உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/நேரு மறைந்தார்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

நேரு மறைந்தார் · 140 / 391

நேரு மறைந்தார் மதுரை சட்ட எரிப்பு அறப் போர்த் தொடர்பாக என் மீதும், என்.வி.என். மீதும் மதுரை கழக முன்னணியினர் மீதும் தொடரப் பட்டிருந்த வழக்கில் 8-5-64-இல் மதுரை மாவட்ட நீதித் துறை மாஜிஸ்டிரேட் அவர்களால் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, எனக்கும் என்.வி.என். அவர்களுக்கும் ஆறுமாதக் கடுங்காவல், முத்து அவர்களின் தலைமையில் சட்ட எரிப்பிலே ஈடுபட்ட ஐவர் அணியினருக்கு ஓராண்டுக் கடுங்காவல். மன்னை நாராயணசாமிக்கு ரூ.

200 அபராதம் கட்டத் தவறினால் இரண்டு மாதக் கடுங்காவல். ஐவர் அணி மட்டும் தண்டனையை ஏற்றுச் சிறைக்குச் சென்று விட்டது. எனக்கும், மற்றத் தோழர்களுக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்துச் சென்னை உயர்நீதி மன்றத்தில் 'அப்பீல்' செய்யப்பட்டது. அதனை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, என்னையும் மற்ற தோழர்களையும் பொறுப்பில் விடுவித்திட ஆணை பிறப்பிக்கப் பட்டது. சென்னையை இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முதற்களமாகத் தேர்ந்தெடுத்து, அங்கே ஆட்சி மொழி பற்றிய அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவினை எரித்திட அண்ணா திட்டமிட்டிருந்ததை அறிந்து அவரை முன்கூட்டியே கைது செய்து ஆறு மாதக் கடுங்காவல் தண்டனையையும் பரிசாக அளித்திட்டதல்லவா காங்கிரஸ் அரசு?

விசையொடிந்த தமிழினந்தான் வீறுகொள்ள- வேற்றுமொழி ஆதிக்கம் தோற்று ஓட- வெங்கொடுமைச் சிறை வாசத்தை ஏழாவது முறையாக ஏற்றிட்ட அண்ணா. 1964 ஜூன் 13 - இல் விடுதலை செய்யப்பட்டார். அன்று விடியற்காலையிலேயே, தமிழகத்திற்கு 'விடிவு காலம்' கொணர்வதற்காக வந்துதித்த அண்ணாவையும் அவரது குழுவினரையும் வரவேற்றிடச் சென்னை மத்தியச் சிறைச்சாலை வாயிலுக்கு நானும் மற்றத் தோழர்களும் சென்றுவிட்டோம். ஏராளமான மலர் மாலைகள்- கைத்தறி ஆடைகள் சிறை மீண்ட தியாகத் திருவிளக்குகளுக்கு அணிவிக்கப்பட்டன.

அப்போது கழகக் கண்மணிகள், தாய் முகம் கண்ட சேய்களாகவே மாறி "இந்தி ஒழிக! தமிழ் வாழ்க! அண்ணா வாழ்க! அறப்போர் வீரர்கள் வாழ்க!" என்று உவகை மேலிட உற்சாகம் பொங்கிட- எழுப்பிய முழக்கங்கள் விண்ணையே பிளப்பதாக எதிரொலித்தன நெடுநேரம்! "உலகின் மனச்சாட்சியாகவே அவர் விளங்கினார்" -என்று பிரிட்டிஷ் ஏடான 'டிரிபியூன்' வர்ணித்திடும் அளவுக்கு வையகம் எங்கணும் புகழ் மணக்க வாழ்ந்திட்டவர் - நடுநிலைமைக் கொள்கைக்காக வாதிட்டவர்-அடிமைத் தளையை அறுத்தெறியப் போரிட்டவர் - பண்டித ஜவகர்லால் நேரு.

