உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/மூன்று கடிதங்கள்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

மூன்று கடிதங்கள் · 143 / 391

மூன்று கடிதங்கள் இயக்கத் தலைவர்கள், முன்னோடிகள், தொண்டர்கள், மாற்றுக்கட்சி தோழமைக் கட்சியில் உள்ள முன்னணியினர் எனக்கு எழுதும் கடிதங்களை நான் திரும்பத் திரும்பப் படித்து அவற்றில் முக்கியமானவற்றையும் - கட்சிச் சார்பற்ற பெரியவர்கள் எழுதும் மடல்களையும் பல ஆண்டு காலமாகவே பத்திரமாகப் பாதுகாக்கும் பழக்கம் உண்டு! பாசத்தை வெளிப்படுத்தும் கடிதங்களும் உண்டு! நேசத்தைப் பெருக்கும் கடிதங்களும் உண்டு!

அறிவுரை பொழியும் கடிதங்களும் உண்டு! பதவியோ அல்லது உதவியோ நாடும் கடிதங்களும் உண்டு! அந்தக் கடிதங்களிலேயே நான் கண்போல் காத்துவரும் மூன்று கடிதங்களைக் குறிப்பிடுவதின் வாயிலாக மாபெரும் தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்கள் என்பால் கொண்டிருந்த நெருக்கத்தையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துவதைக் காட்டிலும் அந்தக் கடிதங்கள் கழக வரலாற்றின் கட்டங்களை எப்படி உணர்த்துகின்றன என்பதே மிக முக்கியமாகும்.

அண்ணா விட்டுச் சென்ற மிகப்பெரும் பொறுப்பை என் தோளில் சுமந்து கொண்டபோது அந்தக் கடந்த கால நினைவுகள் வராமல் போகுமா? தி.மு.கழகம் பிறந்தது 1949-ஆம் ஆண்டு! அண்ணா மறைந்ததோ 1969-ஆம் ஆண்டு! கழகம் தோன்றிய மூன்றாம் ஆண்டு, 1952-ல் சென்னையில் கழகத்தின் மாநிலப் பொது மாநாடு எஸ்.ஐ.ஏ.ஏ. திடலில் நடைபெற்றதல்லவா; அப்போது கழகத்தின் வலிவென்ன வசதிகள் என்ன? கழகம் பல தலைவர்களின் ஓயாத உழைப்பாலும், தொண்டர்களின் தூங்காத செயல்திறனாலும் நாள்தோறும் வளர்ந்து வளர்ந்து தியாக சரித்திரங்களைப் படைத்த போது அந்த உன்னத சரித்திரத்தில் ஒரு எழுத்தாகக்கூட இடம்பெறாதவர்கள், இடம் பெறத் தயங்கியவர்கள் கழகம் நல்ல வலிவும் பொலிவும் பெற்றபோது இடம் தேடிகளாக மாறிய வேடிக்கைகளையெல்லாம் பார்த்து ரசித்தவர் பலர்!

அந்த ரசனையை நான் மட்டும் அனுபவிக்காமல் இருந்திருக்க முடியுமா? இதோ 1952-ஆம் ஆண்டு சென்னை மாநில மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து அண்ணா எனக்கு எழுதியுள்ள கடிதம்! அண்ணாவின் முன்னேற்றத்திலும், உடல்நலத்திலும், கழக வளர்ச்சியிலும் அக்கறையுள்ள தேவராஜ் முதலியார் அவர்கள் மூலம் மாநாட்டு வேலைகளுக்காக ஒரு பழைய கார் வாங்குவதற்கு ஏ, அப்பா - எவ்வளவு பாடு! அதற்காக ஒரு கடிதம்! இன்று மாநாடுகளுக்கோ, கூட்டங்களுக்கோ சென்றால் சாரைசாரையாகக் கார்கள் ஊர்ந்து வருகின்றன.

ஆனால் அன்று? உண்டியல் எடுத்துச் சேர்த்த பணம் - ஒரு நூறு இருநூறு என்று எண்ணும் பொழுதே ஒரு இன்பம்! அதில் ஆயிரம் என்பது அப்போது எவ்வளவு பெருந்தொகையாக இருந்திருக்கிறது! அதனால்தானே; "தம்பி உன்னிடமிருக்கும் ஆயிர ரூபாயையும் தேவராஜனிடம் கொடுத்து மோட்டார் காரை விரைவில் வாங்க ஏற்பாடு செய்" என்று அண்ணன் அன்றைக்கு எனக்கு மடல் அனுப்புகிறார்.

