உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/மதுரைக் களம்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

மதுரைக் களம் · 136 / 391

மதுரைக் களம் அக்டோபர் 29-ஆம் நாள். ஓர் இடிச் செய்தியினைக் கேட்டுத் தமிழகமே அதிர்ச்சிக்கு ஆளாயிற்று. தேவர்குல மக்களுக்கெல்லாம் திருவிளக்காய்-வழிகாட்டியாய்த்-திகழ்ந்திட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் அன்று இயற்கை எய்திட்டார் என்பதே அந்தச் செய்தி. "தேவரின் சவ அடக்கத்திற்குச் செல்லலாம் என்று நினைக்கிறேன். வருகிறாயா?"

என்று கேட்டார் அண்ணா. மறவர் இனத்தின் மாமேருவாய் விளங்கியவர் மறைந்த பின்னர். அங்கு செல்வது தவிர வேறு என்ன முக்கிய வேலை எனக்கு? "மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை-எமைமாட்ட நினைக்கும் சிறைச் சாலை!" என்று போர்ப்பரணி பாடினார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். கழகத்தவரை அந்தப் பூஞ்சோலையிலே தள்ளிப் பூட்டி மகிழ்ந்திடவே புதிய முறுக்கோடு செயல்படத் தொடங்கியது அன்றையக் காங்கிரஸ் அரசு. நேரு பிறந்த நாளிலேயே வேகமாகத் திறந்து கொண்டன சிறைச் சாலையின் நெடிய கதவுகள்.

தாளமுத்து நடராசர்களை விழுங்கிக் களித்திட்ட அந்த வேள்விக் களங்கள் இன்னும் பல கழகக் கண்மணிகளைத் தழுவித் திளைத்திடத் தாகத்தோடு நீட்டிய வண்ணம் இருந்தன தங்கள் நாக நாக்குகளை 'இந்தி ஏகாதிபத்தியச் செந்தீயால்' நம் செந்தமிழ் தீய்ந்திடுமே! நாம் இரண்டாந்தரக் குடிமக்கள் ஆகிவிடுவோமே!'-என்று வெந்திடும் உள்ளங்களின் வேதனையைப் புலப்படுத்திடவே வேறுவழியின்றிச் சட்டப் பிரிவினை எரித்திடும் அறப்போரினை மேற் கொண்டது கழகம்.

அதனைத் தகர்த்துக் குலைத்திடவே அப்போது தலைவிரித்தாடியது அடக்குமுறை. 14-11-63-இல் 'குழந்தைகள் தின'த்தைக் கொண்டாட வேண்டியவர்கள் குழந்தைகளை விட்டுப் பல தந்தைகளைத் - தாய்களைப் பிரித்துக் கொட்டடியிலே பூட்டிடும் கொடுங்கோன்மையிலே ஈடுபட்டனர். அன்றைய தினம், அண்ணன் சி. பி. சிற்றரசு, காஞ்சி கல்யாண சுந்தரம், நீலநாராயணன் ஆகியோரும் மற்றும் நூற்றுக்கணக்கான கழகத் தோழர்களும் திடீரென்று கைது செய்யப்பட்டனர்.

சட்ட எரிப்பு அறப்போரினைத் துவக்கிடும் பொருட்டு 16-11-63-இல் காஞ்சியிலிருந்து காரில் புறப்பட்டு வந்த அண்ணா அமைந்தகரையில் நுழைந்தவுடனேயே வழி மறிக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார் காவல் துறையினரால். அவரோடு பயணம் புரிந்திட்ட மற்றவர்களும் கைதாயினர்! அன்று பிற்பகல், நுங்கம்பாக்கம் அண்ணா இல்லத்தில் என்னோடும் நாவலரோடும் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுதே என். வி. நடராசன் அவர்களும், மறைந்த மாவீரர் ஏ.

கோவிந்தசாமி அவர்களும் சிறை பிடிக்கப்பட்டனர். இப்படித் தமிழகம் எங்கணும் கழகத்தவர்மீது ஏவி விடப்பட்டது 'இட்லர் தர்பார்'. தாய்மொழியின் விலங்கொடிக்கத் துணிந்திட்ட வீர மறவர் பலர் விலங்கிடப்பட்டனர்; வெஞ்சிறையிலே தள்ளப்பட்டனர். மறியல் போன்ற கிளர்ச்சிகளிலே ஈடுபட்டோர் மறித்து அழைத்துச் செல்லப்பட்டனர் சிறைக்கூடம் நோக்கி. அடிப்படை உரிமைகளையே பறித்திடும் வகையில்-ஜன நாயகத்தின் குரல்வளையையே நெரித்திடும் போக்கில்-அதிகாரம் சதிராடுவதைச் சகித்திட முடியாது என்று சட்டமன்றத்திலே நானும் மற்ற கழக உறுப்பினர்களும் கண்டனக் குரல் எழுப்பினோம்.

