நெஞ்சுக்கு நீதி
முதல் பாகம் வெளியிட்ட கதை · 142 / 391
நெஞ்சுக்கு நீதி முதல் பாகம் வெளியிட்ட கதை "நெ ஞ்சுக்கு நீதி" என் வாழ்க்கை வரலாறு எனக் கூறப்பட்டாலும் எனக்கென்று ஒரு தனி வாழ்க்கை கிடையாது. ஒரு இலட்சியத்தை மையமாகக் கொண்டு சுழலும் இயக்கத்தின் வரலாற்றில் நான் ஒரு பகுதி. எனக்குத் தாய், தந்தை, மனைவிகள், பிள்ளைகள், சகோதரிகள் என்றிருந்தாலும் அவர்களில் சிலர் என்னை விட்டுப் பிரிந்தாலும் அல்லது என்னுடன் வாழ்ந்தாலும் நான் குடும்பம் என்று கருதுவதும் என்னையும் ஒரு அங்கமாகப் பிணைத்துக் கொண்டிருப்பதும் இந்த இயக்கம் ஒன்றைத்தானே தவிர வேறில்லை!
அதனால்தான் "நெஞ்சுக்கு நீதி" முதல் பாகம் எழுநூற்று ஐம்பது பக்கங்கள் கொண்ட நூலை வெளியிட்ட விழா நிகழ்ச்சியின் பொழுது டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் கூறிய வார்த்தைகள் இன்னமும் என் நெஞ்சத்தில் எதிரொலித்துக் கொண்டேயிருக்கின்றன. "இது கலைஞருடைய வரலாறு என்பதை விட முப்பத்தைந்து ஆண்டு காலத் தமிழக அரசியல் வரலாற்றையே அவர் தெளிவாக நமக்குத் தந்திருக்கிறார். வரலாறு எழுதுவதற்கும் தகுதி வேண்டும்.
திறமை வேண்டும். மக்களுடைய இதயத்தில் குடியேறியவர்கள் யாரோ, அவர்கள் எழுதுகிற வாழ்க்கை வரலாற்றைத்தான் மக்கள் படிக்க விரும்புகிறார்கள். "நெஞ்சுக்கு நீதி" நூலில் அவருடைய வரலாறு என்பது மிகவும் குறைவு! இயக்கத்தோடு நெருங்கிச் சேர்ந்து வளர்ந்ததாலே இயக்கத்தின் வரலாறுதான் அவருடைய வரலாறே தவிர அவருக்கென்று தனித்த வரலாறு இல்லை."
நாவலர் அவர்கள் இடம் மாறினாலும் அவர் கூறிய அந்தக் கருத்து என் இதயத்தைவிட்டு மாறவில்லை. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேராசிரியர் அன்பழகன் அவர்கள், "கலைஞர் அவர்கள் தன்னுடைய வரலாறு என்று எண்ணிக் கொண்டு எழுதினாலும் அது இந்த நாட்டின் வரலாறாக, மொழியின் வரலாறாக இருக்கிறது. அவருடைய வரலாறு ஒரு தனி வரலாறாக இருக்க முடியாத நிலை பெற்று, ஏறத்தாழ முப்பத்தைந்து ஆண்டு காலமாகிறது" எனக் குறிப்பிட்டதையும் மறந்துவிடாத என்னைச் சுமந்து கொண்டுதான் காலத்தேர் ஓடிக்கொண்டிருக்கிறது.
1975-ஆம் ஆண்டு "நெஞ்சுக்கு நீதி"யின் முதல் பாகம் வெளியிடப்பட்டது. என்னுடைய ஐம்பதாவது வயது நிறைவுற்ற கட்டத்தில்தான் அந்த வெளியீட்டு விழா நடைபெற்றது. நாற்பத்து ஐந்தாவது வயதில் தமிழக முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளான நான்; அந்தப் பொறுப்பேற்ற செய்தியுடன் முதல் பாகத்திற்கு "முற்றிற்று" என்ற முத்திரையைக் குத்தியிருந்தேன். அதற்குப் பிறகு பதினைந்து ஆண்டு காலம் உருண்டோடியிருக்கிறது.
