொண்டே கட்சியைக் காத்திட இந்தப் பொறுப்பை சுமந்தே தீரவேண்டுமென்று வாதிட்டனர், வற்புறுத்தினர். நாவலர்தான் முதலமைச்சர் எனக் கருதிக்கொண்டிருந்த எனக்கு அந்தப் புதிய திருப்பம், மிகப்பெரும் சோதனையாக அமைந்தது. என் வீட்டாரிடமும், குறிப்பாக என் மருமகன் முரசொலி மாறனிடமும் விளக்கமளித்து அவர்களை விட்டே என்னை ஒப்புக்கொள்ள வைக்கலாமென்று திட்டம் தீட்டினர்.
பெரும்பாலோரின் கருத்தை நிறைவேற்றாமல் பொறுப்பைத் தட்டிக்கழிக்கக் கூடாது என்று புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். என்னை அணுகி, இணங்கிடச்செய்ய முயற்சித்தார். மாறனும், வீட்டாரும் மறுத்தது மட்டுமல்ல; நாவலரே முதல்வராக வரவேண்டுமென அவர்களிடம் எடுத்துரைத்தனர். "அவரைச் சிக்கலில் வைக்காதீர்கள்! அவரை முதல்வராக ஆக்குவதை வீட்டில் யாரும் விரும்பவில்லை" என்று எனக்காக என் வீட்டில் உள்ளோர் வக்காலத்து வாங்கினர்.
"யார் முதல்வராக வரவேண்டுமென்று பெரும்பாலோருடன் கலந்து பேசியபோது, கலைஞர்தான் வரவேண்டுமென்று அனைவரும் தெரிவித்தார்கள். அதற்குப் பிறகு நானும், நீங்கள் தான் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று வற்புறுத்தினேன். இத்தனைக்குப் பிறகும் அவர் சம்மதிக்கவில்லை. மாறனை அனுப்பி வைத்தார். கலைஞருக்கு முதலமைச்சர் பதவி வேண்டாம். அவரைத் தொல்லைப்படுத்தாதீர்கள் என்று மாறன் எங்களிடம் சொன்னார். இது கட்சிக்காக, மக்களுக்காக என்று நாங்கள் சொன்னோம்."
1-4-69 சென்னை ஆயிரம்விளக்கில் கே.ஏ.கிருஷ்ணசாமி தலைமையில் புதிய அமைச்சரவைக்கு நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில் நண்பர் எம்.ஜி.ஆர். அவர்கள் பேசியதுதான் மேற்கண்ட வாசகம்! முதல்வர் பதவியைத் தவிர்த்திட இறுதிவரையில் நான் வாதாடினேன் என்பதற்காகத்தான் இவற்றையெல்லாம் குறிப்பிடுகிறேன். என்னைச் சுற்றி முற்றுகையிட்டவாறு கழகத்தின் முன்னோடிகளும், சட்டமன்றப் பேரவை, மேலவை உறுப்பினர்களும் இருந்த போதுதான் அடையாறு வீரமணி அவர்கள் இல்லத்தில் தங்கியிருந்த பெரியார் அவர்கள் என்னை உடனடியாகச் சந்திக்க வேண்டுமென்று அழைத்தார்கள்.
பெரியார் என்னை அவர் அமர்ந்திருந்த கட்டிலிலேயே அமர வைத்துக்கொண்டு நீண்ட நேரம் என்னுடன் விவாதித்தார். அவர் எடுத்து வைத்த வாதங்களின் முன்னால் என் பிடிவாதம் சக்தியிழந்து போயிற்று என்று கூறவேண்டும். நிலைமையை நாவலரிடம் எடுத்துச் சொல்வதற்காக நான், என்.வி.நடராசன், ப. உ. சண்முகம், ஏ. கோவிந்தசாமி ஆகியோர் அவர் இல்லத்திற்குச் சென்றோம். கட்சியில் பெரும்பாலோர் உணர்வுகளையும், சட்டமன்ற உறுப்பினர் கருத்துக்களையும் விவரமாகக் கூறினோம்.
