உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/அண்ணாவின் வீரப் பேச்சு
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

அண்ணாவின் வீரப் பேச்சு · 127 / 391

அண்ணாவின் வீரப் பேச்சு மருத்துவ மனையிலே அவர் அருகிலே நாங்கள் இருந்த போதெல்லாம் கலந்துரையாடினார்; கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார். அந்த வேளைகளில் என் இனிய நினைவுகளோ, ஒரு திங்களுக்கு முன்னர் நடைபெற்ற பொதுக் குழுவிலும், அதனையொட்டிச் சென்னை எஸ்.ஐ.ஏ.ஏ. திடலில் நிகழ்ந்த சிறப்புக் கூட்டத்திலும் அவர் ஆற்றிய வீர உரைகளின் எழில் கொஞ்சும் பகுதிகளை - எழுச்சி பொங்கும் அறை கூவலையே - அசை போட்டன.

அவருடைய வைர மாணிக்கக் கருத்துக்கள் இன்றைக்கும் நமக்குப் புத்துணர்ச்சியை அளித்துப் போர்ப் பரணியாகப் பாடத்தக்கவையே; அவற்றில் சில வருமாறு: "... இந்த நாட்டிலேயும், வெளி நாட்டிலேயும் இருக்கிற மொழி விற்பன்னர்களும், நிருவாகத் துறைத் தேர்ச்சி பெற்றவர்களும், நல்ல அரசியல் அனுபவம் பெற்றவர்களும், ஆற்றல் மிக்க தலைவர்களும் எச்சரிக்கை விடுத்தும்கூட இவைகளையெல்லாம் பொருட்படுத்தாமல் இந்தியைத் திணித்தே தீருவது என்று துடித்து அவர்கள் இறங்கி இருக்கிற இந்த நிலைமையில் அதை எதிர்த்து நிற்பதைத் தவிர - கடுமையாக எதிர்த்து நிற்பதைத் தவிர - தொடர்ந்து எதிர்த்து நிற்பதைத் தவிர - இறுதி வெற்றி கிடைக்கிறவரை தொடர்ந்து எதிர்த்து நிற்பதைத் தவிர - கஷ்ட நஷ்டங்களைப் பற்றிக் கவலைப்படாமல் எதிர்த்து நிற்பதைத் தவிர-களபலியாவதற்குத் தோழர்கள் எத்தனை பேர்கள் கிடைக்கிறார்கள் என்ற கணக்கைக்கூடப் பார்க்காமல், இதிலே ஈடுபடுவதைத் தவிர - வேறு மார்க்கமில்லை என்ற நிலைக்குத் தி.

மு. கழகம் வந்திருக்கிறது. "நான் அந்தப் போராட்டத் தீர்மானத்தை உருவாக்கிய நேரத்தில் - மாநிலங்கள் அவையிலே (டில்லி ராஜ்ய சபா) நான் பேசுகிறபோது லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் என்னைப் பார்த்துச் சொன்னதைக் கவனத்திலே வைத்துக்கொண்டுதான் இந்தப் போராட்டத் தீர்மானத்திற்கு நான் உருவம் கொடுத்து - நண்பர்கள் கொண்டு வந்த நேரத்தில் என்னுடைய ஆதரவை இந்தத் தீர்மானத்திற்கு அளித்தேன்."

"இந்தியைத் திணிப்பதற்காக லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் மாநிலங்கள் அவையிலே பேசிய நேரத்தில், நான் எனக்குத் தெரிந்த காரணங்களையெல்லாம் காட்டி- எனக்குத் தெரிந்த வாதத் திறமைகளையெல்லாம் அந்த இடத்திலே எடுத்துச்சொல்லி நாட்டு மக்களுடைய மன நிலையை எடுத்துக் காட்டி, 'இந்தித் திணிப்பிலே தீவிரம் காட்டாதீர்கள்; இந்தியைத் திணிக்காதீர்கள்; நாடு உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறது- திராவிட மக்கள் உங்களைக் கேட்டுக் கொள்கிறார்கள்; உங்களுடைய பழம் பெரும் தலைவரும், உங்களுடைய இயக்கத்தை நடத்தியவரும், உங்களுடைய அரசுக்கே ஒரு காலத்தில் தலைவராக இருந்தவருமான ராஜகோபாலாச்சாரியார் எடுத்துச் சொல்கிறார்.