இதோ இன்னும் பதினைந்து நாட்களில் ஜூன் மூன்றாம் நாள் (1983) அறுபதாம் அகவையில் அடியெடுத்து வைக்கிறேன். இனி நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் என்னைப் பொறுத்தவரையில் கல்லறையை நோக்கித்தான் என்றாலும், நான் ஒவ்வொரு அங்குலம் நகரும்போதும் இந்தச் சமுதாயம் குன்றின் மேலிட்ட விளக்காக ஒளி விடுவதற்கான உழைப்பையே வழங்குவதற்கு உறுதிபூண்டிருக்கிறேன். துளி வியர்வை சிந்திடினும் அது காய்ந்து கிடக்கும் இன எழுச்சியைத் துளிர்த்திடச் செய்வதற்காகவே பயன்பட வேண்டுமென எண்ணுகிறவன் நான் என்பதால் என் கண்ணீர், செந்நீர், உயிர்மூச்சு, என்புதோல் போர்த்த இந்த உடம்பு அனைத்துமே இந்த இயக்கத்தின் உயர்வுக்கே அர்ப்பணிக்கப்படட்டும்!
"நெஞ்சுக்கு நீதி" முதல் பாகத்தை வெளியிட்ட நிகழ்ச்சியே கூட, இன்றைக்கும் நினைத்துப் பார்த்தால் என்னை நெகிழ வைக்கக்கூடியது. அந்த நூலின் முதல் பாகம் "தினமணி கதிர்" நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. நெஞ்சுக்கு நீதியைத் தொடர்ந்து எழுதி முடிக்க என்னைத் தூண்டியவர் கதிரின் ஆசிரியராகப் பணியாற்றிய அன்பு நண்பர் ஆற்றல்மிகு எழுத்தாளர் "சாவி" அவர்களாவார். சென்னைக் கலைவாணர் அரங்கில் 1975 ஜனவரி 12-ஆம் நாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போது இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் முக்கிய பொறுப்பேற்றிருந்தவரும், தினமணி கதிர் நிறுவனத்தில் தொடர்புடையவருமான நண்பர் இராமகிருஷ்ணன் அவர்கள் அந்த முதல் பாகத்தை வெளியிடக் குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது அவர்களை அழைத்திருந்தார். குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்திருந்தார். தமிழக ஆளுநர் கே.கே.ஷாவும், விழாவுக்கு தலைமையேற்க இசைவு வழங்கியிருந்தார். விழாவுக்கான நாட்கள் நெருங்கிடவே அழைப்பிதழ்களைக் "கதிர்" நிறுவனத்தார் அச்சியற்றி அனைவருக்கும் அனுப்பி வைத்தனர்.
"என் வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது தொடர்ந்து இருபத்து நான்கு மணி நேரம் நீடித்ததில்லை" என்று நான் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பதுண்டு! அப்படி மகிழ்ச்சியைத் தீப்பந்தம் கொண்டு சுட்டுக் கருக்குபவர்கள் தொலைவில் இருக்கும் எதிரிகளாகவும் இருக்கலாம்; அவர்கள் அதனைச் செய்யத் தாமதமானால் அருகிலிருக்கும் அன்புக்குரியோர் கூட அந்தக் காரியத்தில் கண்ணும் கருத்துமாயிருப்பர்! "நெஞ்சுக்கு நீதி" நூலை வெளியிட வரக்கூடாதென்று இந்தியக் குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது அவர்களுக்குத் தமிழ்நாட்டிலிருந்து "நல்லவர்கள்" சிலர் கடிதங்கள் எழுதி, தந்திகள் அனுப்பி, நேரிலும் சென்று முறையிட்டுக் கொண்டனர்.
அந்த நல்லவர்கள் வேறு யாருமல்ல; சில தேசீயப் பிரமுகர்கள்தான்! கடைசி நேரத்தில் வர இயலாமை குறித்துக் குடியரசுத் தலைவர் செய்தி அனுப்பி விட்டார். "தினமணிக் கதிர்" நிறுவனத்தார் திகைத்தனர். நண்பர் சாவி அவர்கள் குமுறினார். நானோ எழுத்தாளன் மட்டுமல்ல; முதல்வர் பதவியென்ற முள் முடியையும் சூட்டிக் கொண்டிருப்பவன் அப்போது! விழாவுக்கு வர மறுத்துவிட்ட குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது அவர்கள்; அந்தப் பதவிக்குப் போட்டியிடும் பொழுது என் வீடு தேடி வந்து கட்சியின் வாக்குகளைக் கேட்டவர்தான்!