ஒத்திவைப்புத் தீர்மானமும் கொண்டு சென்றோம். அது நிறைவேறாத நிலையில் வெளிநடப்பும் செய்தோம். ஆட்சியாளரோ கேட்டிடவில்லை நியாயத்தின் குரலை; காட்டிடவில்லை கண்ணியத்தை! பாய்ச்சிய வண்ணமே இருந்தனர் எதேச்சாதிகார ஈட்டிகளை! அந்தச் சமயம் 21-11-63-இல் திருவள்ளுவர் பற்றிய சிந்தனை அலைகளும் சட்ட மன்றத்திலே தவழ்ந்தன. விவாதத்திலே பங்கு கொண்ட நான், இந்த வையகம் உய்ந்திட வாழ்க்கை நெறி வகுத்திட்ட, அந்த செந்நாப்போதரின் திருவுருவப் படத்தினைச் சட்டமன்றத்திலே திறந்து வைத்திடத்தான் வேண்டுமென்று வலியுறுத்தினேன்.

'தூங்காமை, கல்வி, துணிவுடைமை-இம்மூன்றும் நீங்கா நிலனாள்பவர்க்கு' -என்னும் குறளை எடுத்துக் காட்டி இந்த மூன்று இயல்புகளுமே அன்றைய முதலமைச்சர் பக்தவத்சலனாரிடம் அமைந்திருக்கின்றன என்று கூறிய நான் இப்படியும் குறிப்பிட்டேன் வேடிக்கையாக: "...துணிவைப் பொறுத்தமட்டில் தமிழகத்தின் உரிமையைக் காப்பதில்-டில்லியை மிரட்டுவதில்-அவருக்கு (பக்தவத்சலனாருக்கு சற்றுத் துணிவு இல்லாமல் இருக்கலாம். ஆனால் எதிர்க்கட்சிகளை மிரட்டுவதில் அவர் யாருடைய துணிவுக்கும் இளைத்தவர் அல்லர்!"

-என்னுடைய இந்த வார்த்தைகள் புனைந்துரையோ பொய்யுரையோ அல்ல. நூற்றுக்கு நூறு உண்மையானவையே என்று மெய்ப்பிப்பதைப் போலவேதான் பெரியவர் பக்தவத்சலனாரின் ஆட்சியிலே கழகத் தோழர்கள் மிரட்டப்பட்டார்கள்; கடுமையாக விரட்டப்பட்டார்கள் சிறையை நோக்கி! தமிழகமே அமளிக் காடாகி-ஜனநாயகமே சவக்குழி நோக்கித் தள்ளப்பட்டுக் கொண்டிருந்த அதே வேளையில்தான்- உலகையே கவர்ந்திட்ட ஓர் ஒப்பற்ற ஜனநாயகவாதி சுட்டுக் கொல்லப்பட்டார் ஒரு கயவனால்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே உரத்த குரல் எழுப்பிய உத்தமர். அடிமைப்பட்டுக் கிடந்த நீக்ரோக்களின் தளையை அறுத்திட ஆபிரகாம் லிங்கனின் வாரிசாகவே திகழ்ந்திட்ட வைர நெஞ்சினர்- செல்வம் புரண்டிடும் திருநாட்டில் செல்வாக்கு மிகுந்திட்ட பெரும் குடும்பத்திலே பிறந்திட்ட போதிலும் பண்பாட்டுச் செல்வத்தினை இழந்திடாத மிகச் சிறந்த சீலர்-ஜான் ஃபிட்ஸ் ஜெரால்ட் கென்னடி அநியாயமாக இரையானார் துப்பாக்கிக் குண்டுகளுக்கு.

