உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/அண்ணா வழங்கிய வாளும் கேடயமும்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

அண்ணா வழங்கிய வாளும் கேடயமும் · 132 / 391

அண்ணா வழங்கிய வாளும் கேடயமும் அறிஞர் அண்ணாவும் நெல்லையில் நடைபெற்ற பாண்டி மண்டல இந்தி எதிர்ப்பு மாநாட்டிலே- "போராட்ட இரயில் புறப்பட்டுவிட்டது: இந்தி ஆதிக்கம் நீடிக்கிறவரை இடையிலே அது நிற்காது!" என்று முழக்கமிட்டார். அத்துடன் அவர் நின்றிடவில்லை. களம் நோக்கிச் சென்றிடும் காளைக்குப் புறநானூற்றுத் தாய் நெற்றியிலே திலகம் இட்டு விடை கொடுப்பதைப் போல-தேனி நகரில் நிகழ்ந்த சிறப்பு மிக்க விழா ஒன்றிலே போராட்டக் குழுத்தலைவனாகிய எனக்கு ஒரு வீர வாள் பரிசளித்தார்.

பாண்டி மண்டல இந்தி எதிர்ப்பு மாநாடு நெல்லையிலே நேர்த்தியோடு நடந்து முடிந்திட்டதற்கு மறுநாள்தான்- 1963 செப்டம்பர் 23-இல் வெள்ளி வீரவாளையும் கேடயத்தையும் பரிசுகளாக எனக்கு அளித்தது அண்ணாவின் அருமைக்கரம். தேனியில் நடைபெற்ற அந்தப் பரிசளிப்பு விழாவிற்கு, இலட்சிய நடிகர் இராசேந்திரன் தலைமை தாங்கினார். இரும்பு நிறம், அதே போல் நெஞ்சம், எடுப்பான தோற்றம் வரும்பகை முடித்திடும் வரிப்புலி வீரம் படைத்து மறவர் குல மாணிக்கமாய்த் திகழ்ந்திட்டவரும், மரணத்தின் மடியிலே திடீர் என்று விழுந்திட்டவருமான நண்பர் மா.

இராசாங்கமும் அந்த விழாவிலே மற்றத் தோழர்களுடன் சேர்ந்து எனக்குப் பாராட்டு மலர்களைச் சொரிந்திட்டார். அந்தக் காட்சி இன்றைக்கும் என் நெஞ்சிலே சோக அலைகளை எழுப்புகின்றது. ஓர் இலட்சியவாதிக்கு அழகு-தனக்கென்று எந்தப் பலனையும் எதிர்பார்ப்பது அல்ல; எத்தகைய பரிசுக்கும் ஏங்குவதும் அல்ல. மழையைப் பொழிந்திடும் விண்ணகமோ, பழத்தை வழங்கிடும் பசுமரமோ, பலனைக் கருதிப் பணியாற்றுவதாகப் பகர்ந்திட முடியுமா!

அப்படித்தான் ஓர் உண்மையான தொண்டனும் உழைத்திடுவான். உயிரையும் கொடுத்திடத் துணிந்திடுவான்- சூழ்நிலை அழைத்திடும்போது. ஆயினும், ஓட்டப் பந்தயத்திலே ஓடுகிறவர்களுக்கு உற்சாகட் ஊட்டிட- உத்வேகம் தந்திட- மற்றவர்கள் 'அப்...அப்' என்று ஆங்கிலத்திலே உரக்க முழங்குவதில்லையா?- அப்படித்தான் ஓர் இயக்கத்திலே ஒரு சிலருக்கு அவர்கள் மேலும் முனைந்து செயலாற்றுவதற்காக மற்றவர்கள் பரிசினை அளிப்பதும்- பாராட்டி மகிழ்வதும்.

அந்த முறையிலே தான் எனக்கும் தேனியிலே பரிசுகள் வாளாகவும் கேடயமாகவும் வழங்கப்பட்டதாக நான் கருதினேன். அதையே தான் அந்த விழாவிலே அப்படி நான் சொன்னேன். ..."இந்த வீர வாளும் கேடயமும் நான் செய்து முடித்த காரியங்களுக்காக அளிக்கப்பட்டதாக நான் கருதவில்லை. நான் செய்ய வேண்டிய காரியங்களுக்காக இவற்றை அச்சாரமாகக் கொடுத்ததாகவே நான் கருதுகிறேன். "வெள்ளி வாளை அச்சாரமாகக் கொடுத்தால், 'நீ செய்ய வேண்டிய செயல்களை முடித்த பிறகு, தங்கவாள் அல்லவா பரிசு கேட்பாய்?'

