நெஞ்சுக்கு நீதி
பிரிவினை கேட்டவருக்கு உதாரணம்! · 130 / 391
பிரிவினை கேட்டவருக்கு உதாரணம்! சட்டமன்றம்-நெஞ்சம் இடித்துரைக்கும் நீதியினை மறந்து விட்டுச் சொல்லம்புகளைத் தொடுத்துக் களித்திடும் வில்பயிற்சிக் கூடமல்ல. விளையாட்டரங்கமல்ல: 'எரிந்த கட்சி-எரியாத கட்சி' பேசிடும் வேடிக்கை மேடையும் அல்ல. ஆளும் கட்சியோ எதிர்க் கட்சியோ-எதனைச் சார்ந்திட்ட போதிலும், பொது மக்கள் நலனைக் காத்திடும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டவர்களால்- பொறுப்புள்ள கருத்துக்களை- பொருத்தமான சொற்களில்- பொறுப்போடு பேசவேண்டிய- பொறுப்பு மிகுந்த இடமே- சட்ட மன்றம்.
உண்மையில் சமூக நீதிக் குழந்தையினைத் தாலாட்டிச் சீராட்டிடும் தாயகமே சட்ட மன்றம், அந்தக் குழந்தைக்கு ஓர் ஊறு-ஊனம்-காய்ச்சல்-கடும் வலி-ஈளை-இருமல் என்றால் அவற்றையெல்லாம் விரைந்து விரட்டிடும் மருந்துகளைச் சட்டங்களாகத் தயாரித்துத் தந்திடும் மருந்துச் சாலையும் ஆகும் சட்ட மன்றம். அந்த மருந்துகளை ஒழுங்காகப் புகட்டிடும் மருத்துவர் நிலையில் உள்ளதே அரசாங்கம். சில நேரங்களில் சிலருடைய வார்த்தைகள் சட்ட மன்றம் என்பதையும் மறந்துவிட்டுப் பொது மேடை நெடி ஏறிச் சதிராட முனைவதுண்டு!
அப்போது நிலாக் கதிர்களாய் வரவேண்டிய சொற்கள் நெருப்பாகச் சுட்டெரிக்கும். பூக்களாய் மணக்க வேண்டியவை புழுதியாய் அரங்கேறும். பிரிவினைத் தடைச் சட்டத்தைப் பற்றிய தீர்மானத்தின் மீது நடந்த விவாதங்களுக்குப் பதிலளித்த திரு பக்தவத்சலனார் கேலியாக ஒரு கருத்தினைச் சொன்னபொழுது என்னால் வாளாவிருந்திட முடியவில்லை. 1963 ஆகஸ்ட் 7-இல் அவர் இவ்வாறுதான் குறிப்பிட்டார், சட்ட மன்றத்தில். 'எங்களைக் கேட்காமல்-எங்களைச் சந்தித்துப் பேசாமல் தேசிய ஒருமைபாட்டுக் குழு (பிரிவினையைத் தடை செய்யுமாறு) சிபாரிசு செய்தது எப்படி' என்று கேட்கிறார்கள்.
அதற்கு நான் பதில் சொல்ல முடியாது. இருந்தாலும் ஓர் உபமானம் சொல்கிறேன். யாரும் தவறாகக் கருதக்கூடாது. "சூதாட்டத்தைத் தடுக்கச் சட்டம் கொண்டு வருகிறோம் என்று வைத்துக்கொள்வோம்; 'அந்தச் சூதாட்டத்தில் பாதிக்கப்படும் சூதாடிகளைக் கேட்டுச் சட்டம் கொண்டு வந்தீர்களா?'