அவருடைய திடீர் மறைவினைக் கேட்டுத் திடுக்கிட்டது தேம்பித் தேம்பி-அழுதது-இந்த அகிலம் முழுவதுமே. அமெரிக்கக் குடியரசுத் தலைவர்களிலேயே மிகக் குறைந்த வயதிலேயே - தமக்கு நாற்பத்து மூன்று வயது நடந்திடும் பொழுதே-மிக உயர்ந்த பதவிக்குத் தேர்ந்தெடுக்கப் பெற்ற பெருமையினைப் படைத்தவர் கென்னடி. இரண்டாம் உலகப் போரின்போது இளந்தளபதியாக நாட்டுப் பணிக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டார் அவர்; நடுக்கடலிலே சிக்கித் தவிக்க நேர்ந்திட்ட நிலையிலும், நெஞ்சங் குலைந்திடாமல் தாம் மட்டும் தப்பித்து விட்டால் போதுமென்ற தன்னலத்திற்கும் இரையாகி விடாமல், தம்மோடு உயிருக்கு மன்றாடிடும் மற்ற ஐந்தாறு வீரர்களையும் கொண்ட படகினைப் பற்களின் வலிவாலேயே கரை சேர்த்திட்ட உரம் பாய்ந்திட்ட உள்ளம் படைத்தவரும் அவரே.

அந்தத் துணிகரச்செயலையே Profile in Courage என்று எழுத்திலே வடித்து அமெரிக்காவின் உன்னத இலக்கியப் பரிசாகக் கருதிடும் புலிட்சர் பரிசினையே தட்டிச் சென்றிடும் புகழ் மிக்க எழுத்தாளராகவும் போற்றப்பட்டவர் அவர். குறுகிய காலந்தான் அவர் ஆட்சிக் கட்டிலிலே அமர்ந்திருந்தார் என்றாலும். அவர் குவித்திட்ட வெற்றிக் கனிகளோ ஏராளம். படைத்திட்ட சாதனைப் பட்டியலோ வெகு நீளம். நாடு புகழ்ந்தென்ன? நானிலம் போற்றியென்ன?

நயவஞ்சக நிறவெறி தன் கோரப் பசியைத் தணித்துக் கொண்டது அந்த நல்லவரின் உயிரைக் குடித்து! தம்முடைய இல்லத்தரசி ஜாக்குவிலினோடு டல்லாஸ் நகரில் 1963 நவம்பர் 22-இல் உலாவச் சென்ற வேளையில்தான் ஆஸ்வால்ட் என்பவனின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகிச் சாய்ந்தார் அந்தத் தூயவர். மனித உரிமைகளுக்காக உலக அமைதிக்காக ஓய்வில்லாமல் உழைத்திட்ட ஒரு மாமேதை மாய்ந்ததால்-மணிவிளக்கு அணைந்ததால்-மையிருள் படர்ந்தது மண்ணகமெங்கும்.

கறுப்பு நிற நீக்ரோக்கள், எப்படி வெள்ளை நிற வெறியர்களின் வெறுப்பிற்கு இலக்காகி அடிமை இருளையே அணைத்துக்கிடந்திட வேண்டிய அவலப் பிழைப்பிற்கு ஆளானார்களோ அப்படித்தான் இந்தப் பரந்த மண்ணுக்குத் தொன்றுதொட்டுச் சொந்தக்காரர்களான ஆதித் திராவிட மக்கள்-பழங்குடி மக்கள் புழுக்களினும் கேவலமாகவே மதிக்கப்பட்டார்கள்; மிதிக்கப்பட்டார்கள்; இழிந்த சாதியினராய்ச் சமுதாயத்தின் கடைசித் தட்டுக்குத் தள்ளப்பட்டுக் கிடந்த அந்த மக்களுக்குத் தன்மான உணர்வினை ஊட்டிட-அதே சமயம் சமுதாயத்தில் சம உரிமையை நிலைநாட்டிட ஒரு மாபெரும் புரட்சி தேவைப்பட்டது இந்தியத் துணைக் கண்டத்தில். அந்தப் புரட்சியைத் தெற்கே தோற்றுவித்தார் தந்தை பெரியார்.

வடக்கே உருவாக்கினார் டாக்டர் அம்பேத்கார். தாழ்த்தப்பட்ட மக்கள் தலை நிமிர்ந்திட அவர்களுக்குத் தனிச்சலுகைகள் தரப்படுவதற்கு இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திலே வழி வகை கண்டவர் அம்பேத்கார். அந்தச் சீர்திருத்தச் சிற்பிக்குச் சிலையெழுப்புவதைப் பெருமையாகக் கருதிற்று தி. மு. கழகத்தவரின் நிர்வாகத்தில் இயங்கிடும் சென்னை மாநகராட்சி. பத்தொன்பதாயிரம் ரூபாய் செலவிலே உருவாக்கப்பட்ட அம்பேத்காரின் சிலை ரிப்பன் மாளிகை அருகில் உள்ள விளையாட்டுத் திடலில், ஒடுக்கப்பட்டுக் கிடந்திட்ட மக்களின் உள்ளங்களெல்லாம் குளிர்ந்திடும் வண்ணம் 28-11-63-ஆம் நாளில் திறந்து வைக்கப்பட்ட கோலாகலமான விழாவிலே நாவலர் பங்கு கொண்டு பாராட்டுரை வழங்கியது குறிப்பிடத்தத்தது.

