உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/அதிர்ச்சியூட்டும் செய்தி
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

அதிர்ச்சியூட்டும் செய்தி · 144 / 391

அதிர்ச்சியூட்டும் செய்தி "அ ன்புள்ள திருமதி அண்ணாதுரை அவர்களுக்கு, நான் உங்களையும் திரு. அண்ணாதுரை அவர்களையும் நியூயார்க்கில் சந்தித்தபோது அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றிருந்தது. அதுகுறித்து நாம் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தோம். அவர் விரைவில் குணமடைந்து விடுவார் என்று நான் உண்மையாகவே நம்பினேன். அவருடைய உயிரைக் காப்பாற்றுவதற்கு அவருக்கு சிகிச்சை நடைபெற்ற அந்த இறுதி நாட்களில் எனது சிந்தனைகள் யாவும் உங்களிடமே இருந்தன.

உங்களுடைய கவலையில் நாங்களும் பங்கு கொண்டோம். அவர் கடுமையாக நோயுற்றிருந்தபோதிலும் அவர் உயிர்நீத்த செய்தி எனக்கு அதிர்ச்சியை அளித்தது. ஆனால் உங்களுடைய துக்கம் அளவிடற்பாலது என்பதை நானறிவேன். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்."

இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் ராணி அண்ணியார் அவர்களுக்கு இவ்வாறு கடிதம் எழுதித் தனது கவலையைத் தெரிவித்துக் கொண்டது மட்டுமல்ல; பிப்ரவரி 8-ஆம் நாளன்று சென்னைக்கு வந்தபோது அண்ணாவின் நுங்கம்பாக்கம் இல்லத்திற்குச் சென்று அண்ணியாருக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். அன்று மாலை ஆளுநர் உஜ்ஜல்சிங் அவர்கள் தலைமையில் சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற இரங்கற் பொதுக் கூட்டத்தில் பிரதமர் இந்திரா காந்தி, தந்தை பெரியார், மூதறிஞர் இராஜாஜி, சிலம்புச் செல்வர் ம.பொ.சி., காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப், ஆந்திர முதல்வர் பிரமானந்த ரெட்டி, டாக்டர் ஏ.

லெட்சுமணசாமி முதலியார், ராஜா முத்தையா செட்டியார், ஏ.எஸ்.கே. அய்யங்கார், பி. இராமமூர்த்தி, சென்னை மேயர் வேலூர் நாராயணன், மூக்கையா தேவர், மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் தினேஷ்சிங், சி.சுப்பிரமணியம், ஷெரீப் சுந்தர்லால் நகாதா, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்., மற்றும் நான், நாவலர் நெடுஞ்செழியன், மதியழகன் ஆகியோர் கலந்துகொண்டு கண்ணீர்த் துளிகளால் எழுதப்பட்ட இரங்கல் தீர்மானத்தை மக்கட் பெருங் கடலின் பெருமூச்சுக்கிடையே நிறைவேற்றினோம்.

அண்ணாவின் மறைவுச் செய்தி கேட்டதும் தலைவர்கள் எப்படித் துடித்தனர் - தமிழகம் எப்படித் தவித்தது என்பதை எழுதிக் காட்ட வார்த்தைகளைத் தேடுகிறேன்; கிடைக்கவில்லை! "நடுநிசிக்குப்பிறகு அண்ணாவின் மறைவுச் செய்தி கேட்டு நான் விழித்தேன். எனது துயரம் வார்த்தைகளில் அடங்காது" என அறிக்கை விடுத்தார் ராஜாஜி! எத்தனையோ பிரச்சினைகளில் அண்ணாவுக்கும் ராஜாஜிக் கருத்து மோதுதல்கள் கடுமையாக ஏற்பட்ட துண்டு! 1937-1938ஆம் ஆண்டுகளில் சென்னை ராஜதானியை ஆளுகிற பிரதமர் பொறுப்பை ஏற்றிருந்த ராஜாஜி அவர்கள் இந்தி மொழியைப் பள்ளிகளில் கட்டாயப்பாடமாக ஆக்கியபோது இந்தி எதிர்ப்புத் தளபதியாகப் பெரியாரால் நியமிக்கப்பட்டு ஆறு மாதம் சிறைத் தண்டனை பெற்றவர் அண்ணா!

