நெஞ்சுக்கு நீதி
சிங்கத் தமிழன் சின்னச்சாமி · 137 / 391
சிங்கத் தமிழன் சின்னச்சாமி இந்தி எதிர்ப்பு அறப் போராட்டத்தில் ஓர் அதிர்ச்சி அளித்திடும் திருப்பு முனையைத் தோற்றுவித்து விட்டது 1964-ஆம் ஆண்டுத் தொடக்கமே. அந்த ஆண்டின் குடியரசு நாளைக்கு முந்தின நாள். மற்றவர்களுக்கெல்லாம் பொழுது விடிந்து கொண்டிருந்தது மலர்ச்சியோடு மறத்தமிழ் இளைஞனுக்கோ வாழ்க்கையே முடிந்து கொண்டு இருந்தது பரிதாபமாக! உடல் கருகிட உயிர் மடிந்து கொண்டு இருந்தது எரிதழலுக்கு உணவாகி.
திருச்சி இரயில்வே சந்திப்பிற்கு எதிரேயுள்ள திறந்த வெளியில் விடியற்காலை வேளையில், தன் மேனி முழுவதும் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளித்து மாண்டுவிட்டார் சின்னச்சாமி என்னும் ஒரு தி.மு. கழகச் செயல் வீரர். "சாகையிலே தமிழ் படித்துச் சாகவேண்டும்-என் சாம்பலுமே தமிழ்மணந்து வேகவேண்டும்" -என்னும் வைர வரிகளுக்கு ஒரு வரலாற்றுச் சின்னமாகவே அமைந்து விட்டது அந்த இளைஞரின் வாழ்க்கைப் பயணம். அனல்-அவரது அழகுத் திருமேனியில் தாவிய போது...
கனல்-அவரது கண்களை அழித்த போது...... முத்துப் பற்கள்-மூண்டுவிட்ட தீயால் 'படீர்-படீர்' என்று வெடித்தபோது... தீ நாக்குகள்-அவரது அழகிய சுருண்ட கேசத்தைத் தின்றிட்டபோது... அந்தத் தீந்தமிழ்ச் செம்மல் 'தமிழ் வாழ்க! இந்தி ஒழிக!' என்றே முழக்கமிட்டிருக்கிறார் மூச்சினைப் பிடித்துக் கொண்டு! இருபத்தேழு வயதுகூட நிரம்பப் பெறாத நிலையில் தம்முடைய இளம் மனைவியையும் இரண்டே வயதான பெண் குழந்தையையும் கண்ணீர்க் கடலிலே கதறிடச் செய்து விட்டு, இந்தி ஏகாதிபத்திய எதிர்ப்பினுக்குத் தம்மைக் 'களபலி' ஆக்கிக்கொண்டு விட்டார் அந்தக் கழகக் கண்மணி.
அவருடைய குறுகிய கால வாழ்க்கையே ஒரு புரட்சிக் காவியந்தான்-புதிய புறநானூறுதான்! திருச்சி மாவட்டத்திலிருந்து 33 மைல் தொலைவில் கல்லக்குடிக்கும் அரியலூருக்கும் இடையில் உள்ள கீழப்பழுவூர்தான் சின்னச்சாமி பிறந்த ஊர். பகுத்தறிவுக் கொள்கைகளின்பால் நெஞ்சினைப் பறிகொடுத்துவிட்ட அவர் சீர்திருத்தத் திருமணமே செய்து கொண்டிருக்கிறார்; தம்முடைய மகளுக்குத் 'திராவிடச் செல்வி' என்றும் பெயரிட்டிருக்கிறார்.
1959-ஆம் ஆண்டு முதல் அவர் திராவிட முன்னேற்றக்கழகத்தில் உறுப்பினராகச் சேர்ந்து தீவிரமாக உழைத்திருக்கிறார் இலட்சியப் பிடிப்போடு. "...திரு சின்னச்சாமிக்கு எப்போதும் அண்ணா, கருணாநிதி ஆகிய தலைவர்கள் மீது அளவிட முடியாத அன்பு. அந்த அன்பை வெளிப்படுத்தும் வகையில் தன்னுடைய வீட்டுச் சுவர்களின் இருபுறங்களிலும் அந்தத் தலைவர்களுடைய படங்களை மாட்டி வைத்துள்ளார்..."