இந்த வார்த்தைகளைக் கேளுங்கள்' என்றெல்லாம் நான் எடுத்துப் பேசினேன். எந்த வாதத்தையும், எந்த வேண்டுகோளையும் எந்தக் காரணத்தையும் அந்த மாமன்றத்திலே உள்ளவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்த பிறகு, இந்தியைத் திணிப்பதென்று அவர்கள் துணிந்த பிறகு, லால்பகதூர் சாஸ்திரியார் எதிரே வீற்றிருக்கின்ற நேரத்தில் அவரைப் பார்த்தபடி நான் சொன்னேன், 'நீங்கள் பிடிவாதமாக யாருடைய வார்த்தைக்கும் மதிப்பளிக்காமல் இந்தியைத் திணிப்பதென்றால் கடுமையான போராட்டம்-தீவிரமான போராட்டம் -நிச்சயமாகத் தென்னகத்திலே ஏற்படும்' என்று.

'நீங்கள் ஆபத்தான விளையாட்டு விளையாடுகிறீர்கள்; இந்தியைத் திணிக்கிறீர்கள்; இதற்குக் கடுமையான எதிர்ப்புக் கிளம்பும்' என்றும் சொல்லி விட்டு வந்தேன்." "அப்படி நான் சொல்லிவிட்டு வந்த பிறகு, எனக்கே கொஞ்சம் பயம் ஏற்பட்டது; இவ்வளவு பெரிய மாமன்றத்தில் அவ்வளவு சக்தி வாய்ந்த ஒரு நிருவாகத் தலைவர் முன்னால், நாம் சூளுரை சொல்வதைப் போல, இதற்குக் கடுமையான எதிர்ப்பு இருக்குமென்று சொல்லிவிட்டு வந்தோமே, நம்முடைய கழகத்தினர் என்னுடைய போர்க் குரலுக்கு ஏற்பவே போர்க்கோலம் கொள்வார்களா என்கிற ஐயப்பாடு எனக்கு இருந்தது.

அந்த ஐயப்பாடு எனக்கு இருந்ததற்குக் காரணம் நான் கொஞ்சம் பலவீனன்; ஆகையால் அவர்களும் பலவீனர்களாக இருப்பார்களோ என்கிற சந்தேகம் எனக்கு அடிக்கடி ஏற்படும். ஆகையினால்தான் இந்த மூன்று நாட்களும் நம்முடைய தோழர்களிடத்திலேயே நான் பேசுகின்றபோது இவைகளை எடுத்துக் கூறித் தீர்மான வடிவிலே கொண்டு வந்தேன். "...இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நாம் இந்த முறை துவங்குவதற்கு முன்னாலே, அதற்கென்று ஒரு குழுவை நியமித்து நம்முடைய கருணாநிதியும் நடராசனும், மாவட்டச் செயலாளர்களையும் மாவட்ட அமைப்புகளையும் கலந்து பார்த்து என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்பவைகளைக் கண்டு பிடித்து வந்து, ஆகஸ்ட் திங்களிலே என்னிடம் அறிவித்த பிறகு, நான் போராட்டம் நடத்துவேன் என்று, தீர்மானம் உங்களுக்குத் தெரிவிக்கிறது.

'ஒரு காரியத்தைத் தள்ளிப் போட வேண்டுமானால், தலையிலே கல்லைப் போடு அல்லது கமிட்டியைப் போடு' என்று பேசுவதுதான் முன்னாலே வழக்கமாக இருந்தது." "ஆனால், இன்றைய தினம் நிறுவப்பட்டிருக்கின்ற குழு, தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற குழு, இதிலே ஈடுபட்டிருக்கின்ற தோழர்களைப் பார்த்தால் உங்களுக்கே நன்றாகத் தெரியும். போராட்டங்களில் தீவிரப் பங்கெடுத்தவர்கள்."

"கல்லக்குடிப் போராட்டத்தில் தம்பி கருணாநிதி சிறைச்சாலை செல்வதற்கு முன்னாலே எத்தனை எத்தனை சித்திரவதைக்கு ஆளானார் என்பது நமக்கெல்லாம் தெரியும்." "நம்முடைய நண்பர் நடராசன் இந்தி எதிர்ப்பு இயக்கம் காரணமாகவே காங்கிரசிலிருந்து நம்மோடு வந்து சேர்ந்தவர். ஆச்சாரியரால் இந்தி புகுத்தப்பட்ட நேரத்திலே சென்னை ஜில்லா காங்கிரஸ் கட்சியிலே அவர் மிக முக்கிய உறுப்பினராக இருந்து, சத்தியமூர்த்திக்கு மிக வேண்டிய நண்பராக இருந்து பணியாற்றிக் கொண்டிருந்த நேரத்தில், அவருடைய வீடும் நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நேரத்தில் என்னுடைய வீடும் பக்கத்துப் பக்கத்திலே இருக்தாலும், நானும் அவரும் தொழிலாளர் அமைப்பிலே ஒன்றாக பணியாற்றுகிற வாய்ப்பு இருந்தாலும், அவரிடத்திலே பேசிப் பார்த்ததில் தமிழ் மொழியிடத்திலே ஆர்வம் இருக்கிறது என்று அறிந்த நேரத்தில்-இவர் நெடுநாளைக்குக் காங்கிரசிலே இருக்கமாட்டார் என்ற முடிவுக்கு நான் வந்தேன்.