என்று நீங்கள் யாரும் எண்ணிட வேண்டாம். "இந்தி எதிர்ப்புப் போரில் நான் களச்சாவை அடைந்து என் உடல் மீது அறிஞர் அண்ணா அவர்கள் கண்ணீர் வடிக்கின்ற காட்சியை விடப் பெறும் பேறு எனக்கு உலகிலேயே வேறு ஒன்றும் கிடையாது." அந்த விழாவிலே அண்ணா என்னைப் பற்றி இயம்பியவற்றை எல்லாம் இங்கே எடுத்து வைத்தால்-நினைவு கூர்ந்தால்- அதனை தற்புகழ்ச்சி என்று சிலர் தவறாகக் கருதிடக் கூடுமோ என்கிற தயக்கம் கூச்சம்- அச்சம்- எனக்கு இப்போது ஏற்படாமல் இல்லை.

என்றாலும், இட்டுக்கட்டி எதனையும் நாம் சொல்லிடவில்லையே என்கிற உணர்வும், தொண்டர்களை மதித்துப் போற்றுவதிலே அண்ணாவுக்கிருந்த உண்மையான விரிந்து பரந்த உள்ளம் மற்றவர்களுக்கும் விளங்கட்டுமே என்கிற வேட்கையும் அவருடைய உரையிலிருந்து சிலவற்றையாவது எழுதுமாறு என்னைத் தூண்டுகின்றன. அவர் சிந்திய சொற்களிலே சில: '...என்னைப் பொறுத்தவரையில், கருணாநிதியின் தொண்டிலேயே மறக்க முடியாத நிகழ்ச்சி எதுவென்றால் திருவண்ணாமலை வெற்றிக்கு உழைத்தது மட்டுமல்ல: மாநகராட்சி நம் வசம் ஆக, அவர் ஆற்றிய தொண்டும் அல்ல; அவர் சிறு வாலிபராகக் கொள்கை பிரச்சாரம் நடத்திய போது, அவர் பிரச்சாரத்தால் முறுக்கேறிய காங்கிரசார் அவரை அடி அடியென அடித்து, 'ஆள் தொலைந்து விட்டான்' எனக் கருதும் அளவிற்கு உதைத்து, 'காங்கிரசுக் கொட்டத்- தை அம்பலப்படுத்தும் போக்கிரிச் சிறுவனை ஒழித்து விட்டோம்' என இரத்தம் பீரிடும் அளவிற்கும் புதுவையிலே காட்டுமிராண்டித்தனமாக வெறித்தனமாக தாக்கிய சம்பவம் தான்!

'ஒரே குடும்பத்திலுள்ள நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையிலும் சிறப்பானவர்கள். நல்ல தமிழ் பேச வேண்டுமா? நாவலர் இருக்கிறார்; உருக்கமாக பேச வேண்டுமா? கருணாநிதி இருக்கிறார்; சண்டமாருதம் போலப் பேச வேண்டுமா? சண்முகம் இருக்கிறார்; மாணவர்களுடைய தொடர்பு வேண்டுமா? மதியழகன் இருக்கிறார். "இதையேதான் கருணாநிதி, தான் வீரவாளைப் பெற்ற போது 'நான் ஒருவன் மட்டும் இந்த வாளைப் பெறத் தகுதி பெற்றவன் அல்ல; பலர் இருக்கிறார்கள்' என்றார்.

"வண்ணங்கள் பல இருந்தாலும், அந்த வண்ணங்கள் மூலம் நல்ல ஓவியத்தை உருவாக்க ஓவியப் புலவன் தேவை. அது போல ஒரு கட்சியில் பலதரப்பட்டவர்கள் இருந்தாலும், அவர்களைச் சிறப்பாகச் செயல்பட வைக்கும் திறமையுள்ளவர்கள் வேண்டும். தம்பி கருணாநிதி அந்தச் சிறப்புக்களை நன்கு பெற்றவர்களில் ஒருவர். "கலைத்துறையிலே கருணாநிதி பெற்ற புகழ் கொஞ்சநஞ்சமல்ல; 'பராசக்தி' மூலம் அவர் அடைந்த புகழோடு மேலும் மேலும் பல திரை படங்களாலும் அவர் புகழடைந்தார்.