என்று கேட்டால் அது பொருந்துமா? விபசாரத் தடைச் சட்டம் செய்திருக்கிறோம். 'பாதிக்கப் படும் விபசாரிகளைக் கேட்டீர்களா?' என்று சொல்வது பொருந்தாது." அமைச்சர் பக்தவத்சலனார்-இமைகளைச் சிமிட்டிக் கொண்டு இப்படிப் பேசியதும் ஆளும் கட்சியினைச் சார்ந்திட்ட காங்கிரஸ் கட்சி நண்பர்கள் கரவொலி எழுப்பினர், எக்களிப்போடு, எங்கள் உள்ளத்தை முள்ளால் கிழிப்பதிலே அவர்களுக்கு அப்படியோர் அளவு கடந்த உற்சாகம்! இந்தியத் துணைக் கண்டத்தை இரு கூறாக்கிப் பாகிஸ்தானைப் பிரித்துச் சென்றவர் தான் ஜின்னா.
அவரை யாராவது இது போன்ற கூடு மொழி கூறியிருப்பார்களா? இங்கிலாந்தின் பிடிப்பிலிருந்து அயர்லாந்தைப் பிரித்துக் கொண்டு போனவர்தான் டி'வேலரா. அவருக்குக் கூட அத்தகைய இழிந்த பட்டங்களை யாராவது சூட்டியிருப்பார்களா? எகிப்திலிருந்து சூடான், ஈரானிலிருந்து குவைத், மலேசியாவிலிருந்து சிங்கப்பூர், பாகிஸ்தானிலிருந்து பங்களாதேஷ் என்று அவ்வப்போது தனி நாடுகள் பிரியாமல் இல்லை. ஆனால் அந்த நாட்டுத் தலைவர்களையெல்லாம் இவ்வளவு கேவலமாக யாராவது எள்ளி நகைத்து ஏகடியம் பேசியிருப்பார்களா?
இதனால் பிரிவினைவாதிகளையே கண்டிக்கக் கூடாது என்பது என் கருத்தல்ல. நான் இப்போது பிரிவினைவாதியும் அல்ல. ஆனால் எத்தகைய கண்டிப்பிலும் ஒரு நயம்-நாகரிகம்-பக்குவம்-பண்பாடு இருந்திட வேண்டும் என்பதே என் எண்ணமாகும். ஒரு நாட்டிலே பிரிவினை உணர்வு அரும்பெடுக்கிறது என்றால் அதற்குரிய காரணங்களை ஆராய்ந்திட வேண்டும்; அவற்றைக் களைந்திட முனைய வேண்டும்; அதற்காகப் பிரிவினைவாதிகளும் உணரும் வகையில்-நம்பும் வகையில்-அவர்களோடு கலந்து பேசிட வேண்டும்; அதன் மூலம் ஒருமைப்பாட்டினை உருவாக்கிட வேண்டும்.
அதனை விடுத்து நோயின் மூலத்தை அறிந்திடாமல் சிகிச்சை செய்யத் தொடங்கிடும் 'அரை வேக்காடு' மருத்துவராக-நுனிப்புல் மேய்வோராகச் சிலர் அள்ளி வீசுகின்றனர் வாதங்களை. அவர்களுடைய பட்டியலிலே நமக்கென்று ஒரு தனி இடம் பிடித்துக் கொள்ளும் தணியாத வேட்கையோடுதான் திரு பக்தவத்சலம் தரம் என்பதைத் தள்ளி வைத்துவிட்டுச் சாடினார் எங்களை. அவர் பேச்சினைக் கேட்டதும்- என் வழக்கமான இயல்பு என்னை இருக்கையில் அமர்ந்திருக்க விடவில்லை.
எழுந்தேன்; இப்படி எதிர்ப்புக் குரல் எழுப்பினேன்: "...நிதி அமைச்சர் அவர்கள் இந்த மன்றத்திலே இது வரையில் பேசிய கனிவான மொழிகளுக்கு மாறாகச் சூதாடிகள்-விபசாரிகள்- என்று உதாரணங்களைக் காட்டியது வருந்தத்தக்கதாகும். "அமைச்சருக்குச் சுட்டிக் காட்டுகிறேன்: பஞ்சாபில் சீக்கிய மாநிலம் கேட்டுக் கத்தி தூக்கிய மாஸ்டர் தாராசிங்கைக் கூப்பிட்டு டில்லியிலே பேசினீர்களே அது போல் எங்களை அழைத்து பேசியிருக்கக் கூடாதா?
