உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/புரட்சித் தீபம் அணைந்தது
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

புரட்சித் தீபம் அணைந்தது · 139 / 391

புரட்சித் தீபம் அணைந்தது இந்த இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ்க் கவிஞராக மலர்ந்து புரட்சிப் பொறிகளைப்-புதுமைச் சிந்தனைகளைத்-திரட்டுப் பாலொத்த தேன் தமிழ்ச் சொற்களிலே வாரி வீசியவண்ணம் இருந்த அணையாத கவிதைக் கனலாம் பாவேந்தர் பாரதிதாசன் 21-4-1964-இல் சென்னையிலே இயற்கை எய்தினார். ஈன்ற தமிழன்னையே இதயங்குமுறிக் கதறிப் புலம்பிட இலக்கிய உலகமே இடிந்து துவண்டு ஏங்கிப் பதறிட-உலகிலே எந்த மூலையில் தமிழ் பேசிடுவோர் இரைந்து கிடந்தாலும் அங்கெல்லாம் இருளின் நிழல் வேகமாய்க் கவிந்திட - தம்முடைய உடல் வாழ்வை விட்டுப் பிரிந்தார் அந்த ஒப்பற்ற மாக்கவிஞன்.

பாளைச் சிரிப்பு- பசு நெய்யின் நறுமணம் வாளைமீன் துள்ளல்- வரிப்புலியின் கனல் பார்வை- -எல்லாமே இணைந்திட்ட கவிதைச் சுரங்கமே பாரதிதாசன். பாற்கடலைப் பற்றிப் புராணங்கள் பகர்ந்திடக் கேட்டிருக்கிறோம் பாரதிதாசனோ 'பாக்கடலாகவே' பரந்து விரிந்து தமிழ் மண்ணின் நெஞ்சமெல்லாம் நிறைந்து நின்றார். அந்தக் கடலிலே- உவமையழகு- உணர்ச்சித் துடிப்பு- புதுமை நோக்கு- புரட்சி வெடிப்பு- -அனைத்துமே அலைகளாகப் பொங்கியெழுந்து சீறிப் பாய்ந்தன-சிலம்பமும் ஆடின.

அவருடைய உருவமே மிடுக்கானது; அவர் தம் உள்ளமோ அதை விட மிடுக்கானது; அந்த உள்ளத்திலிருந்து வெடித்துக் கிளம்பிய சொல்லாட்சியோ எல்லாவற்றையும் விட மிடுக்கானது; இழிதகைமையை-ஈனச் செயல்களை-மிதித்துத் துவட்டக்கூடியது "கொலை வாளினை எடடா-மிகு கொடியோர் செயல் அறவே!"

-என்பன போன்ற புரட்சி தெறித்திடும் வரிகளை இன்னொருவரால் புனைந்திடத்தான் முடியுமா? "சிற்றூரும் வரப்பெடுத்த வயலும் ஆறு. தேக்கிய நல் வாய்க்காலும் வகைப் படுத்தி நெற்சேர உழுதுழுது பயன் விளைத்த நிறையுழைப்புத் தோள்களெல்லாம் எவரின் தோள் கள்?"- எனக் கேட்டு, "காண்ப தெல்லாம் தொழிலாளி செய்தான்-அவன் காணத் தகுந்தது வறுமையா? பூணத் தகுந்தது பொறுமையா?"

-என்றெல்லாம் தொழிலாளர் தோழராய் உரத்த குரல் எழுப்பிச் சமதர்மப் பூங்காவை சமைத்திட அவர் துடித்த துடிப்பினை யாரே மறுத்திட முடியும்? "தட்டுப்படாதபெரும்-பொருட்கொரு சாதியும் உண்டோடா!-படுவாய் சாதியும் உண்டோடா! மட்டற்ற செம்பொருட்கே-முரண்படும் மதங்கள் உண்டோடா!"

என்று சாதிச்சழக்குகளைச்-சாத்திரச் சடங்குகளை-ஆத்திரத்துடன் சாடிய ஆண்மையாளர்- அரிமாவும்-அவரே! "கோரிக்கை யற்றுக் கிடக்குதண்ணே இங்கு வேரில் பழுத்த பலா!-மிகக் கொடியதென் றெண்ணிடப்பட்ட தண்ணே குளிர் வடிகின்ற வட்ட நிலா!" -என்று பெண்டிர்க்காகக் கண்ணீர் வடித்திட்ட பேரன்புத் தாயுமாவார் அவர்! "தமிழ் எங்கள் உயிர் என்பதாலே-வெல்லுந் தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே!"

