நெஞ்சுக்கு நீதி
கலையும் அரசியலும் இரு கண்கள் · 128 / 391
கலையும் அரசியலும் இரு கண்கள் கலை - அரசியல் - இரண்டையுமே என் இரு கண்களாகக் கருதுபவன்தான் நான். இவற்றிலே எந்தக் கண் உயர்ந்தது, எந்தக் கண் தாழ்ந்தது என்ற ஆராய்ச்சிக்கே இடமில்லை. ஆனால் ஒன்றை நான் தெளிவாகக் கூறிட இயலும். எனக்கு விவரம் தெரிந்த பிறகு நான் முதன் முதலில் ஈடுபாடு கொண்டது அரசியலில்தான். என்னுடைய பதினான்காம் வயதில் திருவாரூர்த் தெருக்களிலே என்றைக்கு நான் 'இந்தி ஒழிக' என்று முழக்கமிட முற்பட்டேனோ அன்றே என் அரசியல் தொண்டு தொடங்கிவிட்டது.
பிறகுதான் நான் கலை உலகில் கால் வைத்தேன். அரசியல்-சமுதாய-இலட்சியங்களைப் பரப்பிடக் கல்வியை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டேனேயல்லாது, சிலரைப் போலக் கலைக் கவர்ச்சியை மட்டுமே காட்டி அரசியலில் தலையெடுக்க முனைந்திடவில்லை நான். எனினும் இரு துறைகளிலுமே, என் இதயம் ஏற்றுக் கொண்ட உயர்ந்த கொள்கைகளுக்காக-ஓய்வு பற்றி ஒரு கணமும் எண்ணிடாமல்-உளப்பூர்வமாக உழைத்தேன், உழைக்கின்றேன் என்பது மட்டும் உண்மை.
இதனை உணர்ந்து ஒப்புக்கொண்டு மதிப்பளிக்கின்ற வகையிலே தான் ஜூலை 24-இல் எனக்கு இரு பரிசுகள் வந்தன. கலையுலகப் பரிசினைத் திரைப்பட இயக்குநர் திரு எல்.வி. பிரசாத் அளித்தார். அவர் தயாரித்து இயக்கிய 'இருவர் உள்ளம்' படம் வெற்றிகரமாக ஓடிற்று. நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அதில் நடித்திருந்தார். நான் அதற்கு உரையாடல் தீட்டியிருந்தேன். அந்தப் படம் நூறு நாட்கள் ஓடியதை முன்னிட்டே இயக்குநர் திரு எல்.வி.
பிரசாத் எனக்கு ரூபாய் பத்தாயிரம் பரிசளித்தார். அந்தத் தொகையினை உடனே சொந்தச் செலவுகளுக்குப் பயன்படுத்திடவில்லை நான். என்னைப் பாராட்டிச் சீராட்டி ஆளாக்க அரும் பாடு பட்ட என்னுடைய அருமைப் பெற்றோர்களான அஞ்சுகம்-முத்துவேலர் நினைவாக நான் பிறந்த மண்ணாம் திருக்குவளையில் தாய்-சேய்நல மருத்துவ மனை கட்டப்படுவதற்கு அந்தப் பத்தாயிரம் ரூபாயையும் நன்கொடையாக வழங்கிவிட்டேன். அடுத்ததாக அன்று நான் பெற்ற பரிசு என் அரசியல் தொண்டினை மதிப்பதற்கு அமைந்ததாகும்.
மயிலாப்பூர் கழகச் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது அதிலே கலந்து கொண்ட நான்- "தி.மு.கழகம் நடத்தவிருக்கும் இந்தி எதிர்ப்புப் போராட்டம், விளம்பரத்துக்காக நடத்தப்படும் போராட்டம் அல்ல; விளக்கத்திற்காக-வீழ்ந்து கிடக்கும் உரிமைக்காக-நடத்தப்படும் போராட்டமாகும்; தமிழ் நாட்டில் விளக்கேற்றி வைக்கும் போராட்டமாகும். "இந்தித் திணிப்பினால் தமிழர்களின் எதிர்காலமே பாழாக்கப்படும் சதி டில்லியில் உருவாகி வருகிறது; புரண்டு வரும் இந்தி வெள்ளத்தைத் தடுக்க இப்போதே அணை போட்டாக வேண்டும்; இல்லையென்றால், தமிழ் இலக்கியம், தமிழர்கள் கலை, பண்பாடு எல்லாம் அழிந்துவிடும், இந்த அவல நிலையைப் போக்கவே தி.மு.