"ஏனென்றால், யாருக்குத் தமிழ் மொழியிடத்திலே அளவு கடந்த ஆர்வம் இருக்கிறதோ, அவர்களால் நீண்ட நாளைக்குக் காங்கிரசிலே இருக்க முடியாது. "கருணாநிதி எப்படிப் போராட்டத்தில் நல்ல பயிற்சி பெற்றவரோ அதைப் போலவே நண்பர் நடராசன் அவர்களும் போராட்டத்திலே நல்ல பயிற்சி பெற்றவர். இந்தி எதிர்ப்புக்காக மட்டுமல்ல; திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய எல்லாப் போராட்டங்களிலும் அவர் ஈடுபட்டு நல்ல தியாகத் தழும்புகளைப் பெற்றிருப்பவர்.

இந்த இருவர் மட்டுமல்லாமல், மாவட்டங்களிலே உள்ள செயலாளர்கள் ஒவ்வொரு வரும் செயலாற்றும் திறமை படைத்தவர்கள்... இவர்களையெல்லாம் கொண்ட ஒரு குழு தக்கதோர் போர்த் திட்டத்தை நிச்சயமாக வகுத்துக் கொடுக்கும் என்பதில் எனக்கு ஒரு துளியும் ஐயப்பாடு இல்லை. "எனக்கு இந்த முறை போராட்டத்தில் ஆர்வமுள்ளவர்கள் மட்டும் கூடாது. ஆர்வமும் அவசரமும் கலந்தால் அவர்கள் போராட்டத்திற்கு இந்தத் தடவை தேவையில்லை. யார் நீடித்து அந்த ஆர்வத்தைப் பெற்றுக்கொண்டிருக்க முடியுமோ, யாருடைய வீர உணர்ச்சி நிலைத்திருக்க முடியுமோ, எவராலே கஷ்ட நஷ்டங்களை எந்த அளவுக்கும் தாங்கிக் கொள்ள முடியுமோ, யாராலே நீண்ட காலச் சிறைவாசத்திற்குத் தங்களை ஒப்படைக்க முடியுமோ அப்படிப்பட்டவர்கள் மட்டும் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளலாம்.

"...(நம்முடைய) தீர்மானத்திலே குறிப்பிட்டிருப்பது, மாநில ஆட்சி மொழியாக இருப்பதும், திராவிட மொழிகளில் தலையாயதுமான தமிழையும் மத்திய ஆட்சி மொழியாக ஏற்க வேண்டும் என்று வற்புறுத்துவதுடன் அதை ஒப்ப, மாநில ஆட்சி மொழிகளாகியுள்ள மொழிகளையெல்லாம் மத்திய ஆட்சி மொழிகளாக ஏற்றுக்கொள்ளும் வரையில், ஆங்கிலம் தொடர்ந்து ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்-என்பதுதான். "இந்தி எங்களுக்கு எடுப்புச் சாப்பாடு; ஆங்கிலம் எங்களுக்கு, நாங்கள் சொல்கின்ற முறைப்படி சமையல் செய்து போடுகின்ற சமையற்காரன்; தமிழ் எங்களுடைய மனையை அறிந்து-எங்களுடைய மனமறிந்து எங்கள் ஊனறிந்து-உணர் வறிந்து-எங்களுடைய ஊனை வளர்க்கத்தக்க தாய்!

அப்படித் தாயின் கரத்திலே எங்களுக்கு உணவு கிடைக்கும் என்ற உத்தரவாதம் கிடைத்துவிட்டால் எங்களுக்கு எடுப்புச் சாப்பாடு வேண்டாம்-ஆங்கில முறையிலிருக்கிற உணவும் வேண்டாம்! "ஒரு வீட்டிலே ஒருவன், அவனுடைய மனைவி நோய் வாய்ப்பட்டிருக்கிறார் என்றால், அவன் படுகின்ற வேதனைக்கும், அவனைப் பெற்ற தாய் படுகின்ற வேதனைக்கும், பக்கத்து வீட்டுக்காரர் எதிர் வீட்டுக்காரர் படுகின்ற வேதனைக்கும் வித்தியாசங்கள் உண்டு.

