உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/இரண்டாந்தரக் குடிமக்களா?
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

இரண்டாந்தரக் குடிமக்களா? · 133 / 391

இரண்டாந்தரக் குடிமக்களா? இந்தியைத் திணித்து அதன் மூலம் தமிழக மக்களை இரண்டாந்தரக் குடிமக்கள் ஆக்கிட எப்படி இங்கே இந்தி வெறியர் துடித்துக் கொண்டிருந்தார்களோ அப்படித்தான் இலங்கையில் தமிழர்களின் வாழ்வையே பாழ்படுத்தும் செயல்களில் ஈடுபடுவதாக - திட்டங்கள் தீட்டுவதாக அப்போது செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. இந்தியைக் கட்டாயமாகப் பயின்று அதிலே சில தேர்வுகளில் வெற்றி பெற்றால்தான், மத்திய அரசில் வேலை பார்க்க உத்தியோக உயர்வும் உண்டு என்கிற விதிகளை இங்கே புகுத்த முற்படுவதைப் போலவே இலங்கைவாழ் தமிழர்க்கும் சோதனை பல ஏற்பட்டன ஈழ நாட்டிலும்.

சிங்களம் தெரிந்தால்தான் தமிழர்களுக்கு அரசாங்கத்திலும் மற்ற நிறுவனங்களிலும் வேலை என்கிற கட்டாய நிலைமையை அன்றைய சிரிமாவோ பண்டாரநாயகா ஆட்சி உருவாக்கிட முனைந்திருந்தது. இலங்கை அரசியலில் தமிழுக்குக் கிடைத்திட வேண்டிய நியாயமான இடத்தினை - உரிமையினை அடியோடு பறித்தெறிந்துவிட்டு சிங்களம் ஒன்றையே ஆட்சி மொழி ஆக்கிடவேண்டும் என்பதே அங்குள்ள சிங்களவர்களின் திட்டம். அந்த மொழித் திணிப்பினை எதிர்த்து அங்கே.

தமிழரசுக் கட்சி அக்டோபர் முதல் நாள் போராட்டம் துவங்கிற்று. சிங்களம் அந்த நாட்டின் ஆட்சி மொழி ஆவது குறித்து இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லைதான். அதே சமயம் குமரியாறு பாய்ந்திட்டதெனக் கூறப்படும் பன்னெடுங்காலத்திலிருந்தே திராவிட பூபாகத்தின் ஒரு பகுதியாகத் - திராவிட மொழிகளில் ஒன்றான தமிழ் தழைத்திட்ட தமிழினத்தால் தழைத்திட்ட இலங்கை மண்ணில் தமிழும் இன்னொரு ஆட்சிமொழியாக ஏன் ஆகக் கூடாது என்பதே நமது கேள்வி; சிறுபான்மையோர் ஆகிவிட்டாலும் சீரோடு வாழ்ந்திட்ட ஈழத் தமிழர்களின் எதிர்காலம் இந்த அளவுக்கு வேரோடு பிடுங்கப் படவேண்டுமா என்பதே நமது வேதனைக் குரல்.

ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட இன்னொரு நாட்டுக்கு உரிமையில்லைதான். ஆனால், உலகிலே எந்த நாட்டிலாவது சிறுபான்- மையினர் அநீதிக்கு ஆளாக்கப்படும் பொழுது அவர்களுக்குக் குரல் கொடுப்பதை ஐக்கிய நாடுகள் மன்றமே ஒரு கொள்கையாகக் கொண்டிருக்கிறது; அதற்காக ஒரு குழுவையும் வைத்திருக்கிறது. 1963 - இல் தமிழுக்கு இருந்த உரிமை அங்கே பறிக்கப்படுகிறது என்பதனை அறிந்ததும் கழகம் பதறியது- கண்டனக்கணையும் தொடுத்தது அந்த அடிப்படையில்தான்.

அதே சமயம் தமிழ்நாட்டின் ஆட்சி பீடத்திலே அமர்ந்திருந்த காங்கிரஸ்காரர்களோ ஈழத் தமிழர்களின் இடுக்கண்களைப் பற்றி எள்ளளவும் கவலைப்படவில்லை. அவர்களுக்கென்ன? தமிழகத்தில் தமிழுக்குக் குழி வெட்டும் முயற்சிகளையே தடுக்க முனையாதவர்கள் - இந்தித் திணிப்பால் தமிழினமே இரண்டாந்தரக் குடிமக்களாகி விடுவார்களே என்பதனை எண்ணிப் பாராதவர்கள் - எடுத்துச் சொன்னாலும் கேளாதவர்கள் - ஏளனம் பேசியவர்கள் - ஈழத் தமிழர்களுக்குத்தான் தங்கள் இரக்கத்தைக் காட்டிடும் இதயத்தைப் பெறப் போகிறார்களா?