-என்று மதுரையிலிருந்து வெளிவந்த 11-2-1964- ஆம் தேதிய 'தமிழ்நாடு' நாளிதழில் அதனுடைய செய்தியாளர் சிறப்புக் கட்டுரை யொன்றிலே குறிப்பிடும் அளவுக்கு இயக்க வளர்ச்சியிலே தம்மை ஒரு பிரிக்க முடியாத அங்கமாக இணைத்துக் கொண்டிருந்தவர்தான் சின்னச்சாமி. இந்தி எதிர்ப்புப் போராட்டக் குழு என்னுடைய தலைமையில் இயங்கிய போது, அறப் போர் வேள்விக்குத் தங்களையே அர்ப்பணித்திடக் கூடிய பாசறை வீரர்களின் பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டதல்லவா?
அதிலே தம்முடைய பெயரும் இடம் பெற்றிடும் வண்ணம் துணிவினைக் காட்டிப் பணியாற்றியவர்தான் அந்தச் சுடரொளி. தாம் தீக்குளிப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் அவர் திருச்சியிலிருந்து சென்னைக்குச் சென்றிருக்கிறார் புகைவண்டியில். அப்போது முதலமைச்சராக இருந்த திரு பக்தவத்சலம் அவர்களும் அதே வண்டியில் பயணம் செய்திருக்கிறார். சென்னையில் வண்டியை விட்டு இறங்கியதும் சின்னச்சாமி, திரு பக்தவத்சலனாருக்கு எதிரிலே சென்று, "நீங்கள் தமிழைக் காப்பதற்காக இந்தித் திணிப்பைத் தடுக்கக் கூடாதா?"
-என்று கெஞ்சிக் கேட்டிருக்கிறார். உடனே காவல் துறையினர் அவரைக் கைது செய்து எழும்பூர் நிலையத்தில் அடைத்து வைத்திருந்து பின்னர் விட்டனர். அதன் பிறகு, திருச்சிக்குத் திரும்பிச் சென்று 25-1-1964 அன்று தணலில் இட்ட தங்கமாகி விட்டார் அந்தக் கொள்கைக்குன்று! தாம் இறப்பதற்கு முந்தின நாள் தம் நண்பர் ஒருவருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் காணப்படும் சில வரிகள் நம் நெஞ்சினையே உருக்குவதாக உள்ளன : "ஏ, தமிழே!
நீ-வாழவேண்டும் என்பதற்காக நான் துடியாய்த் துடித்துச் சாகப் போகிறேன். ஏ, தமிழே! என்னைச் சாகடிக்க இந்திச் சட்டம் தீட்டப்பட்டு விட்டது. பண்டிதர் (நேரு) தந்த வாக்குறுதி அழிந்து விட்டது. தமிழை அழிக்கும் இந்திச் சட்டம் திரும்பப் பெறப்பட வேண்டும். அதனால் சிறையிலிருக்கும் அறிஞர் அண்ணாவும், தி.மு. கழக வீரர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும். அதனால் தான் நான் போர் முனை செல்கிறேன். காலை 11 மணிக்குள் என் உடல் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு செத்துவிடுவேன்.
இதைப் பார்த்த பிறகாவது 'ஏன் இந்தி? எதற்காக இந்தி?' என்று மக்கள் கேட்கட்டும். இதற்குப் பிறகாவது ஆளவந்தவருக்கு (இந்தித் திணிப்பைத் தடுக்கும்) துணிவு பிறக்கட்டும்..." சின்னச்சாமியின் தீக்குளிப்பு தமிழகம் எங்கணும் ஒரு பெரும் பரபரப்பினைப்-பதற்றத்தினை-உருவாக்கிவிட்டது. வெளி மாநிலங்களிலும் அது விவாதத்திற்குரிய வினாக்குறிகளை எழுப்பலாயிற்று. "பெங்களூரிலிருந்து வெளிவரும் 'டெக்கான் ஹெரால்ட்' என்னும் ஆங்கில ஏடு தன்னுடைய முதல் பக்கத்திலேயே சின்னச்சாமியின் மறைவுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செய்தியினை வெளியிட்டது.