1952-ல் ராஜாஜி ஆட்சி கொண்டு வந்த குலக் கல்வித் திட்டத்தை எதிர்த்துக் குரல் கொடுத்து, ராஜாஜி வீட்டு வாசலிலேயே மறியல் களம் அமைத்தவர் அண்ணா! தி.மு.கழகத்தை மூட்டைப் பூச்சி என வர்ணிதது அதை நசுக்கி விடுவேன் என்று கர்ச்சித்தவர் ராஜாஜி! அவரது அரசியல் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளாமல் ராஜாஜியை "குல்லுகபட்டர்" என்று குறிப்பிட்டவர் அண்ணா!

இந்தக் கடந்தகால நிகழ்ச்சிகளையெல்லாம் மறந்து 1967-ல் அதே ராஜாஜியும், அண்ணாவும், பி. ராமமூர்த்தியும், காயிதேமில்லத்தும், மூக்கையாதேவரும், ம.பொ.சி.யும் காங்கிரசை எதிர்த்து ஒரே அணியில் நின்றனர். அந்தக் கூட்டணி கண்டு அஞ்சாத காமராஜர் அவர்கள் "நான் படுத்துக் கொண்டே ஜெயிப்பேன்" என்றார்!

அது கேட்ட ராஜாஜி அவர்கள்; "காமராஜர் படுப்பது நிச்சயம், ஜெயிப்பது நிச்சயமில்லை" என்றார்! அப்படியே தான் பொதுத்தேர்தல் முடிவு அமைந்தது. 1967-ல் ஆட்சி மாற்றத்தையே செய்து காட்டிய அண்ணா அவர்களின் மறைவுச் செய்தியால் காமராஜர் சோக வடிவமானார்! அங்கேதான் மனித குலப் பண்பாடு மணியோசையென முழங்குகிறது! "அண்ணாவின் மறைவு, தமிழகத்திற்குப் பேரிழப்பாகும். முதலமைச்சராக அவர் ஆற்றி வந்த தொண்டினை, குறுகிய இரண்டாண்டு காலத்திற்குள்ளாக இழக்க நேர்ந்தது துரதிர்ஷ்டவசமானது."

இரங்கற் செய்தியில் காமராஜர் அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். "எது நடக்கக்கூடாதோ அது நடந்துவிட்டது. எதிர்காலம் இருளடைந்து காணப்படுகிறது. நாலு கோடி தமிழர்களுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்" என்று வெள்ளியிழைத்தாடி வழியே விழிநீர் வழிந்திட துயரச் செய்தி விடுத்த பெரியார் அவர்கள்; மறுநாள் பிப்ரவரி நாலாம் தேதி வானொலியில் உரையாற்றிய போது, "அண்ணா மறைந்துவிட்டார்!"

'அண்ணா வாழ்க!' என்பதற்கிணங்க இனி நடைபெறும் ஆட்சியில் எவ்வித மாறுதலும் இல்லாமல் அவரது கொள்கை வளர்ந்து வரும். ஆட்சியாளர்கள்; தாங்கள் தமிழர்கள், தமிழர்களுக்காக, தமிழர்களாக ஆட்சி செய்கிறோம் என்கிற உணர்ச்சியோடு, மற்ற இனத்தார் காட்டும் இன உணர்ச்சியைத் தங்களுக்கும் வழிகாட்டியாக வைத்துக்கொண்டு அதன்படி நடந்துகொள்வார்கள் என்று கருதுகிறேன். தமிழக மக்கள் அண்ணாவிடம் காட்டிய அன்பு போலவே இன்றைய நமது அமைச்சர்கள் எல்லோரிடமும் அன்பு காட்டிடும் அளவுக்கு பரிவாய் நடந்துகொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்" என்ற விதத்தில் நம்பிக்கையையும் அறிவுரையையும் வெளியிட்டார்.

சென்னை ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உடலைக் காண அலைகடலெனத் திரண்ட கூட்டம் கட்டுக்கடங்காமல் கொந்தளித்தது. மண்டபமே இடிந்து விழுந்து விடுமோ என்ற அச்சம் அனைவருக்கும் ஏற்பட்டது. முதலில் உடலை மண்டபத்தின் வெளி முகப்பில் வைக்காமல் உள்ளேயுள்ள கூடத்தில் வைத்தது பெருந்தவறாகப் போயிற்று. கூட்ட நெரிசலில் நான்கைந்து பேர் உயிர் இழந்தனர். மண்டபத்தைச் சுற்றி அரசினர் தோட்டம் முழுமையும் நிரம்பி வழிந்த கூட்டத்தினர், அண்ணாவின் உடலை மண்டபத்தின் உச்சிக்குக் கொண்டுவந்து காட்டுங்கள் என்று அழுகுரலுடன் முழங்கினர்.