கணவன் படுகின்ற வேதனை எடுத்துச்சொல்லக் கூட முடியாததாக இருக்கும். தாய் படுகின்ற வேதனை வார்த்தைக்கு முன்னே கண்ணீர் 'குபுகுபு' வென்று வருவதாக இருக்கும். அதைப்போலவே அந்த வீட்டிற்குப் பழக்கமாகப் பூ விற்பவன்கூட, வேதனையாக வரக்கூடும். 'என்னப்பா உனக்கு வேதனை?'

என்று கேட்டால், 'இந்த வீட்டிலே ஓர் அம்மா இருக்கிறார்கள், அவர்களுக்கு ஏதோ ரொம்ப ஆபத்தாம். அவர்கள் போய்விட்டால் பிறகு மல்லிகைப்பூ வாங்கமாட்டார்களே என்ற கவலை எனக்கு' என்று சொல்லிவிட்டுப் போவதைப் போல் முழுவருத்தம் இருக்காது. அதிலே பயனில்லை. "எதற்கு நான் சொல்கிறேன் என்றால் இந்தி திணிக்கப்பட்டால் உத்தியோகத்திலே பங்கு கிடைக்காதே என்பது மட்டும் ஒரு வருத்தமாக இருக்குமானால், அது ஆழ்ந்த வருத்தமாகவும் இருக்காது; நீடித்த வருத்தமாகவும் இருக்காது.

அந்த வருத்தம் மாலை நேரத்தில் பூ விற்கிறவன் அந்தப் பூவை வாங்கிய மங்கைக்கு ஆபத்து வந்தால் வியாபாரம் கெட்டுவிடுமே என்று வருத்தப்படுவதற்குச் சமமாகும். "1938-இல் ராஜாஜி முதல் மந்திரியாக இருந்துகொண்டு இந்தியைப் புகுத்திய நேரத்தில் அந்த இந்தி மொழிக்குத் தந்த பெயர் 'அஃபீஷியல் லாங்குவேஜ்.'

'இதுதான் தேசிய மொழி, இந்தத் தேசத்தின் மொழி; தேசத்தின் ஒரே மொழி. உங்கள் தமிழ் வீட்டிலே இருக்கலாம்; நாட்டிலே பேசப்படலாம்; கட்டிலருகே இருக்கலாம் தொட்டிலருகே இருக்கலாம்; ஆனால் அரசாங்கக் கட்டிலிலே இருக்க வேண்டிய மொழியும் அலுவலகத்திலே இருக்க வேண்டிய மொழியும் இந்தி மொழிதான்' என்பதை வலியுறுத்துகின்ற விதத்தில் இந்தியை 'நேஷனல் லாங்குவேஜ்' என்று சொன்னார்கள்; 'காமன் லாங்குவேஜ்' என்று சொன்னார்கள்.

"தமிழ்நாட்டிலே நாம் எதிர்த்த காரணத்தாலே 'காமன் லாங்குவேஜ்' என்ற பொது மொழி அந்தஸ்து போய், 'நேஷனல் லாங்குவேஜ், என்றிருந்த தேசிய மொழி நிலை போய், இன்றைய தினம் 'அஃபீஷியல் லாங்குவேஜ்' என்ற நிலை பிறந்து, அதற்குக்கூட எதிர்ப்பு இருக்கிற காரணத்தாலே பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் 'அஃபீஷியல் லாங்குவேஜ்' என்றுகூடச் சொல்லவில்லை; 'லிங்க் லாங்குவேஜ் (இணைப்பு மொழி, என்ற புது 'பாஷை'யைக் கண்டு பிடித்திருக்கிறார்.

