உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

என்னுரை · 141 / 391

என்னுரை மனிதன், நூறாண்டுகளுக்கு மேலும் வாழ்வது என்பது அதிசயச் செய்திகளில் ஒன்று. தொண்ணூறு ஆண்டுகளைக் கடந்து வாழ்பவர்களே மிகச் சிலர்தான். இந்த அடிப்படையில் பார்த்தால், ஐம்பது வயதைத் தாண்டிய நான், வாழ்க்கையில் முக்கால் பகுதிக்கு மேல் முடித்துவிட்ட நிலையில் என் கடந்த கால வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்து "நெஞ்சுக்கு நீதி" என்ற தலைப்பில் இந்தப் பெருநூலின் முதற் பாகத்தைத் "தினமணி கதிர்" இதழில் தொடர்ந்து எழுதினேன்.

இரண்டாம் பாகத்தை "குங்குமம்" இதழில் தொடர்ந்து எழுதினேன். இரண்டாம் பாகத்தை எழுதி முடிக்கும்போது அறுபது வயதைக் கடந்து; இந்த நூல்களுக்கான முன்னுரையை எனது அறுபத்தி இரண்டாவது அகவையின்பொழுது எழுதுகிறேன். இந்த அறுபத்து இரண்டு ஆண்டுகளில் - மிகப்பெரும் பகுதி - பொது வாழ்வுக்கே செலவாகியிருக்கிறது என்பது, என் இதயத்துக்கு ஆறுதலைத்தர வல்லதாகும். எஞ்சியிருக்கும் நாட்களும் சிறப்பாகத் தமிழுக்கும், தமிழின மக்களுக்கும் பொதுவாக மக்கட் பணிக்கே பெரிதும் பயன்பட வேண்டுமென்பது என் தணியாத ஆசை.

நடந்து வந்த பாதையை ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு, "ஏ, அப்பா! இவ்வளவு தூரம் நடந்து விட்டோமா? இனிமேல் நடக்க முடியாது" என்று அயர்ந்து போவதற்குப் பதிலாக - "பரவாயில்லை! இவ்வளவு தூரம் நடந்துவிட்டோம். இன்னும் சிறிது தூரம்தானே!"

என்ற புதிய விறுவிறுப்பைப் பெற்றாக வேண்டும். அந்த விறுவிறுப்பைப் பெறத்தான் என் வாழ்க்கையை நான் திரும்பிப் பார்த்துக் கொள்கிறேன். வாழ்க்கையை ஒரு போராட்டம் என வர்ணிப்போர் உளர்! எனக்கோ; போராட்டமே வாழ்க்கையாகிவிட்டது. போர் வீரனுக்கு மகிழ்ச்சியே கிடையாதா? ஏன் கிடையாது? கொட்டும் குளிரில், பனிப் பாறைகளில் ஊர்ந்து சென்று பகையைத் தாக்கும்போது சூடாக ஒரு கோப்பைத் தேநீர், அவனும் அருந்துவது உண்டு.

அதுவே அவனுக்குப் பெரிய இன்பம். மீனைச் சுவைத்துச் சாப்பிடும்பொழுது, அதன் முள் நாவிலே குத்தி விடுவதுண்டு, அதனால் சிறிது ரத்தமும் கசிவதுண்டு. அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து மீன் துண்டுகளைச் சுவைப்போரைப் பார்த்திருக்கிறோம். சில பேருக்கு மீனின் முள், தொண்டையிலே அடைத்துக் கொண்டு, அவஸ்தைப்படுவதும் உண்டு. என் வாழ்வு, இதில் இரண்டாவது வகை. "உன்னை ஒருவன் இழித்துப் பேசினான்" என்று தன் நண்பனிடம் ஒரு நண்பன் கூறினான்.

அதைக் கேட்ட அந்த நண்பன் வியப்புற்று, "அப்படியா! இருக்காதே! என்னை அவன் இழித்துப் பேசியிருக்கமாட்டானே! நான் அவனுக்கு எந்த உதவியும் செய்யவில்லையே! பிறகு எப்படி அவன் என்னை ஏசியிருக்க முடியும்?" என்று கேட்டான். இந்த உரையாடல் துணுக்கில் இந்த உலகத்தின் படமே தெரிகிறதல்லவா? இத்தகைய உலகில்தான் நமது வாழ்க்கைப் பந்து உருளுகிறது. அந்தப் பந்தை நாம்தான் உதைத்து விளையாட வேண்டும். யாரோ உதைப்பார்கள் சோம்பலாயிருந்தால், அவர்கள் நம்மையும் சேர்த்து உதைப்பார்கள்.