அதற்குள் மண்டபத்தின் உட்பகுதி "சீலிங்" உடைந்து நொறுங்கி எங்கள் மீது கற்கள் விழத் தொடங்கின. மண்டபத்திற்குள்ளே அண்ணாவின் உடலைச் சுற்றி நின்று அந்த உடலுக்குச் சேதம் வந்துவிடாமல் பாதுகாக்கப் போலீசாருடனும், தொண்டர்களுடனும், நான், சத்தியவாணிமுத்து, ப.உ. சண்முகம், ஈரோடு சின்னச்சாமி, துரை முருகன் ஆகியோர் இருந்தோம். போலீஸ் ஐ.ஜி., மகாதேவன், மற்ற அதிகாரிகளுடன் அந்த மண்டபத்திற்குள்ளே மக்கள் வெள்ளம் கரை புரண்டு வந்துவிடாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அவரிடம் கதறிக்கொண்டே சொன்னேன் "எப்படியாவது அண்ணாவின் உடலைப் பாதுகாத்திடுங்கள்" என்று! அதற்குள் அடைபட்டிருந்த கதவுகளை மதயானைகள் முட்டித் திறந்தது போல வெளியிலிருந்த கூட்டம் திறந்துவிட்டது. முருகேசன் என்ற ஒருவர்! வாட்டசாட்டமான உருவம்! லுங்கி கட்டியிருந்தார் - பனியன் போட்டிருந்தார் - அண்ணா உடலருகே வந்து "அய்யோ அண்ணா!"

என்று அலறினார். அப்படியே விழுந்தார். விழுந்தவரை நாங்கள் தூக்கினோம். உயிர் போய்விட்டது. அந்தப் பாசமுள்ள கழகக் கண்மணியின் சவத்தை எங்கே கொண்டு செல்ல முடியும்? அந்தக் கூட்டத்தில் எப்படி வெளியே கொண்டு போக முடியும்? தலைவன் செத்ததற்கு செத்த அந்தத் அந்தத் தங்கத்தை அந்த மண்டபத்தின் ஒரு மூலையிலே கிடத்தினோம். அண்ணாவின் உடலை நானும், ப.உ. சண்முகமும், ஈரோடு சின்னச்சாமியும், சத்தியவாணிமுத்துவும், துரை முருகனும் ஓரிரு போலீஸ் அதிகாரிகளும் தொண்டர்களும் சுமந்துகொண்டு ராஜாஜி மண்டபத்தின் உச்சி மாடிக்கு எடுத்துச் சென்றோம்.

எங்கள் கரங்களிலும், எங்கள் தோள்களிலும் எங்கள் அண்ணனின் உடலைச் சாய்த்துப் பிடித்து கொளுத்துகின்ற வெயிலில் எதிரில் கூடியிருந்த மக்கள் சமுத்திரத்திற்குக் காட்டினோம். அதன்பிறகு மண்டபம் இழுத்துப் பூட்டப்பட்டது. போலீசார் கண்ணீர்ப் புகையைப் பயன்படுத்த வேண்டியதாயிற்று! அழுது அழுது நீர் வற்றிப் போயிருந்த கண்களில் அந்தப் புகை தாக்கவே கூட்டம் சற்றுப் பின்வாங்கியது. அதற்கடுத்து மண்டபத்தின் வெளி முகப்பில் அண்ணாவின் திரு உருவைக் காட்சிக்கு வைத்திட்டோம்!

அவரது முகதரிசனத்தைக் கடைசியாகக் கண்டிடத் துடித்து புகைவண்டிகளில் இடமின்மையால் அவற்றின் கூரைகளில் பயணம் செய்தனர் பல லட்சக்கணக்கானோர்! மதுரையிலிருந்து சென்னை வந்த ஜனதா விரைவு வண்டியில் மேலே அமர்ந்து வந்தவர்கள் நாற்பது பேர், வண்டி கொள்ளிடம் பாலத்தைக் கடக்கும்போது பாலத்தின் மேலேயுள்ள இரும்பு உத்திரங்களில் மோதுண்டுச் சிதறி மாண்டனர். பிப்ரவரி மூன்றாம் நாள் மறைந்த அண்ணாவின் உடல் அடக்கம் மறுநாள் நடைபெற்றது.