"இருந்தால் முதல்வராக இருப்பேன்; இல்லையேல் எந்தஅமைச்சர் பொறுப்பையும் ஏற்கமாட்டேன்" என்று திட்டவட்டமாகக் கூறினார். துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டினேன். மறுத்துவிட்டார்! "நீங்கள் அமைச்சராகவும் அவை முன்னவராகவும் இருங்கள். சட்டப்பேரவையில் அமரும் போதுகூட நான், உங்களுக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் உட்காருகிறேன்" எனக் கூறினேன்; அதற்கும் நாவலர் ஒப்பவில்லை. வேறு வழியின்றி; என்னை வற்புறுத்திய நண்பர்களிடம்-என்னை விட்டுவிடுமாறு எவ்வளவோ கேட்டுக் கொண்டேன்.
இரண்டு ஆண்டுக்காலம் அமைச்சர் பொறுப்பில் இருந்த நாவலர் அவர்கள், கட்சியின் அடிமட்டத் தொண்டர்களிடமிருந்து நீண்ட தொலைவு சென்று விட்டார். கல்வித் துறை, தொழில் துறை, அறநிலையத் துறை, மின்சாரத் துறை போன்ற பெரும் இலாக்காக்களை நிர்வகிக்க வேண்டியிருந்ததால் எதிலும் முழுமையாக அக்கறை காட்ட முடியாத நிலைமை - அண்ணா தலைமையில் அமைச்சராகப் பொறுப்பேற்று பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்ள வந்தபோதே கோட்டும் சூட்டும் அணிந்துகொண்டு நாவலர் வந்ததையே கட்சித் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
அந்த உடையையே சாதாரண நாட்களிலும் அவர் அணியத் தொடங்கியதை அண்ணாவேகூட ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் ஒரு நாள் சட்டப் பேரவையிலேயே இடித்துக் காட்டி விட்டார். எனவே, பதவி வந்ததும் எளிமை ஒதுங்கிப்போய் ஒரு வித்தியாசமான புதுமை தலைகாட்டியதை விரும்பாத கழகத்தினர், அவர் முதல்வர் பொறுப்பு ஏற்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தக் குறைபாடுகள் அனைத்தும் திருத்தப்படக்கூடியவை என்று நான் அளித்த விளக்கங்கள் பயனற்றுப் போயின.
9-2-69 அன்று சட்டமன்ற தி.மு.க. கட்சி அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. சட்டமன்றக் கட்சித் தலைவர் எனப்படும் முதலமைச்சர் பொறுப்புக்கான தேர்தலுக்குத் தலைமையேற்குமாறு அமைச்சர் ஏ. கோவிந்தசாமி அவர்களை து. ப. அழகமுத்து முன் மொழிந்து கவிஞர் வேழவேந்தன் வழிமொழிந்தார். வேட்பாளர் பெயர்களை முன்மொழியுமாறு கூட்டத் தலைவர் அறிவிக்கவே எனது பெயரை அமைச்சர் மதியழகன் முன்மொழிந்திட, அமைச்சர் சத்தியவாணி முத்து வழிமொழிந்திட்டார்.
அடுத்து நாவலர் பெயரை சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். ஜே. இராமசாமியும், வி.டி. அண்ணாமலையும் முன் மொழிந்து வழிமொழிந்தனர். உடனே நாவலர் எழுந்து, முதலமைச்சர் பொறுப்புக்கான போட்டியிலிருந்து, தான் விலகிக்கொள்வதாக அறிவித்தார். "முள் முடி" என் தலையில் சூட்டப்பட்டது! அந்த முடியுடன் அண்ணா சதுக்கத்திற்குச் சென்றேன். கல்லறையை என் கண்ணீரால் குளிப்பாட்டினேன். அங்கிருந்து புறப்பட்டு அண்ணியார் அவர்களின் காலில் விழுந்து வணங்கி வாழ்த்துப் பெற்றேன்.
திருப்பதிக்கு திரு. சஞ்சீவ ரெட்டியார் வீட்டுத் திருமணத்துக்குச் சென்றிருந்த பிரதமர் இந்திரா காந்தி அவர்களுக்குச் செய்தி கிடைத்தது. "கருணாநிதியா? மத்திய அரசோடு ஒத்துழைப்பாரா? தகராறு செய்யக் கூடியவர் எனக் கேள்விப்பட்டேனே!" என்று பிரதமர் அங்கேயிருந்த தலைவர்களிடம் ஐயப்பாட்டுடன் கேட்டதாகத் திருப்பதியிலிருந்து வந்த நெல்லிக்குப்பம் நண்பர் கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் என்னிடம் சொன்னார்கள். அடுத்து சில மாதங்களுக்குப் பிறகு, சென்னையில் ராஜாஜி மண்டபத்திலும், சட்டப்பேரவையிலும் அண்ணாவின் திருவுருவப் படங்களைத் திறந்து வைக்க பிரதமர் வருகை தந்தார்கள்.