கருணாநிதி அந்தப் புகழை நம்பி அந்தத் துறையிலேயே சென்றிருந்தால் பணத்தோடும் வாழலாம்; பகட்டோடும் வாழலாம். ஆனால் அவர் கொண்ட இலட்சியத்தை மறந்து விட வில்லை. "சர்க்கசுக்காரன் உயரத்திலே விளையாடினாலும் பூமியிலே தான் இறங்க வேண்டும். விளையாடும் பொழுது கூட அவன் பூமியைப் பார்த்துக் கொண்டுதான் இருப்பான். பூமியை பார்க்காமல் மேலே பார்த்துச் செல்பவன் பபூன் தான்! அவன் தான் தடுமாறி விழுவான். அந்த ரகத்தைப் போன்று அல்லாது கழகத்தை மறவாது- எந்தப் புகழுக்கும் மயங்காது பணியாற்றுபவர் கருணாநிதி!

என்னைப் பாராட்டிட அண்ணா இவ்வாறு சொன்னார் என்றாலும் பின்னாலே, வெளிச்சம் போடக் கூடிய சில விந்தைப் பிறவிகளைப் பற்றி, எத்துணைத் தொலைநோக்கோடு, தீர்க்க தரிசனத்தோடு அன்றே அவர் அடையாளம் காட்டி விட்டார் என்பதை என்னால் இப்போது எண்ணாமல் இருந்திட முடியவில்லை. ஏனெனில் பூமியைப் பார்த்திடாமல் மேலேயே அண்ணாந்து நோக்கிச் செல்லும் சர்க்கஸ் கூடாரத்தின் 'பபூன்'களாக இன்று அரசியலிலே சிலர் நாடகம் ஆடிடுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோமே!

அண்ணாவின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் மறக்க வொண்ணாத சிறப்பினையுடையது தான். எனினும் 1963-ஆம் ஆண்டு வந்த அவருடைய பிறந்த நாளோ இரண்டு வகைகளிலே குறிப்பிடத்தக்கதாகும். என்னை- எங்கள் குடும்பத்தைப் பொறுத்த மட்டில். ஏனெனில் அந்த செப்டம்பர் 15-ஆம் நாள் முதல் 22-ம் நான் வரை 'இந்தி எதிர்ப்பு வாரம் நாடெங்கிலும் கொண்டாடப்பட்டது. எனது தமக்கை மகன் முரசொலி மாறன், குடந்தை திரு கல்யாண சுந்தரம் அவர்களின் செல்வி மல்லிகாவை வாழ்க்கை ஒப்பந்தம் செய்து கொண்டதும் அதே செப்டம்பர் பதினைந்தில் தான்.

மாறனின் திருமணம் சென்னை 'ஆபட்ஸ்பரி' மாளிகையில் சிறப்பாக நடந்தேறியது. அண்ணா அவர்களே மணவிழாவுக்குத் தலைமைதாங்கி நடத்திக் கொடுத்தார்கள். கழக முன்னணியினர் மட்டுமின்றி, மாற்றுக் கட்சிகளைச் சார்ந்திட்ட மூதறிஞர் ராஜாஜி, சிலம்புச் செல்வர் ம.பொ.சி. போன்ற முக்கியத் தலைவர்களும், காங்கிரஸ் அமைச்சர்கள் சிலரும் கூடத் திருமணத்திற்கு வருகை புரிந்து வாழ்த்துரை வழங்கினர். பொது வாழ்விலே கட்சிப் பற்றால், கருத்து வேறுபாடுகளால் மனமாச்சரியங்களை, காழ்ப்புணர்ச்சிகளைக் காட்டி கொள்ள நேர்ந்திட்டாலும், தனி வாழ்வில் உள்ள பிணைப்புகளை- உறவுகளை- வளர்த்துக் கொள்வதற்கு அரசியல் ஈடுபாடு ஒரு குறுக்குச் சுவராக எழுந்திடத் தேவையிலலை என்பதனை எடுத்து காட்டுவதாகவே அமைந்திருந்தது மாறனின் திருமணம்.

