நெஞ்சுக்கு நீதி
காமராசர் திட்டம் · 131 / 391
காமராசர் திட்டம் இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது திரு காமராசர் புரிந்த தியாகத்தினை அண்ணாவோ தி.மு. கழகமோ குறைத்து மதிப்பிட்டதில்லை. தியாகிகளை மதிப்பதில்-அவர்களுக்கு ஆக்க பூர்வமான உதவிகளையெல்லாம் அளிப்பதில் கழகமோ கழக அரசோ என்றைக்குமே பின் வாங்கியதில்லை. அது மட்டுமல்ல; காங்கிரஸ் காரர்களே வியந்திடும் வண்ணம் காங்கிரஸ் கட்சியையும் மிஞ்சிடும் வகையில் தியாகச் செம்மல்களின் சிந்தையைக் குளிர்வித்த ஒரே அரசு-கழக அரசு!
அதன் சீர்மிகு திட்டங்களும் எண்ணற்றவை. இப்படி என்ன தான் கழகமும் கழக அரசும் தியாகச் சுடர்களை ஏற்றிப் போற்றினாலும் எங்களைத் தூற்றித் திளைப்பதே காமராசருக்கு வாடிக்கையான தொழிலாகும். எங்களைத் தொலைத்துக்கட்ட வேண்டுமென்பதே அவர் விடும் இலட்சிய மூச்சாகும்! இதற்காக அவர் எந்த அரசியல் நாடகமும் ஆடுவார்; எத்தகைய பகையோடும் கூடுவார். இது இன்றைக்குக் காணப்படும் காட்சி மட்டும் அல்ல; பத்தாண்டுகளுக்கு முன்னரே நடத்தப்பட்ட ஒத்திகையும் ஆகும்.
அப்போது 1963 ஆகஸ்டு திங்களில் திரு காமராசர் ஒரு திட்டத்தை அளித்திட்டார். அதன்படி- 'மத்தியிலும் மாநிலங்களிலும் அமைச்சர்களாகப் பணிபுரிந்து வரக் கூடிய வயதில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தம்மிச்சையாக அமைச்சர் பதவிகளைத் துறந்துவிட்டு மீண்டும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டிய பணியினை மேற்கொள்ள வேண்டும். இந்தத் திட்டத்தைக் கண்டதும் காங்கிரஸ் கூடாரத்திற்குள்ளேயே எரிச்சல்கள் உமிழப்பட்டன.
ஏளனங்கள் கொடிகட்டிப் பறந்தன. பொருமல்கள் புகை கக்கின. பொறாமைகள் கொழுந்துவிட்டு எரிந்தன. இதற்காக எழுந்த விமரிசனங்களும் விளக்கங்களுமோ ஏராளமானவை. சிலர் "முதலமைச்சர் பதவியையே தூக்கி எறிந்துவிட்ட காமராசர் 'புதிய புத்தர்' அல்லவா?" என்று உச்சிமேல் வைத்து மெச்சினர். ஆனால் ஒரு மாநில முதலமைச்சர் பதவியைவிட அன்றைக்கு அதிக மதிப்பு வாய்ந்திருந்த அகில இந்தியக் காங்கிரஸ் தலைமைப் பதவியையே அவர் அணைத்துக் கொள்ளப் போகிறார் என்பதை அப்போது அவர்கள் அறிந்திருக்க நியாயமில்லைதான்!
வேறு சிலரோ 'இது உண்மையில் காமராசர் திட்டமல்ல; செஞ்சீனத்தின் வஞ்சகப் படையெடுப்பால் நெஞ்சொடிந்து கிடக்கும் நேருவின் பலவீனத்தைப் புரிந்து கொண்டு அவருக்கு அடுத்த கட்டக் காங்கிரஸ் தலைவர்கள் தலைமைப் பீடத்தைக் கைப்பற்றிடத் தலைமறைவு வேலை செய்கின்றனர். அதனைத் தெரிந்து கொண்டுதான் நேருவே இந்தத் திட்டததைக் கொண்டு வந்திருக்கிறார், காமராசர் வாயிலாக', என்று வாதிட்டதும் உண்டு. இன்னும் சிலரோ 'தி.மு.