என்று தான் நாங்கள் கேட்கிறோம்." நான் இவ்வாறு சட்ட மன்றத்திலே எடுத்து வைத்திட்ட கருத்தினை ஏற்றுக்கொள்ளக் கூடிய இதய முதிர்ச்சி-அரசியல் நடு நிலைமை-அன்று திரு பக்தவத்சலம் அவர்களுக்கோ, அவர் சார்ந்திருந்த ஆளும் காங்கிரசுக்கோ இல்லை. ஆனால் ஒரு பெரியவர்-தொழிலாளர்களுக்குத் தோழராகப் பணியாற்றியவர்-இலங்கையிலே இந்தியத் தூதுவராகவும் இருந்தவர்-அப்போது கேரள மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பினை ஏற்றிருந்தவர்-என்னுடைய வாதத்தில் உள்ள நியாயத்தின் பக்கம் தம்முடைய நேசக் கரத்தினை நீட்டினார்.
அதுவும் சென்னைக்கு வந்து ஆகஸ்டு 31-இல் இராயப்பேட்டை இளைஞர் சங்கக் கூட்டமொன்றில் பேசும் பொழுது இவ்வாறு குறிப்பிட்டார். "...... விரும்பாத ஒன்றை (இந்தியை) மக்கள் மீது திணிக்க கூடாது. மாநிலங்களுக்கிடையே ஏற்றத் தாழ்வுகள் இன்றி இந்தியா முழுவதும் தொழில் வளம் சீராக ஏற்பட வேணடும். "மற்றவர்கள் மீது கசப்புணர்ச்சியோ சுடு சொற்களோ வீசாமல் கண்ணியத்துடன் மற்றவர்களின் உள்ளுணர்வுகளையும் அறிந்து கொள்ள முயல வேண்டும்.
"இப்பேருண்மைகளை மறந்துவிட்டு நம்முடைய கருத்துக்களுக்கு மாறுபட்டவர்களை நாம் அழிக்க முற்படுகிறோம். "தி.மு. கழகத்தினரிடம் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ...அவர்கள் விரும்பும் பிரிவினை ஒருக்கால் ஏற்படுவதாகக் கொண்டால் நாம் இதுகாறும் அனுபவித்து வரும் பல இன்பங்களை இழக்க நேரிடும். இது பற்றி அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். "அவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை அவர்களுடன் உட்கார்ந்து பேசி அறிய விரும்புகிறேன்.
"உடன்பாடு காண்பதிலும் தீர்வு காண்பதிலும் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு." -இப்படி மனந்திறந்து அன்று பேசியவர் பிறகு இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்த திரு வி. வி. கிரி அவர்கள்தான்! எந்தச் சிக்கலாக இருந்திட்டபோதிலும் எல்லாத் தரப்பினரும் உட்கார்ந்து பேசி உடன்பாடு காணவேண்டும் என்பதிலே அன்றைக்கு மட்டுமல்ல; என்றைக்குமே திடமான உறுதியும் முழுமையான நம்பிக்கையும் கொண்டதுதான் தி. மு. கழகம்! இதைத் தான் அன்று சட்டமன்றத்திலே திரு பக்தவத்சலனாருக்குப் பதிலாக எடுத்துச் சொன்னேன்.
இன்றைக்குப் பிரிவினைக் கொள்கையைக் கைவிட்டுவிட்ட நிலையில் -ஆனால், பிரிவினைக்குரிய காரணங்கள் தொடர்ந்து வருவதைக் களைந்தெறிய வேண்டும் என்னும் பெரு நோக்கோடு மாநில சுயாட்சிக்காகக் குரல் கொடுத்திடும் வேளையில்-தி. மு. கழகம் வற்புறுத்த விழைகின்ற முறையான நெறியும், 'உட்கார்ந்து பேசி உடன்பாடு காண்போம்' என்பதுதான். இதனை ஏனோ சிலர் உணர மறுக்கிறார்கள். சிலரோ உணர்ந்தும் உணராததுபோல் நடிக்கிறார்கள். தஞ்சை, திருச்சி, தென்னாற்காடு மாவட்டங்கள் அடங்கிய சோழ மண்டல இந்தி எதிர்ப்பு மாநாடு 1963 ஆகஸ்ட் 25-இல் தஞ்சாவூரில் கோலாகலமாக நடந்தேறியது.