கழகம் போராட்டம் நடத்த விருக்கிறது... -என்று குறிப்பிட்டேன். அந்தக் கூட்டத்தில், ஒரு விந்தையான பரிசினை அளித்தார் மயிலைத் தோழர் எஸ்.வி. முத்து. அது கறுப்பு-சிவப்பு இருவண்ண அட்டைப் பெட்டி வடிவில் அமைந்திருந்தது. உள்ளே மூன்று சிறிய பிளாஸ்டிக் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. முதல் பெட்டியின் மேல் 1957 என்று குறிப்பிட்டு அதனுள்ளே 15 கறுப்பு-சிவப்பு நிறமுடைய குண்டு மணிகள் போடப்பட்டிருந்தன. இரண்டாவது பெட்டியின் மேல் 1962 என்று குறிப்பிட்டு அதனுள்ளே 51 குண்டுமணிகள் போடப்பட்டிருந்தன.
மூன்றாவது பெட்டியின் மேல் 1967 என்று குறிப்பிட்டு அதனுள்ளே 151 குண்டுமணிகள் போடப்பட்டிருந்தன. பரிசினைப் பெற்றுக்கொண்ட நான் மூன்றாவது பரிசுப் பெட்டியையே கண்கொட்டாமல் பார்த்தேன். பின்னர் இவ்வாறு பேசினேன்! "வரப் போகிற 1967 தேர்தலில் 151 இடங்களைத் தி.மு. கழகம் பெறவேண்டும் என்ற ஆர்வத்துடன் காங்கிரசை முறியடித்து விரட்ட தி.மு. கழகத்திற்குப் புதிய வலிவையும் தெம்பையும் பொது மக்கள் அளிக்க வேண்டும்."
என்னுடைய பணிவான வேண்டுகோள் பலனற்றுப் போகவில்லையென்பதும், காங்கிரஸ் கைவரிசைகள் யாவும் புதையுண்டு போய்விட, கழக அரசே 1967-ல் அண்ணாவின் தலைமையில் அமைந்தது என்பதும் பின் வரலாறு காட்டிய காட்சிகளாகும். போராட்டக் குழுவின் முடிவுகளையொட்டி 3-8-63-ல் சேலத்தில் போராட்ட வீரர்களின் பாசறைக் கூட்டத்தைக் கூட்டினேன். கருத்து விளக்கங்கள் பல அளிக்கப்பட்டன. 4-8-63-இல் சேலம்-அம்மாபேட்டையில் தாளமுத்து நடராசன் அரங்கில் இந்தி எதிர்ப்பு மாநாடு துவங்கியது.
கோவை, நீலகிரி, சேலம் ஆகிய மாவட்டங்கள், கருநாடக மாநிலம் ஆகிய பகுதியினருக்காக நடத்தப்பட்ட மாநாடுதான் அது என்றாலும், தமிழகம் எங்கணுமிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் பெருந்திரளாய்க் குழுமிக் கடற் பரப்பாய்க் காட்சியளித்தனர். மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் என்கிற முறையில் உரையாற்றிய நான் இவ்வாறு குறிப்பிட்டேன்: "காரிருள் இந்தி விலக வேண்டும்; அதற்குத்தான் கழகம் களம்காணத் துடிக்கிறது! நம்முடைய அன்னையின் விலங்கொடிக்க-அவள் முகத்தில் பொலிவு பெற-தமிழ் வாழ-தமிழகம் ஓங்க-நீங்கள் எல்லாரும் இன்று காட்டுகிற உணர்ச்சியை அறிஞர் அண்ணா அவர்கள் போராட்ட நாள் குறிக்கிற அந்த நேரத்திலும் காட்டவேண்டும்.