தலைநகரமெங்கணும் மனிதர் தலைகளே எனுமளவுக்கு வரலாறு காணாத கூட்டத்தினிடையே அண்ணாவின் உருவத்தைச் சுமந்த பீரங்கி வண்டி நகர்ந்தது. மத்திய அமைச்சர் சவான் அவர்களும் கேரள முதல்வர் நம்பூதிரிபாட் அவர்களும் அந்த இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். சென்னைக் கடற்கரையில் அமைக்கப்பட்ட கல்லறைக்குள் அண்ணாவைத் தாங்கியிருந்த சந்தனப்பேழை வைக்கப்பட்டது. அண்ணா! அண்ணா! அண்ணா! என்ற பேரொலிக்கு முன்னால் வங்கக்கடல் அடங்கிப்போயிற்று!

அண்ணா துயில்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் அமைதிக்கும் அழகிற்கும் பெயர் பெற்ற இடம். ஒரு பக்கம் நீண்ட மணற் பரப்பும் கடலும் இருக்கிறது. இன்னொரு பக்கம் "உழைப்பின் வெற்றி" சிலையும், அதற்கப்பால் கம்பீரமான பல்கலைக்கழகக் கட்டிடமும் இருக்கின்றன. அருகாமையில் தமிழ்க் கவிஞர் கம்பரின் சிலை இருக்கிறது. தன் வாழ்நாள் முழுவதும் கல்வியின் குறிக்கோள் வெற்றிக்காகவும், சாதாரணத் தொழிலாளியின் நல்வாழ்வுக்காகவும் பாடுபட்ட அவர் ஓய்வு பெறுவதற்குப் பல்கலைக்கழகமும் அந்த இரு சிலைகளும் அந்த இடத்தைத் தகுதிவாய்ந்த இடமாக்குகின்றன.

அண்ணாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தைக் குறித்து பம்பாயிலிருந்து வெளிவரும் பிரபல ஆங்கில தினசரியான "டைம்ஸ் ஆப் இந்தியா" மேற்கண்டவாறு எழுதியிருந்தது. பிப்ரவரி 8 - ஆம் நாள் இரங்கற் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் அடுத்த நாள் திருப்பதியில் நடந்த ஒரு திருமண விழாவில் பங்கேற்கச் சென்று விட்டார். அண்ணா மறைந்த அடுத்த சில நிமிடங்களில் சம்பிரதாயப்படி நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் தலைமையில் ஒரு தற்காலிக அமைச்சரவை கவர்னர் மாளிகையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டது நாதழுதழுக்க- இதயம் சுக்குநூறாக - கண்களில் மழைகொட்ட - நாவலரும் மற்ற அமைசர்களான நாங்களும் பதவிப் பிரமாண உறுதிமொழிகளைப் படித்துச் சம்பிரதாயத்தை நிறைவேற்றிவிட்டு இறுதி ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளைக் கவனிக்க முற்பட்டோம்!

அண்ணாவின் சுற்றத்தார் அவரது உடலைக் காஞ்சீபுரத்திற்கே எடுத்துச் சென்று எரியூட்ட வேண்டுமென்று வாதிட்டனர். "அண்ணா, வீட்டுத் தலைவரல்ல; நாட்டுக்குத் தலைவர்! எனவே சென்னையில் அடக்கம் செய்து நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும்" என்று நானும் அரங்கண்ணலும், பரிமளம் முதலியவர்களிடம் உறுதியாகச் சொன்னபிறகு அவர்கள் எங்கள் கருத்துக்கு இணங்கினார்கள்.

"டைம்ஸ் ஆப் இந்தியா" போன்ற ஆங்கில ஏடுகள் சிறப்பித்துக் கூறுகிற அளவுக்கு கடற்கரையின் வெண்மணற் படுக்கையில் அன்னத்தின் தூவியன்ன நுரை பொங்கும் அலைகள் தாலாட்டிட செந்தமிழ்த் தாயின் மூத்த மகன் துயில் கொள்ளத் தொடங்கினார். உயர்ந்த மேடையொன்றில் பொருத்தப்பட்டிருந்த ஒலி பெருக்கியின் முன்னால் போய் நின்றேன். அண்ணாவின் பொன்மொழியாம் அந்த மூன்று சொற்களை மட்டும் உரக்கச் சொன்னேன். கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு!

அந்தச் சொற்கள் பரந்து கிடந்த கடற் பெருக்கின் மீது பரவி, அந்தக் கடலையே வெற்றிகொள்ளத் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தில் எதிரொலித்தன ! பிப்ரவரி ஒன்பதாம் நாள் காலையில் திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்றக் கட்சித் தலைவர் தேர்ந்- தெடுக்கப்படுவார் என்ற அறிவிப்பைத் தற்காலிக முதல்வர் பொறுப்பை ஏற்றிருந்த நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் விடுத்தார்கள். கழகத்தின் முன்னணித் தலைவர்களையெல்லாம் கலந்துகொண்டுதான் நாவலர் அவர்கள் அந்தத் தேதியை அறிவித்தார்.