அவர், 1964 மே மாதம் 27-ஆம் நாள் இயற்கை எய்திவிட்டார் என்கிற செய்தி உலகையே சோகத்தில் ஆழ்த்திவிட்டது. மாவீரன் கென்னடி மறைந்து ஆறு திங்களே ஆகியிருந்தன; அந்த அதிர்ச்சித் நீ அணைந்திடும் முன்பே - ஆறாத் துயரிலிருந்து மீண்டிடும் முன்பே - நேருவின மரணம் ஜனநாயக நெஞ்சங்களுக்கும் - சமாதான உணர்வுகளுக்கும் - பேரிடியாக விழுந்தது. அவர் கொண்டிருந்த சில கொள்கைகளிடம் - சிற்சில சமயங்களில் அவரிடம் கொப்பளித்திட்ட கோபதாபங்களிடம் கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது எழுந்திட்ட போதிலும், அவற்றுக்காகக் கண்டனக் கணைகளைத் தொடுத்திட்ட போதிலும், அவருடைய தியாகத தழும்புகளைச் - சீர்திருத்த எண்ணங்களைக் - கிழக்கையும் மேற்கையும் உலக அமைதிக்காக இணைத்திட முயன்றிட்ட அவர்தம் இடையறாத முயற்சிகளை - நான் உயர்வானவையாகவே மதித்து வந்திருக்கிறேன்.

நேருவைப் பற்றி ஒரு கணம் நினைத்திடும் பொழுது- குழந்தைகளைக் கண்டால் நேருவும் குழந்தையாகவே மாறிவிடுபவர் தான்; ஆனால் அறிவுத் தெளிவிலே அவர் குழந்தையாக இருந்ததில்லைதான். தம் நெஞ்சத்தில் ரோஜாவை வைத்துக் கொள்வதில் அவருக்கு எப்போதும் அலாதியான ஆசையே; ஆனால் வஞ்சத்தை ஒத்த முள்ளினை அவர் ஒரு போதும் அங்கே வைத்துக்கொண்டதும் இல்லைதான். அவர் உணர்ச்சிவசப்படக் கூடியவரே; ஆனால் மற்ற மனிதர்களின் உணர்வுகளை மதித்திடுவதற்கு அவர் ஒரு நாளும் மறுத்ததும் இல்லை மறந்ததும் இல்லைதான்.

இலட்சியங்களை முழங்கிடுவதில் அவர் எப்போதுமே வேகம் கொண்டவர்தான்; அதே சமயம் அவற்றை நிறைவேற்றுவதில் வெறி பிடித்தவரும் இல்லைதான். "சோஷலிசம்" அவருக்குச் சுவையான பொங்கல்தான்; அதற்காகச் சுத்தி 'அரிவாளைக்' கொண்டு அதனைச் சமைக்கவோ சுவைக்கவோ அவர் நினைத்ததும் இல்லைதான். ஜனநாயக நெறி நின்றே சமதர்மப் பூங்காவைச் சமைத்திட முடியும் என்று உறுதியாக நம்பியவரே நேரு. அத்தகைய சிந்தனைக் கதிரொளியை அவருக்குத் தந்திட்டவரும் மேனாட்டுத் தத்துவ மேதை பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் அவர்களே!

இந்தியத் துணைக் கண்டத்தில் மற்றவர்களுடைய வெறுப்பினைப் பொருட்படுத்தாமல், கடவுள் மறுப்பினைத் துணிந்து துணிந்து சொல்லி தந்தை பெரியார் அவர்கள் எப்படிப் பகுத்தறிவுப் பகலவனாய்த் திகழ்ந்திட்டாரோ, அவ்வாறே மேலைநாடுகளில் தமக்கென்று புதிய பாதையினை வகுத்துக்கொண்டு புதுமைச் சிந்தனைப் பூக்களை உதிர்த்துக் கொண்டிருந்தவரே பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் அவர்கள். இங்கிலாந்தில் தோன்றி 'சோஷலிச' சித்தாந்தங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்த அவர் ஒரு முறை சோவியத் நாட்டிற்குச் சென்றார்.