அதனை நாம் எதிர்பார்க்கத்தான் முடியுமா? நாட்டுப் பிரிவினைப் பிரச்சாரத்தைத் தடை செய்யும்வகையில் நாடாளுமன்றத்திலே நிறைவேற்றப்பட்ட அரசியல் சட்ட 16-ஆவது திருத்த மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் 1963 அக்டோபர் 6 - இல் ஒப்புதல் அளித்து விட்டார் என்கிற செய்தி வெளியாயிற்று. இந்தச் சட்டத்தைப் பற்றிக் கழகத்தின் பொதுக்குழுவும் நீண்டதொரு விவாதத்தினை நடத்தி நடைமுறைக்கொத்த ஒரு முடிவிற்கு அது வந்திருந்தது.

சட்டத்தைக் கொண்டு வந்தவர்கள் - அப்படிக் கொண்டு வருமாறு தூண்டியவர்கள் - எத்தகைய உள் நோக்கத்தை உடையவர்கள் என்பதனைத் தெளிவாகவே தெரிந்து வைத்திருந்தது கழகம். அவர்களது நெஞ்சக் கோப்பையிலே நிரம்பி வழிந்து கொண்டிருந்த வஞ்சனையெல்லாம், ஏழை, நடுத்தர, பாட்டாளித் தமிழினத்தின் ஒரே ரட்சகனாக, பாதுகாவலனாக - ஒளியினைச் சிந்தி உயர்ந்து கொண்டிருக்கும் உதயசூரியனாம் தி. மு. கழகத்தை அடியோடு அழித்தொழித்து விட்டுப் பிறகு தட்டிச் கேட்பார் யாருமில்லை என்கிற தறுக்கோடு -செருக்கோடு காலா காலத்திற்கும் கோலோச்சிக் கொண்டிருக்கலாம் என்கிற பேராசையே.

முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பது பாமர மக்களும் நன்றாக அறிந்து வைத்துள்ள பால பாடம். அத்துடன், ஒருபுறம் செஞ்சீனமும் மறுபுறம் பாகிஸ்தானும் ஆக்கிரமிப்பு வெறியோடு இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருப்பதையும் கழகத்தால் அலட்சியப்படுத்திட முடியவில்லை. அண்ணனும் தம்பியும் மனவேறுபாடு கொண்டு, பாகப் பிரிவினை செய்து கொள்ளுவது வேறு; மாற்றானுக்கு இடம் கொடுத்து மானத்தையே இழப்பது வேறு. எனவே, இந்தியாவின் பாதுகாப்பிற்கே முதலிடம் அளித்து, செஞ்சீனம் - பாகிஸ்தான் இவற்றின் தாக்குதலைத் தகர்த்திடவும், சமதர்ம இந்தியாவைச் சமைத்திடவும் ஒருமைப்பாடு இன்றியமையாதது என்பதனையும் உணர்ந்து, மாறுபட்ட சூழ்நிலைகளுக்கு ஏற்பக் கொள்கையை மாற்றிக் கொள்ள முன் வந்தது கழகம்.

அதுவரை பிரிவினை கோரியது என்பதற்காகவே கழகத்தைப் பழித்துப் பேசிப் பகைமை பாராட்டியவர்கள், கழகம் பிரிவினையைக் கைவிட்டு விட்டது என்றதுமே தங்களுடைய ஏச்சையும் பேச்சையும் வேறு தொனியிலே திருப்பிவிட்டுத் திருப்தி கொண்டனர். "தி. மு. கழகம் பிரிவினையைக் கைவிடலாமா?"

என்று, தாங்கள் என்ன கேட்கிறோம் என்பதை விளங்காமலே வினா எழுப்பினர். "பிரிவினையைக் கைவிடாமல் தடைச் சட்டத்தை எதிர்த்தல்லவா போராட வேண்டும்?" என்று தூண்டியும் விட்டனர்; தூபமும் போட்டனர். அவர்களுக்கு எப்படியாவது கழகம் அழிந்து விடும் என்கிற ஆசைக்கனவு; அது கலையப் போகிறதே கழகத்தின் புதிய முடிவால் என்கிற மாளாக்கவலை. எனவே ' கணைகளைத் தொடுத்தனர், புதிய புதிய காரணங்களை - வாதங்களை - எழுப்பிக்கொண்டு.

