நெஞ்சுக்கு நீதி
அடக்குமுறைக்கு இடையே நகராட்சித் தேர்தல் · 138 / 391
அடக்குமுறைக்கு இடையே நகராட்சித் தேர்தல் தமிழகம் எங்கணுமுள்ள நகராட்சிகளுக்கும் சென்னை மாநகராட்சிக்கும் 1964-பிப்ரவரித் திங்களில் தேர்தல்கள் நடைபெற்றன. திரு காமராசர் அவர்கள் அகில இந்தியக் காங்கிரசுத் தலைவராகவே செல்வாக்கின் உச்சக் கட்டத்திற்குச் சென்று கொண்டிருந்த காலம் அது. என்றாலும் தமிழகத்திலுள்ள சாதாரண நகராட்சிகளையும், மாநகராட்சியினையும் மறந்திட முடியவில்லை, அந்த மாமனிதரால். தேர்தல் வேலைகளிலே அவரே தீவிரமாக இறங்கி விட்டார் நேரடியாக.
முதலமைச்சர் பக்தவத்சலமோ தம்முடைய பங்கிற்கு, அடக்குமுறைகளை அவிழ்த்து விடுவதில் அஞ்சாமல் காரியமாற்றினார். தேர்தல் களத்திலே தேனீக்கள் போல் பணியாற்றிடும் கழகச் செயல் வீரர்களை யெல்லாம் கொட்டடியிலே தள்ளுவதிலேயே குறியாயிருந்தார் அவர். 'சீப்பை ஒளித்து விட்டால் திருமணமே நின்றுவிடும்'- என்ற அழுகிப் போன நம்பிக்கையிலே அசைக்க முடியாத பிடிப்பு வைத்துக் காவல்துறையினரை ஏவிவிட்டார் கழகத்தின் மீது.
குறிப்பாக, 22-2-64-இல் சென்னை மாநகராட்சித் தேர்தலுக்கு முன்னர் நடைபெற்ற அந்த அடக்குமுறைத் தாண்டவங்களைப் பொறுக்க முடியாத நான் ஒரு கண்டன அறிக்கையினை வெளியிட்டேன் அடியிற்கண்டவாறு: "...காங்கிரசாரின் தூண்டுதலின் பேரில் ஏராளமான கழகத் தோழர்கள் இன்று காலை முதல் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வட்டத்திலும் இந்த அக்கிரமம் நடைபெறுகிறது. இப்படிப் போலீசாரை வைத்துக் கொண்டு மிரட்டி, காங்கிரஸ் வெற்றி பெற முயல்வதைக் காட்டிலும் வெட்கக்கேடான விஷயம் வேறென்றும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
'உங்கள் நண்பன்' என்று (போலீசாருக்காகப்) படம் எடுத்துவிட்டால் மட்டும் போதாது. போலீசார் உண்மையில் 'நண்பனாக' வும் இருக்க வேண்டும். காங்கிரசைப் பார்த்து 'உங்கள் நண்பன்' என்று கூறிக் கொண்டு இருக்கக் கூடாது. இந்தக் கொடுமை இன்று இரவும் தொடருமேயானால் தலைமைக் கழக அனுமதி பெற்று நானும் மற்றும் சில முக்கியமானவர்களும் நாளைக் காலையில் அக்கிரமத்தைக் கண்டித்து அமைதியான முறையில் எங்களை அடக்குமுறைக்கும் பலியாக்கிக் கொள்வது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறோம்."
இவ்வாறு அறிக்கை விடும் அளவுக்கு அன்று கோலோச்சிய ஆளும் காங்கிரசார் கொடுமைகளைப் புரிந்திட்ட போதிலும், அண்ணாவும், மற்ற கழக முன்னணியினரும், காராக்கிரகத்தில் அடைபட்டுக் கிடந்த நிலையிலும், எதிர்பார்த்ததற்கு மேல் வெற்றிக் கனிகளையே கொய்தது கழகம். அதற்கு முன்னர் இருந்ததை விட அதிகமான எண்ணிக்கையில் நகராட்சி மன்றங்களையும் சென்னை மாநகராட்சியையும் கழகமே கைப்பற்றியது. அந்தத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விகளைச் சீரணித்துக் கொள்ள முடியாத காங்கிரசார், அப்போது நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்திலும் தங்கள் ஆற்றாமையைக் காட்டினர்.