கல்லிலும், முள்ளிலும், கட்டாந்தரையிலும் அடித்து "அவுட்" (Out) ஆகாமல் பந்து, (Goal) கோலுக்குள் நுழைந்திட வேண்டும். (Goal) கோல் பந்தாடுவதில் மட்டும் திறமையைக் காட்டிப் பயனில்லை. வெற்றி தோல்விகள் இயற்கைதான் எனினும் விடா முயற்சியும் கொள்கை உறுதியும் ஓயா உழைப்பும் தேவை. 'ஓய்வெடுத்துக் கொள்க!'

என்று சில மாற்றுக் கட்சி நண்பர்கள் கேலியாகக் கூறினர். "ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்" என்று என் கல்லறையின் மீதுதான் எழுதப்படும் என்று பதில் சொன்னேன். அந்த உணர்வுகளின் தொகுப்புத்தான் இந்த நூல். இது முழுமையானதல்ல. இன்னும் நிறைய இருக்கிறது, எழுத! மூன்றாம் பகுதியாக, அது வெளிவரக்கூடும். முதல் பகுதியைத் தொடர்ந்து எழுதத் தூண்டியவர் என் நண்பர் சாவி. ஆர்வமுடன் தினமணி கதிரில் வெளியிட்டவரும் அவரே!

அவருக்கு என் நன்றி! தொடர்ந்து எழுதுவதற்குத் துணையாக, அவ்வப்போது நான்கேட்ட அரசியல் குறிப்புகளைத் தந்து உதவிய, தி.மு.க. தலைமை நிலைய நண்பர் சண்முகம், தம்பி சண்முகநாதன் ஆகியோர் மறக்க முடியாதவர்கள். இதன் முதற்பதிப்பை, 'தினமணிக் கதிர்' நிறுவனத்தார் வெளியிட்டனர். முதல் பாகத்தின் இரண்டாம் பதிப்பையும், இரண்டாம் பாகத்தின் முதல் பதிப்பையும் "திருமகள் நிலையம்" நண்பர் திரு. இராமநாதன் அவர்கள் வெளியிடுவதற்கு முன்வந்தமைக்கு என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவரது அரிய முயற்சிக்கு என் நன்றி! ★பெற்றெடுத்த தாய் தந்தை ★அறிவூட்டிய பெரியார் ★ஆளாக்கிய அண்ணா ஆகியோருக்கு இது காணிக்கை. பெருந்தலைவர் காமராஜருடன் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாத்துடன் முரசொலி மாறன் எம்.பி.யும் உடன் உள்ளார். இந்தியாவிலேயே முதன் முதலாக மாநில முதலமைச்சர் விடுதலைத் திருநாளில் கொடியேற்றும் உரிமையைப் பெற்று சென்னைக் கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றிய போது. பகுத்தறிவுத் தந்தை பெரியாருக்குச் சென்னையில் சிலை எடுத்த போது...

பாராண்ட ராஜராஜ சோழனுக்குத் தஞ்சையில் சிலை எடுத்த பொழுது உடன் அமைச்சர் மன்னை, அமைச்சர் கண்ணப்பன் ஆகியோர் உள்ளனர். வள்ளுவர் கோட்டம் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்த போது மனிதனை மனிதன் வைத்து இழுக்கும் கொடுமை நீங்க கைரிக்‌ஷா இழுத்துப் பிழைப்பவர்களுக்கு இலவச சைக்கிள் ரிக்‌ஷாவை வழங்கிய போது... இலவச கண்சிகிச்சை முகாம்களில் இலவச மூக்கு கண்ணாடி வழங்கிய போது... விழியிழந்தோர் சங்கத்தலைவரான கண்ணொளியிழந்த ஆசீர்.

நல்லதம்பி தலைமையில் தொழுநோய் மறுவாழ்வு சங்கத்தின் பொதுச்செயலாளர் கவிஞர் முகமது அலி வெளியிட்டார். நெஞ்சுக்கு நீதி (முதல் பாகம்) நூலின் பிரதியை பெற்றுக் கொண்டவர் கால் ஊனமுற்ற செல்வி சாந்தகுமாரி.