என்ன செய்வது; எப்படியோ தடுக்கப்பட்டு விட்டார்! நான் யாரையும் நொந்து கொள்ளவில்லை. என்னையே தான் நொந்து கொண்டேன்! கதிர் நிறுவனத்தார் என்னிடம் அப்படி ஒரு யோசனையைக் கூறியபொழுதே நான் மறுத்திருக்க வேண்டும்! பதவிச் சிம்மாசனத்தில் வீற்றிருப்போர் வந்து வாழ்த்துவது பராட்டுவது என்பது ஒரு சம்பிரதாயமே தவிர, பாசமும், நேசமும் கொண்டு நம்முடனே இருப்போர் மனந்திறந்து கூறும் சொல்லுக்கு முன்னால் அந்தச் சம்பிரதாயம் சம்மட்டியடி விழுந்த செங்கல்லாய் நொறுங்கிப் போகும் என்பதை என் நெஞ்சம் ஒரு கணம் மறந்து விட்டதால் வந்த வினை!
நூல் வெளியீட்டு விழா நாள் தள்ளிப் போடப்பட்டது! எப்படியும் ஒரு நாள் நடத்தியே தீரவேண்டுமெனத் "தினமணிக் கதிர்" பதிப்பகத்தார் என்னைத் துளைத்து எடுத்தனர். அவர்களது பிடிவாதத்தை வென்றிட என்னால் முடியவில்லை. வேறு வழியில்லாமல் ஒரு நிபந்தனையோடு அந்த விழாவுக்கு ஒப்புதல் அளித்தேன். அந்த நிபந்தனையைப் பதிப்பகத்தினர் ஏற்றுக் கொண்டனர். என் நிபந்தனையை ஏற்று அவ்வாறே அழைப்பிதழ் அச்சியற்றப்பட்டது. 1975 ஏப்ரல் 30-ஆம் நாள் நிகழ்ச்சி!
விழாவுக்குத் தலைவர், கண்ணொளியற்றவரும் தமிழக விழியிழந்தோர் சங்கத் தலைவருமான நண்பர் ஆசிர். நல்லதம்பி! நூலை வெளியிடுபவர் தொழுநோய் மறுவாழ்வு சங்கத்தின் பொதுச் செயலாளர் கவிஞர் முகமது அலி! அவரும் அந்த நோயினால் தாக்குண்டவர்தான்! நூலின் முதல் பிரதியைப் பெறுபவர் செல்வி சாந்தகுமாரி! கால் ஊனமுற்ற சகோதரி! மற்றும் நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன், சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், இனிய நண்பர் அப்துல் சமது, குன்றக்குடி அடிகளார், தமிழறிஞர் கி.
இராமலிங்கனார், காங்கிரஸ் தியாகி டி. செங்கல்வராயன், கதிர் ஆசிரியர் சாவி, திருமதி சந்திரகாந்தி கோவிந்தராஜ் ஆகியோர் பாராட்டுரை! இராமகிருஷ்ணன் வரவேற்புரை! "பார்வையற்ற சமுதாயத்தை மேன்மைப்படுத்தி, கை தூக்கிவிடும். தலைமை இப்பொழுதுதான் கிடைத்திருக்கிறது. பார்வையிழந்த மக்களுக்கு விழியாகவும் வழியாகவும் உள்ள ஒருவரின் வாழ்க்கை வரலாற்றைப் பார்வையற்ற மக்களின் சார்பாகவும் நல்வாழ்த்துக் கூறிப் பாராட்டிப் போற்றுகிறேன்."
- தலைமை வகித்த ஆசிர் நல்லதம்பியின் உரையில் ஒரு சிறு பகுதி இது! "கலைஞர், விளக்காக இருக்கிறார். நாங்கள் ஒளியாக இருக்க ஆசைப்படவில்லை; திரியாகவே இருக்க விரும்புகிறோம்; ஏனென்றால் - ஒளி, எண்ணெய் இருக்கும் வரையில்தான் இருக்கும் ஆனால் திரியோ, எண்ணெய் இல்லாத போதும் இருக்கும்! அதைப் போல கலைஞர் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாங்கள் அவருக்குத் துணையாக இருப்போம்!"