வயிற்றெரிச்சலைக் கொட்டி வசைமாரி பொழிந்தனர். தேர்தலின்போது தீக்குளித்த சின்னச்சாமியின் படம் வெளியிடப் பட்டதைப் பற்றி ஏளனமாகவும் பேசினர். நிதி நிலை அறிக்கை பற்றிய விவாதத்தில் அப்போது கலந்து கொண்ட நான் அந்தப் படம் வெளியிட்டது பற்றி இவ்வாறு குறிப்பிட்டேன்: "தேர்தலின்போது சின்னச்சாமியின் படம் வெளியிட்டதைப் பற்றி இங்கே பேசப்பட்டது. எனது நண்பர் அன்பில் தர்மலிங்கம் இது பற்றி, 'இறந்தவர்களுக்கு ஒரு மரியாதை கூடக் கொடுக்கக் கூடாதா?'
என்றார். "அதற்கு முதலமைச்சர் (பக்தவத்சலம்) 'மரியாதை செலுத்தலாம்; ஆனால், படமாக வெளியிடக் கூடாது' என்றார். எங்களைப் படம் போடக்கூடாது என்று கூறிவிட்டு, மாநகராட்சித் தேர்தலில் திருப்பதி வெங்கடேசுவரர் படத்தையும் போட்டு, காளை மாட்டுச் சின்னத்தைப் போட்டு வெளியிடுவது பண்பா என்று முதலமைச்சரைப் பணிவோடு கேட்கிறேன். மதத்தின் பெயரால் - மதப்பிரச்சாரத்தால் - கடவுள் படங்களைப் போட்டுத் தேர்தல் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று தேர்தல் சட்டம் இருப்பதாக எனக்குக் கவனம்.
நீங்கள் மாத்திரம் பெரியசாமியின் படத்தைப் போடும்போது சின்னச்சாமியின் படத்தை நாங்கள் போட்டது தவறா?" -இந்த என் வினாவிற்கு எந்த விடையும் பகர்ந்திடவில்லை. அப்போதைய முதலமைச்சர்! தமிழகச் சட்ட மன்றத்திலே திருவள்ளுவர் படத்தினைத் திறந்து வைத்திட வேண்டும் என்று நான் வற்புறுத்தி வந்ததைப் பற்றி முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். 1959-லேயே நான் எழுப்பிய கோரிக்கை ஐந்து ஆண்டுகள் கழித்து 1964 பிப்ரவரி 23-ல் தான் கோலாகலமாகத் தமிழ்ர்களின் உள்ளமெல்லாம் குளிர்ந்திடும் வண்ணம் நிறைவேறிற்று.
அன்று மாலை; அப்போது இந்தியக் குடியரசின் துணைத் தலைவராக இருந்த டாக்டர் ஜாகீர் உசேன் அவர்கள் தமிழகச் சட்ட மன்றத்தில் திருவள்ளுவர் திருவுருவப் படத்தினைத் திறந்து வைத்திட்டார். அந்த விழாவினைப் பொறுத்த மட்டில் நண்பர் ப. உ. சண்முகத்திற்கு மட்டும் ஒரு வருத்தம் உண்டு. அதனைச் சென்னையில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றிலேயே கொட்டி விட்டார் இப்படி: "1959-ஆம் ஆண்டு சட்ட மன்றத்தில் திருவள்ளுவர் படத்தை மாட்ட வேண்டும் என்று கூறினார் கலைஞர் கருணாநிதி.
அப்போதிருந்த அமைச்சர் சுப்பிரமணியம், திருவள்ளுவர் படத்தைக் கருணாநிதி தரட்டும்; ஆனால் அதைச் சட்டமன்றத்தில் மாட்டமுடியாது; வெளியே தாழ்வாரத்தில் மாட்டுவோம்" என்றார். அதற்குப் பிறகு அவர்கள் ஒன்றும் செய்யவில்லை. இப்போது மீண்டும் கலைஞர் கருணாநிதி, திருவள்ளுவர் படத்தைப் பற்றி வலியுறுத்தினார்...ஆனால் படத் திறப்பு விழாவின்போது யார் இந்தப் படத்தைப் பற்றி ஓயாது போராடினாரோ-யார் இந்தப் படத்தை வைக்கப் பிடிவாதமாக வற்புறுத்தினாரோ-அந்த ஜீவனைப் பற்றி-கலைஞர் கருணாநிதியைப் பற்றி - ஒரு வார்த்தைக் கூடக் கூறவில்லை..."
-நண்பர் ப.உ.ச.வின் அந்தப் பேச்சை இங்கு நான் எடுத்க்காட்டிட விரும்பியது. வள்ளுவரிடம் எந்த அளவிற்கு காங்கிரசுத் தலைவர்கள் ஈடுபாடு கொண்டிருந்தனர் என்பதைப் பொதுமக்களும் அறிந்திட வேண்டும் என்பதற்காகத்தான். மற்றபடி நண்பர் ப.உ.ச.வுக்கு உண்டான வருத்தம் எனக்கு அறவே ஏற்பட்டிடவில்லை. எப்படியாவது தமிழகச் சட்ட மன்றத்திற்கு வாழ்க்கையின் வழிகாட்டி-வாய்மை மொழியின் சொந்தக்காரர்- வள்ளுவப் பெருந்தகை-வந்து சேர்ந்தாரே என்கிற எல்லையற்ற மகிழ்ச்சிதான் எனக்கு!