அப்போது அந்த விழா மேடையில் நான்; "என்னைப்பற்றிப் பிரதமர் அச்சவுணர்வோ அல்லது ஐயப்பாடோ கொண்டதாகக் கேள்வியுற்றேன்! மத்திய அரசுடன் தகராறு செய்வது என்பது எங்கள் நோக்கமல்ல! ஆனால் ஒன்றை நான் தெளிவாகச் சொல்லுவேன்; உறவுக்குக் கை கொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம்" எனப் பேசினேன். 1969 பிப்ரவரி 10 ஆம் நாள் எனது தலைமையில் புதிய அமைச்சரவை பதவி உறுதி மொழி எடுத்துக்கொண்டது. அதற்கு முன்பு பத்திரிகையாளர்கள் என்னைச் சந்தித்து சரமாரியான கேள்விகளைக் கேட்டனர்.
கட்சியில் பெரும் பிளவு ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு அவர்களது கேள்விகளில் தொக்கி நின்றது. "மீண்டும் இன்று நாவலர் நெடுஞ்செழியனைச் சந்தித்தீர்களா?" "இப்போதுகூட அவரைப் பார்த்துவிட்டுத்தான் வருகிறேன். முக்கால் மணி நேரம் அவருடன் பேசினேன்!"
"அவரது மனம் மாறலாமா?" "மாறும் என்ற முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன்." "நேற்றுக்கூட அவர் சில காரணங்களைக் கூறியுள்ளாரே; அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?" நான் அவரிடம் நிரம்ப மதிப்பு உடையவன். ஆகவே அவர் கூறும் காரணங்களைப் பற்றி நான் எந்த விமர்சனமும் செய்ய விரும்பவில்லை. "அமைச்சரவை பதவி ஏற்பு எப்படியிருக்கும்?"
"ஆடம்பரமின்றி எளிமையாக இருக்கும். ஆளுநர் மாளிகையிலேயே சிக்கனமாக நடைபெறும். பதவியேற்பு விழாவிற்காவது வருமாறு நாவலரை அழைத்தேன். அதையும் அவர் மறுத்து விட்டார்!" -இவ்வாறு பத்திரிகையாளர் கூட்டம் நடந்து முடிந்தது. புதிய அமைச்சரவையில், என்னையும் சேர்த்து ஏழு பேர் இடம் பெற்றோம். மதி, ஏ. கோவிந்தசாமி, சத்தியவாணிமுத்து, மாதவன், சாதிக்பாட்சா, மா. முத்துசாமி-இது அமைச்சரவையின் முதல் பட்டியல்! பதவியேற்பு முடிந்ததும் தலைமைச் செயலகத்திற்கு அனைவரும் சென்றோம்.
முதலமைச்சர் அறைக்குள் நுழையும்போது தணலை மிதிப்பது போல் கால்கள் நடுங்கின! அண்ணா அமர்ந்திருந்த நாற்காலியைக் கண்டதும் இதயம் வெடித்துவிடும் போலிருந்தது. எனக்காகக் கொண்டு வரப்பட்ட மாலைகளையெல்லாம் நான் அணிந்து கொள்ளாமல் அவற்றை வாங்கி அண்ணா அமர்ந்திருந்த நாற்காலிக்குச் சூட்டினேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனை முறை எங்களையெல்லாம் அந்த அறைக்கு அழைத்து அண்ணா கலந்துரையாடியிருப்பார் என்பதை நினைத்தபோது நெஞ்சம்-செங்கல் சூளையாயிற்று.
தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளையும் பொதுமக்களையும் சந்தித்து விட்டு, அங்கிருந்தே பெரியாரின் வாழ்த்தைப் பெறப் புறப்பட்டோம். வீரமணி அவர்களின் இல்லத்தில் தங்கியிருந்த பெரியார், அந்தத் தள்ளாத வயதிலும் முக்கி முனகிக் கொண்டே வாஞ்சை பெருகிட எழுந்து நின்று வரவேற்று வாழ்த்தியதோடு, "என் ஒத்துழைப்பு உங்களுக்கு எப்போதும் உண்டு. நான் நேற்று நாகப்பட்டினம் போயிருந்தேன். அங்கெல்லாம் மக்கள் நீங்கள் தேர்வு பெற்றதை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கின்றனர்.