"வேங்கையெனப் பாய்ந்து வரும் இந்தி ஆதிக்கத்தை வேகமாகச் சாடி நொறுக்கும் சக்தி தி.மு. கழகத்திற்குத்தான் இருக்கிறது; வேறு எதற்கும் அந்த வலிவு இல்லை. இந்தப் போரில் வெல்லவும், எதிர்காலச் சந்ததிக்கு நன்மை செய்யவும், இருண்ட வீட்டில் விளக்கேற்ற திராவிடப் பெருங்குடி மக்களாகிய நீங்கள்தான் உதவ வேண்டும். "இந்தித் திணிப்பால் ஏற்படும் கொடுமைகள் இப்போது விளங்கா; பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர்தான் தெரியும்."
-சேலம் இந்தி எதிர்ப்பு மாநாட்டிற்கு நாவலர் நெடுஞ்செழியன் தான் தலைமை தாங்கினார். அவரை முன்மொழிந்து பேசிய நான், "....தமிழக வரலாற்றில் இரு நெடுஞ்செழியர்கள் வீரவரலாற்றைச் செதுக்கியவர்கள்; அழியாப் புகழைச் செதுக்கியவர்கள்; நீதிக்காக உயிர் விட்டவர்கள். ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் ஒருவன்; மற்றொருவன் தலையாலங்கானத்தில் தன் போர்த் திறன் காட்டியவன். அவர்களது வழியில் வந்தவர் ஆவார் நம் நாவலர் நெடுஞ்செழியன்" என்று குறிப்பிட்டேன்.
மாநாட்டில் நாவலர் அவர்கள் தலைமையுரையினை ஆற்றிட முற்பட்டுச் சிறிது நேரமே சென்றிருக்கும். திடீரென்று கொட்டத் தொடங்கிற்று மழை; என்றாலும் கலையவில்லை கூட்டம். திறந்த வெளி அரங்கானதால், மழை வெள்ளம் கரைபுரண்டு தரையெல்லாம் விழுங்கியது. எனினும் நனைந்து கொண்டே அமர்ந்திருந்தனர் பொதுமக்கள். குறிப்பாக மழலைச் செல்வங்களை மடியினில் ஏந்திய தாய்க்குலம் உடல் நடுங்கிய போதிலும், உள்ளம் நடுங்காமல் கொள்கை வெறியோடு குந்தியிருந்த காட்சி நெஞ்சத்தை நெக்குருகச் செய்தது.
"இந்தி ஒழிக!" என்று தீர்மானத்தை ஆதரித்து, கொட்டும் மழையிலும் அவர்கள் குரலை எழுப்பியது, குருதி நாளங்களிலே புதுவீரம் பாய்ச்சியது. சேலம் இந்தி எதிர்ப்பு மாநாட்டினைப் பற்றிச் சிந்தித்திடும் வேளையில் பொதுமக்களின் கருத்தினைக் கவர்ந்திட நாங்கள் செய்திருந்த வேறொரு ஏற்பாடும் என் விழி முன்னே இப்போதும் 'பளிச்'சென்று மின்னுகின்றது. அங்கே ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி ஏற்பாட்டினையே சொல்கின்றேன். சேலத்தின் பெரிய பெரிய தெருக்களில் மட்டுமின்றிச் சின்னஞ்சிறு சந்துகளிலும் கூட வண்ண வண்ணச் சுவரொட்டிகளில் கண்ணைப் பறித்தன பொன்மொழிகள்.
எல்லாமே இந்தித் திணிப்பினைச் சாடிடும் எழுச்சிப் போர்ப்பரணி பாடிடும் புரட்சிமிக்க பொன்மொழிகள்! 'தமிழ்க்கடல்' மறைமலையடிகள், 'நாவலர்' சோமசுந்தர பாரதியார், 'தமிழ்த் தென்றல்' திரு வி. கலியாண சுந்தரனார் போன்ற அறிஞர் பெருமக்களுடைய இனிய கருத்துக்கள், ஏன், எச்சரிக்கைகளே சுவரொட்டிகளிலே சுடர் வீசின; சூடும் ஏற்றின, தாய் மொழி காத்திட வேண்டிய தன்மான உணர்வுக்கு! தன்மான இயக்கத்தின் தந்தை' என்னும் பெருமை பெரியாருக்கு உண்டென்றால் 'தனித் தமிழ்' இயக்கத்தின் தந்தை என்ற பெருமை மறைமலையடிகளுக்கு உண்டு.