கார்ல் மார்க்சின் கனவு நனவாகிப் பொதுவுடைமைத் தத்துவம் முதன் முதலாகப் பூத்துக் குலுங்கிடத் துவங்கிய பூமியல்லவா சோவியத் நாடு? ஆனால் அதைப்பார்த்துவிட்டுத் திரும்பிய பின்னரோ 'சோஷலிசம்' வன்முறை மூலம் வளர்க்கப்படுவதை வன்மையாகவே அவர் கண்டித்தார். அதனை ஜனநாயக வழியிலும் சாதிக்கலாம் என்று எடுத்துரைத்தார். 'ஜன நாயக-சோஷலிசம்' என்கிற சொல்லையே உருவாக்கினார். அவருடைய அந்தக் கோட்பாட்டினைத்தான் இந்தியாவிலும் கொணர்ந்திட முயன்றிட்டார் நேரு.

சோஷலிசத்தின் தந்தை பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் தான்; அதனை இந்திய மண்ணில் தளிர்த்திடச் செய்ய முயன்றவர் நேருதான். அவர் மறைந்திட்ட போது சென்னைச் சிறையிலிருந்த அண்ணா அவர்களைச் சந்தித்து நேருவின் மறைவை எடுத்துக் கூறினேன். சிறையில் இருந்தவாறு அண்ணா அவர்கள் நேரு மறைவு குறித்து அனுதாபச் செய்தியொன்று வெளியிட்டார். அத்தகைய மாமேதை - மத வெறியில்லாத பகுத்தறிவாளர். மறைந்தார் என்று அறிந்ததும் ஆறாத்துயரில் நான் ஆழ்ந்திட்டேன்.

நான் அப்போது நேரு பற்றி வானொலியில் அடியிற்கண்டவாறு பேசினேன்: 'கீர்த்தி நிலைத்தது' என்று தலைப்பு. "மே திங்கள் இருபத்து ஏழாம் நாளன்று நம் செவிகளை அந்தச் சோகச் செய்தி தாக்கிற்று. செய்தி அன்று அது; செந்தீ ஜனநாயகப் பாதுகாவலர் ஜவகர் காலமாகிவிட்டார்-நம்பத்தான் முடியவில்லை. ஆனால் நடந்து விட்டதே! மறைவது இயற்கை. மண்ணாவது திண்ணம். மனிதர்கள் வருகிறார்கள், போகிறார்கள். இப்படி இந்த ஆறுதல் வார்த்தைகளாலும் அணைபோட்டுத் தடுக்க முடியாத சோக வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது.

"அத்தகைய பெருஞ்செல்வத்தை இழந்திருக்கிறோம். நம்பிக்கை நட்சத்திரம் மறைந்துவிட்ட ஏமாற்றத்தில் பெருமூச்சு விடுகிறோம். கடும் புயலில் சிக்கிய படகாகத் தவிக்கிறது நாடு. உலகத் தாய் கண்ணீர் வடிக்கிறாள். "உலகம் வல்லூறுகளின் வேட்டைக் காடாக - நாய் நரிகள் விருந்துண்ணும் ரணகளமாக மாறிவிடக் கூடாது எனப்பாடுபட்டு, அவர் பறக்கவிட்ட வெண்புறா, சிறகடித்துத் துடிதுடிக்கிறது. அவர் மறைந்த செய்தி கேட்டு! இமயம் முதல் குமரி வரையில் உள்ளோர் இதயங்களில் எல்லாம் இடம் பெற்றிருக்கும் உண்மையை உத்தமர் காந்தியாருக்குப் பிறகு பெற்றிருந்த ஒரே மனிதர் - ஒரே தலைவர் - பண்டித நேரு.

அவர் இன்றில்லை. அவர் பேணி வளர்த்த ஜனநாயகக் கொள்கை இருக்கிறது. அதனை மேலும் சீர்பெறச் செயல்படுத்துவதுதான் இருப்பவர்கள் மறைந்தவருக்குச் செய்யும் மரியாதையாகும். மறைந்தவர் இந்த மண்ணுக்கு ஆற்றிய பணிகள் ஏராளம். இன்னும் ஆற்ற வேண்டிய இன்றியமையாத பணிகளும் இருக்கின்றன. "அவர் தொட்ட பணிகளைத் தொடர்ந்து வெற்றி காண்பதுதான் அவருக்கு உளமார அமைக்கும் நினைவுச் சின்னமாகும். ஜனநாயகச் சோலையில் - பகுத்தறிவு மேடை கட்டிச் சமாதானக் கொடியை உலகமறிய உயர்த்திப் பிடித்தவர் மறைந்த உத்தமர் நேரு.