அன்றிருந்த அரசியல் மேக மூட்டங்களுக்கிடையில்- அடக்கு முறைக் கொடுமைகளுக்கு மத்தியில் ஆளுங்காங்கிரசாராலும் அவர்களுக்குத் தாளம் போடுவோராலும் அவதூறுகள் அள்ளி வீசப்பட்ட நிலையில் சென்னை மாநகராட்சி திரும்பவும் தி. மு. க. வசம் வந்தது, பெறுதற்கரிய வெற்றியாகவே அப்போது பேசப்பட்டது. அந்த வெற்றியினையொட்டி 5-4-1964-இல் விழா ஒன்று ஏற்பாடாயிற்று, சென்னை வண்ணாரப் பேட்டையில், அதில், பங்கு கொண்டிட்ட காலஞ்சென்ற நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.
ராமசாமி அவர்கள் எனக்கும், என்.வி.என்., திருமதி சத்தியவாணிமுத்து ஆகியோருக்கும் கேடயங்களை வழங்கிச் சிறப்பித்தார். அந்த நாளில் திரையுலகில் கதாநாயகர்களாகவே காலடி எடுத்து வைப்பவர்களுக்கு நடிக்கத் தெரிந்தால் மட்டும் போதாது; பாடவும் அவர்கள் பயிற்சி பெற்றிருத்தல் வேண்டும். பின்னணிக் குரல்கள எல்லாம் முன்னணிக்கு வந்து முழங்கிடாத காலம் அது. அவ்வாறு இசை, நடிப்பு இரு கலைகளிலுமே ஈடுபாடு கொண்டு பெரும் புகழ் குவித்தவர்களே பி.யு.
சின்னப்பா, எம்.கே. தியாகராச பாகவதர் முதலானோர். அவர்களைப் போலவே நடிப்பு, இசை இரண்டிலுமே புலமை பெற்றவராகத் தன்மானத் திராவிடர் இயக்கத்திற்குக் கிட்டிய தனித் தாரகையாக- ஒளியினை உமிழ்ந்தவரே கே. ஆர். ராமசாமி. ஒருவர் சிறைக்குச் சென்றிட்டால்-அதுவும் கிரிமினல் வழக்குகள் தொடுக்கப்பட்டுச் சிறைக்குச் சென்றிட்டால்-அவரைப் புறக்கணித்து விடுதல்-புறங்கூறித் திரிதல்- திரும்பிப் பாராமல் முகத்தைத் திருப்பிக் கொள்ளல்- இவையெல்லாம் முதிராத ஒரு மனித சமுதாயம் கையாண்டிடும் இயல்பான போக்குகளே.
அத்தகைய போக்குகளாகிய தளைகளை விட்டுத் தம்மை நீக்கிக் கொண்டு சிறை சென்றவரின் அருமை பெருமைகளை நினைவு கூர்ந்து- மற்றவர்க்கும் நினைவூட்டிக்-கடமையாற்றிடக் கிளம்புவதற்குத் தனியானதோர் நெஞ்சுரமே வேண்டும். திரு. கே. ஆர். ராமசாமி அவர்களுக்கோ அந்த நெஞ்சுரம் நிரம்பவே இருந்தது. இல்லையென்றால் தந்தை பெரியாரின் கசப்பு மருந்துக் கருத்துக்களுக்கு நகைச்சுவைத் தேன் தடவி அவற்றை வெள்ளித்திரை மூலம் அள்ளி வழங்கிய கலைவாணரின் சிறந்த பணிகளை மறந்திடாமல் ஏதோ ஒரு சூழ்நிலையில் கெட்ட கனவைப்போல் சிறை செல்ல நேர்ந்திட்ட அவருடைய பெயர் மக்களின் மனத் திரையை விட்டு மறைந்திடா வண்ணம் 'கிருஷ்ணன் நாடக சபா' என்கிற ஓர் அமைப்பினையே கே.
ஆர். ஆர். தோற்றுவிப்பாரா? அதன் மூலம் தஞ்சை இராமநாதன் செட்டியார் கலைக் கூடத்திலும் பிற இடங்களிலும் அண்ணாவின் 'ஓர் இரவு', 'வேலைக்காரி'-முதலான நாடகங்களைப் பல வாரங்கள் அவர் நடத்தியதை-அவரும் அவற்றில் நடித்ததை-யார் தான் மறந்திட இயலும்? அத்தகு நிகரற்ற நெஞ்சுரம் கொண்ட நடிப்பிசைப் புலவரின் கையால் வண்ணையம்பதி வெற்றி விழாக் கூட்டத்தில் கேடயங்களைப் பரிசாகப் பெற்றிட்ட போது நான் பெருமகிழ்ச்சியை அடைந்தேன்.