-என்று போர்ப்பரணி பாடிய வீர மறவரும் அவரே ஆவார்! திருவாரூரில் தமிழ் மாணவர் மன்றம் என்னும் ஓர் அமைப்பினை உருவாக்கி என்னாலியன்ற தொண்டினை இயற்றி அதன் ஓராண்டு நிறைவு விழாவினை நான் நடத்திய காலை; அதனை வாழ்த்திடும் முகத்தான், அவர் வரைந்தனுப்பிய வீரங்கொப்பளித்திடும் வரிகள் இன்றைக்கும் என் இதயத்திலே ஈரங்காய்ந்திடாமல்தான் எழுச்சியினை-இனமொழி, நாட்டுப் பற்றினைச்-சூடேற்றிய வண்ணமே உள்ளன. இவ்வாறு செந்தமிழ் வளர்ச்சிக்கும்-இந்தி எதிர்ப்பினுக்கும்-தொழிலாளர் நலனுக்கும்-தோகையர் வாழ்வுக்கும்-மொத்தத்தில் திராவிட இன நலனுக்கென்றே தம்மை அர்ப்பணித்துக் கொண்ட அந்தப் பாட்டுலகப் பகலவன் மறைந்தது, தமிழ் மண்ணிற்குப் பேரிழப் பாகவே முடிந்தது-காரிருளையே தந்தது.

'நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா ! காடு கமழும் கற்பூரச் சொற்கோ ! கற்பனை ஊற்றாம் கதையின் புதையல் ! திறம்பாடவந்த மறவன்; புதிய அறம்பாட வந்த அறிஞன்; நாட்டிற் படரும் சாதிப் 'படை மருந்து' ! மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்! அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன் ! ' -என்றெல்லாம் பாரதியாரைப் பற்றிப் பாடினாலும் அந்த வைர வரிகள் தமக்கே பொருந்திடுமாறு வாழ்ந்திட்ட புரட்சிப்பாவலனோ! "ஆசைக் குழந்தைகளே !

அன்பு மனையாளே ! ஓசைப் படாமல் இருப்பீர்; ஒதுங்கிநிற்பீர் ! துன்பத்தைக் கொஞ்சம் சுவை பார்க்கப் போகிறேன் இன்பத்தை நீட்டாதீர் என்னிடத்தில்-" -என்று சொல்லாமல் சொல்லித் துயில் கொண்டு விட்டார் பாமாலை பல தந்திட்ட அந்தப் பாமலை! சென்னை அரசினர் மருத்துக!மனையில் இறந்திட்டார் என்கிற செய்தி எட்டியதுமே நானும் நண்பர்களும் விரைந்திட்டோம் அவர் இல்லத்திற்கு; அவருடைய காலடிகளிலே பூமாலைகளோடு-கண்ணீர் மாலைகளையும் காணிக்கையாக்கினோம் இறுதி அஞ்சலியாக.

கழகத்தின் கொடிகள் எல்லாம் மூன்று நாட்கள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன துக்கத்தின் அறிகுறியாக. ஆனால் அவர் தோன்றி வாழ்ந்த புதுவையிலே அன்றிருந்த காங்கிரஸ் அரசோ எந்த மரியாதையும் செலுத்தவில்லை. கட்சிக் கொடிகளை இறக்குகின்ற மரியாதையைக் கூடக் காங்கிரஸ் கட்சி காட்டிடவில்லை. 1969-இல் உதயமாகிய தி.மு.கழக அரசுதான் புதுவை மாநிலத்தின் புரட்சிக் கவிஞருக்குச் சகல விதமான அரசு மரியாதைகளையும் தெரிவித்தது.

அவர் பிறந்த வீட்டை அரசே விலைக்கு வாங்கி நினைவுச் சின்னமாக்கி அங்கே நூல் நிலையம் ஒன்றையும் நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் அவர் பிறந்த நாளுக்கு அரசாங்க விடுமுறை தந்து விழா எடுத்து வருகிறது. அவர் பாடியுள்ள 'வாழ்வினிற் செம்மையைச் செய்பவள் நீயே!'

என்ற பாடலை அரசு அங்கீகாரம் பெற்ற தமிழ்த் தாய் வாழ்த்து என ஆக்கியது நமது கழகப் புதுவை அரசு. "பாரதி பாடென்று சொன்ன வுடன் பாடிய மறவன் பார் அதி தீரனென்று /பாரதி புகழ்ந்த புலவன்... கனக சுப்புரத்தினம் என்று காத தூரம் இருந்த பெயரைப் பாரதிதாசனென்று கச்சிதமாய்ச் சூட்டிக் கொண்டான்... களம் சென்று தமிழ்காக்கக் கச்சு இதமாய்க் கட்டிக் கொண்டான்... நிமிர்ந்த நோக்கு- நெரித்த புருவம்... நீர்வீழ்ச்சி ஓசை-நெற் கதிர்க்கட்டு மீசை...