கழகத்தில் பெருகி வரும் செல்வாக்கினைக் கண்டு பீதி அடைந்து விட்டார் காமராசர். ஆட்சி பீடத்திலேயே நாம் அமர்ந்திருந்தால் தம்முடைய கட்சிப் பீடம் கலகலத்துப் போய்விடும் என்று கண்டுகொண்டுவிட்டார் அவர். அதனால்தான் தி.மு. கழகத்தை ஒழிப்பதற்காகவே இந்தத் திட்டத்தைக் கொணர்ந்திருக்கிறார் காமராசர்' என்று சொன்னதும் உண்டு.
இந்தக் கூற்றிலே உண்மையில்லாமல் இல்லை என்று உணர்ந்திடும் வகையிலேதான் அந்தச் சமயம் முன்னாள் மத்திய உணவு அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்குமிக்க தலைவர்களிலே ஒருவருமான திரு எஸ். கே பாட்டீல் அவர்களுடைய பேச்சும் அமைந்திருந்தது. 1963 செப்டம்பர் 7-இல் பம்பாயில் அவர் இவ்வாறு தம் கருத்தினை வெளியிட்டிருந்தார்: "தமிழ் நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கு அதிகரித்து வருவதைக் குறித்துத் திரு காமராசர் கவலை அடைந்தார்.
"தி.மு.கழகத்தின் கொள்கைக்கு மக்களின் ஆதரவு பெருகித் தனித் தமிழ்நாடு ஏற்படுவதில் அது வெற்றி பெறும் நாள் வந்து விடுமோ என அவர் எண்ணினார். "தி.மு.கழகத்தின் நாட்டுப் பிரிவினைத் திட்டத்தை முறியடிப்பதையே கருத்தில் கொண்டு திரு. காமராசர் தம்முடைய புதிய திட்டத்தை வெளியிட்டார். "அமைச்சரவையில் இருப்பதால் பொது மக்களுடன் நெருங்கிப் பழக முடியவில்லை என்பதை அவருணர்ந்தார். இதனால்தான் தமிழ்நாட்டில் காங்கிரசைப் பலப்படுத்தப புதிய திட்டத்தை உருவாக்கினார்.
"திரு காமராசர் திட்டத்தைத் தீர்க்கமாக ஆலோசித்தோம். தமிழ் நாட்டிற்கு நன்மை பயக்கும் திட்டம் இந்தியாவுக்கும் நலம் அளிக்கும் என்று முடிவு செய்தோம்." -திரு. எஸ். கே. பாட்டீலின் இந்தக் கூற்றிலிருந்தே, கழகத்தை அழித்தொழித்திடக் கருவறுத்திட எந்த அளவிற்குக், கங்கணம் கட்டிக்கொண்டார் காமராசர் என்பது தெளிவாகத் தெரிகிறது அல்லவா? மக்களாட்சி நெறி என்பது ஒரு அழகு மிக்க மலர்த்தோட்டம்; அதிலே எத்தனை விதமான கருத்துக்கள் வேண்டுமானாலும் எழில் வண்ண மலர்களாகப் பூத்துக் குலுங்கிடலாம்-புன்னகை சிந்திடலாம்.
ஆனால், அங்கே ஒரே ஒரு மலர் தான்-கட்சி தான்-சிரிக்கலாம். செழிக்கலாம் என்றால் அது உண்மையான ஜனநாயக உணர்வாகுமா? இல்லை, அது கடைந்தெடுத்த சர்வாதிகார வெறி! அந்த வெறிப் போக்கிற்கு இரையாகிவிட்ட ஜனநாயக வேடதாரிகளே தி. மு. கழகத்தை அழித்தொழிக்கும் 'திருப்பணி' யை மேற்கொண்டனர். எப்படியெல்லாமோ திட்டங்களும் தீட்டினர்! சட்டங்களும் செய்தனர். கழகமோ அந்தக் 'காழ்ப்பு நெஞ்சங்கள்' பற்றிக் கவலைப் பட்டிடவில்லை கடுகளவு கூட!
தன்னுடைய இந்தி எதிர்ப்பு அறப்போருக்கான ஆயத்தங்களை முடுக்கிவிட்ட வண்ணம் இருந்தது முழு மூச்சாக!
