நெஞ்சுக்கு நீதி
கோ. சு. மணி குடும்பத்திற்கு நிதியுதவி · 134 / 391
கோ. சு. மணி குடும்பத்திற்கு நிதியுதவி மூ ன்று மண்டல மாநாடுகள் முறையே சேலம், தஞ்சை, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் நடந்து முடிந்த பிறகு நான்காவது மண்டல மாநாடாகவும் நடைபெற்றது சென்னை மாநாடு. உணர்ச்சிக் கனலோ எழுச்சிக் கடலோ என வியந்திடும் வண்ணம் இலட்சக்கணக்கில் ஆடவரும் மகளிரும் அலை அலையாகத் திரண்டு வந்திருந்தனர் அம்மாநாட்டிற்கு. பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமை தாங்கிடப் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் திறப்புரை ஆற்றிட இந்தி ஆதிக்கத்தினை எதிர்த்துப் போர்ப் பரணி பாடிய அந்த மாநாடு சில புரட்சிகரமான முடிவுகளையும் மேங்கொண்டது.
அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கது, இந்திய அரசியல் சட்டத்தில் ஆட்சி மொழி பற்றிய 17-ஆவது பிரிவினை எரித்திட வேண்டும் என்கிற தீர்மானம் ஆகும். இந்தி எதிர்ப்புப் போராட்டக் குழுவின் தலைவர் என்கிற முறையில் நானும் மற்றக் குழு உறுப்பினர்களும் நாடெங்கணும் சுற்றுப் பயணம் மேற்கொண்டும், ஆங்காங்கே பாசறைக் கூட்டங்கள் நடத்தியும் தயாரித்து அளித்திட்ட அறிக்கையினை ஒட்டி, 'களம் புகும் காளையர் பட்டியல்' ஒன்றும் மாநாட்டில் வெளியிடப்பட்டது.
அதன்படி, சட்டப் பிரிவை எரித்திடும் அறப் போரை 17-11-1963- இல் சென்னையிலே தொடங்குவதாக இருந்தார் அண்ணா. நானும், மன்னை முதலான மற்றும் நான்கு நண்பர்களும் தஞ்சையில் சட்டப் பிரிவை எரித்திடும் பொறுப்பினுக்கு ஒதுக்கப்பட்டிருந்தோம். அந்தச் சென்னை மாநாட்டில் இதயத்தை நெகிழ வைத்திடும இன்னொரு நிகழ்ச்சியும் நடந்தேறியது. கொள்கைத் தங்கமாம் தோழர் கோ. சு. மணி அகவிலைக் குறைப்பு அறப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறையிலே மாண்டு விட்டார்.
திசையறியாத கப்பலாகத் துயரக் கடலிலே சிக்கி விட்ட அந்தத் தியாகியின் குடும்பத்திற்குத் தலைமைக் கழகத்தின் சார்பில் மூவாயிரம் ரூபாய் உதவி நிதியாக அப்போது அளிக்கப்பட்டது. நிதியினைப் பெற்றுக் கொள்வதற்காகக் கோ. சு. மணியின் தந்தையார் மாநாட்டிற்கு வந்திருந்தார். அவருடைய இடுப்பிலே பிஞ்சுச் சிறுவனான பேரன்-கோ. சு. மணியின் பிள்ளை இருந்தான். மேடையிலே அண்ணாவின் கரத்திலிருந்து நிதியினைப் பெற்றுக் கொண்ட அந்தப் பெரியவரோ தாமே வைத்துக் கொள்ளாமல் தம் இடுப்பிலிருந்த பேரனிடமே அதனைத் தந்திட்டார்.
அந்த உருக்கமான காட்சியினைக் கண்டு மாநாடே நெஞ்சம் விம்மிட நெக்குருகி நின்றது. நிதியளிப்பு நிகழ்ச்சிக்கு முன்னர், தியாகத் தீயிலே வெந்துகருகிய தோழர்களின் திக்கற்ற குடும்பங்களைக் கைவிடாமல் எப்படியெல்லாம் காரியமாற்றி வந்திருக்கிறது கழகம் என்பதனையும், அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி முதல் பொற்செழியன் வரையுள்ள தியாகிகளின் நீண்ட பட்டியலைக் கூறி, அவர்களுடைய குடும்பங்களுக்கெல்லாம் கழகம் என்னென்ன நிதியுதவிகளை அளித்து வந்திருக்கிறது என்பதனையும் கழகப் பொருளாளர் என்கிற முறையில் அந்த மாநாட்டிலே எடுத்துரைத்தேன்.