'அபேட்சகர்' - 'வேட்பாள'ராக, 'அக்ராசனாதிபதி' - 'அவைத் தலைவ'ராக, 'நமஸ்காரம்' - 'வணக்க'மாக 'சந்தோஷம்' - 'மகிழ்ச்சி'யாக மாறி மறுமலர்ச்சி பெற்றிடும் வண்ணம் இன்று நல்ல தமிழ் நறுமணம் வீசிட வித்திட்டவர்-விளக்கமளித்தவர் - சிலருடைய வெறுப்பினையும் தேடிக்கொண்டவர் மறைமலையடிகள். அவருக்கோ சைவ சமயமே மூச்சு, பேச்சு எல்லாம்! 'மாரிவாயில்' போன்ற இலக்கிய வைரங்களைத் தமிழன்னையின் முடியிலே பதித்திட்டவர் நாவலர் சோமசுந்தர பாரதியார்.
அந்த நாளில், தமிழ்நாட்டு மண்ணில் காங்கிரஸ் கட்சி வேர்விட்டுத் தழைத்திடத் தண்ணீர் வார்த்த முப்பெருந் தலைவர்களுள் ஒருவர் திரு. வி. க. (பெரியாரும் பி. வரதராசலு நாயுடுவும் மற்ற இருவர்) இந்தப் பெரியவர்களும்கூட இந்தித் திணிப்பு என்றதும், வந்தது பேரிடி தமிழுக்கு என்று வரிந்து கட்டினர், எதிர்ப்புக்கணை தொடுத்திட. மொழி பற்றிப் பெரியார், அண்ணா கருத்துக்களை முழுமையாக ஏற்றனர், போர் முரசமும் கொட்டினர்.
எனவேதான் அந்தத் தமிழாய்ந்த சான்றோர்களின் அரிய உரைகள் சுவரொட்டிகளில் பளிச்சிட்டால், அவை மக்களின் மனத்திலே பதிந்திடும்-சிந்தையைக் கிளறிடும்-தெளிவினைத் தந்திடும்-அதன் விளைவாகத் திண்டோள் மறவர் பலர் அறப்போர் அணியிலே சேர்ந்திடுவர் புரட்சிப் புயலாக என்று நம்பினோம்; நடவடிக்கைகள் மேற்கொண்டோம். இதிலே கட்சிப் பாகுபாடு எதனையுமே நாங்கள் காட்டிடவில்லை. ஓர் இலட்சியம்-அதுவும் தாய் மொழிக்கு வரக்கூடிய ஒரு பேரிடியை, இந்தித் திணிப்பைத் தகர்க்க வேண்டிய ஒரு பொதுவான இலட்சியம்- என்று வரும்பொழுது அதனைக் கட்சிக் கண்ணோட்டத்துடன் மட்டும் அணுகுவது முறையான பொதுத் தொண்டு ஆகாது; அது நம்முடைய முதிராத மன நிலையையும் பறை சாற்றுவதாகும்.
இன்றைக்கும் கூட இந்தித் திணிப்பினால் தமிழுக்குத்-தமிழருக்குத்-தமிழ்நாட்டுக்கு வரக்கூடிய பெரும் விபத்தினை உணரத்தவறி, அந்த மொழி ஏகாதிபத்தியத்தினை எதிர்ப்பதை ஓர் இலட்சியமாகவே ஏற்றுக் கொள்ளாததால்தான், தி. மு. கழகத்தைத் தவிர வேறு எந்த அகில உலக கட்சிகளும் சரி, அகில இந்தியக் கட்சிகளும் சரி இந்தத் தமிழ் மண்ணில் வேர்விட முடியவில்லை. வேர்விட்ட 'பெரிய கட்சி'களும் வீழ்ச்சியையே தழுவ நேர்ந்தன என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும்.