"இந்தக் கட்டத்திலே நாம் ஏமாந்துவிட்டால்-நாம் தூங்கிப் போய்விட்டால்-மறுபடியும் இணைப்பு மொழி என்பது ஆட்சிமொழி ஆகி, பொதுவான தேசிய மொழி என்பது பொதுமொழி ஆகி, பொது மொழி என்பது ஒரே மொழி என்றாகி, அந்த ஒரே மொழியின் மூலம் நாவலர் நெடுஞ்செழியன் சொன்ன 'ஓர் அரசு, பேரரசு, என் அரசு, வல்லரசு இந்திய அரசு' என்ற நிலை வந்துவிடும். அதனால்தான் கதவு தாழ் போடாவிட்டால் கள்ளன் நுழைவான் என்ற அறிவு நமக்கு இருக்கவேண்டும் என்பதைப்போல, புண்ணுக்கு மருந்து தடவாவிட்டால் உடலெங்கும் பரவும் என்று நமக்குப் புரிந்திருக்க வேண்டியதைப்போல, இப்பொழுதே நாம் இந்தியைத் தடுத்து நிறுத்தாவிட்டால் அதனுடைய படையெடுப்பைப் பின்னால் நீங்கள் எந்த முனையிலும் தடுக்கமுடியாது.

"ஒட்டகத்தினுடைய மூக்களவிற்குக் கூடாரத்திலே நுழைய இடம் கொடுத்துக் கடைசியிலே ஒட்டகம் கழுத்தளவுக்குப் போய், முன்கால் இரண்டளவுக்குப் போய், அது வயிறு அளவுக்குப் போய், அது நாலு காலளவுக்குப் போய், பிறகு கூடாரத்திலே இருந்தவன் வெளியே வர நேரிட்டதே என்று சொல்லுவார்கள். அதைப்போல இந்தி ஒட்டகம் மூக்களவுக்குத்தானே இடம் கேட்கிறது; அதைக் கொடுத்தாலென்ன என்று கூடாரத்திலே இருப்பவன் கருதுவானேயானால், மூக்களவுக்கு இடம் பெற்ற இந்தி ஒட்டகம் 10-15 வருடங்களிலே கூடாரத்தை விட்டு நாமெல்லாம் வெளியேறத்தக்க விதத்திலேயும், கூடாரமே கிழித்து எறியப்படும் விதத்திலேயும் நம்மை ஆக்கிவிடும் என்பதனை நம்புவீர் களேயானால்-உணர்வீர்களேயானால்-இந்தி மொழியிலிருக்கும் ஆபத்தைத் தெரிந்துகொள்ள முடியும்.

"நான் பார்க்கிறேன், பாராளுமன்றத்தின் மேல் சபையிலும் சரி, மக்கள் சபையிலும் சரி, இந்தி மொழி ஆட்சி மொழி ஆகப்போகிறது என்ற தைரியத்தில்-என்ற ஆணவத்தில் - இந்தி மாநிலங்களிலேயிருந்து வருகிறவர்கள் எவ்வளவு ஆணவத்தோடு அங்கு நடந்து கொள்ளுகிறார்கள் என்பதைப் பாராளுமன்றத்துக்கு நீங்கள் ஒரு நாள் வந்தால் புரிந்து கொள்ளலாம். "நம்முடைய தமிழ் நாட்டிலிருந்து போயிருக்கின்ற அமைச்சர்கள் இந்தியிலே பேச முடியாதவர்கள்; இந்தி பேசுகின்ற பகுதிகளிலிருந்து வருகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுமென்றே அவர்களை இந்தியிலே கேள்வி கேட்கின்றார்கள்.

டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் கொஞ்சம் தைரியசாலி என்ற காரணத்தினால், அவர் வேண்டுமானால் நிமிர்ந்து நின்று 'எனக்குத் தெரியாது' என்று கையசைக்கிறாரே தவிர, மற்ற நம்முடைய மந்திரிகளெல்லாம் அங்கே படுகிற பாடும், கையைப் பிசைந்து கொள்வதும், கண்களைக் கசக்கிக் கொள்வதும், நான் எங்கே பார்த்து விடுகிறேனே என்று மேலே பார்த்துக்கொள்வதும்-இதைப் பார்த்தாலே தெரியும், இந்தி வெறி இன்றைய தினம் பாராளுமன்றத்திலே எந்த அளவுக்கு இருக்கிறதென்று.

"இந்தி வெறி காரணமாக ஒரு பாராளுமன்ற உறுப்பினர் 'இங்கே அந்நிய மொழி-அந்நிய நாகரிகம்-அந்நிய நடையுடை பாவனைகள்-பாவமெல்லாம் சூழ்ந்திருக்கிறது. அந்தப் பாவத்தைப் போக்க ஓமம் வளர்க்கின்றேன்' என்றார். (அப்படியே பாராளுமன்ற 'சென்ட்ரல் ஹாலில்' சுள்ளிகளைப் போட்டு நெய் ஊற்றி ஓமம் வளர்த்தார்.) "இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தீவிரமாக நடத்தாவிட்டால், நாடு பழையபடி காட்டுமிராண்டிக் காலத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டு விடும்.