- நூலை வெளியிட்ட தொழுநோய் மறுவாழ்வு சங்கத்தின் பொதுச் செயலாளர் கவிஞர் முகமது அலியின் உறுதிமொழி இது! கால் ஊனமுள்ள சகோதரி சாந்தகுமாரி சக்கர நாற்காலியிலேயே மேடைக்கு வந்து, நூலின் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டு - "நெஞ்சுக்கு நீதியைப் பெற்றுக்கொள்ளும் பாக்கியம் இந்தப் பஞ்சைக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சி" என்று உருக்கமுடன் கூறினார்.
அழைப்பிதழில் ஆசிர் நல்லதம்பி, முகமது அலி, சாந்தகுமாரி ஆகியோரின் பெயர்கள் -அவர்களுக்கு முக்கிய நிகழ்ச்சிகள் தரப்பட்டு வெளிவந்தது கண்டு வெகுண்டவர்கள், விழாக்கோலம் கண்டு கண்கள் சிவக்கச் சினந்தனர். குடியரசுத் தலைவரையும், ஆளுநரையும், முதலமைச்சர் பொறுப்பில் இருந்த நான் இழிவுபடுத்திவிட்டதாகப் பேசினர். எழுதுகோலால் குத்தினர்! ஊனமுற்றோரும் தொழுநோய் இரவலரும் விழியிழந்தோரும் இருக்குமிடமே எனக்கு வழிபடும் ஆலயங்கள் என அறிவித்து அவர்கள் நலனுக்காகத் திட்டங்கள் பலவற்றை உருவாக்கிய நான் அந்த ஆலயத்துத் தெய்வங்களையே விழாவுக்கு அழைக்கச் செய்தது எப்படித் தவறான செயலாகும்!
மனிதர்களைவிடத் தெய்வங்கள் உயர்ந்தோர் என்கின்றனர்! மனிதர்கள் வர மறுத்துவிட்ட பிறகு தெய்வங்களைத் தலைமை தாங்கவும், நூலை வெளியிடவும், முதல் பிரதியைப் பெறவும் அழைத்தது நியாயம்தானே? 1975-ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் இந்த நூல் வெளியீட்டு விழாவில் மட்டுமல்ல; 1969-ல் முதல்வர் பொறுப்பை ஏற்றிடும் வேளையிலேயே வேதனைகளும், சோதனைகளும்தான்! அண்ணாவை இழந்து விட்ட கண்ணீர் வெள்ளத்தில் மிதந்தவாறு தானே கையில் ஆட்சிக் கோலைப் பிடிப்பதற்குத் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நான் தள்ளப்பட்டேன்.
"நெஞ்சுக்கு நீதி" முதல் பாகத்தை முடித்தபோது இறுதி அத்தியாயத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறேன்: வெகுவேகமாகப் பல நிலையங்களில் நிற்காமலே ஓடி வந்த விரைவுப் புகைவண்டி கூட இடையில் ஒரு சந்திப்பில் களைப்பாற்றிக் கொள்ள - நீரோ, நிலக்கரியோ, டீசலோ ஏற்றிக் கொள்ளச் சிறுபொழுது நின்று புறப்படுவது உண்டு! அப்படித்தான் கொஞ்சம் இடைவேளை எனக்கும் தேவைப்படுகிறது! சிறிது இளைப்பாறிய பின்னர் "நெஞ்சுக்கு நீதி"யின் நீடித்த பயணம் இரண்டாம் பாகமாகத் தொடர்ந்து நடைபெறும் என்பதை உறுதியாகக் கூற விரும்புகிறேன்.
ஒன்றை மட்டும் இங்கே நான் தெளிவாகப் பதிய வைப்பது என் கடமையாகும். நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியின் போதும் அண்ணா அவர்களின் நினைவே எனக்கு ஊன்று கோலாய்த் துணைபுரிகிறது. அவருடைய இதயத்தை இரவலாகப் பெற்றுக் கொண்ட உணர்வோடுதான் நான் ஒவ்வொரு கணமும் நடைபோடுகிறேன். அப்போது நான் குறிப்பிட்டுள்ளபடி இனியிருப்பது நீடித்த பயணமோ, குறுகிய காலப் பயணமோ - எனக்குத் தெரியாது! அதுபற்றிய கவலையுமில்லை! நடை தள்ளாடலாம் - தடைபடலாம் - முடிவுற்றுப்போய்விடலாம் - ஆனால் நான் பெற்றுள்ள அந்த உணர்வுகளுக்குத் தள்ளாட்டமில்லை!
முடிவே இல்லை! இல்லவே இல்லை!