அனைவரது ஆதரவும் உங்களுக்கு உண்டு" என்றார். கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்களிடம் எனக்கு எப்போதுமே ஒரு தனி மரியாதையும் அன்பும் உண்டு. இந்தியாவின் பொது மொழி எதுவாக இருக்கலாம் என்று அரசியல் நிர்ணய சபையில் ஆரம்ப கால விவாதம் நடைபெற்ற போது இந்தியப்பொது மொழியாக இருக்கக்கூடிய முழுத் தகுதியும் பெற்ற மொழி தமிழ் மொழிதான் என்று குரல் கொடுத்த அந்தக் குணக்குன்றின் உணர்ச்சியை மறக்க முடியுமா?
அவரது வாழ்த்தினைப் பெற்றபிறகு ராஜாஜி அவர்களிடம் வாழ்த்து! நான் அந்த மூதறிஞருக்கு அணிவித்த மாலையை அவர் என் கழுத்தில் அணிவித்து என்னைக் கட்டித் தழுவி வாழ்த்து வழங்கினார். கவர்னர் மாளிகையில் வந்து தங்கியிருந்த துணைப் பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களைச் சந்தித்துவிட்டு திருமலைப்பிள்ளை சாலைக்கு வந்தோம். அங்கேதான் பெருந்தலைவர் காமராசர் வாழ்ந்த இல்லம். அவரைச் சந்தித்து வாழ்த்து பெற்றபோது, "இயன்ற அளவுக்கு எனது ஒத்துழைப்பு உங்களுக்கு இருக்கும்.
நன்றாக நடத்தி வாருங்கள்" என்று அவர் மகிழ்ச்சியுடன் கூறினார். பெரியவர் பக்தவத்சலம் அவர்களையும் சந்தித்து அளவளாவி அவரது வாழ்த்துக்களையும் பெற்றோம். கருணாநிதி என்ற சொல் ஒரு கெட்ட வார்த்தையென்று ஒரு சில பகுதிகளில் இருந்து குரல் எழும்பினாலும்கூட மூதறிஞர் ராஜாஜியைப் போன்றவர்கள், அவர்களிடமிருந்து தனித்து நின்று கழக அமைச்சரவையை வரவேற்று வாழ்த்தியதை மறக்க இயலாது. ராஜாஜி அவர்கள் 15-2-69 "சுயராஜ்யா" இதழில் பின் வருமாறு எழுதினார் "அண்ணாவுக்கு அடுத்தபடியாகக் கட்சித் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு.
மு. கருணாநிதிக்கு எனது அன்பான நல்வாழ்த்துகள். தன்மீது சார்ந்துள்ள பொறுப்புகளைப் பொறுத்து அவர் எல்லா வெற்றிகளையும் பெறுவாராக. நேர்மையான - நீதியான - திறமையான நிர்வாகமே அவரது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். அதுவும் அவரது கட்சியின் வலிவை உயர்த்தும்."
குடும்பப் பொறுப்புகள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த தலைவி திடீரெனக் காலமாகிவிடவே, அவளது மகள் - சிற்றாடை கூடக் கட்டத் தெரியாத சிறுமி - அடுக்களை வேலையிலிருந்து வீட்டாருக்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் செய்ய முற்படும்போது குற்றங் குறைகள் இருந்தாலும் அதனைப் பொருட்படுத்தமாட்டார் அன்றோ? அந்த நம்பிக்கையில்தான், தாயற்ற அந்தச் சிறுமியைப்போல் நான் பெரும் பளுவைச் சுமக்கலானேன். புகழ்மிக்க ஆங்கில ஏடுகள் சிலவற்றில் எழுதப்பட்ட தலையங்கங்களும், கட்டுரைகளும் என் கட்டுரைகளும் என் பொறுப்பை எனக்கு உணர்த்தி, நான் ஆற்றவேண்டிய கடமைகளையும் நினைவூட்டத் தவறவில்லை.