பாட்டெழுதும் வித்தையிலே பாரதி-ரசவாதம் கற்றவனாம்- இவனைப் பார்; அதிரசவாதம் கற்றவனாம்- அத்துணை இனிப்பு; இவன் பாட்டில்... வினாக்குறியா?... வெடிக்கும் எரிமலையா? .. புரட்சிக்கவிஞனெனப் புவியொப்பி மாலைபோடப் போதாதோ இவ்வரிகள்?... இவனோர் சுருட்டுக்கவிஞன்-புகைச் சுருட்டுக்கவிஞன்-இவன் புரட்டுக்கவிஞனாவான்; மூடப்பழக்கமெலாம் தலைகீழ்ப் புரட்டுக்கவிஞனாவான்... அமளி துமளி ஆர்ப்பாட்டம் அணிவகுப்பு! அமைதியிலே உலகுவாழப் புதுவைக்குயில்-கூவாதோ?

கருத்துக் கவிஞன்; சற்றுக் கறுத்த கவிஞன் காலக்கவிஞன்: முக்காலக் கவிஞன்... அவன் சுவையாய்த் தமிழுக்கு அருவியின் பாடல்; அமைவாய்க் கண்ட அற்புதம் என்னே! இருண்ட வீட்டில் குடும்ப விளக்கேற்றி வைத்தார்; இசையமுது பொழிந்து, அதற்குப் 'பாண்டியன் பரிசு' பெற்றார்... நமக்குக் குறிஞ்சித்திட்டுமுண்டு 'குயில்' இதழ் நடத்தும்போது... கவிதை; 'அழகின் சிரிப்'பாலே தமிழியக்கம் கவர்ந்துவிட்டார்... அமைதிக்கு நல்ல தீர்ப்பளித்தார்...அவர் காதல் நினைவாலே கவிப் பெண்ணை வாடவிட்டுச் சாவின் 'எதிர்பாராமுத்' தத்தால் பிரிந்துவிட்டார்...

என் ஆசான் பாரதியைப் பார்ப்பேன் எனப் பறந்து விட்டார்..." பம்பாயில் நடைபெற்ற கவியரங்கில் பாரதிதாசனைப் பற்றி நான் பாடிய கவிதை வரிகளில் சிலவே இவை! சென்னையில் இயற்கை எய்திய புரட்சிக் கவிஞரின் சடலம் மறுநாள் 22-4-1964 அன்று புதுவைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கே பெருமாள் கோவில் தெருவிலுள்ள அவரது இல்லத்திலே பார்வைக்கு வைக்கப்பட்டது. 1964-ஆம் ஆண்டில், அண்ணா அவர்களின் பெரு முயற்சியால் ரூ.25,000 கொண்ட பொற்கிழியும், பொன்னாடையும் பாவேந்தருக்கு வழங்கப்பட்டன அல்லவா?

அதே பொன்னாடை அவருடைய சடலத்தின் மீது, இறுதி நாளிலும் போர்த்தப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. சவ ஊர்வலத்தில் கலந்து கொள்ள நானும் சென்னையிலிருந்து புதுவை சென்றேன். நாவலர், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., டி.கே. சண்முகம் முதலான தலைவர்களும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும் ஊர்வலத்திலே கலந்து கொண்டனர். பாவேந்தரின் மறைவினை ஒட்டி அடியிற்கண்டவாறு ஓர் இரங்கல் செய்தியினையும் அப்போது நான் விடுத்திருந்தேன்: "புரட்சிக் கவிஞர் மறைந்து விட்டார்- புதுவைக் குயில் பறந்து விட்டது!"

"தமிழகத்தில் 'குடும்ப விளக்கை' ஏற்றி வைத்தார்-'பாண்டியன் பரிசை' வழங்கினார். 'அழகின் சிரிப்பை' அள்ளிக் கொட்டினார். அவரது 'எதிர்பாராத முத்தம்' பெற்ற கலை அழகி அன்றலர்ந்த செந்தாமரையானாள்." "கடவுள் பெயரால்-மதத்தின் பெயரால்-இழைக்கப் படும் கொடுமைகளைச் சாடினார்."

"பகுத்தறிவு புரியின் காவலர்களாக அவரது பழைய கவிதை வரிகளை நிறுத்தி வைத்துவிட்டு, அவர் போய் விட்டார்." "பாரதிதாசன்- என்பது இனி ஒரு தனி மனிதரின் பெயரல்ல- தமிழ் இன்பம் பொழிகின்ற கவிதைத் தொகுப்பின் பெயர்." "அந்தப் பாரதிதாசனை என்றென்றும் நம்மிடையே வைத்துப் போற்றுவோம்."