எனவேதான் இந்த நாட்டின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டே எந்த இலட்சியத்தையும் நாங்கள் வகுத்துக் கொள்கிறோம். அத்தகைய பொதுவான இலட்சியங்களுக்குக் குரல் கொடுப்பவர்கள் எந்த முகாமிலே இருந்திட்ட போதிலும், அவர்களுக்கு எங்கள் நன்றியுணர்வினைத் தயங்காமல் தெரிவிக்கிறோம். இந்த அடிப்படையிலேதான், மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், திரு. வி. க. போன்றவர்களின் ஆக்கமூட்டும் அரிய உரைகளை மக்கள் நோக்குமிடமெல்லாம் பளிச்சிடுமாறு செய்தோம், சேலத்தோடு இந்தச் சுவரொட்டி ஏற்பாடு சுருங்கிவிடவில்லை.
தமிழகம் எங்கணும் அதனை விரிவாக்கினோம் இலட்சக் கணக்கில் சுவரொட்டிகளை அச்சடித்து. அத்துடன் மேலே குறிப்பிடப்பட்ட தலைவர்களின் படங்களையும், தஞ்சையிலே கரந்தைத் தமிழ்ச் சங்கம் கண்ட தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை, தமிழின் மீது கொண்ட தணியாத காதலின் காரணமாக சூரியநாராயண சாஸ்திரி என்னும் தம் பெயரைத் தனித் தமிழில் மாற்றிக் கொண்ட பரிதிமாற் கலைஞர் ஆகியோரது படங்களையும் தேடிப் பிடித்துப் பரப்பிட நானும் போராட்டக் குழுவினரும் மேற்கொண்ட முயற்சிகளும் ஏராளம்.
இங்கே குறிப்பிடத்தக்கது இந்தித் திணிப்பினை எதிர்த்திட்ட அதே வேளையில், தமிழ் வளர்ச்சிக்கு ஆக்கமளித்திட்ட சான்றோர்களையும் புறக்கணிக்காமல் அவர்தம் புகழ் பரப்பினோம்; பொன் மொழிகளை பரப்பினோம் என்பதுதான். சேலம் மாநாடு தந்திட்ட புத்துணர்ச்சி-புதிய தெம்போடு சென்னை திரும்பிய நான் மறுநாளே (1963 ஆகஸ்டு, 7-இல்) சட்ட மன்றத்திலே உணர்ச்சிப் பெருக்கோடு உரையாற்றிட வேண்டிய வாய்ப்பினைப் பெறலானேன். பிரிவினைக் கொள்கையை இன்று அடியோடு கைவிட்டுவிட்டது தி.
மு. கழகம். அதனைப் பல தடவைகள் பல மேடைகளில் நானும் மற்றக் கழகத் தலைவர்களும் அழுத்தந்திருத்தமாக அடித்துப் பேசியிருக்கிறோம்; அறுதியிட்டுக் கூறியிருக்கிறோம்; கூறி வருகிறோம். என்றாலும் வஞ்சகச் சேற்றையே சந்தனமாக வாரிப் பூசிக்கொண்டு சிரிக்கும் வன்கணாளர்கள்- திரித்துப் பேசி, திருத்தி எழுதி, 'திரிபு வேலை' செய்தே தங்கள் வயிற்றுப் பிழைப்பை வாணிபமாக நடத்திடும் சிறுமதியோர், பிரிவினைக் கொள்கையைக் கைவிட்டு விட்ட எங்களைப் பார்த்துப் பிரிவினைவாதிகள் தான் என்று திரும்பத் திரும்பக் கிளிப்பிள்ளைமாதிரி சொல்லிச் சொல்லிக் கீழறுப்பு வேலை செய்கின் றனர்.
இத்தகைய இழிதகையோரின் போக்கு, சீனப் படையெடுப்பையொட்டித் திராவிட நாட்டுக் கொள்கைகளைக் கைவிட்டு விட்டோம் என்று அறிஞர் அண்ணா அறிவித்த பின்னரும் 1963-ஆம் ஆண்டிலும் நிலவியது.