ஆகையினால்தான் திராவிட முன்னேற்றக் கழகம் இந்தி மொழியை எதிர்க்கிறது. "நாம் துவக்குகின்ற மொழிப் போராட்டம்-அது கலையைக் காப்பாற்றுகின்ற போராட்டமும்கூட; நாம் துவக்குகின்ற மொழிப் போராட்டம், இனத்தின் பண்பைக் காப்பாற்றுகின்ற போராட்டம்; நாம் துவக்குகின்ற மொழிப் போராட்டம் நம்முடைய நாட்டு மக்களுடைய அரசியல் உரிமையிலேயிருந்து கலை உரிமை வரையில் எல்லா உரிமைகளையும் மாற்றார்கள் பறிக்காத வகையில், பாதுகாப்பாக நடத்தப்படுகின்ற பாதுகாப்புப் போராட்டமாகும்."

-அண்ணா அவர்கள் எழுப்பிய இந்தப் போர் முரசம் எந்த அளவுக்குக் கழகக் காளையரின் நாடி நரம்புகளிலே புத்துணர்ச்சியைப்-போராட்டத் துடிப்பை-முறுக்கேற்றி விட்டிருக்கும் என்பதை விளக்கிட வேண்டியதி

ல்லை. இந்தி ஏகாதிபத்தியத்தினால் விளையக்கூடிய விபத்தினை-வேதனையை-வீழ்ச்சியினை-நம்முடைய வருங்கால வழித்தோன்றல்களும் தெளிவாக உணர்ந்து, தங்கள் சிந்தையிலே அழுத்தமாகத் தேக்கி வைத்துக்கொள்ளவேண்டும் என்பதற்காகவே 1963-ஜூன் திங்களில் அண்ணா ஆற்றிய அறப்போர் உரையை இங்குச் சற்று விரிவாகவே தொகுத்துக் கொடுத்துள்ளேன். அறுவைச் சிகிச்சைக்கு ஆளாகி, மருத்துவ மனையிலே சில காலம் சிறைப்பட்டிருந்த அண்ணாவிடம் அடிக்கடி ஆலோசனை கலந்து அறிவுரைகள் பெற்ற வண்ணம் இருந்தேன் நான்.

அப்போதே, 1963 ஜூலை 15-ஆம் நாளில் இந்தி எதிர்ப்புப் போராட்டக் குழுவினை அதன் தலைவர் என்கிற முறையிலே கூட்டினேன். சென்னை இராயபுரம் 'அறிவக'த்தில் அந்தக் கூட்டம் நடை பெற்றது. என்னுடைய தலைமையில். அண்ணா எடுத்துக் காட்டியதைப்போல, இந்தி ஒட்டகம் தமிழகக் கூடாரத்திலே தன் ஏகாதிபத்தியத்தை நிலை நாட்டிடா வண்ணம்-நம் எதிர்கால வாழ்வையே கிழித்துப் போட்டிடா வண்ணம்-என்னென்ன அறப்போர்த் திட்டங்களைத் தீட்டலாம் என்பது குறித்து நான் விரிவாகவே விளக்கிப் பேசினேன்; மற்றக் குழு உறுப்பினர்களும் தங்கள் கருத்துக்களை எடுத்து வைத்தனர்.

இறுதியில் சில முக்கியமான முடிவுகளை மேற்கொண்டோம். ஆனால், எங்களுடைய ஒரு முடிவினை அண்ணா ஏற்கவில்லை. அறிஞர் அண்ணா அவர்களே ஏற்றுக்கொள்ள இயலாத அளவிற்கு அப்படி என்னதான் முடிவினை எடுத்தோம் என்று சிலர் வியப்பினை அடைந்திருக்கக்கூடும். 1963 - ஜூலை 15-இல் இந்தி எதிர்ப்புப் போராட்டக் குழு மேற் கொண்ட சில முக்கிய முடிவுகளில் ஒன்று. "செப்டம்பர் 15-ஆம் நாளன்று அறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த நாளைத் தொடர்ந்து 21-ஆம் நாள் முடிய நாடெங்கும் இந்தி எதிர்ப்பு வாரமாகக் கொண்டாடும்படிக் கழகத்தின் எல்லா அமைப்புக்களையும் இக்குழு கேட்டுக் கொள்கிறது" என்பதாகும்.