அத்துடன் ஆழ்ந்த சிந்தனைக்குரிய ஒரு கட்டுரையும் அதில் வெளியாயிற்று. அதன் குறிப்பிடத்தக்க பகுதி வருமாறு: "...நமது நாட்டில் நிலவக் கூடிய கட்சி அரசின் காரணமாக இந்திக்குக் கிடைக்கக்கூடாத முதலிடமும் முக்கியத்துவமும் கிடைத்திருக்கின்றன. இதைப் பெரும்பான்மையினரின் கொடுங்கோன்மை என்பார்கள். இதற்கு ஜனநாயகத்தில் மாற்றே இல்லை என்று எட்மண்ட் பர்க் கூறியிருக்கிறார். இந்தி பேசாத பகுதிகளில் இந்தியைத் திணிப்பது இத்தகைய பெரும்பான்மையினர் நடத்தும் கொடுங்கோன்மைக்கேற்ற உதாரணமாகும்.
"இந்தப் பின்னணியில் தான் தாய்லாந்தில் தங்களையே சர்வபரித் தியாகம் செய்து கொண்டனர் புத்தத் துறவிகள். இவர்களை பின்பற்றியே உயிர்த் தியாகம் செய்து கொண்டுள்ளார் சின்னச்சாமி. அது பற்றிச் சிந்திக்க வேண்டும். தி.மு.க. உறுப்பினர் சின்னச்சாமி இந்தி எதிர்ப்பின் சின்னமாகவும், இந்தி வெறியர்களுக்கு எச்சரிக்கையாகவும் ஆகிவிட்டார்."
'டெக்கான் ஹெரால்ட்' குறிப்பிட்டதைப் போலத் தாய்லாந்தில் மட்டுமின்றித் தெற்கு வியெட்நாமிலும் அத்தகைய தியாகங்கள் அந்த நாளில் நிகழ்ந்தேறிய வண்ணம் இருந்தன. அங்கே உரிமைகள் மறுக்கப்பட்டு-உணர்வுகள் பொசுக்கப்பட்டு மாளாத் துயருக்கு ஆளான புத்த பிட்சுக்கள் மீளாத் துயில் கொண்டனர் தீக்குளித்து. அவர்களைப் பற்றிய செய்திகளைப் படித்துப் படித்துத்தான் தாமும் ஏன் அத்தகைய தியாகங்களைச் செய்திடக்-கூடாது என்கிற உணர்ச்சித் துடிப்பினுக்கு இடந்தந்து உயிரையே மடித்துக் கொண்டு விட்டார் சின்னச்சாமி.
28-16-64-இல் அந்த மாவீரனின் கல்லறைக்குச் சென்று, என் இறுதி அஞ்சலியைச் செலுத்தினேன். கரூர் நகராட்சி மன்றத் தேர்தல் நிதிக்காக 2-2-64-இல் ஒரு சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றிய நான், இறுதியாக, "...அவனது எழிலார் முகம் செந்தீயால் வெந்த போதும், தன் இதயத்தின் அடித்தளத்திலிருந்து பீரிட்டு வந்த தாய்மொழி உணர்ச்சியால் 'தமிழ்த் தாய் வாழ்க; இந்தி ஒழிக!'
என்று முழங்கியவாறே தன் உயிரைத துறந்திருக்கிறான் அந்த மாவீரனை இன்று முதல் 'சிங்கத் தமிழன் சின்னசாமி' என்றே அழைப்போமாக!' என்று குறிப்பிட்டேன். அந்தத் தியாகச் சுடரின் திரு உருவப் படத்தைத் திருச்சி தேவர் மன்றத்தில் 6-12-64-இல் திறந்து வைக்கும் பேறு எனக்குக் கிடைத்தது.
