உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/பதினாறாவது விதியின் திருத்தத்தை எதிர்த்தேன்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

பதினாறாவது விதியின் திருத்தத்தை எதிர்த்தேன் · 129 / 391

பதினாறாவது விதியின் திருத்தத்தை எதிர்த்தேன் கழகத்தைக் கருவறுப்பதற்கென்றே பிரிவினைத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தது டில்லிப் பேரரசு. அதற்குத் துணை நின்றது - தூபம் போட்டது - அன்றையச் சென்னை அரசு! 'தமிழ்நாடு' என்று பெயர் வைக்கக்கூட மறுத்து விட்டதால்தான்-தாய் மொழிப் பற்றையே காற்றிலே பறக்க விட்டதால்தான் அன்றையக் காங்கிரசு அரசைச் 'சென்னை அரசு' என்று குறிப்பிட வேண்டியவனாக இருக்கிறேன்!

இவ்வாறு கழகத்திற்குக் குழி தோண்டுவதையே குறிக்கோளாய்க் கொண்டு, இந்திய அரசியல் சட்டத்தின் 16-ஆவது விதிக்குச் செய்யப்பட்ட திருத்தத்தை ஆதரிக்கக் கோரி, சட்ட மன்றத்திலே தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதனை வெட்டிப் பேசிடும் பொழுது தான் தமிழினத்தின் வேதனைக் குரலை இவ்வாறு கொட்டித் தீர்த்தேன். "....அயர்லாந்து நாட்டின் விடுதலை வீரன் பியர்சே சுட்டுக்கொல்லப் பட்டான். அவன் உடல் மறைந்தது; ஆனால் அவனுடைய புகழ் மறையவில்லை.

புகழோடு வாழ்கிறான். வரலாற்றிலே மறக்க முடியாதபடி ஓர் ஏடாக மாறி விட்டான்." "இச்சட்டம் அரசியல் சட்டத்தின் 16-ஆவது விதிக்குச் செய்யப்படுகிற திருத்தம் என்று கூறப்பட்டாலும், இத்திருத்தத்தை. 'தி. மு. கழகத் தடுப்பு மசோதா' என்றும், 'பிரிவினைத் தடுப்பு மசோதா' என்றும் பல தரப்புகளில் கூறப்படுகிறது.

மசோதாவைத் தாக்கல் செய்த கனம் நிதியமைச்சர் 'தி. மு. க. வினர் நாட்டைத் துண்டாடும் கொள்கையைக் கைவிட்டு விடுவர்' என்று நம்புவதாகக் குறிப்பிட்டார். "அரசியல் சட்டத்தை உருவாக்கும் போது, 'துண்டாடப்பட்ட ஒரு நிலப் பகுதிக்குத்தான் அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டது' என்பதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். "ஆங்கிலேயர்களால் ஓருறுப்பு நாடாக ஆக்கப்பட்டுப் பின்னர் அவர்கள் வெளியேறும் போது பாகிஸ்தான் பிரிவினையை ஒப்புக் கொண்டு துண்டிக்கப்பட்ட நிலப் பரப்புக்குத்தான் அரசியல் சட்டம் வகுக்கப்பட்டது.

"தேசிய ஒருமைப்பாட்டுக் குழு சிபாரிசுகளின் மீதுதான் இச்சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது எனக் கூறப்பட்டது. இந்தக் குழு எங்களுடைய கருத்துக்களைக் கேட்டு அறிய முடியாமல், எங்கள் தலைவர்களைச் சந்தித்துக் கருத்தறிய முயற்சி செய்யாமல் நாட்டிலே 'உலா' வந்தது."

"விவசாயத்தைப் பற்றி ஆராயக் குழு அமைக்கிறோம் என்றால், அக்குழு, விவசாயிகளைச் சந்தித்து அவர்களுடைய கருத்தை அறிவதற்கு முயற்சி செய்யாதா?" "தொழிலாளர்கள் நிலை பற்றி ஆராயக் குழு அமைக்கிறோம் என்றால், அக்குழு, தொழிலாளர்களைச் சந்தித்துப் பேசிக் கருத்தறிய வேண்டாமா?"