அவருக்க நாம் காட்டுகின்ற நன்றி, அந்தச் சோலை வாடாமல் மேடை சரியாமல் பாதுகாப்பதேயாகும். இன்னும் எத்தனையோ வேலைகளை நாடு அவரிடம் எதிர்பார்த்தது. அதற்குள் இயற்கை தன் வேலையை முடித்துக்கொண்டது. கிரீடம் நொறுங்கிவிட்டது. கீர்த்தி நிலைத்துவிட்டது, வாழ்க நேருவின் பெயர்! அன்று (27-5-1964) மாலை. மதுராந்தகம் ஊராட்சிப் பேருந்து நிலையத் திறப்பு விழாவிலே முக்கியமான பங்கினை ஏற்றிட நான் அழைக்கப்பட்டிருந்தேன்.

நேருவின் மறைவினையொட்டி உடனே அதை ரத்துச் செய்திடும்படி சொல்லிவிட்டேன். ஏடுகளுக்கு இரங்கற் செய்தியினை விடுத்ததுடன் அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன்; தற்காலிகத் தலைமையமைச்சர் குல்சாரிலால் நந்தா, திருமதி இந்திரா காந்தி-ஆகியோருக்கு அடியிற்கண்டவாறு ஒரு தந்தியையும் அனுப்பி வைத்தேன். "நம் பேரன்புக்குரிய பண்டித நேரு அவர்களின் திடீர் மறைவு கேட்டு ஆறாத் துயரத்தில் ஆழ்ந்தேன்; என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தலைமையமைச்சர் நேருவின் குடும்பத்தாருக்கும் மற்றவர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்."

2-6-1964 அன்று, நேருவின் மறைவினை யொட்டி இரங்கல் தெரிவித்திடும் வகையில் சென்னை கோகலே மண்டபத்தில் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடாகியிருந்தது மூதறிஞர் ராஜாஜி அவர்கள் பங்கேற்றிட்ட அதில் நானும் கலந்து கொண்டேன். அப்போது நான் அச்சம் பொருந்திய சில எண்ணங்களை அடியிற்கண்டவாறு எடுத்துரைத்தேன்: "மாவீரர் நேரு அவரிகள் 74 ஆண்டுகள் வாழ்ந்தார்; தம் வாழ்நாளில் 9ஆண்டுகள் சிறையிலிருந்திருக்கிறார். 17 ஆண்டுகள் தலைமை அமைச்சராக இருந்திருக்கிறார்.

"இந்தப் பதினேழு ஆண்டை எதிர்பார்த்து அவர் அந்த ஒன்பது ஆண்டுச் சிறை வாழ்வை ஏற்கவில்லை. 'நம் கடமையைச் செய்வோம்; நடப்பது நடக்கட்டும்' என்றுதான் தியாகங்களைச் செய்தார். "அவருக்கு நாட்டு மக்கள்தான் ஆண்டவன்: அவர்களுடைய நெஞ்சந்தான் ஆலயம்; பொதுத் தொண்டுதான் பூசை-நைவேத்தியம் -எல்லாம்! "புயலில் சிக்கிய படகாக நாட்டை ஆக்கி விட்டு அவர் மறைந்து விட்டார். 'நேரு இல்லையே!'

என்று துக்கப்படும் இதே நேரத்தில் இன்னும் எதை எதையோ நினைத்து வேதனைப்பட வேண்டியும் உள்ளது. "அவர் இருந்த நேரத்திலேயே இந்தி பேசாத மக்களுக்குத் தந்த உறுதி மொழியை ஊனப்படுத்தி விட்டார்கள். அவர் போன பிறகு அந்த உறுதி மொழியே உருக்குலைந்து போகுமோ என்ற ஐயம் நம்மை அச்சுறுத்துகிறது. இப்பிரச்சினை எப்படித் தீருமோ எனத் தேம்பியழும் நிலையில் நம்மை விட்டுவிட்டு மாவீரர் மறைந்து விட்டார்."