கழகத்தை அழித்திட வேண்டும் என்னும் உள்நோக்கததோடு அதே சமயம், அகில இந்திய அரசியலிலே தமக்கென்று ஓர் இடத்தினைப் பிடித்திட வேண்டும் என்கிற ஏக்கத்தோடு திரு காமராசர் கொண்டு வந்த திட்டத்தினால், மத்திய-மாநில அரசுகளிலிருந்து பல அமைச்சர்கள் பதவியைத் துறந்திடும் பரிதாபத்திற்கு ஆளாயினர். சிலர் வேண்டுமென்றே பலிகடாக்களாக்கப்பட்டனர். அந்த அரசியல் சூழ்ச்சி தமிழகத்திலும் அமுல் செய்யப்பட்டது. 1963-செப்டம்பர் 24-இல் சட்டமன்றக் காங்கிரசுக் கட்சி, முதலமைச்சர் பொறுப்பிலிருந்து விலகும் திரு காமராசரின் இடத்திற்குத் திரு பக்தவச்சலத்தைத் தேர்ந்தெடுத்தது.

ஏகமனதாக அல்ல: போட்டிக்கிடையேத் தான்! "எங்களுக்குப் பதவி என்றாலே எட்டிக்காய்! அதனால் தான் அதனை எட்டி உதைக்கிறோம்" என்று வெளியிலே வீராப்புப் பேசி வேடமிட்டுத் திரிந்திடும் பலர், நாற்காலியைக் கெட்டியாகப் பற்றிக் கொள்ள அன்று பட்டபாட்டினைப் பார்த்து நாடே கெக்கொலி கொட்டிச் சிரித்தது.

ஆறு மாநிலங்களில் முதல்வர்கள் காமராசர் திட்டத்தின் கீழ் பதவியிலிருந்து இறங்கினர். அல்லது இறக்கப்பட்டனர். பதவியிலிருந்து விலகியவர்களோ தங்களுக்குப் பின்னால், கட்சியினுள்ளே தங்கள் குழுவை சார்ந்தவர்களே முதலமைச்சர்களாகக் கோலோச்ச வேண்டும் என்பதில் குறியாக இருந்தனர். அதற்காக குடுமிப்பிடிச் சண்டையும் நடத்தினர். மத்தியப் பிரதேசம், பீகார், ஒரிசா ஆகிய மாநிலங்களில் தலைமை பதவிக்கெழுந்த போட்டிகளை தவிர்த்திடவே முடியவில்லை.

இந்தப் போட்டி முற்றுந்துறந்த முனிவராகப் போற்றப்பட்ட காமராசரால் வளர்க்கப்பட்ட தமிழகக் காங்கிரசிலும் தலையெடுக்கத் தவறிவிடவில்லை. இத்துணைக்கும் திருமதி இந்திரா காந்தி அம்மையாரே அகில இந்தியக் காங்கிரசின் சார்பில் அங்கே வந்திருந்தார், முதலமைச்சர் தேர்தலைக் கண்காணித்திட ; திரு. பக்தவத்சலனாரின் பெயரைத் திரு. காமராசரே முன் மொழிந்திடவும் செய்தார். என்றாலும் திடீரென்று ஏற்பட்டு விட்டது போட்டி; திரு ஆர்.

வீ. சாமிநாதனே பக்தவத்சலனாரை எதிர்த்துத் தோற்றவர். இந்தியா முழுவதிலும் காங்கிரசுக் கூடாரத்திற்குள்ளே இப்படிப் போட்டியைப்- புகைச்சலைக் கிளப்பி விட்டது தான், 'காமராசர் திட்டம்' தந்திட்ட கைகண்ட பலனாகும்! அப்போது 'இந்து' ஏட்டில், அதன் டெல்லி செய்தியாளர் தீட்டியிருந்த அரசியல் திறனாய்வுக் கட்டுரையொன்றில் காரை உதிர்ந்து- கூரையும் சிதைந்து கொண்டிருந்த காங்கிரஸ் வீட்டைப் பற்றிச் சுருக்கமாகப் - பொருத்தமாக ஒரே வரியில் குறிப்பிட்டிருந்தது என் நினைவிற்கு வருகிறது: "காங்கிரசுக் குளவிக் கூட்டைக் காமராசர் திட்டம் கலைத்து விட்டது!"

என்பதே அந்த வரி.