எத்தனை நாள் கடுமையாக, அடக்கு முறைகளைத்-தடை உத்தரவுகளை-அன்றைய ஆட்சியாளர்கள் அவிழ்த்து விட்ட போதிலும், இந்தி எதிர்ப்புப் பொது மாநாட்டிலே எடுக்கப்பட்ட முடிவுகளை நிறைவேற்றுவதில் தி. மு. கழகம் பின் வாங்கிடவே இல்லை. பேராசிரியர் அன்பழகன், மதியழகன் முதலானோர் தலைமையில் மறியல் போர் தொடர்ந்து நடந்த வண்ணம் இருந்தது; சிறை நோக்கிச் சென்ற வண்ணம் இருந்தனர் கழகத் தோழர்கள். ஆட்சி மொழி பற்றிய அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவினை எரித்திடுவதற்கு முதற்களமாகச் சென்னை நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டது அல்லவா?

அதைப் போலவே இரண்டாங்களமாக இடம் பெற்ற நகரம் மதுரை. அங்கே 16-12-63-இல் சட்டப்பிரிவினுக்குத் தீ மூட்டுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. அந்த அறப்போர் நிகழ்ச்சிக்குப் பார்வையாளராகத் தலைமைக் கழகத்தின் சார்பில் பொருளாளர் என்கிற முறையில் நான் போனேன். மதுரைக்கு ஐம்பது மைல் தொலைவுக்கு இப்பால் சென்றிடும் பொழுதே எங்களைச் சூழ்ந்து கொண்டது ஒரு சோதனை. நாங்கள் பயணம் புரிந்து கொண்டிருந்த கார் 'படுக்காளி மாடு' போலப் படுத்துக் கொண்டு விட்டது திடீரென்று.

காரணம், அதன் மூன்று சக்கரங்களுமே பழுதடைந்து விட்டன பரிதாபமாக! காருக்கு ஏற்பட்டு விட்ட கதியினை நினைத்துக் கையைப் பிசைந்து கொண்டு செய்வதறியாது நின்றிருந்தோம் நானும், மன்னை முதலிய நண்பர்களும். தீ மூட்டும் நிகழ்ச்சிக்குக் குறிப்பிட்ட நேரத்திற்கு ஏகிட முடியவில்லையே என்கிற ஏக்கம் எங்களுக்கு. அப்போது, ஒரு கார் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது என்னைக் கண்டதும் அது நின்றுவிட்டது. "எங்கே செல்கிறீர்கள்?"

என்று காரில் இருந்தவர் கேப்டார். "மதுரையிலே நடைபெறும் சட்ட எரிப்பு நிகழ்ச்சியைப் பார்க்க வந்தோம்; வழியில் கார் கெட்டுவிட்டது" என்று நிலைமையை விளக்கினோம். "சரி; என் காரில் ஏறுங்கள்; நான் கொண்டு போய் மதுரையில் விட்டுவிடுகிறேன்" என்றார் அவர்.

எங்கள் உற்சாகத்திற்குக் கேட்டிட வேண்டுமா? உடனே அவருடைய காரில் ஏறிக் கொண்டோம். நாங்கள் மதுரை மாநகரை அடைவதற்கும் மதுரை முத்து குழுவினர் சட்டத்தை எரித்திடப் புறப்படுவதற்கும் சரியாக இருந்தது. தீ மூட்டும் நிகழ்ச்சியினைக் கண்டிடச் சென்ற எங்களை அவ்வாறு தமது காரிலே ஏற்றிக் கொண்டு சென்று மதுரையிலே இறக்கி விட்டவர் யார் தெரியுமா? மதுரை மாவட்டத்திலேயே மிகுந்த செல்வாக்குப் படைத்திட்ட ஒரு தீவிரமான காங்கிரஸ்காரர்!

(திரு. பெருமாள்). மதுரை மாநகரமே அன்று இந்தி ஏகாதிபத்தியத்தின் இடுப்பினை ஒடித்திடப் போர்க்கோலம் பூண்டிருந்தது. புரட்சிக் கனலைக்கக்கியது. அங்கே திலகர் திடல் அறப் போர்க் களமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தது. அதனை நோக்கிப் போராட்ட வீரர்கள் புறப்பட்டுச் சென்றபொழுது வீதிகளின் இருமருங்கிலும் பொது மக்கள் வெள்ளமெனத் திரண்டு நின்று விண்ணதிர வாழ்த்தொலிகளை எழுப்பினர். முதலில் நண்பர் முத்து தலைமையில் அறப்போர் மறவர்கள் ஐவரும் செல்ல, அவர்களை அடுத்துக் காவல் துறை அதிகாரிகள் பின் தொடர்ந்து சென்றனர்.

நானும் மற்ற நண்பர்களும் சற்றுத் தள்ளியே பின்னால் நடந்து கொண்டிருந்தோம். எங்களுடன் வந்து கொண்டிருந்த மன்னை நரராயணசாமி திடீரென்று கைது செய்யப்பட்டார். அவரை அவ்வாறு கைது செய்தது முறையல்லவென்றும், அவரை விடுதலை செய்திட வேண்டும் என்றும், மாவட்டத் தலைமைப் போலீஸ் அதிகாரியை அணுகி நானும் என். வி. என். னும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் பலன் ஏதும் ஏற்படவில்லை. திலகர் திடலில் முன் அறிவித்தவாறே சட்டப் பிரிவினுக்கு எரியூட்டினர் ஐவர் அணியினர்.

காவல் துறையினரும் அதை வேடிக்கை பார்த்தவண்ணமே நின்றிருந்தனர். சட்டப் பிரிவின் சரிபாதியை எரிதழல் இரையாக்கிக் கொண்ட பின்னரே அவர்கள் அறப்போர் மறவர்களைக் கைது செய்தனர். நிகழ்ச்சி நடந்திட்ட பொழுது நான் தொலைவில் தான் நின்றிருந்தேன். நான் அங்கே பார்வையாளனாகத்தான் சென்றிருந்தேனே அன்றித் தலைமை தாங்கிட அல்ல. ஆனால் முதலமைச்சர் பக்தவத்சலனாரோ முழுப் பூசணிக்காயையும் சோற்றிலே மறைத்துவிட முயன்றிட்டார்.

நான்தான் மதுரைச் சட்ட எரிப்பு நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினேன் என்று வழக்கம் போலத் தவறான தகவல்களையே அவர் பொது மக்களுக்குத் தந்திட்டார், அறிக்கை மூலம். மறுநாள் கடலூர் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டிட வந்த நான், 'தமிழ்நாடு' நாளிதழில் வெளிவந்திருந்த அவருடைய அறிக்கையினை மறுத்துச் செய்தியாளர்களிடம் ஒரு விளக்கம் அளித்தேன். அந்த விளக்கத்திற்குப் பிறகும் கூட, மதுரை நிகழ்ச்சிக்கு நான் பார்வையாளனே அன்றித் தலைவன் அல்ல என்கிற உண்மையை உணர்ந்திட மனம் வந்திடவில்லை பெரியவர் பக்தவத்சலனாருக்கு.

அவர் ஏன் அப்படி நடவாத ஒன்றினை நடந்ததாக இட்டுக் கட்டினார் என்பது பின்னர்தான் எனக்கு விளங்கிற்று. ஆம்; 1963 டிசம்பர், பத்தொன்பதாம் நாள் சிறைச்சாலையின் கதவுகள் எனக்காகத் திறந்திருப்பதாக எனக்கு அறிவிக்கப்பட்டது. அன்று சென்னை கோபாலபுரத்திலுள்ள என் இல்லத்தில் நாவலர், ப.உ.ச., நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமி முதலான நண்பர்களுடன் நான் உரையாடிக் கொண்டிருந்தேன். பகல் 12-30 மணி இருக்கும். மதுரையிலிருந்து வந்த காவல் துறை அதிகாரி ஒருவர் என்னிடம் வந்து, "உங்களைக் கைது செய்திருக்கிறேன்" என்று அறிவித்தார்.