அந்தப் பணிகள் மட்டுமா - இயக்கத்தின் பல்வேறு பணிகளை அவர் என்னிடம் ஒப்படைத்துவிட்டு அவற்றை நான் நிறைவேற்றிட அவ்வப்போது வழங்கிய ஊக்கம் கொஞ்சமா? 1957-ஆம் ஆண்டு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் தியாகி டாக்டர் சீனிவாசன் அவர்களை எதிர்த்து நின்று பல்லாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணா வெற்றி பெற்றார். ஆனால் அதே காஞ்சித் தொகுதியில் 1962-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஒரு பஸ் முதலாளியான காங்கிரஸ்காரரிடம் அண்ணா போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

அண்ணாவின் ஆற்றல், அவரது பேச்சு, எழுத்து, அறிவுத்திறன், தமிழ் மக்களிடம் பெற்றிருந்த செல்வாக்கு கடல் கடந்து வாழும் தமிழர்களிடமும் அவருக்கிருந்த புகழ்ஒளி, அவற்றில் ஒரு கடுகளவுகூட இல்லாத ஒருவரிடம் அவர் தோற்க நேரிட்டபோது தமிழ் இனமே அழுதது! வெற்றி பெற்றுச் சட்டமன்றத்துக்கு வந்த அந்தக் காங்கிரஸ் பஸ் முதலாளி 1962 முதல் 1967 வரையில் ஒருநாள் கூட அவையில் பேசவில்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது!

அதற்கு முன்பு ஐந்தாண்டு காலம் சட்டமன்றத்தில் அண்ணா ஆற்றிய உரைகள் ஏழைகளின் இதயத்தைப் பிரதிபலிப்பவைகளாகவும் - தமிழ் உணர்வின் பெருங்கடல்களாகவும் - அரசியல் மறைகளாகவும் - ஜனநாயக உரிமை முழக்கங்களாகவும் - இனஎழுச்சி முரசங்களாகவும் அமைந்திருந்தன என்பதை நினைக்கும்போது அந்த அரசியல் வித்தகரை, இலக்கிய பேரறிவாளரை, உலகின் எல்லாப் பகுதிகளிலும் சிதறிக் கிடக்கிற தமிழ் சாதி மக்களின் நம்பிக்கை நட்சத்திரத்தை காஞ்சிபுரம் தொகுதி வாக்காளர்கள் எப்படித்தான் தோற்கடித்தனரோ என வியப்படைவதும் வேதனைப்படுவதும் இயற்கையேயன்றோ! "மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" என்று அண்ணா அவர்கள் அடிக்கடி கூறுவார் என்றாலும் காஞ்சியில் அவருக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பை அவ்வாறு ஏற்றுக் கொள்வதற்கில்லை.

பணபலத்தின் வெற்றியாகத்தான் அந்த வெற்றி காங்கிரசுக்கு அமைந்தது. அந்தத் தேர்தல் முடிவையொட்டி, அண்ணா அவர்கள் சென்னைக் கடற்கரையில் ஆற்றிய பேரூரை குறித்தும் - கழகத்தினர் வற்புறுத்தலுக்கு இணங்க அண்ணா, ராஜ்யசபை உறுப்பினராகப் பொறுப்பேற்றதையும் முதல் பாகத்தில் விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறேன். மாநிலங்களவை உறுப்பினராக டெல்லிக்குச் சென்ற அண்ணா அவர்களின் மனம், தமிழகத்தின் மீதும் - தமிழகத்தின் கலங்கரை விளக்கமாம் கழத்தின் மீதும்தான் சுழன்றுகொண்டிருந்தது.

ராஜ்யசபைக்குள் நுழைந்து "பதவி உறுதிமொழி" எடுத்துக் கொண்டவுடன் அண்ணா எனக்கு ஒரு கடிதம் எழுதினார். என் மன வலிமை குன்றிடும் போதெல்லாம் நான் மாமருந்துகளாகப் பயன்படுத்தி உரம் பெறுவதற்குத் துணை நிற்பவைகளில் அந்தக் கடிதமும் ஒன்று! ராஜ்யசபையில் சி.சுப்பிரமணியம், அழகேசன் மற்றும் கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்கள் அவரிடம் காட்டிய அன்பினை எவ்வளவு இதயப்பூரிப்போடு அவர் வெளியிடுகிறார் என்பதற்கு இந்தக் கடிதம் ஒரு சான்று!