அப்போது இவ்வாறு நான் குறிப்பிட்டேன் : "கேடயம் அளிக்கிறார்கள் என்றாலே 'எதிரிகள் தாக்குதல் அதிகமாக இருக்கிறது' என்பதுதான் பொருள். அந்தத் தாக்குதலைத் தாங்க வேண்டுமென்பதற்காகவே இந்தக் கேடயங்கள். "நமக்கு வெற்றி கிடைக்கும் இதே நேரத்தில் காங்கிரசுக்கும் காமராசருக்கும் தோல்விமேல் தோல்வி கிடைக்கிறது. "கடலை சாப்பிடுவதைப் பார்த்திருப்பீர்கள்; முதலில் நல்ல கடலையாகச் சாப்பிட்டுவிட்டுக் கடைசிக் கடலையைச் சாப்பிடும்போது அது எண்ணெய்க் கடலையாகக்-கசப்புக் கடலையாக இருக்கும்.
அந்தக் கசப்புச் சுவையைப் போக்க, அடுத்தவர் வைத்திருக்கும் கடலையில் 'நல்ல கடலை ஒன்று தா!' என்று கேட்டு வாங்க வேண்டிய நிலை இருக்கும். "அது போலத்தான் அரசியலில் இதுவரையில் நல்ல கடலை சாப்பிட்டு வந்த காமராசர், இப்போது கசப்புக் கடலையைச் சாப்பிடத் துவங்கியிருக்கிறார். அந்தக் கசப்புச் சுவை போக்கக் காமராசர் அடுத்தவரிடம் ஒரு நல்ல கடலையைக் கேட்டாலும் கொடுப்பதற்கு ஆளில்லாத நிலைமை உருவாகி வருகிறது..."
-அன்று நான் சாதாரணமாகக் கூறிய உவமை எந்த அளவுக்குப் பொருத்தமுடையது என்பதனை இந்த நாட்டின் அரசியல் வரலாறு பின்னர் காட்டிக் கொண்டு தான் வந்திருக்கிறது-வருகிறது. மதுரையில் நடைபெற்ற சட்ட எரிப்பு அறப்போரினையொட்டி என் மீது வழக்குத் தொடரப்பட்டது அல்லவா? அது சம்பந்தமான நீதிமன்ற விசாரணையின் பொருட்டு அடிக்கடி அந்தப் பாண்டிமாநகருக்குச் செல்வதும் சென்னைக்குத் திரும்புவதுமாக அலைந்த வண்ணம் இருந்தேன்.
1964 ஏப்ரல் 10-ல் மதுரைக்குப் போன நானோ நீதி மன்றக் கட்டடத்திற்குச் சென்றதோடு நின்றிடவில்லை; ஒரு பள்ளிக் கட்டடத்தையும் பார்வையிட்டேன். மனப் பளுவோடு-மாளாத் துயரோடு. ஏனெனில் அச்சமயம் 'சரசுவதி வித்யாலயா' -என்னும் அந்தப் பெண்கள் பள்ளிக் கட்டடத்தின் மேல் மாடி இடிந்து விழுந்து முப்பத்தைந்து இளம் மாணவிகள் உயிர் ஒரே நேரத்தில் திடீரென்று போயிற்று. 139 மாணவிகள் பெருத்த காயங்களுக்கு இலக்காகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
நெஞ்சையே குலுங்கிடச் செய்திட்ட கொடூர நிகழ்ச்சிதான் இது! தங்கள் தலைமீது மரணத்தின் தூதுவனாய் மாடிக் கட்டடம் பாய்ந்து வந்தபொழுது அந்த இளந்தளிர்கள் எப்படியெல்லாம் நடுநடுங்கினவோ - துடிதுடித்துச் செத்தனவோ! அந்தச் சம்பவம் நடந்த சில நாட்களுக்கெல்லாம் மதுரை சென்றிட்ட எனக்குத் தங்கள் உதிரத் துளிகளைப் பறி கொடுத்துக் கதறிடும் பெற்றோருக்கு ஆறுதல் கூறிடாமலும், பள்ளிக் கட்டடத்தைப் பார்வையிடாமலும் திரும்புவதற்கு மனமே வந்திடவில்லை.
அத்துடன் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உதவும் பொருட்டு மதுரை மாவட்டக் கலெக்டரால் திரட்டப்பட்ட நிதிக்குத் தி. மு. கழகத்தின் சார்பில் ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும் என்கிற செய்தியினையும் அப்போது நான் அறிவித்தேன்.