இதனைத்தான் அண்ணா ஏற்றுக்கொள்ளவில்லை என்று குறிப்பிட்டேன். இந்தி ஏகாதிபத்தியத்தின் இடுப்பினை ஒடித்திட அந்தத் தானைத் தளபதி 1938 முதற்கொண்டே படைத்திட்ட சரித்திரமே தனி; தன்னி- கரற்றது. எனவேதான் அண்ணன் பிறந்த நாளும், 'இந்தி எதிர்ப்புப் பெருநாள்'-ஆக வரலாற்றிலே இடம் பெற்றிட வேண்டும் என அந்தக் குழு கருதியது. அந்த ஆசைக்குத்தான், அண்ணா பிறந்த செப்டம்பர் 15-முதல் செப்டம்பர் 21 வரை 'இந்தி எதிர்ப்பு வாரம்' என்று வடிவம் கொடுக்கப்பட்டது.

அதனைத்தான் அண்ணா ஏற்றிடவில்லை. 'மரியாதை வாரம்' என்று கொண்டாடிவிட்டு அதற்குப் பிறகு மரியாதைகள் மறக்கப்படுவதைப்போல, எங்கே நம்முடைய தம்பிகள் அந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்தி எதிர்ப்பைக் காட்டிவிட்டுப் பிறகு ஓய்ந்துவிட்டால் என்ன செய்வது என்று அஞ்சினாரோ?

இல்லை, ஜூலை 15-இல் கூடிய போராட்டக் குழுவின் முடிவை நிறைவேற்றிட செப்டம்பர் 15 வரை எதற்காக இந்தியை எதிர்க்காமல், அந்த வாரத்திற்காகக் காத்திருக்கவேண்டும் என்று கருதினாரோ- தெரியவில்லை. எனினும், போராட்டக் குழுவின் மற்ற முடிவுகளை முழுமனத்துடன் வரவேற்றார் அண்ணா. அத்துடன், அந்த முடிவுகளை நிறைவேற்றிடப் பிரச்சார நடவடிக்கைகளையும் எடுத்துக் கொள்ளலாம் என்கிற முழு அதிகாரத்தையும் குழுவுக்கு அவர் வழங்கினார்.

கழகப் பொதுச் செயலாளர் என்கிற முறையில். குழுவின் மற்ற முடிவுகள் இவைதான் : போராட்டக் குழு உறுப்பினர்கள் அந்தந்த மாவட்டங்களில் சுற்றுப் பிரயாணம் செய்து, அறப்போரில் பங்கு பெறும் தொண்டர்களின் பட்டியலைத் தயாரித்தல்; இந்தி எதிர்ப்புப் பிரச்சாரப் பொதுக் கூட்டங்கள், ஓரங்க நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள், சுவரொட்டிகள், துண்டு அறிக்கைகள். இன்னபிற சாதனங்கள் மூலம் நாடெங்கும் இந்தித் திணிப்பினால் விளையும் கேடுபாடுகளை விளக்கிட முனைந்து முயற்சிகளை மேற்கொள்ளுதல் : சேலம், தஞ்சை, திருநெல்வேலி, சென்னை - ஆகிய நகரங்களில் இந்தி எதிர்ப்பு மாநாடுகள் நடத்துதல்; அவற்றையொட்டி, ஆங்காங்கே, அவ்வப்போது போராட்ட வீரர்களின் பாசறைக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தல்.

இந்த முடிவுகள் அனைத்துமே புரட்சிகரமானவை-தெளிவானவை- புத்தெழுச்சியை ஊட்டக்கூடியவை என்று இந்தியால் படரக்கூடிய இருளை உணர்ந்த ஒரு சில காங்கிரஸ் நண்பர்களே தனியாகக்கூறினர். இவற்றைச் செயலளவில் நிறைவேற்றிட முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன; முனைப்போடு-முழு நம்பிக்கையோடு. கழுத்தில் உண்டான கட்டியினால் தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்த அண்ணா, அறுவைச் சிகிச்சைக்கு ஆளாகி அவதியுற்றார் அல்லவா?

அப்போது போடப்பட்ட தையல் ஜூலை 19-இல் பிரிக்கப்பட்டது. புண் ஆறிவிட்டதால் அன்றே மருத்துவ மனையிலிருந்து வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார் அண்ணா. பின்னர் காஞ்சிபுரம் சென்றார், ஓய்வு பெறுவதற்காக. அவருடைய உடல் ஓய்வை நாடியது என்னவோ உண்மைதான்! அவருடைய உள்ளத்து உணர்வுகளோ ஓடிக்கொண்டேயிருந்தன தமிழகத்தின் எதிர்காலம் பற்றி; பாடிக்கொண்டேயிருந்தன தமிழின் இனிமையைப்-பழைமையை: சாடிக்கொண்டேயிருந்தன இந்தித்திணிப்புச் சதியினை-சாகசத்தை!