அது மட்டுமல்ல; நெடுந்தொலைவில் இருந்தபோதிலும் - கழகப் பணிகளைக் கவனிக்கும் பொறுப்பில் இடையுறாது நான் ஈடுபடுவேன் என்ற ஆழ்ந்த நம்பிக்கையும் அண்ணாவிடம் உண்டு என்பதையும் இந்தக் கடிதம் கோடிட்டுக் காட்டுகிறது! என்னைக் குறித்து அண்ணா அவர்கள் எத்தனையோ முறை எழுதியிருக்கிறார் - பாராட்டிப் பேசியிருக்கிறார் - அவர் என் விரலில் அணிவித்த வெற்றிக் கணையாழிகூட அப்படியே தானிருக்கிறது! இருப்பினும் இவற்றையெல்லாம்விட அவர் உளம் திறந்து எனக்கு எழுதிய கடிதங்களும் - அந்தக் கடிதங்களில் ஒளிவிடும் அவரது கையெழுத்துக்களும் - படிக்கப் படிக்க பார்க்கப் பார்க்க - எனது பயணத்திற்குக் குறுக்கே எத்தனை இடையூறுகள் வரினும், எவ்வளவு பழிகள் சுமத்தப்படினும் அனைத்தையும் ஊதித் தள்ளிவிட்டு எனக்கு ஊக்கம் தரும் உயிர்ச்சத்துக்களாக அல்லவா உள்ளன!

டெல்லியிலிருந்து அவர் எனக்கு எழுதிய மடலில் ராஜ்ய சபையில் எந்த இடத்தில் உட்கார்ந்திருந்தார் என்பதைக்கூடக் குறிப்பிட மறக்கவில்லை. இரண்டாவது வரிசையில் முதல் இடம்! திருவண்ணாமலை தர்மலிங்கம் டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர் அப்போது! அவர் அண்ணா அவர்களை எவ்வளவு அக்கறையுடன் கவனித்துக் கொண்டார் என்ற செய்தியை அண்ணா உளம் சிலிர்க்க எழுதியுள்ளதைக் காணும்போது தர்மலிங்கத்திற்கு மெய் சிலிர்ப்பது இயற்கைதானே!

அண்ணாவின் தலைமையையும் அவர் கூறும் கருத்துக்களையும் என்ன காரணத்தினாலோ ஏற்றுக் கொள்ளாத பத்திரிகையாளர்கள், தரவேண்டிய முக்கியத்துவத்தை அவருக்குத் தரவில்லை என்ற உண்மையை எவ்வளவு நாசுக்காக இந்தக் கடிதத்தில் அண்ணா வெளிப்படுத்தியிருக்கிறார்! அவர் இருந்து செய்ய வேண்டிய அளவு காரியங்களை நானிருந்து ஆற்றிடுவேன் என்று நம்பிக்கை நாதம் எழுப்பும் அவரது கடிதம்-ஆம்; அந்த மணிக்கரம் தீட்டிய வார்த்தைகள் எனக்கு என் தெய்வமாம் அண்ணா அளித்த வரமல்லவா?

அந்த வரம் பெற்றேன்! புதிய உரம் பெற்றேன்! அவர் கரம் பற்றி நடந்திட்ட எனக்கு அவர் கடைசியாக எழுதிய கடிதமும் ஒன்றுண்டு! தமிழக முதல்வர் பொறுப்பை ஏற்ற அண்ணா அவர்கள், இரண்டு ஆண்டுகள் முற்றுப் பெறுவதற்குள்ளாகவே புற்றுநோயால் தாக்குண்டதையும், அமெரிக்க நாட்டிற்கு சிகிச்சைக்குச் சென்றதையும், தமிழகம் திரும்பிய சில நாட்களுக்கெல்லாம் இயற்கை எய்தியதையும் முன்பே விபரமாகக் குறிப்பிட்டிருக்கிறேன். நியூயார்க் மெமோரியல் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிவுற்ற சில நாட்களுக்கெல்லாம் நோயின் கொடுமையான மரணப் பிடியிலிருந்து தப்பிவிட்டோம் என்ற மகிழ்ச்சி அவருக்கு ஏற்பட்டது.

தாயகம் திரும்பி, தனது தொண்டினைத் தொடரலாம் என்ற உற்சாகத்துடன் அவர் இருந்திருக்கிறார். உடல் மிகவும் மெலிந்துள்ளார் என்றனர் அமெரிக்காவில் அவரைப் பார்த்துவிட்டு வந்தவர்கள். புற்றுநோயின் சேட்டைகள் எத்தகையவை என்பதை அண்ணா பல மருத்துவ ஆராய்ச்சி நூல்களைப் படித்து அறிந்து வைத்திருந்தார்! அவரது வீட்டிலேயே வயதில் இளமையான ஒரு அம்மையாருக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோய் பற்றியதால் அவர் இறந்துவிட்டார்.