அவர்களுக்கெல்லாம் ஆணித்தரமாக விளக்கங்களை அள்ளி வீசினார் அண்ணா: "கழகம் ஓர் அமைப்பாக இயங்க வேண்டுமென்றால் இயங்குவதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சட்டதிட்ட முறைப்படி மட்டுமே இயங்க முடியும். இல்லை என்றால் தடைச் சட்டத்தை மீறுவதன் மூலம் கழகம் அழிக்கப்பட்டுப் போய்விட ஒருப்பட வேண்டும். ,'... கழகத்தின் பிரச்சாரத்தை எதிர்த்து மாய்த்திட முடியாமல், கழகத்தைச் சமாளிக்க இந்திய அரசியல் சட்டத்தையே திருத்திட ஆட்சியாளர் கூச்சத்தைவிட்டு, வெட்கத்தை விட்டுத் தயாராகி விட்டபோது- நாட்டின் நிலைமைக்கு ஏற்றபடி கழகம் தன் சட்ட திட்டத்தைத் திருத்திக் கொண்டு இயங்குவதில் தவறு என்ன இருக்க முடியும்?

எனவேதான் கழகம் உடைபடாமல்-கழகத்தின் உருவம் அழிக்கப் படாமல்-கழகம் இயங்கும் வழியில் கழகச் சட்ட திட்டத்தை மாற்றிக் கொண்டு ஏதேச்சாதிகாரத்தை ஒழித்திடும் பணியில் ஈடுபட வேண்டும் என்ற முடிவு எடுக்கப் படுகிறது. 'ஏன் கழகம் தடையை மீறவில்லை?"

என்று கேட்பவர்களின் உள் எண்ணம் 'கழகத்தைச் சாகடிக்க வேண்டும்' என்பதுதான். கழகத்தைக் கிணற்றிலே தள்ளிச் சாகடிக்க நான் விரும்பவில்லை பயம் அல்ல அந்தப் போக்குக்குக் காரணம், அளவற்ற பாசம்- பற்று - அந்தக் கழகத்திடம்! அது போலவே நாட்டு பாதுகாப்பிலும், ஒற்றுமையிலும்! "தூண்டிலில் சிக்காத மீன் - வலையில் விழாத மான் - ஆகியவை மீது அவைகளைப் பிடித்துத் தின்று விட எண்ணம் கொண்டிருந்தவர்களுக்குக் கோபம் கோபமாகத்தான் வரும்; இது இயற்கை!

"அரசியல் சட்டத் திருத்தம் காரணமாக - அதன் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் வீராவேச உணர்ச்சியால் மட்டும் உந்தப் பட்டுக் கழகம் செயல்படும் - உடைபடும் - அழிந்துபடும் - என்று காமராசரும் அவர் போன்றோர் சிலரும் நம்பிக்கொண்டிருந்தார்கள். இப்போது நான் எடுக்கும் முடிவு கழகம் உருக்குலையாமல் இருந்திட வழி செய்கிறது!"

தடைச் சட்டம் என்னும் கொடுவாளால் கழகத்தின் கழுத்தினை அறுத்து அதன் குருதிக் குளத்திலே நீச்சலடிக்கத் துடித்திட்ட 'குணாளர்'களுக்கு அண்ணா அறிவித்த கொள்கை மாற்றம் பெருத்த ஏமாற்றத்தையே கொடுத்தது. அதனால் அவர்களுடைய எரிச்சல் வேறு திசையில் திரும்பிற்று, எரிமலையாக! தாங்கள் மட்டுமே இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள அத்தனை மாநிலங்களையும் ஆண்டிட வேண்டும் என்கிற அடங்காத ஆசையோடு-வேறு எந்தக் கட்சியுமே கோலோச்சிடக் கூடாது என்கிற குறிக்கோளோடு-கழகத்தைக் கருவறுத்திடச் தடைச் சட்டம் என்கிற பெயரால் சதித் திட்டம் தீட்டினர் அல்லவா காங்கிரசார்?

அந்த வஞ்சகப் போக்கினைக் கண்டு நெஞ்சங்குலைந்திடவில்லை-அஞ்சித் துவண்டிடவில்லை-கழகக் கண்மணிகள் என்பதனையே 1963 அக்டோபர் 13-இல் சென்னையில் கூடிய இந்தி எதிர்ப்புப் பொது மாநாடு தெளிவாக எடுத்துக் காட்டிற்று.