திருமதி சத்தியவாணிமுத்து மாநாட்டுத் தலைவர், திரு. கே. ஏ. மதியழகன் மாநாட்டுத் திறப்பாளர். நெல்லை, மதுரை, இராமநாதபுரம், குமரி மாவட்டங்களும் கேரளப் பகுதிகளும் அடங்கிய பாண்டிய மண்டல இந்தி எதிர்ப்பு மாநாடு செப்டம்பர் 22-ஆம் நாளில்: திருநெல்வேலி-பேட்டையில் எழுச்சி யோடு நடைபெற்றது. மாநாட்டுத் தலைவர் திரு ஏ. கோவிந்தசாமி, மாநாட்டுத் திறப்பாளர் திரு. ப. உ. சண்முகம். இரு மாநாடுகளிலுமே மிக நீண்ட ஊர்வலங்கள் மெத்த மகிழ்ச்சி அளித்திடும் வகையிலே-புறநானூற்றுக் காலத்துப் போர் மறவர்களின் அணி வகுப்பினை நினைவுபடுத்திடும் விதத்திலே-கண்கொள்ளாக் காட்சியாக விருந்தளித்தன.
அண்ணாவும் மற்ற கழக முன்னணியினரும் எழுச்சியுரைகள் ஆற்றினர். விளக்கம் பல தந்தனர். என்னுடைய வரவேற்பு உரையும் இருந்தது. இரு மாநாடுகளின் முடிவிலும் என்னால் தீட்டப் பெற்ற 'மாற்றான் தோட்டத்து மல்லிகை' நாடகமும், தம்பி மாறனின் 'வஞ்சியும் காஞ்சியும்' ஓரங்க நாடகமும் சிவகங்கைச் சேதுராசனின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதற்கிடையே என் இதயத்தையே குலுங்கிடச் செய்த நிகழ்ச்சி ஒன்றும் நடந்துவிட்டது.
தமிழகத்திற்கு மட்டுமின்றி இந்தியப் படவுலகுக்கே முன்னோடி என்று சொல்லத்தக்க வகையில் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் பட நிறுவனத்தைத் தோற்றுவித்துத் தமிழ்ப் படத் திரையுலகின் தந்தை என்னும் பெருமை பெற்றிருந்த திரு டி. ஆர். சுந்தரம் அவர்கள் மாரடைப்பு வந்து திடீரென்று இயற்கை எய்திவிட்டார். தமிழில் மட்டுமின்றித் தெலுங்கு, மலையாளம், கன்னடம், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் சேர்ந்து அது வரை 96 படங்கள் எடுத்துத் திகைப்பூட்டும் சாதனைகள் பல புரிந்த திரையுலக மேதை அவர்.
இன்றைக்குக் கலையுலகிலே உள்ள எத்தனையோ நடிகர்கள், தொழில் நுணுக்க வல்லுநர்கள் அவருடைய படப் பாசறையிலே பயிற்சி பெற்று வெளி வந்தவர்கள்தான். பதப்படுத்தப்பட்டுத் தலை யெடுப்பவர்கள்தான். அவருடைய ஆற்றல்-அறிவுக் கூர்மை-அஞ்சாமை-நெஞ்சத்தூய்மை பற்றி முன்பே நான் சொல்லியிருக்கிறேன். எல்லாவற்றையும்விட ஒருவருடைய வயதைப் பாராமல், அவருக்குள்ள வசதியைப் பாராமல்-திறமை ஒன்றினையே பெரிதென மதித்திட்ட அவர்தம் அருங்குணத்தை என்னால் மறக்கவே இயலாது.
அதுவும் என்னைப் பொறுத்த மட்டில் அவர் பொழிந்திட்ட அன்பு மழை தந்திட்ட தனி மரியாதை இன்றைக்கும் என் இதயத்தைப் புல்லரிக்கச் செய்வனவாகும்.