"பிரிவினையைப் பற்றி ஆராயக் குழு அமைக்கப்படுகிறது என்றால், அக்குழு, (அப்போது பிரிவினைக் கொள்கையை ஏற்றிருந்த) எங்களைச் சந்தித்து, எங்கள் கருத்தை அறிய வேண்டாமா?" "சம்பந்தி வீட்டுக்குச் சொல்லாமலே நிச்சயதார்த்தம் நிகழ்த்தலாமா?"

"தி. மு. கழகம் தேர்தல் நேரத்தில் தலையிடாமல் இருக்கவே, இச்சட்டம் கொண்டுவரப்படுகிறது. "அமைச்சர் அவர்கள் பேசும் பொழுது, 'அமெரிக்காவில் பிரிவினை உணர்ச்சி அடக்கப்பட்டுவிட்டது' என்று கூறினார்." "அமெரிக்காவில் இந்நிலை எப்படி வந்தது? அதன் பூர்வோத்திரம் என்ன?"

அமெரிக்காவின் வடக்குப் பகுதிக்கும் தெற்குப் பகுதிக்கும் இடையே அடிமைப் பிரச்சினை மீது (தாவா) எழுந்தது; இதன் விளைவாக அமெரிக்க சுப்ரீம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. 'வழக்கு நமக்குப் பாதகமாக ; முடியுமோ?' என்ற அச்சம் வட பகுதியினருக்கு ஏற்பட்டது. அதன் விளைவாக வடபகுதியினர் தெற்குப் பகுதியினர் மீது போர்ப் பிரகடனம் செய்தனர். எல்லா வகையிலும் வலிமை பெற்றிருந்த வட பகுதியினர் தெற்குப் பகுதியை அடிமையாக்கிக் கொண்டனர்.

இவ்வாறு வடக்குப் பகுதியினர் தெற்குப் பகுதி மீது படையெடுத்து வெற்றி பெற்ற பின்னரே பிரிந்து போகும் உரிமை கிடையாது' என்று சுப்ரீம் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது.' "இந்தத் தீர்ப்பு 'போஸ்ட் பேக்டோ தீர்ப்பு' (Post Facto) என்று வரலாற்றிலே குறிக்கப்படுகிறது. பிரிந்து போகும் உரிமை இரஷ்ய அரசியல் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்பதைத் திரு மதியழகன் அவர்கள் சுட்டிக்காட்டினார். ஆனால் மன்றத்தில் பேசிய கம்யூனிஸ்ட் உறுப்பினர் திரு கலியாணசுந்தரம் அவர்கள் 'பிரிந்து போக வேண்டும் என்பது தேசத் துரோகமானது' என்று கூறினார்."

"1951-ஆம் ஆண்டில் நாங்கள் வெட்ட வெளியில் பசும்புல் தரையில் பேசிக் கொண்டிருந்தோம். 'அங்கே பேசினால் போதுமா? உள்ளே வந்து பேசுங்கள்' என்று காமராசர் அழைத்தார். 'சரி, உள்ளே சென்றுதான் பார்ப்போமே' என்று 1957-ஆம் ஆண்டுத் தேர்தலில் ஈடுபட்டோம்.

15 இடங்களைப் பெற்றோம்." "அமைச்சர் திரு சுப்பிரமணியம், 'உங்கள் திராவிட நாட்டுப் பிரச்சினையைத் தேர்தல் பிரச்சினையாக வைக்க முடியுமா?' என்று சவால் விட்டார். 1962-ஆம் ஆண்டுத் தேர்தலில் அதையும் தேர்தல் பிரச்சினை ஆக்கினோம். 51 இடங்களைப் பெற்றிருக்கிறோம்."