அந்த நாள் அறிவிக்கப்பட்ட போதும் சரி, அதன் பிறகு இரண்டு நாட்கள் கழிந்தபோதும் சரி, அண்ணாவுக்குப் பிறகு முதல்வராக வரவேண்டியவர் நாவலர்தான் என்ற எண்ணமே என் இதயத்தில் மேலோங்கியிருந்தது. அவரேதான் முதலமைச்சராக வரவேண்டுமென்ற கருத்தை நான் மற்றவர்களிடமும் சொல்லிக்கொண்டிருந்தேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து அண்ணாவின் தம்பிகளாக பெரியாரின் மாணவர்களாக வெளிவந்த நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன், கணியூர் மதியழகன், கடலூர் இளம்வழுதி ஆகியோரிடம் எனக்கு இளமைப் பருவத்திலேயே நெருங்கிய பழக்கம் உண்டு!

அவர்களும் என்னிடம் மிகுந்த அன்பு கொண்டு பழகியவர்கள்! இளந்தாடியுடன் அரிமா முழக்கமிட்டுப் பகுத்தறிவுக் கொள்கைகளை மேடைதோறும் பரப்பி மூட நம்பிக்கைகளைச் சாடும் நெடுஞ்செழியன் அவர்களை நான் மனதார நேசித்ததுண்டு- நேசம், கடந்தகாலக் கதையல்ல! இதை எழுதுகிற காலத்திலும் அதற்கு மோசம் வந்துவிடவில்லை. அவரும் நானும் இணைந்து நூற்றுக்கணக்கான கூட்டங்களில் பேசியதுண்டு! கல்லடிகள், கத்தி, கட்டாரி வீச்சுக்களை அந்தக் கூட்டங்களில் சந்தித்ததுண்டு!

அவர் கோவை ஜி.டி. நாயுடு அவர்கள் விடுதியிலும் நான் அருகே சிங்காநல்லூரில் தங்கிக் கொண்டு ஜுபிடர் நிறுவனத்திலும் பணியாற்றியபோது இருவரும் சேர்ந்து அந்த மாவட்டத்தில் இயக்கப் பிரச்சாரத்திற்குச் செல்லாத கிராமங்களே கிடையாது! இயக்கப் பிணைப்பும், இதயப் பிணைப்பும் எங்களை உற்ற நண்பர்களாக்கியிருந்தது. அந்த நட்பு வளர்ந்தது. கட்சியில் நாவலருக்கு எதிராக நண்பர் சம்பத் போன்றவர்கள் அணிகளை உருவாக்கியபோது, நான் மிக உறுதியாக நாவலர் பக்கமே இருந்து சம்பத் போன்றவர்களின் பகையைத் தேடிக்கொண்டதும் உண்டு!

நாவலருக்கு எதிரான அந்த அணி பிறகு எனக்கு எதிரான அணியாகவே உருவெடுத்து, அதன் அடுத்த கட்டமாக அண்ணாவுக்கு எதிரான அணியாகவே மாற்றம் பெற்றதும் கழக வரலாற்றில் முக்கிய கட்டங்களாகும். அந்த நேரங்களில் எல்லாம் நானும், நாவலர் நெடுஞ்செழியன் அவர்களும், கழகத்தின் மற்ற முன்னோடிகளுடன் இணைந்து கட்சிக்குச் சிறு ஊனமும் வராமல் பாதுகாத்திருக்கிறோம். இவ்வாறு எல்லா வகைகளிலும் என் அன்புக்குரியவரான அவரே முதலமைச்சராக வரவேண்டும் - அவர்தான் வருவார் என்று நான் எதிர்பார்த்ததிலே தவறில்லை.

ஆனால் சட்டமன்ற கழக உறுப்பினர்களில் ஓரிருவர் தவிர மற்ற அனைவரும்-அவ்வாறே பாராளுமன்றக் கழக உறுப்பினர்களில் மிகப் பெரும்பாலோரும் வேறுவிதமாக எண்ணமிட்டுக்கொண்டு பெரும் பெரும் குழுக்களாக என்னை வந்து சந்திக்கத் தொடங்கினர். அவர்களுடைய கருத்து எனக்கு மகிழ்ச்சியூட்டுவதாக இல்லை! அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது!