உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/எனது கலைப்பணி
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

எனது கலைப்பணி · 135 / 391

எனது கலைப்பணி அக்டோபர் 26-ஆம் நாள் 'காஞ்சித் தலைவன்' படம் திரையிடப்பட்டது. அந்தப் படத்திற்குரிய கதை-உரையாடலைத் தீட்டிடும் பொறுப்பினை நான்தான் மேற்கொண்டிருந்தேன். அதுவரை நான் வசனம் எழுதிய படங்களைக் கணக்கிட்டால் அது எனக்கு இருபத்து மூன்றாவது படம் ஆகும். 'காஞ்சித் தலைவன்' - இதை நினைத்திடும் பொழுது, கலையுலகில்-குறிப்பாக நாடகத் துறையிலும் திரைப்படத் துறையிலும்-எனக்கு ஏற்பட்ட ஈடுபாடுகள்-ஏற்றங்கள்-இனிப்புகள்-கசப்புகள்-எல்லாமே என் நெஞ்சிலே வந்து நிழலாடுகின்றன.

பள்ளியிலே பயின்றிடும் போதே நாடகக் கலைமீது எனக்கிருந்த பேரார்வம்'பிரேத விசாரணை' 'சாந்தா அல்லது பழனியப்பன்' ஆகிய நாடகங்களை நான் தீட்டியது-'சாந்தா' நாடகத்திலே நான் 'சிவகுரு'வாக நடித்ததைக் கண்டு வெகுண்ட காங்கிரசார் என்னை நையப் புடைத்துப் புதுச்சேரி வீதியோரத்திலே புரட்டி எடுத்துப் போட்டுவிட்டு ஓடிப்போனது முதலானவை பற்றி முன்பே நான் குறிப்பிட்டிருக்கிறேன். அந்தப் புதுச்சேரி நிகழ்ச்சிக்குப் பிறகு, நான் எழுதி நடித்திட்ட நாடகம் 'தூக்கு மேடை.'

நடிகவேள் திரு எம். ஆர். ராதா அவர்களின் தூண்டுதலின் பேரில் அவருடைய நாடக மன்றத்தினர் நடிப்பதற்கென்றே நான் எழுதியது அந்நாடகம். அதில் நானே 'பாண்டியன்' பாத்திரத்தை ஏற்று நடித்திட வேண்டும் என்றும் ஏற்பாடு ஆயிற்று. தமிழக நாடக வரலாற்றில் நடிகவேள் எம். ஆர் ராதா அவர்களுக்கு ஒரு தனிச் சிறப்பான இடம் உறுதியாக உண்டு. தந்தை பெரியார் அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றிப் பகுத்தறிவுக் கருத்துக்களைப்-புதுமை ஒளிரும் எண்ணங்களை-புரட்சி கொழித்திடும் கொள்கைகளை-நாடகங்கள் மூலம் நாட்டிலே உலவ விட்ட பெருமை அவரைச் சாரும்.

தாழ்ந்த தமிழினத்தைத் தட்டி எழுப்பிட-அவர்களுக்குத் தன்மான உணர்வினை ஊட்டிடத்-தந்தை பெரியார் அவர்கள் சுயமாகவே சிந்தித்துச் சிந்திடும் ஒளிக் கதிர்களை-உன்னத இலட்சியங்களைப பரப்புவதற்கு மேடைப் பேச்சைப் போலவே நாடகத் துறையும் பயன்படும் என்று என்னைப் போன்றவர்கள் அப்போது நம்பினோம். அதனால்தான், பகுத்தறிவுப் பிரச்சாரம் பற்றிய நாடகம் ஒன்றைத தமக்கு எழுதித் தரவேண்டும் என்றும், அதில் நானே முக்கியப் பாத்திரமேற்று நடித்திடவேண்டும் என்றும் ராதா அவர்கள் கூறியதும் நான் உடனே ஒப்புக் கொண்டு விட்டேன், மறுத்திடாமல்.

தஞ்சையில் 1946-ஆம் ஆண்டில் தான் 'தூக்கு மேடை' பல வாரங்கள் தொடர்ந்து நடைபெற்றது. அதன் அரங்கேற்ற விழாவிற்குத் தலைமை தாங்கிச் சிறப்பித்தவர் பட்டுக்கோட்டை 'அஞ்சா நெஞ்சன்' அழகிரிசாமி அவர்கள். குமுறும் எரிமலையாய்க்-கொந்தளிக்கும் பெருங்கடலாய்-இடி முழக்கமிடும் அவர்தம் எழுச்சி கொப்பளித்திட்ட சொற்பொழிவுகள்தாம் என்னுடைய பிஞ்சு நெஞ்சிலே முதன் முதல் கொள்கை வித்தினைத் தூவியவையாகும். எனவே 'தூக்கு மேடை' அரங்கேற்ற விழாவுக்கு அவர் தலைமையேற்றதை எண்ணி நான் அடைந்திட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

சமுதாயப் பெருமரத்தையே புரையோடி அரித்துக் கெடுத்திடும் புல்லுருவிகளைப்-போலித்தனங்களை-ஏற்றத் தாழ்வுகளை எதேச்சாதிகாரங்களைத்-தோலுரித்துக் காட்டும் நோக்குடனேயே 'தூக்கு மேடை, நாடகத்தினைத் தீட்டியிருந்தேன். ஆனால் அது அன்றையக் காங்கிரசு ஆட்சியினரின் கண்களை உறுத்துவதாக அமைந்துவிட்டது. அது எதிரொலித்த பகுத்தறிவுப் பிரச்சாரத்தைச்-சீர்திருத்தச் சிந்தனைகளை-ஆளுங் காங்கிரசால் செரித்துக்கொள்ள முடியவில்லை.

எனவே அடக்குமுறை அவிழ்த்து விடப்பட்டது; தடைச் சட்டம் தன் கொடுங்கரத்தினை நீட்டியது. ஆம்; 'தூக்கு மேடை'க்கே தூக்குக் கயிறு வீசப்பட்டது சுதந்திர-ஜனநாயக - நாட்டில்! என்னுடைய திரையுலக ஈடுபாடும் 1946-ஆம் ஆண்டில்தான் தொடங்கிற்று. கோவையில் இருந்த ஜூபிடர் பிக்சர்சார் தயாரித்திட்ட 'ராஜ குமாரி' தான் நான் முதன்முதல் உரையாடல் தீட்டிய திரைப்படம் என்பதனையும், அதற்கு வழி வகுத்துக் கொடுத்திட்டவர் அன்று செல்வாக்குமிக்க திரைப்பட இயக்குநராய்த் திகழ்ந்திட்ட திரு ஏ.

எஸ். ஏ.சாமி அவர்கள்தான் என்பதனையும் முன்னரே குறிப்பிட்டிருக்கிறேன். 1946-ல் வெளிவந்த 'ராஜகுமாரி' முதல் 1963-ல் வெளிவந்த 'காஞ்சித் தலைவன்' வரையுள்ள பதினேழாண்டுக் காலத்தில் திரையிடப்பட்ட மற்றப் படங்களைப் பற்றிய விவரங்கள் வருமாறு: அபிமன்யு - 1948; மருதநாட்டு இளவரசி - 1950; மந்திரி குமாரி - 1950; மணமகள் - 1951; பராசக்தி - 1952; தேவகி - 1952; பணம் - 1952; திரும்பிப்பார் - 1953; நாம் - 1953: மனோகரா - 1953.

மலைக்கள்ளன் - 1954; அம்மையப்பன் - 1954; ராஜாராணி - 1956; ரங்கோன் ராதா - 1956; புதுமைப்பித்தன் - 1957: புதையல் - 1957; குறவஞ்சி - 1960; எல்லாரும் இந்நாட்டு மன்னர் - 1960; அரசிளங்குமரி - 1961; தாயில்லாப் பிள்ளை - 1961; இருவர் உள்ளம் - 1963 -நாட்டுக்குத் தேவையான நல்ல கருத்துக்களை நாடகங்களில் புகுத்திட எவ்வாறு முயற்சிகள் எடுத்துக்கொண்டேனோ அவ்வாறே மேலே குறிப்பிடப்பட்ட திரைப்படங்களுக்கும் சரி, அவைகளுக்குப் பிறகு வெளிவந்த திரைப்படங்களும் சரி, வசனங்கள் தீட்டிய போதெல்லாம் அவற்றிலே கழகத்தின் இலட்சியங்கள் 'இலைமறைகாயாக' இழையோடிடுவதற்கும் அக்கறை காட்டியுள்ளேன் என்பதும் சொல்லாமலே விளங்கும்.

கலை என்பது கனி குலுங்கிடும் பெரிய தரு. அதனைத் தனியார் தோட்டத்து மரம் போலத் தங்கள் சொந்த புகழைப்-பொருளைக் குவித்திடப் பயன்படுத்திக் கொள்வோரும் உண்டு. அதே கலையினைக் கால்நடையாய்ச் செல்வோர்க்குக் கனியும் நிழலும் வழங்கும் சாலைமரமாய்ப் பொது நலனுக்குப்-புதிய சிந்தனை வளர்ச்சிக்குப்-பயன்படச் செய்வோரும் உண்டு. இந்த இரண்டாவது வகையினராகவே இலட்சியங்களைப் பரப்பிட ஏற்றதொரு கருவியாகக் கலையினைப் பயன்படுத்தினார் அண்ணா.

அவர்தம் வழியிலேயே நானும் மற்றக் கழக எழுத்தாளர்களும் செயல் பட முயன்றிட்டோம், திரையுலகில்-நாடகத் துறையில்.