அந்த நேரத்தில் அமைதியாக இருந்திடவேண்டிய அவர்தம் நெஞ்சத் தடாகத்திலே நீள் அலைகள் வட்டமிடும் வண்ணம் கல்லை எறிந்து வேடிக்கை பார்த்த கனதனவான்களில் லால்பகதூர் சாஸ்திரியும் ஒருவர். ஐதராபாத்தில், ஜூலை 21-இல் இந்திப் பிரச்சார சபையொன்றின் வெள்ளி விழாக் கூட்டத்தில் கலந்து கொண்டபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். "தி.மு. கழகத் தலைவர்கள் இந்தியை எதிர்த்து நடத்தவிருக்கும் போராட்டத்தைக் கைவிடவேண்டும்.

இந்தி ஆட்சி மொழி ஆவதை எதிர்த்து அவர்கள் போராட முடிவு செய்துள்ளது மிகவும் வருந்தத்தக்கது ஆகும். இந்தி...கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கிலத்தை அகற்றி அதன் இடத்தைப் பிடித்துக்கொள்ளும். அரசியல் சட்டத்தில் ஏற்கப்பட்டுள்ள இந்தியைத் தவிர வேறு எதுவும் இந்தியாவில் தொடர்பு மொழியாக இருக்க முடியாது; இந்தி நமக்கு அந்நிய மொழி அன்று."

-சாஸ்திரியாரின் இந்த அழுத்தமான-இந்தி ஆதிக்கப் போக்கின் உள்நோக்கத்தை அம்பலப்படுத்துவதான-வாதத்தினை ஏடுகள் மூலம் அறிந்த பின்னரும் எப்படி அமைதியாக இருந்திட முடியும் அண்ணா அவர்களால்? பொறி பறக்கும் அறிக்கை ஒன்று புறப்பட்டது அவர் கரத்திலிருந்து: "ஆளுங்கட்சியின் இதயத்தில் இரத்தப் பசி கொண்ட ஓநாய் குடியிருக்கிறது. அதன் பசி அடங்குவதற்கு எவ்வளவு இரத்தம் வேண்டு- மானாலும் தருவதற்குத் தி.மு. கழகம் தயாராக இருக்கிறது எங்களுடைய இரத்தத்தைச் சுவைத்த பிறகாவது அதன் வெறி அடங்கி ஓடிவிடுமோ என்பதைப் பரிசோதித்துப் பார்க்கும் விதத்திலேயே தி மு.

கழகத்தின் கிளர்ச்சி இருக்கும். இன்னல்களை ஏற்றுக்கொள்வோம்; எல்லாத் தியாகங்களையும் புரிவோம்; இது காந்திய முறை. இந்த முறை அச்சுறுத்தலுக்கு அடி பணியாது; அதுபோலவே சபலத்திற்கு இரையாகி விடாது. ஏனெனில் கொடுங்கோன்மைக்கும் அநீதிக்கும் அடிபணியவோ ஒத்துப் போகவோ கழக வீரர் எவரும் தயாராக இருக்கமாட்டார்; அநீதியைச் சகிப்பதில்லை என்பது எங்களுடைய தாரக மந்திரம் ஆகும். கழகக் காளையர் ஒவ்வொருவர் உணர்விலுமே உரத்து ஒலித்துக் கொண்டிருந்த அநீதிக்கு அடிபணியாத பேராண்மையைத்தான் அறிக்கை வடிவிலே இப்படி டில்லிப் பேரரசுக்கு எடுத்துரைத்தார் அண்ணா.

வாழ்க்கை ஒரு விரைவு ரயில் பயணம் என்றால், வழியிலே எத்தனையோ நாட்களும் - வாரங்களும்-மாதங்களும் வண்டியே நிற்காத ரயில் நிலையங்கள் போல வந்து போவதுண்டு. ஆனால் சில நாட்கள் கண்டிப்பாக வண்டி நிற்கும். சிறப்புச் சந்திப்புக்களாக நம் நெஞ்சத்திரையிலே நிலைத்து நிற்பதும் உண்டு. அத்தகைய மறக்கவொண்ணாச் சிறப்பினைப் பெற்ற நாட்களில் ஒன்றுதான் 1963-ஜூலை 24-ஆம் நாள்! அன்று எனக்கு இரண்டு பரிசுகள் கிட்டின. ஒன்று என் கலைப் பணிக்காக; மற்றது என் அரசியல் தொண்டிற்காக.