"மெயில்" ஆங்கில இதழில் பி. ராமசாமி அவர்களின் கட்டுரை வருமாறு. "டெல்லி வட்டாரத்தில் திரு. கருணாநிதி, ஒரு தீவிரவாதியென்று கருதப்படுகிறார். மொழி விவகாரம் போன்ற பிரச்சனைக்குரிய விஷயங்களில், கட்சியிலே இருக்கிற தீவிரவாதிகளின் முன்னோடியாக அவர் விளங்குகிறார். இடதுசாரிக் கருத்துடையவர்களான டெல்லியில் உள்ள அரசியல்வாதிகள், கருணாநிதியின் தேர்வை முழு மனதுடன் வரவேற்றிருப்பது ஒரு சுவையான விஷயம்."
"இந்துஸ்தான் டைம்ஸ்" ஆங்கில ஏடு, பின்வருமாறு எழுதியது: "அண்ணாவின் வாரிசாகக் கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மொழிப் பிரச்சினையில் மறு பரிசீலனை வேண்டிய கட்டாயத்தை மத்திய அரசுக்கு ஏற்படுத்தும் என்று விஷயம் தெரிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இந்தித் தொடர்பு மொழி விஷயத்தில் விட்டுக்கொடுக்காமல் எதிர்க்கும் கருணாநிதி, மத்திய அரசின் மொழிக்கொள்கை குறித்து மிகவும் வெளிப்படையாக, சமரசப் போக்கிற்குச் சிறிதும் இடம் வைக்காத விமர்சகராக இருந்து வருகிறார் என்பது டெல்லி வட்டாரத்தில் உணரப்பட்டிருக்கிறது."
அமிர்தபசார் பத்திரிகா எனும் இதழில் இப்படி
யொரு கருத்து வெளியிடப்பட்டது. அது, வருமாறு: "திரு. கருணாநிதி, கட்சியிலே இருக்கிற இளம் தீவிரவாதிகளின் அபிமானத்துக்குரிய ஆற்றல் வீரராக விளங்குகிறார். அவர் அண்ணாவின் வாரிசாக ஆகியிருப்பதனால் இந்தி பேசாத மக்களுக்கு அதிக பளுவைத் தருகிற மொழிக் கொள்கையை மத்திய அரசாங்கம் விரைவில் மாற்றித் தீரவேண்டிய அவசியம் ஏற்படலாம்."
"ஸ்டேட்ஸ்மேன்" இந்த ஆங்கில இதழில் எழுதப்பட்ட கருத்து பின்வருமாறு: திரு. கருணாநிதியை சட்டசபைக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்ததின் மூலம், தி. மு. கழகம் - ஒரு பலசாலிக்குப் பின்னால் தனது பேதங்களை விட்டொழித்து ஒன்று சேர்ந்து நிற்க வேண்டுமென்பதில் உள்ள அக்கறையைக் காட்டிக் கொண்டிருக்கிறது. திரு. கருணாநிதி, கண்டிப்புக்கும் கட்டுப்பாட்டை நிலை நாட்டுவதற்கும் பெயர் பெற்றவர். ஒரு மகத்தான தலைவரை இழந்து நிற்கும் இந்த மிகச்சோதனையான நேரத்தில், அக்கட்சிக்கு இத்தகைய தலைவர் தேவையானதே என்று டெல்லி வட்டாரத்தில் உணரப்படுகிறது."
மதிப்பு மிகுந்த அந்த ஏடுகள் சூட்டிய புகழாரத்தைக் கண்டு, என்னை நான் மறந்துவிடாமல் அடிப்படை உண்மையொன்றைத் தெளிவாகப் புரிந்துக்கொண்டேன். மொழிப்பிரச்சினை, மற்றும் பல்வேறு பிரச்சினைகளுக்குச் சரியான தீர்வு ஆட்சியில் மட்டும் அமர்ந்துவிட்டால் போதாது ஆட்சியையே இழக்க நேரிடினும் கூட கொண்ட குறிக்கோள்களை நிறைவேற்றிடக் கழகத்தை மேலும் வலுப்படுத்தி வளர்த்திட வேண்டுமென்பதுதான் அந்த ஏடுகள்மூலம் நான் புரிந்து கொண்ட உணர்வாகும்.
அந்த உணர்வின் காரணமாக என்னுடைய பெயர் ஒரு சிலருக்கு "கெட்டவார்த்தை"யாகக்கூட ஆகிவிடலாம். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத இரு பெரும் தலைவர்களின் கரம் பிடித்து அவர்கள் ஊட்டிய உணர்வினால் வளர்ந்த எனக்கு மட்டும் அதனால் சோர்வு ஏற்பட்டு விடுமா என்ன!