"எங்களை அரசியல் முனையில் சந்திக்கத் தெம்பு, திராணி, துணிவு இல்லாத காரணத்தால் சட்டம் போட்டு அழிக்க முயல்கிறீர்கள் என்பதைத் தவிர வேறு உண்மை என்ன இருக்கிறது?" "இந்தச் சட்டத்தை அமுல் படுத்திவிட்டு, 'பேச்சு சுதந்திரம் அளித்த காங்கிரசுக்கே உங்கள் ஓட்டு' என்று இனியும் நீங்கள் பேச முடியுமா?"

"விடுதலை வீரராக விளங்கிய அன்றையப் பண்டித நேரு, 1945-ஆம் ஆண்டு ஜூலையில் காஷ்மீரில் உள்ள கபூர்தலா தோட்டத்தில் நடைபெறற கூட்டத்தில்- 'இந்தியாவின் ஒரு பகுதியை மற்றொரு பகுதி அடக்கி ஆள்வதற்காக நாங்கள் சுதந்திரம் கேட்கவில்லை. இந்தியாவின் எந்தப் பகுதியாவது பிரிந்து போக வேண்டும என்று விரும்பினால் பிரிந்து போக வேண்டாம் என்று நாங்கள் கேட்போம். பிரிந்துதான் போவோம் என்று கூறினால் நாங்கள் விட்டு விடுவோம்' என்று கூறியிருக்கிறார்."

1963 ஆகஸ்ட் 7-ஆம் நாளில் நான் ஆற்றிய சட்டமன்ற உரையினை இங்கே நான் எடுத்துக் கொடுத்திருப்பது அந்த நாளிலேயே வாதங்களை அடுக்குவதற்கு முன்னர் எத்தகைய அக்கறையோடு வரலாற்றுப் பின்னணிகளையெல்லாம் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் திரட்டித் தந்திட முயன்றிருக்கிறோம் என்பதனை இளந்தலைமுறையினர் உணர்ந்திட வேண்டும் என்பதற்காகவே. ஆனால் அன்றையச் சூழ்நிலையில் நான் அடுக்கிக் காட்டிய வாதங்களையே இன்றைக்கும் நான் எடுத்துப் பேசுவதாகச் சிலர் கதைக்கலாம்.

கற்பனைச் சரடுகளை அவிழ்த்துவிடலாம். "அழுக்கைப் பார்த்தே பழக்கப்பட்டவர்களுக்கு, அழுக்குக் காற்றிலேயே புழுத்தவர்களுக்கு வெளுப்புகூடக் கறுப்பாகவே காட்சி தரும். அவர்களுடைய மனத்திலே மண்டிக் கிடக்கும் அழுக்கை அகற்றிட வெளுப்பைக் கொணர்ந்திட நாம் என்னதான் முயன்றிட்டாலும் ஏமாற்றமே மிஞ்சும். அண்ணா சொன்னதைப் போல 'வாழ்க வசவாளர்கள்!"

சட்ட மன்றத்தில் முதல் நாள் பிரிவினைத் தடை மசோதாவை எதிர்த்து உரையாற்றிய நான், அடுத்த நாள் ஆட்சிமொழி தொடர்பாகத் தோழர் கே. ஏ. மதியழகன் கொண்டு வந்த தீர்மானத்தையொட்டியும், இப்படிக் குரல் எழுப்பினேன்: ஜனநாயக உணர்வு படைத்த பண்டித நேரு அவர்கள் காலத்திலேயே நாம் பெற வேண்டிய உரிமைகளைப் பெறத் தவறி விட்டால், ஒரு வேளை இயற்கை சதி செய்து விட்டால் நான் தமிழின் மீது வைத்துள்ள பாசத்தால் நேசத்தால் பற்றால் கேட்கிறேன்; இதந் மண்ணுக்கு நாதி யார்?'

இவ்வாறு நான் கேள்வியெழுப்பிய வேளையில் நேருவின் உடல் நலம் சிறப்பாகவே இருந்தது. ஆனால் ஓராண்டு முடிவதற்குள்ளேயே, 1964 மே 27-இல் அந்த விடுதலை வீரர் விடுதலை பெற்றுவிட்டார். உலக வாழ்வை விட்டு! அவருடைய மறைவு இந்திய மண்ணுக்குப் பெரும் இழப்பு!