அது முதல் புற்றுநோய் குறித்த மருத்துவ ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படிப்பதில் அண்ணாவுக்கு ஒரு ஆர்வம் ஏற்பட்டது. அந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து தடுத்து நிறுத்தி மக்களைக் காப்பாற்ற வேண்டும். அதற்கான ஆராய்ச்சி நிலையங்கள், மருத்துவமனைகள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட வேண்டுமென அவர் அடிக்கடி கூறிக்கொண்டிருப்பார். அப்போதெல்லாம் அந்தப் பொல்லாத நோய் அவரையே பிடித்துக் கொள்ளும் என்று யாருக்கும் தெரியாது.

அவரது மறைவுக்குப் பிறகு அவரது எண்ணத்தை நிறைவேற்றிடத்தான் அண்ணா மறைந்த அடுத்த மாதமே காஞ்சிக்கு அருகாமையில் அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையை அரசின் சார்பில் உருவாக்கிட முயற்சிகளை மேற்கொண்டோம். நியூயார்க்கிலிருந்து திரும்பி வந்து எங்களையும் தமிழ் இனத்தையும் வழிநடத்திச் செல்வார் என்றுதான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். அண்ணாவும் அந்த நம்பிக்கையில்தான் மெமோரியல் மருத்துவமனையிலிருந்து அமெரிக்காவில் இந்தியத் தூதுவராக இருந்த திரு.ஜி.பார்த்தசாரதி அவர்களின் இல்லத்திற்குச் சென்று சில நாட்கள் ஓய்வெடுத்துக் கொண்டார்.

அங்கிருந்து அவர் எனக்கு எழுதிய கடிதம்தான் கடைசிக் கடிதமாயிற்று! அதனைக் கடைசிக் கடிதம் என நினைத்து அவரும் எழுதவில்லை! அதைப் படித்தபோது நானும் அப்படி எண்ணிடவில்லை! அதனால்தான் அந்தக் கடிதத்தில் சென்னையில் இருந்து அவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட "மறவன் மடல்" வார இதழ் முதற்கொண்டு, அவருக்கு சிகிச்சையளித்த டாக்டர் மில்லர் அவர்கள் நம்பிக்கையுடன் சொன்னவற்றையும், தான் உட்கொள்ளும் உணவு, உடலின் எடை, அறுவை சிகிச்சை பற்றிய விவரம், எனது வீட்டார் நலம், அமைச்சர்கள், கழகத்தினர் குறித்த நலம், அன்பில் தர்மலிங்கம் நடத்திய விழா பற்றி நான் எழுதியிருந்ததற்கான உணர்ச்சிமிகு பதில், சென்னை மாநகராட்சித் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமென்று எனக்கு விடுத்த தாக்கீது வரையில் அத்தனையும் இடம்பெற்றன!

நண்பர்கள் ராஜாராமும், இரா.செழியனும் கண்ணை இமை காப்பதுபோல காத்துவருகிறார்கள் தன்னை; என எழுதிய அண்ணா அவர்கள், தனது நோய் நீங்கிய பிறகு முன்பு போல் கடினமாக உழைக்க முடியுமா எனக்கேட்டு, அந்தக் கவலை தன்னை வாட்டியபடி இருக்கிறது என்றும் குமுறியிருக்கிறார்கள்! நோய் நீங்கும் - உயிர் பிழைத்து இன்னும் பல ஆண்டு வாழ்வோம் அப்படி - வாழும்போது முன்பு போலக் கடினமாக உழைக்க முடியுமா என்றுதான் கவலையாக இருக்கிறது!

1968-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் இந்த நினைவு அண்ணாவுக்கு! ஆனால் அதற்குப் பிறகு மூன்று திங்களேதான் அவர் வாழ்ந்தார்! கடினமாக இனிமேல் உழைக்க முடியுமா என்று கவலைப்பட்டவர், அந்தக் கவலை இனி தனக்கில்லையென்று எம்மீது சுமத்திவிட்டுச் சென்றுவிட்டார்! "எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது" என அவரது கல்லறையில் செதுக்கி வைத்துவிட்டு, இனி எனக்கு உறக்கமில்லையென எண்ணியவாறு உழைப்பதற்குப் புறப்பட்டேன்!