அவரை நோக்கி "எதற்காகக் கைது செய்கிறீர்கள்?" என்று கேட்டார் நாவலர். "எங்களுக்கு ஒன்றும் தெரியாது. மேலதிகாரிகள் உத்தரவு" என்று விடையளித்தார் அவர். அங்கே குழுமியிருந்த நண்பர்கள் வாழ்த்துக் கூறி வழியனுப்பிட, நான் காவல் துறை வண்டியிலே ஏறிக்கொண்டேன். திருவனந்தபுரம் விரைவு இரயில் வண்டி அரசாங்க விருந்தினராகி விட்ட என்னையும் அமைப்புச் செயலாளர் என்.வி. என்னையும் சுமந்து கொண்டு வெகு வேகமாகப் பறந்து சென்றது மதுரை நோக்கி.

இடை மறித்தது திண்டுக்கல். இறக்கப்பட்டோம் இருவரும். தொடர்ந்து புகை வண்டியிலேயே பயணம் புரிந்திட்டால் எங்கள் கண்களில் கரித்தூள் படிந்திடுமே என்கிற கரிசனமோ; இல்லை, மதுரைச் சந்திப்பிலே கைதி நிலையிலே எங்களைக் கண்டுவிடும் மக்களிடமிருந்து மீட்டு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்குக் கொண்டு போக நேரமாகிவிடுமே என்கிற மனக் கலக்கமோ; என்ன காரணம் என்று எங்களுக்குத் தெரிந்திடவில்லை. கார் மூலமே திண்டுக்கல்லிலிருந்து மதுரைக்கு நாங்கள் அழைத்துச் செல்ல

ப்பட்டோம். பதினைந்து நாட்கள் காவலில் வைக்கப்பட்டோம், நீதி மன்ற ஆணைப்படி. அந்தச் சிறிய சிறைவாசத்தின் போது ஒரு பெரிய மனிதரைச் சந்தித்திடும் வாய்ப்பினையும் நான் பெற்றேன். டாக்டர் சி.டி. தேஷ்முக் அவர்கள் தம்முடைய மனைவி துர்க்காபாய் தேஷ்முக்குடன் 23-12-63 அன்று என்னைச் சிறையிலே வந்து பார்த்தார். ரிசர்வ் பாங்கின் ஆளுநராக இருந்திட்ட அவரின் மதி நுட்பத்தினைக் கண்டு வியந்திட்ட நேரு தம்முடைய மத்திய அமைச்சரவையில் நிதியமைச்சராகவே அவரைச் சேர்த்துக் கொண்டார்.

ஆனால் என்னை வந்து சந்தித்தபோது அவர், 'முன்னாள் அமைச்சர்' ஆக மாறிவிட்டிருந்தார். அந்தப் பொருளாதாரப் புலி, கழகத்தின் பொருளாளனாகச் சாதாரண நிலையில் இருந்த என்னை வந்து, அதுவும் சிறையிலேயே வந்து, சந்திப்பார் என்று நான் எதிர்பார்த்திடவேயில்லை. அந்த மதுரைச் சிறைவாசம் நெடு நாட்கள் நீடித்திடவில்லை 25-12-63-இல் சில நிபந்தனைகளுடன் என்னைப் பொறுப்பில் விடுதலை செய்தது சென்னை உயர் நீதி மன்றம். சென்னை வந்து சேர்ந்திட்ட நான், மறுநாளே காஞ்சிக்குச் சென்றிட்டேன்.

அண்ணாவின் சிற்றன்னை 'தொத்தா' நோயோடு போராடிக் கொண்டிருந்தார். அவரைக் கண்டிடவே நான் காஞ்சிக்குப் போனேன். அரசின் அடக்குமுறைக்குப் பலியாகி ஆறு மாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு ஏழாவது முறையாகச் சிறைப் பறவையாகியிருந்த அண்ணாவும் அப்போது 'பரோலில்' வெளியே வந்திருந்தார்கள்.! சின்ன வயதிலேயே அண்ணாவை வளர்தது ஆளாக்கி இந்தத் தமிழ் மண்ணுக்கே அவர் தலைமகன் ஆகிடும் அளவிற்கு அவருக்கு ஊன்றுகோலாய் உழைத்திட்டவர் 'தொத்தா' என்று அன்போடு அழைக்கப்பட்ட திருமதி இராசாமணி அம்மையார் ஆவார்.

அவரோ உழைத்தது போதுமென்று 31-12-63-இல் ஓய்வெடுத்துக் கொண்டு விட்டார். அவருடைய மறைவு மாமேதை அண்ணாவை மனங்குமுறிட வைத்தது. கழகத்தார் கண்களையோ பெருங்குளம் ஆக்கியது.